Home

Wednesday 30 September 2020

கோ.வேங்கடாசலபதி : கிராம ராஜ்ஜியக் கனவு

 

அரிஜன நல நிதிக்காக நன்கொடை திரட்டும் நோக்கத்துடன் 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னிந்தியப்பயணத்தை மேற்கொண்டார். கேரளத்தில் கொச்சி, ஆலப்புழை, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக ஒரு வாரத்துக்கும் மேலாக நீண்ட அவருடைய பயணம் இறுதியில் கன்னியாகுமரியை வந்தடைந்தது. அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவருக்குத் தாராளமாக நன்கொடை வழங்கினர். ஆபரணங்களாகவும் பொருட்களாகவும் கிடைத்தவற்றையெல்லாம் உரையாற்றும் மேடையிலேயே  ஏலத்துக்கு விட்டு, அதன் வழியாகக் கிடைக்கும் தொகையையும் அரிஜன நல நிதியின் கணக்கில் சேர்த்துக்கொண்டார் காந்தியடிகள்.

அத்தருணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருபதாயிரம் பேர்களுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அச்செய்தி காந்தியடிகளை துயரத்தில் ஆழ்த்தியது. அன்றுமுதல் அரிஜன வாழ்வுக்காக நிதியளிப்பதோடு பீகார் மக்களின் துயரத்தைத் துடைக்கும் வகையில் மறுவாழ்வு நிதியையும் தாராளமாக வழங்கவேண்டுமென்ற வேண்டுகோளையும் பொதுமக்களிடம் முன்வைக்கத் தொடங்கினார் அவர். தமிழ் மாகாண எல்லைக்குள் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு 25.01.1934 அன்று காந்தியடிகள் ராஜபாளையத்தில் உரையாற்றினார். அன்று அவருடைய உரை கூடியிருந்தவர்களின் மனத்தை உருக்கும் வகையில் அமைந்திருந்தது.

நீங்கள் வழங்கும் பணமுடிப்பையும் வாழ்த்துமடல்களையும் நான் நன்றியுடன் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் அவை ஒருபோதும் எனக்கு மகிழ்ச்சியளிக்காது. உங்கள் மனத்திலிருக்கும் தீண்டாமை எண்ணத்தை நீங்கள் துறக்கும் செயலே எனக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும். இந்த மண்ணில் நிலவும் தீண்டாமைப்பழக்கம் எனக்கு ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. தீண்டாமைக்கு மதத்திலும் சாஸ்திரங்களிலும் எவ்விதமான அடிப்படையும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் தீண்டாமைப்பழக்கம் மக்களிடையில் நீடிப்பது அவமானத்துக்குரிய செய்தியாகும். தீண்டாமை மிகப்பெரிய பாவம். ஒருவேளை, இந்தப் பாவத்திற்காக நமக்குக் கிடைத்த தண்டனைதான்  பீகாரில் நிகழ்ந்த நிலநடுக்கமோ என்று தோன்றுகிறது. நாம் ஏன் இச்சூழலை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடாது? எல்லா வழிமுறைகளிலும் நாம் இந்தக் கொடும்பழக்கத்தை நம் வாழ்விலிருந்து விலக்கவேண்டும். அரிஜன நல நிதிக்காகவும் பீகார் மக்கள் மறுவாழ்வுக்காகவும் நீங்கள் தாராளமாக நன்கொடை அளித்து உதவேண்டும். நமக்கு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் உணவும் உடையும் இருப்பிடமும் இன்றி துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது, அவர்களுக்குக் கொடுத்துதவ வேண்டியது நம் தலையாய கடமை.

காந்தியடிகளின் நெகிழ்ச்சியான உரையைக் கேட்டு, அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மனமுருகினர். தம்மிடம் இருக்கும் தொகையையும் ஆபரணங்களையும் நன்கொடையாக மனமுவந்து அளித்தனர்.  அவர்களில் ஒருவர் இளம்தொண்டர். நிகழ்ச்சி முடிந்ததும் காந்தியடிகள் விருதுநகருக்குப் புறப்பட்டார். அவரை அழைத்துச் செல்ல வந்த காமராஜரும் அவருடைய நண்பர்களும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக முதலில் புறப்பட்டுவிட, காந்தியடிகளும் தி.சே.செள.ராஜனும் குமாரசாமி ராஜாவும் இரண்டாவது வண்டியில் கிளம்பினார்கள். அதைத் தொடர்ந்து புறப்பட்ட மூன்றாவது வண்டியில் அந்த இளம்தொண்டரும் ஏறிக்கொண்டார். தம் கிராமமான கோபிநாயக்கன்பட்டி கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துமடலொன்றை விருதுநகர் நிகழ்ச்சியில் வாசித்து வழங்கவேண்டுமென்பது அவர் திட்டம். எதிர்பாராத விதமாக சிவகாசிக்கும் விருதுநகருக்கும் இடையில் புயலுடன் கூடிய மழை. பொழியத் தொடங்கியது. முதல் வண்டி எதையும் பொருட்படுத்தாமல் சென்றுவிட, தொடர்ந்து சென்ற காந்தியடிகளின் வாகனமும் இளம்தொண்டரின் வாகனமும் சூலக்கரை என்னும் இடத்தில் நின்றுவிட்டன.

சூலக்கரையின் அமைதியான சூழல் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது குமாரசாமி ராஜாஇந்த இளைஞர் கிராம நிர்மாணப் பணியில் இருப்பவர்என்று  அந்த இளம்தொண்டரை காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கிடையில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் காந்தியடிகளின்  வருகையைத் தெரிந்துகொண்டு ஓடோடி வந்து சூழ்ந்து நின்று பணிவுடன் வணங்கினர். அந்தச் சந்திப்பை ஓர் அற்புதமான நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார் காந்தியடிகள். நிர்மாணப்பணிகள் பற்றி தொண்டர்களிடையில் பேசத் தொடங்கிவிட்டார். அப்போது அவருடைய இசைவைப் பெற்ற  இளம்தொண்டர் தம் கையோடு கொண்டுவந்திருந்த வாழ்த்துமடலை வாசித்து காந்தியடிகளிடம் அளித்தார்.

அன்றைய மாலைப் பிரார்த்தனையும் சூலக்கரையிலேயே நிகழ்ந்தது.  பிரார்த்தனைப்பாடல்களை அந்த இளம்தொண்டரே பாடினார். ராம கீர்த்தனையில் தொடங்கி ரகுபதி ராகவ ராஜாராம் பாடலோடு பிரார்த்தனையை முடித்தார். காந்தியடிகள் அந்த இளம்தொண்டரை அருகில் அழைத்து அவருடைய உச்சரிப்பில் இருந்த பிழையைத் திருத்தினார். பதீத (PADHITHA) என்பதற்கு மாறாக பதித (PATHITHA) என்று அழுத்தத்தோடு பாடவேண்டுமென சொல்லிக் கொடுத்தார். அந்த இளம்தொண்டரின் பெயர் கோவே என்று அனைவராலும் அழைக்கப்படும் கோ.வேங்கடாசலபதி.

பள்ளிப்பருவத்திலேயே காந்தியடிகளின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் வேங்கடாசலபதி. அதற்குக் காரணமாக இருந்தவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவர். இலங்கையிலிருந்து வணிகநிமித்தமாக அடிக்கடி சிவகாசிக்கு வந்துபோய்க்கொண்டிருந்தவர் அவர். நல்ல தமிழறிஞர். தேசபக்தர். சுதந்திர நாட்டமுள்ளவர். காங்கிரஸில் ஈடுபாடுள்ளவர். வேங்கடாசலபதியின் பள்ளித்தோழனுடைய வீட்டில்தான் ஒவ்வொருமுறையும் அவர் தங்குவது வழக்கம். எனவே நண்பன் வழியாக அவரை அறிமுகம் செய்துகொண்டு பழகினார் வேங்கடாசலபதி. காந்தியடிகளைப்பற்றி தான் அறிந்ததையெல்லாம் வேங்கடாசலபதிக்கு எடுத்துரைத்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காந்தியப்பற்று உருவானதுமே அவர் முதலில் புலால் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டார். அடுத்ததாக சுயராஜ்ய இதழில் தொடராக வந்த காந்தியடிகளின் தன்வரலாற்றைப் பகுதியை ஒன்றுவிடாமல் தேடிப் படித்தார். அதன் பிறகு அத்தன்வரலாறு நவசக்தி பத்திரிகையில் சத்திய தரிசனம்என்னும் தலைப்பில் தமிழில் வெளிவந்தபோது, அதையும் தொடர்ச்சியாகப் படித்தார். திரு.வி. எழுதியமனித வாழ்க்கையும் காந்தியடிகளும்புத்தகத்தையும் தேடி வாங்கிப் படித்தார். தீண்டாமையை அகற்றவேண்டும் என்பதையும் கதர் அணியவேண்டும் என்பதையும் காந்திய வழியில் கிராம நிர்மாணப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர் தம் இலட்சியங்களாகக் கருதினார்.

