Home

Sunday, 14 January 2024

பாலர் பாடல்கள்

 

இராகவேந்திரா நகரில் இரண்டாவது குறுக்குத்தெருவில் விட்டல்ராவின் வீடு இருக்கிறது. அந்தக் குறுக்குத்தெருவில் அதிக வீடுகள் இல்லை. இடது பக்கத்தில் ஆறு வீடுகள். வலது பக்கத்தில் ஆறு வீடுகள். வலது பக்க வரிசையில் முதல் வீடு இருக்குமிடம் மூலைமனை என்பதால், அதன் வாசல் குறுக்குத்தெருவைப் பார்த்ததாக அமையாமல் பிரதான தெருவைப் பார்த்தமாதிரி இருக்கும். அதற்கப்புறம் வீடு எதுவும் இல்லாத பெரிய வீட்டுமனை. அதற்கு அடுத்தபடி இருப்பதுதான் விட்டல்ராவின் வீடு.

பராமரிப்பே இல்லாத அந்த வீட்டுமனையைச் சுற்றி பெயருக்கு ஒரு சுற்றுச்சுவர் மட்டும் இடுப்பளவு உயரத்தில் இருக்கிறது. உள்ளே பார்த்த இடங்களிலெல்லாம் அடர்த்தியான புதர்கள். முட்செடிகள். அவசரத்துக்கு உள்ளே இறங்கி நடக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு காடு மாதிரி அடர்ந்திருக்கும். அந்த மனையை ஒட்டி பாதையோரமாக ஒரு பெரிய வாதுமை மரம். அதன் இலைகள் உதிர்ந்து குப்பையாகி மட்கிய மணம் காற்றில் வீசியபடியே இருக்கும்.

அதற்கு அடுத்த வீட்டில்தான் விட்டல்ராவ் குடியிருக்கிறார். பெங்களூருக்கு வந்த புதிதில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு புத்தம்புதிதாக விற்பனைக்குத் தயாராக இருந்த அந்த வீட்டை வாங்கியிருக்கிறார். கிழக்குப் பார்த்த வாசலோடு வீடு அமைந்திருக்க வேண்டும் என்னும் பெங்களூரு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட வீடு அது.   தெருவை ஒட்டிய இரும்புகேட் தெற்கு நோக்கி இருந்தாலும், உள்ளே நுழைந்து வலது ஓரமாக அமைந்திருக்கும் சந்து வழியாக நடந்து சென்றுதான் வீட்டு வாசலை அடையமுடியும். அப்படி ஒரு கட்டுமானம்.  அந்த வீடு மட்டுமல்ல, அந்த வரிசையில் இரு புறங்களிலும் இருந்த எல்லா வீடுகளுமே அந்த அமைப்பில்தான் இருந்தன.

ஒருநாள் பதினொன்றரை மணியளவில் நண்பர் விட்டல்ராவைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். பகல்வேளை என்றாலும் பக்கத்துப் புதர்களில் வசிக்கும் கொசுக்களும் பூச்சிகளும் சுதந்திரமாக வீட்டுக்குள் புகுந்துவிடுகின்றன என்பதால் கதவைச் சாத்திக்கொண்டு கூடத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம்.  ஏதோ ஒரு பழைய இலக்கிய நிகழ்ச்சிக்கு அவரும் மா.அரங்கநாதனும் இணைந்து சென்ற பழைய காலத்து அனுபவத்தை விட்டல்ராவ் சுவாரசியமாக விவரித்துக்கொண்டிருந்தார். ஒன்றைத் தொட்டு ஒன்றென பேச்சு வளர்ந்துகொண்டே போய்விட்டது. நேரம் ஓடியதே தெரியவில்லை. மதிய உணவு வேளை நெருங்கியதை உணர்ந்த பிறகுதான் பேச்சை நிறுத்தினோம்.

அவருடைய வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான்  அடையாறு ஆனந்தபவன் இருந்தது. அங்கே சென்று சாப்பிடலாம் என முடிவெடுத்து கதவைச் சாத்தி பூட்டிக்கொண்டு புறப்பட்டோம்.

