Home

Monday 14 September 2020

அரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி : செயல்வீரரின் வெற்றி - கட்டுரை


07.09.1931 முதல் 01.12.1931 வரை இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்தியாவுக்கு முழு சுதந்திரம் அளிப்பதைப்பற்றிய விவாதத்துக்கான அழைப்பென ஆங்கில அரசு அறிவித்திருந்தது. காங்கிரஸ் சார்பாக காந்தியடிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றார். மாநாட்டில் அரசு சார்பான பிரதிநிதிகள் மையமான கருத்திலிருந்து விலகி அரசியலமைப்பின் பிரச்சினைகளை நோக்கி விவாதங்களை திசைதிருப்பினார்கள். அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலைப்பற்றியதாக பேச்சு மாறியது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் போல தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினர் என்னும் பிரிவில் அடக்கி விவாதிப்பது சரியல்ல என்று தொடக்கத்திலேயே தன் மறுப்பைத் தெரிவித்தார் காந்தியடிகள். தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்துக்குள்ளேயே இருக்கிற ஒரு பிரிவினர் என்றும் சிறுபான்மையினர் என அவர்களை அடையாளப்படுத்துவது இந்து மதத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிவடைந்ததும் காந்தியடிகள் 28.12.1931 அன்று இந்தியாவுக்குத் திரும்பினார். 31.12.1931 அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு வட்டமேசை மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை அனைவரோடும் பகிர்ந்துகொண்டார். எதிர்பாராதவிதமாக காவல்துறை 04.01.1932 அன்று அவரை கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தது. தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினராக அறிவிக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியது ஆங்கில அரசு. இந்து மதத்திலிருந்து தீண்டாமையை உடனடியாக அகற்றி, அனைவரையும் சமமெனக் கருதும் மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றொரு அறிக்கையை சிறையில் இருந்தபடியே வெளியிட்டார் காந்தியடிகள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடுவிலுள்ள இடைவெளியை அகற்றும் வகையில் கல்விச்சாலைகளை உருவாக்குதல், மாணவர் விடுதிகளை உருவாக்குதல், ஆலய நுழைவுகளை நடைமுறைப்படுத்துதல்கிணறுகள் போன்ற நீர்நிலைகளை அனைவருக்குமான பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுமாறு தொண்டர்களை ஊக்கப்படுத்தினார் காந்தியடிகள். உயர்வகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ஒவ்வொருவரும் இத்தகு செயல்களில் மனமுவந்து ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரிந்து போக நினைக்கும் சமூகத்தவர் தம் கருத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் ஒவ்வொருவருடைய தொண்டும் அமையவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதுவரை தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவித்த இன்னல்களுக்கு தம் தொண்டுகள் வழியாகவே மேல்வகுப்பினர் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் வெளியிட்ட ஒவ்வொரு அறிக்கையிலும் இந்தக் குரல் வெவ்வேறு சொற்கள் வழியாக நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இந்து மதத்தில் உள்ள மேல்வகுப்பினர் ஒவ்வொருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு சிறுவனை அல்லது சிறுமியை தத்தெடுத்து நல்ல கல்வியை வழங்கி வளர்த்து, நல்ல வேலையைத் தேடிக் கொடுத்து  உயர்ந்தவர்களாக்கி வாழ்க்கையில் சிறப்பானவர்களாக மலரச் செய்ய பாடுபடவேண்டும் என்றொரு வேண்டுகோளை காந்தியடிகள் இந்தியாவுக்கு விடுத்தார்.

காந்தியின் கட்டளையை முதன்மைச்சொல்லாகக் கொண்ட தொண்டர்கள் இந்தியா முழுதும் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்டோர் சேவையில் இறங்கினர். சிலர் ஏற்கனவே நாடெங்கும் கிளைகளுடன் இயங்கி வந்த அரிஜன சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர். ஒருசிலர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவர்களை தம் சொந்தப் பிள்ளைகள்போல கண்ணும் கருத்துமாக வளர்க்கத் தொடங்கினர். காந்தியத் தொண்டரான மானாமதுரை கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களில் ஒருவர்.

