Home

Sunday, 20 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 2

 

முக்கியமான முடிவு

 

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்ததும், அனைவரும் இணைந்து பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். மாப்பிள்ளையின் ஊர் தம் கிராமத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நல்ல குணமுள்ளவனாகவும் வசதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.  

தங்கைக்கு மணம் முடித்து அனுப்பிய பிறகு, அடுத்த ஆண்டில் மூத்த சகோதரனுக்குத் திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் இரண்டாவது சகோதரனுக்குத் திருமணம் நடந்தது. மேலும் ஓராண்டுக்குப் பிறகு அவர்களுடைய செல்லத் தம்பிக்கும் திருமணம் நடைபெற்றது. தம் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில்  ஒவ்வொருவரும் தனித்தனியாக வீடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியான இல்லறத்தின் அடையாளமாக ஒவ்வொரு சகோதரனுக்கும் அடுத்தடுத்து ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அப்பாமார்களைப்போலவே மூன்று சகோதரர்களும் இணைபிரியாது ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

அவர்களுடைய ஓயாத உழைப்பின் விளைவாக அக்குடும்பத்தில் செல்வம் குவிந்தது. அவர்கள் மூவருமே தம் நேர்மையின் காரணமாக, அக்கிராமத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக விளங்கினர். அவர்கள் தொடங்கிய ஒவ்வொரு வணிகமும் அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது.

மூன்று சகோதரர்களுமே கட்டிளங்காளைகளாக இளமைத்துடிப்போடு கிராமத்தை வலம் வந்தார்கள். அந்தக் குடும்பத்துக்கு இணையான தகுதியோடு அந்தக் கிராமத்திலும் சுற்றுவட்டாரத்திலும் ஒரு குடும்பம் கூட இல்லை. அதனால் அந்த இளைஞர்களுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மூன்று சகோதரர்களும் கவலையில் மூழ்கினார்கள்.

கிராமத்தில் தம் வயதையொத்த  இளைஞர்கள் அனைவரும் திருமணம் முடித்து ஜோடிஜோடியாக திரிந்து மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் மூன்று இளைஞர்களுக்கும் ஒருவித ஏக்கம் பிறந்து அவர்களை வாட்டியது. திருமணமாகாமை அவர்களுக்கு ஒருவித மனக்குறையை அளித்தது.

தீராத கவலையின் காரணமாகவும் உடல்நலிவின் காரணமாகவும் திடீரென மூத்த அண்ணன் படுத்த படுக்கையானார். மரணம் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தார். ஒருநாள் மகனை அருகில் அழைத்து வீட்டுச் செய்திகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசி முடித்ததும் அவர் மகன் “அப்பா, நீங்க எனக்கு எதுவுமே செய்யாம போறீங்களேப்பா” என்று உருக்கத்தோடு கேட்டான்.

அவன் எதைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறான் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் புரியாதவரைப்போல “நான் உனக்கு என்னப்பா செய்யலை? உனக்காக ஊரைச்சுற்றி ஏராளமான நிலங்கள், தோட்டங்கள், எண்ணற்ற ஆடுமாடுகள், தங்கம், வெள்ளி, பல தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி செல்வம்னு எல்லாத்தையும் வச்சிருக்கேனே. இதுக்கு மேல என்னடா மகனே உனக்கு வேணும்?” என்று கேட்டார். அதைக் கேட்டு ஆழமாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட மகன் “நான் அதைப்பத்தி கேக்கலைப்பா. உன் கண்ணு முன்னால நீயே ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா நல்லா இருக்குமில்லையா? அதைத்தான் கேட்டேன்” என்று மெதுவாகச் சொன்னேன்.

அதைக் கேட்டு அப்பாவும் பெருமூச்சு வாங்கினார். “ஆமாம்டா மகனே. நீ சொல்றது உண்மைதான். அந்தக் கடமையை நான் செய்யாதது தப்புதான். அதுக்காக வருத்தப்படாதே. தூரத்து கிராமத்துல உங்க அத்தை இருக்கா. அவுங்க குடும்பமும் நமக்கு நிகரான அந்தஸ்து உள்ள குடும்பம்தான். அவளுக்கு ஒரு பொண்ணு இருக்குது. அழகும் அறிவும் கொண்ட பொண்ணு. சின்ன வயசுல பார்த்திருக்கேன். அவள் உனக்கு முறைப்பொண்ணுதான். கொஞ்சநாள் கழிச்சி, நீ அத்தை ஊருக்குப் போ. அப்பா இப்படி சொன்னார்னு சொல்லி அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்னு சொல்லு. அவ தாராளமா உனக்குக் கல்யாணம் செஞ்சி வைப்பா. கவலைப்படாத” என்றார்.

தன் மனத்தில் இருந்த பாரத்தையெல்லாம் இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அன்று இரவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

அடுத்தநாள் காலையில் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளையும் முறையாகச் செய்து நல்ல முறையில் அடக்கம் செய்தனர்.

சில மாதங்கள் கழிந்தன. முதல் சகோதரர் இறந்ததுமே அவர் மீது மிகவும் பிரியக் கொண்டிருந்த இரண்டாவது சகோதரருக்கு வாழ்க்கையின் மீது பிடிப்பு போய்விட்டது.  சரியாகச் சாப்பிடுவதில்லை. தூங்குவதுமில்லை. உடல் மெல்ல மெல்ல நலியத் தொடங்கியது. விரைவிலேயே படுத்த படுக்கையானார். எந்த வைத்தியமும் பலிக்கவில்லை. “நல்லபடியா பார்த்து அனுப்பிவைங்க” என்று வைத்தியரும் கைவிரித்துவிட்டுப் போய்விட்டார்.

ஒருநாள் இரவு மரணம் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தார் அவர்.  அப்போது தன் மகனை அருகில் அழைத்து வீடு, நிலபுலன்கள் தொடர்பான ஆவணங்களைப்பற்றிப் பேசினார்.

அவர் பேசி முடித்ததும் அவர் மகன் “அப்பா, நீங்க எனக்கு எல்லாமே செஞ்சிருந்தாலும், செய்யவேண்டிய முக்கியமான ஒன்னைச் செய்யாமலேயே போறீங்களேப்பா” என்று வருத்தமுடன்  கேட்டான்.

அவன் எந்தச் செய்தியை மையமாக வைத்துப் பேசுகிறான் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் புரியாதவரைப்போல “நான் உனக்கு என்னப்பா செய்யலை? உனக்காக ஊரைச்சுற்றி நிலம், தோட்டம், ஆடுமாடுகள், தங்கம், வெள்ளின்னு ஏராளமான சொத்துகளைச் சேர்த்து  வச்சிருக்கேனே. அது போதாதா?” என்று கேட்டார்.

அதைக் கேட்டதும் கொஞ்ச நேரம் மகன் மெளனமாக தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். பிறகு ஒரு பெருமூச்சுடன்  “அப்பா, நான் அதைப்பத்தி கேக்கலைப்பா. நீங்களா ஒரு பொண்ண பார்த்து பேசி முடிச்சி கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா நல்லா இருக்குமில்லையா? அதைத்தான் கேட்டேன்” என்று மெதுவாகச் சொன்னான்.

அதைக் கேட்டு அப்பா வருத்தமுடன் ஒரு புன்னகையைச் சிந்தினார். பிறகு மெல்லிய குரலில் “நீ சொல்றது உண்மைதான். நமக்குச் சமமான தகுதியுள்ள குடும்பம் வேணும்னு தள்ளித்தள்ளி போட்டுட்டேன். என் கடமையை நான் செய்யாதது தப்புதான். அதுக்காக வருத்தப்படாதே. தூரத்து கிராமத்துல உங்க அத்தை இருக்கா. அந்த குடும்பத்துல ஒரு பொண்ணு இருக்குது. ரொம்ப அழகான பொண்ணு. அவள் உனக்கு முறைப்பொண்ணுதான்.  உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. கொஞ்சநாள் கழிச்சி, நீ அத்தை ஊருக்குப் போ. அப்பா இப்படி சொன்னார்னு சொல்லி அந்தப் பொண்ணை கேளு. அத்தை உனக்கு கட்டாயமா கட்டிவைப்பாங்க” என்றார்.

தன் மனத்தில் இருந்த பாரத்தையெல்லாம் இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அன்று இரவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அடுத்தநாள் அனைவரும் சேர்ந்து அவருக்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முறையாகச் செய்து  அடக்கம் செய்தனர்.

மேலும் சில மாதங்கள் கழிந்தன. எதிர்பாராத விதமாக தென்னைமரத்தின் நிழலில் மூன்றாவது சகோதரர் நின்றுகொண்டு நிலத்தில் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை பார்த்தபடி இருந்தார். அப்போது காற்று வேகத்தில் மர உச்சியிலிருந்து ஒரு கீற்று தடாரென்று அவர் தலை மீது விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துவிட்டார். ஒருபக்கம் காயம். இன்னொரு பக்கம் பயம். இரண்டும் சேர்ந்து அவரைப் படுக்கையில் வீழ்த்திவிட்டது. வைத்தியர் வந்து நாடி பிடித்து சோதித்துப் பார்த்துவிட்டு மரணம் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டுப் போனார்.

அன்று இரவு பாதுகாப்புக்காக அப்பாவின் அருகிலேயே அவருடைய மகன் இருந்தான். ஏதேதோ பழைய கதைகள் பற்றியெல்லாம் பேச்சு வந்தது. அவற்றின் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் அப்பாவிடம் அவர் பேசி முடித்ததும் அவர் மகன் “அப்பா, ஒரு குறையும் இல்லாம நீங்க எனக்கு எல்லாமே செஞ்சிருக்கீங்க. நீங்களே ஒரு பொண்ணைப் பார்த்து எனக்கு ஒரு கல்யாணம் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும். அது ஒன்னுதான் குறை” என்று வருத்தமுடன் தெரிவித்தான்.

அதைக் கேட்டு அப்பா வருத்தமுடன் ஒரு புன்னகையைச் சிந்தினார். பிறகு மெல்லிய குரலில் “நீ சொல்றது உண்மைதான். நான் ஒரு கணக்கு போட்டேன். ஆனால் கடவுள் வேற ஒரு கணக்கு போட்டுட்டான். அதனால அது கைகூடாம போயிடுச்சி” என்று சொல்லிவிட்டு த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டினார்.

சில நொடிகளுக்குப் பிறகு ”நான் ஒரு செய்தியை சொல்றேன். அதும்படி செய் மகனே.  தூரத்து கிராமத்துல உங்க அத்தை இருக்கா. அவளுக்கு  ஒரு பொண்ணு இருக்குது. உனக்கு முறைப்பொண்ணுதான்.   கொஞ்சநாள் கழிச்சி, நீ அத்தை ஊருக்குப் போ. அப்பா இப்படி சொன்னார்னு சொல்லி அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்னு சொல்லு. அத்தை உனக்கு கட்டாயமா கட்டிவைப்பாங்க” என்றார். மகனும் மகிழ்ச்சியோடு தலையாட்டினான்.

தன் மனத்தில் இருந்த சுமையை இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அன்று இரவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அடுத்தநாள் அனைவரும் சேர்ந்து அவருக்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முறையாகச் செய்து  அடக்கம் செய்தனர்.

குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்களும் அடுத்தடுத்து இறந்துபோனதால், சில புதிய பொறுப்புகளை மூன்று மகன்களும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. அவை அனைத்தும் பழகும்வரை அவர்கள் கிராமத்திலேயே இருக்க வேண்டியதாயிற்று. அதற்குள் நாலைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

இன்னும் தாமதிப்பது அழகல்ல என ஒருநாள் மூன்று சகோதரர்களுக்கும் தோன்றியது.  உடனே  தாம் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் தம் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தம் அத்தை வசித்துவரும் கிராமத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் இருப்பதிலேயே சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டார்கள். சிறந்த ஆபரணங்களை எடுத்து அணிந்துகொண்டார்கள்.

ஏழு பகல் ஏழு இரவு தொடர்ந்து பயணம் செய்து அவர்கள் தம் அத்தையின் ஊரை அடைந்தார்கள். அவர்கள் சென்ற சமயத்தில் அவர்களுடைய அத்தை வீட்டில்தான் இருந்தார். அவர்கள் மூவரும் அத்தையிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

”வாங்கடா, வாங்க” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார் அத்தை. “செத்துப்போன என் அண்ணன்மாருங்களே பொறந்துவந்த மாதிரி இருக்கீங்கடா” என்று சொல்லிச்சொல்லி ஆனந்தப்பட்டார். வீட்டுச்செய்திகள், ஊர்ச்செய்திகள் அனைத்து விஷயங்களைப்பற்றியும் ஆசை தீரப் பேசினார்.

மூன்று சகோதரர்களும் குளத்துக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பினர். வந்தவர்களுக்கு வாழை இலை போட்டு, கோழி அடித்து குழம்புவைத்து விருந்து படைத்தார் அத்தை. அத்தைக்குப் பின்னாலேயே நின்று அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தபடி ஒத்தாசை புரிந்துகொண்டிருந்த அத்தை மகளை வைத்தகண் எடுக்காமல் மூன்று பேருமே பார்த்து மகிழ்ந்தனர். “இப்படிப்பட்ட அழகி தனக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும்?” என்று ஒவ்வொருவரும் மனத்துக்குள் கற்பனையில் திளைக்கத் தொடங்கினர்.

சாப்பிட்டு முடித்ததும் பயணக்களைப்பு நீங்கும் வகையில் சிறிது நேரம் உறங்கி எழுந்தனர். பொழுது சாயும் வேளையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினர்.

குளத்தங்கரையிலும் கடைத்தெருவிலும் கோவில் வாசலிலும் கூடியிருந்த பெண்கள் அனைவரும் மூன்று சகோதரர்களையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்தனர். “பெரிய ஊட்டுக்காரம்மாவுக்கு யோகம்தான். ஒரு மாப்பிள்ளைக்கு மூனு மாப்பிள்ளைங்க தயாரா இருக்காங்க.  அவ பெத்த பொண்ணு யாருக்கு கழுத்து நீட்டப் போறாளோ தெரியலை” என்று தமக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டனர். அவர்கள் ரகசியமாகப் பேசினாலும் அவர்களுடைய பேச்சை மூன்று பேரும் கேட்டு மனத்துக்குள் ரசித்தபடி நடந்தார்கள்.

இரவு உணவுக்குப் பிறகு மூன்று சகோதரர்களும் வாசலில் போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தனர். அவர்களோடு அத்தையும் உட்கார்ந்து கதை பேசத் தொடங்கினார். பேச்சோடு பேச்சாக அவர்கள் வந்த காரணத்தை விசாரித்தார். அனைவருக்கும் முன்னால் மூத்த சகோதரன் “அப்பா சாகறதுக்கு முன்னால அத்தை பொண்ண கல்யாணம் செஞ்சிக்கடான்னு சொன்னாரு. அதனால கல்யாணம் செஞ்சிக் கொடுங்கன்னு கேக்கறதுக்குத்தான் அத்தை வந்திருக்கேன்” என்றான்.

அவன் சொல்லிமுடிக்கும் வரை காத்திருந்த பிற இரு சகோதரர்களும் தம் அப்பாமார்கள் சாகும் சமயத்தில் சொன்ன வாசகத்தைக் குறிப்பிட்டு, தமக்கே திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

ஒரே ஒரு கணம் அவள் மனத்துக்குள் பொங்கிய மகிழ்ச்சி அடுத்த கணமே அப்படியே அடங்கிவிட்டது. ஒரு புதிய குழப்பம் தம் வீட்டைத் தேடி வந்துள்ளதாக அவளுக்குத் தோன்றியது. இருப்பதோ ஒரே மகள். மணம் செய்துகொள்ள விரும்புகிறவர்களோ மூன்று பேர். மூன்று பேருமே தன் அண்ணன் பிள்ளைகள். யாருக்குக் கொடுப்பது, யாருக்கு மறுப்பது என்று புரியாமல் அவள் மனம் போராடியது.

வெளியூருக்குச் சென்றிருந்த அத்தையின் கணவர் அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பிவந்தார். வாசலில் கட்டிலில் அமர்ந்திருந்த விருந்தினரைப் பார்த்துவிட்டு மகிழ்ந்தார். “உங்களையெல்லாம் பார்க்கும்போது உங்க அப்பாக்களையே பார்க்கறமாதிரி இருக்குது” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் உரையாடினார்.

அதுதான் தக்க சமயம் என்று நினைத்த அத்தை, அப்போது அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தைப்பற்றி கணவனிடம் எடுத்துரைத்தாள். அவர் அதைக் கேட்டு குழம்பினார். “நமக்கு இருப்பதோ ஒரே ஒரு பெண். மூனு பேருக்கும் எப்படி கொடுக்கமுடியும்?” என்று கேட்டார். முடிவே இல்லாமல் உரையாடிக்கொண்டிருந்தார்களே தவிர, அவர்களால் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை. இறுதியில் அத்தையின் கணவர் “சரி, அதைப் பத்தி ரொம்ப யோசிச்சி மனசைக் குழப்பிக்காதீங்க. தூங்குங்க. காலையில இதுக்கு ஒரு தீர்வை யோசிச்சி சொல்றேன்” என்று சொல்லிவிட்டு குளிப்பதற்குச் சென்றார்.

குளித்துவிட்டுத் திரும்பிய கணவனுக்கு அத்தை உணவு பரிமாறினாள். “என்னங்க இது, பட்டுனு இப்படி ஒரு முடிவை சொல்லிட்டீங்க. நாளைக்கு என்ன தீர்வு  சொல்லப் போறீங்க?” என்று கவலையோடு கேட்டாள். “நாளைக்கு நடக்கப் போறது நல்லதாவே நடக்கும்னு நெனச்சிகிட்டு, எந்தக் குழப்பமும் இல்லாம நீயும் தூங்கு” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு சாப்பிடத் தொடங்கினார்.

பொழுது விடிந்தது. எல்லோரும் குளத்தங்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். ஏதேதோ ஊர்க்கதைகள் பேசியபடி சாப்பிட்டார்கள். பிறகு மூவரையும் கூடத்தில் அமரவைத்து பொறுமையாகப் பேசத் தொடங்கினார்.

“இங்க பாருங்கப்பா, எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. உங்க மூனு பேருக்கும் அவளைக் கட்டிக்கிற உரிமை இருக்குது. ஆனா மூனு பேருக்கும் ஒரு பொண்ண எப்படி கட்டிக்கொடுக்கமுடியும்? ஒருத்திக்கு ஒருத்தன்ங்கறதுதான உலக நீதி?” என்று சொன்னார்.

அவர் சொல்லப் போகும் தீர்வுக்காக மூன்று பேரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

”உங்க மூனு பேருல யாருக்கு உயர்வான தகுதி இருக்குதுன்னு தெரிஞ்சிக்கறதுக்காக நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். உங்க மூனு பேருக்கும் ஆளுக்கு பத்து வெள்ளி கொடுப்பேன். நீங்க அதை எடுத்துகிட்டு புறப்படுங்க. இந்தப் பணத்தை வச்சி நீங்க எதை வேணும்னாலும் வாங்கிக்கலாம். திரும்பி வரும்போது நீங்க வாங்கிட்டு வரக்கூடிய பொருள் என்னன்னு நான் பார்ப்பேன். யாரு கொண்டுவரக்கூடிய பொருள் ரொம்பரொம்ப முக்கியமானதாவும் ரொம்ப உயர்ந்ததாவும் இருக்குதோ, அவுங்க எங்க பொண்ணு கழுத்துல மாலை போடலாம். அதுதான் திட்டம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.

மூன்று பேரும் ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்துகொண்டனர். பிறகு அவர் சொன்ன திட்டத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

உடனே அவர் அறைக்குள் சென்று முப்பது வெள்ளிப்பணம் கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் பத்து வெள்ளிப்பணம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அத்தையிடமும் மாமாவிடமும் விடைபெற்றுக்கொண்டு மூவரும் புறப்பட்டனர். கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு எட்டிப் பார்த்தபடி நின்றிருந்த அத்தை பெண்ணிடமும் கண்களாலேயே விடைபெற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் சத்திரத்தில் தங்கி மூவரும் ஊரைச் சுற்றிப் பார்த்தனர். சந்தையில் சுற்றி அலைந்தனர். எந்தப் பொருள் அபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என நினைத்து தேடித்தேடிப் பார்த்தனர். எந்தப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு கணம் மிகமிகப் பயனுள்ளதாகத் தோன்றியது. அடுத்த கணமே அது சாதாரணமாகவும் தோன்றியது. சரியான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறினர்.

ஊரூராகச் சென்றுகொண்டிருந்தார்களே தவிர, ஒரு முறை கூட ஒரு பொருளைக் கூட அவர்கள் வாங்கவில்லை. எது மிகச்சிறந்தது என அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் கடந்துவிட்டது.

ஒரு கிராமத்துச்சந்தையில் ஒரு வியாபாரி ஒரு மரத்தடியில்  அழகாக மரச்சட்டங்கள் பொருத்தப்பட்ட ஒரு கண்ணாடியை எல்லோருடைய பார்வையிலும் படும்படி சாய்த்தநிலையில் விற்பனைக்காக வைத்துவிட்டு, அதற்குப் பக்கத்தில் நின்றிருந்தான்.

மூத்த சகோதரன் அந்தக் கண்ணாடியைப் பார்த்துவிட்டு, அதற்குப் பக்கத்தில் சென்றான். அந்தக் கண்ணாடியில் அவன் உருவம் பிரதிபலித்தது. அவன் நகரநகர, அந்த ஆடிப்பிம்பமும் நகர்ந்தது. அவன் படிமம் தெரிந்ததே தவிர, வேறு எவ்விதமான புதுமையும் தெரியவில்லை.

கண்ணாடிக்குப் பக்கத்தில் நின்றிருந்தவனிடம் “இந்தக் கண்ணாடி என்ன விலை?” என்று கேட்டான். அந்த வியாபாரி “பத்து வெள்ளிப்பணம்” என்றான். “இது சாதாரண கண்ணாடிதானே? அதற்கு ஏன் இந்த விலை சொல்கிறாய்?” என்று கேட்டான் மூத்த சகோதரன்.

அதற்கு அந்த வியாபாரி சிரித்துக்கொண்டே ”இது பார்ப்பதற்குத்தான் சாதாரணமான கண்ணாடி போலத் தோன்றும். ஆனால் இக்கண்ணாடிக்கு ஒரு விசித்திரமான சக்தி இருக்கிறது. அதனால்தான் அந்த விலை” என்றான்.

“அப்படி என்ன விசித்திரமான சக்தி? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க” என்று கேட்டான் மூத்த சகோதரன்.

“உலகத்திலே எல்லாக் கண்ணாடிகளும் பார்க்கிறவங்களுடைய முகங்களை மட்டும்தான் காட்டும் அல்லவா? அந்த மாதிரியான கண்ணாடிகளைத்தான் நீங்களும் இதுவரை பார்த்திருப்பீங்க. இந்தக் கண்ணாடியையும்  முகம் பார்க்கிற கண்ணாடியா பயன்படுத்தலாம். அதையும் தாண்டி ஒரு வேலையைச் செய்யும். உயரமானா ஒரு இடத்துக்கு இந்தக் கண்ணாடிய எடுத்துட்டுப் போய் சாய்ச்சி வச்சிட்டு, இதுக்கு முன்னால நின்னு ஒரு முக்கியமான மந்திரத்தைச் சொன்னா போதும். உடனே, அந்த நிமிஷத்துல  உலகத்துல எந்த மூலையில என்னென்ன விஷயங்கள் நடக்குதுங்கற தகவலையெல்லாம் காட்டும். அதுதான் இந்தக் கண்ணாடியுடைய சிறப்பான சக்தி”

“அது என்ன மந்திரம்?”

“நீங்க இந்தக் கண்ணாடியை வாங்கினா, உங்களுக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுப்பேன்”

வியாபாரி சொன்ன தகவலைக் கேட்டு மூத்த அண்ணன் மகிழ்ச்சியில் மூழ்கினான். இதைவிட சிறப்பான பயனுள்ள பொருள் உலகத்திலே வேறெதுவும் இருக்கமுடியாது  என்று முடிவுகட்டினான். உடனே தன்னிடம் இருந்த பத்து வெள்ளியையும் கொடுத்து அந்தக் கண்ணாடியை வாங்கிக்கொண்டான்.

வியாபாரியும் அவனை அருகில் அழைத்து அவன் காதருகில் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். “ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது. மனப்பாடமா மனசுக்குள்ளயே வச்சிக்குங்க” என்றான்.

அதே சந்தையில் தானும் எதையாவது சிறப்பான ஒன்றைத் தேடி வாங்கிவிட வேண்டும் என நினைத்த இரண்டாவது  அண்ணன் வேறொரு திசையில் நடக்கத் தொடங்கினான். ஒரு மரத்தடியில் ஒரு வியாபாரி வித்தியாசமான ஒரு பொருளை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். அழகாகச் சீவப்பட்ட மரச்சட்டங்களையும் பலகைகளையும் இணைத்து சக்கரங்களைப் பொருத்தி  உருவாக்கிய ஒரு சிறிய தேர் அவருக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது அண்ணன் அந்தத் தேருக்கு அருகில் சென்று தொட்டுப் பார்த்தான்.  அதன் வசீகரம் அவனைக் கவர்ந்தது. “இது என்ன விலை?” என்று கேட்டான்.

“பத்து வெள்ளி” என்று பதில் சொன்னார் வியாபாரி.

“மரத்தால் செய்யப்பட்ட சாதாரண தேர்தானே இது? சின்னப் பிள்ளைகள் வைத்து விளையாடுவதற்கு ஏற்ற தேர். அவ்வளவுதானே? இதற்கு ஏன் இந்த விலை?”

அதற்கு அந்த வியாபாரி சிரித்துக்கொண்டே ”இது பார்ப்பதற்குத்தான் சாதாரணமான தேர் மாதிரி தெரியும். ஆனால் இந்தத் தேருக்கு ஒரு விசித்திரமான சக்தி இருக்குது. அதனால்தான் அந்த விலை” என்றான்.

“அப்படியா? என்ன சக்தி?”

“உலகத்திலே இந்த மாதிரி செய்யப்பட்ட எல்லாத் தேர்களும் சின்னப் பிள்ளைகள் கூடி இழுத்து விளையாடக்கூடிய தேர்கள்தான். அந்த மாதிரியான தேர்களைத்தான் நீங்களும் இதுவரை பார்த்திருப்பீங்க. இந்தத் தேரையும் பிள்ளைகள் விளையாடக்கூடிய  தேரா பயன்படுத்தலாம். ஆனால், அதையும் தாண்டி இந்தத் தேரு ஒரு வேலையைச் செய்யும். அதாவது, இந்தத் தேரு பலகையில உக்காந்துகிட்டு, நீங்க போகவேண்டிய இடத்தை மனசுல நெனச்சிகிட்டு ஒரு முக்கியமான மந்திரத்தைச் சொன்னா போதும். உடனே, அதே நிமிஷத்துல இந்தத் தேரு பறக்க ஆரம்பிச்சி உங்களை அந்த இடத்துல சேர்த்துடும். அதுதான் இந்தத் தேருடைய சிறப்பான சக்தி. அதனாலதான் அந்த விலை”

“அது என்ன மந்திரம்?”

“நீங்க இந்தத் தேரை வாங்கினா, உங்களுக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுப்பேன்”

வியாபாரி சொன்ன தகவலைக் கேட்டு இரண்டாவது அண்ணன் மகிழ்ச்சியில் மூழ்கினான். அக்கணமே இதைவிட சிறப்பான பயனுள்ள பொருள் உலகத்திலே வேறெதுவும் இருக்கமுடியாது  என்று முடிவுகட்டினான். உடனே தன்னிடம் இருந்த பத்து வெள்ளியையும் கொடுத்து அந்தத் தேரை வாங்கிக்கொண்டான்.

வியாபாரியும் அவனை அருகில் அழைத்து அவன் காதருகில் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். “ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது. மனப்பாடமா மனசுக்குள்ளயே வச்சிக்குங்க” என்றான்.

இரண்டு அண்ணன்மார்களும் ஆளுக்கொரு பொருளை வாங்கிக்கொண்டதும் இளைய தம்பிக்கு தானும் இதே சந்தையில் அவர்கள் வாங்கியதைவிட சிறப்பான  ஒரு பொருளைத் தேடி வாங்கவேண்டும் என நினைத்தான். சந்தையைச் சுற்றிச்சுற்றித் தேடினான். ஏதேனும் அபூர்வமான பொருள் பார்வையில் படுகிறதா என பார்த்துக்கொண்டே நடந்தான்.

ஒரு திருப்பத்தில் ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு நின்றார். அதன் வடிவமைப்பு மிகவும் விசேஷமாக இருந்தது. அவன் உடனே அதை வாங்கிவிட தீர்மானித்தான். அந்த வியாபாரியிடம் சென்று “இந்தக் கைத்தடி என்ன விலை பெரியவரே?” என்று கேட்டான். அவர் உடனே “பத்து வெள்ளிப்பணம்” என்றார். அந்தக் கைத்தடிக்கு அவர் சொல்லும் விலை மிக அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது. “இது சாதாரண கைத்தடிதானே? இதற்கு ஏன் இந்த விலை? இதை என்ன தங்கத்தாலயா செஞ்சிருக்காங்க?” என்று கேட்டான்.

அந்த வியாபாரி அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே “இது தங்கத்தால செஞ்ச கைத்தடி இல்லைங்கறது உண்மைதான். ஆனால் தங்கத்தால கெடைக்கக்கூடிய நன்மையைவிட இந்த கைத்தடி அதிக நன்மையைச் செய்யும். அதனாலதான் அந்த விலை” என்றார்.

“அப்படி என்ன நன்மையைச் செய்யும்?” என்று ஆர்வத்தோடு கேட்டான் இளைய தம்பி.

“நீங்க பார்த்திருக்கிற கைத்தடியெல்லாம் புடிச்சி நடக்கறதுக்கு மட்டும்தான் பயன்படும். இந்தத் தடிக்கு அதுக்கு மேலயும் ஒரு பயன் உண்டு. யாராவது உங்களுக்கு வேண்டப்பட்டவங்க, உங்க மேல பிரியமா இருக்கிறவங்க  ஏதோ ஒரு காரணத்தால தேள் கடியாலயோ, பாம்புக்கடியாலயோ, காலரா பேதியாலயோ செத்துட்டாங்கன்னு வைங்க, அப்ப இந்தத் தடியை வச்சி அவுங்கள காப்பாத்திடலாம்”

“அது எப்படி? செத்துப்போனவங்களை பொழைக்கவைக்கறதா? ஆச்சரியமா இருக்குதே”

“கழுதைப்பால்ல அஞ்சாறு சொட்டு கஸ்தூரி தைலத்தை கலந்து, அதுக்குள்ள இந்தக் கைத்தடி நுனியை வச்சி நனைச்சி எடுத்து, செத்துப் போனவங்க வாயைத் தெறந்து வாய்க்குள்ள விழறமாதிரி செஞ்சி, ஒரு மந்திரத்தை முணுமுணுக்கணும். உடனே, செத்துப் போனவங்க உயிரோடு எழுந்து உக்காந்துடுவாங்க”

“அது என்ன மந்திரம்?”

“நீங்க இந்தக் கைத்தடியை வாங்கினா, உங்களுக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுப்பேன்”

வியாபாரி சொன்ன தகவலைக் கேட்டு இளைய தம்பி மகிழ்ச்சியில் மூழ்கினான். அக்கணமே இதைவிட சிறப்பான பயனுள்ள பொருள் உலகத்திலே வேறெதுவும் இருக்கமுடியாது  என்று முடிவுகட்டினான். உடனே தன்னிடம் இருந்த பத்து வெள்ளியையும் கொடுத்து அந்தக் கைத்தடியை வாங்கிக்கொண்டான்.

வியாபாரியும் அவனை அருகில் அழைத்து அவன் காதருகில் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். “ஒருநாளும் இந்த மந்திரத்தை மறக்கக்கூடாது. மனப்பாடமா மனசுக்குள்ளயே வச்சிக்குங்க” என்றான்.

மூன்று சகோதரர்களும் தாம் வாங்கிய மூன்று சிறப்புப் பொருட்களோடு அத்தையின் ஊருக்குத் திரும்பி நடந்தனர்.

”நாம ஊரைவிட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷமே முடியப் போவுது. நம்மால இப்பதான் நாம நினைச்சபடி பொருளை வாங்கமுடிஞ்சது. அத்தை ஊருல என்னென்ன நடந்ததோ, நம்ம அத்தை பொண்ணு எப்படி இருக்கறாளோ, எதுவுமே தெரியலை. என்கிட்ட இருக்கற கண்ணாடியில உலகத்துல என்ன நடக்கதுங்கற விஷயத்தை இருந்த இடத்துலேர்ந்தே தெரிஞ்சிக்கலாம். வாங்க, அந்த குன்று உச்சிக்குப் போய் நின்னு பார்க்கலாம்”   என்று சொன்னான் மூத்த சகோதரன்.

உடனே அனைவரும் அந்தக் குன்றின் உச்சியை நோக்கி நடந்தனர். அங்கே உயரமான ஒரு பாறை காணப்பட்டது. அதன் மீது கண்ணாடியைச் சாய்த்துவிட்டு, மூத்த சகோதரன் மனப்பாடம் செய்துவைத்திருந்த மந்திரத்தை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்தான்.

சில நொடிகளில் கண்ணாடியில் காட்சிகள் தெரியத் தொடங்கின. முதலில் அத்தையின் வீட்டு முற்றமும் வாசலோரம் நின்றிருந்த மரங்களும் தெரிந்தன. முற்றத்தில் ஏராளமான உறவுக்காரர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அத்தையும் மாமாவும் ஒரு கட்டிலோரமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். கட்டிலில் அத்தை மகள் பிணமாகக் கிடந்தாள்.

அந்த நொடியே அங்கே நடப்பது என்ன என அவர்களுக்குப் புரிந்துவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதையும் அத்தை மகள் இறந்துவிட்டதையும் அவர்கள் அக்கணமே புரிந்துகொண்டனர். அந்த அத்தை மகளைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்காகத்தானே இந்த அளவுக்குப் பாடுபட்டோம், அவள் இப்படி திடீரென இறந்துவிட்டால் எதிர்காலமே இருண்டுபோய்விடுமே என நினைத்து நினைத்து துயரத்தில் மூழ்கினார்கள். எப்படியாவது ஊருக்குச் சென்று அவளைக் காப்பாற்ற வேண்டுமே என அவர்கள் மனம் பரபரத்தது.

அப்போது இரண்டாவது சகோதரன் “கவலைப்பட வேண்டாம். நாம எல்லாருமே இந்தக் கணமே அங்கே போய் சேர என்னிடம் இருக்கற தேர் உதவும். தைரியமாக இருங்கள்” என்று அமைதிப்படுத்தினான். 

“என்னடா சொல்ற? மரத்தேருல எப்படிடா போகமுடியும்?” என்று கேட்டான் மூத்த அண்ணன்.

“ஆமாம்ண்ணே. நான் வாங்கி வச்சிருக்கிற தேருல அந்த வசதி இருக்குது. அதுதான் இதனுடைய சிறப்பம்சம்” என்று பதில் சொன்னான் இரண்டாவது சகோதரன்.

இரு சகோதரர்களையும் தன்னுடைய தேரில் ஏறி உட்கார்ந்துகொள்ளச் சொன்னான். பிறகு அவனும் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டான்.  மனப்பாடம் செய்துவைத்திருந்த மந்திரத்தை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்தான்.

சில நொடிகளில் தேர் விண்ணில் பறக்கத் தொடங்கியது. மின்னல் வேகத்தில் மேகங்களைத் துளைத்துக்கொண்டு பறந்தது. சிறிது நேரத்துக்குள்ளேயே அவர்கள் பயணம் செய்த தேர் அத்தை வீட்டு முற்றத்தில் இறங்கியது.

தேரில் இருந்து இறங்கிய மூன்று பேரையும் பார்த்து அத்தையும் மாமாவும் ஓவென்று கதறிக்கதறி அழுதார்கள். அவர்கள் மூவரும் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அத்தை மகளை துயரத்தோடு பார்த்தார்கள். அவர்கள் விழிகளிலிருந்தும் கண்ணீர் பெருகி வழிந்தது.

“நேத்து வரைக்கும் நல்லாதாம்பா இருந்தது. நேத்து ராத்திரி சாப்பிடற சமயத்துல கூட என்னம்மா போய்ட்டுவரேன்னு கெளம்பிப் போன மாமன்கள்ல ஒருத்தர் கூட திரும்பி வரலையேன்னு கேட்டா. காலையில தூங்கி எழுந்ததும் வாசலப் பெருக்கிட்டு சாணம் தெளிக்கறதுக்காக சாணத்தை எடுக்க தொழுவத்துக்குப் போனா. திரும்பி வரும்போது ஒரு தேள் கடிச்சிடுச்சி.  ஓடிப் போய் வைத்தியரை அழச்சிட்டு வரதுக்குள்ள உயிரு போயிடுச்சிப்பா. மாமன கல்யாணம் கட்டிகிட்டு எப்படிஎப்படியோ வாழணும்னு கனவு கண்டிருந்த பொண்ணு இப்படி சிலையாட்டம் பொணமா கெடக்கறாளே, பாருப்பா”

அத்தையின் அழுகை அவர்களுடைய துக்கத்தை இன்னும் பல மடங்காகப் பெருக்கியது.

அப்போது இளைய தம்பி “யாரும் கவலைப்படாதீங்க. அவளைப் பொழைக்க வைக்கிற மருந்து என்கிட்ட இருக்குது” என்று அனைவரையும் அமைதிப்படுத்தினான்.

எல்லோருடைய அழுகையும் சட்டென நின்றது. எல்லோருமே அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். “உண்மையைத்தான் சொல்றேன். என் பேச்ச நம்புங்க” என்றபடி அவன் தன்னிடம் இருந்த கைத்தடியை எடுத்தான்.

“இந்தத் தடியை வச்சிகிட்டு எப்படி பொழைக்கவைக்க முடியும்?” என்று அருகிலிருந்தவர்கள் சந்தேகத்தோடு கேட்டனர்.

“அதுதான் இந்தக் கைத்தடியுடைய சிறப்பு சக்தி. அதனாலதான் நான் இதை வாங்கிவந்தேன்” என்றான் இளையவன். பிறகு “எனக்கு கொஞ்சம் கழுதைப்பாலும் கஸ்தூரி தைலமும் வேணும்” என்று கேட்டான். உடனே ஆட்கள் ஓடினார்கள்.

கிழக்குத் திசையில் சென்றவர்கள் அங்கே தென்னந்தோப்புக்கு அருகில் மேய்ந்துகொண்டிருந்த கழுதையைப் பிடித்து நிறுத்தி பால் கறந்துகொண்டுவந்து கொடுத்தார். மேற்குத் திசையில் சென்றவர்கள் அங்கிருந்த வைத்தியரின் வீட்டுக்குச் சென்று விஷயத்தைச் சொல்லி கஸ்தூரி தைலத்தை ஒரு சின்ன புட்டியில் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

இரண்டும் வந்து சேர்ந்ததும் கஸ்தூரி தைலத்தை கழுதைப்பாலில் கலந்து நன்றாகக் கலக்கினான் இளையவன். கட்டிலுக்கு அருகில் சென்று கட்டிலின் காலடியில் புட்டியை வைத்தான். தன்னிடம் இருந்த கைத்தடியை எடுத்து, அதன் ஒரு நுனியை அந்தக் கரைசலில் நன்றாக நனைத்தான்.  பிறகு கண்களை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்துவைத்திருந்த மந்திரத்தை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்தான்.

அடுத்து, அண்ணன்மார்களிடம் அத்தை மகளின் வாயைத் திறந்த நிலையில் பிடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். இரண்டு அண்ணன்களும் நகர்ந்து அத்தைமகளின் வாயைத் தொட்டு திறந்த நிலையில் அமைந்திருக்கும்படி பிடித்துக்கொண்டனர். அடுத்த கணமே கைத்தடியின் நுனியை உயர்த்தி அவளுடைய உதடுகளுக்கிடையில் வைத்து பால்துளிகள் வாய்க்குள் விழும் வகையில் பிடித்தான். நாலைந்து சொட்டுகள் அவள் வாய்க்குள் விழுந்தன.

அடுத்த நொடியே தூங்கி எழுபவளைப்போல விழிகளைக் கசக்கியபடி கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் அவள். அவள் உயிர்பெற்று எழுந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அத்தையும் மாமாவும் “ரொம்ப நன்றிப்பா. ரொம்ப நன்றி. சரியான நேரத்துல கடவுள் மாதிரி வந்து என் பொண்ண காப்பாத்திட்ட” என்று சொன்னபடி இளையவனின் கையைப் பிடித்துக்கொண்டனர்.  துயரத்தில் மூழ்கியிருந்த வீடு ஒரு சில நொடிகளிலேயே மகிழ்ச்சி ததும்பும் வீடாக மாறியது.

கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வீட்டைவிட்டு வெளியேறினர். எல்லோரும் புறப்பட்டுச் சென்ற பிறகு, அத்தையும் மாமாவும் அத்தை மகளும் மட்டுமே அங்கே நின்றிருந்தனர். அத்தை தன் மகளைக் குளித்துவிட்டு வரச்சொல்லி திருஷ்டி கழித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

இளைய தம்பி பெருமை ததும்பிய முகத்துடன் அத்தையிடம் “அத்தை, இங்க பாருங்க. நான்தான் அவளைப் பொழைக்க வச்சேன். எனவே அவளை நீங்க எனக்குத்தான் திருமணம் செஞ்சிகுடுக்கணும்” என்று சொன்னான்.

அதைக் கேட்டு இரண்டாவது அண்ணன் புன்னகைத்தபடி “அது எப்படி? அதுல ஒரு நியாயமும் இல்லையே. நாங்க எல்லோருமே பல நூறு மைல் தூரத்துக்கு அப்பால ஒரு ஊருல இருந்தோம். அவள் இறந்துபோன செய்தியைப் பார்த்ததுமே கண்ணைமூடி கண்ணைத் தெறக்கறதுக்குள்ள மின்னல் வேகத்துல நாங்க இங்க வந்து சேரறதுக்கு நான் வச்சிருந்த தேருதான் உதவியா இருந்தது. அவன் வேணும்ன்னா அவளை உயிர்பொழைக்க வச்சிருக்கலாம். ஆனால், உயிர்பொழைக்க வைக்க வசதியா சரியான நேரத்துக்கு எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தது நான்தான். அதனால அவளை நீங்க எனக்குத்தான் திருமணம் செஞ்சி குடுக்கணும்” என்றான்.

அவன் சொல்லி நிறுத்தியதும் மூத்த அண்ணன் தொடங்கினான். “இங்க பாருங்க அத்தை. அவன் உயிர் பொழைக்கவச்சவனா இருக்கலாம். இங்க சீக்கிரமா வந்து சேர அவனுடைய தேர் உதவியா இருக்கலாம். நான் அதை மறுக்கலை. ஆனா, நாங்க எங்கோ கண்காணாத இடத்துல தொலைதூரத்துல ஏதோ ஒரு கிராமத்துல நடந்துட்டிருந்த சமயத்துல, இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கறதுக்கு உதவியா இருந்தவன் நான். என்னுடைய கண்ணாடி இல்லைன்னா, இப்படி ஒரு மரணம் நிகழ்ந்ததே எங்களுக்குத் தெரியாம போயிருக்கும். நியாயப்படி அவளை நீங்க எனக்குத்தான் கல்யாணம் செஞ்சி வைக்கணும்.  எது செஞ்சாலும் யோசிச்சி செய்ங்க” என்றான்.

மூன்று பேருடைய வாதங்களிலும் உண்மை இருந்ததால், அத்தையும் மாமாவும் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார்கள்.  எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பினார்கள். தற்சமயம் தொடரும் விவாதத்தை நிறுத்தும் வகையில் “அதைப்பத்தியெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க ரொம்ப தூரத்துலேர்ந்து வந்திருக்கீங்க. முதல்ல குளிச்சிட்டு சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க. அதுக்கப்புறம் கல்யாணத்தைப் பத்தி பேசி முடிவெடுக்கலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். மூன்று பேரும் தங்குவதற்கு தனித்தனியாக அறைகளை ஏற்பாடு செய்தார்கள். அவர்களும் குளித்துமுடித்து திரும்பிய கையோடு சாப்பிட்டுவிட்டு களைப்பின் காரணமாக உறங்குவதற்குச் சென்றனர்.

அப்பாவும் அம்மாவும் மகளும் மனம் குழம்பிய நிலையில் வாசலிலேயே உட்கார்ந்து தமக்கு வந்திருக்கும் பிரச்சினையைப்பற்றி பல கோணங்களில் சிந்தித்து உரையாடிக்கொண்டிருந்தனர்.

இரண்டுமூன்று மணி நேரம் உரையாடல் நிகழ்த்திய பிறகும் அவர்களால் ஒருமித்த கருத்தை அடையமுடியவில்லை. அந்த நேரத்தில் வாசலில் ஒரு பெரியவர் வந்து நின்றார். காவி வேட்டி கட்டியிருந்தார். நீண்ட தாடியோடு நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்தார். காசி தரிசனத்தை முடித்துக்கொண்டு நடந்தே வருவதாகவும் ராமேஸ்வரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பசிக்கு உணவு கேட்டார். அத்தை அவரை திண்ணையிலேயே அமர வைத்துவிட்டு ஒரு வாழை இலையைப் பறித்து வந்து அவருக்கு உணவு பரிமாறினார்.

உண்டுமுடித்து எழுந்துவந்த பெரியவரிடம் மூவரும் ஆசி பெற்றனர். மூன்று பேருடைய முகத்திலும் கவலை படிந்திருப்பதைப் பார்த்த அவர் “நீங்க எல்லாருமே ரொம்ப சோகத்துல முழுகியிருக்கிற மாதிரி தெரியுதே? என்ன செய்தி? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க” என்று கேட்டார். அவர்கள் தம் பிரச்சினையை அவரிடம் சுருக்கமாகத் தெரிவித்தனர். அவர்கள் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டார் பெரியவர். அதே நேரத்தில் உறங்கி விழித்த மூன்று சகோதரர்களும் வெளியே வந்தனர். வந்திருப்பவரைப்பற்றி தெரிந்துகொண்டதும் அவர்களும் நெருங்கிவந்து பெரியவரின் காலைத் தொட்டு வணங்கினர். அவர்கள் சொன்னதையும் பெரியவர் கேட்டுக்கொண்டார். 

எல்லோரையும் வெளியே நின்று காத்திருக்கும்படி சொல்லிவிட்டு பெரியவர் அந்தப் பெண்ணிடம் பேசினார்.

“ஐயா, யாராவது ஒரு ஆளைத்தான் என்னால திருமணம் செஞ்சிக்கமுடியும். இப்படி மூனு பேரும் வந்து நின்னா, எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்குதுய்யா”

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவள் அழுகை நீண்டுவிடாதபடி அவளை அமைதிப்படுத்திய பெரியவர் “சரி, நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேட்டுக்கோ. எதுவா இருந்தாலும் நீதான் முடிவெடுக்கணும். நான் ஒரு முடிவை நினைச்சி அதை உன் மேல திணிக்கிறதுல அர்த்தமே இல்லை” என்று சொன்னார்.

“சொல்லுங்க ஐயா” என்றாள் அவள்.

“எலும்பே இல்லாத ஒரு எருமை இருக்குது. கையே இல்லாத ஒருத்தன் வந்து அந்த எருமைகிட்ட பால் கறக்கறான். வாயே இல்லாத ஒருத்தன் அந்தப் பாலை வாங்கி மடமடன்னு குடிக்கிறான். இதைப்பத்தி நல்லா ஆழமா யோசிச்சி பார்த்துட்டு ஒரு முடிவை எடு”

அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. கடகடவென அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவள் மட்டும் கதவை மூடிக்கொண்டு அறையிலேயே அமர்ந்து நீண்ட நேரமாக யோசனையில் மூழ்கியிருந்தாள்.

பொழுது சாய்ந்த வேளையில் அறையைவிட்டு வெளியே வந்தாள் அவள். முகம் கழுவி தலைசீவி பூமுடித்து திருத்தமான முகத்துடன் சமையலறைக்குச் சென்றாள். ஒரு தம்ளர் நிறைய பாலை ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அங்கே அவளுடைய பெற்றோரும் மாமா பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர்.

அவள் தம் மாமா பிள்ளைகள் முன்னால் சென்று தன்னிடம் இருந்த பால் தம்ளரை வைத்து ,”இந்தாங்க. மூனு பேரும் இந்த பாலை குடிங்க. ஆனா மூனு பேரும் ஒரே சமயத்துல, ஒன்னா குடிக்கணும். அதுதான் முக்கியமான ஒரே நிபந்தனை” என்று சொன்னாள்.

மூன்று சகோதரர்களும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் முதலில் பார்த்துக்கொண்டனர். பிறகு அவள் பக்கமாகத் திரும்பி “மூனு பேரும் ஒரே சமயத்துல எப்படி பால் குடிக்கமுடியும்?” என்று கேட்டனர்.

”மூனு பேரும் ஒரே பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க நினைக்கிறது சரியான விஷயம்னு சொன்னா, மூனு பேரும் ஒரே தம்ளர்ல பால் குடிக்கறது மட்டும் எப்படி சரியில்லாத விஷயமாவும்” என்று கேட்டாள் அவள். அவள் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பேசுவதற்கு வார்த்தையில்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நீங்க மூனு பேரும் சேர்ந்துதான் என்னை காப்பாத்தியிருக்கீங்க. நான் இதோ இப்ப இங்க நின்னு பேசிட்டிருக்கறதுக்கு நீங்கதான் மூலகாரணம். இந்த உயிர் நீங்க கொடுத்தது. இது எனக்கு ரெண்டாவது ஜன்மம். நீங்க மூனு பேருமே எனக்கு ஒருவகையில பெத்தவங்களுக்குச் சமம். ஒரு அப்பாவும் பொண்ணும் கல்யாணம் செஞ்சிகிட முடியுமா? அப்படி எங்கயாவது இந்த உலகத்துல நடந்திருக்குதா? ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க”

அவளுடைய கேள்விக்கு அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. சிலை போல அமைதியாக நின்றிருந்தனர்.

“உங்கள்ல யாரையுமே என்னால திருமணம் செஞ்சிக்க முடியாது. தயவுசெய்து உங்களுக்குப் பொருத்தமான ஒரு பொண்ணைப் பார்த்து நீங்க கல்யாணம் செஞ்சிக்கணும்”

அவள் சொல்லுக்கு மூன்று சகோதரர்களுமே கட்டுப்பட்டனர். அக்கணமே அவளிடமும் அத்தையிடமும் மாமாவிடமும் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.

அன்று இரவு சாப்பிடும் வேளையில் அவளுடைய பெற்றோர் அவளிடம் “எப்படிடி உனக்கு இந்த யோசனை வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டனர். “எல்லாமே அந்தப் பெரியவர் சொன்ன யோசனைதாம்மா. அவர்தான் சரியான நேரத்துல கடவுள் மாதிரி வந்து அந்தக் குழப்பத்திலேர்ந்து விடுவிச்சார்” என்றாள் அவள்.

“அப்படி என்ன யோசனை சொன்னார்?” என்று கேட்டாள் அவளுடைய அம்மா.

“அவரு எதையும் நேரிடையா சொல்லலைம்மா.  நாமே யோசிச்சி புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு புதிர் போல சொல்லிட்டுப் போயிட்டார்”

“அது என்ன புதிர்? தெளிவா சொல்லுடின்னா நீயும் புதிர் மாதிரி பேசறியே?”

“எலும்பே இல்லாத ஒரு எருமை இருக்குது. கையே இல்லாத ஒருத்தன் வந்து அந்த எருமைகிட்ட பால் கறக்கறான். வாயே இல்லாத ஒருத்தன் அந்தப் பாலை வாங்கி மடமடன்னு குடிக்கிறான். இதைப்பத்தி நல்லா ஆழமா யோசிச்சி பார்த்துட்டு ஒரு முடிவை எடுன்னு சொன்னாரு”

அவள் சொன்னதை இருவரும் தமக்குள் பலமுறை முணுமுணுத்துப் பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. “என்னமோ விடுகதை மாதிரி இருக்குதுடி. ஒன்னுமே புரியலையே. நீ எப்படி புரிஞ்சிகிட்ட?” என்று கேட்டாள் அம்மா.

அந்தப் பெண் அவர்களுக்குப் புரிகிற வகையில் விளக்கமாகச் சொன்னாள்.

”அவர் சொன்ன சமயத்துல எனக்கும் எதுவுமே புரியலைம்மா. ஆனா யோசிக்க யோசிக்க எனக்கு எல்லாமே தெளிவா புரிய ஆரம்பிச்சிட்டுது. என்ன முடிவெடுக்கணும்ங்கறதைப் பத்தியும் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிட்டுது.  எலும்பே இல்லாத  எருமைன்னு சொன்னா வானத்துல இருக்கற மழைமேகம்னு அர்த்தம். காத்துதான் கையில்லாம பால் கறக்கற ஆளு. பூமிதான் வாயில்லாம அந்தப் பால குடிக்கிற ஆளு. மழை, காத்து, பூமி எல்லாமே சேர்ந்துதான் நமக்கு வாழ்க்கையைக் கொடுக்குது. ஒருவகையில நமக்கு பெற்றோர்கள் மாதிரி. மாமன் மகன்கள் மூனு பேருமே எனக்கு உயிர் கொடுத்த பெற்றோர்கள் மாதிரி. அவுங்க இல்லைன்னா எனக்கு இந்த மறுபிறப்பே கிடையாது. பெரியவர் கொடுத்த விளக்கத்தை அடிப்படையா வச்சித்தான் என்னால எந்தக் குழப்பமும் இல்லாம ஒரு முடிவை எடுக்கமுடிஞ்சது.”

மகளின் புத்திசாலித்தனத்தை நினைத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெருமையாக இருந்தது.

“நான் எடுத்த முடிவு பெரிய விஷயம் இல்லைம்மா. அது சரியான முடிவுதான்னு புரிஞ்சிகிட்டு அமைதியா திரும்பிப் போனாங்களே,  அவுங்க எடுத்த முடிவுதான் முக்கியமான முடிவு. நாம அவுங்களைத்தான் மனசாரப் பாராட்டணும்”

அம்மா தன் அண்ணன் மகன்களையும் அண்ணன்களையும் ஒரே சமயத்தில் நினைத்துக்கொண்டாள். அவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

 

(கிழக்கு டுடே – 21.03.2025)