Home

Showing posts with label தமிழரசு. Show all posts
Showing posts with label தமிழரசு. Show all posts

Sunday, 18 June 2023

ம.பொ.சிவஞானம் : நிலமிசை நீடு வாழ்பவர்

 

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தியடிகள். அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலமாக ஆந்திரப்பிரதேசத்தில்  பயணம் செய்து பல்வேறு கிராமங்களில் மக்களைச் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக உரையாற்றினார். அங்கிருந்து புறப்பட்டு 20.12.1933 அன்று சென்னைக்கு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கத்தில் காந்தியடிகள் ஈடுபடுவதை விரும்பாதவர்கள் ‘காந்தி திரும்பிப் போ’ என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டி தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆயினும் பெரும்பாலானோர் அவர் வருகையை மனமார வரவேற்றனர். அன்று ஒரே நாளில் அவர் ஆறு கூட்டங்களில் கலந்துகொண்டார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தீண்டாமை ஒழிப்பின் தேவையைப்பற்றியும் கதரியக்கம் வளரவேண்டிய தேவையைப்பற்றியும் விரிவாகப் பேசினார்.