’இலங்கை ஒலிபரப்புக் கூட்டுறவு ஸ்தாபனம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே என் நினைவுக்கு வரக்கூடிய முதல் பெயர் பி.எச்.அப்துல் ஹமீத். அக்காலத்தில் அவர் வானொலியில் பேசும்போதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கமாட்டாரா என்று தோன்றாத நாளே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய தெளிவான உச்சரிப்பும் வெண்கலக்குரலும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். சமீபத்தில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் தலைப்பில் அவருடைய தன்வரலாற்று நூல் அ.முத்துலிங்கத்தின் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் கைக்குக் கிடைத்ததும் ஒரே நாளில் படித்துவிட்டேன்.
வானொலி நிலையத்துக்கும் தனக்கும் ஏற்பட்ட தொடர்பு எப்படி தற்செயலாக
உருவானது என்று தொடக்கப்பகுதியில் ஒரு புனைகதைக்கே உரிய சுவாரசியத்தோடு எழுதியிருந்தார்
ஹமீத். அப்போது அவர் பள்ளிச்சிறுவன். வானொலியில் ஒலிபரப்பப்படும் சிறுவர் மலர் நிகழ்ச்சியைக்
கேட்கும் ஆர்வம் கொண்டவன். ஆனால் அவருடைய வீட்டில் வானொலிப்பெட்டி இல்லை. அதனால் அவரால்
தொடர்ச்சியாக வானொலி நிகழ்ச்சியைக் கேட்க வாய்ப்பு அமையவில்லை. நண்பர்கள் வீட்டுக்குச்
சென்று கேட்பதை வாடிக்கையாக வைத்துக்கொண்டார்.
சிறுவர் மலர் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு தொடர்ச்சியாகக் கடிதம்
எழுதும் சிறுவர்களில் ஐந்து பேருக்கு வானொலி நிலையத்துக்கு வந்து நிகழ்ச்சி தயாராகும்
விதத்தை நேரில் பார்ப்பதற்கான அழைப்பை அனுப்பும் ஏற்பாடு அந்தக் காலத்தில் இருந்தது.
அத்தகு அழைப்புக்கடிதமொன்று ஒருமுறை ஹமீதின் நண்பர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அவருக்குக்
கடிதம் எதுவும் வரவில்லை. எனினும் நண்பர்களோடு சேர்ந்து அவரும் வானொலி நிலையத்துக்குச்
சென்றுவிடுகிறார். ஐந்து பேர் வரவேண்டிய இடத்தில் ஆறாவதாக வந்தவன் வெளியே செல்லவேண்டும்
என்று சொல்லிவிட்டால் உடனே வெளியேறிவிட வேண்டும் என்னும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால்,
அச்சிறுவர்கள் ஹமீதையும் தன்னோடு அழைத்துச் செல்கின்றனர்.
வானொலி நிலையத்துக்குள்ளே பல தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.
அவற்றையெல்லாம் அவர்கள் வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர். அன்று ஒரு சிறுவர் நாடக
ஒத்திகையும் பதிவும் ஓர் அறையில் நடைபெறுகிறது. அந்த ஒத்திகைக்கு வரவேண்டிய ஒரு சிறுவன்
வரவில்லை. தயாரிப்புக்குழுவினர் பதற்றத்தில் இருக்கின்றனர். பொருத்தமான ஒரு சிறுவனை
எங்கே போய் தேடுவது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அப்போது அறைக்கு
வெளியே நின்றிருந்த ஆறு சிறுவர்களைப் பார்த்த ஒரு கலைஞர் ஒவ்வொருவராக தனியே அழைத்துச்
சென்று உரையாடல் பகுதியைக் கொடுத்து படித்துக் காட்டச் சொல்கிறார். ஒருவருடைய உச்சரிப்பும்
அவர் எதிர்பார்த்த விதத்தில் இல்லை. ஆனால் ஆறாவதாக அழைத்துச் செல்லப்பட்ட ஹமீத் படித்த விதமும்
ஏற்ற இறக்கமுடன் அமைந்த உச்சரிப்பும் அக்கலைஞரைப் பெரிதும் கவர்ந்துவிடுகின்றன. உடனே
ஹமீதை மட்டும் பதிவு அறைக்குள் அழைத்துச் சென்று நாடகத்தில் பாத்திரம் ஒதுக்கிக்கொடுத்து
நடிக்கவைத்துவிடுகிறார்.
தொடர் நாடகம் என்பதால் ஒவ்வொரு வாரமும் ஹமீத் வானொலி நிலையத்துக்குச்
செல்ல வேண்டியிருந்தது. அவர் குரலுக்குக் கிடைத்த வரவேற்பால் அந்த நாடகத்துக்குப் பிறகும்
அவரைத் தேடி வாய்ப்புகள் வந்தபடியே இருந்தன. எதிர்பாராத விதமாக, படிப்பைத் தொடர்ந்து,
அவரே ஓர் அறிவிப்பாளராக அந்த வானொலி நிலையத்துக்கு வந்துவிடுகிறார். அவர் விரும்பிய
அறிவிப்பாளர் பணியை தன் பணிக்காலம் முழுதும் ஈடுபாட்டோடு செய்து ஓய்வுபெற்றார் ஹமீத்.
இப்படி தற்செயலாக நிகழும் திருப்பங்கள் மீது எனக்கு எப்போதும்
ஓர் ஈடுபாடு உண்டு. அப்படி என் வாழ்விலும் நண்பர்கள் வாழ்விலும் நிகழ்ந்த திருப்பங்கள்
ஏராளமானவை. அவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள நான் ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஒருநாள்
விட்டல்ராவைச் சந்திக்கச் சென்றபோது அறிவிப்பாளர் ஹமீத் அவர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட
திருப்பத்தைப்பற்றி விரிவாகச் சொன்னேன். அவரும் அதை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டார். பிறகு “நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை பாவண்ணன்.
