Home

Monday 9 February 2015

‘கனவுகளும் கண்ணீரும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

சமீபத்தில் ஒரு பகல்நேரத் தொடர்வண்டிப் பயணத்தின்போது படிப்பதற்காக ஜென் கவிதைப் புத்தகமொன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ஒவ்வொன்றும் நான்கு அல்லது ஐந்து வரிகள்மட்டுமே கொண்ட கவிதை.  ஆனால், சட்டென்று கடந்துசெல்லமுடியாதபடி ஒவ்வொரு கவிதையும் இழுத்துவைத்துக்கொள்ளும் சக்தியுள்ளதாக இருந்தது. ஒரு கவிதையைப் படிப்பது, அப்புறம் ஒவ்வொரு வரியாக அதையே மீண்டும் படிப்பது, பிறகு மனம்போன போக்கில் ஒவ்வொரு சொல்லாக பிரித்தும் இணைத்தும் புதுப்புது பொருளை உருவாக்கியபடி படிப்பது என அச்சொற்களின் உலகிலேயே திளைத்திருந்தேன். பிறகு திரும்பி ஜன்னல்வழியாகத் தெரியும் நீலவானத்தையும் பின்னோக்கி நகரும் மரங்களையும் புதர்களையும் பாதைகளையும் பார்த்தபடி அதே வரிகளை மீண்டும் மனத்தில் மிதக்கவிட்டு அசைபோட்டபடி இருந்தேன். அப்போது நெஞ்சிலிருந்து பொங்கிவந்த நினைவுகளெல்லாம் அந்தக் கவிதை வரிகளின் பொருளாக மாறித் தோன்றிய அதிசயத்தை உணர்ந்தேன்.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறந்துவிடுகிறாய் என்றால்
மிக நல்லது.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறக்காதிருக்கிறாய் என்றால்
மிகமிக நல்லது.


இருப்புக்கும் மரணத்துக்கும் இடையில் ஒரே ஒருமிகமட்டுமே வேறுபாடு. அதைச் சாதித்துக்கொள்ளும் விதத்தைப்பற்றி கவிதை எதையும் முன்வைக்கவில்லை. நாமே இட்டு நிரப்பவேண்டிய விஷயமாகவே அது விடப்பட்டிருக்கிறது.
மடாலயத்தின் வாயிற்கதவு
மிகப்பெரிய மரத்தாழ்ப்பாள்
நறுமணம் வீசும் காற்று
இது இன்னொரு கவிதை. சட்டென்று ஒரு புன்னகை வந்துவிட்டது. காற்றுக்கென்ன வேலி என்பதுபோல மடாலயத்துக்கு எதற்கு கதவு என்கிற கேள்விதான் முதலில் எழுந்தது. கதவே தேவையற்ற  இடத்துக்கு கதவை வைத்துவிட்டு, அதற்கு மிகப்பெரிய தாழ்ப்பாள் போடவேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வியும் தோன்றியபோது வெடிப்பதுபோல சிரிக்கவேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு ஆழமான கிண்டல். பூட்டிவைத்த பிறகு காற்று தன்வழியே மடலாயத்துக்குள் நுழையாமலேயே வெளியே வீசிச் செல்கிறது. ஞானக்காற்றை சுவாசிக்க வேண்டியவன் மடம் கட்டிக்கொண்டு, தாழ்ப்பாளும் போட்டுக்கொண்டிருக்க, ஞானியைத் தேடிக்கொண்டு காற்று எங்கோ செல்கிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம்.
படகோட்டியே
அலைகளில் மிதக்கும் நிலவின்மீது
சிறுநீர் கழிக்காதே
சின்னஞ்சிறிய சித்திரம்போல ஒரு கவிதை. நீரில் மிதக்கும் நிலவின் பிம்பம் மானுடன் வளர்த்துவைத்திருக்கும் கனவுகள். உண்மை சிதைந்துபோனாலும் கனவுகள் சிதைந்துபோவதை நம் மனம் ஏற்க விழைவதில்லை. கனவுகளால் நம் வாழ்க்கை நிறைந்திருக்கிறது. கனவு நமக்குத் தேவையான சத்துணவுபோல. மூச்சுக்காற்றுபோல.
இப்படி பல கோணங்களிலிருந்தும் ஒவ்வொரு வரியையும் அணுகி அணுகி பெருகிவரும் எண்ணங்களைத் தொகுத்தபடி இருந்தேன். பயணம் முடிந்தபோதும் எண்ணங்களுக்கு முடிவே இல்லை. நீண்ட காலத்துக்கு அந்தக் கவிதைகளையே அசைபோட்டபடி இருந்தேன்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எதைப் படித்தாலும் அதன் அனுபவங்களால் மனம் இயற்கையாகவே பொங்கத் தொடங்கிவிடுகிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய இயல்வதில்லை என்றாலும் ஒருசில  வாசிப்பு அனுபவங்களைமட்டும்  பதிவுசெய்து வைத்துவிடுகிறேன்.  இத்தொகுப்புக்காக கோப்பிலிருந்து இக்கட்டுரைகளை எடுத்து வரிசைப்படுத்தி, வேகமாக ஒருமுறை வாசித்து முடித்தபோது மனம் விம்முகிறது. நான் வாழமுடியாத எண்ணற்ற வாழ்க்கைகளை இந்தப் இந்தப் படைப்புகளை வாசிப்பதன்வழியாக வாழ்ந்து பார்த்திருக்கிறேன். நான் செல்லமுடியாத மலை, காடு, கடல், சிகரங்கள், ஆறுகள் என இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் நான் பயணம் செய்து பார்த்திருக்கிறேன். எவ்வளவு மகத்தான நற்பேறு. கனவுகளாலும் கண்ணீராலும் இந்த மானுட வாழ்வு நிறைந்திருக்கிறது என்னும் ஒற்றை வரி ஒரு மின்னல்போல இக்கணத்தில் நெஞ்சில் மின்னி மறைகிறது.
இந்தத் தொகுதியில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் கடந்த ஆறாண்டாண்டுகளில் அவ்வப்போது எழுதப்பட்டவை. இக்கணத்தில் என் மனம் ரசிகமணி டி.கே.சி. அவர்களை நினைத்துக்கொள்கிறது. அவர் இலக்கியப் படைப்புகளை ரசிக்கும் விதத்தையும் ரசனையைப் பகிர்ந்துகொள்ளும் விதத்தையும் கி.ரா. போன்ற மூத்த படைப்பாளிகள் பதிவு செய்திருப்பதைப் படித்திருக்கிறேன். டி.கே.சி. எழுதியஇதய ஒலிகட்டுரைத்தொகுதியே அவருடைய மேலான ரசனைக்கு நல்ல எடுத்துக்காட்டு. உயர்வான வாழ்வுக்கு மேலான ரசனை ஓர் அடிப்படைத் தேவை என்றே எண்ணுகிறேன். பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு முத்தொள்ளாயிரத்துக்கும் கம்பராமாயணத்துக்கும் அவர் கொண்டுவந்த பதிப்புகள், ரசனையையும் ஆய்வையும் ஒன்றையொன்று சார்ந்தியங்கும் கருவிகளாகப் பயன்படுத்தியிருப்பதைப் புலப்படுத்தும் சான்றுகளாக நம் முன் உள்ளன. ரசனையின் அடிப்படையில் விளைந்த இக்கட்டுரைத்தொகுதியை வணக்கத்துடன் அவருக்கு சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இக்கட்டுரைகளை வெளியிட்ட உங்கள் நூலகம், தீராநதி, காலச்சுவடு, காவ்யா தமிழ், அம்ருதா ஆகிய அனைத்து அச்சிதழ்களுக்கும் திண்ணை, மலைகள் ஆகிய இணைய இதழ்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றியையும் அன்பையும் இம்முன்னுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். என் அன்புத்துணைவி அமுதாவின் அன்பும் ஊக்கச்சொற்களும் எப்போதும் என்னை இயக்கும் சக்திகள். இந்த உலகத்தில் நான் எதைச் செய்தாலும் அந்த அன்புக்கு இணையாகாது. அவரையும் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வெளிக்கொண்டு வரும் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி.
மிக்க அன்புடன்,

பாவண்ணன்