விட்டல்ராவ் கதவை இழுத்து பூட்டுகிற சமயத்தில் எங்கிருந்தோ ஒரு சேவல் கூவும் சத்தம் கேட்டது. நேரம் மதியம் ஒன்றரை மணி. அந்த நேரத்தில் அதை நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் என்னைச் சுற்றி எங்கும் எந்தச் சேவலும் தென்படவும் இல்லை. எப்படி அந்தச் சத்தம் கேட்டது என்று புரியாமல் குழப்பத்துடன் சுற்றிச்சுற்றிப் பார்த்தேன். சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கொக்கரக்கோ சத்தம் கேட்டது. ஆனால் சேவலின் நடமாட்டமே தெரியவில்லை. ஏதோ அசரீரி மாதிரி அதன் குரல் மட்டும் கேட்டது. பதில் தெரியாத குழப்பத்தில் மூழ்கியபடி வீட்டைவிட்டு வெளியே வந்தோம். அதற்குள் மூன்றாவது முறையாகவும் அந்தச் சேவல் கூவும் சத்தம் கேட்டது.

”சார், அது சேவல் கூவுற சத்தம்தான?” என்று விட்டல்ராவிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“ஆமாம். சேவல் கூவற சத்தம்தான். அதுல என்ன சந்தேகம்?”

“சத்தம் மட்டும்தான் கேட்குது, சேவலைக் காணோமேங்கறதால கேட்டேன் சார்”

“அந்தப் புதருக்குள்ளதான் சேவல் எங்கோ இருக்குது. கண்ணுக்குத் தெரியாது. குரலை வச்சித்தான் நாம புரிஞ்சிக்கமுடியும்”

“ஏன் அப்படி?”

“ஒரு திருடன் உள்ள புகுந்து ஓடினாகூட பின்னால போய் கண்டுபுடிக்கமுடியாது. அந்த அளவுக்கு செடியும் செத்தையுமா இப்படி  மண்டி கெடக்குது. இந்த லட்சணத்துல சேவலை எப்படி பார்க்கமுடியும், சொல்லுங்க. அதுவா என்னைப்பார் என்னைப்பார்னு வெளியே வந்து கத்தினாதான் அதைப் பார்க்கமுடியும்”

என்னைவிட உயரமான புதர்கள் மண்டி கொஞ்சம் கூட வெளிச்சம் புக முடியாதபடி அடர்ந்து கிடந்த அந்த இடத்தை ஒருகணம் திகைப்போடு பார்த்துவிட்டுத் திரும்பினேன்.

“அதெல்லாம் சரி சார். இந்தச் சேவல் ஏன் பகல்ல கூவுது. வழக்கமா காலை நேரத்துல கூவுற சேவலைத்தான் நான் பார்த்திருக்கேன்”

இன்னும் நான் அந்த வியப்பிலிருந்து மீள முடியாதவனாகவே இருந்தேன். இரண்டு கேள்விகளுக்கு என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியும் இருக்குமா என்பது ஒரு கேள்வி. ஏன் இப்படி இருக்கிறது என்பது இன்னொரு கேள்வி.

நான் மெளனமாக நடந்துவருவதை உணர்ந்ததும் விட்டல்ராவ் என்னை உரையாடலுக்குள் இழுக்கும் விதமாக “எதைப்பத்தி இவ்வளவு தீவிரமா யோசிக்கிறீங்க?” என்று கேட்டார்.

“எல்லாம் அந்த சேவலைப் பத்தித்தான் சார். பொதுவா கோழி, குயில், காகம், தவளை போன்ற சின்னச்சின்ன உயிரினங்களெல்லாம் மனிதர்களைவிட அதிகமான கூருணர்வு கொண்டதுன்னு சொல்வாங்க. இந்தச் சேவல் மட்டும் இரவு பகல் வித்தியாசம் தெரியாம ஏன் குழப்பிக்குதுன்னுதான் புரியலை”

“இதுல ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிக்க ஒன்னுமே இல்லை பாவண்ணன். அடர்த்தியா இருக்கிற அந்தப் புதரை ஒரு நிமிஷம் பாருங்க. வெளிச்சம் போகவே வழியில்லை. உள்ள இருக்கிற கோழிக்கு இருட்டா, பகலான்னு தெரிஞ்சிக்கவே வழியில்லை. அது இப்பதான் தூக்கம் தெளிஞ்சி எழுந்ததோ என்னமோ. யாருக்குத் தெரியும்? காலை நேரம்னு நெனச்சிகிட்டு சத்தம் கொடுக்குது”

அவர் சொன்னதை ஏற்றுக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. மெதுவாக நடந்து அந்த வீட்டுமனையைக் கடந்தோம்.

“இன்னைக்கு முதல்முதலா நீங்க அந்த சேவல் சத்தத்தைக் கேக்கறதால, உங்களுக்கு அதிசயமா இருக்குது. நான் தினந்தோறும் ரெண்டுமூனு மணி நேரத்துக்கு ஒருதரம் ஆலைச்சங்கு மாதிரி கேட்டுகிட்டேதான் இருக்கறேன். அதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற குழப்பம் எனக்கு இல்லாம போயிடுச்சி”

“தெனமும் கேப்பீங்களா?”

”ஆமாம். எந்த நேரத்துல வேணும்ன்னாலும் அது குரல் கொடுக்கும். குறிப்பிட்ட நேரம்னு எதுவும் கிடையாது. சில வீட்டுல வயசானவங்க கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பி கேட்டுகினே இருப்பாங்க. பார்த்திருக்கீங்களா?”

“ஆமா. அல்சைமர் பிரச்சினை இருக்கிறவங்க அப்படி கேப்பாங்கன்னு சொல்வாங்க.”

“அதே மாதிரியான பிரச்சினைதான் இதுவும். அல்சைமர் மனுஷங்களுக்கு மட்டும்தான் வரும்னு எங்கயாச்சிம் சொல்லியிருக்குதா, என்ன? இந்தச் சேவலுக்கு அல்சைமர் இருக்குதுன்னு நெனைச்சிகிட்டா எந்தத் தொந்தரவும் இல்லை. இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்டுட்டு போயிகிட்டே இருக்கவேண்டிதுதான்”

விட்டல்ராவ் கொடுத்த விளக்கம் தர்க்க அடிப்படையில் பொருந்திப் போவதாகவே இருந்ததால், என் மனமும் அதை ஏற்றுக்கொண்டது.

“இந்தக் கொக்கரக்கோ சத்தத்தை கேட்கும்போதெல்லாம் எனக்கு என்னுடைய சின்ன வயசு ஞாபகம் ஒன்னு வரும் பாவண்ணன்”

அப்படிச் சொல்லத் தொடங்கியதுமே அவர் முகம் மலர்ந்ததைப் பார்த்தேன். அவருக்குள் இருக்கும் சிறுவன் அவருடைய கண்கள் வழியாகப் புன்னகைப்பதுபோல இருந்தது.

“என்ன ஞாபகம் சார்?”

“பள்ளிக்கூடத்துல படிச்ச ஒரு இங்கிலீஷ் ரைம் ஞாபகம். சின்ன வயசுல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு. மனப்பாடமா சொல்லிச் சொல்லி அந்தப் பாட்டு மனசுல பதிஞ்சிபோச்சி.”

விட்டல்ராவின் நினைவாற்றலை நினைத்து நினைத்து வியக்காத பொழுதே இல்லை. அந்தப் பாடலை அவர் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார் என்று தெரியும். இருந்தாலும் வாய் வரைக்கும் வந்துவிட்ட கேள்வியை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. “இப்பவும் ஞாபகம் இருக்குதா சார்?” என்று கேட்டேன்.

அவர் ஒருகணம் கையை உயர்த்தி “கொஞ்சம் இருங்க” என்பதுபோல அசைத்தபடியே உதடுகள் மட்டும் அசைய ஒருமுறை மனசுக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்வதை நான் பார்த்தேன். அடுத்த கணமே ”ஞாபகம் இருக்குது. சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

குழந்தைப்பருவத்துக்கு உரிய ஒரு பாடலை எண்பது வயதைக் கடந்த ஒருவரிடமிருந்து கேட்பதைப்போன்ற பெரிய பேறு எதுவும் கிடையாது என்று நினைத்துக்கொண்டேன். இதுவரை கேட்காத பாடலாக இருந்தால், தெரிந்துகொள்ளலாம் என்கிற ஆசையும் இருந்தது. ”சொல்லுங்க சார்” என்று ஆவலோடு சொன்னேன்.

அக்கணமே அவர் நடையை நிறுத்தி ஒவ்வொரு வரியாக நினைவிலிருந்து சொன்னார்.

 

Cocks crow in the morn

To tell us to rise,

And he who lies late

Will never be wise;

 

For early to bed

And early to rise,

Is the way to be healthy

And wealthy and wise.

 

            வழக்கமாக கேட்டுக்கேட்டுப் பழகிய பாடலாக இல்லாமல் அந்தப் பாட்டு புதிதாக இருந்ததாலேயே, அதைக் கேட்டதும் உற்சாகமாக இருந்தது. கொக்கொரக்கோ கூவலுக்கும் துயிலெழுவதற்கும் இடையிலான தொடர்பு கண்டங்களைத் தாண்டி நீடிப்பதை நினைத்தால் ஆச்சரியமாகவே இருந்தது.

“பாட்டு ரொம்ப அருமையா இருக்குது சார். இதுவரைக்கும் நான் கேட்காத பாட்டு.”

