Home

Monday 14 September 2020

டி.என்.ஜெகதீசன் : தன்னம்பிக்கையும் சாதனையும் - கட்டுரை


19.09.1921 அன்று காந்தியடிகள் கடலூரில் அகிம்சையைப்பற்றியும் தீண்டாமைப்பழக்கத்தை கைவிடவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றினார்.  தீண்டாமை என்னும் கறையை அகற்றாமல் நாம் பெறும் சுயராஜ்ஜியத்துக்குப் பொருளே இல்லை என்றும் நாட்டில் ஆறில் ஒரு பங்கு பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக்கி வைத்துள்ள நம் தேசத்தை நாளை இந்த உலகம் தீண்டத்தகாத இடமாகக் கருதி ஒதுக்கும் நிலை வரக்கூடுமென்றும் குறிப்பிட்டார்.

அச்சமயத்தில் டென்மார்க்கைச் சேர்ந்த பீட்டரசன், எஸ்தர் சகோதரிகள் காந்திய வழியில் இராட்டையில் நூல்நூற்று கதராடை அணிந்து பரங்கிப்பேட்டையில் மக்களுக்குச் சேவையாற்றி வந்தனர். அந்த ஊரில் பெண்குழந்தைகளுக்கு தேசியக்கல்வியை அளிக்கும் பொருட்டு சேவாமந்திர் என்னும் பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்க நினைத்தனர். கடலூரிலிருந்து கும்பகோணத்துக்குச் செல்லும் வழியில் பரங்கிப்பேட்டைக்கு வந்த காந்தியடிகள் அந்தக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி சுதேசிக்கல்வியின் மகத்துவம் பற்றி சிறிது நேரம் உரையாற்றிவிட்டுச் சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமான பள்ளிச்சிறுவர்கள் காந்தியடிகளின் உரையைக் கேட்டு ஊக்கமுற்றனர். அவர்களில் ஒருவர் டி.என்.ஜெகதீசன். 

11.09.1927 அன்று காந்தியடிகள் சிதம்பரத்துக்கு வந்திருந்தார். சகஜானந்தர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு கதராடை அணிவதைப்பற்றியும் தீண்டாமை ஒழிப்பைப்பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றினார். காந்தியடிகளின் உரை ஜெகதீசனின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. காந்தியடிகளைப்பற்றிய பல செய்திகளை புத்தகங்களையும் நாளேடுகளையும் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார். அதனால் அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தபோது, அம்மாவின் நகையை விற்று ஐம்பது ரூபாயைத் திரட்டியெடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டுத் திரும்பினார்.

1930இல் பட்டப்படிப்பை முடித்ததும் கராச்சியில் இயங்கும் பாடநூல் கல்வி நிறுவனமொன்றில் மாதத்துக்கு நூறு ரூபாய் ஊதியம் கிடைக்கும் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதே அவருடைய காலில் வெடிப்பும் புண்களும் ஏற்பட்டிருந்தன. சில ஆயுர்வேத மருந்துகளுடன் அவர் கராச்சிக்குச் சென்றிருந்தார். அந்த மருந்துகளின் விளைவாக சில மாதங்கள் வரைக்கும் எவ்விதமான பிரச்சினையுமின்றி அவரால் கராச்சியில் பணிபுரிய முடிந்தது. ஆனால் திடீரென மீண்டும் காலில் வெடிப்பு தோன்றியது. அதனால் அங்கிருந்த மருத்துவரை அவர் அணுகினார். சில சோதனைகளுக்குப் பிறகு தொழுநோயின் சில அடையாளங்கள் தென்படுவதாகக் கூறிய மருத்துவர் அவரை ஊருக்குத் திரும்பிச் செல்லும்படி பரிந்துரைத்தார். வேறு வழியின்றி ஜெகதீசன் ஊருக்குத் திரும்பினார். கோச்சரன் என்னும் மருத்துவரின் தொடர்மருத்துவத்தின் விளைவாக அவரைப் பாதித்த தொழுநோய் கட்டுப்படுத்தப்பட்டது. வெடிப்புகளும் புண்களும் குணமாகின. மரத்துப்போகும் தன்மையை நீக்குவதற்கு அவர் மருந்துகளும் உட்கொண்டார். தன்னம்பிக்கையோடு அவர் தினமும் மேற்கொண்ட பயிற்சிகள் பயனளித்தன. சில கட்டுப்பாடுகளுடன் அவர் தன் தினசரிப்பணிகளை வகுத்துக்கொண்டார். இதன் விளைவாக மதுரைக்கல்லூரியில் நான்கு ஆண்டுகளும் கேரளத்தில் ஓராண்டும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.