எதிர்பாராத விதமாக வேங்கடாசலபதி இன்டர்மீடியட் படிப்பில் தோவியடைந்தார். அதனால் அவர் கோபிநாயகன்பட்டிக்கே திரும்பிவர நேர்ந்தது. தோல்வியுற்ற பாடத்துக்கான மறுதேர்வை நல்லமுறையில் தயாரித்து எழுதி வெற்றிபெற்று மேற்படிப்பைத் தொடரவேண்டும் என்பது அவர் திட்டம். அதற்கிடையில் தாமும் தம்மைப்போன்ற கிராமத்து இளைஞர்களும் பத்திரிகை படித்து நாட்டுநடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் நாயக்கர் சமூகத்துக்குச் சொந்தமாக இருந்த ஒரு கட்டடத்தில் ராமானுஜர் கூடம் என்னும் பெயரில் ஒரு படிப்பகத்தைத் தொடங்கினார். ஆனால் குறிப்பிட்ட ஒரு சாதியினரைத் தவிர மற்றவர்கள் யாரும் அந்தத் திசையில் வருவதில்லை என்பதை மெல்ல மெல்லப் புரிந்துகொண்டார். தற்செயலாக கிராமத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தபோது சாதிமத வேறுபாடுகளைக் கடந்து வாழ்தல், தீண்டாமையை ஒழித்தல், கல்வி முன்னேற்றம், கதரின் முக்கியத்துவம், கிராமத் துப்புரவு, கிராம ஒற்றுமை, கிராம முன்னேற்றம், தேச முன்னேற்றம் என பல கருத்துகளைத் தொட்டு உரையாற்றினார். அதன் வழியாக தன் எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார். தம் படிப்பகம் சாதி எல்லைகளைக் கடந்து அனைவரும் கூடிப் பேசுகிற இடமாக இருக்கவேண்டும் என்று விரும்பிய வேங்கடாசலபதி ஊருக்கு வெளியே காளியம்மன் கோவில் ஆலமரத்தடியில் கிராம ஊழியர் சங்கத்தைத் தொடங்கி, படிப்பகத்தை அங்கு இடம்மாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியவர் காமராஜர்.

இரவுப்பள்ளிகளை நடத்துவதும் இராட்டைகளில் நூல்நூற்பதும் கதர்ப்பிரச்சாரம் மேற்கொள்வதும் துப்புரவுப்பணிகளில் ஈடுபடுவதும் கிராம ஊழியர் சங்கத்தின் செயல்களாக விரிவடைந்தன. அப்போது அவர் காவல் துறையில் துணைக் காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். அவரோடு படித்த வேறொரு நண்பரொருவர் .சி.எஸ். தேர்வை எழுத இங்கிலாந்துக்குச் சென்றார். அவர் குடும்பத்தினர் அனைவரும் அவர் ஏதேனும் ஒரு அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அவர் மனமோ தேசப்பணியையே நாடியது.  தம் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கவேண்டிய நெருக்கடியான ஒரு தருணத்தில் அவர் உறுதியான மனத்துடன் தேசப்பணியையே தேர்ந்தெடுத்தார்.

லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு காந்தியடிகள் வெறும்கையோடு திரும்பியிருந்த நேரம் அது. பம்பாய் துறைமுகத்தில் அவர் இறங்கியதுமே கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடெங்கும் சட்டமறுப்பு இயங்கம் தீவிரமடைந்தது. ஏராளமான தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விருதுநகரில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத்தை முதலில் தலைமை தாங்கி நடத்தியவர் காமராஜர். அவர் கைது செய்யப்பட்டதும் ஆர்.டி.பி.சுப்பிரமணியம் என்பவர் தலைமையேற்றார். சிறிது காலத்துக்குப் பிறகு அவரும் கைது செய்யப்பட்டபோது, இளைஞரான வேங்கடாசலபதி தலைமைப்பொறுப்பை ஏற்றார்.

ஏறத்தாழ மூன்று மாத காலம் பல கிராமங்களுக்குச் சென்று பலரையும் சந்தித்துப் பேசி தேசப்பற்றை ஊட்டுவதையே தன் கடமையென நினைத்து இரவும் பகலும் இயங்கினார் வேங்கடாசலபதி. போராட்ட அறிவிப்புகளையும் துண்டுப் பிரசுரங்களையும் கட்டுரைகளையும் கையால் எழுதி, சைக்ளோஸ்டைல் இயந்திரம் வழியாக ஏராளமான பிரதிகளை எடுத்து தொண்டர்களுக்கு அனுப்பினார். நாளடைவில் அதுசத்தியாகிரகிஎன்னும் பெயரைத் தாங்கிய ஒரு ரகசியப்பத்திரிகையாக மாறியது. திருப்பதி என்னும் புனைபெயரில் அவர் எழுதிய கட்டுரைகளை அனைவரும் விரும்பிப் படித்தனர். அதன் விளைவாக காவல்துறையின் கண்காணிப்புவளையத்தில் அவர் பெயரும் சேர்ந்துகொண்டது.

