Home

Sunday 17 September 2023

காட்சி மயக்கம் - கட்டுரை

 

ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளிக்கூடத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கும் பழக்கம் இருந்தது.  அந்த இரு நாட்களில் ஞாயிறு ஒருநாள் மட்டுமே நண்பர்களோடு சேர்ந்து  என்னால் விளையாடமுடியும்.  சனிக்கிழமையில் அந்த வாய்ப்புக்கு வழியில்லை. அன்று அப்பாவுடைய தையல் கடைக்குச் செல்லவேண்டும். அங்கு காஜா எடுப்பது, பட்டன் தைப்பது, துணி மடிப்பது போன்ற கைவேலைகளில் உதவி செய்யவேண்டும். அது அப்பாவுடைய கட்டளை.  அந்தக் கட்டளைக்கு உடன்படவேண்டும் என்பது அம்மாவுடைய கட்டளை.

ஏற்கனவே இரண்டு அண்ணன்கள் கடையில் வேலை செய்துவந்தனர். ஒருவர் தைப்பவர். இன்னொருவர் கைவேலை நிபுணர். சனிக்கிழமைகளில் மட்டும் நான் அவரோடு சேர்ந்து கொள்வேன். அந்த அண்ணன்  அடங்கிய குரலில் நிறைய சினிமாக்கதைகளை உற்சாகத்துடன் என்னிடம் சொல்வார். உரையாடல் பகுதிகளைச் சொல்லும்போது, குரல்களை மாற்றிமாற்றி  பொருத்தமான ஏற்ற இறக்கத்துடன் விவரிப்பார். அதைக் கேட்கும்போது அந்தக் காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல இருக்கும்.  

எங்கள் கைவிரல்கள் தம் போக்கில் வேகவேகமாக இயங்கியபடி இருக்க, வாயும் காதுகளும் வேறொரு போக்கில் இயங்கும். சனிக்கிழமைகள் அவருடைய கதைகளால் ஐஸ் மாதிரி கரைந்து காணாமல் போய்விடும்.

ஒரு நாள் அண்ணன் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கதையை உற்சாகமாக விவரித்துக்கொண்டிருந்தார். சிந்துபாத் கதையில் வருவதுபோல அந்தக் கதையிலும் ஒரு கன்னித்தீவு வருகிறது. அந்தத் தீவு அடிமைகளை விலைகொடுத்து வாங்குகிறது. அடிமைக்கூட்டத்தில் வேலை செய்யும் ஒரு வீரன் மீது கன்னித்தீவின் இளவரசிக்கு ஆர்வம் பிறக்கிறது. ஆனால் அந்த அடிமைக்கு அதில் விருப்பமில்லை. எப்படியாவது விடுதலை பெற்று தம் நண்பர்களுடன் அங்கிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழவேண்டும் என்பது அவனுடைய இலட்சியமாக இருக்கிறது.

ஒரு சமயத்தில் எதிர்பாராத விதமாக வேறொரு தீவைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் கன்னித்தீவு மீது படையெடுத்து வந்து தாக்குகிறார்கள். கன்னித்தீவின் படைபலம் குறைவாக உள்ளது. அதனால் அடிமைகளை போரில் ஈடுபடுத்தத் திட்டமிடுகிறாள் இளவரசி. அந்தத் திட்டத்துக்கு உடன்பட மறுக்கிறான் வீரன்.  வெற்றி பெற்றால் அடிமைகளுக்கெல்லாம் விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறாள் இளவரசி. அதை நம்பி போரில் ஈடுபடுகிறான் வீரன்.

கதை விறுவிறுப்பான கட்டத்தைத் தொட்ட நேரத்தில் “என்ன பலராமா, நல்லா இருக்கியா?” என்று எழுந்த குரலால், கதை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது. குரல் வந்த திசையில் திரும்பி, படியேறி கடைக்குள் வந்த பெரியவரைப் பார்த்தேன். அவர் புன்னகைத்தபடியே அப்பாவுக்கு முன்னால் இருந்த ஸ்டூலில் அமர்ந்தார். மிஷினிலிருந்து தலையை நிமிர்த்திப் பார்த்த அப்பா “ஐயாவா? வாங்க வாங்க. வணக்கம்” என்று வரவேற்றார். தொடர்ந்து ”நீங்க எதுக்கு ஐயா இந்த வெயில்ல கெளம்பி வந்தீங்க? யார்கிட்டயாவது சொல்லி அனுப்பியிருந்தா, நானே வீட்டுப்பக்கம் வந்திருப்பேனே”  என்றார்.

”நாடு பூரா நடையா நடந்த காலுக்கு சடராமன் கோயில் தெருவிலேர்ந்து இந்தக் கடைத்தெரு வரைக்கும் நடக்கறதுலாம் ஒரு தூரமா? என்ன சொல்ற நீ பலராமா?”

அந்தப் பெரியவரின் புன்னகையைப் பார்க்க அழகாக இருந்தது. ஒரு கோணத்தில் பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும் காந்தித்தாத்தாவின் படத்தைப்போல இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம். படத்தில் காந்தித்தாத்தாவுக்கு பற்கள் இருக்காது. அந்தப் பெரியவருக்கு பற்கள் இருந்தன. ஆனால் குச்சி மாதிரி இருந்தார். கதர் வேட்டி. கதர் சட்டை. கதர் துண்டு. ஒரே கதர்மயமாக காணப்பட்டார். தோல் சுருக்கம் இல்லாததால் அவருடைய முகம் ஒரு சிற்பத்தைப்போல காணப்பட்டது.

“சண்முகம் கடையில ஐயாவுக்கு ஒரு டீ வாங்கிட்டு வா, ஓடு”

கதை சொல்லிக்கொண்டிருந்த அண்ணனைப் பார்த்துச் சொன்னார் அப்பா. அந்தப் பெரியவர் உடனே கையை உயர்த்தித் தடுத்தார். ”எனக்கு மட்டும் தனியா வாங்கி வரதுன்னா, வேணாம் பலராமா. எல்லாரும் சேர்ந்து குடிக்கிறதா இருந்தா சொல்லு” என்றார். ஒரு கண யோசனைக்குப் பிறகு அப்பா கடை அண்ணனிடம் “சரி, ஆளுக்கொரு டீ. கொத்துல வச்சி குடுக்கச் சொல்லி ஜாக்கிரதையா எடுத்துட்டு வா” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

“புதுசா ரெண்டு சட்டை தைக்கணும் பலராமா” என்றபடி கைப்பையைப் பிரித்து கதர்த்துணியை எடுத்து மிஷின் மீது வைத்தார் பெரியவர்.

“அஞ்சி கெஜம் இருக்குது. ரெண்டு சட்டைக்கு எடுத்தது போக மிச்சமிருந்தா ஜிப்பா மாதிரியோ துண்டு மாதிரியோ ஏதாவது ஒன்னு தச்சிடு”

கதர்த்துணியை ஒருமுறை முழுவதும் நீளவாக்கில் பிரித்துப் பார்த்துவிட்டு ஏதோ மனக்கணக்கு பார்த்தபடி மீண்டும் மடித்து அந்தப் பைக்குள்ளேயே வைத்தார் அப்பா.

“அளவு சட்டை வேணுமா? தேவைப்பட்டா கொடுக்கலாமேன்னு ஒன்னு எடுத்துவந்தேன்” என்றபடி கைப்பையிலிருந்து ஒரு பழைய சட்டையை எடுத்தார் பெரியவர்.  ”அதெல்லாம் வேணாம் ஐயா. பையிலயே வச்சிக்குங்க. நம்ம நோட்டுல ஏற்கனவே குறிப்பு இருக்குது. அது போதும்” என்று தடுத்துவிட்டார் அப்பா.

“என்ன திடீர்னு ரெண்டு சட்டை? வீட்டுல பேரப்பிள்ளைங்களுக்கு ஏதாவது கல்யாணம் காட்சியா?”

“அதெல்லாம் கெடையாது பலராமா? அப்படி ஏதாவது இருந்தா, இந்நேரத்துக்கு எல்லாரும் உங்கிட்ட வந்திருப்பாங்களே”

“வேற என்ன விசேஷம்?”

“வர செப்டம்பர் பதினோராம் தேதி நம்ம பாரதியாருக்கு நினைவுநாள் வருது. அவரு செத்து அம்பது வருஷம் முடியப்போவுது. அதுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தணும். அடுத்தபடியா வர அக்டோபர் ரெண்டாம் தேதி காந்தித்தாத்தாவுடைய பிறந்தநாள். அதுக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யணும். காலமெல்லாம் வெறும் தீபாவளி பொங்கல மட்டுமே கொண்டாடிட்டிருந்தா போதுமா? இப்படி நாட்டுக்காக உழைச்ச பெரியவங்களுடைய செத்தநாளு பொறந்த நாளுன்னு அடிக்கடி நாமளும் கொண்டாடிட்டிருந்தாதான மக்களும் அவுங்கள மறக்காம இருப்பாங்க. அம்மா அப்பா மாதிரி நம்ம தலைவர்களும் நமக்கு முக்கியம்தான?”