அண்ணாமலை நகரில் தங்கியிருந்தபோது ஜெகதீசனுக்கு சீனிவாச சாஸ்திரியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்பாராத விதமாக ஜெகதீசனின் மகன் இளம்வயதிலேயே இயற்கையெய்தினார்.  மனமுடைந்திருந்த ஜெகதீசனோடு தொடர்ந்து உரையாடி அவரை மெல்ல மெல்ல வேதனையிலிருந்து மீட்டெடுத்தார் சாஸ்திரி. சீனிவாச சாஸ்திரியும் காந்தியடிகளும் நெருங்கிய நண்பர்கள். சாஸ்திரிக்கு நீண்ட காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த அனுபவம் இருந்தது. ஓய்வு நேரங்களில் அந்த அனுபவங்களையெல்லாம் அவர் ஜெகதீசனுடன் பகிர்ந்துகொண்டார். சமஸ்கிருத அறிஞரான பர்ச்சூர் சாஸ்திரி என்பவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது, எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி காந்தியடிகள் அவரை ஆசிரமத்தில் தங்கவைத்து அவருக்கு மருத்துவம் பார்த்து குணப்படுத்திய நிகழ்ச்சியைக் கேட்டு ஜெகதீசன் மெய்சிலிர்த்துப் போனார். காந்தியடிகளின் தொண்டுள்ளத்தின் மகத்துவம் அவர் மனத்தை அசைத்தது.

தன் போராட்டத்தை இந்த நாட்டின் விடுதலைக்காக மட்டுமானதாக சுருக்கிக்கொள்ளாமல் அன்பும் கருணையும் மனிதாபிமானமும் நல்லிணக்கமும் நிறைந்தவர்களாக    மனிதர்களை மாற்றும் வேள்வியாகவும் விரிவாக்கிக்கொண்டவர் என அவர் மனம் காந்தியடிகளை வகுத்துக்கொண்டது. வேதனைப்படுகிறவர்கள் மீது அன்பு பாராட்டுவதில் தாமியன் என்னும் பாதிரியாருக்கு (FATHER DAMIEN) நிகரானவராக காந்தியடிகள் விளங்கியதை பல முறை கண்கூடாகப் பார்த்த அனுபவங்கள் தமக்குண்டு என்னும் சாஸ்திரியின் சொற்கள் அவர் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டன. தாமியனின் தொண்டுகளைப்பற்றியும் சாஸ்திரி வழியாகத் தெரிந்துகொண்டார் ஜெகதீசன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஹவாயில் வாழ்ந்துவந்த மக்களில் பலர் தொழுநோயால் துன்பப்பட்டனர்.  நாடு முழுதும் நோய் பரவிவிடாமல் தடுக்கும்பொருட்டு அந்த நாட்டின் அரசர்  நோயாளிகளைத் தனிமைப்படுத்தி மோலக்காய்த் தீவுக்கு அழைத்துச் சென்று குடியேற்றினார். ஏறத்தாழ எண்ணூறுக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் அங்கு குடியேற்றப்பட்டனர். அவர்களிடையே மறைப்பணியாற்றும் பொருட்டு பெல்ஜியத்திலிருந்து வந்து இறங்கினார் தாமியன். தேவாலயப்பணிகளுக்கு அப்பால் அவர் அங்கிருந்த குடியிருப்புகளைச் சுத்தப்படுத்தும் பணியில் முதலில் இறங்கினார். பாழடைந்த நிலையில் இருந்த வீடுகளைச் சரிப்படுத்தினார். வயல்கள் திருத்தப்பட்டு பயிர்வேலைகள் தொடங்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. தொழுநோயாளிகளைத் தினமும் சந்தித்து புண்களைத் தூய்மைப்படுத்தி கட்டுகள் போட்டார். அவர்களுக்கு ஆறுதலும் மன உறுதியும் கிடைக்கும் வண்ணம் அவர்களிடையில் அமர்ந்து நாள்முழுதும் உரையாடினார். அவருடைய மருத்துவத்தால் பாதிக்கும் மேற்பட்டோர் குணம்பெற்றனர். ஒருநாள் காலையில் குளிப்பதற்குச் சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக கொதிநீர்ப்பானை அவருடைய பாதங்கள் மீது கவிழ்ந்து விட்டது. தோல் வெந்து கொப்புளம் ஏற்பட்ட பிறகும் அவற்றை தன்னால் உணர்ந்துகொள்ள முடியாதபோதுதான், தொழுநோய்க்கு தானும் இரையாகிவிட்டதை தாமியன் முதன்முதலாக உணர்ந்தார். இருப்பினும் நோயாளிகளுக்குத் தொண்டாற்றுவதை தன் கடமையெனக் கருதி உழைத்தபடியே இருந்தார். அந்த மண்ணிலேயே தாமியனின் உயிர் பிரிந்தது.

