Home

Sunday 21 January 2024

வேட்டை - சிறுகதை

 

கொலைகாரப் பட்டத்தோடு ஊருக்குள் திரும்பி வந்திருக்கிறேன். அந்தக் கொலையைப் பற்றி அதிகம் சொல்ல விருப்பமில்லை. எந்தச் சூழ்நிலையில் இந்தக் கொலையைச் செய்ய நான் -தூண்டப்பட்டேன் என்று யோசித்து முடிவெடுப்பவர்களுக்குத்தான் இது நியாயமாய்ப்படும். மற்றவர்கள் கண்களுக்கு இது கொலைதான். எத்தனையோ பறவைகளை ரத்தம் சிந்தக் கொன்றிருக்கிறேன். ஆனால், ஒரு வேட்டைக்காரனாகிய என் வாழ்க்கையில் எந்த மனித உயிரையும் கொல்லும் வெறியோ வேகமோ ஒருபோதும் இருந்ததில்லை என்பதுமட்டும் உண்மை.

பத்து நாட்களுக்குப் பிறகு என் கால்கள் இந்த வேலங்காட்டை மிதிக்கின்றன. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு துப்பாக்கியோடு வேலங்காட்டுக்கு ஓடிவந்து துப்பாக்கியைப் புதைத்துவிட்டு ஓடத் தொடங்கினேன். எத்தனையோ ஊர்கள், காடுகள், நகரங்கள். கால்போன போக்கில் ஓடினேன். அப்படியே எங்கேயாவது திசை புரியாத இடத்துக்குச் சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். நாளாக நாளாக என் உறுதி குலைந்தது. என் வள்ளியைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் மீண்டும் இந்த ஊருக்கு இழுத்து வந்துவிட்டது.

நள்ளிரவுக்குப் பின் மறைவிடத்திலிருந்து மெல்ல வெளி வந்தேன். துப்பாக்கியைக் கண்டெடுக்க வேண்டும் என்கிற உணர்வுதான் என்னைச் செலுத்தியது. அது இல்லாமல் கை உடைந்ததுபோல் கஷ்டப்பட்டுவிட்டேன். முதலில் அந்த மரத்தின் அடையாளம் புரியவில்லை. குழம்பிவிட்டேன். இதனாலேயே தவிப்பு அதிகரித்தது. எல்லாம் ஓரிரு கணங்கள்தான். அதற்குள் நான் செல்லவேண்டிய திசை புரிந்துவிட்டது. அப்புறம் எந்தத் தடையும் இல்லை. என் கால்களே துப்பாக்கி புதையுண்ட மரத்திற்கு அழைத்து வந்துவிட்டன. வேகவேகமாக மண்ணைத் தோண்டித் துப்பாக்கியை எடுத்தேன். ரத்தத்தில் புதிய சிலிர்ப்புண்டானது. மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். ஏரிக்கரையில் இரண்டு புளிய மரங்களிடையே நடுகல்லாகி விட்ட பெரிய கருப்பனைப் பார்த்ததும் என் நடை நின்றது. ‘பெரிய கருப்பாஎன்று மனசுக்குள் முணுமுணுத்தேன். அந்த நடுகல்லின் கம்பீரம் எனக்கும் ஒருவித தைரியத்தைக் கொடுத்தது. என் கைகள் தானாகக் குவிந்து  வணங்கின.

ஊரைச் சுற்றிக் காடாக இருந்த ஒரு தலைமுறையில் காவல் தெய்வமாகப் பெரிய கருப்பன் இருந்தான் என்று ஆயா சொல்வாள். சாப்பிட்டு வெற்றிலைப் பாக்குப் போட்ட பிறகு காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு தகரக்குரலில் பெரிய கருப்பனைப்பற்றிப் பாடும் அவள் குரல் இன்னும் நெஞ்சில் ஒலிக்கிறது. பிசிறற்ற குரல். தாலாட்டையோ, ஒப்பாரியையோ ஆரம்பிக்கிற விதத்தில் ஒரு இழுப்பு காட்டிவிட்டு உயர்கிற குரல் கதை முடிகிற வரை மட்டுப்படாது. அவள் மடியில் தலை வைத்தபடி கதை கேட்டிருப்பேன். என் கண் முன்னால் பெரிய கருப்பனின் சித்திரம் விரியும். கம்பீரமான ஒரு புருஷனாக அவனை நினைத்துக் கொள்வேன். என் கனவில் அவன் கருப்புத் தேகம் மினுமினுக்கும். கையில் துப்பாக்கி பளபளக்கும். பருத்த தோள்கள் புடைத்திருக்கும். பார்வையில் கவர்ச்சி பொலிந்திருக்கும். அந்தப் பிரமையில் என் ஞாபகங்கள் அலையும். அவள் குரல் உயரஉயர என் கனவுகளின் சித்திரங்கள் மாறி அசையும். வெற்றிலையைச் சிறு உரலில் வைத்து அவள் இடிக்கும் இடிகள் பெரிய கருப்பனின் காலடிச் சத்தமாக எங்கோ தொலைவில் எனக்குக் கேட்கும். அவள் மடியில் அப்படியே சரிந்து -தூங்கி விடுவேன்.

ஐப்பசி மாதத்தில் நிரம்பத் தொடங்கும் ஏரி வைகாசி ஆனி வரைக்கும் கூடத் தளும்பிக் கொண்டிருந்த காலம் ஒன்றுண்டு. மீன் குத்தகைக்கென்று ஏரித் தண்ணீரை எட்டு மதகுகளிலும் திறந்துவிட்டு காலியாக்குகிற கவுன்சிலர்கள் யாரும் இல்லாத காலம் அது. ஏரியைச் சுற்றிலும் காடுகள் மண்டிக் கிடந்த காலம். ரயில்களும் பஸ்களும் இல்லாத காலம். கல்லில் குடிகொண்ட பெரிய கருப்பன் வேட்டைத் துப்பாக்கியோடு திரிந்த காலம் அதுதான் என்பாள் ஆயா. காட்டு மிருகங்கள் ஊருக்குள் வராதபடி, வேட்டைத் துப்பாக்கியோடு வீற்றிருந்த வீரன் பயிர்களுக்கு எந்தப் பாதகமும் நேராமல் உயிர் பற்றிக் கவலையற்று ஊர் காத்த உத்தமன்.

பெரிய கருப்பனின் நினைவுகள் எனக்கு எவ்வளவோ ஆறுதலைத் தந்தன. மிக்க கவனத்தோடு அடிமேல் அடிவைத்து நடந்தேன். ஒவ்வொரு மரத்தடியிலும் நின்று காலடிச் சத்தத்தைக் கவனித்தேன். எதுவும் இல்லை என்று உறுதி செய்துகொண்ட பிறகுதான் அடுத்த மரத்தை நோக்கி நடந்தேன். வானம் இருண்டிருந்தது. சின்ன நிலாவை மேகங்கள் உள்வாங்கி மூடிக் கொண்டிருந்தன. திடுமென ஒரு சத்தம். நான் மரத்தோடு ஒடுங்கிக்கொண்டேன். கைகள் துப்பாக்கியை இயக்கத் தயாராகின. ஒரு ஆண், ஒரு பெண். புடவை உரச அவர்கள் நடக்கும் சத்தம். சின்ன முணுமுணுப்புகள். சின்னக் குறுநகைகள், சீண்டல்கள். அவர்கள் நடந்து தோப்புக்குள் மறைந்தார்கள். நான் மீண்டும் அடுத்த மரம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மனசில் பெரிய கருப்பனின் சித்திரம் மறுபடியும் எழுந்தது.