அமெரிக்க ஆங்கிலேய மறைப்பணியாளர்கள் மானாமதுரையில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். அதன் பெயர் அமெரிக்க மிஷன் போர்டிங் பள்ளிக்கூடம். கிறித்துவர்களாக மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். மதம் மாறாத ஒரே ஒரு சிறுவனும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். அச்சிறுவனின் பெயர் சம்பந்தம். அவனுடைய பெற்றோர்கள் மதமாற்றத்தை விரும்பாதவர்கள். ஆனால் அச்சிறுவனுடைய ஆசிரியை அவனிடம் தினந்தோறும் மதம் மாறும்படி தூண்டிக்கொண்டே இருந்தார். மதம் மாறுவதால் அவனுக்குக் கிடைக்கக்கூடிய பயன்களை ஓய்விருக்கும் போதெல்லாம் பட்டியலிட்டுக் காட்டுவது அவர் வழக்கம். ஆனால் சம்பந்தமோ கனவுப்பட்டியலுக்கு மனம் மயங்காதவராக இருந்தான். இத்தருணத்தில் கிருஷ்ணசாமி ஐயங்கார் மாணவனுடைய தகப்பனாரைச் சந்தித்து இந்து மரபுப்படி அச்சிறுவனை தன் மகனாக நினைத்து தானே படிக்கவைக்கப் போவதாகவும் அவனை தன் பராமரிப்பில் விடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சிறுவனின் தந்தையாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். தீண்டாமையைக் கடைபிடிக்கும் அக்கிரகாரத்துக்குள் பையனை எப்படி அழைத்துச் செல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்குஎவ்வளவு தொல்லைகள் வந்தாலும் எதிர்நின்று சமாளிப்பேன்என்று பதில் சொன்னார் கிருஷ்ணசாமி.

சிறுவனை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பல எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் கிருஷ்ணசாமி அச்சிறுவனை கிறித்துவப்பள்ளியிலிருந்து விடுவித்து வேறு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடத் திட்டமிட்டார். மானாமதுரையில் இயங்கிவந்த மற்றொரு பள்ளிக்கூடத்தை ஓக்கூர் வெள்ளையன் செட்டியார் என்பவர் நடத்திவந்தார். அந்தப் பள்ளிக்கு சிறுவனை அழைத்துச் சென்று வகுப்பில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் கிருஷ்ணசாமி. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அச்சேர்க்கையை உடனடியாக அனுமதிக்கவில்லை. வேண்டாம் என்று தள்ளவும் இல்லை. ஆனால் நாளைக்கு நாளைக்கு என்று ஏதேதோ காரணம் சொல்லி ஒத்திப்போட்டபடி சென்றார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி பொறுமையிழந்துபையனை சேர்க்கமுடியுமா அல்லது அரசாங்கத்துக்குப் புகார் எழுதி பள்ளிக்குக் கிடைத்துவரும் உதவித்தொகையை நிறுத்தட்டுமா?” என்று சீற்றத்துடன் கேட்டார். வேறு வழியின்றி தலைமையாசிரியர் சிறுவனை வகுப்பில் சேர்த்துக்கொண்டார். ஆனால் மற்ற மாணவர்கள் அமரும் வரிசையில் அச்சிறுவனுக்கு இடமொதுக்காமல் தனியாக வேறொரு இருக்கையைப் போட்டு அதில் அமர்ந்து பாடம் கேட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மற்ற மாணவர்களைத் தொடவோ, அவர்களுடன் நெருங்கிப் பழகவோ, அவர்கள் நீரருந்தும் குடிநீர்ப்பானைக்கு அருகில் செல்லவோ கூடாது என்று அவனுக்கு சொல்லப்பட்டது.