தற்செயலாக ஒருநாள் ஜெகதீசன் FREE INDIA என்னும் செய்தித்தாளில் தொழுநோயாளிகளுக்குத் தொண்டு செய்யும் மேரி ரீட் அம்மையாரைப்பற்றிய (MARY REED) செய்தியைப் படித்துத் தெரிந்துகொண்டார். 1885இல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள சந்தக் என்னுமிடத்தில் தங்கி அங்குள்ள தொழுநோயாளிகளுக்குத் தொண்டாற்றினார். ஆறேழு ஆண்டுகளில் அந்தக் கொடிய நோய்க்கு அவரும் இரையானார். ஆயினும் அவர்களிடமிருந்து விலகிச் செல்லாமல் அங்கேயே தங்கி அவர்களுக்குத் தொண்டாற்றுவதையே தன் வாழ்நாள் பணியாகச் செய்துவந்தார். 86 வயதில் தன் பார்வையை இழந்த நிலையிலும் மனம் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து நோயாளிகளுக்குத் தொண்டாற்றுவதாக அந்தச் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அவரைபற்றிய சிறப்புச்செய்தி அவருக்குள் ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கியது. “ஏதோ ஒரு அயல்நாட்டிலிருந்து நமக்குத் தொடர்பே இல்லாத ஒருவர் இந்த நாட்டுக்கு வந்து இங்குள்ள நோயாளிகளுக்குத் தொண்டாற்றும்போது , இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த நமக்கு இந்த மண்ணில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு துணையாக இருந்து ஆறுதல் அளிப்பது முக்கியமான ஒரு கடமையல்லவா?” என்று ஜெகதீசனின் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது.  அந்தக் கேள்வி அவர் மனத்தை தினந்தோறும் தூண்டியபடியே இருந்தது.

1942 ஆம் ஆண்டில் அவர் உடல்நலம் குன்றி கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு மாத தொடர்சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறியது. தொடர் ஆய்வுக்காக செங்கல்பட்டில் உள்ள லேடி வில்லிங்டன் தொழுநோய் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் கோச்ரான் (Dr.R.G.COCHRANE) என்னும் மருத்துவர் வரவழைக்கப்பட்டிருந்தார். நீண்ட நேர சோதனைகளுக்குப் பிறகு ஜெகதீசனின் கால்களிலும் விரல்களிலும் இருந்த நோயின் தீவிரம் தணிந்துவருவதாகவும் விரைவில் நலமுறக்கூடும் என்றும் அறிவித்தார். சில பயிற்சிகளை இடைவிடாது செய்யும்படி அறிவுறுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு வானொலியில் கோச்ரான் ஆற்றிய உரையைக் கேட்டார் ஜெகதீசன். கால்வலி, முதுகுவலி, சளிக்காய்ச்சல் போல தொழுநோயும் ஒரு நோய்தானே தவிர, அனைவரும் அஞ்சி வெறுக்கும் அளவுக்கு ஆபத்தானதல்ல என்று அவர் எடுத்துரைத்தார். தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மன உறுதியோடு தொடர்ச்சியான மருத்துவத்தை மேற்கொண்டால் அந்நோயைக் குணப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார். நோயாளிகளை வெறுத்து ஒதுக்காமல் அவர்களை நமக்குச் சமமாக நடத்துவது மிகமிக முக்கியம் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே மேரி ரீடின் சேவையால் தூண்டப்பட்டிருந்த அவர் மனம் கோச்ரானின் உரைக்குப் பிறகு மேலும் தூண்டப்பட்டது.

அப்போது அவர் திருச்சியில் தங்கியிருந்தார். அங்குள்ள ஒரு பயிற்சிக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த ஒருவர் அவருக்கு நண்பராக இருந்தார், வேறொரு வேலை கிடைத்து அவர் திருச்சியைவிட்டு வெளியேறிய சமயத்தில் ஜெகதீசனின் பெயரை அந்த ஆசிரியர் வேலைக்குப் பரிந்துரைத்துவிட்டுச் சென்றிருந்தார். அந்த வேலை தனக்குக் கிடைக்கும் என ஜெகதீசனும் நம்பியிருந்த நிலையில் யாரோ ஒருவர் அவருடைய நோய் விவரங்களை கல்லூரித்தலைமைக்குத் தெரிவித்து, அந்த வேலை கிடைக்காதபடி செய்துவிட்டார். இதற்காகவே அவர் மருத்துவர் கோச்ரானைச் சந்தித்து ஒரு சான்றிதழைப் பெற்றுவந்திருந்தார். ஆனால் அது அவர் நினைத்த பயனை அளிக்கவில்லை. அக்கணத்தில் தொழுநோய் தொடர்பாக பொதுமக்களிடையில் நிலவும் அச்சத்தையும் அருவருப்பையும் நீக்குவது மிகவும் முக்கியம் என்று அவருக்குத் தோன்றியது. இனி தன் வாழ்வை தொழுநோய்ப்பணிக்காகவே அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும் என முடிவெடுத்தார். உடனே மருத்துவர் கோச்ரானுக்கும் சீனிவாச சாஸ்திரிக்கும் தன் முடிவைத் தெரிவித்து, உரிய ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி கடிதம் எழுதினார்.