பருவம் மாறியதை உணர்ந்து ஊர்விட்டு ஊர்வந்து சுற்றிய பறவைகளைச் சுட்ட பெரிய கருப்பன் அவற்றை மச்சு வீட்டில் கொண்டு போய்க் கொடுத்ததாய்ச் சொன்னாள் ஆயா. பின் கட்டுக்குப் போய் மருமகளிடம் தரச் சொன்னார் கவுண்டர். மிடுக்கோடு கைவீசி வந்தவனைப் பார்த்து மருமகள் ஆச்சரியப்பட்டு பக்கத்தில் இருந்தவளிடம்யார் இவள்என்று கேட்டாளாம். ‘வேட்டைக்காரன் பெரிய கருப்பன்என்றாளாம் அவள். பறவைகளை உரித்துத் தந்தவனுக்கு வைக்கோல் போரில் வேலை கொடுத்தார் கவுண்டர். உச்சிப்போரில் ஏறிக் கலைத்துப் போட்டதையும் கட்டுக்கட்டாய்த் -தூக்கிக் கொண்டு போய் முற்றத்தில் வைத்ததையும் பார்த்தும் பாக்காதவளுமாக இருந்தாள் மருமகள். எதையும் கவனிக்காத பெரிய கருப்பன் கிணற்றில் தண்ணீர் எடுத்து கை கால் கழுவிக் கொண்டு துப்பாக்கியோடு கிளம்பினான். அவனைக் கூப்பிட்டு வாழை இலையில் சுடுசோறும் கறியும் வைத்து நீட்டினாள் மருமகள். அவள் பார்வைக்கும் குரலுக்கும் கட்டுப்பட்டான் பெரியகருப்பன். திரும்பி வந்து அவள் கொடுத்ததை வாங்கி உண்டான். கிண்ணத்தில் இன்னும் கொஞ்சம் கறி கொண்டு வந்து அவன் இலையில் போட்டாள் மருமகன். ‘‘நல்லாருக்கா’’ என்றபோது அவன் முகத்தில் சந்தோஷம் விரிந்தது. எதற்கோ பின்பக்கம் வந்த கவுண்டர் மருமகளிடம், ‘‘அவன்கிட்ட ஒருபடி அரிசி குடுத்தனுப்பு என்றார்.

அன்றைக்கு ஒருபடி அரிசி கொடுத்தவர் ஊருக்கே பஞ்சம் வந்தபோது ஒருமணி அரிசிகூட யாருக்கும் தர மறுத்துவிட்டதாய் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள் ஆயா. வற்றாத ஏரிகுளம் வறண்டுவிட்ட கொடும் பஞ்சம் அது. கால் மரக்கால் அரிசிக்கு கைக்குழந்தை விற்ற பஞ்சம். அரை மரக்கால் அரிசிக்கு அடிமையென ஆன பஞ்சம். உயிரைப் பலி வாங்கிய உன்மத்தம் பிடித்த பஞ்சம். வாழ்வைப் பலிவாங்கி வையகத்தைத் தின்ற பஞ்சம். ஊர் ஜனங்கள் எல்லாரும் ஓவென்று முறையிட்டும் காப்பாற்ற வேண்டுமென்று கால்பிடித்து முறையிட்டும் அவர் மனம் கரையவில்லை. ‘போய் சாவுங்கடா போங்கஎன்று தள்ளிவிட்டுப் போய்விட்டார் அவர். பசித்த கூட்டத்தோடு சென்ற பெரிய கருப்பன் அவரை வழிமறித்தான். ‘போற உயிர காப்பாத்தறது பெரிய தர்மம். உயிரவிட பெரிசாய்டுமா சொத்து?’ என்று கேட்டான். அவர் பதறவில்லை. ‘போடா, எனக்கும் என் சந்ததிக்கும் தேடி வச்சது தான் சொத்து. உனக்கும் உன் கூட்டத்துக்கும் கெடையாது. வழிய விடுரா முட்டாள்என்றார். ‘காடு வௌச்சல காப்பாத்தி கொடுத்தது நான்; ராப்பகலா நின்னு ரட்சிச்சுக் கொடுத்தது நான்என்றான் பெரிய கருப்பன். அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் நடந்தார் அவர். அவனுக்கு மனசு குமைந்தது. நெஞ்சில் நெருப்பு எரிந்தது. அவமானப்பட்டது போல உணர்ந்தான். மீண்டும் அவரை மறித்து எடுத்துச் சொன்னான். அவர் ஒப்பவில்லை. ‘யாருக்கும் ஒருபிடி அரிசி தரமுடியாது. நான் சொன்னா சொன்னதுதான். உன்னால முடிஞ்சத செஞ்சிக்கோ!’ என்று சொல்லிவிட்டார்.

ஆத்திரத்தில் மனம் கொதித்தான் பெரிய கருப்பன். மூச்சுக் காற்றில் அனல் பறக்க மூர்க்கம் கொண்ட யானையைப் போலத் திரும்பினான். பட்டினிக் கூட்டம் பின்தொடர்ந்தது. பட்டப் பகலிலேயே கிடங்கை முற்றுகையிட்டு தானிய மூட்டைகளை எடுத்துக் கொள்ளத்தான் முதலில் திட்டமிட்டான். ஆனால், மனம் அதை விரும்பவில்லை. அழிவு அதிகமாகும் என்று அஞ்சினான்.