மாவட்ட மாநாடு ஒன்றை ராஜபாளையத்தில் நடத்த காங்கிரஸ் தலைமை தீர்மானித்தது. அந்தப் பொறுப்பை வேங்கடாசலபதியே ஏற்றுக்கொண்டார். எப்படியாவது அவரைக் கைதுசெய்யவேண்டும் என்று பல நாட்களாகக் காத்திருந்த காவல்துறை அத்தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. அதை மீறி நடமாடிக்கொண்டிருந்தார் வேங்கடாசலபதி. குறிப்பிட்ட நாளில்  ராஜபாளையத்துக்கு மேற்கே உள்ள ஒரு தோப்பில் மாநாடு நடைபெற இருப்பதாகக் கிடைத்த செய்தியை நம்பி காவல்துறை அத்தோப்பைச் சூழ்ந்து நின்றனர். அதே நேரத்தில் ராஜபாளையத்துக்குக் கிழக்கே உள்ள சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் மாநாட்டைக் கூட்டி சிறப்பாக நடத்தினார் வேங்கடாசலபதி. பல முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர். பல தீர்மானங்கள் நிறைவேறின. மாநாட்டை முடித்துக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர். மாற்று ஏற்பாட்டைப்பற்றிய செய்தி கிடைத்து காவலர்கள் வந்து சேர்ந்தபோது அங்கு யாருமில்லை. இறுதியாக வேங்கடாசலபதியை விருதுநகரில் கைது செய்தனர் காவல்துறையினர். விசாரணைக்குப் பிறகு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் அவர்.

ஏற்கனவே அச்சிறையில் அடைபட்டிருந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை, .பி.ராமசாமி ரெட்டியார், மட்டப்பாறை வெங்கடராமையர், ரா.குருசாமி போன்றோருடன் நெருக்கமாகப் பழகி நட்புகொண்டார் வேங்கடாசலபதி. ஓராண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலையடைந்தபோது, அவர் கிராம ஊழியர் சங்கம் தொடங்கிய ஆலமரத்தடியிலேயே கோபிநாயகன்பட்டியைச் சேர்ந்தவர்கள் கூடி நின்று வரவேற்றனர். அந்த ஊரைச் சேர்ந்த மாரியப்ப நாடார் என்பவர் தன்னுடைய பள்ளியில் வழங்கிய ஆசிரியர் வேலையை ஏற்றுக்கொண்டு. பயிற்சி பெறாத ஆசிரியராகப் பணிபுரிந்தார். சில மாதங்களுக்குப் பிறகு பசுமலையில் உள்ள ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காகச் சென்றுவிட்டார்.

பசுமலையில் அவருக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் கிறித்துவப் பாதிரியாரான எல்.எல்.லார்பீர் என்பவர். அவரும் அவருடைய மனைவியும் பசுமலையிலேயே தங்கி கிராமங்களில் சேவையாற்றி வந்தனர். கிராம ஊழியர்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை என்பதை அவர்களோடு பழகி அறிந்துகொண்டார் வேங்கடாசலபதி.  பாதிரியாரின் பரிந்துரையின் பேரில் அவர் படித்த புக்கர் வாஷிங்டன் வாழ்க்கை வரலாற்றையும் (கடுமையான இன்னல்களுக்கிடையில் படித்து உலகம் போற்றும் விஞ்ஞானியாக வளர்ந்து ஏழை நீக்ரோ விவசாயிகளுடைய மேம்பாட்டுக்காக தன் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியவர்) ஜோன் ஆஃப் ஆர்க் வாழ்க்கை வரலாற்றையும் (பிரான்சு தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட வீரப்பெண்மணி) படித்து ஊக்கம் கொண்டார். பயிற்சிக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பிய வேங்கடாசலபதி வள்ளியப்பா நாடார் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். கிராம ஊழியர் சங்கம் செயல்வேகம் கொள்ளும் வகையில் உறுதியான திட்டங்களை வகுத்து, தகுதியானவர்களைக் கண்டறிந்து பல குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவினரிடமும் ஒவ்வொரு பணியைப் பிரித்தளித்தார்.

சிறுவர் சிறுமியர் அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வந்து படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தருவது அவர்களுடைய தலையாய பணியாகும். கல்வியில் ஆர்வமுள்ள, வயதில் பெரியவர்களுக்காக இரவுப்பாடசாலை ஏற்படுத்தப்பட்டது. கல்வியைத் தொடர்ந்து சுற்றுப்புறத் தூய்மைக்கே கிராம ஊழியர் சங்கம் மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. தெருக்களில் கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால்கள் அமைத்து சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவது சங்கத்தின் தலையாய கடமையாகும். கிராமத்துக்குத் தேவையான சாலை வசதிகளை உருவாக்குதல், ஏரி, குளங்களைத் தூய்மை செய்து சீர்ப்படுத்துதல், பொதுக்கிணறுகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்துதல், இராட்டையில் நூல்நூற்றல், கதராடைகளை அணிதல், கைத்தொழில்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், தீண்டாமைப்பழக்கத்தை விலக்குதல் என பல தளங்களில் ஊழியர் சங்கத்தை வேங்கடாசலபதி ஈடுபடுத்தினார். பள்ளியில் செலவழித்த நேரம் போக எஞ்சிய நேரம் அனைத்தையும் கிராம சேவைகளுக்காகவே அவர் செலவு செய்தார். கிராமத்தொண்டு என்பதை அவர் மனம் அனுபவக்கல்வியாகவே நினைத்தது.