ஜெகதீசனின் முடிவுக்குப் பாராட்டு தெரிவித்த சாஸ்திரி குடும்பத்தேவையை நிறைவேற்றும் வழியையும் யோசிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்குத்தான் உங்கள் ஆலோசனைகள் தேவை என்று மீண்டும் கடிதமெழுதினார் ஜெகதீசன். பூனாவுக்குச் சென்றிருந்த சாஸ்திரி, அங்கு தக்கர்பாபாவைச் சந்தித்து ஜெகதீசனுக்காக அவரிடம் உதவி கோரினார். சென்னையில் இயங்கி வந்த தொழுநோய் நிவாரண மையத்தில் அவருக்கு சமூகப்பணியாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தார் தக்கர்பாபா. மேலும் மாதத்துக்கு நூறு ரூபாய் உதவித்தொகை கிடைக்கவும் வழிசெய்தார். உடனே ஜெகதீசன் அப்பணியில் இணைந்துகொண்டார். குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றிக்கொண்டார். அவருடைய இலட்சியவாழ்க்கை அன்றுமுதல் தொடங்கியது.

காந்தியடிகள் வகுத்த பதினெட்டு நிர்மாணப்பணிகளில் ஒன்று தொழுநோய் ஒழிப்பு. 1944இல் உருவாக்கப்பட்ட கஸ்தூர்பா நினைவுநிதி தேசமெங்கும் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக பல உதவிகளைச் செய்துவந்தது. இந்த நிதியைப்பெற்று தொழுநோய் நிவாரணமையத்தைத் தொடங்கவேண்டும் என்று ஜெகதீசனுக்கு ஓர் எண்ணமெழுந்தது. அப்படி ஒரு மையத்தை அமைத்த பிறகு தன்னால் அதைச் சமாளிக்கமுடியுமா என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு யோசனைகளிலேயே சில நாட்கள் மூழ்கியிருந்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக மருத்துவர் கோச்ரானின் துணையை நாடினார். ஏற்கனவே அரசு உதவியோடு இயங்கிவரும் செங்கல்பட்டில் நிவாரண மையத்தோடு தொடர்புகொண்ட அவருக்கு ஜெகதீசனின் முடிவில் ஆர்வமிருந்தது. ஜெகதீசன் தன் விருப்பத்தை ஒரு மடலாக எழுதி சுசிலா நய்யாருக்கு அனுப்பிவைத்தார். அவர் காந்தியடிகளுடன் ஆலோசித்த பிறகு 08.02.1945 அன்று நேரில் வந்து மாலை நான்கு மணியளவில் சந்திக்கலாம் என்று தெரிவித்தார்

குறிப்பிட்ட நாளில் கோச்ரானும் ஜெகதீசனும் வார்தாவுக்குச் சென்றனர். வார்தாவுக்கு அருகில் தத்தாபூர் என்னும் இடத்தில் ஆசிரமத்தின் சார்பாக நிறுவப்பட்டிருந்த தொழுநோய் நிவாரண இல்லத்தை இருவரும் பார்வையிட்டனர். பிறகு காந்தியடிகளைச் சந்தித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பாக சீனிவாச சாஸ்திரியைச் சந்திக்க ஒருமுறை வந்தபோது ஜெகதீசனைப் பார்த்துப் பேசியதை காந்தியடிகளே நினைவுபடுத்திப் பேசினார். ஜெகதீசனுக்கு காந்தியடிகளின் நினைவாற்றல் வியப்பளித்தது. ஜெகதீசனின் தொண்டுமையத் திட்டத்தைப் பாராட்டிய அவர் விரிவான திட்டக்குறிப்புகளையும் உத்தேச செலவுத்தொகையையும் குறிப்பிட்டு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். குழுவினர் முன்வைத்து விவாதிக்கவும் ஒப்புதல் பெறவும் அவை அவசியம் என்று தெரிவித்தார். ஒரே இடத்தில் விரிவான கட்டடங்களை எழுப்புவதைவிட, பல இடங்களிலும் எளிமைசூழ்ந்த மையங்களை உருவாக்குவதே முக்கியமானது என்றார் காந்தியடிகள்.

புதிய தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களைப்பற்றிய விளக்கங்களும் முக்கியத்துவமும்என்ற கையேட்டை வெகுகாலத்துக்கு முன்பேயே காந்தியடிகள் வெளியிட்டிருந்தார். இது மீண்டும் 1945இல் பதிப்பிக்கப்பட்டு நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது. இதில் தொழுநோய் ஒழிப்பைப்பற்றிய வாசகத்தில்மத்திய ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தொழுநோயாளிகள் வசிக்கிறார்கள். ஆனால் மற்ற நோயாளிகளைப்போல அவர்களை யாரும் அக்கறையோடு கவனித்துக்கொள்வதில்லை. சமூகத்தில் பெரும்பான்மையினோர் அவர்களை ஒதுக்கிவைக்கிறார்கள். இது ஒரு வகையில் இதயமில்லாதவர்கள் செய்யும் செயல். இதையும்  வன்முறை என்றே கூறவேண்டும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே இந்தத் துறையில் முன்னோடியாக இருந்து உதவியிருக்கிறார்கள். வினோபா பாவேயின் வழிகாட்டலில் வார்தாவைச் சேர்ந்த மனோகர் திவான் நடத்தும் இல்லமே அன்புள்ளத்தோடு தொழுநோயாளர்களுக்காக செயல்படும் முதல் இந்திய நிறுவனம். விடுதலை பெறும் இந்தியாவில் தொழுநோயை முற்றிலுமாக அகற்றுதல் வேண்டும்என்று அந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் தன்னால் இயன்ற அளவு உழைக்கவேண்டும் என்று உள்ளூர உறுதிகொண்டார் ஜெகதீசன்.

1946இல் காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்தபோது அவரை செங்கல்பட்டில் இயங்கிய லேடி விலிங்டன் தொழுநோய் சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார் ஜெகதீசன். அன்று காந்தியடிகள் மெளனவிரதம் இருக்கும் நாள். அந்த மையத்தில் தங்கி மருத்துவம் பார்த்துக்கொண்ட எழுநூறு நோயாளிகளையும் ஒருங்கே கண்டு புன்னகையோடு வணங்கினார். அவரே எதிர்பாராத விதமாக தொழுநோயாளிகள் அரிஜன சேவை நிதிக்காக வசூல் செய்து வைத்த தொகையை காந்தியடிகளிடம் கொடுத்தார்கள். நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அதைப் பெற்றுக்கொண்டார் காந்தியடிகள். அந்தப் பயணத்தின் நீட்சியாத்தான்  காந்தியடிகள் மதுரைக்கும் பழனிக்கும் சென்றிருந்தார். வேறொரு சந்திப்பின்போது, செங்கல்பட்டு தொழுநோய் மையத்துக்கு வந்த அனுபவத்தை நினைவுபடுத்திக்கொண்ட காந்தியடிகள்மதுரையிலும் பழனியிலும் தெய்வத்தைத் தேடி நான் சென்றேன். மூன்றாவது கோவிலான உங்கள் மையத்தில்தான் தெய்வமே என்னைத் தேடிவந்து பார்த்ததுஎன்று குறிப்பிட்டார்.

ஒருமுறை காந்தியடிகள் பூனாவுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த இயற்கை மருத்துவ மையத்துக்குச் சென்றிருந்தார். பீரன் சாகிப் என்பவர் அங்கு வேலை செய்துவந்தார். அவர் காந்தியடிகளுக்குத் தெரிந்தவர். நீராவிக்குளியலுக்கு வெந்நீரை எடுத்து வந்த பாத்திரம் தளும்பியதால் பீரன் சாகிப் பாதத்தில் தண்ணீர் சிந்தியது. ஆனால் அவர் அதன் வெப்பத்தை உணராமலேயே தன் வேலையில் மூழ்கியிருந்தார். தற்செயலாக அதைப் பார்த்துவிட்ட காந்தியடிகள் அவரை எதுவும் கேட்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை தனியறைக்கு அழைத்து, தற்செயலாக அங்கு வந்த ஜெகதீசனிடம் காட்டியிருக்கிறார். ஜெகதீசன் கோண்ட்வா தொழுநோய் மையத்துக்கு வழக்கமாக வருகை தரும் ஒரு மருத்துவரை  மையத்துக்கு அழைத்துவந்தார். அவர் பீரன் சாகிபைப் பரிசோதித்துவிட்டு தொழுநோய் மையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். சில மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மருத்துவத்துக்குப் பிறகு அவர் முழுகுணமடைந்து தன் பணிக்குத் திரும்பிவிட்டார்.

