Home

Sunday 17 September 2023

அழைப்பு - சிறுகதை

 

அமைதியா நாலஞ்சுமணிநேரம் தூங்குவாங்க மிஸ்டர் பார்த்திபன். அதுக்குத்தான் இப்ப மரு:நது குடுத்திருக்கேன். க்ளினிக்ல சேக்கறதபத்தி இப்பவாவது நீங்க சரியான ஒரு முடிவுக்கு வரணும். சரியான மெடிகேஷன் இல்லாம இங்க வச்சி நீங்களா கவனிச்சிக்கறது ரொம்ப கஷ்டம். எத்தன தரம் சொன்னாலும் ஒங்களுக்குப் புரியறதில்லை. நீங்க நிர்மலாவுக்கு ஒரு கணவனாதான் இருக்க முடியுமே தவிர ஒரு டாக்டரா இருக்க முடியாது. இது ஏன் தெரியலை உங்களுக்கு?” என்று கேட்டார் டாக்டர். வருத்தமான புன்னகையுடன் ஒருகணம் அவரை நிமிர்ந்து பார்த்தான் பார்த்திபன். “இனிமே எச்சரிக்கையா இருக்கிறேன் டாக்டர். இன்னொருமுறை இப்பிடி நடந்ததுன்னா ரெண்டாவது யோசனைக்கே இடமில்லை டாக்டர் நேரா அட்மிஷன்தான்என்றான் கசந்த புன்னகையோடு, சிறிது நேரம் அவனை ஆழ்ந்த அனுதாபத்துடன் பார்த்தார் டாக்டர். பிறகு.கே. டேக் கேர்என்று பெருமூச்சுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். அறைக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நிர்மலாவை சில நொடிகள் பார்த்தபடி நின்றான் பார்த்திபன். வெட்டி வீழ்த்தப்பட்ட வாழையைப்போல கிடந்தாள் அவள். தலைமுடி கலைந்து கிடந்தது. ஒட்டிப்போன கன்னம். இளஞ்சிவப்பில் வெடித்த உதடுகள். கீழுதடுமட்டும் சற்று பெரிதாக தூக்கலாக தெரிந்தது. சீரான மூச்சில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

சத்தமின்றி அறையைச் சாத்திவிட்டு வெளியே வந்தான். ஃபிரிஜ்ஜைத் திறந்து குளிர்ந்த நீரை நிரப்பிவைத்திருந்த பாட்டிலை  எடுத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான். குளிர்ந்த நீர் தொண்டைக்குள் இறங்கும்போது இதமாக இருந்தது. ஒருவித வெப்பம் தணிவதைப்போல ஒரு சில நிமிடங்களுக்குப்பின் எழுந்து சென்று சரஸ்வதி மகளிர் இல்லத்துக்கு தொலைபேசி செய்தான். உதவிக்கு ஒருவரை அனுப்பித் தருமாறு காலையில் சொன்னதையே மீண்டும் நினைவூட்டினான்.

இப்ப எப்படி இருக்காங்க நிர்மலா?” இல்ல நிர்வாகியின் குரல் மறுமுனையில் கேட்டது.

பரவாயில்லை சிஸ்டர். டாக்டர் வந்து ஊசிபோட்டுட்டு போயிருக்காங்க. இப்ப நல்ல தூக்கம்.”

ராதாகிட்ட சொல்லியிருக்கேன். இன்னும் ரெண்டுமணி நேரத்துக்குள்ள வந்துருவாங்க. பயப்படவேணாம் பார்த்திபன். கடவுள் துணை நமக்கு எப்பவும் உண்டு.”

தேங்க்யு சிஸ்டர்.”

பாட்டிலை ஃபிரிஜ்ஜூக்குள் வைத்துவிட்டு சோபாவுக்குத் திரும்பினான். அருகிலிருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்டினான். எழுத்துக்கள் எல்லாம் சீராக ஒரு பாதையில் நகர்கிற வாகனங்களின் வரிசையைப்போல நெளிந்தன. நெருக்கடியான சாலை. வாகனங்களின் விதம்விதமான இரைச்சல்கள். சலிப்போடு தாளை மடக்கி மூடி மேசையின்மீது வைத்தான். “நம் மனம் ஒன்றிலேயே மூழ்கிவிட்ட பிறகு எதைப்பார்த்தாலும் அதன் பிம்பங்களையே மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்தபடி இருக்கிறது. அது ஆபத்தானதல்ல. ஒரு கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிம்பங்களை நம்பத் தொடங்குகிறது. அதுதான் ஆபத்துஎன்ற டாக்டரின் குரல் காதருகே கேட்டது. வெயில் கொளுத்துகிறபோது மழை பொழிகிறது. கழுத்திலேயே இருக்கிற சங்கிலியை யாரோ ஒரு திருடன் பறித்துக்கொண்டு ஓட்டமாக ஓடுகிறான். நடைபாதையில் கண்ணிவெடிகள் வெடித்து ஏராளமான பாதசாரிகள் இறந்து விடுகிறார்கள். வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக வாசலுக்கு வந்து நின்ற வாகனத்தின் ஹாரன் அழைப்பு இடைவிடாமல் கேட்கிறது. எல்லாமே அந்த வகைதான்என்றார் டாக்டர். “எதார்த்தமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மனம் அப்படி நம்பத்தொடங்கிவிட்டது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினைஎன்று விளக்கினார். “அது ஒரு தவறான நம்பிக்கை என்பதை இன்னொரு திசையிலிருந்து நம்பும் அளவுக்கு அந்த மனத்தை நாம் தயார் செய்ய வேண்டும். அதுதான் இதற்கு மருந்து. நிர்மலாவுக்கு  இதுதான் இப்போதைய தேவைடாக்டரின் சொற்கள் நெஞ்சில் நகர்ந்து கொண்டிருந்தன.

