Home

Sunday 6 September 2020

முடிவு - சிறுகதை

 

காட்டின் விளம்பில் எங்களை இறக்கிவிட்ட பேருந்து புகையுடன் கிளம்பிச் சென்றது. கைநழுவிப்போன துணிபோல அந்தரத்தில் மிதந்தது பனியின் வெண்புகை. மரங்களின் உச்சி சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிய தொலைநோக்கியைக் கண்களில் பொருத்தி காட்டுக்குள் பார்வையை ஓட்டினான் டேவிட். அதை உடனே அவனிடமிருந்து பிடுங்கிப் பார்க்கவேண்டும்போலத் துடித்தது மனம். பட்டத்தேர்வில் எண்பது விழுக்காடு மதிப்பெண் வாங்கியதற்காக அவன் அப்பா வாங்கித் தந்திருந்த பரிசு அது. தொலைவில் இருப்பதை வெகுஅருகில் தொட்டுவிடும் அருகாமையில் காட்டும் அதன் சக்தியின் வசீகரத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஏரியின் மறுகரையில் நீச்சலடித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அத்தொலைநோக்கி வழியாக அவன்தான் காட்டினான். ‘‘பக்கத்துல இருக்கற மாறி தெரியும்டா’’ என்கிற பரவசத்தில் காட்டுப் பயணத்தையும் அவன்தான் திட்டமிட்டிருந்தான். இயலாமை ஒரு பாரமாக மனசில் நிரம்ப நான் அவன் முகத்தையே வெறித்தபடி நின்றிருந்தேன். அவன் முகத்தில் செம்மை ஏறியபடி இருந்தது. சிரிப்பு. ஆனந்தம். பரவசம். ‘‘கொடுடா’’ என்று கேட்க தைரியம் இல்லை. நிராசையுடன் மலையின்மீது பார்வையைப் படரவிட்டேன்.

பிரம்மாண்டமான ஒரு குரோட்டன்ஸ் தொட்டிபோல மனத்தில் நிறைந்தது மலை. பனியும் வெளிச்சமும் கண்களைக் கவர்ந்தன. பச்சை நிறம் எங்கும் மின்னியது. காட்டைச்சுற்றி மலைகள் எழுந்து வளைந்திருந்தன. சரிவுகளில் அடுத்தடுத்து நெருக்கமாக நடப்பட்டவைபோல அடர்ந்த மரங்கள். வானத்தைத் தொட்டுவிட்டதுபோல ஆனந்தத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தன உச்சிக் கிளைகள். யூக்லிப்டஸ் மரத்தின் உச்சிக் கிளையில் வானத்தை ரசித்தபடி உட்கார்ந்திருந்தது ஒரு ரெட்டைவால் குருவி. தொலைநோக்கியில் அக்குருவியைப் பார்க்கவேண்டும்போல ஆவலெழுந்தது. டேவிட்டின் கவனத்தை அதை நோக்கித் திருப்பினேன். அக்குருவியைப் பார்த்ததும் ‘‘சூப்பர் சீன்டா மாப்ள’’ என்றான். கு-தூகலம் மாறாமல் பெருந்தன்மையுடன் கழுத்திலிருந்து தொலைநோக்கியைக் கழற்றி என்னிடம் தந்தான். குருவியின் சுழலும் வாலும் அலகும் அதன் நிறமும் அழியாச் சித்திரங்களாக மனத்தில் பதிந்தன.

நடக்கும் வழியில் பச்சையாய்க் குவிந்த தழைக்குவியல் கிடந்தது. ஒரு கூடை நிறைய யாரோ கொண்டுவந்து கொட்டியதுபோல இருந்தது.

‘‘டேவிட், இங்க பாருடா’’

‘‘ஆனப்பிண்டம்டா மாப்ள, தெரியலையா? அதைப் போயி இவ்ளோ அதிசயமாக பாக்கற? வெறும் புஸ்தகம் புஸ்தகம்ன்னு கெடந்தா இதெல்லாம் எப்படி தெரியும்?’’

