Home

Tuesday, 1 April 2025

வண்ணக்கிளிஞ்சல்கள் - புதிய தொகுதியின் முன்னுரை

 

புதிதாக வெளிவந்திருக்கும் ‘வண்ணக்கிளிஞ்சல்கள்’ தொகுதியில் முப்பது கட்டுரைகள் உள்ளன. எல்லாமே என் அனுபவம் சார்ந்தவை. சில தருணங்களில் நான் பார்வையாளனாக மட்டும் இருந்திருக்கிறேன். சில தருணங்களில் பிறருடன் நானும் இணைந்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் அப்படிப்பட்ட தருணங்களையும் அனுபவங்களையும் நாட்குறிப்பின் பக்கங்களில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சொந்தக் குறிப்பாக ஏதோ ஒரு குறிப்பேட்டில் அது முடங்கியிருப்பதைவிட, அவற்றையெல்லாம் காட்சித்தன்மை கொண்ட கட்டுரைகளாக எழுதலாம் என ஏதோ ஒரு கட்டத்தில் தோன்றத் தொடங்கியது. மாதிரிக்காக ஒருசில கட்டுரைகளை எழுதி நண்பர்களிடம் காட்டினேன். அவர்களுக்கு அந்த வடிவம் மிகவும் பிடித்திருந்தது. அதே வடிவத்தில் தொடர்ந்து எழுதும்படி ஊக்கப்படுத்தினார்கள். நானும் ஒரு வேகத்தில் எழுதத் தொடங்கிவிட்டேன். கடந்த கால்நூற்றாண்டு காலமாக அத்தகு அனுபவக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறேன்.


ஒரு தன்வரலாற்றில் எழுதப்படுவதுபோல காலத்தொடர்ச்சி எதுவுமற்ற அனுபவக்குறிப்புகள் அவை. எழுத அமரும் நேரத்தில் நினைவில் எந்த அனுபவம் மோதி உடைத்துக்கொண்டு வெளிவருகிறதோ, அதை மட்டும் எழுதவேண்டும் என்பதுதான் நானே எனக்கு வகுத்துக்கொண்ட இலக்கணம்.

சென்னை கடற்கரையில் தொடங்கி, தென்னகத்தின் பல்வேறு கடற்கரைகளில் பொங்கிவந்து தரையைத் தொட்டுவிட்டுத் திரும்பும் அலைகளில் கால் நனைத்தபடியும் நுரையின் புன்னகையில் மனம் திளைத்தபடியும் நடந்து திரிந்திருக்கிறேன். அந்த அனுபவம் மகத்தானது.  பூச்சரத்தைப்போல தோற்றமளிக்கும் அலைச்சுருள்களைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி பெருகிக்கொண்டே இருக்கும். தெத்துப்பற்கள் போலக் காட்சியளித்தபடி கரையோர மணற்பரப்பில் ஒதுங்கியிருக்கும் கிளிஞ்சல்களைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கனவுலகத்தில் திளைத்திருப்பதுபோல இருக்கும்.  

ஒவ்வொரு கிளிஞ்சலுக்கும் ஒரு வடிவம். ஒரு நிறம். கண்ணைக் கவரும் கிளிஞ்சல்களை மட்டும் ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக்கொண்டே நடப்பேன். கைநிறைய சேர்ந்தபிறகு என்ன செய்வது என்று புரியாமல், கரையோர மணலைக் கூட்டி சதுரவடிவில் ஒரு தொட்டிபோல எழுப்பி, அதற்குள் வைத்துவிட்டு நடந்துவிடுவேன். எப்போதாவது ஒரு சிறுவனோ சிறுமியோ அங்கு வரக்கூடும், அவர்கள் பார்வையில் அக்கிளிஞ்சல்கள் தென்படக்கூடும், அவர்களுக்கு அவை விளையாட்டுப் பொருட்களாகலாம் என நானாகவே கற்பனையை வளர்த்துக்கொண்டு நடப்பேன்.

மீண்டும் கிளிஞ்சல்கள் தென்படும். மீண்டும் அவற்றைச் சேகரிப்பேன். மீண்டும் எங்காவது ஒரு மணல்தொட்டியை எழுப்பி அதற்குள் வைத்துவிட்டுச் சென்றுவிடுவேன். அக்கிளிஞ்சல்கள் அனைத்தும் வண்ணமயமானவை.  அற்புதமான வடிவழகை உடையவை.  என் அகக்கண்களில் இன்னும் அக்காட்சிகள் நிறைந்திருக்கின்றன.

இந்தத் தினசரி வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களும் நான் சந்தித்த மனிதர்களும் கூட வண்ணக்கிளிஞ்சல்களைப் போன்றவர்கள். அவர்களைச் சந்தித்ததெல்லாம் அல்லது பார்த்ததெல்லாம் ஒருசில நிமிடங்கள் மட்டுமே. ஆனால் என் நினைவில் அழுத்தமாகப் பதிந்துவிட்டவர்கள் அவர்கள். அந்த நேரத்தில், நினைவில் பதிந்த மனிதர்களை அல்லது தருணங்களைப்பற்றிய கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொடருக்கு  ’வண்ணக்கிளிஞ்சல்கள்’ என்னும் தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

’வாழ்வு இனிது’ பக்கத்தின் பொறுப்பாசிரியரான சுஜாதா என்னிடம் ஒரு கட்டுரைத்தொடரை எழுதும்படி சொன்னபோது, அவரிடம் அந்தத் தலைப்பைத் தெரிவித்தேன். அத்தலைப்பைச் சூட்டுவதற்கான காரணத்தையும் அவருக்கு விளக்கினேன். அவருக்கும் அத்தலைப்பு பிடித்துவிட்டது. அன்றிரவே நான் முதல் கட்டுரையை எழுதி அவருக்கு அனுப்பிவைத்தேன். 

எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. முப்பது கட்டுரைகள் எழுதியதே தெரியவில்லை. முப்பது வாரங்கள் மறைந்ததும் தெரியவில்லை. எல்லாம் காலத்தின் மாயம்.

என் மனைவி அமுதாவின் அன்பும் ஒத்துழைப்பும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் துணையாகத் திகழ்பவை. எப்போதும் என் நெஞ்சிலேயே இருப்பவர் அவர்.   இந்தக் கட்டுரைத்தொடரை எழுதும் வாய்ப்பை எனக்கு அளித்தவர் சுஜாதா. முதன்முதலாக கைப்பேசி வழியாக அவர் என்னோடு  உரையாடிய நாள் என் மனத்தில் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அவருடைய தூண்டுதலே இக்கட்டுரைத்தொகுதிக்கான மூலவிசை. அவருக்கு என் அன்பார்ந்த நன்றி.  ஒவ்வொரு கட்டுரையையும் அழகான ஓவியத்தோடு தொடர்ந்து வெளியிட்ட இந்து தமிழ் திசை நாளேட்டுக்கும் அனைத்துக் கட்டுரைகளும் அடங்கிய தொகுதியை அழகான முறையில் வெளியிடும் இந்து திசை பதிப்பகத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி.

முதல் கட்டுரை வெளிவந்த அன்று தஞ்சாவூர்க்கவிராயர், மருதன், பழனி, எஸ்ஸார்சி, எஸ்.ஜெயஸ்ரீ, கே.பி.நாகராஜன் என பல நண்பர்கள் அடுத்தடுத்து பேசினார்கள். உற்சாகமாக இருந்தது. அன்று நண்பகல் நேரத்தில் புதியவர் ஒருவர் கைப்பேசியில் அழைத்து அக்கட்டுரையைப்பற்றி சிறிது நேரம் பேசினார்.  அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன் ஊர் ரயில்வே ஸ்டேஷன் நினைவுக்கு வந்துவிட்டது என்று குறிப்பிட்டார் அவர். “எந்த ஊரு சார் நீங்க?” என்று கேட்டேன்.  ”சொந்த ஊரு காரைக்குடி. இப்ப ஐதராபாத்தில மகன் கூட தங்கியிருக்கேன்” என்றார் அவர். நூலகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ஜனநேசன் என்கிற புனைபெயரில் கதைகள் எழுதுவதாகவும் சொன்னார். நான் அந்தப் பெயரில் வெளிவந்த பல கதைகளை தினமணி கதிரிலும் பேசும் புதிய சக்தி இதழிலும் படித்திருந்தேன். அதைக் குறிப்பிட்டதும் அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்படியே சிறிது நேரம் இலக்கியம் சார்ந்து உரையாடிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டோம். கனிவும் நிதானமும் பொருந்திய அவர் குரல் அப்படியே என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஒவ்வொரு கட்டுரை வெளிவந்த சமயத்திலும் அவர் என்னோடு உரையாடினார். ஒருமுறை கூட தவறியது இல்லை. ஒன்றிரண்டு தருணங்களில் தவிர்க்கமுடியாத காரணங்களால் கட்டுரை இடம்பெறாத சமயத்தில் கூட என்ன காரணம் என்று அழைத்துக் கேட்பார். அந்த அளவுக்கு அக்கட்டுரைகள் அவரைப் பாதித்திருந்தன. கட்டுரைத்தொடர் முடிந்தபிறகும் கூட சில நேரங்களில் என்னை அழைத்து படித்த பத்திரிகைகள் பற்றியும் புத்தகங்கள் பற்றியும் பேசினார். புத்தாண்டு பிறந்த சமயத்தில் ’மனப்பிசைவு’ என்கிற தன்னுடைய சிறுகதைத்தொகுதியை எனக்கு அன்பளிப்பாக அனுப்பிவைத்திருந்தார். நேரம் வாய்க்கும்போது படித்துவிட்டு கருத்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். தைமாதத் திருமணங்கள் தொடர்ச்சியாக இருப்பதாகவும் பயண ஓட்டம் முடிந்ததும் படித்துவிட்டுச் சொல்வதாகவும் அவரிடம் தெரிவித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார்.

பொங்கல் முடிந்த சமயத்தில் ஒருநாள் தினமணியில் வெளிவந்திருந்த அவருடைய மறைவுச்செய்தி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் தன் மறைவுக்குப் பிறகு தன் உடலை சிவகங்கை மருத்துவமனைக்கு தானமாக அளித்திருக்கும் செய்தி அவர் மீது பிறந்த மதிப்பை மேன்மேலும் அதிகரித்தது. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய உடல் ஐதராபாத்திலிருந்து சொந்த ஊருக்கு எடுத்துவரப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையிலேயே மாமனிதர் அவர் என நினைத்துக்கொண்டேன். மேசைமீது வைத்திருந்த அவருடைய புத்தகத்தைப் பார்த்தபோது ஒருவித சங்கடத்தின் எடை மனத்தை அழுத்தியது.

அவர் மிகவும் விரும்பிய கட்டுரைகள் அடங்கிய தொகுதி வெளிவரும் இத்தருணத்தில் அவரைத்தான் என் மனம் முதலில் நினைத்துக்கொள்கிறது. இனி ஒருபோதும் கேட்கமுடியாத அவர் குரல் என் நெஞ்சில் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  காற்றோடு கலந்துவிட்ட அந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் ஜனநேசன் அவர்களுக்கு இத்தொகுதியைச் சமர்ப்பணம் செய்வதில் என் மனம் நிறைவடைகிறது.

                                                    மிக்க அன்புடன்

                                      பாவண்ணன்