“நாங்க அரூர்ல இருக்கும்போதுதான் ஃபர்ஸ்ட் ஃபர்ம் படிச்சேன். என்.எஸ்.பெரியசாமிங்கறவருதான் எங்க இங்க்லீஷ் சார். நாமக்கல்லிலேருந்து அரூருக்கு மாற்றலாகி வந்திருந்தாரு.  இங்கிலீஷ  ரொம்ப ரசனையோடு  சொல்லிக் கொடுப்பாரு. க்ளாஸ்ல அவரு இந்தப் பாட்ட வரிவரியா சொல்லச்சொல்ல நாங்க அதை திருப்பிச் சொல்வோம்.”

அந்தப் பாட்டைக் கேட்டதைத் தொடர்ந்து, இன்னும் ஏதேனும் குழந்தைப்பாடலை நினைவிலிருந்து சொல்லமாட்டாரா என்று தோன்றியது.

“கம்யூனிஸ்ட் கட்சி மேல ரொம்ப ஈடுபாடு அவருக்கு. அதனாலயே அடிக்கடி அவரை ஊரூரா மாத்திகிட்டே இருந்தாங்க. தங்கமான மனுஷன். பிள்ளைகளுக்கு கதைகளையும் பாட்டுகளையும் ரொம்ப ஆசையா சொல்லிக்கொடுப்பாரு. ஒரு இங்கிலீஷ் வார்த்தையை சொல்லும்போதே அதுக்கு தமிழ் அர்த்தம் என்ன, அதை ஒரு வாக்கியத்துல எப்படி பயன்படுத்தறதுன்னு நிறுத்தி நிதானமா சொல்லிக் கொடுப்பாரு”

பாடலிலிருந்து ஆசிரியரை நோக்கி உரையாடல் நீண்டுகொண்டே போனது. அதை மெதுவாக நிறுத்தி, மீண்டும் பாடலை நோக்கித் திருப்பினேன்.

“இன்னும் என்ன பாட்டு ஞாபகத்துல இருக்குது, சொல்லுங்க சார்”

“இன்னும் ஒரு பாட்டா?” என்றபடி விட்டல்ராவ் சிறிது நேரம் யோசித்தார். சில கணங்களைத் தொடர்ந்து “ஆ, ஞாபகம் வந்துட்டுது” என்று முகம் மலரச் சொன்னார்.

“சொல்லுங்க, சொல்லுங்க சார்” என்று நான் தூண்டினேன்.

“சேவல் கொக்கரக்கோன்னு கூவுதுன்னு சொல்றாங்க இல்லையா? அந்த கொக்கரக்கோ சத்தத்துக்கு இங்கிலீஷ்ல என்ன வார்த்தை பயன்படுத்துவாங்க தெரியுமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் விட்டல்ராவ்.

எனக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினேன். என் பதிலுக்காக என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விட்டல்ராவ் புன்னகையோடு Cock – a – doodle – doo என்று சொன்னார்.

தாளத்தோடு கூடிய அந்தச் சொல்லைக் கேட்டதும் அந்தத் தாளத்தில் லயித்துவிட்டேன். அதன் புதுமை ஒரு கணம் என்னை மயக்கிவிட்டது. அந்தச் சொல்லை போதிய கவனத்துடன் உள்வாங்கிக்கொள்ள மறந்துவிட்டேன். வேறு வழி தெரியாமல் “என்ன சொன்னீங்க, இன்னொரு தரம் சொல்லுங்க” என்று மீண்டும் கேட்டேன். அவர் அதே புன்னகையோடும் ராகத்தோடும்  Cock – a – doodle – doo என்று ராகத்தோடு இழுத்துச் சொன்னார். அந்தச் சொல்லை நாலைந்து முறை மனசுக்குள்ளேயே சொல்லிச்சொல்லி நிலைநிறுத்திக்கொண்டேன். ஆங்கிலம் புதிய சொற்களை உருவாக்கி நிலைநிறுத்தும் விதம் வியப்பளிப்பதாகவே இருந்தது.

“அந்த Cock – a – doodle – doo வார்த்தையை வச்சி ஒரு பாட்டு இருக்குது. இதுவும் அந்த க்ளாஸ்ல படிச்ச பாட்டுதான். அந்த வார்த்தையால அந்தப் பாட்டு ஞாபகத்துல இருக்குதா, அந்தப் பாட்டால அந்த வார்த்தை ஞாபகத்துல இருக்குதான்னு தீர்மானமா சொல்ல முடியலை. அந்தப் பாட்டு ஒரு கதை மாதிரி இருக்கும்.”

“கதைப்பாட்டா? சொல்லுங்க சார்”

அவர் ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்து விட்டபடி ஒரு சிறுவனுக்கே உரிய உற்சாகமான குரலில் பொருத்தமான ஏற்ற இறக்கத்தோடு வரிவரியாக சொல்லத் தொடங்கினார்.