அவர் தலைமையாசிரியராகப் பணியேற்றதும் தன் பள்ளியில் தீண்டாமைப்பழக்கத்தை ஒழிப்பதையே முதல் கடமையாக நினைத்து நிறைவேற்றினார். எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகள் மனத்தில் இந்தப் பழக்கம் இடம்பெறாமல் தடுப்பதே சிறந்த வழியென அவர் உறுதியாக நம்பினார். அதுவரை பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த குழந்தைகளை தனிவரிசையில் உட்காரவைக்கும் முறை இருந்தது.  அதை உடனடியாக மாற்றி அனைவரையும் வகுப்பறைகளில் மற்றவர்களோடு கலந்து சமமாக அமரவைக்கும் முறையை நடைமுறைப்படுத்தினார். முதலில் இம்முறை கிராமத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அனைவரும் திரண்டு வந்து எதிர்ப்பைக் காட்டினர். அவர்களிடம் காந்தியடிகளின் கருத்துகளையும் மனிதர்களிடையே பிளவுகள் தோன்றக் காரணமாக இருக்கும் தீண்டாமையை ஒழிக்கவேண்டிய தேவையைப்பற்றியும் பலவாறாக எடுத்துரைத்து, பள்ளியில் நிகழ்ந்த மாற்றங்களை அவர்களும் ஏற்கும்படி செய்தார்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இரவு நேரங்களில் பள்ளியிலேயே தங்கிப் படிக்கவும், அங்கேயே உறங்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார் வேங்கடாசலபதி. இதுவே பின்னர்அரிஜன  மாணவர் விடுதியாக மாறியது. அந்த விடுதிக்கு கோகலே விடுதி என்று பெயர் சூட்டினார் வேங்கடாசலபதி. தலைமையாசிரியராக இருந்தபோதிலும், பணிகள் மிகுதியாக இருக்கும் தருணங்களில் வேங்கடாசலபதி அந்த விடுதியிலேயே மாணவர்களில் ஒருவராக அமர்ந்து உணவுண்டு, ஏதேனும் ஓர் அறையில் படுத்துவிடுவதுண்டு. அந்த விடுதியை வேங்கடாசலபதி ஓர் ஆலயமாகவே கருதினார். மாணவர்கள் முன்னேற்றத்துக்காக அல்லும்பகலும் பாடுபட்டார். அவருடைய சேவையும் அர்ப்பணிப்பும் எப்படியோ காந்தியடிகளின் கவனத்துக்குச் சென்றது. அந்த வார ஹரிஜன் இதழில் அந்த விடுதியைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதிய காந்தியடிகள் தேசத்தில் உள்ள அனைவரும் கோபிநாயகன்பட்டி பள்ளியை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

1938ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேங்கடாசலபதியின் தொண்டு ஒரு பள்ளிக்கூட அளவில் நின்றுவிடக்கூடாதென நினைத்த என்.எம்.ஆர்.சுப்பராமன் போன்றவர்கள் கல்லுப்பட்டி தொகுதியில் அவரை வேட்பாளராக நிற்கும்படி கேட்டுக்கொண்டனர். பள்ளிக்கூடத்தின் மேம்பாட்டையே தன் முதன்மை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த வேங்கடாசலபதி முதலில் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். ஆயினும் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு இணங்கி ஆசிரியர் பணியிலிருந்து விலகி தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மதுரை மாநகராட்சியின் தலைவராக என்.எம்.ஆர்.சுப்பராமன் பொறுப்பேற்றுக்கொள்ள, துணைத்தலைவராக வேங்கடாசலபதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கிய வேங்கடாசலபதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று கிராம ஊழியர் சங்கக் கிளைகளை உருவாக்கியளித்து, தீர்மானமான திட்டங்களுடன் அவை செயல்பட ஒரு தூண்டுகோலாக இருந்தார். ஒவ்வொரு பள்ளிக்கும் நேரிடையாகவே சென்று ஆய்வு நிகழ்த்தினார். அப்போது ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாட்டுவண்டிகளில் பயணம் செய்யும் சூழலே இருந்தது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் கவலை கொண்டதே இல்லை.  எல்லாப் பள்ளிகளிலும் மாணவமாணவிகள் சாதிமத பேதமின்றி சரிசமமாக நடத்தப்படுகிறார்களா என்பதை உறுதி செய்துகொள்வதையே அவர் தன் முதல் கடமையாக நினைத்தார். அதுவரை நடைமுறையில் இல்லாத புகார்ப்புத்தகப் பதிவுமுறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். கிராமச் சுகாதாரப்பணிகளில் உள்ளார்ந்த விருப்பத்துடன் ஈடுபட்டுத் தொண்டாற்றும்படி ஆசிரியர்களையும் மாணவர்களையும் தயார்ப்படுத்தினார். அவருடைய ஆய்வுக்குப் பிறகு ஒவ்வொரு பள்ளியிலும்கடவுள் அரசரைக் காப்பாராக” (GOD SAVE THE KING) பாட்டுக்குப் பதிலாக பாரதியாரின்வாழிய செந்தமிழ்பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