”உண்மைதான் ஐயா” என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, பெரியவர் முகத்தையே பார்த்தபடி இருந்தார் அப்பா. தொடர்ந்து பேசுவதற்கு வழியில்லாததால் பெரியவர் சாலையில் ஓடும் வாகனங்களையே சில கணங்கள் பார்த்தபடி இருந்தார். பிறகு வியர்வை படிந்த நெற்றியை தோளில் இருந்த துண்டையெடுத்துத்  துடைத்துக்கொண்டே சுவரில் ஆணியடித்து தொங்கவிட்டிருந்த துணிகளையும் காலண்டர்களையும் பார்த்தார். அப்போதுதான் அவர் என்னைக் கவனித்தார். “இது யாரு? பையன் புதுசா இருக்கான்” என்று அப்பாவிடம் கேட்டார்.

”நம்ம பையன்தான் ஐயா.”

”ஓ. அப்படியா? இதுக்கு முன்னால பார்க்காததால அடையாளம் தெரியலை. அதனால கேட்டேன்.”

“ஹைஸ்கூல்ல படிக்கிறான். லீவு நாள்ல வந்து ஒத்தாசைக்கு கொஞ்ச நேரம் இருந்துட்டு போடானு சொன்னதால கடைக்கு வந்திருக்கான்”

அதைக் கேட்டு தலையசைத்தபடியே என்னைத் திரும்பிப் பார்த்த பெரியவர் “இங்க வா தம்பி” என்று அழைத்தார். காஜா எடுத்துக்கொண்டிருந்த புதுச்சட்டையை அப்படியே மடித்து சுவரோரமாக வைத்துவிட்டு பெரியவருக்குப் பக்கத்தில் சென்று நின்றேன். “ஒன் பேரு என்ன?” என்று கேட்டார். சொன்னதைக் கேட்டு தலையசைத்துக்கொண்டார்.

“எந்த க்ளாஸ் படிக்கிற?”

“எட்டு”

“உனக்கு ராதாகிருஷ்ணன் வாத்தியாரைத் தெரியுமா?”

“தெரியும். எங்களுக்கு அவருதான் தமிழாசிரியர்”

“நல்ல வாத்தியாரு அவரு. பெரிய திறமைசாலி. கம்பராமாயணம், பிரபந்தம்லாம் ஆழமா படிச்சவரு. அவுங்கப்பாவும் அந்தக் காலத்துல வாத்தியாரா இருந்தவருதான். சுந்தரகிருஷ்ணன்னு பேரு. அவரும் பெரிய திறமைசாலி. எனக்கு அவருதான் வாத்தியாரு”

நான் அவரைப் பார்த்ததில்லை. அந்தச் செய்தி எனக்குப் புதிதாக இருந்ததால், எதுவும் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

“நான் சின்ன பையனா இருந்த சமயத்துல நம்ம ஊருல பள்ளிக்கூடமே கெடையாது. குமாரகுப்பத்துல ரெண்டு பேரு. வளவனூருல ரெண்டு பேரு. அங்கங்க திண்ணையிலயும் அரசமரத்தடியிலயும் வச்சி அப்ப படிப்பு சொல்லிக் குடுப்பாங்க. அதுதான் அப்ப ஸ்கூல்.”

அதைக் கேட்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளிக்கூடம் இல்லாமல் திண்ணையில் படிப்பது எப்படி சாத்தியம் என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனாலும் அவரிடம் நேரிடையாக கேள்வி கேட்க அச்சமாக இருந்தது.  அதனால் அமைதியாக அவரையே பார்த்தபடி இருந்தேன்.  

“சாதிக்கட்டுப்பாடுகள் அந்தக் காலத்துல அதிகம். ஊருகாரங்களுக்கு பயந்து சாதியில தாழ்ந்த புள்ளைங்களை சில வாத்தியாருங்க திண்ணையில சேத்துக்கமாட்டாங்க. ஆனா சுந்தரகிருஷ்ணன். வாத்தியாரு அப்படி கெடையாது. சரஸ்வதியை தேடி வந்திருக்கிறவனுக்கு இடம் கிடையாதுன்னு சொல்ற உரிமை உலகத்துல ஒருத்தனுக்கும் இல்லைன்னு தீர்மானமா சொல்வாரு. அவரு எல்லாருக்கும் இடம் கொடுத்தாரு. எல்லாரயும் ஒன்னா உக்காரவச்சித்தான் ஆனா ஆவன்னா சொல்லிக் குடுத்தாரு. கடவுளுக்கு முன்னால எல்லா மனுஷங்களும் ஒன்னுங்கறதுதான் அவரு சொல்லிக் கொடுத்த முதல் பாடம். அது அப்படியே எங்க நெஞ்சில ரொம்ப ஆழமா பதிஞ்சிடுச்சி. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, திருக்குறள், பாரதியார் பாட்டு எல்லாமே அவர் சொல்லிக் கொடுத்ததுதான்”

பெரியவர் உற்சாகமாக சொல்லிக்கொண்டே சென்றார். அவர் பேசும்போது ராதாகிருஷ்ணன் ஐயா பேசுவதுபோலவே இருந்தது. அந்த ஒற்றுமையைக் கண்டு நான் உறைந்துபோனேன். ராதாகிருஷ்ணன் ஐயா ஒருநாளும் வகுப்பில் தன் அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னதே இல்லை.

“பாரதியார் யாருன்னு உனக்குத் தெரியுமா?”

பெரியவருடைய கேள்வி சட்டென என்னை நோக்கித் திரும்பும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ம்” என்று வேகமாகத் தலையாட்டினேன்.

“வெறுமனே ம்னு சொன்னா போதாது. பாரதியாரைப் பத்தி என்ன தெரியும் சொல்லு”

நான் ஒரு நிமிடம் சுவரைப் பார்த்தபடி யோசனையில் மூழ்கினேன். பாடமாக இடம்பெற்றிருந்த அவருடைய சில பாடல்களும் பாரதியார் தொடர்பாக ஆசிரியர்கள் வகுப்பில் சொன்ன நிகழ்ச்சிகளும் ஒருசேர நினைவில் எழுந்தன. அந்தத் தகவல்களையே ஒருமுறை மனத்துக்குள் தொகுத்துப் பார்த்துவிட்டுச் சொல்லத் தொடங்கினேன்.

“பாரதியார் பெரிய கவிஞர். நிறைய பாட்டுகளை எழுதி சுதந்திரப்போராட்டத்துக்கு உதவி செஞ்சிருக்காரு. வெள்ளைக்கார ஆட்சியை விரட்ட நினைச்சதால, அவர அரசாங்கத்து ஆளுங்க கைது செய்ய திட்டம் போட்டாங்க. ஆனா அந்த திட்டத்துல சிக்காம தப்பிச்சி அவரு எப்படியோ பாண்டிச்சேரிக்கு வந்து தங்கிட்டாரு.  ஓடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பான்னு பாப்பா பாட்டுலாம் பாடியிருக்காரு…”

இன்னும் நிறைய சொல்ல நினைத்தேன். ஆனால் அதற்குள் அவர் போதும் என்பதற்கு அடையாளமாக புன்னகையுடன் கையை உயர்த்தி நிறுத்திவிட்டார். பிறகு, என் தோளில் கையை வைத்து தனக்கு அருகில் அழைத்து நிற்கவைத்துக்கொண்டார். “பரவாயில்லை.  உங்க ராதாகிருஷ்ணன் ஐயா உன் தலையில நிறைய விஷயங்களை ஏத்தி வச்சிருக்காரு” என்று கன்னத்தில் தட்டிக் கொடுத்தார்.

“நம்ம இந்தியாவுக்கு சுதந்திரம் எப்ப கிடைச்சிது, தெரியுமா?”

“ஓ, தெரியுமே. 1947வது ஆண்டு. ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி”

“சுதந்திரநாளை உங்க ஸ்கூல்ல கொடியேத்தி கொண்டாடினீங்களா?”

“ம்”

“பாரதியார் பாட்டு ஏதாவது பாடினீங்களா?”

“ம்”

“அப்படியா? என்ன பாட்டு?”

“தாயின் மணிக்கொடி பாரீர் பாட்டு”

“முழுசா மனப்பாடமா உனக்குப் பாடத் தெரியுமா?”

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் உற்சாகமாக இருந்தது. “ஓ. பாடுவேனே” என்றேன். பெரியவர் விடவில்லை. “அப்படியா? ஒரு தரம் பாடு, கேப்போம்” என்றார்.

உடனே கொடிக்கம்பத்தின் முன்னால் நிற்பதுபோல மனத்துக்குள் நினைத்துக்கொண்டு தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடத் தொடங்கினேன். சுற்றியிருந்தவர்களின் முகங்களைப் பார்த்தாலோ, அவர்கள் முகங்களில் தெரியக்கூடிய புன்னகையை அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அசைவுகளைப் பார்க்க நேர்ந்தாலோ எங்கே சொற்கள் தடுமாறிவிடுமோ என்று உள்ளூர அச்சமாக இருந்தது.  சற்றே தலையை உயர்த்தி கடையின் மேற்கூரையின் மூலையில் பார்வையைப் பதித்தபடி ஒவ்வொரு பத்தியாகப் பாடிக்கொண்டே சென்றேன். எல்லா வரிகளையும் பாடி முடித்துவிட்டுத்தான் தலையைத் தாழ்த்தி அவரைப் பார்த்தேன்.

“ரொம்ப அருமையா இருந்தது நீ பாடிய விதம். ஏன் மூனு பத்தியோடு நிறுத்திட்ட? அந்தப் பாட்டுக்கு மொத்தத்துல பத்து பத்தி உண்டாச்சே?”

“எங்க புத்தகத்துல மூனு பத்திதான் இருக்குது”

“அப்படியா, சரிசரி. சின்ன பிள்ளைகளுக்கு பெரிசா இருக்கவேணாம்னு குறைச்சிருப்பாங்க. பரவாயில்லை. நல்லா பாடற. பாரதியார் பாட்ட பாடறதுக்கு ஏத்த குரல். நல்லா கணீர்னு இருக்குது”

கையை உயர்த்தி பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து மகிழ்ச்சிபொங்க அவர் சொன்ன விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. வீட்டுக்குச் சென்றதும் அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு திங்கட்கிழமை பள்ளிக்கூடத்துக்குச் சென்றதும் எல்லா நண்பர்களிடமும் தெரிவிக்கவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டேன். உடனே உற்சாகத்தில் நானாகவே அவரிடம் “பாருக்குள்ளே நல்ல பாடு பாடட்டுமா, அது கூட எனக்கு மனப்பாடமா தெரியும்” என்றேன்.

“ஆகா. அப்படியா? பாடு. பாடு. கரும்பு தின்ன கூலி வேணுமா. பாடு. கேக்கறதுக்கு நான் தயாரா இருக்கேன்”

கடைக்குள் யார் இருக்கிறார்கள், என் அப்பா அந்தப் பாட்டைப்பற்றியும் நான் பாடுவதைப்பற்றியும் என்ன நினைக்கிறார், தெருவோரமாக நடந்துசெல்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்கவில்லை. பெரியவர் பாடு என்று சொன்ன அடுத்த கணமே குரலையுயர்த்தி ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்று பாடத் தொடங்கிவிட்டேன்.

வழக்கம்போல என் விழிகள் கூரை மூலையில் பதிந்திருந்தன. மூன்று பத்திகளையும் பாடி ’உண்மையிலே தவறாத புலவர்கள் உணர்வினிலே உயர்நாடு’ என இறுதி வரியோடு நிறுத்தி மீண்டும் தொடக்கவரிக்குத் திரும்பியபோது, எனக்குள் நான் உணர்ந்த வேகம் வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது.

ஏதோ கச்சேரியில் மேடைப்பாட்டைக் கேட்டதுபோல பெரியவர் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார். “பலராமா, உன் பையன் அற்புதமா பாடறான். அவனை நல்லா படிக்க வை. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது. அந்தக் கஷ்டம் இந்தக் கஷ்டம்னு சொல்லி, அவன மிஷின்ல உக்காரவச்சி வீணாக்கிடாத” என்று அப்பாவைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னார்.

அப்பா ஒருகணம் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு சொற்கள் கிடைக்காததுபோல சற்றே தடுமாறினார். பிறகு அடங்கிய குரலில் “எதிர்காலத்துல என்ன நடக்கும்னு நமக்கு எப்படி ஐயா தெரியும். நாம ஒரு கணக்கு போடறம். ஆண்டவன் என்ன கணக்கு போடறான்னு நமக்கு எப்படிங்க தெரியும்?” என்றார்.

அப்பா சிரித்துக்கொண்டே அந்தப் பொதுவான பதிலைச் சொல்லிவிட்டு, பெரியவரின் வேண்டுகோளைத் தொட்டும் தொடாமலும் கடந்துபோக முயற்சி செய்தார்.

பெரியவர் எதையும் பேச வழியில்லாதபடி அக்கணத்தில் டீ வாங்குவதற்காகச் சென்றிருந்த அண்ணன் கொத்து வளையங்களுக்குள் செருகப்பட்ட ஐந்து கண்ணாடித்தம்ளர்களோடு வந்து சேர்ந்தார்.  அந்தப் பெரியவரே ஒரு தம்ளரை எடுத்து “ரொம்ப சூடா இருக்கும். பொறுமையா ஆறின பிறகு குடி” என்றபடி என்னிடம் கொடுத்தார். பிறகு ஒவ்வொருவரும் ஆளுக்கொரு தம்ளரை எடுத்துக்கொண்டனர்.

பழக்கத்தின் காரணமாக அப்பா வேகவேகமாக டீயை அருந்திவிட்டு காலித்தம்ளரை கொத்துவளையத்துக்குள் திருப்பி வைத்தார். பிறகு விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்கினார். எல்லோருக்கும் கடைசி ஆளாக நான் அந்த டீயை அருந்தி முடித்தேன்.

“இப்ப பாடினயே, அந்த பாருக்குள்ளே நல்ல நாடு பாட்ட எங்களுடைய பாரதியார் நினைவு நிகழ்ச்சிக்கு வந்து உன்னால பாடமுடியுமா” என்று என்னிடம் கேட்டார் பெரியவர்.

“நானா? நிகழ்ச்சியிலா?” என்று திகைத்தவனாக அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். பள்ளிக்கூட நிகழ்ச்சிகளைத் தவிர பொது நிகழ்ச்சிகள் எதிலும் நான் கலந்துகொண்டதே இல்லை.

“ஆமாம். நீதான்” என்று உறுதியான குரலில் சொன்னார் பெரியவர். “நிகழ்ச்சியை எப்படி நடத்தறதுன்னு பத்து நாளா யோசிச்சி யோசிச்சி என் தலையே கொழம்பிப்போச்சி. நீ பாடியதைக் கேட்டதுமே மனசுக்குள்ள ஒரு திட்டம் உருவாயிடுச்சி. நீ எனக்காக ஒரு உதவி செய்யணும். உன்ன மாதிரியே உன் வகுப்புலயும் மத்த வகுப்புகள்லயும் பாடக்கூடிய பிள்ளைகள் இருப்பாங்க, இல்லையா? அவுங்களுக்கெல்லாம் பாரதியாருடைய ஐம்பதாவது நினைவுநாள் நிகழ்ச்சி பத்திய தகவல சொல்லு. ஆளுக்கொரு பாரதியார் பாட்ட மனப்பாடம் பண்ணி பாடிப் பாடி பயிற்சி எடுத்துட்டு வரணும்னு சொல்லு. மொத்தம் ஐம்பது பிள்ளைகளை அன்னைக்கு நாம மேடையில ஏத்தி பாட வைப்போம்” என்று உற்சாகத்தோடு சொன்னார்.

“ஐம்பது பிள்ளைகளையா?”

“உங்க ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றியப்பள்ளி கோவிந்தையர் பள்ளி எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் நானே நேருல போய் சொல்லிட்டு வரப்போறேன். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துலேருந்தும் பத்து பன்னெண்டு பிள்ளைகள் வந்தாலே போதும். சாதாரணமா அம்பது பேர சேர்த்திடலாம்.  ஒருவேளை ஒன்னு ரெண்டு பேரு குறைஞ்சாலும் நம்ம தெருப்பிள்ளைங்கள சேத்துக்கலாம். பாரதியாருடைய ஐம்பதாவது நினைவுநாள் நிகழ்ச்சி நம்ம வளவனூருல மறக்கமுடியாத நிகழ்ச்சியா அமையணும்”

ஒரு சிறுவனைப்போல அவர் உற்சாகத்துடன் பேசினார். அவருக்குப் பிடித்த பாரதியார் பாடல்களின் முதல் வரிகளையெல்லாம் சொல்லி “இது தெரியுமா? இது தெரியுமா?” என்று கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்பதுபோலக் கேட்டார். அவர் குறிப்பிட்ட பட்டியலில் பல பாடல்களை நான் கேட்டதுகூட இல்லை.

“பாரதியார் அந்தக் காலத்துல்ல பாஞ்சாலி சபதம்னு ஒரு சின்ன காவியம் எழுதியிருக்காரு.  நீ பெரிய ஆளானதும் அதைத் தேடிப் புடிச்சி படி. இந்த உலகம் அவரை ஏன் மகாகவின்னு கொண்டாடுதுன்னு அப்ப புரியும் உனக்கு. மேலோட்டமா பார்க்கிறதுக்கு அது மகாபாரதத்துல அவமானத்துக்குள்ளான பாஞ்சாலி சபதம் செய்யற குடும்பக்கதை மாதிரியோ அல்லது புராணக்கதை மாதிரியோ தெரியும். ஆனா,  ஆழமா படிச்சா ஒவ்வொரு பகுதியிலயும் இருக்கிற உள்ளர்த்தத்தைப் புரிஞ்சிக்கமுடியும். சுதந்திரமில்லாம அடிமைப்பட்டுக் கிடக்கிற இந்தியத்தாய்தான்  பாஞ்சாலியுடைய குரல்ல சபதம் எடுக்கிறாங்கறது தானா விளங்க ஆரம்பிச்சிடும்.  கம்பர், திருவள்ளுவர், இளங்கோவடிகள்னு ஒரு பெரிய வரிசையை நாம எல்லாருமே எப்பவுமே கொண்டாடிட்டிருக்கோம். அந்த வரிசையில வச்சி அழகு பார்க்கவேண்டிய மகாகவி நம்ம பாரதியார். நான் என்ன சொல்றேன், ஏன் சொல்றேன்ங்கற விஷயம் இப்ப புரியலைன்னாலும் எதிர்காலத்துல உனக்கு தானா புரியும்”

அவர் சொல்லச்சொல்ல எனக்கும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது கடை என்பதால் அதிக நேரம் அவரை அங்கே உட்காரவைப்பது சாத்தியமில்லாமல் இருந்தது. “சரி பலராமா, சீக்கிரமா தச்சி முடிச்சிடு. நான் ஒரு வாரம் கழிச்சி வந்து வாங்கிட்டு போறேன்” என்றபடி எழுந்தார் பெரியவர். ”என்ன தம்பி, ஸ்கூல்ல சொல்லி பாடறதுக்கு பிள்ளைகளை அழைச்சிட்டு வரியா?” என்று என்னிடம் கேட்டார். நான் “சரி” என்று உற்சாகமாகத் தலையாட்டினேன்.

“அது சரி, என் வீடு எங்க இருக்குதுன்னு தெரியுமா?”

அப்போதுதான் அதைப்பற்றி அவரிடம் அதைப்பற்றி எதையும் கேட்டுக்கொள்ளாதது உறைத்தது. நாக்கைக் கடித்துக்கொண்டேன். “அப்பறமா அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கறேன்” என்று அந்த நேரத்துக்குத் தோன்றிய ஏதோ ஒரு பதிலைச் சொன்னேன்.

“அதெல்லாம் வேணாம். நானே சொல்றேன். நல்லா கேட்டுக்கோ”

நான் அவர் முகத்தில் பார்வையைப் பதித்தேன்.

“உனக்கு சுப்பிரமணியர் கோயில் தெரியுமா?”

‘ம்”

“அங்கேர்ந்து சடராமன்கோயில் தெருவுக்கு ஒரு ரோடு போவுது, தெரியுமா?”

“தெரியும் ஐயா. என் க்ளாஸ்ல படிக்கிற பையன் ஒருத்தன் வீடு அந்தத் தெருவுல இருக்குது. அவன் வீட்டுக்கு போவும்போது பார்த்திருக்கேன்”

“அந்தத் தெருவுலதான் நம்ம வீடு இருக்குது. வீட்டுக்குப் பக்கத்துல ரெண்ட்டு தென்னைமரம், ரெண்டு வேப்பமரம் இருக்கும். எதுத்தாப்புல ஒரு பெரிய அரசமரம் இருக்கும். அதுதான் எங்க வீட்டுக்கு அடையாளம்”

அந்தத் தெருவின் வரைபடம் அக்கணமே என் மனத்தில் விரிந்துவிட்டது. அவர் குறிப்பிட்ட அடையாளங்களுடன் கூடிய அந்த வீட்டை பலமுறை கடந்து சென்றதெல்லாம் நினைவுக்கு வந்தது. “தெரியுது ஐயா, ஒன்னும் பிரச்சினை இல்லை. சீக்கிரமாவே நண்பர்களை அழச்சிகிட்டு வரேன்” என்றேன்.  “சரி” என்றபடி என் தோளில் தன் உள்ளங்கையை வைத்து ஒன்றிரண்டு முறை அழுத்தமாகத் தட்டிக் கொடுத்தார் பெரியவர். “ஒருவேளை இடம் தெரியாதபடி தவிக்கிற சூழல் வந்தா துரைசாமி ஆசாரி வீடு எங்க இருக்குதுன்னு என் பேரைச் சொல்லி கேளு. யாரா இருந்தாலும் காட்டுவாங்க” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு “அவருகிட்ட பேசும்போது கவனமா மரியாதையோடு பேசணும், புரியுதா? நம்ம சின்ன தாத்தா பெரிய தாத்தாகிட்ட பேசறமாதிரி சாதாரணமா பேசக்கூடாது” என்று என்னை எச்சரிப்பதுபோலச் சொன்னார் அப்பா.

அவர் அப்படி சொல்வதற்கான காரணம் எதுவும் புரியாவிட்டாலும் சரி என்பதுபோல தலையை அசைத்தேன். ”அவரு காந்தி காலத்து  காங்கிரஸ் ஆளு. சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு ஜெயிலுக்குலாம் போய் வந்தவர். பெரிய தியாகி. அரசியல்லயே இருந்திருந்தா இந்நேரத்துக்கு பெரிய மந்திரியா கூட வந்திருக்கலாம். ஆனா அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு சமூக சேவை அது இதுன்னு வேற வழியில எறங்கி போயிட்டாரு” என்றார் அப்பா.

அக்கணத்தில், சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களைப்பற்றி வகுப்பில் சுப்பையா சார் சொன்ன பல செய்திகள் நினைவில் எழுந்தன. மாடுகளுக்குப் பதிலாக அவர்கள் செக்கிழுத்தார்கள். கல் உடைத்தார்கள். கால்களில் சங்கிலி பூட்டப்பட்டு இருட்டறையில் கிடந்தார்கள். புழு பூச்சிகள் மிதக்கும் அழுக்குக்கஞ்சியைக் குடித்தார்கள். சொந்த வீட்டில் அம்மா, அப்பா, மனைவி, குழந்தை மரணமடைந்த சமயத்தில் கூட பார்க்கமுடியாதபடி சிறைபட்டு காலம் கழித்தார்கள். சுப்பையா சார் சொல்லிச்சொல்லி நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்த அவர்களுடைய தியாகக்கதைகளை நினைத்துக்கொண்டேன். தியாகிகளின் வரிசையில் வளவனூரைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்னும் செய்தி எனக்குள் ஒருவித கிளர்ச்சியை ஊட்டியது.

“யாரும் வெளிநாட்டுத்துணி வாங்காதீங்க. கதர்த்துணியை வாங்குங்கன்னு காந்தித்தாத்தா சொன்ன காலத்துலேயே கதர் போட ஆரம்பிச்சவர் அவர். இதோ இன்னைய தேதி வரைக்கும் கதரைத் தவிர வேற எதையுமே அவர் போட்டதில்லை. கதர்த்துணிகளை மூட்டையா தலையில சுமந்துபோய் ஊரெல்லாம் சுத்தி கதருக்காக பிரச்சாரம் பண்ணி வித்திருக்காரு. விழுப்புரத்துக்குப் போய் வெளிநாட்டுத்துணி விக்கிற கடைகள் முன்னால நின்னு போராட்டம் செஞ்சிருக்காரு. போலீஸ்காரங்க அவரைப் புடிச்சி ஜெயில்ல வச்சிட்டாங்க. ஒரு வருஷம் கழிச்சித்தான் வெளியே வந்தாரு.”

அப்பா சொன்னதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக்கொண்டேன். அந்தப் பெரியவரைச் சந்தித்து அவர் வழியாக எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் பிறந்தது.

“உன்ன பயமுறுத்தறதுக்காக சொல்றேன்னு நினைச்சிக்காத. இந்த ஊருல ரொம்ப முக்கியமான ஆளு அவரு. அவரோடு எப்ப பேசினாலும் மரியாதை குடுத்து பேசணுங்கறதுக்காக சொல்றேன். புரியுதா?”

”சரிப்பா” என்று தலையசைத்துக்கொண்டே சொல்லிவிட்டு கைவேலையைத் தொடர்ந்தேன்.

மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் அம்மாவிடம் துரைசாமி ஐயாவைப்பற்றியும் அவருக்கு முன்னால் நான் பாரதியார் பாட்டைப் பாடிக் காட்டியது பற்றியும் ஆர்வத்தோடு பகிர்ந்துகொண்டேன்.

“அவருக்கு அந்தப் பாட்டு ரொம்ப ரொம்ப புடிச்சிடுச்சிம்மா. அவரு பாரதியாருக்காக ஒரு கூட்டம் நடத்தப் போறாராம். அந்தக் கூட்டத்துல என்னையும் ஒரு பாட்டு பாடணும்னு சொல்லியிருக்காரு. ஒரு தரம் உனக்கும் அந்தப் பாட்டை பாடிக் காட்டட்டுமா?”

“சரி பாடு, கேப்போம்”

அம்மாவின் சம்மதம் கிடைத்ததுமே நான் தொண்டையைச் செருமிக்கொண்டு பாருக்குள்ளே நல்ல நாடு பாட்டைப் பாடத் தொடங்கினேன். முழு பாட்டையும் அம்மா பொறுமையோடு கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

பிறகு அந்தப் பெரியவரைப்பற்றித் தெரிவிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் “அவரு பெரிய சுதந்திரப்போராட்ட தியாகியாம். அப்பா சொன்னாரு” என்று ஆர்வத்தோடு தொடங்கினேன். அடுத்து வேறு ஏதோ ஒரு செய்தியைச் சொல்வதற்குள் அம்மா எழுந்துவிட்டார்.

“சரி சரி போதும், அதோட மூட்டையக் கட்டு. மிச்சத்த ராத்திரி பேசிக்கலாம். வெளக்கு வைக்கிற நேரமாய்டுச்சி. வேகமா போய் நாலஞ்சி குடம் தண்ணி எடுத்தாந்து தொட்டியை நிரப்பி வை. கடையிலேர்ந்து வந்ததும் குளிக்கறதுக்கு தண்ணி இல்லைன்னா உங்கப்பா சத்தம் போடுவாரு”

அதற்குப் பிறகு பேச்சைத் தொடர முடியவில்லை. குடத்தைத் தூக்கிக்கொண்டு குழாயடிக்குச் சென்றுவிட்டேன். தொட்டியை நிரப்பிவிட்டு கைகால் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வருவதற்குள் இருட்டிவிட்டது. விளக்குகளுக்கு மண்ணெண்ணெயை ஊற்றி, சிம்னிகளைத் துடைத்து, வாசலில் ஒன்று, மாடத்தில் ஒன்று, கூடத்தில் ஒன்று என ஏற்றி வைத்துவிட்டு உட்கார்ந்தேன். தம்பிகளுடனும் தங்கைகளுடனும் பேச்சு, பாட்டு என்று எப்படியோ பொழுது ஓடிவிட்டது.

அடுத்தநாள் காலையில் விளையாடுவதற்காக ஸ்டேஷன் திடலுக்குச் சென்றேன். எனக்கு முன்னால் குமரவேலும் பழனியும் சுந்தரமும் வந்திருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு சுப்பிரமணி, மனோகரன், சந்திரசேகர் மூன்று பேரும் ஒன்றாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம்தான் கால்பந்து இருந்தது. உடனே பந்தை உதைத்து விளையாடத் தொடங்கிவிட்டோம்.

எவ்வளவு நேரம் விளையாடினோம் என்பதே தெரியவில்லை. நாங்கள் அணிந்திருந்த சட்டை வேர்வையில் நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டது. தொடர்ச்சியாக ஓடி ஓடி விளையாடியதில் சற்றே களைப்பாக இருந்தது. அதனால் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக புங்கமரத்தடியில் வட்டமாக உட்கார்ந்தோம். ’குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா’ என்று ஒரு பாடல் வரியை முணுமுணுத்தபடி மனோகரன் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

அந்தப் பாட்டைக் கேட்டதும் எனக்கு பாரதியார் பாட்டு நினைவுக்கு வந்துவிட்டது. துரைசாமி ஐயா ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்ன பாரதியார் நினைவு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து நினைவுக்கு வந்துவிட்டது. உடனே அப்பாவின் கடையில் அவர் சட்டை தைப்பதற்காக துணிகொடுக்க வந்தபோது சந்தித்ததில் தொடங்கி, அவர் நிகழ்த்தவிருக்கும் ஐம்பதாவது நினைவுநாள் நிகழ்ச்சி வரைக்கும் எல்லாச் செய்திகளையும் சொன்னேன்.

பாட்டு என்றதுமே அனைவருமே உற்சாகத்துடன் எழுந்துவிட்டனர். “வாடா, இப்பவே போய் அவரைப் பார்த்துட்டு வரலாம்” என்றனர்.

“இப்பவேவா? ஏதாவது பாட்டு பாடிக் காட்டுன்னு சொன்னா, என்னடா செய்யறது?”

“தெரிஞ்ச வரைக்கும் ஏதாவது ஒரு பாட்ட பாடுவோம். அதுக்கப்புறம் கத்துகிட்டு வந்து முழுசா பாடிட்டா போவுது”

”சரி வாங்க”

பந்தைத் தூக்கிக்கொண்டு எல்லோரும் கூட்டமாக ஸ்டேஷன் திடலிலிருந்து புறப்பட்டோம்.

“அச்சம் என்பது மடமையடான்னு ஒரு பாட்டு உண்டு, தெரியுமா உனக்கு? அடிக்கடி நம்ம சீனு கூட பாடிகிட்டே இருப்பானே. அது பாரதியார் பாட்டுதான?” என்று சந்தேகம் கேட்டான் சுப்பிரமணி.

“உன் தலையை இப்ப ரெண்டா உடைக்கப் போறேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அடிக்க வருவதுபோல சிரித்தான் மனோகரன். “அது கண்ணதாசன் பாட்டுடா மடையா. கண்ணதாசன் பாட்டுக்கும் பாரதியார் பாட்டுக்கும் வித்தியாசம் தெரியலையா உனக்கு?”

“பாரதியார் பாட்டுல கூட அச்சம் அச்சம்னு ஏதோ ஒரு பாட்டுல வருமே, அதுக்காக கேட்டேன்”

“அது அச்சமில்லை அச்சமில்லை. அச்சமென்பது இல்லையே பாட்டு. அதையும் இதையும் போட்டு குழப்பிக்காதடா”

“ஓ. சரி சரி. இப்ப ஞாபகத்துக்கு வந்துட்டுது. நான் அந்தப் பாட்டைத்தான் பாடப் போறேன்”

“ஆரம்பமே குழப்பமா இருக்குது உனக்கு. நீ எப்படிடா பாடுவ?”

”எல்லாம் பாடுவேன்டா. பார்த்துட்டே இரு. பேருலதான் ஒரு குழப்பம். பாட்டுல எந்தக் குழப்பமும் இல்லை.

சுப்பிரமணியின் துணிச்சலான பேச்சைக் கேட்டபோது மிரட்சியாக இருந்தது. “சும்மா எனக்காக ஒரு நாலு வரி சொல்லு பார்ப்போம்” என்று  வேண்டுமென்றே சீண்டுவதுபோலக் கேட்டான் சுந்தரம்.

சுப்பிரமணி அவன் சொற்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. உடனடியாக ஏற்ற இறக்கத்துடன் அந்தப் பாடலின் வரிகளைச் சொன்னான். ஏதோ பட்டாளத்துக்காரர்கள் பூட்ஸ் கால்களால் சத்தமெழுப்பியபடி  அருகில் எங்கோ நடப்பதுபோல இருந்தது. சொல்லி முடித்த பிறகு “எப்படி?” என்று சுந்தரத்தைப் பார்த்து புருவத்தை உயர்த்திக் கேட்டான் சுப்பிரமணி. “அருமை, அருமை” என்று புன்னகைத்துப் பாராட்டினான் சுந்தரம். நாங்களும் அவனைப் பாராட்டினோம்.

சிரிப்பும் பேச்சும் பாட்டுமாக நடந்ததில் துரைசாமி ஐயா வீட்டுக்கு வந்ததே தெரியவில்லை. வேப்பமரத்தின் நிழலில் ஒரு கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார் அவர். நாங்கள் வாசல் படலைத் திறக்கும் சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்து பார்த்து “யார தேடறீங்க தம்பிங்களா?” என்று  கேட்டார். நான் உடனே எல்லோருக்கும் முன்னால் சென்று “வணக்கம் ஐயா. நான்தான் பலராமன் டைலர் பிள்ளை. நேத்து கடைக்கு வந்தீங்களே” என்று நினைவுபடுத்தினேன்.

“ஓ. நீயா? தெரியுது. தெரியுது. பாருக்குள்ளே நல்ல நாடு பாடன ஆள்தான நீ?” என்று சொல்லிக்கொண்டே “இப்படியே உக்காருங்க தம்பிங்களா?” என்று கட்டிலைச் சுற்றியிருந்த இடத்தைக் காட்டினார். ஒவ்வொருவரும் தயக்கத்துடன் விளிம்பை ஒட்டி உட்கார்ந்தனர். “நகர்ந்து வந்து தாராளமாவே உக்காருங்கப்பா. இதுல இடம் பத்தலைன்னா, அதோ இன்னொரு கட்டில் சுவத்தோரமா போட்டிருக்குது பாருங்க. அதை எடுத்து வந்து போட்டு உக்காருங்க” என்றார் ஐயா.

சந்திரசேகரும் சுந்தரமும் சுவரையொட்டி சாய்ந்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு வந்து போட்டனர். நாங்கள் எல்லோரும் அவரைப் பார்த்தபடி அதில் உட்கார்ந்தோம்.

நான் ஒவ்வொருவராக பெயர் சொல்லி ஐயாவிடம் அறிமுகப்படுத்தினேன். “நாங்க எல்லாருமே ஒரே க்ளாஸ்ல படிக்கிறவங்க ஐயா. எல்லாருமே ஓரளவு பாட்டு பாடக்கூடிய ஆளுங்கதான். இவுங்களயும் நீங்க சொன்ன நிகழ்ச்சியில சேர்த்துக்கலாம்” என்றேன்.

ஐயா ஒவ்வொருவராக மீண்டும் உற்றுப் பார்த்தார். ”பாரதியார் பாட்டுதான் பாடணும். வேற எதுவும் பாடக்கூடாது. சரியா?” என்று மென்மையாகச் சொன்னார் ஐயா. ”எல்லாத்தயும் அவன் ஏற்கனவே சொல்லிட்டான் சார்” என்று என்னைக் காட்டிச் சொன்னான் மனோகரன்.

“அப்படியா? அந்த அளவுக்கு தயாரா இருக்கீங்களா? சரி, ஆளுக்கொரு பாட்ட பாடுங்க, கேட்போம். அதுக்கப்புறம் முடிவு செய்யலாம்” என்று சொல்லிக்கொண்டே குத்துமதிப்பாக சுப்பிரமணியின் பக்கம் விரலை நீட்டினார் ஐயா.  சுப்பிரமணி உடனே எழுந்து நின்று ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று உணர்ச்சிவேகத்துடன் பாடத் தொடங்கினான். ஐயா அவனுடைய உறுதியான தடித்த குரலைக் கேட்டு அப்படியே உருகிவிட்டார். ஒரு கணம் கூட கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். எட்டு வரிதான் பாடினான். ஆனால் ஒரு பிசிறு கூட இல்லாமல் பாடி முடித்தான். ஐயா அவனை அருகில் அழைத்து தோளில் தட்டிக் கொடுத்தார்.

”எங்கடா கத்துகிட்ட? ரொம்ப அழகா பாடறியே”

“சினிமாப்பாட்டு மாதிரி நானே சொந்தமா பாடிப்பாடி கத்துகிட்டேன் ஐயா. இன்னும் எட்டு வரி இருக்குது. சீக்கிரமா மனப்பாடம் செஞ்சிடுவேன்”

மன்னிப்பை யாசிக்கும் தொனியில் தெரிவித்தான் சுப்பிரமணி. அதை ஏற்றுக்கொள்வதற்கு அடையாளமாக தலையசைத்தபடி  கண்களை மூடித் திறந்து புன்னகைத்தார் ஐயா.

“அப்புறம், அடுத்ததா யாரு பாடப் போறீங்க?” என்றார் ஐயா. மனோகரன் கையை உயர்த்திவிட்டு அடுத்த கணமே பாடுவதற்குத் தயாரானான். அவன் என்ன பாட்டு பாடப் போகிறான் என்பதைத் தெரிந்துகொள்ள நான் ஆவலோடு அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் சில கணங்களுக்குப் பிறகு சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று பாடத் தொடங்கினான்.

அவன் பாடி முடித்ததும் ஐயா கைதட்டி அவனைப் பாராட்டினார். .”எல்லாப் பாடகர்களும் ஒரே கூட்டணியா இருக்கீங்க போல. எல்லாரும் சேர்ந்து என் வேலையை குறைச்சிட்டீங்க” என்றார். பிறகு “அடுத்து நீ பாடறியா தம்பி?” என்று அவராகவே பழனியின் பக்கம் பார்த்தார். அவன் ஒருமுறை அனைவரையும் பார்த்துவிட்டு தொண்டையைச் செருமியபடி வந்தே மாதரம் என்போம் என்று பாடத் தொடங்கினான். ஒரு பறவை கிளையிலிருந்து எம்பி வானத்தில் வட்டமிட்டுப் பறப்பதைப்போல அவன் அழகாகத் தொடங்கிப் பாடினான். இறுதியில் முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் என்று அழுத்தம் கொடுத்துப் பாடிவிட்டு முடித்தான். தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதைப்போல தன் இரு கைகளையும் இணைத்து மார்பின் மீது வைத்து அழுத்தியபடி கண்களை மூடித் திறந்தார் ஐயா.

அவர் பார்வை அடுத்தபடியாக குமரவேல் பக்கமாகத் திரும்பியது. அவன் பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாதிப் பாடல் மட்டும் பாடினான்.  அவன் முடிப்பதற்காகக் காத்திருந்த சுந்தரம் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே பாட்டில் இரு பத்திகளை மட்டும்  பாடினான். இறுதியாக சந்திரசேகரும் மன்னும் இமயமலை எங்கள் மலையே பாட்டில் இரண்டு பத்திகளை மட்டும் பாடிவிட்டு புன்னகையோடு நிறுத்திவிட்டான்.

“உங்க எல்லாருக்குமே நல்ல குரல்வளம் இருக்குது. உங்கள பார்க்கும்போது ஆறேழு பாரதியாருங்க ஒன்னா சேர்ந்து வந்து நிக்கிறமாதிரி இருக்குது. பாரதியார் உயிரோடு இருந்து பார்த்திருந்தா, உங்களையெல்லாம் தூக்கி தோள்ல வச்சிட்டு ஆடியிருப்பாரு”

அளவற்ற ஆனந்தத்தின் காரணமாக, அவருடைய விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் தேங்கி நின்றன. மடியில் இருந்த துண்டை எடுத்து அதைத் துடைத்தபடி புன்னகைத்தார் ஐயா.

“நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் விஷயத்தைச் சொன்னா, இன்னும் நிறைய பையன்ங்கள கண்டுபிடிச்சிடலாம் ஐயா”

“வரட்டும் வரட்டும். எல்லாரையும் சந்தோஷமா சேர்த்துக்கலாம். நானும் ஸ்கூலுக்கு வந்து உங்க தலைமையாசிரியர நேருல பார்த்து தகவலை சொல்றேன்”

நாங்கள் விடைபெறுவதற்காக கட்டிலை விட்டு எழுந்தோம். உடனே ஐயா  ”இருங்கடா இருங்க” என்று மெதுவாக கையை ஊன்றிக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்தார். “பேச்சு, பாட்டுன்னு இருந்ததுல உங்களுக்கு ஏதாவது குடுக்கணும்ங்கறதே மறந்துபோச்சி” என்றபடி வீட்டுக்குள் சென்றார். எங்களுக்கு அவரிடம் வெளிப்படையாக வேண்டாம் என்று சொல்லித் தடுக்கவும் தெரியவில்லை. அங்கிருந்து புறப்படவும் மனம் வரவில்லை. ஒருவரையொருவர் குறுகுறுப்பாக பார்த்தபடி கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தோம்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மரவள்ளிக்கிழங்குத் துண்டுகள் வைக்கப்பட்ட ஒரு பெரிய தட்டை எடுத்துக்கொண்டு வந்தார் ஐயா. கட்டில் நடுவே வைத்துவிட்டு “சூடா இருக்குது. எடுத்துக்கங்கப்பா” என்றார். நாங்கள் தயக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். “அட. கூச்சப்படாதீங்கப்பா. உங்க வீடு மாதிரி நினைச்சிக்குங்க. எடுத்து சாப்பிடுங்க” என்றார். அதற்குப் பிறகு ஒவ்வொருவராக அந்தத் துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டோம். சில நிமிடங்களுக்குப் பிறகு எலுமிச்சைச்சாறு நிரப்பப்பட்ட தம்ளர்களைக் கொண்ட தட்டுடன் பாட்டி வந்து நின்றார். கிழங்கு தின்று எலுமிச்சைச்சாறு குடித்த பிறகு, எங்களுக்கு வயிறே நிரம்பிவிட்டதுபோல இருந்தது.

”பாரதியார் பாட்டுல உங்களுக்கு எப்படி இந்த அளவுக்கு ஈடுபாடு வந்தது ஐயா?”

அவரைப் பார்த்ததிலிருந்து கேட்கலாமா வேண்டாமா என்று மனத்திலேயே உருட்டிக்கொண்டிருந்த கேள்வியை எப்படியோ  தடுமாற்றத்துடன் கேட்டுவிட்டேன்.

“ஆ” என்று புன்னகையோடும் ஒருவித ஆச்சரியத்தோடும் அவர் என்னை ஒருமுறை பார்த்தார். “அதுதான் பாரதியார் பாட்டுக்கு இருக்குற சக்தி. ஒரு தரம் கேட்டா போதும் அப்படியே காந்தம் மாதிரி இழுத்துக்கும். நான் பாரதியாரை நேருக்கு நேர் பார்த்த ஆள். அவர் பேசறதயும் பாடறதயும் இந்த ரெண்டு கண்ணால பார்த்திருக்கேன். நாயன்மார்கள், ஆழ்வார்கள் பத்தியெல்லாம் நீங்க உங்க பாடத்தில படிச்சிருப்பீங்க. அதேமாதிரி வாழ்க்கைமுழுக்க பாரதியார் பாடல்களை மட்டுமே பாடிப்பாடி, அதுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிச்சிகிட்ட ஆளுங்கள நான் பார்த்திருக்கேன். அதுதான் என் ஈடுபாட்டுக்குக் காரணம்”

அவர் சொல்லச்சொல்ல விழிவிரிய சொல்லெழாத நிலையில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ரத்தமும் சதையுமாக பாரதியாரை நேரில் பார்த்த ஒருவருக்கு முன்னால் நாங்கள் அமர்ந்திருக்கிறோம் என்பதே எனக்கு பரவசமளிப்பதாக இருந்தது.

“எங்க பார்த்தீங்க அவரை?”

“எப்படி இருந்தாரு?”

“படத்துல இருக்கிறமாதிரி பெரிய மீசையோடு தலைப்பா சுத்திகிட்டு இருந்தாரா?”

ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்டோம். அதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒருவித ஒளி படர்வதைப் பார்த்தேன்.

“அந்தக் காலத்துல எங்க அத்தை மெட்ராஸ்ல திருவல்லிக்கேணியில இருந்தாங்க. அப்ப பாரதியாரும் அதே திருவல்லிக்கேணியிலதான் இருந்தாரு. அவரு இருந்தது பெருமாள் கோயில் தெரு. அத்தை வீடு அந்தத் தெருவிலேர்ந்து ரெண்டு தெரு தள்ளியிருந்தது. எனக்கு அப்ப உங்க வயசு இருக்கும். எங்க அத்தை வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர் வீட்டுப் பக்கமா போய் அவரு இருக்காரான்னு பார்ப்பேன். சில சமயங்கள்ல அவர் திண்ணையில உக்கார்ந்து பாடிட்டிருப்பாரு. சில நேரங்கள்ல வீட்டுக்குள்ளேர்ந்து அவரு பாடற குரல் கேட்கும். அப்படியே தெருவோரமா கொஞ்ச நேரம் நின்னு கேட்டுட்டு ஓடி வந்துடுவேன்.”

அவர் உற்சாகத்துடன் பல சம்பவங்களை நினைவிலிருந்து எடுத்துச் சொல்லத் தொடங்கினார். ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு கதை மாதிரி இருந்தது.

“காந்தித்தாத்தாவை பார்த்திருக்கீங்களா?” என்று திடீரென ஒரு கேள்வியைக் கேட்டான் சந்திரசேகர்.

“ஓ. பார்த்திருக்கேனே.  ரெண்டு தரம் பார்த்திருக்கேன்” என்று புன்னகையோடு இரண்டு விரலை உயர்த்தியபடி சொன்னார் ஐயா.

“ரெண்டு தரமா?” என்று வாயைப் பிளந்தான். “நம்ம வளவனூருக்கு வந்திருந்தாரா?”

“இல்லை. இல்லை. இங்க வரலை. அத்தை வீட்டுக்கு போயிருந்த போது பாரதியாரைப் பார்த்தேன்னு சொன்னேனே. அந்த வாரத்துலயே கடற்கரையில ஒரு கூட்டம் நடந்தது. அதுல காந்தி பேசினாரு. அவரு இன்னும் தாத்தாவா ஆகாத சமயம். நடு வயசுல இருந்தாரு. அப்பதான் அவரை முதல்முறையா பார்த்தேன். அதுக்கப்புறம் ரெண்டுமூனு வருஷம் கழிச்சி கடலூருல மஞ்சக்குப்பத்துல ஒரு கூட்டம் நடந்தது. அதுல பேசறதுக்காக ஒரு தரம் வந்திருந்தாரு. அவரப் பார்க்கிறதுக்காக நானும் நாலஞ்சி பேருமா சேர்ந்து வளவனூருலேருந்து சைக்கிள் எடுத்துட்டு போய்வந்தோம். அது ரெண்டாவது முறை.

பாரதியார் கதை, காந்தித்தாத்தா கதை என்று எங்கள் பேச்சு நீண்டுகொண்டே போனது. முடிப்பதற்கு மனமில்லாமல் முடித்துக்கொண்டு எழுந்து ஒரு வழியாக  விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடம் சென்றதுமே நாங்கள் பாரதியார் புராணத்தைத் தொடங்கிவிட்டோம். வழக்கமாக பள்ளியில் நடைபெறும் பாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் எல்லா நண்பர்களிடமும் தகவலைப் பரப்பினோம். எல்லோரும் ஆவலோடு கேட்டுக்கொண்டனர். எல்லோருமே நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்து பாடுவதாக வாக்களித்தனர்.  புதிய மாணவர்களும் சேர்ந்துகொள்வதாகத் தெரிவித்தனர்.

தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் வகுப்புக்கு வந்ததும் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் போல இருந்தது. பாடம் முடிவடைவதற்காகக் காத்திருந்து ஐயாவைச் சந்தித்ததில் தொடங்கி உரையாடிய விவரங்கள் வரைக்கும் எல்லாவற்றையும் சுருக்கமாகத் தெரிவித்தேன்.

”உங்க அப்பாவும் அந்தக் காலத்துல பாடம் சொல்லிக்கொடுப்பாராமே. அவரைப்பத்தி ரொம்ப பெருமையா சொன்னாரு”

புன்னகையோடு தலையசைத்தபடி நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டார் ஐயா. ”அதெல்லாம் பழைய கதை” என்று ஒரு புன்னகையோடு நிறுத்திவிட்டார்.  பிறகு “காலையில முதல் பீரியட் நடக்கிற சமயத்துல ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர பார்த்து பேசிட்டு போனாரு” என்று சொன்னார்.

“பாரதியார் நிகழ்ச்சி பத்தி சொன்னாரா?”

“ஆமாம். அதைப்பத்தித்தான் பேசிட்டு லெட்டர் குடுத்திட்டு போயிருக்காரு. இன்னைக்கு சாயங்காலமே நோட்டீஸ் போர்டுல செய்தி ஒட்டுவாங்கன்னு நெனைக்கறேன்.”

அன்று மாலை பள்ளியைவிட்டு புறப்படும்போது அறிவிப்புப் பலகையில் பாரதியார் ஐம்பதாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. நாங்கள் கூட்டமாக பலகை முன்னால் நின்று அச்செய்தியை வாய்விட்டுப் படித்தோம்.

நாங்கள் பரப்பிய செய்தியின் விளைவாக பாரதியார் பாடலைப் பாடிப் பயிற்சியெடுத்த ஆறு நண்பர்கள் இரண்டுநாள் கழித்து எங்களைச் சந்தித்தனர். ஆர்வத்தின் காரணமாக நாங்கள் அவர்களை ஐயா வீட்டுக்கு நேரிடையாக அழைத்துச் சென்றோம். அவர்கள் ஐயாவின் முன்னிலையில் பாடிக் காட்டினர். ஐயாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ”ரொம்ப நல்லா இருக்குது. நிகழ்ச்சியில பாடும்போதும் இதேபோல நம்பிக்கையோடு தைரியமா பாடணும், புரியுதா?” என்று சொல்லிவிட்டு தட்டிக் கொடுத்தார் ஐயா. பாட்டி அன்று எல்லோருக்கும் கொய்யாப்பழங்களை துண்டுதுண்டாக நறுக்கிக்கொண்டு வந்து கொடுத்தார். பிறகு சூடாக ஏலக்காய் மணம் வீசும் தேநீர்  கிடைத்தது. வளவனூரில் இருந்த எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார் ஐயா.

“நிகழ்ச்சியை எங்க நடத்த முடிவு செஞ்சிருக்கீங்க ஐயா. அதைச் சொல்லவே இல்லையே” என்று கேட்டேன் நான்.

“நம்ம வீட்டு வாசல்தான் நிகழ்ச்சி நடக்கிற இடம்” என்று அமைதியான குரலில் பதில் சொன்னார் ஐயா.

”வீட்டுக்குள்ளயா?” நாங்கள் குழப்பத்துடன் அவரைப் பார்த்தோம். எங்களால் அந்த இடத்தை ஒரு நிகழ்ச்சிக்குப் பொருத்தமான இடமாகப் பார்க்க முடியவில்லை.

“வாசல்னு சொன்னதும் வீட்டுக்குள்ள பார்க்காதீங்க. அதோ அங்க நிக்குது பாரு அரசமரம். எப்படி மிடுக்கா நெஞ்சை நிமுத்திகிட்டு நிக்குது பாரு. பார்க்கிறதுக்கு அதுவே பாரதியார் மாதிரி தெரியுதில்ல. அந்த மரத்தடியில மேடை போட்டு நிகழ்ச்சியை வச்சிக்கலாம். தெருவுல ரெண்டு பக்கமும் பார்வையாளர்களுக்கான இடம். இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு?”

அரசமரத்தைத் திரும்பிப் பார்த்தேன். பார்க்கும்போதே அதுதான் நிகழ்ச்சிக்குப் பொருத்தமான இடம் என்று தோன்றிவிட்டது. “நல்ல இடம்தான் ஐயா. அங்கயே வச்சிக்கலாம்” என்று சொன்ன பிறகு புறப்பட்டுவிட்டோம்.

கண்ணைமூடி கண்ணைத் திறப்பதற்குள் ஆகஸ்டு மாதம் ஓடி மறைந்துவிட செப்டம்பர் பிறந்துவிட்டது.

தாயின் மணிக்கொடி பாரீர், பாருக்குள்ளே நல்ல நாடு ஆகிய இரு பாடல்களுமே எனக்குப் பிடித்த பாடல்கள். இரண்டு பாடல்களிலும் எனக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஆனால் ஒரு பாட்டைத்தான் பாடவேண்டும் என்றால் எதைப் பாடுவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். மனோகரனும் பழனியும் ”பாருக்குள்ளே நல்ல நாடு பாட்டயே பாடுடா. உன் குரலுக்கு அதுதான் நல்லா எடுப்பா இருக்கும்” என்று உறுதியோடு சொன்னார்கள்.

அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவெடுக்கலாம் என்கிற எண்ணத்தில் ஒருநாள் இரவு அம்மாவிடம் இரு பாடல்களையும் பாடிக் காட்டினேன்.   அம்மா ஒரு கணம் யோசனைக்குப் பிறகு “பாருக்குள்ளே நல்ல நாடு பாட்டையே பாடுடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதற்குப் பிறகு எந்த இரண்டாவது யோசனைக்கும் இடமில்லாமல் அந்தப் பாட்டையே தினமும் பாடிப் பாடிப் பழகினேன்.

ஒரு ஞாயிறு மாலையில் நானும் நண்பர்களும் ஐயாவைப் பார்ப்பதற்காகச் சென்றோம். ஐயா கட்டிலில் உட்கார்ந்துகொண்டு மடிமீது ஒரு பலகையை வைத்துக்கொண்டு அழைப்பிதழ்களில் பெயர்களை எழுதிக்கொண்டிருந்தார். எங்களுடைய காலடி சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்து பார்த்து சிரித்தார். “வாங்கடா, உள்ள வாங்க” என்றார். நாங்கள் உள்ளே சென்று அவரைச் சுற்றி வட்டமாக நின்றுகொண்டோம். மனோகரன் ஒரு அழைப்பிதழை எடுத்துப் பிரித்து ஒவ்வொரு வரியாக வாய்விட்டுப் படித்தான். பாட்டி எல்லோருக்கும் பானகம் எடுத்துவந்து கொடுத்தார்.

திண்ணையில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி இறக்கி வைக்கப்பட்டதைப் பார்த்துவிட்டு “அது என்ன ஐயா?” என்று கேட்டேன். “அதுவா? நிகழ்ச்சியில பாடற எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரு அன்பளிப்பு கொடுக்கலாம்னு திட்டம் போட்டிருக்கேன்.  அதுதான் மெட்ராஸ்லேர்ந்து இந்தப் பொட்டியில வந்திருக்குது” என்றார்.

“என்ன அன்பளிப்பு ஐயா?”

ஒவ்வொருவரும் மாற்றிமாற்றி ஆர்வத்துடன் கேட்டனர். ஐயா புன்னகைத்தபடி சொல்ல மறுத்துவிட்டார். “அது ரகசியம். இப்ப சொன்னா சுவாரசியம் போயிடும். உங்க கைக்கு வரும்போதுதான் அது தெரியணும்” என்றார்.

“பொம்மையா ஐயா?”

“டிபன் பாக்ஸா?”

“சில்வர் தட்டு?”

ஏதேதோ வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி எல்லோரும் அவரை நோக்கி தூண்டில் போட்டனர். ஐயா எதற்கும் பிடி கொடுக்கவில்லை. ரகசியம், ரகசியம் என்று ஆட்காட்டி விரலை உயர்த்தி உதடுகள் மீது வைத்து புன்னகைப்பவராகவே இருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு நாங்களும் அவரிடம் கேட்பதை நிறுத்திவிட்டோம்.

நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த பதினொன்றாம் தேதி பிறந்துவிட்டது. பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு இருப்பு கொள்ளவே இல்லை. மாலைப்பொழுது எப்போது வரும் என்று காத்திருக்கத் தொடங்கினோம். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஓட்டமாக வீட்டுக்கு ஓடினோம்.  குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு எல்லோரும் ஒன்றாகக் கிளம்பி ஐயாவின் வீட்டை நோக்கி நடந்தோம்.

அந்தத் தெருமுனையில் திரும்பும்போதே அரசமரமும்  அதன் காலடியில் போடப்பட்டிருந்த மேடையும் தெரிந்துவிட்டன. தெருவின் இரு மருங்கிலும் பெஞ்சுகளும் நாற்காலிகளும் நிறைந்திருந்தன. ஒலிபெருக்கியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடிக்கொண்டிருந்தது. நாங்கள் ஐயாவைச் சந்தித்து வணக்கம் சொல்லிவிட்டு முன்வரிசையில் ஒரு பெஞ்ச்சில் உட்கார்ந்தோம். சிறிது நேரத்தில் நான்கு பள்ளிகளிலிருந்தும் மாணவர்களும் மாணவிகளும் வந்து நிறைந்துவிட்டனர். சில பிள்ளைகள் பாரதியார் போலவே தலைப்பாகை கட்டி மீசை வைத்து ஒப்பனை செய்துகொண்டு வந்திருந்தனர்.

குறித்த நேரத்தில் ஐயா நிகழ்ச்சியைத் தொடங்கிவிட்டார். ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்’ என்னும் பாரதியார் பாடலையே இறைவணக்கப்பாடலாக அவரே பாடினார். அவர் குரலுக்கும் அவர் வயதுக்கும் தொடர்பே இல்லை என்று தோன்றியது. முறுக்கேறிய அவர் குரலைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. விழுப்புரத்திலிருந்தும் கண்டமங்கலத்திலிருந்தும் வந்திருந்த சில பெரியவர்கள் சிற்றுரை நிகழ்த்தினர். ராதாகிருஷ்ணன் ஐயா எழுந்து பாரதியாரின் வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளை சுவைபட விரித்துரைத்தார்.

அதற்குப் பிறகு அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சி அரங்கேறத் தொடங்கியது. ஒவ்வொருவராக மேடையேறி பாடலைப் பாடினர். பாடி முடித்ததும் மேடையிலேயே பரிசு வழங்கப்பட்டது. அன்று அவர் வீட்டில் நாங்கள் பார்த்த பெரிய அட்டைப்பெட்டி மேடை ஓரத்தில் இருந்தது. அங்கிருந்துதான் பரிசு கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. முன்னும் பின்னும் பாரதியாரின் படம் அச்சிடப்பட்ட பாரதியாரின் பாடல்தொகுதிதான் அந்தப் பரிசு.

ஊராட்சி ஒன்றியப்பள்ளி, கோவிந்தையர் பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகள் பாடிச் சென்ற பிறகு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டார்கள். அந்த வரிசையில் நாங்கள் ஒவ்வொருவராகச் சென்று பாடிவிட்டு இறங்கினோம். எங்கள் பாட்டுக்கு எழுந்த கைத்தட்டல்களும் பாராட்டுகளும் எங்கள் மனத்தை மயக்கின.  எங்கிருந்தோ பாரதியார் எங்களைப் பார்த்து புன்னகைப்பதுபோல இருந்தது.

எங்களுக்கு வழங்கப்பட்ட பாரதியார் பாடல் புத்தகத்தை நொடிக்கொரு முறை ஆசையோடு புரட்டிப்புரட்டிப் பார்த்தோம். ஐயா குறித்த ஐம்பது பாடல்கள் என்னும் கணக்கு தாண்டிவிட்டது. ஏறத்தாழ எழுபது பேருக்கும் மேல் பாடினார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டுக்குத் திரும்பும் வழியில் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு நடந்தோம்.

அந்தத் தெருவைக் கடப்பதற்கு முன்பாக ஒருமுறை திரும்பி நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைப் பார்த்தேன். இலையடர்ந்த அரசமரம் சிறிது வெளிச்சமும் இருட்டும் மண்டிய பின்னனியில் தலைப்பாகை கட்டிய பாரதியாரின் முகம்போலத் தோற்றமளித்தது. அப்படி ஒரு தோற்றத்தை உணர்ந்த கணத்தில் உடல் சிலிர்த்தது. ”என்னடா அங்க பார்க்கிற?” என்று கேட்டான் சுந்தரம். நான் கண்ட காட்சிமயக்கத்தைச் சொல்வதற்கு நாக்குநுனி வரைக்கும் திரண்டுவந்த சொல்லை அப்படியே விழுங்கிவிட்டேன். “ஒன்னுமில்லை. சும்மா பார்த்தேன்” என்று புன்னகைத்தபடி எல்லோரோடும் சேர்ந்து நடக்கத் தொடங்கினேன்.