 

Cock-a-doodle-doo

My dame has lost her shoe;

My master's lost his fiddling-stick,

And don't know what to do.

 

Cock-a-doodle-doo

What is my dame to do?

Till master finds his fiddling-stick,

She'll dance without her shoe.

 

Cock-a-doodle-doo

My dame has lost her shoe,

And master's found his fiddling-stick;

Sing doodle-doodle-doo

 

அவர் சொல்லச்சொல்ல ஒவ்வொரு வரியாக நானும் மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன். கொக்கொரக்கோ சத்தத்தை ஒரு கற்பனைக்கதையோடு இணைத்துச் சொன்ன விதம் மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது. என்னை அறியாமலேயே நான் கைத்தட்டி என் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினேன். ஆயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த அந்தத் தெருவோரத்தில் நாங்கள் இருவரும் சிறுவர்களைப்போல சிரித்துச் சிரித்து அந்தப் பாடலைக் கொண்டாடினோம்.

“சொல்லச்சொல்ல பாட்டுங்க ஞாபகத்துக்கு வந்துகிட்டே இருக்குது பாவண்ணன்” என்றார் விட்டல்ராவ். எனக்கும் அதைக் கேட்க ஆசையாக இருந்தது. அவர் பாடிய பாட்டின் வசீகரம் இன்னும் புதிய பாடலைக் கேட்கும் ஆவலை உருவாக்கியது. ”சொல்லுங்க சார். எனக்கும் கேக்கறதுக்கு ஆசையா இருக்குது” என்று மீண்டும் அவரைத் தூண்டினேன்.

“பெக்கர் மெய்ட்னு ஒரு பழைய பாட்டு. கொப்பேச்சான்னு ஒரு கோமாளி ராஜா ஒரு பிச்சைக்காரியை கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்திய பாட்டு. பரமார்த்த குரு கதை மாதிரி ஒரு கிண்டல் கதை. அந்த  மாதிரியான கதைப்பாடல்கள் இங்கிலீஷ்ல ஏராளமா இருக்குது.  பாடப்பாட சந்தோஷமா இருக்கும்”

ஒருமுறை கொப்பேச்சா என்று மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். என்னமோ நமது ஊரில் சித்தப்பா, பெரியப்பா என்று சொல்வதுபோல இருந்தது.

“பாட்டை சொல்லுங்க சார்”

தொண்டையைச் செருமிக்கொண்டு விட்டல்ராவ் பெக்கர் மெய்ட் பாட்டின் வரிகளை சொல்லத் தொடங்கினார்.

 

Her arms across her breast she laid

She was more fair than words can say

Barefooted came the beggar maid

Before the king Cophetua.

 

In robe and crown the king step down,

To meet and greet her on her way;

'It is no wonder,' said the lords,

'She is more beautiful than day.'

 

As shines the moon in clouded skies,

She in her poor attire was seen;

One praised her ankles, one her eyes,

One her dark hair and love some mien.

 

So sweet a face, such angel grace,

In all that land had never been.

Cophetua swore a royal oath:

'This beggar maid shall be my queen!'

 

கொப்பேச்சாவின் அறிவிப்பைச் சொல்லும் வரியைச் சொல்லி முடித்த போது விட்டல்ராவால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. வாய்விட்டு வேகமாகச் சிரித்துவிட்டார். என்னாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நானும் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.

எதிர்பாராத  கணத்தில் எல்லாமே தன்னிச்சையாக நடந்தேறிவிட்டது.  எங்கள் சிரிப்புச்சத்தத்தைக் கேட்டு சாலையில் நடந்து சென்றவர்கள் எங்கள் பக்கமாக விசித்திரமானதொரு பார்வையை வீசிவிட்டுச் சென்றார்கள். சற்றே தாமதமாகத்தான் நான் அதை உணர்ந்தேன். தொண்டையைச் செருமி அக்கம்பக்கம் பார்த்தபடி இயல்புநிலைக்குத் திரும்பினேன். ”இந்தப் பாட்டுங்கள எழுதின பைரன், டென்னிசன் மாதிரியான கவிஞர்கள் எல்லாருமே இங்க்லீஷ்ல பெரிய பிரபலமான கவிஞர்கள். நம்ம பாரதியார் மாதிரியான கவிஞர்கள்னு சொல்லலாம்” என்று விட்டல்ராவ் அடங்கிய குரலில் சொல்லிக்கொண்டே ஆனந்த பவனை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதைக் கேட்டபடி அவருக்கு அருகிலேயே நானும் நடந்தேன்.