நாம பல சமயங்கள்ல ரொம்ப தீவிரமா திட்டம் போட்டு பல விஷயங்களைச் செய்வோம். எதுவும் நடக்காது.
ஆனா என்னைக்கோ எதிர்பாராத ஒரு நாள்ல யாரோ ஒருத்தரால தற்செயலா ரொம்ப நல்லா நடந்துடும்.
நம்மால புரிஞ்சிக்க முடியாத ஒரு விசித்திரம் அதுல இருக்குது” என்றார்.
சில கணங்கள் தனக்குள்ளாகவே யோசனையில் மூழ்கியிருந்த விட்டல்ராவ்
“என் வாழ்க்கையிலயும் பல விஷயங்கள் தற்செயலா நடந்திருக்குது பாவண்ணன். பல பேர் அப்படி
நடந்த தற்செயல்களைப்பத்தி சொல்லவும் கேட்டிருக்கேன்” என்றார்.
“எந்த மாதிரியான தற்செயல் சார்?” என்று ஆர்வத்தோடு கேட்டேன்.
அவர் அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல் “உங்களுக்கு வீணை எஸ்.பாலச்சந்தரைத் தெரியுமா?”
என்று கேட்டார்.
“நல்லாவே தெரியும் சார். அந்த நாள் ஒரு படம் போதுமே சார். அவருடைய
பெயர் தமிழ்த்திரைப்பட உலகத்துல என்னென்னைக்கும் நிக்கும். பொம்மை, நடு இரவில், மரகதம்னு
நல்ல நல்ல படங்களைக் கொடுத்தவர். அது மட்டுமில்லாம, பெரிய இசைக்கலைஞர். தமிழ்நாட்டுக்கே
தெரிஞ்ச ஆளுமை”
”ஆமாம். உண்மையிலேயே பெரிய மேதைதான் அவர். கடைசி காலத்துல பாபநாசம்
சிவனுக்கு அவருதான் ஆதரவா இருந்து பராமரிச்சாரு. நல்ல கருணையுள்ள மனிதர். நீங்க தற்செயல்
பத்தி சொன்னதும், எனக்கு தற்செயலா அவருடைய ஞாபகமும் அவர் சொன்ன ஒரு சம்பவத்துடைய ஞாபகமும்
வந்திடுச்சி.”
“சொல்லுங்க சார்” என்று நான் அவர் சொல்லவிருக்கும் கதையைக் கேட்பதற்கு
ஆர்வம் கொண்டேன்.
“இருங்க இருங்க. அதுக்கு முன்னால இன்னொரு விஷயத்தையும் சொல்லணும்.
அப்பதான் நான் எப்படி பாலச்சந்தர் சாரைத் தெரிஞ்சிகிட்டேன்ங்கறது உங்களுக்குப் புரியும்”
என்றார்.
நான் அமைதியாக அவர் உரையாடலைத் தொடங்குவதற்காகக் காத்திருந்தேன்.
”அந்தக் காலத்துல நான் மவுண்ட் ரோட் எக்சேஞ்ச்ல வேலை செஞ்சிட்டிருந்தேன். எக்சேஞ்சுக்கு வந்து போகறதுல அதிக அலைச்சல் இருக்கக்கூடாதுங்கறதுக்காக
பக்கத்துலயே தங்கறதுக்கு எடம் பார்த்தேன். அப்ப எங்க எக்சேஞ்சுக்கு எதிர்த்தாப்புல
வெள்ளைக்காரன் காலத்துல கட்டுன ஹாரிஸ் பிரிட்ஜ் இருந்தது. மவுண்ட் ரோட்டையும் புதுப்பேட்டையையும்
இணைக்கக்கூடிய பிரிட்ஜ். அதை ஒட்டி ட்ராம் போகற பாதை உண்டு. அதுக்குப் பின்னால ஒரு
பெரிய வீடு இருந்தது. லட்சுமின்னு ஒரு பிராமின் லேடிக்குச் சொந்தமான வீடு. கீழ்ப்பகுதி
முழுக்க அவுங்க இருந்தாங்க. மேல்பகுதியை தனித்தனி ரூமா பிரிச்சி எங்கள மாதிரியான ஆளுங்களுக்கு
வாடகைக்குக் குடுத்திருந்தாங்க. நான் போய் கேட்ட நேரம் அங்க பத்தாம் நெம்பர் அறை எனக்குக்
கிடைச்சிது. என் கூட அப்புன்னு ஒருத்தர் தங்கியிருந்தாரு.
அந்தக் காலத்துல பி அண்ட் டி டைரக்டர்கிட்ட பெர்சனல் அசிஸ்டண்ட்டா இருந்தாரு அவரு.
எனக்கு நல்ல ஃபிரண்டு. இப்ப அவருக்கு தொன்னத்திரெண்டு இருக்கும். இப்பவும் நாங்க ரெண்டுபேரும்
அப்பப்ப போன்ல பேசிக்குவோம்.”
“கும்பகோணத்துல இருக்கறாருன்னு சொல்வீங்களே, அவருதான?”
“ஆமாமாம். அவரேதான்”
”அந்த லட்சுமி அம்மாவுடைய புருஷன் நடுவயசுலயே இறந்துபோயிட்டாரு.
அதுக்கப்புறம் அவுங்க ஒரு முஸ்லிம் ஆள திருமணம் செஞ்சிகிட்டு வாழ்ந்தாங்க. அவரும் ரொம்ப
காலம் உயிரோடு இருக்கலை. அவரும் தவறிட்டாரு.
அவுங்களுக்கு ஒரே ஒரு பையன். முதல் கணவர் வழியா பொறந்தவன். அவனுக்கு நல்ல இடமா
பார்த்து பொண்ணெடுத்து கல்யாணம் செஞ்சிவச்சிட்டாங்க. மகனும் மருமகளும் அவுங்க கூடவே
அந்த வீட்டுல இருந்தாங்க”
“சரி”
“அந்த மருமகளோட அம்மா பேரு ஜெயலட்சுமி. வீணை எஸ்.பாலச்சந்தருடைய
சொந்த அக்கா. நல்லா உயரமா அழகா இருப்பாங்க. அந்தக் காலத்துல தியாகராஜ பாகவதர் கூட சிவகவிங்கற
படத்துல கதாநாயகியா நடிச்சவங்க. ஏதோ டிப்ரெஷன் பிரச்சினை அவுங்களுக்கு இருந்தது. ஆனா
பார்க்கறதுக்கு அப்படித் தெரியாது. எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பாங்க. எதுத்தாப்புல
யாரு வந்தாலும் அவுங்ககிட்ட ரொம்ப உரிமையா பேசுவாங்க. எந்த வீடா இருந்தாலும் கவலைப்பட
மாட்டாங்க. ரொம்ப இயல்பா உள்ள போய் உக்காந்து பேசுவாங்க. ரொம்ப நல்ல மனுஷி.”
“இந்தக் காலத்துல அப்படி இருக்கறது ரொம்ப அபூர்வம் சார்”
“உண்மைதான். மாசத்துக்கு
ஒரு தரமோ ரெண்டு தரமோ ஜெயலட்சுமி அம்மா தன்னுடைய மகளைப் பார்த்துட்டு போறதுக்காக அந்த
வீட்டுக்கு வருவாங்க. அந்த அம்மா வர்ரதா செய்தி கிடைச்சதுமே, நம்ம லட்சுமி அம்மா படியேறி
மேல வந்து எல்லா ரூம் கதவையும் தட்டி இன்னைக்கு எங்க சம்பந்தி அம்மா நம்ம வீட்டுக்கு
வராங்க. திடீர்னு மாடி அறைங்களுக்கு வந்தாலும் வந்து கதவைத் தட்டுவாங்க. உங்கள கேக்காமயே
கூட அறைக்குள்ள வந்தாலும் வருவாங்க. அப்படி ஒரு வேளை வந்தா யாரும் தப்பா நெனைச்சிக்காதீங்கன்னு
ஒரு எச்சரிக்கைக் குரல் குடுத்துட்டு போவாங்க.”
“ஏன்?”
“புதுசா இருக்கறவங்க ஜெயலட்சுமி அம்மாவுடைய போக்கைப் பார்த்து
திகைச்சி நின்னுடக்கூடாதுங்கற நல்ல எண்ணம்தான். வேற எந்த காரணமும் இல்லை.”
“சரி”
“ஜெயலட்சுமி அம்மா ரொம்ப சாது. ஏதேதோ சம்பந்தாசம்பந்தம் இல்லாம
பழைய கதைங்களை பேசிட்டு எறங்கிப் போயிடுவாங்க. அவ்ளோதான். அவுங்களோடு பேசிப்பேசி அவுங்க
என்னென்ன விஷயங்கள பேசுவாங்க, என்ன கேப்பாங்கன்னு எல்லாமே எங்களுக்கு தெரிஞ்சிடுச்சி.
வெறும் சாக்பீஸ்தான் அடிக்கடி கேப்பாங்க. ஸ்கூல்ல பிளாக்போர்ட்ல எழுதுவமே, அந்த சாக்பீஸ்ங்கதான். அவுங்களுக்காகவே
நான் பல கலர்ங்கள்ல சாக்பீஸ் வாங்கி வச்சிருப்பேன். அந்த அம்மா கேட்டதுமே இந்தாம்மான்னு
எடுத்துக் குடுத்துடுவேன்.”
அந்தத் தகவலைக் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. “சாக்பீஸ
வச்சிகிட்டு அவுங்க என்ன செய்வாங்க?” என்று கேட்டேன்.
“சொல்றேன். அவசரப்படாதீங்க. அந்த அம்மா எல்லா சாக்பீஸ்ங்களயும்
எடுத்துட்டு போய் மெத்தையில நிழல் இருக்கிற இடத்துல உக்காந்துகிட்டு அழகா பெரிசா ஒரு
கோலம் போடுவாங்க. உண்மையிலயே பிரமாதமா இருக்கும். அந்த நிறம் தானாவே மக்கி மறைஞ்சாதான்
உண்டு. எங்களுக்கு அதை அழிக்கவே மனசு வராது.”
“ரொம்ப ரசனை உள்ளவங்கன்னு நெனைக்கறேன்”
”ஆமா. அதுல சந்தேகம் இல்லை. ஒருநாள் அவுங்க பொண்ணுக்கு சீமந்தம் நடந்தது. பொண்ண தாய்வீட்டுக்கு அழைச்சிட்டு போயிட்டாங்க.
அதுக்கப்புறம் ஜெயலட்சுமி அம்மா அந்த வீட்டுப்பக்கம் வரலை. ரொம்ப நாள் நான் பார்க்கவே
இல்லை. ஒரு குழந்தை பிறந்து நாலைஞ்சி மாசத்துக்குப் பிறகு மகளையும் பேரப்பிள்ளையையும்
கொண்டுவந்து விடற சமயத்துலதான் ஜெயலட்சுமி அம்மா அந்த வீட்டுக்கு வந்தாங்க.”
“மாடிக்கு வந்தாங்களா?”
“ஆமாம். பழையபடி மாடிக்கு வந்து எங்ககிட்ட கலகலப்பா பேசினாங்க.
சாக்பீஸ் வாங்கி வாசல்ல கோலம் போட்டாங்க. அந்தப் படம் பார்த்தியா இந்தப் படம் பார்த்தியான்னு
சினிமா கதை பேசினாங்க.”
“சரி”
“சில மாசங்கள் கழிச்சி, அந்தக் குழந்தைக்கு முதல் வருஷ பிறந்தநாள்
கொண்டாட்டத்துக்கான ஏற்பாடு நடந்தது. கீழ லட்சுமி அம்மா வீட்டுகுள்ளயே ரொம்ப தடபுடலா ஏற்பாடு நடந்தது. விருந்து உண்டு,
நீங்க எல்லாரும் அவசியம் வந்து கலந்துக்கணும்னு ரெண்டுமூனு நாள் முன்னாலயே லட்சுமி
அம்மாவும் ஜெயலட்சுமி அம்மாவும் மாறிமாறி எங்களை அழச்சிட்டு போனாங்க.”
“சரி”
“ஒரு குழந்தையுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் போற சமயத்துல
வெறும் கையோடு போக எங்களுக்கெல்லாம் ரொம்ப கூச்சமா இருந்தது. சாப்பாட்டுக்கு வந்து
நிக்கறமாதிரி யாரும் நினைச்சிடக்கூடாதுன்னு ஒரு சங்கடம். அதனால ரூம்ல தங்கியிருந்த நாங்க எல்லாரும் ஆளுக்கு
கொஞ்சம் பணம் போட்டு ஒரு வெள்ளி கொலுசு வாங்கிட்டுப் போய் எங்க சார்புல அன்பளிப்பா
கொடுத்தோம். ஜெயலட்சுமி அம்மாவுக்கும் லட்சுமி அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.”
”சரி”
“நாங்க கூடத்துல உக்காந்து பேசிட்டிருந்த சமயத்துல உயரமா, நல்லா
வாட்டசாட்டமான ஒரு புது மனிதர் திடீர்னு உள்ள வந்தாரு. பெரிய வி.ஐ.பி. ஒரு நிமிஷம்
கனவா உண்மையான்னு எங்களுக்குப் புரியலை. ஆச்சரியத்தோடு அவரையே நாங்க பார்த்துட்டிருந்தோம்.”
“யாரு சார் அந்த வி.ஐ.பி.?”
“வீணை எஸ்.பாலச்சந்தர். உண்மையிலயே அவருக்குப் பின்னால ஒருத்தரு
வீணையை வச்சிட்டு நின்னுட்டிருந்தாரு. அவ்வளவு பெரிய ஆள் அங்க ஏன் வந்தாருனு புரியாம
ரொம்ப குழப்பிகிட்டிருந்தோம். ஒருவேளை அவரும் எங்களை மாதிரி பிறந்தநாள் விருந்துக்கு
வந்தவரா இருக்குமோன்னு ஒரு யோசனை ஓடிச்சி.
ஜெயலட்சுமி அம்மாவுடைய தம்பிதான் அவர்ங்கற விஷயம் அதுக்கப்புறம்தான் தெரிஞ்சிது.”
“சரி”
“அந்த வீட்டு மருமகளுக்கு அவர்தான் தாய்மாமன். பெரிய சீர் வரிசையெல்லாம்
அமர்க்களமா நடந்தது. விழா விவகாரம்லாம் முடிஞ்சதும் தரையிலயே பந்திப்பாய் விரிச்சி
சாப்பாடு போட்டாங்க. நாங்க சாப்ட்டுட்டு மாடிக்கு வந்துட்டோம். கொஞ்ச நேரம் கழிச்சி
பாலச்சந்தர் எங்களத் தேடி மாடிக்கு வந்துட்டாரு. அவரை உக்கார வைக்க எங்க ரூம்ல ஒரு
நாற்காலி கூட அப்போ கிடையாது. டிரங்க் பெட்டி மேல படுக்கையை சுருட்டி வச்சி மெத்துமெத்துனு
ஆக்கி அதும் மேல உக்காருங்க சார்னு சொன்னோம். கொஞ்ச நேரம் உக்காந்து எந்த வித்தியாசமும்
பார்க்காம எங்ககிட்ட கலகலப்பா, இயற்கையா பேசிட்டிருந்தாரு.”
“என்ன சொன்னார்?”
”இங்கயே கூடத்துல சாயங்காலம் நாலு மணிக்கு ஒரு கச்சேரி பண்ணப்
போறேன். நீங்க எல்லாரும் அவசியம் வந்து கேளுங்க. அதைச் சொல்லறதுக்குதான் வந்தேன்னு
சொன்னாரு. லீவ் நாளாச்சேனு எங்கயும் கெளம்பறதுக்கு திட்டம் போட்டுடாதீங்கன்னு சொல்லிட்டு
போயிட்டாரு. மெட்ராஸ்ல நம்ம சபையில வந்து அவர் வீணை வாசிக்கமாட்டாரானு பல சபைகள் காத்திட்டிருந்த
சமயம் அது. அப்படிப்பட்ட மகா வித்வானுடைய கச்சேரியை கேட்டு ஆனந்தப்படறதுக்கான வாய்ப்பு
ஒரு வீட்டுக்குள்ள ரொம்ப தற்செயலா எங்களுக்கு கிடைச்சது. அது எங்க வாழ்க்கையில கிடைச்ச
பெரிய அதிர்ஷ்டம். அதை மறக்கவே முடியாது. வரோம் சார்னு சொல்லி பாலச்சந்தர் சாரை அனுப்பிட்டோம். சரியா நாலு மணிக்கு
கீழ இறங்கி கூடத்துல இடம் பிடிச்சி உக்காந்துகிட்டோம். ஒரு மணி நேரம் ரொம்ப லயிச்சி
ஆனந்தமா எங்களுக்காக அவர் வீணை வாசிச்சார். கண்ணை மூடி கண்ணைத் தெறக்கறதுக்குள்ள ஒரு
மணி நேரம் ஓடிடுச்சி. இன்னும் கொஞ்சம் எங்களுக்காக வாசிக்கமாட்டாரானு நெனைச்சிட்டிருக்கும்
போதே முடிச்சிட்டாரு. நிறுத்தறதுக்கே மனசில்லாம நாங்க எல்லாரும் ரொம்ப நேரம் கைதட்டிகிட்டே
இருந்தோம். சிரிச்ச முகத்தோடு அவர் தலையைக் குனிஞ்சி கைகூப்பி வணக்கம் சொன்ன தோற்றம்
இன்னும் என் கண்ணுமுன்னாலயே இருக்குது”
விட்டல்ராவின் குரலில் நெகிழ்ச்சியை உணரமுடிந்தது. இளமைப் பருவத்தில்
அந்த வீணையின் இசை அவரை எந்த அளவுக்குக் கரைத்திருக்கக்கூடும் என்பதை என்னால் புரிந்துகொள்ள
முடிந்தது. அவருடைய மெளனத்தைக் கலைக்கும் விதமாக “அவரை சந்திச்சது அந்த ஒரு சந்தர்ப்பத்துல
மட்டும்தானா? அல்லது மறுபடியும் பார்க்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சதா?” என்றொரு கேள்வியைக்
கேட்டு உரையாடலைத் தூண்டினேன்.
”அதுக்கப்புறம் ரொம்ப காலம் கழிச்சித்தான் அவரை நான் பார்த்தேன்.
அப்ப எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. அந்த அறையைக் காலி செஞ்சிட்டு வேற இடம் பார்த்துட்டு
போயிட்டோம். என் மனைவிக்கும் இசை மேல ஒரு பித்து உண்டு. அதனால கிருஷ்ணகான சபாவுல நாங்க
ரெண்டு பேருமே உறுப்பினரா சேர்ந்து கச்சேரிங்களுக்கு போகறதை வழக்கமா வச்சிருந்தோம்.”
“சரி”
“ஒருமுறை பாலச்சந்தர் ரஷ்யாவுக்குப் போய் திரும்பி வந்திருந்தார். அதனால அவருக்கு கிருஷ்ணகான சபாவுல ஒரு பாராட்டு
விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. பாராட்டு விழாவைத் தொடர்ந்து அவருடைய கச்சேரியும்
உண்டுன்னு அழைப்பிதழ் அனுப்பியிருந்தாங்க. பாலச்சந்தர் கச்சேரியை கேக்கணும்னு என் மனைவிக்கு
ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை நிறைவேறப்போவுதுன்னு அவள் ரொம்ப சந்தோஷமா இருந்தா.
அப்ப பேச்சுவாக்குல முதன்முதலா நான் அவருடைய கச்சேரியை ரொம்ப தற்செயலா எப்படி கேட்டேங்கற
கதையை என் மனைவிகிட்ட சொன்னேன். அதைக் கேட்டு இப்படியும் நடக்குமான்னு அவளுக்கு ரொம்ப
ஆச்சரியம். நிகழ்ச்சி அன்னைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கிருஷ்ண கானசபாவுக்கு முன்கூட்டியே
நேரத்தோட போயிட்டோம். நல்ல வேளையா எங்களுக்கு முன்னால அஞ்சாறு வரிசைக்குள்ளயே இடம்
கிடைச்சிட்டுது.”
“சரி”
”சரியான நேரத்துல பாலச்சந்தர் மேடைக்கு வந்து எல்லாரையும் பார்த்து
கைகுவிச்சி வணக்கம் சொன்னாரு. அரங்கத்துல அஞ்சாறு நிமிஷம் ஒரே கைதட்டல் சத்தம். அதுக்கப்புறம்
மாலை மரியாதையெல்லாம் செஞ்சாங்க. அப்ப ஆளு உசரத்துக்கு ஒரு பெரிய ரோஜா மாலையை பக்கத்துக்கு
ரெண்டு பேரு புடிச்சி தூக்கிட்டு வந்தாங்க. அவரு அந்த மாலையைப் பார்த்ததுமே சட்டுனு
பின்வாங்கி நில்லுங்க நில்லுங்கன்னு அவுங்களை கையைக் காட்டி நிறுத்தினாரு. அவுங்களும்
நின்னுட்டாங்க. இவ்ளோ பெரிய மாலை யாருக்குன்னு
கேட்டாரு. அவுங்க நாலு பேரும் உங்களுக்குத்தாங்க ஐயான்னு சொன்னாங்க. அதெல்லாம் வேணாம்
வேணாம்னு எனக்குப் போடாதீங்கன்னு ரொம்ப பணிவா சொல்லி தடுத்துட்டாரு.”
“அப்புறம்?”
“அந்த மேடையில ஓரமா சரஸ்வதி படம் வச்சிருந்தாங்க. அதுக்கு சின்னதா
ஒரு மாலையும் போட்டிருந்தாங்க. அதைப் பார்த்த பாலச்சந்தர் மாலையை வச்சிருந்தவங்க கிட்ட
அங்க பாருங்க, உங்க மாலையை. அந்த சரஸ்வதி படத்துக்குப் போடுங்க. நான் சொன்னா கேளுங்க.
அவுங்கதான் அந்த மாலைக்கு பொருத்தமானவங்கன்னு சொன்னாரு. அந்த ஆளுங்களும் வேற வழியில்லாம
கொண்டுவந்த மாலையை அதை சரஸ்வதி படத்துக்கு போட்டுட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம்தான்
அவருடைய முகம் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தது. அதுவரைக்கும் பதட்டமாவே இருந்தாரு.”
“சரி”
“நிதானமா மைக் முன்னால வந்து உக்காந்து தொண்டையை சரி பண்ணிகிட்டாரு.
அப்புறம் கச்சேரிக்கு முன்னால ஒரு பத்து பதினஞ்சி நிமிஷம் உங்ககிட்ட பேசலாம்னு ஆசைப்படறேன்,
பேசட்டுமான்னு அரங்கத்துல உக்காந்திருந்தவங்களை பார்த்து கேட்டாரு. எல்லாரும் ஒரே குரல்ல
பேசுங்க பேசுங்கன்னு சொன்னாங்க. உடனே அவரு மறுபடியும் கைகுவிச்சி ரொம்ப நன்றின்னு சொல்லிட்டு பேசத் தொடங்கிட்டாரு.”
“என்ன பேசினாரு?”
“நான் பத்து பதினஞ்சி படங்களுக்கு இசை அமைச்சிருக்கேன். சின்னதும்
பெரிசுமா இருபது இருபத்தஞ்சி படங்கள்ல நடிச்சிருக்கேன். ஒரு நல்ல வாய்ப்பு கூடி வந்ததால,
. இதோ ரஷ்யாவுக்கும் போய் வந்திருக்கேன். எல்லாமே எனக்கு தற்செயலா கிடைச்ச வாய்ப்புகள்.
இதுக்காக என்னைப் பாராட்டறீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனா எல்லாம் அளவோடு இருக்கணும். ஒருநாளும்
நாம அளவு மீறி போயிடக் கூடாது. என் ஒரு ஆளயே ஏன் பாராட்டிட்டிருக்கீங்க? இருக்கிற இடம்
தெரியாம, ஒரு வாய்ப்புக்காக அல்லாடிட்டிருக்கிற கலைஞர்கள் இந்த ஊருல ஏராளமான பேருங்க இருக்காங்க. ஒருமுறை பாராட்டிய ஆளையே மறுபடியும்
மறுபடியும் பாராட்டிட்டிருக்கிறதைவிட, புதுசா உருவாகிட்டிருக்கிற கலைஞர்களைக் கண்டுபுடிச்சி
பாராட்டுங்க. அவுங்கள வெளிச்சத்துக்குக் கொண்டு வாங்க. அதுதான் நீங்க செய்யவேண்டிய
வேலைன்னு சொல்லி நிறுத்தினாரு. சபை அப்படியே அமைதியில மூழ்கியிருந்தது.”
“அப்புறம்?”
“மனசுல இருக்கிறத சொல்லி முடிச்சதும் அவரு முகத்துல்ல ஒரு புன்னகை
வந்துடிச்சி. ரொம்ப நார்மலாயிட்டாரு. உடனே மைக்ல ரொம்ப கேஷ்யுவலா பேச ஆரம்பிச்சிட்டாரு.
சமீபத்துல நான் நெல்லூருக்குப் போயிருந்தேன். அப்ப ஒரு சம்பவம் நடந்தது. அதைச் சொல்லறதுக்கு
இந்த மேடைதான் பொருத்தமான இடம்னு தோணுது. நெல்லூருல இருந்த சமயத்துல ஒரு காப்பி சாப்பிடறதுக்காக
ஒரு ஓட்டலுக்குப் போயிருந்தேன். ஓட்டலுக்குள்ள சுவரோரமா ஒரு பெரிய மேசை இருந்தது. ஒரே
ஒருத்தர்தான் உக்காந்திட்டிருந்தாரு. சரி, அவருக்கு எதுத்தாப்புல உக்காரலாம்னு போனேன்.
அங்க உக்காந்திட்டிருந்தவர் ரொம்ப உயரமா கன்னங்கரேலுனு இருந்தாரு. அழுக்கான ஒரு ஜிப்பா
போட்டிருந்தாரு. தோள்ல ஒரு துண்டு மட்டும் தொங்கிட்டிருந்தது. கண்ண மூடி ஏதோ பாடிட்டிருந்தாரு.
ஒரு சின்ன துணுக்குதான் என் காதுல உழுந்தது. ரொம்ப அற்புதமான சங்கதி. இன்னும் கொஞ்ச
நேரம் கேக்கலாம்னு நான் சத்தம் காட்டாம அவருக்கு பக்கத்துல இருந்த நாற்காலியில உக்கார்ந்தேன்.”
“சரி”
“அதுவரைக்கும் எங்கயோ இருந்த முதலாளி திடீர்னு நமஸ்காரமண்டி
நமஸ்காரமண்டினு சொல்லிட்டே என் பக்கத்துல வந்து நின்னு பவ்யமா குனிஞ்சி உடம்பை வளைச்சி
வணக்கம் சொன்னாரு. அது சாப்படறீங்களா, இது சாப்படறீங்களான்னு கேட்டு உபசரிக்க ஆரம்பிச்சிட்டாரு.
எங்க எங்கயோ வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டிருந்த சர்வர்ங்கள கூப்ட்டு என்னன்னு கேளுடான்னு
அதட்டினாரு. அவரு எழுப்பின சத்தத்துல ஏதோ ஒரு பாட்டை மனசுக்குள்ள முணுமுணுத்தபடி ரசனையில
கண்ணை மூடி லயிச்சிட்டிருந்த ஜிப்பாக்காரர் மெதுவா கண்ணத் தெறந்து பார்த்தாரு. அதுவரைக்கும்
அங்க நடந்த எதுவுமே அவருக்குத் தெரியலை. தனக்குப் பக்கத்துல நின்னுட்டிருந்த கடைக்காரரைப்
பார்த்து ஐயா இட்லி வேணும்னு ஆர்டர் கொடுத்தேன். இன்னும் வரலையேன்னு கேட்டாரு. அந்த
சர்வர் அந்த ஜிப்பாக்காரர் சொன்னதையே காதுல வாங்கிக்கலை. என்னைப் பார்த்து என்ன வேணும்னு
கேட்டாரு. நான் வெறும் காப்பி போதும்னு சொன்னேன். அவரே உள்ள ஓடிப் போய் எனக்காக காப்பியைக்
கொண்டாந்து குடுத்தாரு. எனக்கு காப்பி குடிக்கவே மனசில்லை. மொதல்ல அவருக்கு இட்லியை
கொண்டுவந்து குடுங்கன்னு சொன்னேன். கொண்டுவந்து வச்சாங்க. அவரு நிதானமா ரசிச்சி ருசிச்சி
சாப்ட்டாரு.”
“ஒரு கதை மாதிரி சொல்லியிருக்காரே”
”ஆமாம். இன்னும் இருக்குது. கேளுங்க. சாப்ட்டு முடிச்சதும் கையை கழுவிக்க போனாரு. அந்த நேரத்துலதான் எனக்கு
காப்பி ஞாபகமே வந்துச்சி. காப்பியை தொட்டு பார்த்தா, சுத்தமா ஆறியிருந்திச்சி. வேற
வழியில்லாம அதையே குடிச்சி முடிச்சேன். அந்த
ஜிப்பாக்காரர் திரும்பி வந்து உக்காந்தாரு. எனக்கு அவருகிட்ட பேசணும்னு தோணிச்சி. நான்
அங்க உக்காரும்போது தன்னை மறந்து அவர் பாடிட்டிருந்த பாட்டுதான் என் மனசுக்குள்ள இருந்தது.
அதனால் அவரைப் பார்த்து இப்ப உங்களுக்குள்ளயே பாடிட்டீங்களே, அது தோடி ராகம்தானன்னு
கேட்டேன். அவருக்கு நான் கேட்டது புரியலை. “நாக்கு அரவம் தெளிலேது ஸ்வாமி”ன்னு தெலுங்குல
சொன்னாரு. அதுக்கப்புறம் நான் அவருகிட்ட தெலுங்கிலயே பேச ஆரம்பிச்சேன். நான் கேட்டதை
புரிஞ்சிகிட்டதும் அவருடைய முகம் மலந்துபோச்சி. ஆமாம், தோடிதான்னு சந்தோஷமா சொன்னாரு.
அதுக்கப்புறம்தான் அவர் என்னை உத்துப் பார்த்து நான் யாருங்கற விஷயத்தைத் தெரிஞ்சிகிட்டாரு.
உடனே ஸ்வாமி, நீங்களான்னு கேட்டுகிட்டே சட்டுனு எழுந்து நின்னுட்டாரு. அவரு முகத்துல
ஒரே சமயத்துல சந்தோஷம். பதட்டம். சங்கடம். எல்லாம் தெரிஞ்சிது. நான் அவருடைய கையை புடிச்சி
அமைதிப்படுத்தி உட்கார வச்சேன்.”
“உண்மையிலயே மகத்தான தருணம் சார் அது. கேக்கும்போதே மெய்சிலிர்த்துப்
போகுது.”
“ஆமாம். அன்னைக்கு அவர் பேசப்பேச எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இன்னும் இருக்குது, கேளுங்க. எனக்காக அந்தப் பாட்டை இன்னொரு தரம் பாடறீங்களான்னு கேட்டேன்.
அவருக்கு ஒரே சந்தோஷம். உடனே அந்தப் பாட்டை பாடினாரு. பிறகு மெதுவா அவருகிட்ட பேச்சு
கொடுத்தேன். நீங்க யாரு, பாட்டு மேல எப்படி விருப்பம் வந்தது, பாடறதுக்கு எங்க கத்துகிட்டீங்கன்னு
தெலுங்குலயே கேட்டேன். தன்னைப் பத்தி சொல்லிக்கறதுல அவரு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ஒவ்வொன்னைப்
பத்தியும் ரொம்ப ஆனந்தமா சொன்னாரு. ஆனா, சொல்லி முடிக்கிற சமயத்துல அவரு முகம் சப்பையா
போயிடுச்சி. காரணம் என்னன்னு கேட்டேன். எப்படிப்பட்ட திறமைசாலியா இருந்தாலும், என்ன
பிரயோஜனம் சாமி, ஒருத்தரும் மதிக்கமாட்டறாங்க, ஒருத்தரும் இங்க வந்து பாடுங்கன்னு ஒரு
வாய்ப்பு கொடுக்கமாட்டுறாங்க. எங்க போய் கேட்டாலும் அப்புறம் பார்க்கலாம், அப்புறம்
பார்க்கலாம், அவரை புக் பண்ணியிருக்கோம், இவரைப் புக் பண்ணியிருக்கோம்னு தள்ளி விடறதிலயே
குறியா இருக்காங்க. எங்கனா ஒரு சபையில, அல்லது ரேடியோ ஸ்டேஷன்ல பாடறதுக்கு ஒரு வாய்ப்பு
கிடைச்சா நல்லா இருக்கும்னு சொன்னாரு. அவரு அப்படி பேசினதே என் மனசுக்கு ரொம்ப வேதனையா
இருந்தது. உங்க அட்ரஸ எழுதிக் குடுங்கன்னு அவருகிட்ட கேட்டேன். அவரும் உடனே ஒரு தாள்ல
அட்ரஸ எழுதிக் குடுத்தாரு. பில்ல கொடுத்துட்டு ஓட்டல்லேர்ந்து ரெண்டு பேருமா பேசிகிட்டே
வெளியே வந்தோம். நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க, நான் உங்கள விட்டுட்டு போறேன்னு சொன்னேன்.
அவரு கேக்கலை. வேணாம் வேணாம் என் மகள் வீடு இங்கதான் பக்கத்துல இருக்குது. நான் நடந்தே
போயிடுவேன்னு சொல்லிட்டு போயிட்டாரு. நான் வீட்டுக்குப் போனதுமே விஜயவாடா ரேடியோ ஸ்டேஷன்
ஆட்களுக்கு போன் போட்டு அவரைப்பத்திய தகவலைக் கொடுத்துட்டு அவரு ஒரு அருமையான கலைஞர்,
அவரை நீங்க சரியான முறையில பயன்படுத்திக்கணும்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வச்சிட்டேன்.”
“சரி”
“அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஒரு வருஷத்துக்குப்
பிறகு எனக்கு ஒரு லெட்டர் வந்திச்சி. நம்ம பாடகர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தாரு.
நான் அவரைப் பார்த்துட்டு வந்த பத்தே நாள்ல விஜயவாடா ரேடியோ ஸ்டேஷன்ல பாடறதுக்கு அவருக்கு
ஒரு வாய்ப்பு கொடுத்தாங்களாம். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அடுத்தடுத்து நிறைய
வாய்ப்புகள் கெடைச்சிதாம். இப்ப நிலைய வித்வானாகவே வச்சிகிட்டாங்கன்னு எழுதியிருந்தாரு.
அடுத்து சில மாசங்களுக்குப் பிறகு அவருக்கு ஹைதராபாத் ரேடியோ ஸ்டேஷன்ல பாடறதுக்கும்
வாய்ப்பு கிடைச்சது. ஒரு வருஷ காலத்துல அவர் ரொம்ப பெரிய உயரத்துக்குப் போயிட்டாரு.
கோவில் விழாக்கள்ல, சபா கச்சேரியில எல்லாம் பாட ஆரம்பிச்சிட்டாரு. எல்லாத்தயும் அவர்
அந்தக் கடிதத்துல சுருக்கமா எழுதிட்டு, நான் உங்களை நேருல சந்திச்சிப் பேசணும், எப்ப
வந்தா செளகரியமா இருக்கும்னு எழுதுங்கன்னு கேட்டிருந்தாரு. அதைப் படிச்சதும் எனக்கு
ரொம்ப சந்தோஷமா இருந்தது. எப்ப வேணும்னாலும் நீங்க வரலாம்னு நான் அவருக்கு எழுதிப்
போட்டேன். சொன்ன மாதிரியே ஒருநாள் வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாரு.
ஒரு சபாவுல அவருக்கு ஒரு கச்சேரி ஏற்பாடு செஞ்சேன். அவுங்க அவருக்கு நல்ல முறையில கெளரவிச்சி
அனுப்பி வச்சாங்க.”
“சரி”
“இந்தக் கதையை ஏன் இங்க சொல்றேன்னு உங்களுக்குத் தோணலாம். இப்படியெல்லாம்
செஞ்சேன் பாருங்கன்னு பெருமை அடிச்சிக்கிறதுக்காக நான் இந்தக் கதையை இங்க சொல்லலை.
தற்செயலா ஒரு திறமைசாலியைக் கண்டுபுடிச்சி நாம உருவாக்கிக் கொடுக்கிற ஒரு வாய்ப்பு
அவுங்க வாழ்க்கைக்கே ஒரு புது வெளிச்சத்தை கொடுப்பதா மாறும். அதுல எனக்கு நம்பிக்கை
இருக்குது. வெளிச்சத்துக்கு வரமுடியாத அவரை மாதிரியான ஆட்களை நாமதான் தேடித்தேடி கண்டுபுடிச்சி
வெளியே கொண்டு வரணும். என்னை மாதிரியான ஆளுங்களுக்கு நீங்க கொடுத்திருக்கிற கெளரவமே
போதும்னு சொல்லி எல்லாரையும் பார்த்து ஒரு பெரிய வணக்கம் போட்டாரு.”
“சரி”
“அடுத்த நிமிஷமே அவரு முகம் நிறைய புன்சிரிப்போடு நின்னாரு.
அவரா இவ்வளவு நேரம் எல்லாரையும் பிரிமிக்கவைக்கிற
மாதிரி லெக்ச்சர் கொடுத்தாருன்னு தோணிடுச்சி. சரி பேசினதெல்லாம் போதும், இனிமே வெறும்
இசை மட்டும்தான்னு சொல்லிட்டு போய் தன்னுடைய இடத்துல உக்காந்து வாசிக்க ஆரம்பிச்சாரு.
கிட்டத்தட்ட மூனரை மணி நேரம். ஒரே இசை மழைதான். ராட்சசன் மாதிரி வாசிச்சாரு. கேட்டுட்டிருந்த
எல்லாரையும் வேற ஏதோ ஒரு உலகத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டாரு. அந்தக் கச்சேரியைக்
கேட்டு ஒரு அம்பது வருஷமாவது இருக்கும். ஆனா அந்த இசை இன்னும் என் காதுல ஒலிக்கிற மாதிரியே
இருக்குது.”
இசையில் லயித்திருக்கும்போது தென்படும் பரவசத்தை நெகிழ்ந்திருந்த
அவருடைய முகத்திலும் விழிகளிலும் பார்க்கமுடிந்தது. அக்கணத்தில் எதுவும் பேசத் தோன்றாமல்
அவருடைய முகத்தையே அமைதியாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
சில கணங்களுக்குப் பிறகு, மெல்ல அவராகவே சொற்களைக் கூட்டி “எல்லாருடைய
வாழ்க்கையிலயும் ஒரு திருப்புமுனை இருக்கும் பாவண்ணன். அதை யாராலும் திட்டமிட்டு உருவாக்க
முடியாது. அது எப்பவும் தற்செயலாதான் நிகழும். நீங்க என்னவா ஆகணும்ங்கறத அந்தத் தற்செயல்
தீர்மானிச்சிட்டு போயிட்டே இருக்கும். ஒருவேளை விதின்னு நாம சொல்றது அதைத்தானோ என்னமோ”
என்றார் விட்டல்ராவ்.
(அம்ருதா
– ஏப்ரல் 2025)