Home

Sunday 6 September 2020

எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் - முன்னுரை

  

2020 பிறந்ததும் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் நான் எழுதிய சத்தியத்தின் ஆட்சி என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவந்தது. காந்தியடிகளின் பாதையில் மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளின் கதைகளை அதில் எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் இன்னும் எழுதப்பட வேண்டியவரின் கதைகள் மனத்தில் விரிந்தன. பல ஆளுமைகளுடைய பெயர்களும் மிகவும் குறைவான தகவல்களும் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னிடம் உரையாடும் எல்லா நண்பர்களிடமும்உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பத்து பேர்களிடம் கேட்டால் ஒருவரிடமிருந்தாவது ஏதேனும் பயனுள்ள தகவல்கள் கிடைக்காதா என்ற ஏக்கமே அதற்குக் காரணம்.

இந்தப் பெயர்கள் என்னை வந்தடைந்த விதம் மிகவும் விசித்திரமானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது நண்பரொருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறிச் செல்வதற்காக பழைய புத்தகங்களையெல்லாம் கட்டு கட்டி ஒதுக்கிக்கொண்டிருந்தார். கடையில் போடுவதற்கான கட்டுகள் ஒரு புறம்,  புதுவீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான கட்டுகள் இன்னொரு புறம் என தனித்தனியாக இருந்தன. நானும் அவருக்கு ஒத்தாசையாக புத்தகங்களைப் பிரிப்பதிலும் கட்டுவதிலும் உதவினேன். ஏராளமான விகடன் இதழ்களும் குங்குமம் இதழ்களும் இருந்தன.




தேநீர் அருந்தும் நேரத்தில் கைக்குக் கிடைத்த ஒரு விகடன் இதழை எடுத்துப் புரட்டினேன். பிரித்த பக்கத்தில்அவர் சொன்னார் நான் செய்தேன்என்று ஒரு நேர்காணல் பிரசுரமாகியிருந்தது. அத்துடன் வெளிவந்திருந்த  படங்கள் என்னைக் கவர்ந்தன. பார்க்கும்போதே வணங்கத் தோன்றும் உயர்ந்த உருவம். நீண்ட முகம். கண்ணாடிக்குப் பின்னால் கனிவைப் பொழியும் கண்கள். வேகவேகமாக ஒரே மூச்சில் அந்த நேர்காணலைப் படித்துமுடித்தேன். அது கோபிச்செட்டிப் பாளையம் லட்சுமண ஐயரின் நேர்காணல். ஒரு காலத்தில் அறுநூறு ஏக்கருக்கும் மேல் சொந்தமாக நிலம் வைத்திருந்த குடும்பம். தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகள் படிக்கும் பள்ளியும் விடுதியும் கட்டி அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வரும் வரலாறு கேள்விகளாகவும் பதில்களாகவும் அந்த நேர்காணலில் பதிவாகியிருந்தது.

படிக்கப்படிக்க மனம் சிலிர்த்தது. ”எப்படி இந்த எண்ணம் உங்களுக்கு வந்தது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றதையும்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தும்படி அவர் சொன்னதையும் அச்சொல்லை கட்டளையாக தலைமேற்கொண்டு இழப்புகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருவதையும் பூரிப்புடன் சொல்லியிருந்தார். கோபிச்செட்டிப்பாளையம் லட்சுமண ஐயர் என்னும் பெயரும் அந்த மந்திரச்சொல்லும் அப்படியே என் நெஞ்சில் பதிந்துவிட்டன.

இன்னொருமுறை சிதம்பரத்துக்கு நண்பருடைய காரில் சென்றிருந்தேன். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலைத் தாங்கியிருக்கும் ஆதிசேடன் ஒருமுறை சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்கிற விருப்பத்தைத் திருமாலிடம் தெரிவித்து அவருடைய அனுமதியைப் பெற்று சிதம்பரத்துக்கு வந்து நடராஜனின் நடனத்தைக் கண்டு களித்துவிட்டு கோவிந்தராஜ பெருமாளையும் வணங்கிவிட்டு திரும்பிச் சென்றதாகவும் ஒரு கதையைப் படித்தேன். ஒருமுறை அந்த ஆதிசேடனைப்போல சென்றுவரவேண்டும் என்று தெரிவித்ததால் நண்பர் அழைத்துச் சென்றிருந்தார். ஒருசில மணி நேரங்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டதால் அருகிலுள்ள புவனகிரிக்கு அழைத்துச் சென்றார். அது ராகவேந்திரரின் பிறந்த ஊர் என்பதால் புகழ் பெற்றிருந்தது.  அந்தக் கோவிலையும் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு நீண்ட கால்வாயைப் பார்த்தோம். நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையோரம் ஒரு முதியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார். நாங்கள் வண்டியை நிறுத்திவிட்டு இளநீர் அருந்தினோம்.