இல்லம்தான் அவள் வளர்ந்து படித்து பட்டதாரியான இடம். வெளிநாட்டு நிறுவனத்தோடு தொடர்புகொண்ட ஒரு கிளை நிறுவனத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே ஒரே குழுவாக வேலை செய்ய நேர்ந்தது. அந்தப் பழக்கம் மெல்ல நெருக்கமாக மாறி திருமணம்வரை வளர்ந்தது. அம்மா அப்பா இல்லாமல் தூரத்து மாமா ஒருவரால் வளர்க்கப்பட்டவன் அவன். இரண்டு பக்கத்திலும் எதிர்ப்புகள் எதுவும் இல்லை. தன் வருமானத்தில் பாதியை அவள் இல்லத்துக்குத் தரவிரும்பினாள். அதுமட்டுமே அவள் முன் வைத்த ஒரே கோரிக்கை. அதற்கு உடன்படுவதில் அவனுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவர்கள் திருமணம் எளிமையான முறையில் நடந்தேறியது.

நல்ல நவீன ஓவியங்களும் தரைவிரிப்புகளும் ஒப்பனைப் பொருட்களும் உள்ள முதல் தள வீடு. காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் குறைவில்லை. கூடத்தில் இசையை வழியவிடும் புத்தம்புதிய இசைப்பெட்டி. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. கட்டில் இல்லாமல் மெத்தைமட்டும் விரிக்கப்பட்ட எளிய படுக்கையறை. கணிப்பொறிக்கான இன்னொரு அறை. ஆசைப்பட்டவை அனைத்தும் வாழ்வில் கிடைத்துவிட்ட மனநிறைவில் மிதந்து கொண்டிருந்த காலம். ஆனந்தத்துக்கு ஒரு குறைவுமில்லை. எதிர்பாராத காய்ச்சலில் ஒன்றரை வயதுக்குழந்தையை நாலைந்து மணிநேர இடைவெளியில் மரணத்துக்கு அள்ளிக் கொடுக்க நேர்ந்தபோதுதான் துக்கத்தின் நிழல் முதன்முதலாக கவியத் தொடங்கியது. எப்போதுமே வருத்தம். இயலாமை, கோபம், எரிச்சல், வேதனை, கண்ணீர்நிறைந்தவளாக மாறிவிட்டாள் நிர்மலா. விடுப்பெடுத்துக்கொண்டு கொடைக்கானல், ஏற்காடு என்று பத்து நாட்கள் மன அமைதிக்காக அழைத்துச் சென்றான் பார்த்திபன். மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, என்று கோயில்களுக்குப் போய்வந்தால் நல்லது என்று எதிர்த்தளத்து பார்த்தசாரதி சொன்னதை ஏற்றுக்கொண்டு அங்கெல்லாம் ஒருநடை போய்விட்டுத் திரும்பினார்கள். அந்த அமைதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. உளைச்சலும் சோர்வும் அவளை நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. “டாலர் டாலரா எண்ணிக் கணக்கு வச்சிக்கறதுக்குத்தான் கம்பெனிக்கு கண்ணு இருக்குதா? ஒரு பொம்பளையோட மனசும் துக்கமும் என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்கு கண்ணு வேணாமா?” என்று புலம்பினாள்  நிர்மலா. தூக்கமில்லாமல் நினைத்த நேரத்தில் எழுந்து உட்கார்ந்து பரபரவென அறைக்குள்ளேயே நடப்பாள். அலமாரியைத் திறந்து புதிய உடைகளை வேகவேகமாக எடுத்து அணிந்துகொண்டுபார்த்தி, நா வரட்டுமா, ஆபீஸ்க்கு டைமாய்டுச்சிஎன்று கிளம்பி நிற்பாள். திடீரென மேசை டிராயரைத்திறந்து எல்லாச் சாமான்களையும் தலைகீழாக கொட்டிவிட்டுத் தேடுவாள். “இங்கதானே வச்சேன் என் ஐடின்டீட்டி கார்ட், நீ பார்த்தியா? ஒரு ராத்திரிக்குள்ள எங்க போவும்? என்று கோபித்துக்கொள்வாள். இப்படி எதிர்பாராத தருணங்களில் குணம் மாறிவிடும் அவளை ஆதரவாக அணைத்துச் சென்று உட்காரவைத்து அமைதிப்படுத்துவான் பார்த்திபன். மடியில் புதைந்த அவள் தலையை வருடிய படியும் கூந்தலில் விரல்விட்டுக் கோதியபடியும் உண்மை அவள் மனத்தில் பதியும்படி எடுத்துச் சொல்வான். அவளைச் சமநிலைக்குத் திருப்பிய பிறகு மாத்திரையும் பாலும் கொடுத்து உறங்கவைப்பான். ஆழ்ந்த உறக்கம் அவளைத் தழுவத் தொடங்கிய பிறகுதான் அறையைவிட்டு வெளியே வருவான்.

ஒருநாள் வாசலருகே யாருக்காகவோ நின்றிருந்த டாட்டாசுமோ வாகனத்தைப் பார்த்துவிட்டுகம்பெனி வண்டி வந்து நிக்குது பார்த்தி. எவ்வளவு நேரமா ஹார்ன் சத்தம் கேக்குது. நான் மட்டும்தான் பாக்கி போல. அதான் அழச்சிகிட்டே இருக்காங்க. சரி வரட்டுமா?” என்றபடி கதவைத்திறந்துகொண்டு ஓடத் தொடங்கினாள். அதுதான் பிரச்சினையின் ஆரம்பம். அதுவரை அவளைத் தன்னால் தனியாகக் கவனித்துக்கொள்ள முடியும் என்று உருவாகியிருந்த நம்பிக்கை மெல்ல உடைந்தது. அதற்காக மருத்துவர் சொல்வதுபோல உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவும் மனம் இடம்தரவில்லை. அவளை ஒரு நோயாளியாக நினைத்துப் பார்க்கவே அவனால் முடியவில்லை. தன் துணையும் அன்பும் ஆறுதலும் அவளை வெகுவிரைவில் குணமாக்கிவிடும் என்று உறுதியாக நம்பினான்.

ஒரு மாதம் வரைக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. பழசையெல்லாம் மறந்துவிட்டவளைப்போல அவளும் காணப்பட்டாள். இசைப்பெட்டியில் குழலிசையை ஓடவிட்டு அதில் வெகுநேரம் திளைத்திருந்தாள். சில புதிய படங்களின் சி.டி.க்களை வாங்கிவந்து போட்டுப் பார்த்தாள். இல்லத்துக்கு தனியாகவே ரெண்டு மூன்று முறை போய்வந்தாள். வழக்கமாக அவள் கொடுக்கும் தொகையை நிறுத்த விருப்பமில்லை. “வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வந்தாள். ஒரு நல்ல வேலை அவளுக்கு ஆறுதலாக இருக்கக்கூடும் என்று நினைத்தான் பார்த்திபன். “நிர்மலாவுக்கு வேலைக்கு போவதால எந்தப் பிரச்சனையும் இல்லை, தாராளமா அனுப்பலாம்என்று மருத்துவரும் சொன்னார். “மனித வாழ்க்கையில் வெவ்வேறு உலகங்கள் உண்டு பார்த்திபன். வீடு ஒரு உலகம். நண்பர்கள் ஒரு உலகம். பொழுதுபோக்கு, கோயில், குளம், தொலைக்காட்சி, ஊர் சுற்றுதல்ங்கறது ஒரு உலகம். வேலைங்கறது ஒரு உலகம். சிற்பம், இசை, ஓவியம், இலக்கியம்னு ஒரு உலகம். ஒரு சராசரி மனிதனுக்கு எல்லாமே வேணும் தெரிஞ்சிக்குங்க. எல்லாமே மனசுடைய சக்திக்கும் உடம்புடைய சக்திக்கும் நல்ல தீனி. இப்படி பல உலகங்கள்ள சக்தி செலவழிஞ்சிட்டே இருக்கணும். வாய்க்கால்ல தண்ணி ஓடிட்டே இருக்கிறமாதிரி. செலவாக செலவாக தண்ணி ஊத்தெடுக்கறத போல சக்தியும் ஊத்தெடுத்துப் பெருகும். சக்தி தேங்கும்போது பிரச்சனை. தண்ணி தேங்கினா துர்நாற்றமா இருக்குமே அதுபோல. அது மத்த செயல்பாடுங்களை பாதிக்கும் உத்தியோகம் புருஷ லட்சணம்ங்கறது தப்பு. உத்தியோகம் உலக லட்சணம். ஆண், பெண் எல்லாருக்கும் உத்தியோகம் வேணும். சக்தி தடையில்லாம பாய்ஞ்சிகிட்டே இருக்கணும்டாக்டர் மேசையின் மீதிருந்த சின்ன டார்ச் லைட்டையும் கண்ணாடிக் கோளத்தையும் மாறிமாறி உருட்டியபடி சொன்னார்.

ஆறேழு நிறுவனங்களின் நேர்காணல்களுக்குச் சென்று வந்த பிறகும் எந்தப் பயனுமில்லை. எல்லாருக்குமே அவளுடைய முதல் அனுபவம் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. என்றாலும் அவர்களுடைய குறிப்பிட்ட சில முக்கியமான கேள்விகளுக்கு அவளால் ஆழ்ந்து பதில் சொல்ல இயலவில்லை. மூன்றாவது சுற்று அல்லது நான்காவது சுற்று நேர்காணலில் வெளியேற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. “சரி விடு  நிர்மலா, இதுக்கெல்லாம் எதுக்கு வேதனைப்படணும்? இந்த மடம் இல்லைன்னா இன்னொரு மடம்என்று அமைதிப்படுத்தினான் பார்த்திபன். அடுத்த நாள் காலையில் தற்செயலாக வாசலில் நின்றிருந்த டாக்டர் சுமோவைப் பார்த்துவிட்டுஹார்ன் அடிச்சி கூப்படறாங்கப்பா, உனக்கு கேக்கலையா பார்த்தி, சீக்கிரம் கௌம்பணும், ஒரு உதவி செய். போ. போய் இதோ வந்துட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லி வண்டியை நிறுத்தி, போஎன்று அவசரப்படுத்திவிட்டு உடைமாற்றிக் கொள்ளத் தொடங்கினாள். “போன்னா ஏம்பா இப்படி மசமசன்னு நிக்கறே? போய்ச்சொல்லுப்பா, வண்டி போயிடுச்சின்னா ஆட்டோ புடிச்சிதான் போவணும். தெண்டமா நூறு ரூபாய் அழணும்என்று நளினமாகக் கடிந்து கொள்வதைப்போல மீண்டும் சொன்னாள். அவன் என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தான். பிறகு அவளே, “நீ ஒண்ணும் சொல்லவேணாம் போ. அவன் வேற விடாம ஹார்ன அடிச்சிகிட்டே இருக்கான். நானே போகிறேன்என்று பின்னலை ஒரு கையால் சரிசெய்தபடி காலணிகளை அணிந்தவாறு கதவுக்கருகே சென்றாள். “நிர்மலா இரும்மா. அது உனக்கு வந்த வண்டி இல்லைம்மாஎன்று ஓடித் தடுத்தான். “ஒனக்கு எப்படித் தெரியும்? எனக்கு வந்து வண்டி அடையாளம் எனக்குத் தெரியாதா?” என்று அவனைத் தொடவிடாமல் தள்ளிவிட்டு சத்தமிட்டாள் அவள். அவன் தடுமாறி சுவர் அலமாரியின் பக்கம் சாய, எல்லாப் பொருட்களும் செய்தித்தாட்களும் வேகவேகமாக கீழே சரிந்தன. நிர்மலா சட்டென்று கதவைத்திறந்து வெளியே பாய்ந்து நடக்கத் தொடங்கினாள். பின்னாலேயே எழுந்து ஓடி வந்த  பார்த்திபன் அவள் தோளைத் தொட்டு அழுத்தி நிறுத்தினான். “நிர்மலா சொல்றத கேளு. வா. வந்து இந்த வண்டி இல்லை. வேற ஏதோ பிரைவேட் வண்டி. வா. வந்து இந்த ஜன்னல் வழியா பாருஎன்று நிதானமாக சொன்னான். அவள் காட்டிய திசையில் அவள் ஒரு கணம் நடந்து ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு அமைதியில் உறைந்து நின்றாள். பிறகுஎல்லாருமே ஏமாத்துக்காரங்க. என் காதுல நல்லா கேட்டுது ஹார்ன் சத்தம். நீ இல்லைன்னு சொல்ற. நான் வேலைக்கு போவறது உனக்குப் புடிக்கலை. நான் சம்பாதிச்சி எங்க இல்லத்துக்கு உதவி செய்யறது உனக்குப் புடிக்கலை. அத நேரா சொல்றதுக்குப் பதிலா இப்படி குறுக்கு வழியில சொல்றியா பார்த்தி?” என்று திடீரென விசும்பத் தொடங்கினாள். கண்ணீர் தன்னிச்சையாகப் பெருகி அவள் கன்னங்களில் வழிந்தது. தழுதழுக்கும் அக்குரலைக் கேட்டு அவள் மனம் வேதனையில் மூழ்கியது. உடல் நடுங்க ஒரு கணம் என்ன செய்வதெனப் புரியாமல் திணறினான். “நிர்மலா.. நிர்மலாஎன்று பலமுறை மனத்துக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

அவளுடைய கைகளைப் பற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்துவந்து உட்கார வைத்தான். அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு அன்று வீட்டுக்குள்ளேயே இருந்தான். அவள் அவனிடம் பல உணர்ச்சிகளுடன் தடுக்கத்தடுக்க பேசிக்கொண்டே இருந்தாள். கெஞ்சலும் அழுகையும் மாறிமாறி வெளிப்பட்டன. ஒரு குழந்தையைப்போல கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டாள். “உண்மையிலேயே எனக்கு வரலையா அந்த வண்டி? அப்படின்னா எனக்கு எப்ப வேலை கெடைக்கும்? எனக்குன்னு எப்ப வண்டி வரும்? நானும் உன்ன மாதிரியே எப்ப வேலைக்குப்  போவேன்? ஒன் ஆபீஸ்லயே மறுபடியும் நீ ஏன் எனக்காக கேட்டுப் பாக்கக்கூடாது? என்னை ஏன் எல்லாக் கம்பெனிங்களும் ஒதுக்கித் தள்ளறாங்க பார்த்தி? எனக்கு எந்த சாமர்த்தியமும் கெடையாதா? என் திறமையெல்லாம் போயிடுச்சா, ஒன்றும் தெரியாத மக்குப் பிளாஸ்திரியா நான்? வெறும் முண்டமா? எதுவும் தெரியாத முட்டாளா? என் அனுபவத்துக்கு எந்த மதிப்பும் இல்லையா?” தன்னிரக்கத்தில் அவள் கேள்விகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனது. அவள் பேச்சு தடுத்து நிறுத்த இயலாத பிரவாகமாக இருந்தது.

அவள் முகமே மாறிவிட்டது. நெகிழ்ச்சி மறைந்து ஒருவித இறுக்கம் குடியேறிவிட்டது. அறைக்குள் தனியாக இருக்கும்போது அத்தனை பற்களையும் நறநறவென்று கடித்துக் கொண்டாள். கதவுகளையும் ஜன்னல்களையும் பார்த்து பெருமூச்சுவிட்டாள். ஜன்னல் வழியாக ஏதாவது வாகனங்கள் ஓடும் காட்சியைக் காணும்போது அவள் பெருமூச்சின் வேகம் அதிகரித்தது. எதிரே போய் நின்றால்கூட தெரிவதில்லை. நிர்மலா நிர்மலா என்று மூன்று முறை அழைத்துவிட்டு நான்காம் முறை உலுக்கிய பிறகுதான் அவளால் சுயநினைவை அடையமுடிந்தது. கதவைத் தட்டினால் திறப்பதே இல்லை. பத்து பதினொன்று அழைப்புகளுக்குப் பிறகுதான் நிதானமாக வந்து திறப்பாள். “இப்பதானே காதில விழுந்தது. ஓடியாறேன்என்பாள். மருத்துவரிடம் அழைத்துச் சென்று பிரச்சினையை விளக்கிச் சொன்னான். அவரும் நிறைய சோதனைகள் செய்தார். நிறைய கேள்விகள் கேட்டார். நிறைய நேரம் பேசும்படி செய்தார். இறுதியாக பார்த்திபனை தனிப்பட நிறுத்தி, “ஆழ்மனசுக்குள் தன்னைத்தானே ரொம்ப துன்புறுத்திக்கிறாங்க மிஸ்டர் பார்த்திபன். மேலோட்டமான பார்வைக்கு எல்லாமே சரியா இருக்கற மாதிரியான தோற்றம்தான். ஆனால் ஏதாவது ஒரு புள்ளியில வெடிச்சா முடிவு எப்படி இருக்கும்னு யாரலயும் சொல்லமுடியாது. நீங்க எதயும் யோசிக்காம அட்மிட் செய்யறதுதான் நல்லது. பாத்தக்கறதுக்கும் அக்கறைய கவனிச்சிக்கறதுக்கும் இங்க நெறைய பேரு இருக்காங்க. ஒங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் வேணாம்என்றார். பார்த்திபனுக்கு அதில் விருப்பமில்லை. சேர்க்கை என்பதை கடைசி வழியாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது.

திடீரென ஒருநாள் அதிகாலையில் படுக்கையில் அவள் தன்னருகே இல்லாததைக் கண்டு திகைப்போடு எழுந்தான்  பார்த்திபன். கால்கள் நடுங்கின. குளியலறையில் நீர் விழும் சத்தத்தைக் கேட்டு அவன் அச்சம் அதிகமானது. வேகமாக ஓடி நிர்மலா நிர்மலா என்று குளியலறைக் கதவை வேகமாகத் தட்டி அழைத்தான். நாலைந்து நொடிகளுக்குப் பிறகு ஈரம் சொட்டச்சொட்ட நிர்மலா ஒரு துண்டு மட்டுமே சுற்றிய உடலோடு வெளியே வந்தாள். குளித்திருந்ததில் தலைமுழுக்க ஈரம். “என்ன நிர்மலா இது?” என்று பீதியில் கேட்டான் பார்த்திபன்.

வண்டி வர நேரமாய்டுச்சி பார்த்திபன். கௌம்ப வேணாமா? அவுங்க வந்து ஹார்ன் அடிச்சி அழைக்கறதுக்கு முன்னால நாம தயாரா இருக்கறது நல்லதில்லையா?

வண்டி?”

வந்துரும்பா. அஞ்சேகால்னு போன் பண்ணி சொன்னாங்க. அதுக்குள்ள நான் கௌம்பணும்.”

தலை துவட்டிவிட்டு அவன் முன்னாலேயே நிதானமாக உடைமாற்றிக்கொண்டு ஒப்பனைக் கண்ணாடியின் முன் உட்கார்ந்தாள்.

பார்த்திபன் அவள் பின்னால் வந்து நின்றாள். “என்ன குழப்பம் நிர்மலா? வேலையே இன்னும் கெடைக்கலையேம்மா. அதுக்குள்ள வண்டி எப்படி வரும்மா?” அவள் பின்கழுத்தில் முத்து முத்தாக தேங்கியிருந்த தண்ணீர்த் துளிகளை விரல்களால் உடைத்துத் துடைத்தான்.

நீ எதுவும் எங்கிட்ட பேசவேணாம் பார்த்தி. உன் பேச்சில எந்த நம்பிக்கையும் இல்லை எனக்கு. என்ன என் வழியில விட்டுடுப்பா. அது போதும்அவள் அவன் விரல்களைத் தட்டி விட்டாள்.

சொன்னா கேளு நிர்மலா. நீயா மனசுக்குள்ள போட்டுக் குழப்பிக்கற. வா. மருந்து குடுக்கறேன். சாப்ட்டுட்டு இன்னும் கொஞ்சநேரம் தூங்கு. வா அவள் கைகளைப் பற்றி எழுப்ப முயன்றான்.”

என்னை தூங்க வைக்கறதிலேயே குறியாக இருக்கறத தவிர ஒனக்கு வேற வேலையே இல்லையா பார்த்தி. உன்கிட்ட பேசறதுக்கு எனக்கு நேரமில்லைப்பா. அஞ்சே காலுக்கு வண்டி வந்துரும். நீ கொஞ்ச நேரம் சும்மா இரு.”

அவளுடைய வேகம் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு செய்வதறியாமல் திகைத்து  நின்றான். “ஏன் பார்த்தி, இப்படி பேயடிச்சமாதிரி நிக்கறே? போய் குடிக்கறதுக்கு ஒரு க்ளாஸ் தண்ணி எடுத்தாயேன்என்று புன்னகைத்தாள் அவள். அசைவில்லாமல் அவன் அப்போதும் நிற்பதைக் கண்டுஎன்னப்பா இது? ஒரு பொண்டாட்டி கேட்டா தாகத்துக்கு தண்ணிகூட தரமாட்டியா நீ?” என்று மறுபடியும் கெஞ்சினாள். அவன் குழம்பி மனம் உறைந்து நகர்ந்து சமையலறைக்குள் போன தருணத்தில் சட்டென எழுந்து காலணிகளை சத்தமில்லாமல் அணிந்துகொண்டு ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தாள். ஒரே கணத்தில் கதவைத் திறந்து வெளியேறி மீண்டும் இழுத்து மூடினாள். அது தானாக மூடிக்கொள்ளும் கதவு. கதவுக்கு அப்பால் அவள் தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் நம்பமுடியாதவனாகநிர்மலா. நிர்மலா. நில்லும்மா நிர்மலாஎன்று ஓடிவருவதற்குள் கதவு மூடிக்கொண்டது. மீண்டு சாவி போட்டுத்தான் திறக்க வேண்டும். அவன் கைகளும் கால்களும் நடுங்கின. வாய்மட்டும் நிர்மலா நிர்மலா என்று அழைத்தபடி இருந்தது. படுக்கைக்கு அடியிலிருந்த சாவியைத் தேடி எடுத்துவந்து கதவைத் திறந்தான்.

அவன் வாசலுக்கு ஓடிவருவதற்குள் நிர்மலா வெகு தொலைவு நடந்துவிட்டிருந்தாள். மூச்சுவாங்க ஓடி அவளை நெரங்குவதற்குள் அவள் ஒரு ஆட்டோவை நிறுத்தி உள்ளே அமர்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவள் உடல் முழுதும் வியர்ந்து வழிந்தது. எல்லா நரம்புகளும் புலன்களும் துடித்து எழுச்சியடைந்தன. மூச்சு விடுவதேகூட வேதனையாக இருந்தது. சட்டென அவளடைய கையைப்பற்றி கீழே இறக்கினான். சட்டென திமிறி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் நிர்மலா. “என்ன விடுப்பா. உன்னால அஞ்சேகால் வண்டிய விட்டட்டேன். நேரத்துல ஆபீஸ் போவவேணாமா?” என்று சத்தமிட்டாள். மீண்டும் அவன் மார்பிலேயே குத்தினாள். உறுதியாக அவளுடைய கைகளைப் பற்றி கீழே இறக்கினான். ஒரு கன்றுக்குட்டியைப்போல அவன் இழுப்பில் தடுமாறி கீழே இறங்கினாள் அவள்.

என்ன விடு பார்த்தி. நான் போவணும். ஆட்டோவுல போயி அந்த வண்டிய நான் பிடிக்கணும். எனக்கு நேரமே இல்லை. என்ன விடுகெஞ்சினாள் நிர்மலா. ஆட்டோக்காரன் வண்டியை விட்டிறங்கிகாலையிலேயே நம்ம கழுத்தறுக்கறதுக்குன்னே வருதுங்கப்பா சாவு கெராக்கிங்கஎன்று முனகிக்கொண்டே சென்றான்.

நிர்மலாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற பார்த்திபன் கதவைச் சாத்திவிட்டு அவளை ஒர கணம் ஏற இறங்க பார்த்தான். ஒரு கணம் அவள் வேறு யாரோ ஒரு பெண்ணைப்போலத் தோற்றமளித்தாள். அது அவனைக் கடுமையாகப் பாதித்தது. குற்ற உணர்ச்சியில் அவள் கண்கள் தளும்பின.

இங்க பாரு நிர்மலா, நீ என் செல்லம்தானே? நான் சொல்ற பேச்ச நி கேப்பியா மாட்டியா?”

அவள் எதுவும் பேசாமல் அவனை நிமிர்ந்து வெறித்தாள்.

இப்படியெல்லாம் நீ செய்யக்கூடாது. உனக்கு வேலை கெடைக்கறதுக்கு நானும் நிறைய முயற்சி செஞ்சிகிட்டுதான் இருக்கேன். சீக்கிரம் கெடைக்கும். அடுத்த வாரம் கூட ஒரு இடத்துல இன்டர்வியூவுக்கு சொல்லி வச்சிருக்கேன். இதுக்கு நடுவில நீ இப்படியெல்லாம் செய்யலாமா? தப்பு இல்லயா?”

கம்பெனியிலிருந்து வண்டி வந்து கூப்பிடும்போது போவறது தப்பா?” அவள் அப்பாவியாக அவனிடம் கேட்டாள்.

எல்லாமே பிரமை நிர்மலா. யாரும் உனக்கு வண்டியும் அனுப்பலை. யாரும் உன்னை அழைச்சிட்டுப் போக வரலை.”

நான் சொன்னா பிரமை. நீ சொன்னா சத்தியமா? நான் இத நம்பணும்னு நெனைக்கறியா?

நம்பித்தான் ஆவணும் நிர்மலா.”

இல்லை. நான் நம்பமாட்டேன். நம்பி ஏமாறவும் மாட்டேன்அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.

கையில ஆர்டர் காப்பியோட வந்து சொல்றேன். அப்ப நம்புவே இல்லையா?”

மௌனமே அவள் பதிலாக இருந்தது. சிலைபோல உட்கார்ந்த இடத்தில் இருந்தாள். அவளை என்ன செய்வது என்று தெரியாமல் தலைகுழம்பி நின்றான் பார்த்திபன்.

நிர்மலா, இந்தக் குழப்பம், இந்த இழப்பு எல்லாத்திலேருந்தும் நாம மீளணும் நிர்மலா. அதுக்குத் தேவையான சக்தி நம்மகிட்ட இருக்கும்மா. இன்னொரு புதுவாழ்க்கைய நாம வாழ்ந்து காட்டணும் நிர்மலா.”

அவள் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உனக்குத் தெரியாது நிர்மலா. உன்மேல நான் என் உயிரயே வச்சிருக்கேன். இந்த ஊர் புடிக்கலைன்னா சொல்லு. வேற எங்கயாவது போய் பொழைச்சிகலாம். ஆனா, நீ இருக்கணும் நிர்மலா. என் பக்கத்துல நீ இருந்தா எனக்கு கோடி தைரியம் வரும் தெரியுமா? நீ எனக்கு மனைவி மட்டுமில்லை நிர்மலா, நீதான் என் உயிர். என் சக்தி. என் மூச்சு. என் வாழ்க்கை. என் எதிர்காலம். எல்லாமே நீதான் நிர்மலா. நீ இப்படி வெறிச்சி வெறிச்சி பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கறத பாக்க ரொம்ப வேதனையா இருக்குது. அழணும்னா ஒரேவடியா அழுதுடு நிர்மலா. அழுது துக்கத்த கரைச்சி தொலைச்சிடு, மனசுக்குள்ளயே வச்சி சித்ரவதைப்படாதே நிர்மலா. அது எல்லாருக்கும் கஷ்டம்.”

ஒரு வார்த்தைகூட பேசாமல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிர்மலா. வேர்வையில் அவள் உடல் நனைந்திருந்தது. சோபாவில் சரிந்து நீளவாக்கில் கால்களை நீட்டிப் படுத்து கண்களை மூடினாள்.

மேசைக்கருகே வந்தான் பார்த்திபன். செல்பேசியை எடுத்தான். மருத்துவரிடம் பேசும் எண்ணத்தில் எண்களை ஒத்தினான். பிறகுதான் அதிகாலை நேரத்தில் தொல்லை கொடுப்பதை நினைத்து உறுத்தலாகவும் வெட்கமாகவும் இருந்தது. சட்டென அழைப்பை நிறுத்தினான். சில கணங்களுக்குப் பிறகு ஏதோ சட்டென அழைப்பை நிறுத்தினான். சில கணங்களுக்குப் பிறகு ஏதோ யோசனையுடன் எண்களை மீண்டும் ஒத்தினான். நாலைந்து மணியோசைகளுக்குப் பிறகு மருத்துவரின் குரல் கேட்டது. அதிகாலை அழைப்புக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்ட நடந்த விஷயத்தைச் சுருக்கமாக சொன்னான் பார்த்திபன். ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் மருத்துவர். சொன்னபடி வந்து ஊசி போட்டுவிட்டு புறப்படும்போது சொன்ன எச்சரிக்கை வார்த்தைகள் அவனைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தின.

தனிமை ஒரு பாறையைப் போல கனத்தபடி இருக்க உறங்கும் நிர்மலாவையே பார்த்தபடி இருந்தான் பார்த்திபன். அவனுக்கு நெஞ்சு அடைப்பதைப்போலவும் கண்ணீர் முட்டிக்கொண்டு வருவதைப் போலவும் இருந்தது. அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை. எழுந்துபோய் புத்தக அடுக்குகளுக்கு நடுவிலிருந்து புகைப்பட ஆல்பங்களை எடுத்து பிரித்துப் பார்க்கத் தொடங்கினான். ஒவ்வொரு பிரயாணத்துக்கும் ஒவ்வொரு தனி ஆல்பம் இருந்தது. அதன் உட்புறம் பயணத்தேதியையும் பயணம் செய்த ஊரின் பெயர்களையும் அழகாக எழுதி வைத்திருந்தாள். திருமணமானதும்   முதன்முதலாக அவர்கள் போய்வந்த இடம் குலுமணாலியும் சிம்லாவும். இரண்டுக்கும் தனி ஆல்பங்கள். பிறகு தாஜ்மகால், பிகானீர், திருவனந்தபுரம், கோனார்க். விசாகப்பட்டினம், ஐதராபாத், கொடைக்கானல், உதகை, கன்னியாகுமரி. ஒவ்வொரு காட்சியிலும் நிர்மலா சிரித்தபடி நிற்கும் தோற்றம். அந்த இடங்களுக்கோ அல்லது அவற்றின் அழகுக்கோ தனிப்பட்ட விதத்தில் எந்தப் பொருளும் இல்லை என்பதுபோலவும் அவையனைத்தும் நிர்மலாவின் இருப்பதால்தான் பொருள் கொள்கின்றன என்றும் அவனுக்குத் தோன்றியது. கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதபடி அவன் நெஞ்சம் சட்டென விம்மியது. “என் ஞாபகமா நீ என்ன செய்வே பார்த்தி?” என்று ஆழ்ந்த யோசனைகளுக்குப் பிறகு தாஜ்மகாலுக்கு அருகே அவள் கேட்ட கேள்வி எதிர்பாராதவிதமாக நினைவில் மிதந்தெழுந்தது. அவன் அதே கணத்தில் உடைந்துபோனான். ஆல்பங்களையெல்லாம் எடுத்து மீண்டும் அடுக்கிவிட்டு உறங்கும் அவளையே சில கணங்கள் உற்றுப் பார்த்தான். சற்றே ஊட்டம் குன்றியிருந்தாலும் களை குன்றாத முகம். நெருங்கி அவளருகே தரையில் உட்கார்ந்தான். முகத்தை நோக்கித்தான் அவன் முகம் முதலில் திரும்பியது. மறுகணமே அவள் பாதங்களை நோக்கி தன்னிச்சையாகத் திரும்பியது. சதைப்பற்று குறைந்த அந்தப் பாதங்களையும் கொலுசுகளையும் ரோஜாவண்ணப் பூச்சால் ஒளிரும் கால்நகங்களையும் சில கணங்கள் உற்றுப் பார்த்தான். குதிகால்களில் சின்னச்சின்ன போடு இழுத்ததைப்போல நாலைந்து வெடிப்புகள். அவற்றைப் பார்த்ததும் அழுகை குமறியது. கலங்கும் கண்களுடன் குனிந்து அவள் கால்விரல்களையும் வெடிப்புற்ற குதிகால்களிலும் மாறிமாறி முத்தமிட்டான். அப்படியே திரும்பி வெறும் தரையில் படுத்து அண்ணாந்தான். திடீரென உலகில் தனித்துவிடப்பட்டதைப்போல ஓர் அச்ச உணர்வு அவன் மனத்தில் படர்ந்தது.

அழைப்புமணி ஒலிக்கக் கேட்டபிறகுதான் துணுக்குற்று எழுந்தான். வேகமாகச் சென்று கதவைத் திறந்தான். இல்லத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண் வந்திருந்தாள். உள்ளே வரவழைத்து நிர்மலாவின் அறைக்கு கூப்பிட்டுச் சென்றான். விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்திருக்குமாறு கேட்டுக்கொண்டான்.

பத்து நாட்கள் விடுப்பெடுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தான் பார்த்திபன். நிர்மலாவின் நடவடிக்கைகளில் எவ்வித விபரீதமும் தெரியவில்லை. எல்லாமே தெளிந்து வந்ததாகவே  தோன்றியது. சகஜமாக எழுந்து நடமாடவும் உரையாடவும் தொடங்கினாள். இல்லத்துத் தோழியோடு சிரித்துச்சிரித்துப் பேசினாள். இருவருமாக ஒருநாள் இல்லத்துக்குச் சென்று திரும்பினார்கள். இன்னொருநாள் கடற்கரைக்கும் கோயிலுக்கும் போய்வந்தார்கள். பகல்முழுக்கத் துணையாக இருக்கும் இல்லத்துப்பெண்ணை அவளே ஒருநாள் பேருந்து நிலையம்வரை அழைத்துச் சென்று வண்டியேற்றிவிட்டுத் தனிமையில் திரும்பினாள். தனக்கு எதுவுமே நேரவில்லை என்பதுபோல பழைய உற்சாக நிலைக்கு மீண்டுவிட்டாள். இரவில் அரைவெளிச்சத்தில் அவனது வயிற்றின்மீது தலையைவைத்து ஒருக்களித்து அவன் கால்களை இழுத்துப் பற்றியபடி தூங்கினாள். உடலம் மணமும் நிறைவில் திளைக்க இருவருடைய மனத்திலும் அமைதி நிரம்பியது. சிம்லாவில் ஆப்பிள் மரத்தடியிலும் காப்பித் தோட்டங்களிலும் சின்னக் குழந்தைபோல ஓடிஓடி நின்று பார்த்த துறுதுறுப்பும் புன்சிரிப்பும் அவள் முகத்தில் மீண்டும் குடியேறின. “நீ எதுக்கு பார்த்தி லீவ் வேஸ்ட் பண்றே? எனக்கு ஒன்னுமில்லைப்பா. எல்லாத்தயும் கெட்ட கனவா நெனச்சிடு. வேலைக்கு போ பார்த்திஎன்று அவளே தூண்டினாள். பகலில் இல்லத்துப் பெண்ணும் இருந்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விடுப்பை முடித்துக் கொண்டு அவனும் வேலைக்குச் செல்லத் தொடங்கினான்.

ஒருவாரம் எல்லாமே இயல்பாக இருந்தது. ஒரு மாலையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கும்போதே துணைக்கு இருந்த இல்லத்துப் பெண்ணிடம்என்னடி ஹார்ன் சத்தம் அங்க?” என்று சகஜமாக விசாரிப்பவளைப்போல கேட்டபடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துவிட்டுகம்பெனியிலேருந்து வண்டி வந்திருக்குது போல. ஹார்ன் அடிச்சி கூப்பிடறாங்க. போய் ஒரே நிமிஷத்துல என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன். நீ காய நறுக்கிகிட்டே இருஎன்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு இறங்கிப் போய்விட்டாள் நிர்மலா. அவள் வார்த்தைகளை முழுசாக நம்பிய அந்தப்பெண் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரையிலும் கூட அவள் திரும்பி வராததை உணர்ந்து பீதியுற்று அவசரமாக கீழே ஓடிவந்து எல்லாப் பக்கங்களிலும் தேடியும் கண்ணுக்குத் தென்படாததால் செல்பேசியில் அழைத்து பதற்றத்தோடு பார்த்திபனிடம் செய்தியைச் சொன்னாள். அதிர்ச்சியில் அவள் குரல் நடுங்கியது. ஆறேழு நண்பர்கள் துணையோடு அவன் வீட்டுக்கு உடனடியாக திரும்பினான். தெருவில் கண்ணில் பட்டவர்கள் எல்லாரிடமும்  பைத்தியக்கானைப்போல நிர்மலாவைப்பற்றி விசாரித்தான். யாரிடமும் சரியான தகவல் இல்லை. ஒரு காய்கறி வண்டிக்காரன் ஒரு டாட்டா சுமோ வண்டியில் நிர்மலா ஏறிப் போனதாகச் சொன்னான். சந்தேகம் தோன்றுபடி எதுவும் இல்லாததால் மேற்கொண்டு எந்த விவரங்களையும் குறித்துக்கொள்ளவில்லை என்றான்.

இடிந்துபோய் என்ன செய்வது என்று புரியாத குழப்பத்தில் உட்கார்ந்தான் பார்த்திபன். அவன் சக்தியையெல்லாம் யாரோ உறிஞ்சிவிட்டதைப்போல இருந்தது. அந்த இல்லத்துப் பெண் அச்சத்தில் நடுங்கிப் போயிருந்தாள். செய்தியைக் கேள்விப்பட்டு இல்ல நிர்வாகியும் வேறு இரண்டு செயலாளர்களும் வந்து அவனுக்கு தைரியமூட்டிவிட்டு அவளை அழைத்துச் சென்றார்கள். விஷயமறிந்த மருத்துவரும் வந்து பார்த்திபனை தைரியமாக இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். நண்பர்கள்தாம் காவல்நிலையத்துக்கும் மற்ற இடங்களுக்கு நடையாக நடந்தார்கள். விசாரணைக்கு சென்று வந்தார்கள். பார்த்திபனுடைய நிறுவன மேலாளர் காவல்துறையின் மேல் அதிகாரியிடம் விசேஷமாக கேட்டுக்கொண்டதால் தனிப்படை அமைக்கப்பட்டு உடனடியாக நிர்மலாவை தேடும் படலத்தில் இறங்கியது. எல்லா இடங்களிலும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்தார்கள்.

எந்தத் திசையிலிருந்து எந்தத் தொலைபேசியிலிருந்து அழைப்பு வருமோ என்று புலன்களெல்லாம் காதாக உறக்கமே இல்லாமல் மூன்று நாட்கள் தவியாய்த் தவித்தான் பார்த்திபன். ஆல்பங்களையெல்லாம் தம் முன் பரப்பிவைத்துக்கொண்டு நிர்மலாவின் படங்களை மாற்றிமாற்றி பார்த்தபடி பொழுதைக் கழித்தான். பூக்களுக்கு முத்தமிட்டு நிற்கும் தேவதை நிர்மலா. பனிசூழ்ந்த சிகரங்களின்முன் ஒரு பைன் மரத்தில் சாய்ந்தபடி அழகுச் சிற்பமாக நிற்கும் நிர்மலா. ஏரியில் படகுச் சவாரியில் அஸ்தமச் சூரியனை ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் ஆசை நிர்மலா. எங்கும் எல்லா இடங்களிலும் எல்லாப் புள்ளிகளிலும் நிறைந்திருப்பவளாக மாறிமாறிக் காட்சியளித்தாள் நிர்மலா. மூன்றாண்டு கால இல்லற வாழ்க்கை அனுபவங்கள் அக்காட்சிகளின் ஊடாக ஒரு நதியைப்போல பாய்ந்து பெருகுவதாக உணர்ந்தாள். நிர்மலா நிர்மலா என பிதற்றிக் கொண்டிருந்த ஒருநாள் அதிகாலையில் நண்பனுடைய செல்பேசியிலிருந்து வந்த அழைப்பு அவனை எழுப்பியது. திகைத்து பதில் பேசியபோது தயங்கித்தயங்கி மரக்காணத்துக்குப்  பக்கத்துல கெடைச்சிருக்குது பார்த்தி. யாரோ சாவடிச்சி தூக்கிப் போட்டுட்டு போயிருக்காங்க. நாங்க இன்னும் அரமணிநேரத்துல அங்க வந்துருவம்டா. தைரியமா இருடா...” என்று நடுக்கத்தோடு சொன்னது. உலர்ந்த விழிகளின் ஒரம் மீண்டும் கண்ணீர் சுரந்து வழிய ஜன்னலோரமாகப் படர்ந்திருக்கும் இருளுக்குள் கண்களைப் புதைத்தபடிநிர்மலா... நிர்மலாஎன்று விம்மத் தொடங்கினான். அணைக்கப்படாத செல்பேசி மறுமுனையில்பார்த்தி... டேய் பார்த்தி....” என்று இடைவிடாமல் அழைத்தபடி இருந்தது.

(தீராநதி -2006)