இரவு வரையில் குலதெய்வத்தை நினைத்தபடி உட்கார்ந்திருந்தான் பெரியகருப்பன். நள்ளிரவுக்குப் பின்னர் சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு மச்சுவீட்டின் பின்பக்கம் சென்றான். பத்துப் பேர் மட்டும் மதிலேறிக் குதித்து உள்ளே நுழைந்தார்கள். சிறிது தொலைவில் கிடங்கு தெரிந்தது. வாசலில் இரண்டு காவல்காரர்கள். பெரிய கருப்பன் இடுப்பிலிருந்த கவண்கல்லை எடுத்தான். அரைநொடிக்கும் குறைச்சலான நேரம். இரண்டு கற்கள் பறந்து இருவரையும் தாக்கின. முணுக்கென்ற சத்தம் கூட இல்லாமல் அதே இடத்தில் விழுந்தனர். நெருங்கி முன்னேறிய பெரிய கருப்பன், கள்ளச் சாவி போட்டு பூட்டைத் திறந்தான். பத்துப் பேரும் மூட்டைகளை எடுத்துஎடுத்து அந்தப் பக்கம் கொடுத்தார்கள். அந்தப் பக்கத்தில் காத்திருந்தவர்கள் தத்தம் வீடுகளுக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். அடுத்த நாள் விடியும் நேரத்தில் விஷயம் தெரிந்துவிட்டது. விழுந்து கிடந்த காவலர்களின் நெற்றிப்பொட்டைப் பார்த்த ஒருவன் ‘‘இது சத்தியமா பெரியகருப்பன் அடி’’ என்றான். அந்த நொடியே அவர்கள்  அவனைத் தேடி ஓடினார்கள். அவன் ஏரிக்கரையில் துப்பாக்கியோடு உலாத்திக் கொண்டிருந்தான். வெறிபிடித்த கவுண்டர் அவன் கன்னத்தில் எட்டி அறைந்தார். அவன் அடிவயிற்றில் குத்தினார். எதற்கும் எதிர்வினையில்லாமல் அமைதியாய் நின்றிருந்தான் பெரியகருப்பன். பஞ்சாயத்து கூடி அவனைக் கழுவிலேற்றத் தீர்மானித்தது. மறுநாள் அதிகாலையிலேயே ஏரிக்கரையில் கழுமரம் தயாரானது. பெரியகருப்பன் ஊரைப் பார்த்துக் கும்பிட்டான். காட்டைப் பார்த்துக் கும்பிட்டான். துப்பாக்கியைத் தன் மகன் சின்னக் கருப்பனிடம் தந்து கழுமரத்தின் முன் வந்து நின்றான். தண்டனையை நிறைவேற்ற வந்த சேவகர்கள் அவனைக் கழுவிலேற்றினார்கள். ஒரு பகல் முழுக்கத் துடித்த பெரிய கருப்பன் உயிர் இரவில் பிரிந்தது. அவன் உடலைப் பெற்றுக் கொண்ட ஊர்மக்கள் ஏரிக்கரையில் அவனுக்கு நடுகல் எழுப்பினார்கள் என்றும் மஞ்சள் குங்குமம் பூசி வருஷம் தோறும் கொடைக்கு ஏற்பாடு செய்தார்கள் என்றும் சொல்வாள் ஆயா.

பெரியகருப்பனுக்குப் பிறகு சின்னக் கருப்பன். அதற்குப் பிறகு பழைய கருப்பன். எல்லாருமே இந்த வம்சத்தின் காவல் தெய்வங்கள். அந்த ரத்தம் தலைமுறைகள் தாண்டி என் உடம்பிலும் ஓடுகிறது. என் இளமையின் நாட்களை அநேகமாய் அவர்கள் கதைகளைக் கேட்பதிலேயே கழித்தேன். நெஞ்சில் என் ஆயாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

என் இளமையிலேயே ஒரு காடு என்பதற்கான அம்சங்கள் எதுவுமே ஊரில் இல்லாமல் போய்விட்டது. ஏரிக்குள்ஐயனார் திட்டுக்குப் பக்கத்தில் நானூற்று சொச்சம் மரங்கள் இருக்கிற வேலங்காடு மட்டும்தான் இன்னும் இருந்தது. ‘‘இந்த ஊரு இருந்த இருப்பு என்னா... வாழ்ந்த வகை என்னா... இப்படி மொட்டயா போய்ச்சேடா. திருட்டுக் கவுண்டன் ஊரயெல்லாம் வளச்சி மொட்டயடிச்சிட்டான்யா’’ என்று அங்கலாய்பாள் ஆயா.

ஊரைச் சுற்றி வெள்ளைக்காரன் போட்ட ரோடு நீள்கிறது. மாட்டு வண்டிகளுக்குப் பதிலாகக் கார்கள் பறக்கின்றன. பக்கத்-தூர் ஜங்ஷனில் இருந்து கருத்த ரயில் ஓடி வந்தது. சரக்குப் பெட்டியில் கவுண்டர் அறுத்த மரத்துண்டுகள் ஊர் தாண்டிப் போய் பணமாக மாறிக் கொண்டிருந்தது. ‘பணம் பணம்னு அலயறானே எங்க கொண்டுப் போய் வைப்பானோ இந்தப் பணத்த?’ என்று அந்தத் திசையைக் காட்டிக் கையை முறிப்பாள் ஆயா. அந்தப் பேச்சை எடுத்தாலே அவள் வாயில் வசை வார்த்தைகள். ‘‘கண்ணில்லாத கபோதி. இரக்கமில்லாத மனிதன்  என்பாள். பல தலைமுறைகளின் கோபமும் இயலாமையும் அக்குரலில் தெரியும்.

ரயிலில் இறங்கிச் செல்லும் பிரயாணிகளிடம் அன்றைக்குச் சுட்டுப் பிடித்த பறவைகளை விற்பதற்காக நின்று கொண்டிருந்தேன். காவல் தெய்வத்தின் பரம்பரை காசுக்குப் பறவை விற்க நேர்ந்ததில் எந்தக் கண்ணியக் குறைவும் இருப்பதாய் நினைக்கவில்லை. பொய் சொல்லவில்லை. திருடவில்லை. ஏமாற்றவுமில்லை. அந்த வகையில் எனக்கு நிறைவுதான்.

கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்குப் பறவைகளை விலைபேசிக் கொண்டிருந்தபோது சாத்தன் ஓடிவந்தான்.

அண்ணே அவசரம். எங்களுக்காகப் பேசறதுக்கு ஆள் இல்ல. நீதான் வரணும். வா சீக்கிரம்!’’

நான் அவனை நிறுத்தி, ‘‘என்ன விஷயம்?’’ என்றேன்.

”கவுண்டர் நாப்பது ஐம்பது ஆளுங்களக் கூட்டி வந்து வச்சிக்கிட்டு மெரட்டறாரு. ஊடுங்களயெல்லாம் ஒடனே காலி செய்யணுமாம். அவரு மண்ணாம் அது. என்னென்னமோ பேப்பரயெல்லாம் காட்டறாரு.’’

பறவைகளை அந்தப் பெண்ணிடமே அவசரமாய்த் திணித்துவிட்டு அவனோடு ஓடினேன். அங்கு நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாய்ப் பதற்றம் நிலவியது. கவுண்டர் எல்லா ஏற்பாடுகளோடும் வந்திருந்தார். அவர் என்னை முறைத்துப் பார்த்தார். ‘‘எதுக்காக இப்படி அநியாயம் செய்றிங்க?’’ என்று கூவினேன். அவர் கண்களில் அலட்சியம் மின்னியது.

நியாயத்த எடுத்துச் சொல்லத்தாண்டா வந்திருக்கம்.’’

”எது நியாயம்? அடுத்தவங்க சொத்த எடுத்துக்கறது தான் நியாயமா?’’

”நியாயமில்லன்னுதான் நானும் சொல்றன். இது என் சொத்து. எங்கிட்ட திருப்பிக் கொடுத்துடுங்கன்னுதான் நானும் சொல்றன். இதுல அநியாயம் எங்கேர்ந்து வந்தது?’’

அவர் தந்திரமாய்ச் சிரித்தார். எனக்கு அந்த நயவஞ்சகமான வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

”பேசி ஏமாத்தலாம்னு நெனைக்காதீங்க.’’

இதோ பார் பத்தரம். உண்மை என் பக்கம் இருக்கும் போது  நான் எதுக்கு இன்னோர்த்தவங்கள ஏமாத்தணும்?’’

இது மோசடி, நீங்க சொல்றது பொய். எல்லாமே நாடகம்.’’

நீ உன்ன பெரிய ஆளா நெனச்சிட்டிருக்க. சுண்டைக்காய நசுக்கற மாதிரி நசுக்கிடுவேன். ஜாக்கிரதை.’’

பரம்பர பரம்பரயா வாழற இடம் இது. இங்கதான் இருந்தம். இங்கதான் இருப்பம். இத யாராலும் மாத்த முடியாது.’’

உங்க பரம்பர இருக்க இடம் குடுத்ததே நாங்கதான்டா. உன் சுண்டைக்கா சவால்லாம் எங்கிட்ட நடக்காது. இன்னம் எண்ணி மூணே மூணு நாள் கெடு. அதுக்குள்ள நல்ல புள்ளயா காலி செஞ்சிக்கிட்டு போய்டுங்க. இல்ல, நடக்கறதே வேறயா இருக்கும், உஷார்.’’

கவுண்டர் தன் பரிவாரங்களுடன் திரும்பிச் சென்றார். என் கண்களில் அந்த ஜனங்களின் வேதனையையும் குமுறலையும் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

என் இளமையின் ஞாபகங்களிலிருந்து சொல்வது என்றாலும்கூட அந்தக் காலத்தில் இருந்து எங்கள் வாழ்வு இங்கேதான். ஆண்டுக்கணக்கான வாழ்வது ஒன்றுதான் ஒரே ஆதாரம். எல்லாரும் உழைப்பாளிகள். கூலிக்காரர்கள். எப்படிப்பட்ட வேலைக்கும் அஞ்சாதவர்கள். கழனிகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்து மாடுகள் மேய்த்து மரம் அறுத்து... அவர்கள் ஒரு சரித்திரத்தின் அடையாளம் போல வாழ்ந்துகொண்டு இருந்தார்கள்.

மூன்று நாள் கெடுவுக்கப்புறம் எதுவும் நடக்கவில்லை. சரி, முடிவை மாற்றிக் கொண்டார் என்றிருந்தோம். ஆனால், எங்கள் ஊகம் பொய்யாகிவிட்டது. ஒரு வாரத்திற்கு அப்புறம் எல்லோரும் -தூங்கும் வேளையில் வீடுகள் எரிக்கப்பட்டன. அந்த நெருப்பு. அந்த ஓலக் குரல். அந்தத் தவிப்பு. ஓர் இரவுக்குள் பலர் வீடு இழந்தவர்கள் ஆனார்கள். பத்துப் பதினைந்து பேர் சாம்பலாகிப் போனார்கள். எங்களால் சில வீடுகளை மட்டுமே மீட்க முடிந்தது. தெரு முழுக்க அழுகுரல். வேதனை. எங்கள் விடாமுயற்சியால் ஒரே ஒருவனை மட்டும் ஓடிப் பிடித்து விட்டோம். அவன் கண்கள் கெஞ்சின. அதற்கு முன்னமேயே பல அடிகள் விழுந்து விட்டன. வலி தாளாமல் அவன் உண்மையைச் சொல்லிவிட்டான். நெருப்பு வைக்க ஆட்களை ஏவியது கவுண்டர்தான்.

என் மனம் கொதித்தது. அவனையும் இழுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்தார். துப்பாக்கியும் கும்பலுமாய் வந்த எங்களைப் பார்த்ததும் அவர் சற்றே பின்வாங்கினார். அவர் முன் பிடிபட்டவனைத் தள்ளினேன். அவர் காலில் போய் விழுந்தான் அவன். அவர் கால்களை உறுதியாய்ப் பற்றிக்கொண்டான். எங்களுக்குள் பேச்சு முற்றத் தொடங்கியது. ஆத்திரம் என் கண்ணை மறைத்தது. துப்பாக்கியை எடுத்து அவர் நெஞ்சுக்குக் குறி வைத்தேன். அவர் கும்பலில் சிலர் பயந்து பின்வாங்கினார்கள். ஆனால், அவருடைய எகத்தாளம் அவருடைய அகம்பாவம். ‘என்னடா பூச்சி சுடப் போறியாஎன்கிற கிண்டல். தன் மார்பின் ரோமத்தைக் காட்டிஇதக்கூட ஒன்னாலே ஒண்ணும் செய்ய முடியாதுஎன்ற ஆணவப் பேச்சு. அதுதான் கடைசியில் என் நிதானத்தைக் குலைத்தது. சட்டென்று குதிரையை இழுத்தேன். கால் நொடியில் அவர் பிணம் துடித்திருக்க வேண்டும். கடைசித் தருணத்தில் குறுக்கே வந்த அவர் தம்பி அக்குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டான். ‘டேய்...’ என்று அவர் கர்ஜித்தபடி என்மேல் தாவ முனைந்தார். நான் துப்பாக்கியை அவர் பக்கம் மீண்டும் திருப்பினேன். அதற்குள் ஆட்கள் சூழ்ந்து என்னைப் பிடிக்க முனைந்தார்கள். அவர்களைத் தள்ளிவிட்டு நான் வெளியே ஓடிவந்தேன்.

வீடு நெருங்கநெருங்க மனசு அடித்துக்கொண்டது. யார் பார்வையிலும் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கரிந்து மொட்டையான வீட்டுச் சுவர்கள் இடையே ஒளிந்துஒளிந்து மெல்ல முன்னேறினேன். அன்றைக்குக் காற்று வீசிய திசைதான் என் வீட்டைக் காப்பாற்றியது. அன்றைக்கு இதுவும் எரிந்திருந்தால் இப்படி அடிமேல் அடிவைத்து வள்ளியைக் காண வரும் தேவை உண்டாகி இருக்காது. அவளையும் என்னோடு அழைத்துச் சென்றிருப்பேன்.

சுற்றிலும் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. என் மனம் எதையோ எச்சரித்தது. நான் சுவரோடு ஒட்டித் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு கண்களைச் சுழற்றினேன். ஏழு எட்டடி வைப்பதற்குள் மீண்டும் அதே சத்தம். மீண்டும் சுவரோடு ஒட்டி சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையிலும் எதுவும் இல்லை. எல்லாம் கற்பனையோ என்று தோன்றியது.

வீட்டை நெருங்கி, கதவின் கீழ்ப்பகுதியில் மெல்லத் தட்டினேன்.  என் குறிப்பு அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். உடனே வள்ளியின் காலடியோசை கேட்டது. கதவு மெல்லத் திறந்தது. நான் உள்ளே சென்று கதவை மீண்டும் மூடினேன். முதலில் வீட்டுக்குள்ளிருந்த இருளில் கண்கள் நிதானப்பட சில கணங்களாயிற்று.

வள்ளி...’’

அவளைத் தழுவினேன். அவள் கண்களில் நீர் பெருகியது. நெஞ்சு விம்மியது. அவளைத் தழுவியபடி கீழே உட்கார்ந்து அவளை மடியில் சரித்தேன். நிறை சூலியான அவள் தவிப்பை என்னால் உணர முடிந்தது. அவள் கேவலும், விம்மலும் அடங்கச் சில நொடிகளாகின.

சாப்பிடறிங்களா...?’’

கொஞ்சம் தண்ணி குடு வள்ளி...’’

அவள் எழுந்துபோய் தண்ணீர் கொண்டு வந்தாள். பருகி முடித்துச் செம்பைக் கீழே வைக்கும் நேரம். வீட்டைச் சுற்றிக் காலடி ஓசை கேட்டது. துணுக்குற்று எழுந்தேன். அவசரமாய்க் கதவுச் சந்தில் கண்னணப் பொருத்திப் பார்த்தேன். நெருங்கி வரும் நாலைந்து உருவங்கள். அவசரமாய்த் தாவிப் பின்பக்கம் சென்று பார்த்தேன். அங்கும் சில உருவங்கள். அவர்கள் கைச் சைகைகள். முணுமுணுப்புகள். முதல் முறையாக முற்றிலும் சூழப்பட்டுவிட்டதை உணர்ந்தேன். ஆபத்து என்று மனம் கூவியது. மெல்ல வள்ளியைக் கவனித்தேன். அவள் உடல் கலவரத்தால் நடுங்கிக்கொண்டிருந்தது. இருளில் கண்கள் பழகிவிட்டன. அவளை நெருக்கமாய் அணைத்தபடி துப்பாக்கியைக் கையில் எடுத்தேன்.

உஷார், அவன் நம்ம கையால இன்னிக்குச் சாவணும்.’’

சற்றே உரத்த குரலில் எழுந்த முணுமுணுப்பு தெளிவாகக் கேட்டது. நன்றாகப் பழகிய குரல். மச்சு வீட்டுக்காரரின் குரல்.

(இந்தியா டுடே, இலக்கிய மலர்  1994)