ஒருமுறை பீகார் சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தனியாக ஒரு சிறையை அரசு கட்டவிருக்கும் செய்தியைப் படித்த ஜெகதீசன் உடனடியாக அச்செய்தியை காந்தியடிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். சளிக்காய்ச்சல் போல தொழுநோயும் குணப்படுத்தத்தக்க ஒரு நோய்தானே தவிர, தனிமைப்படுத்தத் தேவையில்லை என்பதற்குச் சான்றாக பல்வேறு மருத்துவக்கட்டுரைக் குறிப்புகளையும் சான்றாக இணைத்து காந்தியடிகளுக்கு அனுப்பிவைத்தார்.  அதன் அடிப்படையில் 24.09.1946 அன்று அவர் பீகார் அரசுக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார். சில நாட்களுக்குப் பிறகு மருத்துவர்களோடு கலந்தாலோசித்த பின் புதிய சிறை கட்டும் திட்டம் கைவிடப்பட்டதாக அரசு அவருக்குப் பதில் எழுதியது.

சென்னையில் உள்ள பொதுமருத்துவமனையில் டாக்டர் கோச்ரானைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் புறநோயாளிகளாக வந்து மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நோயாளிகளைக் கவனிக்கும் வழக்கம் ஜெகதீசனிடம் இருந்தது. அனைவரும் ஏழை எளியவர்கள். பெரும்பாலானோர் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள  செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த வெவ்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள். வருகைப்பதிவேட்டில் சமீபத்திய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளைப் பார்த்து அச்செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டார் ஜெகதீசன்.

ஒருமுறை இன்னொரு ஊழியரோடு அந்தக் கிராமங்களுக்கு நேரிடையாகவே சென்று கள ஆய்வு செய்தார். சில கிராமங்களில் நூற்றுக்குப் பத்து பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். சில கிராமங்களில் நூற்றுக்கு ஐந்து பேர் என்கிற கணக்கில் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் வெகுசிலரே சென்னைக்கு வந்து மருத்துவம் பார்த்துக்கொள்ள, மற்றவர்கள் கூச்சத்தின் காரணமாக மருத்துவம் செய்துகொள்ளாமல் நோயோடு வாழ்ந்துவந்தார்கள்.  நோயாளிகளில் பால்பேதம் எதுவுமில்லை. ஆண்களும் பெண்களும் சம அளவிலேயே இருந்தார்கள். தொழுநோய் நிவாரண அடிப்படையில் தொழுநோய் நிவாரண மையத்தை அமைக்க செஞ்சி தாலுகாவே பொருத்தமான இடமென்று முடிவெடுத்தார் ஜெகதீசன்.

கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ரத்தினசபாபதி முதலியாரும் ஜெகதீசனும் மையத்தை உருவாக்க பொருத்தமான பல ஊர்களுக்குச் சென்று இடம்தேடி அலைந்தனர். இறுதியாக மழவந்தாங்கல் என்னும் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான ஒரு பங்களாவைச் சுற்றியிருந்த நிலமே பொருத்தமான இடமென்று தீர்மானிக்கப்பட்டது. ஏறத்தாழ 52 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை பொருத்தமான இடமென பரிந்துரைக்க கஸ்தூர்பா நிதி சார்பாக வந்த குழுவினர் சற்றே தயங்கினர். சாலையிலிருந்து வெகுதொலைவு உள்ளொடுங்கியிருப்பதாக அவர்கள் கருத்துரைத்தனர். ஆனால் ஜெகதீசன் அவர்களோடு நீண்ட நேரம் விவாதித்து ஏற்றுக்கொள்ளவைத்தார். முதல்வராக இருந்த பிரகாசம் உடனடியாக அந்த இடத்தை மையத்துக்கு ஒதுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு தந்திமூலம் ஆணையனுப்பினார். அந்த நிலம் உடனடியாக வேலியிடப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்டது.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு கட்டடவேலைகள் முடிவடையும் நிலையில், மருத்துவமனையைத் திறந்துவைக்க அவசியம் வரவேண்டும் என்றொரு வேண்டுகோளை கடிதம் வழியாக காந்தியடிகளுக்குத் தெரிவித்தார் ஜெகதீசன். அதற்கு காந்தியடிகள்இதுபோன்ற நோய்கள் இந்த நாட்டைவிட்டே ஒழியவேண்டும். அதை விரட்டுவதற்காகத்தான் இந்த மருத்துவமனை உருவாகியிருக்கிறது. அதை உங்கள் விருப்பம்போல திறந்துகொள்ளுங்கள். நாட்டிலே ஒரு நோயாளிகூட இல்லாத சூழலொன்றை உருவாக்கி மருத்துவமனையை மூடும் சூழல் உருவாகுமென்றால்., அந்த மூடுவிழாவுக்கு நான் வருவேன்என்று பதில் எழுதியிருந்தார். அதனால் அப்போது சுகாதார அமைச்சராக இருந்த ராஜ்குமாரி அம்ரித்கெளர் 17.08.1948 அன்று கஸ்தூர்பா தொழுநோய் நிவாரண மையத்தைத் திறந்துவைத்தார்.