அதையெல்லாம் பொருட்படுத்தாத சம்பந்தம் தனிபெஞ்சில் உட்கார்ந்தபடி பாடங்களை அக்கறையோடு கவனித்துவந்தான். தமிழாசிரியரைத் தவிர மற்ற ஆசிரியர்களும் அவனிடம் அன்போடு நடந்துகொண்டனர். அந்தத் தமிழாசிரியர் கிருஷ்ணசாமி வசிக்கும் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிப்பவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுவனை அக்ரகாரத்துக்குள் அழைத்து வந்துவிட்டாரே என அவர் மீது ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார் அவர். ஆனால் வழக்கறிஞரான அவரை எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் இல்லை. அதனால் தன்  சீற்றத்துக்கு ஒரு வடிகாலாக சிறுவனை சிறுமைப்படுத்தத் தொடங்கினார்வகுப்பறையிலேயே சாதிப்பெயரைச் சொல்லி அவனைத் திட்டுவதை வழக்கமாகக் கொண்டார். வார்த்தைக்கு வார்த்தை அவனுக்குப் படிப்பு வராது என்றும் அவனுக்கு மூளை இல்லையென்றும் அடிக்கடி சிறுமைப்படுத்திக்கொண்டே இருந்தார். திருத்திய கட்டுரை நோட்டுகளை ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி அழைத்து கையில் கொடுத்துவரும்போது, சம்பந்தத்தின் நோட்டை பெயர் படிக்காமலேயே அவனை நோக்கி வீசுவார். மாணவனை நெருங்கிச் செல்வதையும்  மாணவனை நோக்கி அவர் செல்வதையும் தீட்டு என அவர் மனம் நினைத்தது. இப்படியெல்லாம் செய்தால் அச்சிறுவன் தானாகவே பள்ளியைவிட்டு நின்றுவிடுவான் என அவர் மனம் திட்டமிட்டது.

வகுப்பில் நடைபெறும் எந்தச் செய்தியையும் கிருஷ்ணசாமியிடம் அவன் பகிர்ந்துகொள்ளாமல் அமைதியாகவே அவன் பள்ளிக்குச் சென்றுவந்தான். இருப்பினும் ஏதோ ஓர் ஆழ்ந்த வருத்தத்தில் ஒருநாள் அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டான். உடனே கிருஷ்ணசாமி சீற்றம் கொண்டார். உடனே பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்து நடந்தவற்றைப்பற்றி புகாரளித்தார். வகுப்பில் அனைவருக்கும் நிகராக சிறுவனை நடத்தாவிட்டால் மானாமதுரை காங்கிரஸ் கமிட்டி சார்பாக அரசாங்கத்துக்குத் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக சொன்னார். அதைக் கேட்டதும் அவர்கள் உடனடியாக தலைமையாசிரியரை வரவழைத்து கண்டித்து அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தனர். தலைமையாசிரியரும் பள்ளிக்குத் திரும்பியதும் தமிழாசிரியரைக் கண்டித்தார். ஒருவழியாக அவர் சிறுவனுக்கு இழைத்த துன்பங்கள் முடிவுற்றன.

தமிழ்ப்பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்த சிறுவன் ஒவ்வொரு தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்றுவந்தான். தேர்வுத்தாள்கள் வேறு வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் திருத்துவதால் அவனுடைய தமிழாசிரியரால் எதுவும் செய்யமுடியவில்லை. முதல் மதிப்பெண் பெறும் மாணவனே வகுப்பில் முதல் இடத்தில் உட்காரவேண்டும் என்னும் விதி அந்தப் பள்ளியில் பின்பற்றப்பட்டு வந்தது. சம்பந்தம் முதலிடத்தில் அமர்வதை யாராலும் தடுக்க இயலவில்லை. தன் முயற்சிகள் மேலிடத்துக்குத் தெரிந்துவிட்டால் மறுபடியும் சிக்கல் ஏற்பட்டுவிடும் என அஞ்சி தமிழாசிரியரும் அமைதியாக இருந்தார். நாளடைவில் அச்சிறுவன் அனைவரையும்போல நடத்தப்பட்டான். சிறுவனின் தமிழார்வத்தை அறிந்த தலைமையாசிரியர் அவனை அழைத்து அடிக்கடி பாரதியார் பாடல்களைப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.

பள்ளிக்கூடத்தில் சந்தித்த இடையூறுகளைப்போலவே அக்ரகாரத்திலும் மறைமுகமாக பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் கிருஷ்ணசாமியை எதிர்த்துப் பேச யாருக்கும் துணிச்சலில்லை. அவர் ஊரறிந்த பெரிய வழக்கறிஞர் என்பது ஒரு காரணம். காங்கிரஸில் செல்வாக்குள்ளவர் என்பது மற்றொரு காரணம். வீட்டில் எழுந்த விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அவர் அச்சிறுவனை முதலில் மூங்கில் தர்ப்பைகளால் தடுக்கப்பட்ட திண்ணையில் இருக்கும்படி செய்தார். அடுத்து, வழக்கு தொடர்பான உரையாடல்களை நிகழ்த்துகிற அறைக்குள் அழைத்து வந்து நடமாடச் செய்தார். பக்கத்தில் இருந்த வக்கீல் குமாஸ்தாக்கள் முதலில் முகம்சுளித்தாலும் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்ததால் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர். கிருஷ்ணசாமியின் மனைவி ருக்குமணியின் மனமாற்றத்துக்குத்தான் நீண்ட நாட்கள் தேவைப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில்தான் காந்தியடிகளின் அறிவுப்பையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நாடெங்கும் ஆலயப்பிரவேசப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இராஜாஜி, தேவதாஸ் காந்தி, ஜி.ராமச்சந்திரன், தக்கர்பாபா, டாக்டர் இராஜேந்திர பிரசாத்  போன்றோர் தமிழகமெங்கும் ஆலயப்பிரவேசப் பிரச்சாரக்கூட்டங்களை நிகழ்த்தினர்.  மானாமதுரைக்கு இராஜாஜி பேச வந்திருந்தபோது கிருஷ்ணசாமி தான் வளர்க்கும் சிறுவனைப்பற்றி எடுத்துரைத்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த இராஜாஜிக்கு அச்சிறுவனே கதர்மாலையை அணிவித்து வணக்கம் சொன்னான். இராஜாஜி அச்சிறுவனிடம் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துவரும்படி கேட்டுக்கொண்டார். அதை அவன் கொண்டுவந்து கொடுத்ததும் எல்லோருக்கும் முன்னிலையில் அதை அருந்தினார். பிறகு அவனையும் அங்கிருந்த மற்ற சிறுவர்களையும் அழைத்து தன்னைச் சூழ நிற்கவைத்துக்கொண்டு அங்கே கூடியிருந்த மக்களைப் பார்த்துதீட்டு என்னும் கருத்தாக்கமே பொய்யானது. ஒருவரைத் தொடுவதாலோ, ஒருவரிடம் வாங்கி உண்பதாலோ தீட்டு வருவதில்லை. நீங்கள் தீட்டு பற்றிய செய்திகளை நம்பும் பழக்கத்தை முதலில் உதறுங்கள். சாதி வேறுபாடுகளை மறந்து அனைவரோடும் சமத்துவத்தோடு பழகுங்கள்என்று சொன்னார். அதைத் தொடர்ந்து ஆலயப்பிரவேசத்தின் அவசியம் பற்றி உரையாற்றினார்.

தமிழகப்பகுதிகளில் ஆலயப்பிரவேசப் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்த தருணத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் 12.11.1935 அன்று சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட எல்லா இந்து ஆலயங்களும் தாழ்த்தப்பட்டோர்களுக்குத் திறந்துவிடப்படுவதாக அறிவித்தது. தமிழ்நாட்டிலும் இதுபோன்றதொரு ஆலயப்பிரவேசம் உடனடியாக நிகழவேண்டுமென பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் விரும்பினார்.  ஆயினும் சாதிக்கட்டுப்பாடுகளை மீறி ஆலயங்களுக்குள்ளே செல்ல தாழ்த்தப்பட்டவர்களிடையில் எழுந்த தயக்கத்தை நீக்கமுடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக திறந்துவிடப்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான கோவில்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை அழைத்துச் சென்று வழிபடவைத்தால், ஒருவேளை அவர்கள் மனத்திலிருக்கும் அச்சம் விலகக்கூடும் என்னும் நம்பிக்கையோடு மதுரையைச் சேர்ந்த வைத்தியநாத ஐயர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதன்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து எண்ணற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள் வரவழைத்து திருவிதாங்கூருக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டு, அச்செய்தி எல்லாக் கிளைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்பார்த்தபடி கிருஷ்ணசாமிக்கும் அந்த அழைப்பு வந்தது. கிருஷ்ணசாமி தன் வளர்ப்புச்சிறுவனுக்கும் பேருந்தில் இடம் வேண்டும் என்று கடிதம் எழுதித் தெரிவித்தார். திருச்சி அரிஜன சேவா சங்கக்கிளை கூடுதலாக இடமொதுக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது. தன் வளர்ப்புச்சிறுவனுக்கு இடம் கொடுக்காவிட்டால் தன்னால் வர இயலாதென்றும் தனக்கு ஆலயப்பிரவேசம் அவசியமில்லை என்றும் தன் இடத்தை சிறுவனுக்குக் கொடுக்கலாம் என்றும் விரிவாக கடிதம் எழுதினார் கிருஷ்ணசாமி. வேறு வழியில்லாமல் சங்கம் இருவருக்குமே இடமொதுக்கிக் கொடுத்தது. ஆனால் புறப்படும் தினத்தன்று இன்னொரு தாழ்த்தப்பட்ட சிறுவனையும் அழைத்துக்கொண்டு வந்து அவனுக்கும் இடம் தரவேண்டும் என்று வாதாடத் தொடங்கினார் கிருஷ்ணசாமி. உண்மையிலேயே வண்டி நிறைந்துவிட்டதால் கூடுதல் இருக்கையை ஒதுக்கித் தர இயலாத சூழலில் அமைப்பாளர்கள் தவித்தார்கள். நல்லவேளையாக, அங்கு வந்த வைத்தியநாத ஐயர் அங்கிருந்த நெருக்கடியான சூழலைப் புரிந்துகொண்டு அச்சிறுவனை தன்னோடு அழைத்துவருவதாகச் சொல்ல மற்றவர்களோடு பிரயாணம் இனிதே தொடங்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த ராமசாமி ஐயரே நேரில் வந்து ஆலயப்பிரவேசக்குழுவை வரவேற்று கோவில்களைச் சுற்றிப் பார்க்கவும் வணங்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். ஒருநாள் சித்திரைத்திருநாள் மகாராஜாவும் அனைவரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்.

திரும்பும் பயணத்தில் உத்தமபாளையம் கோகிலாபுரம் ஆசிரமம் வழியாக அவர்கள் வந்தார்கள். இங்கு தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக ஜி.டி.பிர்லாவின் நிதியுதவி பெற்று தொடங்கப்பட்ட  விவசாயப்பண்ணையும் கோழிப்பண்ணையும் வெற்றிகரமான முறையில் இயங்கிவந்ததையும் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

திருவிதாங்கூர் பயணத்துக்குப் பிறகு ஆலயப்பிரவேசம் தொடர்பாக பல இடங்களில் சொற்பொழிவாற்றினார் கிருஷ்ணசாமி. ஆலயப்பிரவேசத்துக்கு எதிரான வைதிகர்கள் அனைவரும் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு எதிரில் ஒன்றாகத் திரண்டு கூட்டம் போட்டு பேசி கேள்விகளை அடுக்குவதும், மானாமதுரை வைகையாற்று மணற்பரப்பில் ஆலயப்பிரவேசத்துக்கு ஆதரவானவர்கள் திரண்டு கூட்டம் போட்டு அக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அடுக்குவதும் ஒவ்வொரு நாளும் நடைபெற்றன. இயல்பிலேயே வாதாடும் திறமை மிக்க வழக்கறிஞரான கிருஷ்ணசாமி, அதே திறமையோடும் நுட்பத்தோடும் வைதிகர்களின் கேள்விகளுக்குத் தக்க பதில்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணற்ற ஆண்டுகளாக ஆலயங்களுக்குச் செல்லாதவர்களாகவே இருப்பவர்கள் என்பதால் ஆலயதரிசனத்துக்கு அவர்கள் வாழ்வில் முக்கியத்துவமில்லை என்றும் அதனால் அவர்களுக்கொன்றும் பெரிய இழப்பில்லை என்றும் சொல்லப்பட்ட வாதத்துக்கு எதிராக கிருஷ்ணசாமி நந்தனாரின் பக்தியையும் திருப்பாணாழ்வாரின் பக்தியையும் சுட்டிக்காட்டி, அவற்றையெல்லாம்  படித்தவர்கள் பாமரர்களாக பேசுவதே ஆச்சரியமாக இருக்கிறதென்று சொன்னார். தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயவருகை பக்திவட்டம் விரிவடைவதற்கான ஒரு வழி. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குல் வருவதால் வைதிகர்களுக்கு என்ன இழப்பு வந்துவிடப்போகிறது என்று கேட்டார்.

தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்துக்குள் நுழைவதால் என்ன லாபத்தை அடையப்போகிறார்கள் என்னும் கேள்விக்கு இதுவரை வைதிகர்கள் என்ன லாபம் அடைந்தார்களோ அதையே தாழ்த்தப்பட்டவர்களும் அடைவார்கள் என்றும் இந்து மதத்தில் ஒரு பகுதியாக விளங்குகிறவர்களை கோவிலுக்குள் நுழையவிடக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் வந்தால் இறைவன் வெளியேறிவிடுவான் என்னும் வைதிகர்களின் கூற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழங்கதை என்று ஒதுக்கித் தள்ளினார் கிருஷ்ணசாமி. அறிவுள்ளவர்கள் யாரும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொன்னார். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் வந்தால் இறைவன் வெளியேறிவிடுவான் என்றால் இறைவனை விரட்டும் சக்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது என்றும் இறைவனைவிட தாழ்த்தப்பட்டவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் பொருள்படுவதை வைதிகர்கள் ஏன் உணரவில்லை என்று கேட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களின் உணவுப்பழக்கத்தைச் சுட்டிக்காட்டி, அது இந்து மதம் வலியுறுத்தும் நெறிமுறைகளுக்கு உகந்ததல்ல என்று சுட்டிக்காட்டி மறுக்கும் வைதிகர்களுக்கு கிருஷ்ணசாமி அமைதியாக அப்பர் பாடிய தேவாரப்பாட்டின் வரிகளையே பதிலாக எடுத்துரைத்தார். ’ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரேஎன்னும் வரிகளை வைதிகர்கள் மறந்தது ஏன் என்று கேட்டார். உணவுப்பழக்கம் என்பது ஒவ்வொருவரும் வாழும் சூழலைப் பொறுத்த விஷயமே தவிர, அதை முன்வைத்து உயர்வு தாழ்வு கற்பிப்பது பிழையான பார்வையென்றும் சொன்னார்.

நம் முன்னோர் வகுத்த பிரிவுகளை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டுமென்று கூறும் வைதிகர்களின் கூற்றையும் கிருஷ்ணசாமி எதிர்த்தார். வர்ணங்கள் என்பது பிறப்பினால் அல்ல, செய்யும் தொழில்களால்தான் என்னும் கீதையின் வரியை அவர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். பழைய பிரிவுமுறைகளை வைத்துப் பார்த்தால் நம் தேசத்தை இப்போது காப்பவர்கள் ஆங்கிலேயர்களே தவிர, சத்திரியர்கள் அல்ல என்றும் நம் வணிகத்தை வைத்திருப்பது பிறநாட்டு வியாபாரிகளே தவிர வைசியர்கள் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார். வைதிகர்கள் முன்வைக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் சொல்வதெல்லாம் பொருளற்ற வாதமே, காலப்போக்கில் எல்லாமே மாற்றம் பெறுவதை யாராலும்  தடுக்கமுடியாது என்று எடுத்துரைத்தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு படிப்பு வராது என்பதும் சமஸ்கிருதத்தை அவர்களால் உச்சரிக்க முடியாது என்றும் சொல்லும் வைதிகர்களின் கூற்றுக்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை என்றார் கிருஷ்ணசாமி. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்பது கீதையின் வரி. ஒரு மனிதனுக்கு படிப்பு வரும், இன்னொருவனுக்கு வராது என்று கூறுவது ஒவ்வொருவரிடையிலும் வாழும் இறைவனையே பழிப்பதற்கு நிகரான பேச்சாகும் என்று சுட்டிக்காட்டினார். சிதம்பரத்தில் வாழும் சகஜானந்தரைப்பற்றியும் சட்டம் படித்த அம்பேத்கரைப்பற்றியும் எடுத்துரைத்து அவர்களுக்கு இணையான ஞானம் உள்ளவர்கள் யாருமில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயங்களைத் திறந்துவிட வேண்டிய அவசியம் நெருங்கிவிட்டதை உணர்ந்து வைதிகர்கள் செயல்படவேண்டுமென்று இடித்துரைத்தார். கிருஷ்ணசாமியின் வாதங்கள் இராமநாதபுரம் மாவட்டமெங்கும் எதிரொலித்தன. அவரும் பல கிராமங்களுக்குச் சென்று மேடையேறி பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ணசாமியின் வளர்ப்புமகன் 1941ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசாங்கத்தேர்வில் தமிழ்ப்பாடத்திலும் அறிவியல் பாடத்திலும் தமிழ் மாகாணத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றான். மேற்படிப்புக்காக திருச்சியில் உள்ள தேசியக்கல்லூரியில் அவன் சேர்ந்தான். திருச்சியில் தக்கர்பாபா மாணவர் விடுதியில் அவன் தங்குவதற்கான உதவிகளை இராஜாஜி செய்துகொடுத்தார்.

அவன் நல்லமுறையில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் புறப்படும் நாளன்று கிருஷ்ணசாமியின் மனைவி ருக்குமணி அம்மாளின் மனத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதுவரை கணவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் அச்சிறுவனின் நடமாட்டத்தை பொறுத்துக்கொண்ட  அவர் அன்று உண்மையிலேயே மனம் மாறினார். கல்லூரியில் சேர அவன் விடைபெற வந்த தினத்தன்று அவர் மனத்தில் அந்த மாற்றம் ஏற்பட்டதுஅன்றுமுதல் அந்த மனமாற்றம் நிரந்தரமாகிவிட்டது. அவர் மனத்திலிருந்து தீண்டாமை என்னும் மாசு விலகிவிட்டது. தன் காலில் விழுந்து வணங்கிய அந்தப் பிள்ளையை அவர் தொட்டுத் தூக்கி நிறுத்தி ஆசி வழங்கினார். அன்று தன் கணவருக்கு அருகிலேயே அவனையும் அமரவைத்து உணவுண்ணச் செய்தார். அன்றுமுதல் அந்த வீட்டில் எல்லா இடங்களிலும் சுதந்திரமாகச் சென்றுவர எவ்விதமான தடையும் இல்லாதவனானான் சம்பந்தம்.

கல்விக்காக வெளியூருக்குச் செல்லும் சம்பந்தத்துக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். தனக்கு ஐந்து உறுதிமொழிகளை அளிக்கும்படி அவனிடம் கேட்டுக்கொண்டார்.

எப்போதும் மது அருந்தக்கூடாது,

எந்தச் சூழ்நிலையிலும் மதம் மாறக்கூடாது.

எப்போதும் கதர் அணியவேண்டும்.

ஒருபோதும் லஞ்சம் வாங்கக்கூடாது.

நாட்டுப்பற்றுடன் மக்களுக்குப் பயன்படும் செயலில் கவனம் செலுத்தி, அதை நேர்மையான வழியில் செய்து முடிக்கவேண்டும்.

கிருஷ்ணசாமியின் விருப்பத்துக்கேற்ப ஐந்து உறுதிமொழிகளையும் வழங்கிய சம்பந்தம் தன் வாழ்நாள் முழுதும் அவற்றைக் கடைபிடிப்பதாக வாக்களித்துவிட்டு அவரை வணங்கி ஆசி பெற்று திருச்சிக்குப் புறப்பட்டான். சம்பந்தத்தின் வெற்றிப்பயணம் மகிழ்ச்சியளித்ததுபோலவே தன் மனைவியிடம் கண்ட முழு மனமாற்றமும் அவருக்கு மகிழ்ச்சியளித்தது. ஊராரின் மனமாற்றம், மனைவியின் மனமாற்றம் என ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நடைபெற்றதைக் கண்டு தன் பிறவிக்கான கடமையை ஆற்றியதைப்போன்ற மகிழ்ச்சியில் மூழ்கினார் கிருஷ்ணசாமி. மதத்தின் பெயரால் உயர்சாதியினர் இழைத்த பாவங்களைப் போக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட குடும்பத்துக்குத் துணையாக நின்று உயர்வுபெறவைத்து பிராயச்சித்தம் செய்துகொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த காந்தியடிகளை மனத்துக்குள் நினைத்துக்கொண்டார்.

காந்தியடிகளின் சொல்லே வாழ்நாள் முழுதும் கிருஷ்ணசாமிக்கு செயலூக்கம் அளிக்கும் விசையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றமளிக்கும் செயல்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் செய்துகொண்டே இருந்தார். மானாமதுரையிலும் அக்கப்பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாலும் அவர்கள் ஏதோ சில்லறைக் காரணங்களுக்காக படிப்பை பாதியிலேயே கைவிடுவதைப் பார்த்து அவர் மிகவும் மனவருத்தம் கொண்டார். அத்தகையோரைப்பற்றிய தகவல் கிடைத்தால் கிருஷ்ணசாமி தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துப் பேசி, அவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார்.

தொழிற்கல்வி படிக்க விருப்பமுள்ள மாணவர்களை சென்னைக்கு அனுப்பிவைத்து தக்கர்பாபா வித்தியாலத்தில் சேர்ந்து படிப்பதற்குத் தேவையான உதவிகளைப் புரிந்தார். அவர்கள் படிப்பை முடித்ததும் வேலையில் சேர்ந்து பொருளீட்டத் தொடங்கினார்கள். அவர்கள் வழியாக அந்தக் குடும்பம் மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கியது. கிருஷ்ணசாமி வழியாக முன்னேறத் தொடங்கி, தன் சகோதரர்களைப் படிக்கவைத்து உயர்த்திய எண்ணற்ற இளைஞர்கள் மானாமதுரையைச் சுற்றியும் இருந்தனர்.

கதராடைகளை உற்பத்தி செய்யவும் பனையோலை தொழிலைச் செய்யவும் தனித்தனியான தொழிற்கூடங்களை மானாமதுரையில் உருவாக்கி எண்ணற்ற தாழ்த்தப்பட்டோரின் வருமானத்துக்கு வழிசெய்து கொடுத்தார் கிருஷ்ணசாமி.

திருச்சியில் படித்துவந்த கிருஷ்ணசாமியின் வளர்ப்பு மகன் பட்டப்படிப்புத் தேர்வில் வெற்றி பெற்றதுமே  வேலை தேடி அரசாங்கத்துக்கு விண்ணப்பித்தார். அவருடைய கல்வித்தகுதிக்கு பம்பாய் நகரில் உயர்ந்த பதவி கிடைத்தது. மகிழ்ச்சியான அச்செய்தியைச் சொல்லிவிட்டு வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு செல்வதற்காக ஊருக்குத் திரும்பிவந்தார். அக்கிரகாரத்தைச் சேர்ந்த பலரும் திண்ணையில் கிருஷ்ணசாமியுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த நேரம் அது. ,மிடுக்காக உடைகளை உடுத்திவந்து கிருஷ்ணசாமியின் காலில் விழுந்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டு ருக்குமணி அம்மையாரைச் சந்திக்க வீட்டுக்குள் சென்ற இளைஞனைப் பார்த்துக் குழம்பிய ஊர்க்காரர்கள் கிருஷ்ணசாமியிடமே அவர் யாரென்று கேட்டார்கள். பம்பாயைச் சேர்ந்த பெரிய அரசு அதிகாரி என்று முதலில் சொல்லி அவர்களிடையில் திகைப்பை ஏற்படுத்திய கிருஷ்ணசாமி இறுதியில் அவரே தன்னுடைய வளர்ப்புமகனென்ற உண்மையைச் சொன்னார். அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி அவருடைய உயர்வைக் கேட்டு பாராட்டினர்.

பல தலைகளைக் கொண்ட நச்சுப்பாம்பென நம்மைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் தீண்டாமையை அழிக்க தன் இறுதிமூச்சு வரைக்கும் பாடுபட்டவர் காந்தியடிகள். அவருடைய சொற்களை தம் வாழ்க்கைக்கான கட்டளையென நினைத்து காலமெல்லாம் அதற்காகவே வாழ்ந்த தியாகிகள் பலர். ’மானாமதுரை காந்திஎன்றும்அரிஜன ஐயங்கார்என்றும் மக்களால் அழைக்கப்பட்ட கிருஷ்ணசாமியைப் போன்றவர்கள் தேசமெங்கும் நிறைந்திருந்தார்கள். ஒடுக்கப்பட்ட சகோதரர்களையும் சகோதரிகளையும் உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் ஆரத் தழுவிக்கொள்ள வேண்டுமென்றும் தம் ஆலயங்களுக்கும் வீடுகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் அழைத்துச்செல்ல வேண்டுமென்றும் அவர்கள் தொடர்ச்சியாக செய்த பிரச்சாரங்களும் சொன்ன சொற்களுக்கு எடுத்துக்காட்டாக தாமே வாழ்ந்துகாட்டிய விதமும்  நாட்டில் நல்லிணக்கச்சூழல் உருவாகக் காரணங்களாக இருந்தன.

(கிராம ராஜ்ஜியம் - ஆகஸ்டு 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )