Home

Monday 14 September 2020

அரங்கசாமி நாயக்கர் : ஒரு போராட்டக்காரரின் விருப்பம் - கட்டுரை

 

01.08.1920 அன்று காந்தியடிகளால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் முழுவிசையுடன் நடைபெற்றது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டனர். எதிர்பாராத விதமாக அப்போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் செளரிசெளரா என்னும் இடத்தில் 05.02.1922 அன்று வன்முறை வெடித்தது. மூன்று சத்தியாகிரகிகளும் இருபத்திரண்டு காவலர்களும் அன்றைய வன்முறைக்குப் பலியானார்கள். அதையறிந்து வேதனையுற்ற  காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அக்கணமே நிறுத்தினார். பர்தோலி என்னுமிடத்தில் அவர் ஐந்துநாள் உண்ணாவிரதம் இருந்தார். நாட்டில் சிற்சில இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மெல்ல மெல்ல அடங்கி அமைதி நிலவத் தொடங்கியது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸிலிருந்து ஒரு பிரிவு விலகிச் சென்றது. காந்தியடிகளும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குடல்வால் அறுவைசிகிச்சையின் பொருட்டு 1924ஆம் ஆண்டில் காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டபோது நாட்டில் தேசபக்தி கொண்ட இளைஞர்களின் எழுச்சியும் அதிகரித்திருக்கும் கதராடைகளின் பயன்பாடும்  அவருக்கு சற்றே ஆறுதலளித்தன. அதே நேரத்தில் பல இடங்களில் மதவேற்றுமையாலும் தீண்டாமையுணர்வினாலும் நடைபெற்ற கலவரங்கள் அவருக்கு ஆழ்ந்த துயரையும் அளித்தன. உடனே உடல்நலிவைக்கூட பொருட்படுத்தாமல் நாடெங்கும் பயணம் செய்து மத ஒற்றுமையை வலியுறுத்தியும் தீண்டாமையை எதிர்த்தும் பரப்புரை செய்யத் தொடங்கினார். பிளவுபட்டிருந்த காங்கிரஸ் பிரிவுகளுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கினார். எதிர்பாராதவிதமாக அமேதி, சம்பல், குல்பர்கா ஆகிய இடங்களில் திடீரென நிகழத் தொடங்கிய மதக்கலவரங்களை நிறுத்தும் கோரிக்கையோடு 18.09.1924 அன்று தொடங்கி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மத ஒற்றுமையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அனைத்துப் பிரிவினரும் உணரத் தொடங்கினர்.

காந்தியடிகள் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் உரையிலும் தீண்டாமையை உதறுவதும் மத ஒற்றுமையை வளர்ப்பதும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்கும் உறுதுணையாக இருக்கும் என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தபடியே இருந்தார். இச்சூழலில் 26.12.1924 அன்று பெல்காம் நகரில் முப்பத்தொன்பதாவது காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபோது, அதுவே பேசுபொருளானது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த காந்தியடிகள் அகிம்சை வழியிலமைந்த சத்தியாகிரகப் போராட்ட வழிமுறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும்படி அனைவரையும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

ஒத்துழையாமை இயக்கம் நிகழ்ந்த காலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை நினைவுபடுத்தி, ஒரு தேசம் ஒருபோதும் வன்முறையை விலையாகக் கொடுத்து விடுதலையை ஈட்ட விரும்பக்கூடாது என அறிவித்தார். மதப்பற்று என்பது தேசப்பற்றைச் சுட்டெரிக்கும் சுடுகாடாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் பாரத அன்னையின் இரு விழிகளாக விளங்குபவர்கள் என்றும் எடுத்துரைத்தார். தீண்டாமையை முற்றிலுமாக ஒழித்து தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக உழைப்பதும் தேசியப்பார்வையோடு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் ஒவ்வொரு தொண்டனும் மேற்கொள்ள வேண்டிய கடமைகளாகும் என்று தெளிவுபடச் சொன்னார் காந்தியடிகள்.

பெல்காம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காரைக்காலுக்கு அருகில் உள்ள இளையான்குடியிலிருந்து அரங்கசாமி நாயக்கர் என்பவர் சென்றிருந்தார். காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லும் அவருடைய நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்தன. இயல்பிலேயே சமூகச் சீர்திருத்தத்தின் மீது நாட்டமும் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டின் மீது அக்கறையும் கொண்ட அரங்கசாமி நாயக்கரின் மனம் காந்தியடிகளின் உரையால் மேலும் எழுச்சியுற்றது. சொந்த ஊரில் ஏற்கனவே முன்னெடுத்திருந்த பல சீர்திருத்தச் செயல்களை இன்னும் விரிவான முறையில் செய்யவேண்டுமென அரங்கசாமி நாயக்கர் அன்றே முடிவெடுத்துவிட்டார்.

அரங்கசாமி நாயக்கரின் கனிவும் மனிதாபிமான உணர்வும் அவர் வாழ்ந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்த உண்மைகள். இளையான்குடி பண்ணையின் வாரிசுகளில் ஒருவராகப் பிறந்து எல்லா வசதிகளோடு வாழ்ந்துவந்தாலும் இரக்கத்தின் உறைவிடமாக வாழ்ந்து வந்தார் அவர். அவருடைய இரக்க உணர்வு மேலும் கனிந்து மக்கள் அனைவரையும் நேசிக்கும் பண்பு படிந்ததற்கு இளமைக்காலத்தில் அவருடைய வாழ்வில் நடந்த ஓர் உண்மைச்சம்பவமே வழிவகுத்தது.

ஒருநாள் அவர் ஏதோ ஒரு வேலைக்காக காரைக்காலுக்குச் சென்று காளைகள் பூட்டப்பட்ட வில்வண்டியில் இளையான்குடிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மழை பொழியத் தொடங்கியது. அப்போது மழையில் முழுமையாக நனைந்த ஒரு பிச்சைக்காரர் போக்கிடமின்றி ஒரு மரத்தடியில் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தார். அக்காட்சி அவருடைய மனத்தை உருக்கியது. அதைப் பார்த்த பிறகு, அந்த இடத்தைக் கடந்து ஓர் அடி தொலைவு கூட தன்னால் செல்லவியலாது என்பதை அவர் உணர்ந்தார். அக்கணமே வண்டியை விட்டிறங்கி அந்தப் பிச்சைக்கார்ருக்கு அருகில் சென்றார்.

எழுந்து நகரக்கூட உடலில் வலிமையின்றி காய்ச்சலில் முனகிக்கொண்டிருந்தார் அவர். தன் குடும்பத்தகுதி, செல்வாக்கு அனைத்துயும் நாயக்கர் அக்கணத்தில் அவர் மனத்தைவிட்டு அகன்றன. உடனடியாக அப்பிச்சைக்காரரை எழுப்பி உட்கார வைத்து வண்டியோட்டியின் உதவியோடு தூக்கிவந்து வண்டியில் படுக்கவைத்தார். பயணத்தின்போது அவருடன் உரையாடி அவரைப்பற்றிய  முழுவிவரங்களையும் தெரிந்துகொண்டார். அவர் மனத்தில் நம்பிக்கை பிறக்கும்வண்ணம் ஆறுதலான சொற்களைச் சொன்னார்.  இளையான்குடிக்குத் திரும்பியதும் அவருக்கு மாற்று உடை கொடுத்து அணியச் செய்து உணவுண்ண வைத்தார். பிறகு வைத்தியர் வந்து அவருக்கு மருந்து கொடுத்துவிட்டுச் சென்றார். சில நாட்களில் அவர் உடல்நலம் தேறி நடமாடத் தொடங்கினார். ஆயினும் அவரை வெளியே எங்கும் அனுப்பாமல் தன் பண்ணையிலேயே தங்கவைத்துக்கொண்டார் நாயக்கர்.

அப்போது பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நிகழ்ந்துகொண்டிருந்த காலம். அந்த ஆட்சியின் கீழ் புதுச்சேரி, மாஹே, ஏனாம், சந்திரநாகூர், காரைக்கால் ஆகிய ஐந்து பகுதிகள் இருந்தன. பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்த ஆளுமைகள் பலர். அவர்களில் திருநள்ளாறைச் சேர்ந்த அரங்கசாமி நாயக்கர், காரைக்காலைச் சேர்ந்த பொன்னுத்தம்பி, லியோன் செயிண்ட் ழீன், சையத் அகமத், தங்கவேல் பிள்ளை, பழனூர், கோவிந்தசாமி செட்டியார், சி.காத்தபெருமாள் பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி ஐயர், ஆர்.ராமசீனிவாசன், எஸ்.கே.சுப்பராயன் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் காந்திய வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் அரங்கசாமி நாயக்கர். காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாக அவர் வாழ்நாள் முழுக்க கதர் வேட்டியும் கதர்த்துண்டும் மட்டுமே அணிந்தார். தன் மனைவியும் பிள்ளைகளும் கூட கதராடைகளையே உடுத்தும் வகையில் மனமாற்றத்தை ஏற்படுத்தினார். இராட்டையில் தன் கைகளாலேயே தினந்தோறும் நூல் நூற்று, அந்த நூலை கதர்க்கடைகளில் கொடுத்து வேட்டி வாங்கி அணிந்துகொண்டார். பல ஊர்களுக்குச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் உரையாற்றினார்.  அவர் வாழ்ந்த காரைக்கால் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த முகமாக விளங்கினார் நாயக்கர். அவருடைய கனிவான பேச்சும் அரவணத்துக்கொள்ளும் அன்பும் மக்களைப் பெரிதும் ஈர்த்தன. அவருடைய வழியைப் பின்பற்றி பலரும் அவருக்குச் சீடர்களானார்கள். ’காரைக்கால் காந்திஎன்று பட்டப்பெயர் சூட்டி அரங்கசாமி நாயக்கரை அழைக்கத் தொடங்கினார்கள்.

1929ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திருநள்ளாறு நகராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அரங்கசாமி நாயக்கர் மேயராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அந்தப் பதவியின் அதிகாரத்தை மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்திக்கொண்டார் நாயக்கர். ஊரெங்கும் உள்ள சாலைகள் பழுதுபார்க்கப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டன. சுடுகாடுகளுக்கு புதிய பாதைகள் போடப்பட்டன. குளங்கள் தூர் வாரப்பட்டன. நீர்ப்பாசனத்துக்கு வசதியாக வாய்க்கால், வடிகால்கள் அமைக்கப்பட்டன. சாதி வேற்றுமையின்றி எல்லா வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளும் சேர்ந்து படிக்கும் வகையில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. படித்த மாணவர்களும் பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நகராட்சிக்குச் சொந்தமாக ஒரு நூலகத்தை உருவாக்கினார்.

பள்ளிக்கூடத்தையும் நூலகத்தையும் உருவாக்கிய பிறகு திருநள்ளாறிலேயே ஒரு மருத்துவமனையையும் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் நாயக்கருக்குத் தோன்றியது. அதற்கு பிரெஞ்சு அரசின் அனுமதி தேவையாக இருந்தது. அரசுக்கு விண்ணப்பம் எழுதி அனுப்பிவிட்டு அவர் அனுமதிக்காகக் காத்திருந்தார். அனுமதி கிடைத்ததும்   வேலையைத் தொடங்கிவிடும் வகையில் மருத்துவமனையை அமைப்பதற்கான பொருத்தமான இடத்தைக்கூட தேர்ந்தெடுத்து முடிவு செய்து வைத்திருந்தார்.  ஆனால் அவருடைய கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. நிதிச்சுமையைக் காரணமாகக் காட்டி நிராகரித்துவிட்டது. அந்தக் கடிதம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும் மனம் தளராத அரங்கசாமி நாயக்கர் நீண்ட யோசனைக்குப் பிறகு அரசுக்கு எவ்விதமான நிதிச்சுமையையும் அளிக்காமல் தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவுசெய்து மருத்துவ மனையைக் கட்டுவதென முடிவெடுத்தார். உடனடியாக தன் முடிவை அரசுக்குத் தெரியப்படுத்திவிட்டு, அதற்கான அனுமதியை வேண்டி  மீண்டுமொரு விண்ணப்பத்தை எழுதி அனுப்பினார். மருத்துவமனை இயங்கத் தொடங்கும் நேரத்தில் அங்கு பணியாற்றுவதற்காக மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஊழியர்களையும் மட்டும் அரசு நியமித்து உதவவேண்டும் என்றும் அதே விண்ணப்பத்தில் எழுதி அனுப்பிவைத்தார். அந்தத் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. உடனே கட்டுமான வேலையைத் தொடங்கிவிட்டார் அரங்கசாமி நாயக்கர்.  குறைந்த கால அவகாசத்தில் அவர் நினைத்திருந்தவண்ணம் எல்லா வசதிகளும் கொண்டதாக மருத்துவமனைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அரசும் தன் சொல்லைக் காப்பாற்றும் வகையில் மருத்துவர்களையும் ஊழியர்களையும் நியமிக்க, மருத்துவமனை இயங்கத் தொடங்கியது.

காரைக்காலில் 1933 ஆம் ஆண்டில் அரிஜன சேவா சங்கத்தை  கோவிந்த செட்டியார் என்பவருடன் இணைந்து அரங்கசாமி நாயக்கர் உருவாக்கினார். கிராமம்தோறும் சென்று தீண்டாமையை கைவிடும்படி மக்களிடையே உரையாற்றுவதும் நூல் நூற்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நூல்நூற்கும்படி கேட்டுக்கொள்வதும் கதராடை உடுத்தும்படி பரப்புரை செய்வதும் அவர்களுடைய தினசரிப்பணிகளாக இருந்தன. தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று சுற்றுப்புறத் தூய்மையின் முக்கியத்துவம் பற்றியும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச் சொல்லி அவர்களுடைய மனமாற்றத்துக்கு வித்திட்டார்.

தீண்டாமை ஒழிப்பின் அடையாளமாக அரங்கசாமி நாயக்கர் ஒருமுறை சமபந்தி போஜனத்துக்கு சேத்தூர் பண்டாரவாடையில் ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து மக்களும் சாதிமத பேதமின்றி தாழ்த்தப்பட்டவர்களுடன் அமர்ந்து உணவுண்டனர். நாயக்கரும் அவர்களோடு அமர்ந்து உணவுண்டார். பின்னர் காரைக்கால் கொத்தளம்பேட்டை என்னும் கிராமத்தில் சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு நெருக்கடியான வேலைகளுக்கு இடையிலும் இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும் சமபந்தி போஜனம் செய்வதையும் தீண்டாமைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதையும் தம் கடமைகளெனக் கருதி செயலாற்றி வந்தார்.

ஒருமுறை தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கு நாயக்கர் சென்றிருந்த போது, அங்கிருந்தோர் அனைவரும் அவரை உள்ளன்போடு வரவேற்று தம் வீட்டுக்கு உணவருந்த வருமாறு அழைத்தனர். அனைவரும் அவரைத் தனக்கு நெருக்கமான மனிதராகவே கருதினர். புன்னகையோடு அனைவருடைய அழைப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். ஆயினும் ஒரே சமயத்தில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவது சாத்தியமில்லை என்பதால், அனைவரையும் மகிழ்விக்கும் விதத்தில்  ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு பாத்திரத்தில் நீராகாரத்தை எடுத்துவரச் செய்து, எல்லாவற்றையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றை நிரப்பச் சொல்லிவிட்டு, இறுதியில் அதிலிருந்து ஒரு சொம்பு நீராகாரத்தை எடுத்து அருந்தினார்.

இயல்பிலேயே மக்கள் அனைவரும் சமமெனக் கருதக்கூடிய நாயக்கர் சாதி வேறுபாடின்றி எல்லோரும் வந்து போகுமிடமாகவும் சந்தித்து உரையாடும் இடமாகவும் தன் வீட்டை வைத்திருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுடன்  கோவில்களில்  ஆலயப்பிரவேசம் செய்வதுபோல, எல்லோரும் சமமென்ற உணர்வுடையவர்கள் அனைவரும் தத்தம் வீடுகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கிரஹப்பிரவேசம் செய்து அவர்களோடு சேர்ந்து உணவுண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும் என்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளிலிருந்து மக்களை அவரே தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று கூடத்தில் அமரவைத்து விருந்து படைத்தார். அவர்களோடு சேர்ந்து அவரும் உணவுண்டார்.

அரங்கசாமி நாயக்கரின் குடும்பம் செல்வவளம் மிக்கது. அதனால் அவர் தனது போராட்டங்களுக்கும் மக்களுக்கு உதவுவதற்கும் பணச்செலவுக்காக யாரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது. அதனால் அவரால் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் முடிந்தது. அவரைத் தேடிவரும் தொண்டர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் அவருடைய வீட்டில் அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் உறுதியாகக் கிடைத்துவிடும். எந்த நேரமும் அவருடைய வீட்டில் பெரிய தவலைகளில் சாப்பாடு தயாராக இருக்கும்.

திருநள்ளாறு பகுதியில் வசித்துவந்த மக்கள் அனைவரும் அரங்கசாமி நாயக்கர்மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். அதனால் கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்களில் மக்கள் தம்மிடையே உள்ள சில்லறை வழக்குகளை நாயக்கர் முன்னிலையில் விவரிப்பது பழக்கமாகிவிட்டது. அவற்றை அக்கறையோடும் நேர்மையோடும் விசாரித்து தகுந்த தீர்ப்பை வழங்குவது நாயக்கருக்கும் பழகிவிட்டது. அதனால் பஞ்சாயத்து மன்றங்கள்  ஒருவகையில் சின்ன நீதிமன்றங்கள்போல செயல்படத் தொடங்கின. எப்படியோ இச்செய்தி நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றுவிட்டது. அதனால் அவரை நீதிமன்றத்துக்கே வரவழைத்த நீதிபதிஅதிகாரபூர்வமான நீதிமன்ற அமைப்பு இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் மக்களின் வழக்குகளை நீங்கள் எப்படி விசாரித்து தீர்ப்பு சொல்லலாம்?” என்று கேட்டார். அதற்கு நாயக்கர்குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் பேர் ஒருவரை தலைவர் என ஏற்றுக்கொண்டால், அவர் சில வரையறைகளுக்கு உட்பட்டு வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்க சட்டம் இடமளிக்கிறதுஎன்று பொறுமையாக எடுத்துரைத்தார்.

அதைக் கேட்ட நீதிபதிசட்டத்தின் எந்தப் பிரிவில் அப்படி கூறப்பட்டிருக்கிறது?” என்று கேட்டார். நாயக்கரும் நன்கு நினைவுகூர்ந்து வழக்கை விசாரிக்கும் உரிமையை வழங்கும் சட்டப்பிரிவின் எண்களைச் சொன்னார்.  உடனே நீதிபதி சட்டப்புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தாங்கிகளின் பக்கம் சென்று குறிப்பிட்ட புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு, நாயக்கர் சொன்ன பிரிவின்கீழ் அந்த உரிமைக்குறிப்பு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். நாயக்கர் உரைப்பது சரி என்று உணர்ந்தபிறகு வெளியே வந்தார். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகுஉங்களுக்குப் பதினைந்தாயிரம் பேரின் ஆதரவு இருக்கிறது என்பதை உங்களால் நிருப்பிக்கமுடியுமா?” என்று  கேட்டு மடக்க நினைத்தார். அவரைப் பார்த்து புன்னகையுடன்  எந்த விதத்தில் நிரூபிக்கவேண்டும் என்று நீங்கள் சொன்னால், அந்த விதத்திலேயே நான் நிரூபிக்கிறேன்என்று பதில் சொன்னார். அந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத நீதிபதி மெளனமாக அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

ஹரிஜன சேவா சங்கத்தின் வேலைகளை ஊக்கப்படுத்தவும் ஹரிஜன மேம்பாட்டுக்கான நிதியைத் திரட்டுவதற்காகவும் 23.01.1934 முதல் தமிழ்நாட்டில் ஒரு நீண்ட பிரயாணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி என பல இடங்களுக்குச் சென்றுவிட்டு 15.02.1934 அன்று நாகப்பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு இயங்கி வந்த ஹரிஜன சேவா சங்கம் அவருக்கு நல்ல முறையில் வரவேற்பளித்து மக்களிடையே உரையாற்ற வைத்தது. அன்று இரவு காந்தியடிகள் நாகப்பட்டினத்திலேயே தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகப்பட்டினம் வரைக்கும் வந்துவிட்ட காந்தியடிகளை எப்படியாவது காரைக்காலுக்கு அழைத்துவந்துவிட வேண்டும் என விரும்பினார் அரங்கசாமி நாயக்கர். ஆனால் அவரிடம் சொந்தமாக கார் இல்லை. அதனால் தோமஸ் பிள்ளை என்பவரைச் சந்தித்து கார் கொடுத்துதவும்படி கேட்டுக்கொண்டார். அவர் மகிழ்ச்சியோடு தன்னிடமிருந்த கார் ஒன்றையும் காரோட்டியையும் அனுப்பிவைத்தார். தோமஸ் பிள்ளை பிரெஞ்சு ஆட்சியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடவேண்டிய ஒரு செய்தி. அரசியலில் எதிரும்புதிருமாக இருந்தாலும் அனைவரிடமும் நட்புணர்வோடு பழகும் குணமுள்ளவர் என்பதால் நாயக்கர் கேட்டதுமே அந்த வேண்டுகோளுக்கு இணங்கினார் தோமஸ் பிள்ளை.

காந்தியடிகளோடு நாகப்பட்டினத்திலேயே இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் அவரை அழைத்துக்கொண்டு காரைக்காலுக்குப் புறப்பட்டார் அரங்கசாமி நாயக்கர். காரைக்காலில் உள்ள அரசலாற்றங்கரையில் உள்ள உப்புத்திடலில் திரண்டிருந்த மக்கள் காந்தியடிகளின் வருகைக்காகக் காத்திருந்தனர். காந்தியடிகளை நேரில் கண்டதும் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு முழக்கமெழுப்பினர். புன்னகையுடன் அனைவரையும் வணங்கிவிட்டு மேடையில் அமர்ந்தார் காந்தியடிகள். அரங்கசாமி நாயக்கர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

புனிதவதியார் தோன்றிய காரைக்காலுக்கு தாங்கள் வருகை புரிந்ததை ஒட்டி நாங்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற அகிம்சை வழியில் நீங்கள் தொடங்கியிருக்கும் போராட்ட முயற்சிகளை ஒட்டி நாங்களும் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியை அகற்றும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். ஹரிஜன முன்னேற்றத்துக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் தங்கள் வழியைப் பின்பற்றி பிரெஞ்சிந்தியப் பகுதிகளில் விழிப்புணர்வை உருவாக்கப் பாடுபடுவோம். அந்த முயற்சிகளில் எங்களை அர்ப்பணித்துக்கொள்கிறோம்என்று நீண்டதொரு வரவேற்புரையை வாசித்தளித்தார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய காந்தியடிகள் அரங்கசாமி நாயக்கரின் நல்லெண்ணம் கொண்ட முயற்சிகளை வாழ்த்திப் பேசினார். அதைத் தொடர்ந்துபிரெஞ்சுப் பேரரசின் அடிப்படைக் கொள்கைகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகும். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் பகுதியில் இக்கொள்கைகள் எதுவும் நடைமுறையில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. உங்கள் முயற்சிகளும் போராட்டங்களும் எப்போதும் அகிம்சை வழியில் அமையவேண்டும். இந்துக்களான அரிஜனர்களை இந்துக்களே தீண்டாமையின் காரணமாக ஒதுக்கிவைத்திருப்பது வேதனையளிக்கும் விஷயமாகும். இந்து சாஸ்திரங்களில் எந்த இடத்திலும் தீண்டாமை வலியுறுத்தப்படவில்லை. ஒரு பழக்கத்தின் காரணமாக ஏதோ ஒரு காலத்தில் எப்படியோ சமூகத்தில் வந்து படிந்துவிட்ட தீண்டாமையை மக்கள் நம்பவேண்டிய அவசியமில்லை. அது உடனடியாக உதறப்படவேண்டிய ஒன்றாகும். ஆகவே தீண்டாமையை ஒழிக்கவும் அரிஜன மக்கள் எல்லா நிலைகளிலும்  முன்னேறவும் நீங்கள் பாடுபடவேண்டும்என்று காந்தியடிகள் சுருக்கமாக உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் அரிஜன மேம்பாட்டு நிதிக்காக காந்தியடிகளிடம் ஆயிரத்தொரு ரூபாயை நன்கொடையாக வழங்கினார் நாயக்கர்.

காரைக்காலின் பெருமையைப்பற்றி காந்தியடிகளிடம் பேசும்போது அரங்கசாமி நாயக்கர் அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சத்திரத்தையும் குளத்தையும் பற்றிச் சொன்னார். அவற்றை உருவாக்கியவர் காரைக்காலைச் சேர்ந்த சின்னசாமிப்பிள்ளை என்பவர். சாதி வித்தியாசமின்றி வழிப்போக்கர்கள் அனைவரும் தங்கி இளைப்பாறிச் செல்லும் வகையில் அந்தச் சத்திரம் கட்டப்பட்டது. அதைப்போலவே சாதி வித்தியாசமின்றி அனைவரும் குளிக்கவும் தண்ணீர் எடுத்துச் செல்லவும் வசதியாக அந்தக் குளமும் வெட்டப்பட்டது. முற்றிலும் தீண்டாமை ஒழிக்கப்பட்ட இடங்கள் என்பதால் சத்திரத்தையும் குளத்தையும் காந்தியடிகளே திறந்துவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அரஙகசாமி நாயக்கர். மறுப்பு சொல்லாத காந்தியடிகள் சின்னசாமிப்பிள்ளையின் தொண்டுள்ளத்தைப் பாரட்டிவிட்டு, சத்திரத்தையும் குளத்தையும் மகிழ்ச்சியோடு திறந்துவைத்துப் பேசினார். தன் வருகையின் அடையாளமாக அந்தக் குளத்தங்கரையில் அவரே ஓர் அரசமரக் கன்றை நட்டுவைத்தார்.

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுரக்குடி என்னும் இடத்தில் வெட்டி முடிக்கப்பட்டிருந்த ஒரு பொதுக்கிணற்றையும் திறந்துவைக்க வேண்டுமென காந்தியடிகளிடம் அரங்கசாமி நாயக்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் நேரமின்மையின் காரணமாக அவர் விருப்பத்தை காந்தியடிகளால் நிறைவேற்ற முடியவில்லை. அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அதனால் நாயக்கரையும் பொதுமக்களையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்றார் காந்தியடிகள். அவரை வழியனுப்பிவிட்டு தனியாக சுரக்குடிக்குச் சென்றார் நாயக்கர். காந்தியடிகள் சொன்ன சொற்களையே அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். சூழலைப் புரிந்துகொண்ட பொதுமக்கள்நீங்கள்தான் எங்கள் கண்முன்னால் நடமாடும் காந்தி. அதனால் நீங்களே கிணற்றைத் திறந்துவையுங்கள்என்று கேட்டுக்கொண்டனர். நாயக்கரும் அக்கிணற்றைத் திறந்துவைத்தார். மக்கள் அக்கிணற்றைகாந்தி கிணறுஎன்று அழைக்கத் தொடங்கினர்.

அரிஜனக்குடியிருப்புகளில் நாயக்கருக்கு மெல்ல மெல்ல ஆதரவு பெருகியது. ஏனைய பிரிவினரும் அவரை நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராகக் கருதி அனைவரும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். தம் பகுதியில் அரிஜன நண்பர்களுடன் சேர்ந்து ஆலயப்பிரவேசம் செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். தம் எண்ணத்தை நண்பர்களான இராமையா பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி ஐயர், கணபதி ஐயர், சாம்பசிவ ஐயர், சங்கர ஐயர், ஆத்மநாப ஐயர் ஆகியோருடன் கலந்து பேசி, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு தன் கருத்தை ஏற்றுக்கொள்ளவைத்தார். நண்பர்கள் புடைசூழ 1939ஆம் ஆண்டில் நாயக்கர் அரிஜனர்களை அழைத்துக்கொண்டு முதன்முதலாக சேத்தூர் சிவன் கோவிலுக்குச் சென்றார்.

சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இத்தகு ஆலயப்பிரவேசங்களை அடுத்தடுத்து நிகழ்த்திய நாயக்கர் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேசுவரர் கோவிலுக்குள்ளும் ஆலயப்பிரவேசம் நிகழ்த்தவேண்டும் எனத் திட்டமிட்டார். ஆனால் காந்தியடிகளின் ஆணைக்கிணங்க, அது அனைவருடைய ஒப்புதலோடும் நிகழவேண்டும் என்பதால் கோவிலோடு தொடர்புடைய ஒவ்வொருவரோடும் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நிகழ்த்த வேண்டியிருந்தது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் இடைவிடாமல் அவர்களோடு விவாதித்ததன் பயனாக நாயக்கரின் விருப்பம் நிறைவேறும் காலம் நெருங்கிவந்தது. 01.12.1946 அன்று ஏறத்தாழ ஐந்நூறுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களோடு நாயக்கர் தர்பாரண்யேசுவரர் ஆலயத்துக்குள் சென்றார். பேதமின்றி அனைவரும் இறைவனின் முன்னால் நின்று வழிபட்டு மகிழ்ந்தனர். அன்று கோவில் திடலில் கூடியிருந்த மக்களிடையே நாயக்கர் எழுச்சி மிக்கதோர் உரையை நிகழ்த்தினார். விரைவிலேயே அவருடைய உரை பன்னிரண்டு பக்க பிரசுரமாக வெளியானது. அப்பிரசுரம் ஆலயப்பிரவேச காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமானதொரு ஆவணமாக விளங்குகிறது.

மாதூரில் அவர் சொந்தமாக ஓர் அச்சகம் வைத்திருந்தார். சீர்திருத்தக்கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் போராட்டம் பற்றிய தகவல்களையும் தன் அச்சகத்திலேயே அச்சடித்து அனைவருக்கும் வழங்கினார். மொழி ஆராய்ச்சியிலும் தத்துவ விவாதங்களிலும் வானியலிலும் அவருக்கு நல்ல ஆர்வமிருந்தது. பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பல நூல்களை சொந்தமாகப்  படித்து தம் அறிவாற்றலைப் பெருக்கிக்கொண்டார் அவர். விவசாயத்துக்கு உதவும் வகையில் சில பொறியியல் கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அவர் ஆர்வமுள்ளவராக இருந்தார். அரசியல் சீர்திருத்தக் கருத்துகளை மையமாகக் கொண்ட பல கட்டுரைகளையும் எண்ணற்ற இலக்கண, அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நாயக்கர் தொடர்ந்து எழுதினார். அவற்றை வெளியிடும் பொருட்டு குடியரசு, வித்தகம் என இரு வார இதழ்களை அவர் தொடங்கி நடத்தினார். மக்களிடையில் இவ்விதழ்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சமூக மாற்றம் தொடர்பான சீர்திருத்தக்கருத்துகளை மேடையில் எடுத்துரைப்பதோடு மட்டுமன்றி, தன் சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்த மாபெரும் ஆளுமை அரங்கசாமி நாயக்கர். சாதி பேதமின்றி அனைவரும் சேர்ந்து நின்று இறைவனை வழிபடும் இடமாக ஆலயம் விளங்கவேண்டும் என்பதையும் சாதியைக் காரணமாகக் காட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு அந்த உரிமையை மறுப்பது மாபெரும் பாவம் என்பதையும் நாயக்கர் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு மேடையிலும் வாழ்நாள் முழுதும் முன்வைத்தபடியே இருந்தார். அதே நேரத்தில் ஆலயப்பிரவேசத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டுவதோடு ஒருவருடைய சீர்திருத்தச் செயல்பாடுகள் முடிவடைவதில்லை என்பதை உரைக்கவும் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அந்த உணர்வு உள்ளூர ஊறிப் பெருகி, தாழ்த்தப்பட்டோர் ஒவ்வொருவரையும் பிற சாதியினர் வீட்டுக்குள் வர அனுமதித்து உரையாடும் சூழலையும் பிற சாதியினர் ஒவ்வொருவரும் தாழ்த்தப்பட்டோரின் வீட்டுக்குள் சென்று இயல்பாகச் சந்தித்து உரையாடும் சூழலையும் உருவாக்கவேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார். அதுவே சாதி வேறுபாடுகளைக் களைவதற்கு நாம் எடுத்துவைக்கும் முதல் அடி என்பது நாயக்கரின் உறுதியான நம்பிக்கை.

 (கிராம ராஜ்ஜியம் - ஜூலை 2020 இதழில் வெளியான கட்டுரை)