Home

Tuesday 9 January 2024

சுந்தரவரதன் : வினைத்திட்பமும் மனத்திட்பமும்

 

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை 01.08.1920 அன்று தொடங்கினார். பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறந்துவிட வேண்டும், ஊதியம் பெறும் அரசாங்கப் பதவிகளையும் துறந்துவிடவேண்டும், காவல் துறையிலிருந்தும் இராணுவத் துறையிலிருந்தும் விலகவேண்டும், வரி கொடுப்பதை நிறுத்தவேண்டும் ஆகிய நான்கு முக்கியமான அம்சங்கள் அத்திட்டத்தில் இருந்தன.

ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக இந்தியத் தேசியத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டன. பொது வேலைநிறுத்தங்களும் ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் எல்லா இடங்களிலும் சங்கிலித்தொடர் போலத் தொடர்ச்சியாக நடைபெற்று மக்களுடைய கவனத்தை ஈர்த்தன. கள்ளுக்கடை மறியலின் காரணமாக அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்த வருமானம் கணிசமான அளவில் குறைந்தது. எங்கெங்கும் இளைஞர் சங்கங்களும் காங்கிரஸ் கிளைக்குழுக்களும் உருவாகின. எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்கத்தை நியாயமான காரணத்துக்காக ஒரு சாதாரண மனிதன் எதிர்க்கமுடியும் என்னும் தன்னம்பிக்கை மக்கள் மனத்தில் உதித்தது.


இத்தகு சூழலில் ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றி மக்களிடையில் எடுத்துரைப்பதற்காக நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக மெளலானா செளகத் அலியுடன் இணைந்து 12.08.1920 அன்று சென்னைக்கு வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் கிலாபத் குழுத்தலைவர்களும் அவரை வரவேற்றனர். சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 14.08.1920 அன்று வேலூருக்கும் ஆம்பூருக்கும் வருகை புரிந்தார். வழியில் ஆற்காடு ஆற்றங்கரையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்.

அக்காலத்தில் ஒத்துழையாமைப் போராட்டத்தை முன்வைத்து காங்கிரசுக்குள்ளேயும் வெளியேயும் பலத்த வாக்குவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. தெளிவுக்காகக் காத்திருக்கும் சில கேள்விகள் எல்லோரிடமும் இருந்தன. அவர்கள் அவற்றை வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்தினர். காந்தியடிகள் முடிந்தவரையில் அனைவருக்கும் சுருக்கமாக பதில்களை அளித்தார்.

அக்கூட்டத்தில் பொதுமக்கள் வரிசையை ஒழுங்குபடுத்தி அமைதியை நிலைநாட்டும் பணியில் சாரணர் பயிற்சியைப் பெற்ற உள்ளூர்ப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒருபுறம் தம் கடமையை நிறைவேற்றியபடி மற்றொரு புறத்தில் காந்தியடிகளின் சொற்களையும் கவனமுடன் கேட்டு மனத்தில் பதியவைத்துக்கொண்டனர். அவருடைய கருத்துகள், அந்த இளம்மனங்களில் தேசத்துக்காகத் தொண்டாற்றவேண்டும் என்னும் விழைவை விதைத்தன. அம்மாணவர்களில் முக்கியமானவர் சுந்தரவரதன் என்னும் பதினாலு வயது நிறைந்த இளைஞர். அவர் வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர்.

குடும்பச்சூழல் காரணமாக சுந்தரவரதனால் பள்ளிப்படிப்பை முடிக்கமுடியவில்லை. உறவினர் ஒருவரின் உதவியால் அவருக்கு சென்னையில் இருந்த ஒரு கமிஷன் மண்டியில் மாதம் ஐந்து ரூபாய் சம்பளத்தில் கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. அவருடைய அழகான கையெழுத்தும் ஆங்கில அறிவும் அதற்குத் துணைபுரிந்தன. இருபதுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த அந்த மண்டியில் அவருக்கு முன்னுரிமை கிடைத்தது. பகல் முழுதும் மண்டியில் வேலை செய்தாலும் ஓய்வு நேரங்களில் தேசத்தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு தேசியப் போராட்டங்களைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் சுந்தரவரதன் அந்த வேலையில் உடனடியாகச் சேர்ந்துவிட்டார்.

அப்போது வைசிராயாக இருந்த ரீடிங் காந்தியடிகளின் செயல்திட்டங்களை மிகவும் அறிவீனமானது என கேலி செய்து அறிக்கையை வெளியிட்டார். காந்தியடிகளோ எதையும் பொருட்படுத்தாமல் செயல்வீரராக இருந்தார். பிறருடைய கிண்டல் பேச்சுகள் அவருடைய ஊக்கத்தை அதிகரிக்கவைத்ததே தவிர குறைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் சுற்றுப்பயணம் செய்தபடி இருந்தார். வன்முறையில் ஈடுபடுவதற்காகத் துடிதுடித்துக்கொண்டிருந்த மக்களின் மனப்போக்கைக் கண்டித்துத் திருத்தினார். மற்றொரு பக்கத்தில் நாட்டுக்காகத் தியாகம் செய்வதற்கான மன உறுதியை மக்களிடம் ஏற்படுத்தினார். அவருடைய ஒத்துழையாமைப் போராட்டம் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய எல்லா வேறுபாடுகளையும் கடந்து மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. திருவல்லிக்கேணி கடற்கரையிலும் சென்னையைச் சுற்றி பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்கள் நிகழ்த்தும் உரைகளை ஆர்வத்துடன் கேட்டு தெளிவு பெற்றார் சுந்தரவரதன். இராஜாஜி, அலி சகோதரர்கள், தி.சே.செள.ராஜன், சத்தியமூர்த்தி கஸ்தூரிரங்க ஐயங்கார், டி.பிரகாசம் போன்ற தலைவர்களின் உரைகள் சுந்தரவரதனைப் பெரிதும் கவர்ந்தன.

ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பரவி வலிமைபெற்று வந்த தருணத்தில் ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் அருகில் செளரி செளரா என்னும் நகரத்தில் 04.02.1922 அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக வன்முறை பரவிவிட்டது. பொதுமக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் அங்கிருந்த காவல் நிலையத்தை எரித்தனர். அந்தத் தீவிபத்தில் 22 காவலர்கள் கொல்லப்பட்டனர். அப்போது காந்தியடிகள் சூரத் நகரில் இருந்தார். செளரிசெளரா செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காந்தியடிகள் செளரிசெளரா வன்முறைக்குப் பிராயச்சித்தமாக ஐந்துநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பிறகு, 07.02.1922 அன்று ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார்.

காந்தியடிகளின் முடிவை முன்வைத்து விவாதிக்கும் விதமாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன. நாடெங்கும் தேச விடுதலை சார்ந்து ஒரு விழிப்புணர்ச்சி பரவத் தொடங்கியிருக்கும் நிலையில் காந்தியடிகள் எடுத்திருக்கும் முடிவு பிழையானது என்று சில தலைவர்கள் விமர்சித்தனர். மனத்தளவில் அகிம்சையின் குரல் மீது நம்பிக்கை கொள்ளாமல் செய்யும் செயல்களால் ஒரு பயனும் இல்லை என்றும் செயலைவிட அகிம்சையுணர்வுடன் வாழ்வது முக்கியம் என்றும் சில தலைவர்கள் எடுத்துரைத்தனர். காந்தியடிகளின் முடிவு சரியானது என்று அவர்கள் சொன்னார்கள்.  காந்தியடிகளின் கொள்கைகள் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த சுந்தரவரதனுக்கு இரு தரப்பினரின் உரைகளையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அகிம்சையின் மீது நம்பிக்கையின் காரணமாக, காந்தியடிகள் எடுத்த முடிவையே அவர் மனம்  சரியான முடிவென நம்பியது.

சுந்தரவரதன் சென்னையில் பணியாற்றி வந்த சமயத்தில் ஒருமுறை  நாக்பூரில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலத்தில் தொண்டர்கள் அகில இந்திய தேசியக்கொடியையும் காங்கிரஸ் கொடியையும் ஏந்தியபடி நடந்தனர். நகரத்தில் வசித்த பொதுமக்களும் தம் வீடுகளில் அக்கொடிகளைப் பறக்கவிட்டனர். ஆங்கிலேய அரசு அதற்குத் தடை விதித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பதின்மூன்றாம் தேதி வரைக்கும் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவுகூரும் வண்ணம் தேசியக் கொடி வாரத்தைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்தது. நகரத்தில் வசித்துவந்த எல்லாத் தொண்டர்களும் அந்த அறிவிப்பைப் பின்பற்றினர். இறுதிநாளான 13.03.1923 அன்று  அனைவரும் தேசியக்கொடியை ஏந்தி நடந்து செல்லும் ஊர்வலமொன்றை காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஊர்வலத்தைத் தொடங்கும் முன்பேயே  ஊர்வலத்துக்கு அரசாங்கம் தடை உத்தரவை விதித்தது.

தடையை மீறி  நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் கொடியை ஏந்தி சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர். தடியடி நடத்தி அந்த ஊர்வலத்தைக் கலைத்த காவல்துறையினர் தொண்டர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொண்டர்கள் கைது விவரம் தேசிய அளவில் பேசுபொருளானது. உடனே இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகள் தம் ஊரிலிருந்து புறப்பட்டு நாக்பூரை நோக்கி வந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியினர் ஊர்வலமாகச் சென்றனர். காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொடி சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக தொண்டர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மதுரையைச் சேர்ந்த வைத்தியநாத ஐயர் ஈடுபட்டிருந்தார்.  சுந்தரவரதனுக்கு நாக்பூருக்குச் சென்று அப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தது. ஆனால் மதுரைக்குச் சென்று வைத்தியநாத ஐயருடைய பரிந்துரையைப் பெறுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அவருடைய சென்னை வாசம் அதற்கு ஒரு தடையாக இருந்தது. அத்தருணத்தில் அவர் பணியாற்றிய மண்டி முதலாளி வியாபார விஷயமாக யாரேனும் ஒருவரை கராச்சிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். பணியாளர்களில் சுந்தரவரதன் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவராக இருந்ததால் முதலாளி அவரையே தேர்ந்தெடுத்து கராச்சிக்கு அனுப்பிவைத்தார்.

மண்டியிலிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியிலேயே சுந்தரவரதன் தன் பயணத்திட்டத்தை முழுமையாக மனத்துக்குள் வகுத்துக்கொண்டார். கராச்சிக்குச் செல்வதற்கு முன்பாக நாக்பூருக்குச் சென்று கொடி சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று அவர் மனம் திட்டமிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகியாக கலந்துகொள்ளாவிடினும் அந்த ஊர்வலத்தில் ஒருவராக இணைந்து கொடியேந்தி நடக்கவேண்டும் என்று அவர் ஆவல் கொண்டார்.

ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நின்றிருந்த சமயத்தில் தற்செயலாக அவருடைய பழைய நண்பரான சுப்பராயன் என்பவரைச் சந்தித்தார். அவரைப் பார்த்ததும் ஆவலை அடக்கமுடியாமல், தன்னுடைய நாக்பூர் திட்டத்தை அவரிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு  அவரும் அப்பயணத்தில் இணைந்துகொள்ள விரும்பினார். எனவே இரண்டு சீட்டுகள் வாங்கிக்கொண்டு இருவரும் நாக்பூர் செல்லும் ரயிலில்  ஏறினர்.

தமிழ்நாட்டிலிருந்து வரும் ரயிலில் போராட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான தொண்டர்கள் திரண்டு வரும் செய்தியை அறிந்த காவலர்கள், நாக்பூரை அடையும் முன்பேயே வார்தாகஞ்ச் என்னும் நிலையத்தில் வண்டியை நிறுத்தி சத்தியாகிரகிகளைக் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்னும் பெருவிருப்பத்தோடு பயணம் செய்த சுந்தரவரதனும் சுப்பராயனும்  சிறைக்கூடத்துக்குச் சென்றனர். விசாரணைக்காக அனைவரும் ஓரமாக நிற்கவைக்கப்பட்டனர்.

ஏற்கனவே நூறுநாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவந்த அப்போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்தியாகிரகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  எவ்வளவு மாத காலம் சிறையில் இருக்க நேரிடுமோ என்ற சிந்தனையில் சுந்தரவரதனும் சுப்பராயனும் மூழ்கியிருந்தனர். பல நாட்களாக காங்கிரஸ் தலைவர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை தற்செயலாக அப்போதுதான் நல்லவிதமாக முடிவடைந்தது.  சிறையில் அடைபட்டிருந்த எல்லா சத்தியாகிரகிகளையும் விடுதலை செய்ய அரசு ஒப்புக்கொண்டு அறிக்கையை வெளியிட்டது. கைதாகி சிறைவாசல் வரைக்கும் சென்ற சுந்தரவரதன் சிறைக்குச் செல்லாமலேயே விடுதலை பெற்று வெளியே வந்தார். அதுவரை பெயரளவில் கேட்டிருந்த பல வடமாநிலத் தலைவர்களை  அன்று நாக்பூர் சிறையில் நேரில் பார்க்கும் வாய்ப்பு சுந்தரவரதனுக்குக் கிடைத்தது. விடுதலைக்குப் பிறகு ஒன்றிரண்டு நாட்கள் நாக்பூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, முதலாளி கொடுத்த பணியை முடிப்பதற்காக கராச்சி சென்றனர். சில நாட்களிலேயே அந்த வேலையை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பினர்.

வாலாஜாபேட்டைக்கு அருகில் செங்காடு என்னும் கிராமத்தில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் இணைந்து ஆசிரமம் அமைத்து காந்தியக்கொள்கைகளை பிரச்சாரம் செய்துவந்தனர். அப்போது பிரச்சாரத்துக்குரிய வாசகங்களை அச்சடித்துக் கொடுக்க அச்சகங்கள் மறுத்தன. தண்டோரா அடித்து அறிவிப்பைச் சொல்வதற்கும் ஆள் கிடைக்கவில்லை. அரசாங்கத்தைக் கண்டு அந்த அளவுக்கு மக்கள் அச்சமடைந்திருந்தனர். வேறு வழியில்லாமல் அவ்விருவரும் சேர்ந்து சுவரொட்டி விளம்பரங்களை அவர்களே பழைய செய்தித்தாட்கள் மீது எழுதி எடுத்துச் சென்று சோற்றுப்பசை தடவி சுவர்தோறும் ஒட்டி கூட்டங்களைப்பற்றி விளம்பரம் செய்தனர். வழக்கமாக கோவிலுக்கு முற்புறத்தில் அல்லது தெருக்கோடியில் அந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. மேடைக்கு அருகிலேயே நின்று காவல்துறையினர் குறிப்பெடுத்துக்கொள்ள, பொதுமக்கள் அனைவரும் வெகுதொலைவில் அமர்ந்து உரைகளைக் கேட்பது வழக்கம்.

சென்னையிலிருந்து வாலாஜாபேட்டைக்கு வந்திருந்த சுந்தரவரதன் ஒருமுறை அந்தக் கூட்டத்துக்குச் சென்று அவர்களுடைய உரையைக் கேட்டு மனம் பறிகொடுத்தார். அவ்விருவரில் ஜமதக்னி அவரோடு பள்ளியில் பயின்ற காலத்திலிருந்தே நண்பராக இருந்தவர். ஏற்கனவே இத்தகு பிரச்சாரங்களில் ஈடுபாடு கொண்டிருந்த சுந்தரவரதன் அவ்விருவரோடும் சேர்ந்துகொண்டார். சென்னைக்குத் திரும்பிச் செல்லாமல், அவர்களோடு இணைந்து அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும் தருணங்களில் சாப்பாட்டுக்கடைகள் இல்லாத அந்த ஊரில் அனைவரும் உணவில்லாமல் தவித்தார்கள். அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரவரதன். அவருடைய தாயாருக்கு மகனுடைய நடவடிக்கை மீது ஒருவித கசப்பு இருந்தது. மாதச்சம்பளம் பெற்றுக்கொண்டு சென்னையில் ஒழுங்காகச் செய்துவந்த வேலையை காரணமில்லாமலேயே விட்டுவிட்டது அவருக்குப் பிடிக்கவே இல்லை. வருமானமளிக்கும் வேலையை உதறிவிட்டு, ஒன்றுக்கும் உதவாத போராட்டப்பாதையில் ஈடுபட்டு ஊரூராக இரவுபகல் பாராமல் சுற்றிக்கொடே இருப்பதும் பிடிக்கவில்லை. அந்தக் கசப்பை அவருடைய நண்பர்கள் மீதும் அவர் காட்டினார்.

சுந்தரவரதனோ வீட்டுக்குள் நுழைந்ததும் அனைவருக்கும் உணவு வழங்குமாறு சொன்னார். ஆனால் வழக்கம்போல கசப்பை வெளிப்படுத்தியது மட்டுமன்றி, அவர்களுக்கு உணவு கொடுத்தால் ஆபத்து வரக்கூடும் என்று எச்சரித்தார் அவர் தாயார். ஆனால் சுந்தரவரதனோ பிடிவாதமாக “வருவது வரட்டும். தேசபக்தர்களை ஆதரிக்காத வாழ்க்கைக்குப் பொருளே இல்லை” என்று சொல்லி உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். நாளடைவில் சுந்தரவரதனின் தாயாருக்கும் அது பழகிவிட்டது. அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் பேச்சுமுறையையும் கேட்டு அவர்கள் மீது நம்பிக்கையும் பிறந்தது. மெல்ல மெல்ல சுதந்திரப் போராட்டப்பாதையில் அவரும் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டார்.

ஒருமுறை விரிஞ்சபுரம் என்னும் ஊருக்கு சுந்தரவரதனும் அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் காந்தியடிகளின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யச் சென்றிருந்தனர். மதிய உணவு வேளை வரைக்கும் முடிந்த வரை எல்லாத் தெருக்களுக்கும் சென்று தெருமூலைக்கூட்டங்களில் நின்று பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டனர். பிறகு மதிய உணவுக்காக தொண்டர்களோடு சேர்ந்து அங்கே இருந்த உணவு விடுதிக்குச் சென்றனர். அனைவருக்கும் உணவு தயார்செய்யும்படியும் அருகிலிருக்கும் ஆற்றுக்குச் சென்று  குளித்துவிட்டு வருவதாகவும் தெரிவித்தார் சுந்தரவரதன்.

அவருக்கு முன்பாக அந்த உணவு விடுதிக்கு மட்டுமன்றி, அந்த ஊரிலிருந்த எல்லா விடுதிகளுக்கும் சென்ற காவல்துறையினர் ”காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது. தடையை மீறி உணவு கொடுப்பவர்களுக்கு தண்டனை உண்டு. கடை நடத்தும் உரிமையும் பறிக்கப்படும்” என்று மிரட்டிவைத்திருந்தனர். இதனால் சுந்தரவரதனின் வேண்டுகோளை சாப்பாட்டுக்கடைக்காரர்களால் நிறைவேற்ற இயலவில்லை.   வேறு வழியின்றி, சுந்தரவரதனும் பிற தொண்டர்களும் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் நின்று உணவு வேண்டினர். ஒருவரும் அவர்களுடைய கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.

அந்த ஊரில் ஒரே ஒருவர் மட்டும் மனமிரங்கி அவர்களுக்கு உணவு கொடுத்தார். அவர் அனைவரையும் மிரட்டிச் சென்ற காவலரின் மனைவி. ஆனால் மனைவி என்றும் பாராமல் அந்தக் காவலர் அவரைக் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றார். பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் இத்தகு இன்னல்களை எதிர்கொண்டாலும் சுந்தரவரதனும் அவருடைய நண்பர்களும் தளராத மன உறுதியுடன் காந்தியடிகளின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டனர்.

ஒருமுறை லாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் அனந்தாச்சாரி, ஜமதக்னி, சுந்தரவரதன் மூவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். சுந்தரவரதன் தன் உரையில் “இந்தியாவில் அந்நியர் ஆட்சி வேரூன்றியதற்கு எல்லா வகைகளிலும் இந்தியர்களே காரணம். ஆற்காட்டில் கிளைவ் என்பவன் இந்தியச்சிப்பாய்களையே துணையாகச் சேர்த்துக்கொண்டு ஆற்காடு கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டான். திருச்சிராப்பள்ளியிலிருந்தும் சந்தா சாகிப்பின் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. அப்போது தம்மிடம் இருந்த உணவுப்பொருட்களையெல்லாம் கோட்டைக்குள்ளே இருந்த கிளைவுக்கும் வெள்ளைச்சிப்பாய்களுக்கும் அளித்துவிட்டு, தாம் அரிசிக்கஞ்சியைக் குடித்துவிட்டு ஆங்கிலேயருக்காக கோட்டையைக் காவல் காத்து நின்றனர் நம் மக்கள். இப்படி ஆற்காட்டுக்கோட்டை ஆங்கிலேயர்வசம் சிக்கியது முதல் ஆங்கிலேயர் அரசாங்கம் இந்நாட்டில் வேரூன்றத் தொடங்கிவிட்டது. மறைமுகமாக இந்தியர்களாகிய நாமே அதற்குக் காரணமாக இருந்தோம்” என்று குறிப்பிட்டார்.

காவல்துறையினர் அந்த உரையையே காரணமாகக் காட்டி அரசாங்கத்தை இழிவுபடுத்துவதாக அவர்மீது குற்றம் சுமத்தி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். விசாரணையில் தன் உரையில் பிழையாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் வரலாற்று உண்மையையே தெரிவித்ததாகவும் சுந்தரவரதன் குறிப்பிட்டார். நீதிபதி சுந்தரவரதனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கினார்.

சிறையிலிருந்து விடுதலையடைந்ததும் சென்னைக்குச் சென்று சிறிதுகாலம் கடையில் வேலை செய்தார். ஆனால் அவர் மனத்தில் தம் நண்பர்களோடு சேர்ந்து தேசத்தொண்டு ஆற்றமுடியவில்லையே என்னும் ஏக்கமே நிறைந்திருந்தது.  ஒரு கட்டத்தில் அந்த ஏக்கத்தின் விசையால் சென்னையைத் துறந்து மீண்டும் வாலாஜாபேட்டைக்கு வந்து சேர்ந்தார்.

1928இல் ஒருமுறை செங்காட்டில் கெளதம ஆசிரமத்தின் முன்னால் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை ஒரு விழாவாகக் கொண்டாட அனந்தாச்சாரி, ஜமதக்னி, சுவாமிநாதன், சுந்தரவரதன் நால்வரும் ஏற்பாடு செய்திருந்தனர். அனைவரும் சேர்ந்து முதல்நாள் இரவே கொடியேற்றுவதற்கு வசதியாக ஒரு கொடிக்கம்பம் நாட்டினர். அடுத்தநாள் காலையில் குறித்த நேரத்தில் கொடிக்கம்பத்தைச் சுற்றி ஏராளமான இளஞ்சிறார்கள் குழுமத் தொடங்கினர். பொதுமக்கள் பலரும் வழக்கம்போல தொலைவில் மரத்தடிகளிலும் தத்தம் வீட்டு வாசல்களிலும் நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். தேசத்தொண்டர்களாகிய நால்வரும் கதராடை அணிந்த கோலத்தில் கொடிக்கம்பத்தைச் சுற்றி நின்றிருந்தனர்.

கொடியேற்றத்துக்குக் குறிப்பிட்டிருந்த நேரத்தில் அனந்தாச்சாரி கம்பத்தை நெருங்கி கொடிக்கயிற்றைப் பற்றி இழுத்தார். அந்த வேகத்தில் எதிர்பாராதவிதமாக கம்பம் அசைந்து சாயத் தொடங்கியது. அதைப் பார்த்த தொண்டர்கள் கம்பத்தைச் சாயவிடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டனர். அவசரமாக கடப்பாறையைக் கொண்டுவந்து குழியை ஆழப்படுத்தி கம்பத்தை உறுதியாக நிற்கவைத்தனர். கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு மீண்டும் கம்பத்தை நெருங்கி நின்றனர். அனைவரும் இணைந்து பாரதியாரின் பாடலைப் பாடினர். அதைத் தொடர்ந்து அனந்தாச்சாரி கம்பத்தை நெருங்கிச் சென்று கொடிக்கயிற்றைப் பற்றி இழுத்தார். துரதிருஷ்டவசமாக, அந்த அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் அப்போதும் கம்பம் அசைந்து சாய்ந்தது. உடனே தொண்டர்கள் கம்பத்தை தரையில் தாங்கிப் பிடித்து சாய்ந்துவிழாதபடி பார்த்துக்கொண்டனர். மீண்டும் குழியை ஆழமாக்கி கம்பத்தை நட்டு நிறுத்திவைத்தனர்.

இரு முறைகள் ஏற்கனவே சாய்ந்த கம்பத்தில் கொடியை ஏற்ற அவர்களுக்கு மனம் வரவில்லை. மனம் குழம்பிய நிலையில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்த சமயத்தில் ஒரு காவல்துறை வாகனம் ஆசிரமத்துக்கு அருகில் வந்து நின்றது. போலீஸ் சூபிரன்டென்ட்டும் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் காவலர்களும் வந்து இறங்கினர். நான்கு பேரையும் கைது செய்வதற்கான ஆணையைத் தாங்கிய கடிதம் அவர்களுடைய கையில் இருந்தது. அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி விசாரணக்கு அழைத்துச் சென்றனர். நால்வர் மீது இராஜத்துவேஷ வழக்கு தொடரப்பட்டது. அரகோணத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் நால்வருக்கும் ஒராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் சிறையில் இருந்த சமயத்தில் 1929இல் சைமன் கமிஷன் குழுவினர் சென்னையை அடைந்தனர்.  அவர்களுடைய வருகையை எதிர்த்து எல்லா இடங்களிலும் அகிம்சை வழியில் போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநிவாச ஐயங்காரும் இராஜாஜியும் சத்தியமூர்த்தியும் அந்த எதிர்ப்புப்பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். சிறையில் வாடிய தேசத்தொண்டர்களின் தினசரி உரையாடலில் அந்தப் போராட்டச் செய்தி பெரிதும் இடம்பிடித்தது. அச்சமயத்தில் லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட யதீந்திரநாத் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக தண்டனை பெற்று சிறைக்கு வருபவர்களையும் திருட்டு, கொலை போன்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறைக்கு வருபவர்களையும் ஒரே விதமாக நடத்தும் வகையிலேயே அக்காலத்தில் சிறைவிதிகள் இருந்தன. அவை திருத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து யதீந்திரநாத் சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 64 நாட்கள் வரை அவருடைய போராட்டம் நீடித்தது

 அவருடைய உண்ணாவிரதச் செய்தி சிறைக்கு வெளியே பரவி, பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆயினும் அரசு பாராமுகமாகவே இருந்தது. கடைசியில் சிறையிலேயே நிகழ்ந்த யதீந்திரநாத்தின் மரணம்  அரசை அசைத்தது. அதன் விளைவாக புதிய சட்டம் உருவானது. பிற கைதிகளிடமிருந்து அரசியல் கைதிகளை வேறுபடுத்தி, அவர்களையும் ஏ, பி, சி என மூன்று வகுப்புகளாகப் பிரித்து சிறையில் அடைக்கும் விதமாக திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சுந்தரவரதன் உள்ளிட்ட தொண்டர்கள் சி பிரிவு சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறையில் சுந்தரவரதன் பல்வலியால் மிகவும் அவதியுற்றார். அடுத்தடுத்த கோரிக்கைகளுக்குப் பிறகு சிறை மருத்துவர் அவருடைய சொத்தைப்பல்லை நீக்கி குணப்படுத்தினார். அங்கு கிடைத்த ஓய்வுப்பொழுதில் நூல்களைப் படித்தும் பிற மொழிகளைப் பயின்றும் அறிவைப் பெருக்கிக்கொண்டார் சுந்தரவரதன்.

தொடக்க காலத்தில் டொமினியன் அந்தஸ்து கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்திருந்தது. ஓராண்டுக் காலத்துக்குள் அரசு தகுந்த முடிவெடுக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த காலத்துக்குள் அரசு எவ்விதமான பதிலையும் அளிக்கவில்லை. அதனால் 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நேரு தலைமையில் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 31.12.1929 அன்று நள்ளிரவில் ரவி நதிக்கரையில் ஏராளமான மக்களுக்கு நடுவில் நேரு சுதந்திரக்கொடியை ஏற்றினார். அதற்குப் பிறகு நாடெங்கும் எல்லாப் பகுதிகளிலும் கொடிக்கம்பங்களில் சுதந்திரக்கொடி பறக்கத் தொடங்கியது. சுந்தரவரதனும் அவருடைய நண்பர்களும் விடுதலை பெற்று வாலாஜாபேட்டையை அடைந்தபோது பொதுமக்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மீது விருப்பம் கொண்டவர்களாக மாறியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தனர். ஒரு காலத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் பலரும் நெருங்கிநின்று தலைவர்களின் உரைகளைக் கேட்கும் அளவுக்கு தயக்கமற்றவர்களாக மாறியிருந்தனர். அரசாங்கத்தின் மீதிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டு காங்கிரஸ் இயக்கத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள்.

காங்கிரஸ் தலைமையின் கட்டளைக்கிணங்க, அனந்தாச்சாரியின் தலைமையில் வாலாஜாபேட்டை இளைஞர்கள் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர். சிறையிலிருந்து விடுதலை பெற்ற சுந்தரவரதனும் அவர்களோடு தேசியக்கொடியை ஏந்தி பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியபடி ஊர்வலத்தோடு இணைந்து நடந்தார். ஊரெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் கதர்த்துணியால் ஆன தேசியக்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தன. நகரத்தின் பல பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

கொடி ஊர்வலத்தைத் தொடர்ந்து, சுந்தரவரதன் உற்சாகத்தோடு பல பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். தலைவர்களின் தியாகத்தைப்பற்றி படித்துத் தெரிந்துகொண்ட செய்திகளையும் கேட்டுத் தெரிந்துகொண்ட செய்திகளையும் இணைத்து ஒவ்வொரு மேடையிலும் மக்களுக்கு சுவாரசியத்துடன் எடுத்துரைத்தார்.  மக்கள் அனைவரும் சுந்தர வரதனுடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டனர். அவருடைய எல்லா உரைகளையும் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்திய காவல் துறை அதிகாரிகள், எங்கோ ஒரு கூட்டத்தில் அவருடைய உரையி்ல் அரசாங்க விரோதப்போக்கின் சாயல் தென்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தினர். ஒப்புக்கு ஒரு விசாரணை நடைபெற்றது. அதில் அவருக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.

சுந்தரவரதன் சிறையில் அடைபட்டிருந்தபோது 12.03.1930 அன்று காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அவரும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளும் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தொலைவில் உள்ள தண்டி கடற்கரையை நோக்கி நடக்கத்தொடங்கினர். தமிழ்நாட்டில் இராஜாஜியின்  தலைமையில்  சத்தியாகிரகிகள் குழுவொன்று திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரை வரைக்கும் நடக்கத் தொடங்கியது. பிரகாசம் தலைமையில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள அனந்தாச்சாரி, ஜமதக்னி, சுவாமிநாதன் அனைவரும் சென்றனர். மனம் முழுதும் சத்தியாகிரகப்போராட்ட நினைவுகளில் மூழ்கியபடி சிறைக்கூடத்தில் காலத்தைக் கழித்தார் சுந்தரவரதன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவருடைய நண்பர்கள் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றமைக்காக அனைவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

05.03.1931 அன்று காந்தி இர்வின் ஒப்பந்தம் உருவான பிறகு, இந்தியாவெங்கும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்கள் விடுதலை பெற்றனர். ஒப்பந்தத்தின் நிபந்தனைக்கு இணங்கி காந்தியடிகள் இங்கிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். ஆனால் அம்மாநாட்டு விவாதங்கள் எவ்விதமான முடிவையும் எட்டாமல் நீண்டுகொண்டே சென்றன. காந்தியடிகள் ஏமாற்றத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். அவர் இந்தியாவுக்குத் திரும்பி வரும் முன்பேயே வெலிங்டனின் அடக்குமுறை தொடங்கிவிட்டது. ஐக்கிய மாகாணத்தில் நேருவும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள் சட்டமறுப்புத் தீர்மானத்தை நிறைவேற்றினார். உடனே அரசு அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

நாடெங்கும் சட்டமறுப்புப் போராட்டம் பரவி  வலிமை பெறத் தொடங்கியது. அதைக் கண்டு அஞ்சிய அரசு காங்கிரஸ் இயக்கத்தைத் தடை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுந்தரவரதன் வாலாஜாபேட்டையில் ஓர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தார். அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் அவருக்குத் துணையாக நின்றனர். “ஒருவேளை நாங்கள் சிறைபிடிக்கப்பட்டால், அதைத் தொடர்ந்து சட்டமறுப்பு போராட்டம் தொடரவேண்டும்” என்று ஊர்வலத்தில் நின்றிருந்தவர்களிடம் சுந்தரவரதன் வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பிறகு வந்தே மாதரம் முழக்கத்தோடு ஊர்வலம் தொடங்கியது.

வாலாஜாபேட்டை கடைத்தெருவை நெருங்கிய சமயத்தில் காவல்துறை அதிகாரிகள் ஊர்வலத்தை நிறுத்தினர். சுந்தரவரதன், அனந்தாச்சாரி, ஜமதக்னி மூன்று பேரையும் அழைத்துச் சென்று தொலைவில் நிறுத்தியிருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். அதற்குப் பிறகு ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்களை ஆடுமாடுகளை அடிப்பதுபோல அடித்து விரட்டினர்.

ஒருசில நிமிடங்களிலேயே அவர்களுடைய விசாரணை முடிந்தது. மூவருக்கும் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. உடனே காவலர்கள் அவர்களை அழைத்துச் சென்று வேலூர் சிறையில் அடைத்தனர். வழக்கம்போல அவர்களை முதலில் குவாரண்டைன் பிளாக்கில் அடைத்து எல்லாவிதமான சோதனைகளையும் முடித்த பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயினும் சில நாட்களிலேயே சுந்தரவரதனும் மற்றவர்களும் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டனர். அந்தச் சிறையில் அவர்கள் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தனர். ஒரு வாரம் கம்பளி நூல் நூற்கும் வேலை. அடுத்து ஒரு வாரம் கல் உடைக்கும் வேலை. அதைத்தொடர்ந்த வாரத்தில் கல் இயந்திரத்தில் கேழ்வரகு மாவு அரைக்கும் வேலை. இப்படி ஒவ்வொரு நாளும் அனைவரும் உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தண்டனைக்காலத்தில் ஒரு சின்ன பிழைக்கும் கடுமையான தண்டனை அவர்களுக்குக் காத்திருந்தது. அச்சிறையில்தான் சென்னையைச் சேர்ந்த பாஷ்யம் என்னும் தொண்டரைக் கட்டிவைத்து 32 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டன.. அவராக எந்தப் பிழையையும் செய்யவில்லை. சிறை அதிகாரி ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டியதையே அதிகாரிகள் பிழையாகக் கருதினர். ஒருமுறை சுந்தரவரதனும் அத்தகு விசித்திரமான தண்டனையொன்றுக்கு ஆளானார். முதலில் அவருடைய கைகள் இரண்டையும் முதுகுப்பக்கமாக வளைத்து விலங்கிடப்பட்டது. பிறகு அந்த விலங்கு கம்பிக்கதவுடன் பிணைக்கப்பட்டு உடலை அசைக்கமுடியாதபடி செய்யப்பட்டது. இறுதியாக கால்களிலும் குறுக்கு விலங்கு பொருத்தப்பட்டது. இதனால் நகரவும் முடியாமல் அமரவும் முடியாமல் தூங்கவும் முடியாமல் நின்றுகொண்டே இருக்கவேண்டியதாக இருந்தது. இரவு உணவுக்குப் பிறகு தொடங்கும் இத்தண்டனை அதிகாலை மூன்று மணி வரைக்கும் தொடர்ந்தது. இவ்விதமாக மூன்று நாட்கள் சுந்தரவரதனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தொடர்ந்தது.

தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை பெற்றதும் சென்னைக்குச் சென்று ஒரு நகைக்கடையில் வேலை செய்யத் தொடங்கினார். இளமைக்காலத்தில் உற்சாகமுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுபோல அவரால் தொடர்ந்து விசையுடன் செயல்பட முடியவில்லை. அவருடைய நண்பர்களான அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் தொடர்ந்து சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு அலைந்ததுபோல அவரால் அலையமுடியவில்லை. பல குடும்பப்பொறுப்புகள் அவருக்குத் தடையாக இருந்தன. ஆயினும் சூழல் தனக்கு உகந்ததாக இருக்கும் தருணங்களில் அவ்வப்போது பிரச்சாரத்துக்குச் சென்று வந்தபடிதான் இருந்தார்.

இரண்டாம் உலகப்போர் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற ஆங்கில அரசாக்கம் 08.08.1940 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஆகஸ்டு சலுகை என்று அழைக்கப்பட்ட அந்த அறிவிப்பில் போருக்குப் பிறகு புதிய அரசியலமைப்பை உருவாக்க இந்தியர்களின் பிரதிநிதித்துவ அமைப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்தது. அதை ஏற்க மறுத்த காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். முதல் சத்தியாகிரகியாக களத்தில் இறங்கிய வினோபா போர் எதிர்ப்புப் பிரகடனத்தை வெளியிட்டு போரில் ஒருபோதும் அரசுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். காவல் துறையினர் அவருடைய உரை அரசாங்கத்துக்கு எதிரானதாகக் குற்றம் சுமத்தி கைது செய்தனர். இப்படியே நாடெங்கும் எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் சிறைபுகுந்தனர். நாட்டுநடப்பைக் கூர்ந்து கவனித்துவந்த சுந்தரவரதன் தன் ஆவலைக் கட்டுப்படுத்தௌடியாமல் தன் குடும்பத்தினரிடமும் கடைமுதலாளியிடமும் உண்மைத்தகவலைத் தெரிவித்துவிட்டு 25.02.1941 அன்று போர் எதிர்ப்புப் பிரகடனத்தை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காவல் துறையினர் அவரைக் கைது செய்து ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்தது. விடுதலைக்குப் பிறகு அலுவல் நிமித்தமாக கண்ணனூருக்குச் சென்றிருந்த தருணத்திலும் அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக 21 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலை பெற்றுத் திரும்பியவருக்கு அந்தக் கடைமுதலாளி மீண்டும் வேலை கொடுத்து தன்னோடு வைத்துக்கொண்டார்.

 ஆதரவில்லாத சிறுவர் சிறுமியருக்கான இல்லமாகவும் கல்வியளிக்கும் நிலையமாகவும் வாலாஜாபேட்டையில் சுந்தரவரதனின் நண்பர்களான கல்யாணராம ஐயரும் அனந்தாச்சாரியும் இணைந்து தீனபந்து ஆசிரமம் என்னும் பெயரில் ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினர். 1962 வரை சென்னையில் பணியாற்றிய சுந்தரவரதன் உடல்நிலை நலிவடைந்ததைத் தொடர்ந்து வாலாஜாபேட்டைக்குத் திரும்பி வந்தார். இறுதி மூச்சு வரைக்கும் அந்த ஆசிரமத்தில் தொண்டாற்றி மனநிறைவடைந்தார்.

சுந்தரவரதன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் 1925இல் சுந்தரவல்லியம்மா என்னும் பத்து வயது நிறைந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.  ஆனால் அவருக்கு இருபது வயது நிறைவடையும் வரைக்கும் காத்திருந்த பிறகே 1936 முதல் சேர்ந்து வாழ்ந்தார். ஆயினும் தமக்குப் பிறக்கப்போகும் குழந்தை சுதந்திர இந்தியாவில்தான் பிறக்கவேண்டும் என்னும் வைராக்கியத்துடன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வந்தார். தன் விருப்பத்தை தன் மனைவியிடம் எடுத்துரைத்து அவரையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். அவரும் வைராக்கியத்துடன் காத்திருந்தார். 15.08.1947 அன்று நம் நாட்டுக்கு விடுதலை கிடைத்த பிறகே சுந்தரவரதன், சுந்தரவல்லியம்மா இணையர் இல்லற வாழ்வில் ஈடுபட்டு 23.12.1948 அன்று ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர்.

 

 

 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலாஜா என்னும் ஊரில் 17.08.1906 அன்று வெள்ளிமேடு சேஷாசாரியாருக்கும் ருக்மணியமாளுக்கும் இரண்டாவது மகனாக சுந்தரவரதன் பிறந்தார். காந்தியடிகளின் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக விடுதலைப்போராட்டத்திலும் கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். வாலாஜாவில் இன்றும் ஏழை மாணவர்களின் கல்விக்காக செயல்பட்டு வரும் தீனபந்து ஆசிரமத்தின் முன்னேற்றத்துக்கு இறுதிவரை உழைத்தார். 03.02.1990 அன்று மறைந்தார்.

 

(சர்வோதயம் மலர்கிறது – டிசம்பர் 2023)