தழைவீச்சம் ஒருவித கிளர்ச்சியைக் கொடுத்தது. நான் அதைக் கிளறிப் பார்க்க விழைந்தேன். ‘‘சீ... வா. நீயும் உன் ஆசையும்’’ என்று கண்டித்துவிட்டு கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான் டேவிட். இருவரும் மரங்களின் நடுவே நடந்தோம். மரங்களின் கிளைகள் நீண்ட பக்கங்களில் எல்லாம் நிழல் சிதறியிருந்தது.

குளிர்க்காற்று வேகமாக அடித்தது. யாரோ தண்ணீரைக் கைநிறைய அள்ளிஅள்ளித் தெளித்தபடியே இருப்பதுபோல குளிரெடுத்தது. இலைகள் மேலே விழும்போது உடல் கூசியது. வெண்டைக்காய் அளவுக்கு நீண்ட விசித்திரமான இலையமைப்பு கொண்ட ஒரு மரத்தில் பெரிய குரங்கு ஒன்று கண்களை உருட்டியபடி எங்களைக் கவனித்ததைக் கண்டேன். ஒருகணம் அடிவயிறு குளிர்ந்தது. அதன் உடல் முழுக்க புசுபுசுவென்று முடி அடர்ந்திருந்தது. கீழ்த்தாடை உப்புவதும் தாழ்வதுமாக இருந்தது.

‘‘நம்ம முத்தாத்தாவுக்கு முத்தாத்தா. வணக்கம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கோடா’’ என்றான் டேவிட்.

‘‘சீ...வெளையாடாதடா’’

‘‘அது உக்காந்திருக்கற தினுசப் பாருடா... மகாபாரதத்துல பீஷ்மர் உக்காந்திருக்கற மாறி இல்ல’’

நான் மறுபடியும் அதைத் திரும்பப் பார்த்தேன். டேவிட் சொல்லில் உண்மையில்லாமல் இல்லை என்று உணர்ந்தேன்.

வழியில் மிகப்பெரிய பள்ளத்தைக் காட்டினான் டேவிட். அதன் ஆழம் பயம் தருவதாக இருந்தது. கொஞ்சமும் மண்பரப்பே தெரியாமல் துணியை உலர வைத்ததுபோல பச்சைப் பலேலென்றிருந்தது. மறுபக்கம் மேகங்களின் குவியல் அடுக்கப்பட்டதுபோல இருந்தது. கிழக்கே உச்சியில் ஒரு வெள்ளைக்கோடுபோல அருவியொன்று இறங்குவது தெரிந்தது. நிறைய பறவைகள் மாறிமாறி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. தொடர்ந்து நடந்தோம்.

மிகப்பெரிய சரிவு ஒன்று குறுக்கிட்டது. ‘‘பார்த்து ஜாக்கிரதையா வரணும்’’ என்று எச்சரித்தான் டேவிட். முதலில் அவன் நடந்து சென்றான். அவனுடைய கையைப் பற்றியபடி நான் பின் தொடர்ந்தேன். பள்ளத்துக்குள் ஏதோ இரு விலங்குகள் நடப்பது தெரிந்தன. என்ன என்று காண ஆவலெழுந்தது. நிற்கவிடாதபடி என்னை இழுத்துச் சென்றான் டேவிட். மறுவிளிம்பை அடைந்த பிறகுதான் விட்டான். அப்புறம் என்னைப் புரிந்துகொண்டதுபோல தொலைநோக்கியை என்னிடம் தந்து பார்க்கச் சொன்னான்.

அவசரமாக அந்தப் புள்ளியில் தொலைநோக்கியைத் திருப்பினேன். நான்கைந்து காட்டெருமைகள் மேய்ந்தபடி இருந்தன. ஒன்றன்பின் ஒன்றாகப் பள்ளிப் பிள்ளைகள் போல நின்றபடி அவை மேய்ந்த தோற்றம் சிரிப்பைத் தந்தது. பச்சைப் புதர்களிடையே அவற்றின் உடல்கள் அசையும் காட்சி மனத்தைத் துள்ளவைத்தது. அவை ஏதோ வெள்ளத்தில் நீந்திச் செல்வதுபோலத் தோன்றியது. வெள்ளை நிறக் காலுறைகள் அணிந்ததுபோன்ற அதன் கால்களின் வெண்மை அழகாக இருந்தது.

‘‘இங்க மேல வருமாடா டேவிட்?’’

‘‘இது அதுங் காடுடா. இங்க வருமான்னு என்னடா கேள்வி? இங்கயும் வரும். அங்கயும் போவும். எங்கயும் இருக்கும்.’’

நடுவில் பெரிய பாறை குறுக்கிட்டது. அவன் முதலில் வேகமாகத் தாவி ஏறி என்னையும் --தூக்கிவிட்டான். பாறையின் முதுகில் இளம்பச்சை நிறத்தில் பாசி படர்ந்திருந்தது. பாறைகளின் சந்தில் ஒரு சிறிய மரம் முளைத்திருந்தது.

அவன் என்னிடமிருந்து தொலைநோக்கியை வாங்கிக் கிழக்குத் திசையில் பார்வையை ஓட்டினான். காட்சிப் படிமத்தை உருப்பெருக்கியும் சிறுக்க வைத்தும் பார்த்தான். திடீரென்று அவன் உடலில் பரபரப்பு கூடியது. ஒரு கையை நீட்டி ‘‘அங்க பாருடா’’ என்றான். என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ‘‘மான்... மான் பாருடா’’ என்று கூறினான். எனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லை. சுட்டிக் காட்டிய இடத்தில் பச்சைப் பரப்புதான் தெரிந்தது. சிறிது நேரத்துக்குப்பிறகு அவன் தொலைநோக்கியை என்னிடம் நீட்டினான். காட்சியைத் துழாவிக் கண்டுபிடித்தேன். மான்கள் கூட்டம். அவை மரங்களிடையே ஓடுவதும் நிற்பதும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கனவோ என்று தோன்றியது.

டேவிட் ‘‘சரி வா போவலாம்’’ என்றான்.

நான் காட்டைப் பார்த்தேன். அதன் ஆழ்ந்த அமைதி மனத்தில் திகிலூட்டியபடி இருந்தது. ஒவ்வொரு மரமும் செடியும் எங்களிடம் ஏதோ சொல்லக் காத்திருப்பதுபோல உணர்ந்தேன்.

சிறிது நேரத்துக்கப்புறம் அவசரமாக டேவிட்டை அழைத்து ‘‘இங்கு பாருடா’’ என்றேன். ‘‘என்னடா?’’ என்றான் அவன் சுவாரஸ்யமில்லாமல்.

‘‘ஆனைப்பிண்டம்’’

தழைவீச்சத்துடன் பூச்சி பறக்கக் குவிந்து கிடந்தது அது.

‘‘ஆஹா பெரிய கண்டுபிடிப்புடா. எதிர்காலத்துல கண்டிப்பா நீ விஞ்ஞானியாய்டுவே’’ என்று விழுந்துவிழுந்து சிரித்தான். அவனுக்குப் புரையேறியது. வயிற்றைப் பிடித்தபடி மரத்தோடு சாய்ந்துவிட்டான். நான் அவனையே கூச்ச உணர்வுடன் பார்த்தபடி இருந்தேன்.

‘‘ஆனய பாக்கலாம்னா ஆனப்பிண்டத்த காட்டறியே, நல்ல ஆள்டா மாப்ள நீ.’’

நட்புணர்வுடன் தோளைத் தொட நெருங்கினான் அவன். அவசரமாகத் தள்ளிவிட்டு முன்னே நடந்தேன். ‘‘டேய் டேய்... நில்லுடா மாப்ள... சும்மா தாமாஷூக்கு சொன்னா கோச்சிக்கிறியே. இந்தா பைனாகுலர் வச்சிக்கோ. நீயே யானையத் தேடு’’ என்று மறுக்க மறுக்க என் தோளில் மாட்டிவிட்டான். என் பிடிவாதம் தளர்ந்தது. பிரியத்துடன் அவனைப் பார்த்தேன்.

வெகுதொலைவு நடந்த பிறகு களைப்பு தீர ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். நான் அப்படியே தரையில் சாய்ந்து வானை அண்ணாந்தேன். அதன் வெளிச்சம் கண்களைக் கூசியது. நீல நிற விலங்கொன்று என்மீது கவியக் காத்திருப்பதுபோல இருந்தது என் தலைக்கு மேலே தெரிந்த வானம். மிகப்பெரிய ஒரு புடவை நெளிவது போலவும் தெரிந்தது. மிக அருகில் புல்லின் மணம் நெஞ்சில் புகுந்தது. உடல் முழுக்கக் குளிர் பரவியது. வானத்தின் அருகில் மிதப்பதுபோல ஒரு கற்பனை மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனந்தத்தில் ஏதேதோ கனவுகள் கூடிக் கலைந்தவண்ணம் இருந்தன. டேவிட் என்னருகில் படுத்திருந்தான்.

திடுமென ஒரு பக்கம் காட்டி ‘‘அதோ பார் மலையணில் ஓடுது’’ என்றான். அதைப் பாத்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கத்தைக் காட்டி ‘‘அதோ பாரு சிவப்பு வால் குரங்கு’’ என்றான். அடுத்த சில நிமிடங்களிலேயே ‘‘அதோ ஓடுது பாரு முயல்குட்டி’’ என்றான். எனக்கு அவன் பார்வைச் சக்தி ஆச்சரியம் தந்தபடி இருந்தது. என் பார்வைக்கு எதுவும் தட்டுப்படாத இடத்தில் அவனுக்கு எல்லாமே தட்டுப்பட்டபடி இருந்தன. சதாநேரமும் அவன் கண்கள் காட்டைத் துழாவியபடி அலைந்தன. அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்தேன் நான். என் நெஞ்சில் ஆனந்தமும் அச்சமும் நிறைந்திருந்தன.

சட்டென ஒரு இடத்தில் நின்று ‘‘அங்கே பார்’’ என்றான். என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ‘‘என்ன டேவிட், என்ன?’’ என்றேன் பரபரப்புடன். ‘‘நல்லா பாருடா அங்க ஏதோ அசைவு தெரியுது’’ என்று சுட்டிக்காட்டினான். அவன் விரல்கள் நீண்ட இடத்தையே அடையாளமாகக் கொண்டு உற்று நோக்கினேன். உறைந்த நிலையில் இருந்த அப்பரப்பில் உண்மையிலேயே அசைவு தெரிந்தது. என் உடலில் பரபரப்பு கூடியது. பச்சை நிறத்தின் நடுவே கூரிய பாறை ஒன்று நகர்வது போலத் தோன்றியது. என் உடல் புல்லரித்தது. யானை. என் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. தொண்டை வறண்டது. வேகவேகமாய் எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். நான் அவனை அச்சத்துடனும் ஆர்வத்துடனும் நோக்கினேன். ‘‘ஆனை’’ என்று முணுமுணுத்தேன். ‘‘அதுக்கு ஏன் நடுங்கற-? வா கிட்டபோயி பாப்பம்’’ என்று முன்னோக்கி நடந்தான். என் ஒப்புதல் அவனுக்குப் பொருட்படுத்தத் தக்க விஷயமாகவே இல்லை. நானும் அவன் எது சொன்னாலும் செய்யும் மனநிலையில் இருந்தேன். வேகமாக நடந்தோம். யானையின் மீது ஒரு கண்ணும் பாதையில் ஒரு கண்ணுமாக நடப்பது சிரமமாக இருந்தது. அடிக்கடி தவறான இடத்தில் காலை வைத்து இடித்துக்கொண்டேன் நான். பல இடங்களில் விழுவது போல நிலைகுலைந்தேன். முட்டிக்கால் உரசி ரத்தம் கசிந்தது.

சட்டென ஒரு சரியான திருப்பத்தில் நின்று கொண்டு கையால் என்னைத் தடுத்தான் டேவிட் அவன் விரல் சுட்டிக் காட்டிய இடத்தில் என் பார்வையைப்  பதித்தேன். மரத்தின் ஒரு கிளையை நோக்கி தும்பிக்கையை நீட்டிக்கொண்டிருந்தது அது. கரிய முதுகு வெயில் பட்டு பளபளத்து, அதன் காது மடல்கள் அசைந்தன. ஒரு பெரிய கரும்பாறை கால் முளைத்து நெளிவதுபோல இருந்தது. துதிக்கையால் துழாவித் துழாவி கிளையின் வசமான பகுதியில் மடக்கிச் சடக்கென்று இழுத்தபோது கணத்தில் அக்கிளை முறிந்து விழுந்தது. துதிக்கையை விடுவித்துக்கொண்டு புஸ்என்று மூச்சுவிட்டபோது கீழே புழுதி பறப்பது தெரிந்தது.

என் உடல் உறைந்துபோனதுபோலக் குளிர்ந்தது. என் கண்களில் படர்ந்த பயத்தைப் பார்த்து டேவிட் கூடாது என்பது போல சைகை செய்தான். அங்க பாருஎன்று மறுபடியும் யானையைச் சுட்டினான்.

மற்றொரு கிளையைத் துதிக்கையால் வளைத்து இழுத்து ஒடித்தது யானை. சடசடவென்று மரம் முறியும் ஒலி பீதியைத் தந்தது.

ஆனைக்கு ஏதோ கோபம்போல. இல்லன்னா இப்படி ஒடிச்சிகிட்டே போவாது. ஒரு கௌய ஒடிச்சா ஒழுங்கா தின்னுட்டுதான் மறுவேல பாக்கும்”.

நான் யானையின் பக்கம் பார்வையைத் திரும்பினேன். சுற்றியும் ஏகப்பட்ட கிளைகள் கிடந்தன. என் உடல் வேர்த்து வழிந்தது. கால் வலித்தது. திரும்பி ஓடிவிடவேண்டும்போல இருந்தது. அதை அச்சத்துடன் பார்த்தபடியே நின்றிருந்த வேளை புறங்கழுத்தில் ஏதோ சருகு உதிர்ந்ததை அடுத்து அஞ்சி அவசரம் அவசரமாக ஐயோ ...டேவிட்என்று கத்திவிட்டேன். டேவிட் சட்டெனத் திரும்பி என் வாயை அழுத்தமாக மூடினான். யானையும் மூர்க்கமாகத் திரும்புவது தெரிந்தது. அதன் உப்பிய வயிறு குலுங்கி அதிர்ந்தது. செவிகளை மடித்து உற்றுக் கேட்பது தெரிந்தது. துதிக்கையைப் பரபரப்புடன் நீட்டி நீட்டி மடக்கியபடி இங்குமங்கும் நடந்தது. மோப்பம் பிடித்தபடி நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தது. வாலைச் சுழற்றியபடி பார்வையைப் படர விட்டது, “என்னடா இப்படிப் பண்ணிட்ட மாப்ள?” என்று வருத்தத்துடன் முணுமுணுத்தான் டேவிட் தரையோடு தரையாக என்னைக் குனிய வைத்தான். யானை ஒரு முறை சத்தமாகப் பிளறியது. அங்குள்ள மரங்களெல்லாம் வேரோடு முறிந்து சடசடவென்று விழுவதுபோல இருந்தன. என் கால்கள் வெடவெடத்தன. இரண்டு பேரும் அப்படியே பின்வாங்கினோம். ஒவ்வொரு கணமும் எங்கள் பீதி கூடியபடியே இருந்தது. பனிபடர்ந்த புல்லின் ஈரம் எங்கள் முகத்தில் படர்ந்த நிலையிலும் எங்கள் உடல்களில் வேர்த்து வழிந்தது. நான்கு புறமும் திரும்பிப் பார்த்த யானை நாங்கள் ஊர்ந்து கொண்டிருந்த திசையை நோக்கி வர தொடங்கியது. தீடீரென்று எங்களுக்கு உயிர்ப்பயம் உண்டானது. என் அடிபயிறு அதிர்ந்தது. அம்மாஎன்று மனத்துக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். என் கண்களில் நீர் தளும்பி யானையின் முகம் மறைந்தது. இமைகளைச் சிரமப்பட்டு மூடிக் கண்ணீரைக் கன்னத்தின் பக்கவாட்டில் வழியவிட்டேன். நாக்கு செயல்பட மறுத்தது. சட்டென ஒரு கணத்தில் எங்கள் காலில் இடறிய கல்லொன்று சரிவில் தடதடவென உருண்டு ஓசையெழுப்பி விட்டது.

யானை சட்டென உடலை நிமிர்த்தி, தும்பிக்கையை உயர்த்திப் பிளறியது. அது தெளிவாக எங்களைப் பார்த்துவிட்டது. அதன் சிறிய கண்களில் ஏதோ வெறி தெரிந்தது. புஸ்புஸ்ஸென்று மூச்சு வாங்கியபடி ஓடிவந்தது அது. கண்களின் ஓரம் கருமையாகப் படிந்த கோடுகள் அருவருப்பும் பீதியும் தந்தன. வா ஓடலாம்என்று விலாவில் குத்தினான் டேவிட். கணப்பொழுதில் அவன் எடுத்த முடிவை இருவரும் செயல்படுத்தினோம். புதர்களும் புல்லும் கல்லும் சிதறிய பரப்பில் எங்கள் பாதங்களால் வேகமாக ஓடமுடியவில்லை. தூக்கிய துதிக்கையுடன் யானை உடல்குலுங்க எங்களை நோக்கி வந்தபடி இருந்தது. குறுக்கில் நிறைய மரங்கள், செடிகள், புதர்கள், பள்ளங்கள். எதுவுமே அதன் ஓட்டத்திற்குத் தடையாகவில்லை.

நான் மறுபடியும் தடுமாறித் தரையில் விழுந்தேன். நடுநடுவே என்னைக் கை து£க்கிவிட்டபடி ஓடிவந்தான். ஒரு மரத்தின் பின்னால் கணநேரம் ஒதுங்கி இருவரும் நின்றோம். சற்று நேரத்துக்குப் பிறகு மரத்தோடு ஒட்டிப் பதுங்கி ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்தபோது, யானையைக் காணவில்லை. யானை வழிதப்பிவிட்டது என்பதில் எங்கள் மனம் நிம்மதியை உணர்ந்தது. அப்பாடா என்று பெருமுச்சு விட்டோம். பெரிய சாகசக்காரர்கள் போல இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். அந்த நிம்மதி ரொம்ப நேரம் நீடித்திருக்கவில்லை. நாங்கள் முற்றிலும் எதிர்பாராத திசையிலிருந்து புதர்களை விலக்கிக் கொண்டு யானை வருவது தெரிந்தது. ஐயோ, ஓடுடாஎன்று கத்தினான் டேவிட். எங்களுக்கு எந்தப் பக்கம் ஓடுவது என்றே புரியவில்லை. குழப்பத்தில் கைகால்கள் நடுங்கின. அரக்கப்பரக்க நாலு பக்கமும் பார்த்தோம். அதற்குள் வெகு வேகமாக எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது யானை. இவ்வளவு வேகமாக யானையால் ஓடிவர முடியும் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சட்டென டேவிட் என்னிடம் என் பின்னால் வராத, நீ அந்தப் பக்கம் போஎன்ற கட்டளையிட்டான். அக்குரல் ஒரு கர்ஜனை போல ஒலித்தது. நான் பீதியில் குழம்பினேன். சொல்றத செய்டா முட்டாள். திருதிருன்னு முழிக்காத. அந்தப் பக்கமா ஓடுஎன்றான். நான் நீ..--?-” என்று அவனை நோக்கிக் கேட்ட கேள்வி அவனைச் சென்று சேரவில்லை. என் கையை உதறிவிட்டு மூர்க்கமாக வேறு திசையில் ஓடத் தொடங்கினான். ஒரு கணம் தயங்கிய நான் மறுகணம் அவன் ஓடிய திசைக்கு எதிரான திசையில் ஓடத் தொடங்கினேன். யானையை நோக்கி டேவிட் றேறேஎன்று அடித்தொண்டையில் குரல் எழுப்புவதையும், அதன் கவனத்தை முழுக்கவும் ஈர்க்கும் பொருட்டுத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்த தொலைநோக்கிறைச் சுழற்றி அதை நோக்கி எறிவதையும் ஓடியபடியே பார்த்தேன். அந்தச் சமயத்தில் அவன் தடுமாறித் தரையில் குப்புற விழுந்தான். பிறகு மறுபடியும் எழுந்து ஓடினான். அவன் செய்கைக்கான காரணம் முதலில் புரியவில்லை. யானை அவனைத் தொடர்ந்து ஓடத்தொடங்கிய தருணத்தில் எல்லாம் திட்டவட்டமாகப் புரிந்துவிட்டது. உடனே அவன் பெயரைச் சொல்லி அலறவேண்டும்போல இருந்தது. குரல் எழவில்லை. நாக்கு பேச்சை இழந்ததுபோல இருந்தது. ஓடியபடியே யானையை ஏமாற்றிவிட்டு மற்றொரு திசைவழியாக டேவிட் வந்துவிடுவான் என்று நினைத்தேன். கூடவே அவன் வரமாட்டான் என்ற எண்ணமும் உதித்தபடியே இருந்தது.