கிராமங்கள்தோறும் பள்ளிகள் பெருகவேண்டும் என்றும் பள்ளி மாணவர்களும் கிராமத்தினரும் படித்துப் பயன்பெறும் வகையில் நூலகங்கள் உருவாகவேண்டுமென்றும் கனவு கண்டார் வேங்கடாசலபதி. ஆனால் நூலகங்களுக்கான கட்டடங்கள், மேசைகள், நாற்காலிகள், தாங்கிகள், புத்தகங்கள் என தேவைகளின் பட்டியல் மிகவும் நீண்டதாக இருந்தது. அவற்றை உருவாக்கத் தேவைப்படும் நிதியும் அதிகமாக இருந்தது. எப்படி இதைச் சாத்தியப்படுத்துவது என்று நினைத்துத் தவித்தார் வேங்கடாசலபதி. அப்போது ஆண்டிப்பட்டிக்கு அருகில் உள்ள சிற்றூரைச் சேர்ந்த வெங்கலட்சுமி அம்மையார் என்பவர் வேகவதி ஆசிரமம் என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி கிராமத் தொண்டாற்றி வரும் செய்தி அவர் செவிக்கு எட்டியது. அவருடைய கிராமப்பணிகளில் ஒன்று நடமாடும் நூல்நிலையம். ஆசிரமத்துக்குச் சொந்தமான மாட்டுவண்டியொன்று, சிறந்த புத்தகங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று விநியோகம் செய்தது. அந்த வண்டிக்கு வெங்கடலட்சுமிஞானரதம்என்று பெயர்சூட்டியிருந்தார். அதை ஒருமுறை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்ற வேங்கடாசலபதிக்கு அத்திட்டம் மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆசிரமத்துக்கு அவர் ஒரு காரை ஏற்பாடு செய்துகொடுத்தார். மாட்டுவண்டிக்குப் பதிலாக புத்தகங்களைச் சுமந்துகொண்டு கார் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லத் தொடங்கியது.

வேங்கடாசலபதி ஒவ்வொரு கிராமப்பள்ளியிலும் ஒரு அறையை நூலகப்பயன்பாட்டுக்கு ஒதுக்கும்படி செய்தார். இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியும் விடுமுறை நாட்களில் மட்டும் இயங்கும் நூலகமாக மாறியது. ஆசிரியர்களே இந்த நூலகங்களின் கெளரவ நூலகர்களாகச் செயல்பட்டனர். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தனிப்பெட்டி வழங்கப்பட்டது. அப்பெட்டி நிறைய புத்தகங்கள் இருக்கும். ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு வரும் ஞானரதம் புதிய பெட்டியைக் கொடுத்துவிட்டு பழைய பெட்டியைப் பெற்றுக்கொள்ளும். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் படிப்பறிவுள்ள ஊர்ப்பெரியவர்களும் விடுமுறை நாட்களில் பள்ளிக்குச் சென்று படித்துப் பயன்பெறலாம். வேங்கடாசலபதியின் திட்டம் சிறப்பான முறையில் கிராமங்களில் செயல்படத் தொடங்கியதும், புத்தகங்களின் வரவுக்காக ஒவ்வொருவரும் காத்திருக்கத் தொடங்கினர். கெடுவாய்ப்பாக, 1942இல் மாநகராட்சியில் அவருடைய பதவிக்காலம் முடிந்ததுமே, நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல்துறை வாகனமாக மாற்றிவிட்டார்.

கல்லுப்பட்டிக்கு அருகிலிருக்கும் பேரையூரில் வேங்கடாசலபதி பொறுப்பேற்று நடத்திய கதர் மாநாடு மிகவும் முக்கியமானது. ஏறத்தாழ இரண்டாயிரம் பெண்கள் கதராடை அணிந்து வரிசையில் அமர்ந்து ராட்டையில் நூல்நூற்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  அந்த மாநாட்டில் வேங்கடாசலபதி நிகழ்த்திய உரை மாநாட்டில் கலந்துகொண்ட ராஜேந்திர பிரசாத் போன்றவர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. புராண காலத்தில் அசுரர்கள் சுற்றிச்சுற்றி வந்ததாகவும்  இறைவன் அவர்களை யானைமலை, காளைமலை, பசுமலை என மலைகளாக மாற்றித் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. இப்போது நம்மைச் சுற்றிவரும் அசுரர்கள் நம்மிடம் அயல்நாட்டு ஆலைத்துணிகளை விற்கிறார்கள். நம் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். நமது செல்வம் அந்த ராட்சசர்களிடம் சென்று சேர்கிறது. இதைத் தடுக்கவே காந்தியடிகள் நமக்கு ராட்டை என்னும் ஆயுதத்தைக் கொடுத்திருக்கிறார் என்று உவமைக்கதையோடு உரை நிகழ்த்தினார் வேங்கடாசலபதி. அவர் உரையால் உத்வேகம் கொண்டு அந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நூல்நூற்கவும் கதரணியவும் முடிவெடுத்தனர். அந்த வட்டாரத்தில் மட்டும் ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் ராட்டைகள் ராட்டைகள் தினமும் சுழன்றன. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தை அடுத்து கல்லுப்பட்டி வட்டாரமே கதர்ப்பணிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

கல்லுப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு பயிற்சி நிலையம் தொடங்கி நடத்தவேண்டும் என்பது வேங்கடாசலபதியின் நீண்டநாள் கனவு. அதற்குப் பொருத்தமான இடம் கிடைக்காமல், அந்தக் கனவை நிறைவேற்றமுடியாமல் தவித்தார் அவர்.  நண்பர்களைச் சந்தித்து உரையாடும்போதெல்லாம் அந்தக் கனவுத்திட்டத்தைப்பற்றிய பேச்சும் ஒருமுறை வந்துபோகும். அதைக் கேட்ட கொட்டாணிப்பட்டியைச் சேர்ந்த நடேசன் செட்டியார்  என்பவர் வேங்கடாசலபதியிடம் கல்லுப்பட்டி கிராமமே ஆசிரமம் அமைக்கப் பொருத்தமான இடமென்றும், அங்கு அமைப்பதாக இருந்தால் தன் நண்பர் வேலுச்செட்டியாருக்குச் சொந்தமான நிலத்தை இலவசமாக வாங்கித் தருவதாகச் சொன்னார். அதைக் கேட்டு பரவசப்பட்ட வேங்கடாசலபதி உடனடியாக அத்திட்டத்துக்கு உடன்பட்டார். தான் வாக்களித்தபடியே நிலத்தைப் பெற்று ஆசிரமத்தின் பெயரில் எழுதியளித்தார் செட்டியார்.

1930இல் கோபிநாயகன்பட்டியில் ஆலமரத்தடியில் வேங்கடாசலபதி தொடங்கிய கிராம ஊழியர் சங்கம் சிறுகச்சிறுக வளர்ந்து  1940இல் கல்லுப்பட்டியில் காந்திநிகேதனாக மலர்ந்தது. இப்பெயரைச் சூட்டியவர், சாந்திநிகேதனில் படித்துப் பட்டம் பெற்று காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்து அரிஜன சேவா சங்கத்தில் பணியாற்றிய ஜி.ராமச்சந்திரன். இரண்டாண்டுகளாக நடைபெற்று வந்த கட்டடவேலைகள் முடிந்ததும் 1942 முதல் சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஆசிரமத்தைத் திறந்துவைத்தார். அன்றே கதர்ப்பணியுடன் ஆசிரமம் இயங்கத் தொடங்கியது. படிப்படியாக, கைக்குத்தல் அரிசி, எண்ணெய் ஆட்டுதல், தேனீ வளர்த்தல், கோழி வளர்த்தல், சோப்பு, பற்பொடி தயாரித்தல், தோல் பதனிடுதல் போன்ற கைத்தொழில்களும்  ஒன்றன்பின் ஒன்றாக வளர்ந்தன. காந்திநிகேதனின் புகழ் வெகுவிரைவில் நாடெங்கும் பரவியது.

8.8.1942 அன்று பம்பாயில் காந்தியடிகளின் தலைமையில் கூடிய காங்கிரஸ் குழுவில் வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தியடிகளும் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்டு தேசமெங்கும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 1.9.1942 அன்று கூடிய மதுரை மாநகராட்சிக்கூட்டத்தில் பம்பாய் காங்கிரஸ் குழு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காந்தியடிகளையும் மற்ற தலைவர்களையும் கைது செய்திருக்கும் வைசிராயின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக மற்றொரு தீர்மானமும் தம் கண்டனங்களைத் தெரிவிக்கும் அடையாளமாக மாநகராட்சி அலுவலகமும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்களும் மூன்று நாட்கள் மூடப்படும் என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேறியதும் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தீர்மானப்பிரதிகளை இணைத்து பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

சுற்றறிக்கை கிடைத்ததும் எல்லாப் பள்ளிகளும் விடுமுறையை அறிவித்துவிட்டன.  தாமதமாகவே இச்செய்தியை அறிந்துகொண்ட மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் கொதித்தெழுந்தனர். கவர்னரின் கவனத்துக்கு உடனடியாக இச்செய்தி கொண்டுசெல்லப்பட்டது.  அவர் உடனே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநகராட்சியைக் கலைத்துவிடும் உத்தரவை தந்தி மூலம் அனுப்பிவைத்தார். வேங்கடாசலபதி உடனடியாக கைது செய்யப்பட்டார். தலைமையாசிரியர்கள் அனைவரும் பள்ளிகளை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டதால், பள்ளிகளைத் திறக்க அதிகாரிகளால் முடியவில்லை. குறிப்பிட்ட மூன்று நாட்கள் மூடப்பட்டே இருந்தன. காவல்துறையால் கைது செய்யப்பட்ட வேங்கடாசலபதி விசாரணைக்குப் பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்று அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குதான் மதுரை வைத்தியநாதய்யரும் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக்காலம் முழுதும் வேங்கடாசலபதிக்கு அவரே துணையாக  இருந்தார்.

1946இல் தென்னிந்திய நிர்மாண ஊழியர்கள் மாநாட்டிலும் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா விழாவிலும் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்தார். காந்தி நிகேதனிலேயே தயாரிக்கப்பட்ட பேனா, மூக்குக்கண்ணாடிச் சட்டகம், சவரக்கத்தி, கதர்த்துண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார் வேங்கடாசலபதி.  அவற்றைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் காந்தியடிகள். இன்னும் சில நாட்களில் அவர் மதுரைக்கு வரும் திட்டமிருந்தது. அச்சமயத்தில் மதுரையிலிருந்து ஒரு மணி நேரப் பயண தொலைவிலிருக்கும் கல்லுப்பட்டிக்கு வந்து ஆசிரமத்தைக் காணவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார் வேங்கடாசலபதி. அமைதியான குரலில் தன் வேலைச்சுமைகளையும் முதுமையையும் காரணமாகச் சொல்லி மறுத்தாலும் காந்தியடிகள் தன் அருள்நிறைந்த பார்வையின் வழியாக மனம்கனிந்த ஆசிகளை  வழங்கினார். அத்துடன் உடனடியாக ஒரு தாளை எடுத்து, “நிர்மாணப் பணிகளில் அக்கறையோடு ஈடுபட்டுவரும் எல்லா நிறுவனங்களுக்கும் எப்போதும் என்னுடைய ஆசிகள் உண்டு. என் பெயரால் நடைபெறும் காந்தி நிகேதனம் ஆசிரமத்துக்கு நிச்சயமாக என் ஆசி உண்டுஎன்று எழுதிய காந்தியடிகள் அந்த வாசகத்துக்கு அடியில் தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

கிராம சுயராஜ்ஜியம் என்பதைப் பரிபூரணமான குடியரசுள்ள அமைப்பாகப் பார்த்தவர் காந்தியடிகள். ஒவ்வொரு கிராமமும் தனக்கு வேண்டிய ஒவ்வொரு உணவுப்பொருளையும் ஆடைகளுக்கு வேண்டிய பருத்தியையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்துகொள்ளும். கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் தனியாக இருக்கும். இவற்றைத் தவிர பொழுதுபோக்கும் இடங்களும் விளையாட்டு மைதானங்களும் இருக்கும். எஞ்சியிருக்கும் இடத்தை  பணப்பயிர்களைப் பயிரடப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம், நாடகமேடை, கிணறுகள், குளங்கள் என அனைத்தையும் அமைத்துக்கொள்ளலாம். கிராம ராஜ்ஜியம் என்பது தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட முழுமையான ஜனநாயகம். தனிமனிதனே தன்னை ஆளும் அரசை அமைத்துக்கொள்கிறான். அகிம்சையே அவனுக்கும் அரசுக்கும் வழிகாட்டுகிறது. காந்தியடிகளின் கிராம ராஜ்ஜியக் கனவு என்பது அற்புதமானதொரு திட்ட வரைபடம். வேங்கடாசலபதியின் கல்லுப்பட்டி காந்திநிகேதனம் அந்த வரைபடத்தின்படி உருவாக்கப்பட்ட ஒரு சின்னக்குடில்.