Home

Friday 13 February 2015

அணிதிரட்டிய கவிதைகள்

சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை

கன்னடச் சிந்தனைமரபில் தலித்துகளின் பங்களிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசனக்காரர்களின் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. சாதிகளைத் துறந்த ஒரு மேலான சமூகத்தைக் கனவு கண்டார் பசவண்ணர். அதற்காக எல்லாச் சமூகத்தினரையும் அரும்பாடுபட்டு ஒருங்கிணத்தார். அவர் முன்னெடுத்துச் சென்ற சரணர் இயக்கம் உழைப்பின் வழியாகவும் மானுட உறவுகள் வழியாகவும் சமூகமாற்றத்தைச் சாத்தியப்படுத்த முயற்சி செய்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமகார ஹரலய்யா, காக்கய்யா, மாதார சென்னய்யா போன்றோர் அவருடைய சமகாலத்தில் இயங்கிய வசனக்காரர்கள். வசன இலக்கியம் என்னும் பெருந்தொகுதியில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பிற்காலத்தில் இவ்வியக்கம் வீரசைவத் தத்துவமாக பெயர்பெற்றாலும், அது உருவாகி நிலைபெற்ற காலத்தில் உயர்ந்த நெறிகளைக் கொண்ட நீதிமுறையை நிறைவேற்ற அவ்வியக்கம் பாடுபட்டது. துரதிருஷ்டவசமாக, அதன் இறுதிக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீண்டும் விளிம்பைநோக்கித் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பது வரலாறு. பக்தி இலக்கியக் காலகட்டத்தில் கனகதாசரின் பங்களிப்பு போற்றுதற்குரியதென்றாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் அது எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியும் தன் நிரந்தரத்துவத்துக்காக இந்தியர்களின் சாதிமத விஷயங்களில் தலையிடுவதில்லை என்கிற நிலைபாட்டில் உறுதியாக நின்றுவிட்டது. மேற்கத்திய கல்வியின் தாக்கத்தால் உருவான ஆர்யசமாஜமும் பிரம்ம சமாஜமும் பல சீர்திருத்த நடவடிக்கைகளில் முனைப்போடு இயங்கியபோதும், அவை எதுவுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைகளில் எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேஷாத்ரி ஐயர் என்னும் திவானின் முயற்சியால் மைசூர் அரசு பஞ்சமர்களின் பிள்ளைகள்மட்டுமே படிப்பதற்காக மாநிலமெங்கும் பஞ்சமர் பள்ளிகளைத் தொடங்கிய செய்தி தலித்துகள் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய திருப்புமுனை.  அவர்கள் வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை இக்கல்வி பரப்பியது. 1901 ஆம் ஆண்டு வாக்கில் மைசூர் சமஸ்தானத்தின்கீழ் ஏறத்தாழ 65 பள்ளிகள் இயங்கி வந்தன. பஞ்சமர் பள்ளிகளையும் பொதுப்பிரிவினர் பள்ளிகளையும் ஒருங்கிணைக்க அரசர் முயற்சி செய்தபோது, அரசருக்கெதிரான குரல்கள் சமஸ்தானமெங்கும் ஒலிக்கத் தொடங்கின. சாதி இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து அம்முயற்சிக்குக் கடுமையான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். சமஸ்தானமும் அப்போதைய கல்வி ஆய்வாளரான சி.ஆர்.ரெட்டி என்பவரும் தம் முயற்சியில் உறுதி காட்டியபோதும் எதிர்ப்பின் கடுமை காரணமாக, அம்முயற்சியைக் கைவிடநேர்ந்தது. அத்தருணம் முருகேச பிள்ளை என்னும் தமிழர் தொடங்கிய ஆதிதிராவிடர் அபிவிருத்தி சங்கம் என்னும் அமைப்பு பஞ்சமர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும் மேலாக, இடைவிடாமல் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அதிகாரத்தை நோக்கிக் குரல்கொடுத்துவந்தார் அவர்.
1920 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர கர்நாடகப்பகுதிகளில் நடைபெற்ற சில கூட்டங்களில்  அம்பேத்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிகளால் உத்வேகம் பெற்ற ஒரு பகுதியினர் 1923 ஆம் ஆண்டில் தார்வாடில் ஒரு மகாசங்கத்தைக் கட்டியெழுப்பினர். ஏறத்தாழ அதே வேளையில் கோபால்சாமி ஐயர் என்னும் சீர்திருத்தவாதி பஞ்சமர்கள் அரசியல் மாநாடு என்கிற பெயரில் எழுச்சிமிக்க மாநாடு ஒன்றை சமஸ்தானத்துக்குள் ஏற்பாடு செய்தார். அதில் பங்கேற்குமாறு அம்பேத்கருக்கு அழைப்பு விடுவித்தார். ஆனால் மைசூர் சமஸ்தானத்துக்குள் அவர் வரக்கூடாது என்கிற தடை இருந்ததால், அம்பேத்கரால் பங்கேற்க இயலவில்லை. அம்பேத்கர் உருவாக்கிய சமதா சைனிக் இயக்கமும் சியாம் சுந்தர் உருவாக்கிய பீம்சேனா இயக்கமும் தலித் சிறுத்தைகள் இயக்கமும் கர்நாடகப் பகுதியில் தலித் சிந்தனைப்போக்கில் உருவாக்கிய விளைவுகள் முக்கியமானவை. இவற்றின் கிளைகள் கர்நாடகத்தின் பல பகுதிகளில் ஆர்வமுடன் தொடங்கப்பட்டன. ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு, இந்த அமைப்புகளால் பெரிய நன்மைகளை வழங்க இயலவில்லை.
சுந்திரத்துக்குப் பிறகு, சென்னை ராஜதானி, பம்பாய் ராஜதானி, நிஜாம் அரசு ஆகியவற்றைச் சேர்ந்த எல்லையோரப் பகுதிகள் சிலவற்றையும்  குடகு, மைசூர் சமஸ்தானங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த கர்நாடகம் உருவாக்கப்பட்டது. கர்நாடகத்தில் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் வசமே ஆட்சிப்பொறுப்பு இருந்தது. தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்த எழுபதுகளில் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய பஸவலிங்கப்பா  முக்கியமான அமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஒரு பொதுநிகழ்ச்சியில், எவ்விதமான பின்விளைவுகளையும் யோசிக்காமல் அவர் கன்னட இலக்கியம்இந்து சமய நோக்கைக் கொண்ட இலக்கியம் என்றும்  அவை அனைத்தும் மாட்டுப் புண்ணாக்குக்குச் சமம் என்றும் குறிப்பிட்டுப் பேசிவிட்டார். அவர் பேச்சைக் கண்டித்து உருவான எதிர்ப்பு நாளடைவில் அவருக்கு எதிரான எதிர்ப்பாக உருமாறியது. பிறகு, தலித்துகளுக்கு எதிரான எதிர்ப்பாக வடிவம் கொண்டது. அமைச்சரவையிலிருந்து அவர் பதவி விலகவும் நேர்ந்தது. பஸவலிங்கப்பாவுக்கு ஆதரவாக இருந்த பல தலித் மாணவர்கள் அடையாளம் தெரியாத பலரால் தாக்கப்பட்டார்கள்.
உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாகும் என்கிற சட்டத்தின் காரணமாக, மாநிலத்தில் பல இடங்களில் பல தலித்துகள் நில உடைமையாளர்களான தருணம் அது. தலித்துகள் வாழ்வில் சிறிது வெளிச்சம் படர்ந்து, சற்றே மேல்நிலையை நோக்கி அடியெடுத்து வைத்தார்கள். சட்டத்தின் தன்மை காரணமாக, அதை மெளன சாட்சியாகப் பார்த்து வெதும்பிய ஒரு சில மேல்சாதியினர் பஸவலிங்கப்பா எதிர்ப்பை ஒரு காரணமாகக் கொண்டு, கன்னட இலக்கியப் பாதுகாப்பு என்கிற பெயரில் தலித்துகளை எதிர்க்கத் தலைப்பட்டனர். இன்னொரு கோணத்தில் மாநிலம் தழுவிய தலித் எழுச்சிக்கும் இது வித்திட்டது. தம் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தலித்துகள் ஒன்றிணைய வேண்டிய நெருக்கடி உருவானது.  தலித் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் ஒன்றிணைந்து 1973 ஆம் ஆண்டில் பத்ராவதி நகரில் ஒரு மாநாட்டை நடத்தினர். அத்தருணத்தில் தலித் சங்கர்ஷ் சமிதி உதயமானது. தலித்துகளுக்கு எதிரான சுரண்டலை அமைப்புரீதியாக எதிர்கொள்ளவும் தலித்துகளின் உரிமைகளைப் போராடிப் பெற்றுத் தரவும் அது முனைந்தது. தொடங்கப்பட்ட வேகத்திலேயே மாநிலம் முழுக்க அதன் கிளைகள் உருவாகின.  ஆயிரக்கணக்கில் கன்னட தலித் இளைஞர்கள் அந்த இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். இவ்வமைப்பின் செயல்பாடுகள் தலித் சிந்தனையை ஒருமுகப்படுத்தவும் கூர்மைப்படுத்தவும் உற்ற துணையாக இருந்தன. இந்த அமைப்பை கட்டியெழுப்பியவர்களில் முக்கியமானவர்கள் கிருஷ்ணப்பா, தேவனூரு மகாதேவ, சித்தலிங்கையா, தேவய்யா, சந்திரபிரசாத் தியாகி, எம்.டி.கங்கய்யா, வெங்கடேஷ் போன்றோர். சித்தலிங்கையா என்னும் கவிஞரின் உதயத்தையொட்டிய சமூகச்சூழலைப் புரிந்துகொள்வதற்காகவே இவ்வளவு நீண்ட குறிப்புகளை எழுத வேண்டியிருக்கிறது. சித்தலிங்கையா ஈடுபட்ட போராட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் அவருடைய கவிதைகளையோ, கவிதைகளில் இயங்கக்கூடிய அழகியலையோ புரிந்துகொள்ளவே முடியாது.
செறிவு, சுருக்கமான சொற்கள், குறியீடுகள், படிமங்கள் என வழங்கப்படும் பொதுவான கவிதை அழகியல் கூறுகள் எதுவுமே சித்தலிங்கையாவின் கவிதைகளில் இல்லை. அவை தனக்கே உரிய வேறொரு அழகியலை அடிப்படையாகக் கொண்டவை. தம் முன்னே இருக்கிற கூட்டத்தை நோக்கி உணர்ச்சிகரமான குரலில் பேசும் தன்மை கொண்டவை அவர் கவிதைகள். அதனால் பெருமுழக்கத்துக்கே உரிய ஓங்கிய குரல், உரையாடும் தன்மை, அழுத்தம் திருத்தமான கட்டளைகள், சவுக்கடி தரும் கருத்துகள், வெளிப்படையான எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றால் அவருடைய கவிதைகள் நிரம்பியுள்ளன. ஒருவகையில் அவருடைய கவிதைகளை முழக்கக்கவிதைகள் என்று வகைப்படுத்தலாம். ஆனால், தமிழ்ச்சூழலில் நாம் கேட்டுப் பழகிய முழக்கக்கவிதைகளுக்கும் சித்தலிங்கையாவின் முழக்கக்கவிதைகளுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. தமிழ்முழக்கக் கவிதை பெரும்பாலும் மக்களை மனத்தில் எண்ணி, அறைக்குள் உருவானவை. சித்தலிங்கையாவின் கவிதைகள் உண்மையாகவே பெரும் திரளாகத் திரண்டு நின்ற கூட்டத்தைநோக்கி உண்மையாகவே முழங்கப்பட்டவை. அதனாலேயே உயிர் நிறைந்தவை. தம்மைநோக்கி சொல்லப்பட்ட அம்முழக்கங்களை உள்வாங்கிய அக்கூட்டம், வேறு சில இடங்களில் வேறு கூட்டங்களை நோக்கி முழங்கியது. பிறகு, வீடு, தெரு, கல்லூரி, சந்துமுனைகள், பேருந்து நிலையங்கள், தேநீர் நிலையங்கள் என நாலுபேர் கூடுகிற ஒவ்வொரு இடத்திலும்  மறிமாறி, அம்முழக்கம் முழங்கிக்கொண்டே இருந்தது. நகரம்தோறும் நடைபெற்ற ஊர்வலங்கள் அவருடைய பாடல்களை முழங்கியபடியே கடந்துசென்றன. அவருடைய பாடல்கள் ஒலிநாடா வடிவத்தில் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி, கர்நாடகத்தின் மூலைமுடுக்கெங்கும் ஒலித்தபடியே இருந்தன. 1982 ஆம் ஆண்டில் நான் கர்நாடகத்துக்குள் வந்தபோது, தேநீர் அருந்தச் சென்ற சிறுசிறு உணவுக்கூடங்களில் சித்தலிங்கையாவின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். பல கூட்டங்களும் நாடகங்களும் தொடங்குவதற்கு முன்பாக, சித்தலிங்கையாவின் பாடல்களை ஒருமணி நேரம் பாடிவிட்டு தொடங்கும் பழக்கம் நிலவியதைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். கூட்டத்தையும் சித்தலிங்கையாவின் கவிதையையும் ஒருபோதும் பிரித்துக் காணமுடியாது. சித்தலிங்கையாவின் கவிதையை வாசிக்கும் ஒரு வாசகன் தன்னை பெருங்கூட்டத்தில் ஒருவனாக உருவகித்துக்கொண்டால் மட்டுமே, அவ்வரிகளை அவனால் முழுக்க உள்வாங்கிக்கொள்ளமுடியும்.
இன்று காலம் வெகுதொலைவு கடந்து வந்துவிட்டது. இன்று அவை வெறும் வரிகள். ஆனால், வரலாற்றின் பகுதிகளாகிவிட்ட கவிதைவரிகள் என்பதால், அவ்வரிகளிடையே மக்கள் கூட்டத்தின் நிழல் இன்னும் படிந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. சித்தலிங்கையாவின் குரலை காதுகொடுத்துக் கேட்கமுடிகிறது. நாட்டுப்புறப்பாட்டுக்கே உரிய மீண்டும்மீண்டும் சொல்லி அழுத்தம் கூட்டுகிற அழகையும் கண்டுபிடிக்கமுடிகிறது.கழுதையும் அறமும்அச்சுஅசலாக ஒரு நாட்டுப்புறக்கதையைப்போலவே இருப்பதை உணரலாம். அந்நியமாதல் தத்துவத்தை மிகமிக எளிமையாக உணர்த்தும் அதே வேளையில் சமூகமுரணையும் அம்பலபடுத்திவிடுகிறது இக்கவிதை. சுடுகாட்டு அழகிக்காக, என்னவளுக்கு, நாற்பத்தியேழாம் ஆண்டின் சுதந்திரம், தபரனுடைய பாடல், சோமனின் பிள்ளைகளுடைய பாட்டு என இந்தத் தொகுப்பின் எந்தக் கவிதையை எடுத்தாலும், அதில் ஏதோ ஒரு விதத்தில் நாட்டுப்புறப்பாடல்களின் பாணிகளும் வடிவங்களும் இருப்பதை உணரமுடியும். நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்துமே ஒருவகையில் மக்கள் கண்டறிந்த  ஆதிவடிவம். அந்த ஆதிவடிவத்தின் சாயலும் நீட்சியும் சித்தலிங்கையாவின் கவிதைகளில் உள்ளன. அவர் கவிதைகளை தமிழ் வாசகர்களுக்காக  மலர்விழியும் மதுமிதாவும் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

அன்புடன்
பாவண்ணன்