எல்லா யோசனைகளுக்கிடையேயும் ஓடியபடியே இருந்தேன். இவ்வளவு உட்பகுதிக்குள் வந்துவிட்டோம் என்பதே நம்பமுடியாமல் இருந்தது. இறைக்க இறைக்க ஓடினேன். நாக்கு வறண்டது. ஒரு துளி தண்ணீருக்காக தொண்டை ஏங்கியது தொலைவில் ஏதோ ஒரு மரம். அதன் பின் ஏதோ இடத்தைத் தொட்டேன். ஒரு மான் பயந்து ஓடியது. தொலைவில் ஒரு கூக்குரல் கேட்டது. மனிதக் குரல். என் வயிறு கலங்கியது. வாந்திவருவதுபோல நெஞ்சு குமுறியது. அது டேவிட்டின் குரல்தான் என்று மனம் உறுதியாக நம்பியது.

சற்று தொலைவில் காட்டின் விளிம்பும் நாங்கள் பேருந்தில் இறங்கிய இடமும் தெரிந்தன. விளிம்புப் பகுதியை நெருங்க நெருங்க என் வேகம் குறைந்தது. மெல்ல நடக்கத் தொடங்கினேன். எடுத்துவைக்க முடியாத அளவுக்கு பாதங்கள் பாரமாகக் கனத்தன. அடிமனத்தில் நானும் டேவிட்டும் இளமை முதல் பழகிய நாட்களின் காட்சிகள் நகர்ந்தன. ஆட்டங்கள். கிண்டல்கள். ஆனந்தப் பயணங்கள். எல்லாமே புரண்டபடி இருந்தன. புரள்தலில் ஒரு கணத்தில் எல்லாம் திரண்டு உறைந்து டேவிட்டின் உருவாக மாறியது. கடவுளே என்று அழுதேன். வெப்பமான மூச்சு என் வாய் வழியாகவும் மூக்கு வழியாகபும் வெளியேறின. காட்டின் உட்பகுதியிலிருந்து டேவிட்டின் குரல் திரும்பத்திரும்ப வந்தபடி இருந்தது. ஏதாவது ஒரு திசையிலிருந்து அவன் டேய் குள்ளமணி ஏமாந்துட்டியாஎன்று வந்து நின்று சிரிக்கக் கூடும் என்று தோன்றியது. அந்த எண்ணங்கள் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்தது. மாறிமாறி எல்லாத் திசைகளிலும் பைத்தியம்போலப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மனத்தில் வெகு கச்சிதமான அவன் உருவம் கூடி வந்தது. அதே வேகம். அதே நடை. அதே துள்ளல். அதே பாட்டு மெல்ல மண்ணிலிருந்து எம்பி ஒரு பெரிய பறவையாக மாறி ஆகாயத்தில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினான். மடிப்பு மடிப்பான அழகுச் சிறகுகளாகின அவன் கைகள் ஒளிமின்னும் நீல வானில் முகில்களிடையே இன்னும் உயரே இன்னும் உயரே எனப் பறந்தபடியே இருந்தான் அவன்.

(சதங்கை 2000)