அடிப்படையில் பெண் நோயாளிகளையும் குழந்தைகளையும் மனத்தில் கொண்டே இந்த மையம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஆண்களிலும் சம அளவில் நோயாளிகள் இருக்கும் சூழலில் அவர்களுக்கு மருத்துவ உதவியை மறுக்கக்கூடாது என்னும் எண்ணத்தைக் கொண்டிருந்தார் காந்தியடிகள். அதனால், ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவரே ஒரு தீர்வையும் சொன்னார். ஆண் நோயாளிகளை புறநோயாளியாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு சிகிச்சை தரலாமென்றும் அந்த செலவுக்கான பொறுப்பை அக்கம்பக்கத்தில் வாழும் ஊர்ப்பெரிய மனிதர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் அறிவுறுத்தினார். அந்த யோசனையை ஊரார் ஏற்றுக்கொண்டனர். சிறிது கால இடைவெளியில் ஊராரின் ஒத்துழைப்பால்  மழவந்தாங்கலுக்கு அருகிலிருந்த அடுக்கம் என்னும் கிராமத்தில் புறநோயாளிகளுக்கான மையமொன்று உருவாக்கப்பட்டது. அதுவரை சென்னைக்குச் சென்றுவந்த பல நோயாளிகளுக்கு இந்த மையங்களின் உருவாக்கம் பெருந்துணையாக இருந்தது. போதிய மருத்துவ உதவிகளைப் பெற்று அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்பினர். தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உணவோ, வசதிகளோ, கவனிப்போ எதுவுமே முக்கியமில்லை. சில சமயங்களில் மருத்துவம் கூட முக்கியமில்லை. ஆனால் பொதுமக்கள் மற்ற மனிதர்களைப்போல அவர்களையும் மதிக்கவேண்டும் என்பதே முக்கியம். அத்தகு சகஜ நிலையை உருவாக்குவதற்காகவே நிவாரண மையத்தின் வழியாக ஜெகதீசன் பாடுபட்டார்.

வினோபா பாவேயின் வழியில் இந்தியாவுக்குள் தொழுநோயாளிகளுக்குச் சேவையாற்றும் பணியாளர்கள் உருவாகவேண்டும் என்பது காந்தியடிகளின் உள்ளக்கிடக்கையாக இருந்தது.  அயல்நாட்டு அருட்பணியாளர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்புணர்வும் அன்பும்  இந்தியப்பணியாளர்களுக்கும் இருக்கவேண்டும். ஒரு நோயாளிக்குச் செய்யும் சேவைக்கும் இறைவனுக்குச் செய்யும் சேவைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஒவ்வொருவரும் தமக்குள் காலம்காலமாகப் படிந்திருக்கும் தயக்கங்களை உதறிவிட்டு அன்புவழியில் எளியவர்களுக்குத் துணைநிற்கவேண்டும் என்று வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தியடிகள். வினோபா போலவோ, ஜெகதீசன் போலவோ ஆர்வத்தின் காரணமாக எங்கோ ஒன்றிரண்டு என்கிற அளவில் நிவாரண மையங்கள் உருவாவது நம் தேவையை முழுமை செய்யாது. அது இந்த நோயை நீண்ட காலத்துக்கு வாழவைக்கும். அதற்கு மாறாக நூற்றுக்கணக்கான சமூகப்பணியாளர்கள் நாடெங்கும் உருவாக வேண்டும் என்பது காந்தியடிகளின் கனவு. மையங்கள் பரவலாக பல இடங்களில் உருவாகும்போது வெகுவிரைவில் இந்த நோயும் மண்ணைவிட்டு மறையும் என அவர் கருதினார்.

அனைத்திந்திய தொழுநோய் பணியாளர்கள் மாநாடு 30.11.1947 அன்று வார்தாவில் நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து எண்பது பிரதிநிதிகள் அம்மாநாட்டில் கலந்துகொண்டார்கள். காந்தியடிகள் அச்சமயத்தில் ஆசிரமத்தில் இல்லாததால் தக்கர்பாபா அந்த மாநாட்டைத் தொடங்கிவைத்தார். ஒவ்வொரு பணியாளரும் பகிர்ந்துகொண்ட அனுபவக்கதைகள் அவற்றை அறியாத பணியாளர்களுக்கு நல்ல பாடங்களாக இருந்தன. செய்யவேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதைப்பற்றி மாநாட்டின் வழியாக ஒவ்வொருவருக்கும் ஒரு தெளிவு பிறந்தது .

தொழுநோயின் தன்மைகளை முன்வைத்து நீண்ட கால கள ஆய்வுக்குப் பிறகு ஜெகதீசன் எல்லாவிதமான தொழுநோய்க் கூறுகளும் தொற்றும் தன்மையுள்ளவை அல்ல என்னும் முடிவுக்கு வந்தார். இருபது விழுக்காடு கூறுகளை தொற்றும் தன்மையுள்ளவை என்றும் எஞ்சிய எண்பது விழுக்காடு கூறுகளை தொற்றாத தன்மையுள்ளவை என்றும் பிரிக்கமுடியும் என்பதைக் கண்டறிந்தார். தொற்றாத தன்மையுள்ள தொழுநோயாளிகளை தொடர்ச்சியான மருத்துவத்தின் மூலமும் பயிற்சிகள் மூலமும் குணப்படுத்தி இயல்புவாழ்க்கைக்கு மீட்டுவிடமுடியும். ஆனால் தொற்றும் தன்மையுள்ள தொழிலாளிகளின் நோயைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி, அந்த நோயால் உருவாகும் உடலுறுப்புக்குறைகளிலிருந்தும் அவர்களை மீட்டெடுக்கவேண்டும். இந்த மறுவாழ்வுக்கு ஒவ்வொரு சுகாதார மையத்துக்கும் சில கூடுதல் வசதிகள் செய்துதரப்படவேண்டும் என்பது ஜெகதீசனின் கருத்து. தொழுநோயாளிகள் மறுவாழ்வுக்கு நவீன மருத்துவக்கருவிகள் கொண்ட பயிற்சிமையங்களையும் அறுவை சிகிச்சைக்குரிய மையங்களையும் பல கைத்தொழில் மையங்களையும்  ஆலோசனை மையங்களையும் பொழுதுபோக்கு மையங்களையும் தேவையான அளவில் உருவாக்கவேண்டும் என்று அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

தொழுநோய் நிவாரண மையத்தை நாடி தொடக்கத்தில் வந்துகொண்டிருந்த நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் நாற்பது ஆண்டுகள் கடந்த சமயத்தில் வந்துகொண்டிருந்த எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு ஜெகதீசனின் ஓய்வற்ற உழைப்பினால் விளைந்த சாதனை. ஆயிரத்துக்கு 48 பேர் என்றிருந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு 3 பேர் என்று சரிந்தது. ஜெகதீசனைப்போன்ற ஆயிரம் சமூகப்பணியாளர்களை நம் நாடு அன்றே பெற்றிருந்தால், ஒருவேளை நிவாரண மையங்கள் தொடங்கப்பட்ட பத்து இருபது ஆண்டுகளுக்குள்ளேயே முற்றிலுமாக அழித்திருக்கமுடியும் என்றே தோன்றுகிறது. ஜெகதீசன் ஆற்றிய சேவையைப் பாராட்டி 1957இல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்துப் பாராட்டியது.

ஆங்கில இலக்கியம் படித்த அவருக்கு மிகவும் பிடித்த கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வர்த். அதிலும் அவர் எழுதிய HAPPY WARRIOR என்னும் கவிதை அவருக்கு மிகவும் விருப்பமான கவிதை. ஒருவகையில் அவருடைய இயல்புக்கு முற்றிலும் ஒத்துவரக்கூடிய கவிதையே அது. ஊக்கம் கொண்ட ஒரு போர்வீரனாகவே அவர் தன் வாழ்க்கையை இறுதிவரைக்கும் வாழ்ந்தார். தொழுநோயின் காரணமாக தானே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடக்கநிலையிலேயே நல்ல மருத்துவர்களின் உதவியோடு அதிலிருந்து மீண்டுவிட்ட ஜெகதீசன் தன்னம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் செயல்பட்டு தொழுநோயே இல்லாத ஒரு சமூகத்தை அமைக்கவேண்டும் என்னும் கனவோடு செயல்பட்டார். காந்தியடிகளை ஒரு முன்மாதிரியாக மட்டுமன்றி, ஒரு வழிகாட்டியாகவும் கொண்டு ஊக்கத்துடன் இயங்கினார். அடிக்கடி உடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் தளராத மனத்துடன் அவற்றை வெற்றிகொண்டார். சொந்த வாழ்விலும் அவர் அடைந்த தோல்விகளுக்கு அளவே இல்லை. அவர் தன் கல்வித்தகுதியால் அடைந்த வேலைகளில் நீடிக்கமுடியவில்லை. மிகவும் சிறிய வயதிலேயே பெற்ற மகனை இழந்தார். தொழுநோய்க்கு இரையான தாயையும் இழந்தார். வளர்ந்த மகளையும் இழந்தார். ஆனால் எந்தக் கட்டத்திலும் நம்பிக்கையை இழக்காமல் தொழுநோய் நிவாரணப்பணிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். FULFILMENT THROUGH LEPROSY என்னும் தலைப்பில் அவர் எழுதிய தன்வரலாறு அவருடைய வாழ்க்கையின் ஆவணமாக விளங்குகிறது.

(சர்வோதயம் பேசுகிறது – செப்டம்பர் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )