இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராணி திலக்கிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தம் பள்ளியில் கதைப்புத்தகங்களை வாசிப்பதிலும் சொந்தமாக கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவமாணவிகளைப்பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நான் என் பள்ளிக்கூட நாட்களில் நான் விரும்பிப் படித்த வள்ளியப்பா கதைகளைப்பற்றியும் வாண்டுமாமா கதைகளைப்பற்றியும் அவற்றைப் படிக்கத் தூண்டிய என் ஆசிரியர்களைப்பற்றியும் என் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.
சின்ன
வயதில் ஓர் ஆசிரியரால் மாணவர்களின் நெஞ்சில் உருவாகும் விளைவுகள் எண்ணற்றவை. அவை ஒருவித
மாயத்தன்மை கொண்டவை. அந்த விளைவுகளோடு வளர்ந்தவர்கள் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.
ராணிதிலக் தாம் பணிபுரியும் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த
குமரசாமி நினைவு நூலகத்தில் ஏராளமான பழைய புத்தகங்களில் புதையல் இருக்கின்றன என்றும்
நான் குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் அந்நூலகத்தில் இருக்கின்றன என்றும் சொன்னார்.
அந்த
உரையாடலைத் தொடர்ந்து வாண்டுமாமாவைப்பற்றிய நினைவுகளிலேயே வெகுநேரம் மூழ்கியிருந்தேன்.
நான் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துமுடிக்கும் வரை எங்கள் பக்கத்துவீட்டில்
வசித்துவந்த அக்கா ஒருவருக்காக வார, மாத இதழ்களைக் கடைக்குச் சென்று வாங்கிவந்து கொடுத்துவந்தேன்.
அவர் படித்த பிறகு அவ்விதழ்களையெல்லாம் எனக்கும் படிப்பதற்குக் கொடுப்பார். அதுதான்
எனக்குக் கிடைக்கும் வெகுமதி.
அப்போதெல்லாம்
கல்கி இதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு சில பக்கங்களுக்கு வாண்டுமாமாவின் கைவண்ணத்தில் சித்திரக்கதை
தொடர்ந்து வெளிவரும். அக்கதையை நான் மிகவும் விரும்பிப் படிப்பேன். அதைத் தொடர்ந்து
அவர் எழுதிய ஓநாய்க்கோட்டை, அதிசய நாய், மந்திரச்சலங்கை, கரடி மனிதன் போன்ற கதைப்புத்தகங்களையெல்லாம்
படித்தேன். அந்த விசித்திரமான தலைப்புகளின் காரணமாகவே அக்கதைகள் இன்னும் என் நினைவில்
தங்கியிருக்கின்றன.
அடுத்தநாளே
ராணிதிலக்கிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. வாண்டுமாமா எழுதி 1961இல் அருணோதயம்
வெளியீடாக வெளிவந்த ‘அதிசயவீணை’ என்னும் புத்தகத்தைத் தம் நூலகத்தில் கண்டெடுத்ததாகக்
குறிப்பிட்டார். இதுவரை அவர் எழுதியதாக வெளிவந்திருக்கும் புத்தகப்பட்டியலில் இடம்பெறாத
புத்தகம் அது என்பதால் அவர் குரலில் வெளிப்பட்ட மகிழ்ச்சி கூடுதலாக இருந்தது. அதற்கு
ஒருசில ஆண்டுகள் முன்பாக அந்தக் கதை சுதேசமித்திரன் இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது.
அந்தத் தொடர் அத்தியாயங்களையும் அவர் கண்டுபிடித்துவிட்டார். எனக்கு அந்தக் கதையை உடனடியாகப்
படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ராணி திலக்கிடம் என் ஆவலைத் தெரியப்படுத்தினேன்.
தவ வர்ஷினி என்னும் மாணவி அப்புத்தகத்தை ஸ்கேன்
செய்துவிட, ராணி திலக் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே 60 பக்கமுள்ள அந்த ஸ்கேன் பிரதியை
எனக்கு அனுப்பிவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே நானும் அந்தக் கதையைப் படித்துவிட்டேன்.
அந்தக் கதையைப்பற்றி அவரிடம் மீண்டும் பேசிக்கொண்டிருந்தபோதுதான் வரும் 21.04.2025
அன்று அவருடைய நூற்றாண்டு நாள் என்று அவர் குறிப்பிட்டார். என்ன ஒற்றுமை என்று நினைத்துக்கொண்டேன்.
அதிசய
வீணை ஒரு துப்பறியும் கதை வகைமையைச் சேர்ந்த படைப்பு. சிறுவர் சிறுமியரை மட்டுமே முக்கியமான
பாத்திரங்களாக உலவவிட்டு மர்மம் நிறைந்த ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார் வாண்டுமாமா.
அவருடைய பிற படைப்புகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சுவாரசியமாக வாசிக்கமுடிந்ததைப்போலவே
இன்றும் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது.
ஒரு வீணை
எப்படி அதிசய வீணையாக இருக்கமுடியும் என்னும் மர்மத்தையும் ஒரு பெரிய குடும்பத்தில்
நிலவிய மர்மத்தையும் கச்சிதமாக இணைத்து கதையைக் கட்டமைத்திருக்கிறார் வாண்டுமாமா. பத்து
அத்தியாயங்களைக் கொண்டிருக்கும் இக்கதையில்
ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுவாரசியமாகக் கடந்துசெல்லும் விதத்தில் கதையம்சங்களை வளர்த்துக்கொண்டே
சென்றிருக்கிறார் வாண்டுமாமா. இறுதி அத்தியாயத்தில் எல்லா மர்ம முடிச்சுகளையும் அவிழ்த்து
மரபான வகையில் மகிழ்ச்சியோடு முடிவடையும்படி செய்திருக்கிறார். மூத்த வயதுடையவர்களுடைய
வெளிப்பாடுகளைக் குறைவாகவும் சிறுவர் சிறுமியரின் வெளிப்பாடுகளை அதிகமாகவும் எழுதியிருக்கும்
கட்டமைப்பு சிறார்களின் வாசிப்பு ஆர்வத்துக்கு இசைவாக உள்ளது.
கடற்கரையை
ஒட்டி ஒரு சிறிய குன்று இருக்கிறது. அந்தக் குன்றில் ஒரு காலத்தில் கோட்டை கட்டி வாழ்ந்தது
ஒரு ஜமீன் குடும்பம். அந்தக் கோட்டையின் பெயர் சாமுண்டிக்கோட்டை. ஜமீன்தாரர் இறந்துபோனாலும்
அவருடைய மனைவி மாணிக்கவல்லி இன்னும் உயிரோடு வாழ்ந்துவருகிறார். தள்ளாமை காரணமாக அந்தக்
கோட்டையில் அவர் மேல்தளத்தில் வசிக்கிறார். நடமாட்டம் எதுவும் இல்லை. நடமாட்டம் இல்லாததால்
அவரை நேரில் பார்த்தவர்களே இல்லை. எல்லோருக்குமே
அவருடைய பெயர் மட்டுமே தெரியும். அவரோடு வேலப்பன் என்னும் காவல்காரரும் இருக்கிறார்.
அவர் மட்டும் அவ்வப்போது மேல்தளத்துக்குச் சென்று மாணிக்கவல்லி பாட்டியின் தேவைகளை நிறைவு செய்துவிட்டு வருகிறார்.
அந்த
ஊரில் பத்திரிகைக்கு செய்திகள் அனுப்பும் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர்
ரகுபதி. அவருக்கு விச்சு, சரசு, ராமு என மூன்று
பிள்ளைகள். தொலைவிலிருக்கும் குன்றையும் கோட்டையையும் காட்டி அவ்வப்போது அவர் சொல்லும்
கதைகளின் காரணமாக, அப்பிள்ளைகள் மனத்தில் கோட்டை சார்ந்து ஓர் ஆர்வம் பிறக்கிறது.
மாணிக்கவல்லிப்
பாட்டியின் கணவர் இறந்ததைப்போலவே அவர் பெற்ற பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். ஆனால்
பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒருவர் மலேயா சென்று வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அவர் பெயர் கோவிந்தசாமி. இன்னொருவர் பெயர் ராஜ்குமார். சென்னைக்குச் சென்று திரைப்படத்துறையில்
பெரிய நடிகராக வாழ்ந்துவருகிறார். இன்னொரு பேரனும் அவருக்கு உண்டு. அவர் பெயர் வரதராஜன்.
ஆனால் இளம்வயதிலேயே அவர் பாட்டியோடு ஏற்பட்ட முரண்களின் காரணாமாக வட இந்தியா பக்கம்
சென்றுவிட்டார். அவர் எங்கே இருக்கிறார், என்ன தொழில் செய்கிறார் என்பது யாருக்கும்
தெரியவில்லை.
மாணிக்கவல்லி
பாட்டிக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கோவிந்தசாமியும் ராஜ்குமாரும் தம்
பிள்ளைகளோடு வந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் சேகர் என்னும் சிறுவனை அழைத்துக்கொண்டு
மல்லாரி என்பவர் பூனா நகரத்திலிருந்து புறப்பட்டு வந்து, தாம் வரதராஜனுடைய நண்பன் என்றும்
அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாகவும் அவருடைய பிள்ளையை ஒப்படைப்பதற்காக வந்திருப்பதாகவும்
தெரிவிக்கிறார்.
அந்தப்
புள்ளியிலிருந்து குழப்பம் தொடங்குகிறது. வரதராஜன் முகத்தையே அனைவரும் மறந்திருக்கும்
நிலையில் அவனுடைய மகனை ஏற்றுக்கொள்வதுபற்றி எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கிறது.
மாணிக்கவல்லிப் பாட்டி தம் நூற்றாண்டு நாளில் சாமுண்டிக்கோட்டையின் சொத்துப்பங்கீடு
தொடர்பாக ஓர் அறிவிப்பைச் சொல்ல இருக்கும் நிலையில் புதிய சிறுவனின் வரவு ஒரு சிக்கலை
ஏற்படுத்துகிறது. மாணிக்கவல்லியின் வயது காரணமாக, அதிர்ச்சி தரும் தகவல் எதையும் அவரோடு
பகிர்ந்துகொள்ள வேண்டாம் என எடுத்த முடிவின் காரணமாக, அந்தப் புதிய சிக்கலை அவரிடம்
தெரிவிக்காமலேயே தீர்வு காண அனைவரும் முயற்சி செய்கிறார்கள்.
கடற்கரைக்குக்
குளிக்கவந்த ராஜ்குமார் அங்கு சந்தித்த விச்சு, சரசா, ராமு மூன்று சிறுவர்களையும் கோட்டைக்குள்
தனித்திருக்கும் தன் மகள் சகுந்தலாவோடு விளையாட்டுத்துணையாக இருக்கும் பொருட்டு அழைப்பு
விடுக்கிறார். அதனால் பிள்ளைகளும் கோட்டைக்குள் செல்கிறார்கள்.
பெரியவர்கள்
சொத்து பிரிவினை தொடர்பாக உரையாடிக்கொண்டிருக்கும் நேரங்களில் சிறுவர்கள் கோட்டைக்குள்
விதவிதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்கிறார்கள்.
அந்தக்
கோட்டையின் முகப்பில் அழகியதொரு பெட்டகம் இருக்கிறது. அந்தப் பெட்டகத்தில் ஒரு பெண்ணின் சிற்பம் இருக்கிறது.
வீணை வாசிப்பதுபோல அச்சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெண்ணின் கைவிரல்களோடு ஒட்டியிருக்காமல்
கைகளிலிருந்து விலக்கியெடுக்கவும் மீண்டும் வைக்கவும் செய்யத்தக்க வகையில் அந்த வீணை
தனி உறுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதான் அச்சிற்பத்தின் சிறப்பு. வீட்டைவிட்டு
வெளியே செல்லும் கோபத்தில் வரதராஜன் அந்தச் சிற்பத்தில் கைகளிலிருந்த வீணையை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
இளமைக் கோபத்தில் வெளியேறிய அவன் என்றாவது ஒருநாள் அந்த வீணையோடு வந்து தன் அடையாளத்தை
நிறுவிக்கொள்வான் என பாட்டி வெகுகாலமாகக் காத்திருக்கிறாள். அது நிகழவில்லை. வரதராஜனின்
மகன் என ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு வந்தவனின் கையிலும் அந்த வீணை இல்லை. வீணை இல்லாமல்
வந்தவனை வாரிசு என எப்படி ஏற்றுக்கொள்வது என அனைவரும் குழம்புகிறார்கள்.
விழாவுக்கு
இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருக்கின்றன என்னும் நிலையில் சாமுண்டிக்கோட்டைக்கு
அருகில் ஒரு ரயில்விபத்து ஏற்படுகிறது. அதில் பயணம் செய்த சிலர் மரணமடைந்துவிடுகின்றனர்.
சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அரைகுறை நினைவோடு இருக்கும்
ஒருவர் தன்னை வரதராஜன் என்று சொல்லிக்கொள்வதாகவும் அவருடைய கையில் ஒரு வீணை இருப்பதாகவும்
காவல்துறை அதிகாரி தகவல் சொல்கிறார்.
இது சிக்கலை
மேலும் தீவிரமாக்குகிறது. வீணை இல்லாமல் வந்திருப்பவர், வீணையோடு வந்திருப்பவர் இருவரில்
யார் உண்மையான வாரிசு என்பது புதியதொரு முடிச்சு உருவாகிறது. சிற்சில இறுதிக்கட்ட திருப்பங்களுக்கும்
சுவாரசியமான நிகழ்ச்சிகளுக்கும் பிறகு அந்த முடிச்சை அவிழ்த்து, இறுதியான வாரிசு தன்னை
நிறுவிக்கொள்கிறான்.
வீணையைக்
கொண்டுவருபவன் வாரிசு என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, அந்த வீணை என்ன செய்யும் என்னும்
ரகசியத்தைத் தெரிந்திருப்பவனே உண்மையான வாரிசு
என பேச்சு நீள்கிறது. அந்த ரகசியம் பாட்டிக்கும் வரதராஜனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று
என்பதால், இறுதிக்கட்டமாக அந்த அம்சமே எல்லா மர்மமுடிச்சுகளையும் அவிழ்த்து உண்மையை
நிலைநாட்ட உதவியாக இருக்கிறது.
அந்த
வீணையை பொம்மையின் கைகளில் கச்சிதமாக வைப்பதன் வழியாக பொம்மையின் வடிவம் முழுமையடையும்
என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பொம்மையின் சிறப்பு அத்தோடு முடியவில்லை. அந்தப் பொம்மையின்
பாதத்தில் ஒரு விசேஷ புள்ளி இருக்கிறது. அதைத் தொட்டு இயக்கும் வகையில் அது அமைந்துள்ளது.
அதைத் தொட்டு மூன்றுமுறை திருப்பியதும் வீணையிலிருந்து இனிய நாதம் எழுந்து பரவுகிறது.
அதனால்தான் அது அதிசயவீணை. அந்த அதிசயத்தைச் செய்து, சாமுண்டிக்கோட்டையில் வீணையின்
நாதம் கேட்கும் வகையில் செய்கிறான் பூனாவிலிருந்து வந்த சிறுவன். அதுமட்டுமன்றி, இறந்துபோன
தன் தந்தையார் தன்னிடம் சொன்ன குடும்பக்கதைகளையும் பாட்டியிடம் பகிர்ந்துகொள்கிறான்.
அந்தத்
துப்பறியும் வேலையிலும் திருடர்களைக் கண்டுபிடிக்கும் வேலையிலும் காவல்துறையினருக்கு கோட்டையில் இருக்கும் மற்ற சிறுவர்கள் தீரமுடன்
செயல்பட்டு துணையாக இருக்கிறார்கள். முதல் வரியில் தொடங்கிய சுவாரசியமும் ஆவலும் இறுதிவரி வரைக்கும் கிஞ்சித்தும் குறைந்துவிடாதபடி
எழுதியிருக்கிறார்
வாண்டுமாமாவின்
கதையுலகம் என்னும் அமுதக்கடலில் ’அதிசயவீணை’ ஒரு துளிமட்டுமே. அந்தக் கடலின் சுவையை அறிய அவருடைய கதையுலகத்தில்
மூழ்கி எழுவது மட்டுமே ஒரே வழி. குழந்தைகளின்
வாசிப்புக்கு உரிய வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய மாமேதை அவர்.
அவருடைய நூற்றாண்டு தினத்தில் இப்புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு என்பது, எனக்குக்
கிடைத்த நற்பேறு.
(புக் டே இணைய தளத்தில் 18.04.2025 அன்று வெளியானது)