நான் அந்த முதியவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் அருகிலிருக்கும் தோப்பிலிருந்து இளநீர்க்குலைகளை வாங்கிவந்து விற்பதாகச் சொன்னார். தொடர்ந்து நான் அவரிடம் அந்தக் கால்வாயைச் சுட்டிக்காட்டி அது எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்று கேட்டேன். அது வீராணம் ஏரியிலிருந்து பிரிந்து வருகிற கால்வாய் என்றும் அங்கிருந்து பதினைந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தீர்த்தாம்பாளையம் என்னும் கிராமம் வரைக்கும் நீண்டு செல்கிறது என்றும் சொன்னார். ஒரு காலத்தில் தீர்த்தாம்பாளையம் வறண்ட பிரதேசம் என்றும் குடிதண்ணீருக்காக மக்கள் அல்லலுற்று அலைந்ததாகவும் கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அஞ்சலையம்மாள் என்பவரின் முயற்சியால் அந்தக் கால்வாய் வெட்டப்பட்டதாகவும் அதன் வழியாக தீர்த்தாம்பாளையம் குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைத்ததாகவும் சொன்னார். அந்த அம்மையாரின் சேவையுணர்ச்சியைப் பாராட்டும் விதமாக மக்கள் அக்கால்வாயை அஞ்சலை கால்வாய் என்று அழைக்கத் தொடங்கி அந்தப் பெயரே நிலைத்துவிட்டதாகவும் சொன்னார். ”அந்த அம்மா சுதந்திரப் போராட்ட காலத்துல ஆறேழு தரம் ஜெயிலுக்கு போய் வந்தவங்கஎன்று சொல்லி முடித்தார். அக்கணத்தில் அஞ்சலையம்மாள் என்னும் பெயரும் அந்த முதியவர் சொன்ன வாக்கியமும் அப்படியே என் நெஞ்சில் தங்கிவிட்டன.

வழக்கம்போல நண்பர்களிடம் அவரைப்பற்றி கேட்கத் தொடங்கினேன். இணையத்திலும் புத்தகங்களிலும் தேடினேன். நீல் சத்தியாகிரகத்தில் பங்கேற்று கணவனோடு சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் என்றொரு தகவல்தான் முதலில் கிடைத்தது. அவருடைய மகளுக்கு காந்தியடிகள் லீலாவதி என்று பெயர் சூட்டியதாகவும் வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று சில ஆண்டுகள் வளர்த்துவந்ததாகவும் மற்றொரு தகவல் கிடைத்தது. வேறொரு தருணத்தில் வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்ட சமயத்தில் மஞ்சக்குப்பத்துக்கு உரையாற்ற வந்த காந்தியடிகளை ஒரு இஸ்லாமியப்பெண் போல முகத்தையும் உடலையும் மூடிக்கொண்டு குதிரைவண்டியில் சென்று பார்த்துவிட்டு வந்ததாகவும் ஒரு புதிய தகவல் கிடைத்தது. இன்னும் கூடுதல் தகவல்களுக்கான முயற்சிகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அவரைப்பற்றிய கட்டுரையை இந்தத் தொகுதியில் எழுத இயலவில்லை. அடுத்த தொகுதியில் எழுதமுடியும் என நம்புகிறேன். 

இந்தத் தேடல் எனக்கு ஒருவகையில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குக் கிடைத்த ஒவ்வொரு தகவலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அந்த விவரம் குறிப்பிட்ட ஆளுமையைப்பற்றிய தகவலாகவும், ஏதோ ஒருவகையில் நம் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் தகவலாகவும் இருந்தது.  கெய்த்தான், டி.என்.ஜெகதீசன் போன்றோரின் தன்வரலாற்றுப் புத்தகங்களையே நண்பர்கள் எனக்குத் தேடிக் கொடுத்தார்கள்.  ஒருவரைப்பற்றி எழுதும்போது, இன்னொரு புதிய பெயர் தானாகவே என் முன்னால் வந்து நின்றதை விசித்திரமான அனுபவம் என்றே சொல்லவேண்டும். இத்தொகுதியில் பதினைந்து ஆளுமைகளின் பெயர்கள் உள்ளன. முதல்முதலாக வினோபாவைப்பற்றி எழுதும்போது கிருஷ்ணம்மாளின் பெயரும் ஜெகந்நாதனின் பெயரும் இணைந்து தோன்றின. அடுத்து ஜெகந்நாதனைப்பற்றி எழுதும்போது கெய்த்தானின் பெயர் எழுந்து வந்தது. வீ.செல்வராஜின் தன்வரலாற்றைப் படிக்கும்போது கெய்த்தானின் ஆளுமை மேலும் துலங்கி வந்தது. அவர் வழியாகத்தான் கோ.வேங்கடாசலபதியைச் சென்றடைந்தேன். சமீபத்தில் மறைந்த மா.பா.குருசாமி அவர்களின் புத்தகமொன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது க.அருணாசலம் என்னும் ஆளுமையின் பெயரை வந்தடைந்தேன். இப்படி ஒருவரைத் தொட்டு ஒருவரென இந்தப் பயணம் நீண்டுகொண்டே சென்றது. இப்போதும் இது முடிவடைந்த பட்டியல் இல்லை. இன்னும் நான் அஞ்சலையம்மாளைப்பற்றி எழுதவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. புதுச்சேரி எஸ்.ஆர்.எஸ், திண்டிவனம் குலசேகர தாஸ், வாலாஜாபேட்டை கே.ஆர்.கல்யாணராம ஐயர் ஆகிய பெயர்களும் மனத்தில் வட்டமிடுகின்றன.

இந்தக் கட்டுரைகளை எழுதும் காலத்தில் நான் விரும்பும் புத்தகங்களை உடனுக்குடன் அனுப்பி உதவியசர்வோதயம் பேசுகிறதுஇதழின் ஆசிரியரான க.மு.நடராஜன் அவர்களின் உதவியை ஒருபோதும் மறக்கமுடியாது. காந்திய ஆளுமைகளான வினோபா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கெய்த்தான், ஜெகந்நாதன் போன்றோருடன் இணைந்து உழைத்தவர் அவர். என்னுடைய தந்தைக்கு நிகரான அவருக்கு என் வணக்கங்களை இங்கு பதிவு செய்ய விழைகிறேன். மேலும் புத்தகங்களுக்காக தேடியலைந்தபோது எனக்கு உதவிய தியடோர் பாஸ்கரன், நேசமுடன் வெங்கடேஷ், சித்ரா, ஜெயஸ்ரீ, கே.பி.நாகராஜன், சுனில் கிருஷ்ணன், கோவை சிறுவாணி பிரகாஷ், வழக்கறிஞர் சுப.தளபதி, ஸ்ரீநிவாசன் கோபாலன், வெங்கடசுப்பராய நாயகர், கவிஞர் இரா.மீனாட்சி, திருஞானசம்பந்தம் அனைவரையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் எழுதிமுடித்த கையோடு நண்பர்கள் பழனிக்கும் கே.பி.,நாகராஜனுக்கும் அனுப்பிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அனுப்பிவைத்த அரைமணி நேரத்துக்குள் கட்டுரையை உடனுக்குடன் படித்துவிட்டு உரையாடுவதை அவர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மணிக்கணக்கில் நீளும் அந்த உரையாடல்கள் எனக்கு பல வகைகளில் ஊக்கமூட்டின. அவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இக்கட்டுரைகளை எழுதத் தொடங்கியதிலிருந்து காந்தியடிகளின் வரிகளை வாசிக்காத நாளே இல்லை. ஆர்வத்துடன் கதைகள்  எழுதிக்கொண்டிருந்த நாட்களில் கூட அரைமணி நேரம் ஒதுக்கி, காந்தியடிகள் எழுதிய ஏதேனும் ஒரு கடிதத்தையோ கட்டுரையையோ உரைக்குறிப்பையோ படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு நாளுக்குமான செயலூக்கத்தை எனக்கு வழங்குபவராக காந்தியடிகள் இருந்தார். அவரை நினைக்காத நாளே இல்லை. அவரை நினைக்கும்போது அறுபதாண்டுகளுக்கும் மேல் அவருடன் இணைந்து குடும்பவாழ்க்கையிலும் சமூகவாழ்க்கையிலும் பங்கு வகித்த அவருடைய துணைவியார் கஸ்தூர்பா அம்மையாரையும் நினைத்துக்கொள்வேன். நாட்டுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய இக்கட்டுரைத்தொகுதியை கஸ்தூர்பா அம்மையாருக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுதியில் அடங்கியிருக்கும் சில கட்டுரைகள் அம்ருதா, சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பும் நன்றியும். என் இல்லத்தரசி அமுதாவின் அரவணைப்பும் ஊக்கமும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் துணையாக விளங்குபவை. அவருக்கு என் கனிந்த அன்பு.  இந்தக் கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி