Home

Monday, 4 September 2023

உறவு - சிறுகதை

  

கடைசியாய் ஆப்பம் வாங்கித் தின்றவனையே கூடையைத் தூக்கிவிடச் சொல்லித் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் கிழவி.

ஏரிக்கு இந்தப் பக்கம் சாலையாம்பாளையம். அந்தப் பக்கம் வளவனூர். வனாந்தரமாய் நடுவில் வெடித்துக் கிடந்தது பூமி. வருஷத்தில் இரண்டு மாசமோ மூணு மாசமோதான் தண்ணீர் இருக்கும். அதுவும் எவனாவது புண்ணியவான் மனசுவைத்து சாத்தனூர் அணையைத் திறந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. வெறும் மழைத்தண்ணீர்தான் தேங்கி நிற்கும்

ஒரு மாசத்துக்குக் காணாது அது. யானைப் பசிக்கு சோளப் பொறிமாதிரி மேல் மதகு, கீழ் மதகு, புதுப்பாளையத்து மதகு நாலையும தினத்துக்கும் ஆறுமணி நேரம் மட்டுமே திறந்து, ஆயிரம் சட்டாம்பிள்ளைத் தனம் செய்து பார்த்தால்கூட அடுத்த மாசத்துக்குத் தரை தெரியும். வாத்து மேய்கிற, எருமை, ஆடுகிற குட்டைதான் கரையோரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தெரியும். தண்ணீர் நிற்கிற இந்தக் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இரண்டு ஊர்களுக்கும் இடையிலான பிரயாணம் சிரமமானது. கரைமேல் நடந்தால் இரண்டு மைல் கூடுதல் நடையாகும். அதுதான் சிரமம். ஆனால் அதுகூட சிரமமாய் இருக்காது கிழவிக்கு. கரைமேலேயே சுற்றிக்கொண்டு வந்துவிடுவாள். பல வருஷத்துப் பழக்கம் இது. குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது மாதிரி ஆப்ப வியாபாரமும் அனிச்சையான விஷயமாகி இருந்தது.

ஆப்பக்கடை வியாபாரத்தில் அப்படி ஒன்றும் பொங்கி வழிந்து விடாது. ஆப்பத்துக்கு மூணு பைசா நின்றால் அதிகம். அதையும் கடனுக்குத் தந்துவிட்டால் திரும்பி வருகிற தினத்துக்குத்தான் நிச்சயம். சேடை ஓட்ட, அண்டை கழிக்க, நாற்று நட, களையெடுக்க அக்கம் பக்கத்து நிலங்களுக்கு வந்திருக்கிற உழவு ஜனங்களுக்கிடையேதான் முக்கிய வியாபாரம். அவ்வப்போது ஊர்க்குள்ளிருந்து கவுண்டமார் வீடுகளிலிருந்தும் வந்து வாங்குவார்கள். அவசரமாய் வளவனூர்க்கு வண்டி ஓட்டிக் கொண்டு போகிற ஆள்கள் ஒரு நிமிஷமாவது பசிக்கு இரண்டு ஆப்பத்தை பிட்டு வாயில் போட்டு ஓடுகிறவர்களும் உண்டு. பள்ளிக்கூடத்துக்கு ஓடுகிற பிள்ளைகளும் வாங்கித் தின்னும். காலை ஏழரை எட்டுக்கு வந்து உட்கார்ந்தால் மணி ஒன்று ஒன்றரைக்கு வியாபாரம் ஆகிவிடும். அதற்குப்பிறகு கூடையைத் தூக்கிக்கொண்டு திரும்ப வேண்டியதுதான்.

நடையைக் கொஞ்சம் வேகமாக்கினாள் கிழவி. அடுத்த கோடிக்கரை ரொம்பவும் தூரத்தில் தெரிந்தது. மத்தியிலிருக்கிற வேலங்காடு கூட கரையையொட்டி இருப்பதுமாதிரி தெரிந்தது. வறுத்து எடுக்கிற வெயிலில் வேலங்காட்டைத் தொடுகிறவரை அவசரம்தான். அங்கு போனால் சற்றே நிழலில் ஆயாசம் தீர உட்கார்ந்து கொஞ்சம் இடைவெளிவிட்டு அப்புறம் நடக்கத் தொடங்கலாம். அலுப்பு ஜாஸ்தியாய்த் தெரியாது.

காட்டமான வெயில் முழு உக்கிரத்தோடு தரையில் படிந்து வெடித்துப் போன ஒற்றைத் தடம் நெருப்புத் துண்டாய் காந்தியது. பூமிக்கு அடியில் உஷ்ணம் உற்பத்தியாகித் தரையைக் கொதிக்க வைக்கிறமாதிரி இருந்தது. தடத்துக்கு இரண்டு பக்கத்திலும் கரையோரத்திலும் கும்பல் கும்பலாய் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு கும்பலுக்கும் அடுத்த கும்பலுக்கும் வித்தியாசம் சொல்லக்கூடிய அளவுக்கு இடைவெளி இருந்தது. நிற்பது சலித்ததாலோ என்னமோ நாலைந்து மாடுகள் வெயிலையும் பொருட்படுத்தாமல் படுத்துக்கொண்டிருந்தன. அடங்காத கன்றுக்குட்டி ஒன்று ஓடி ஓடி வட்டம் அடித்தது.

மாடுகளையோ கன்றுகளையோ மனிதர்களையோ பார்த்துக் கொண்டே நடக்கும்போது மனசுக்குள் சோர்வற்ற ஒரு சுபாவமும் கவனிக்கிற ஆர்வமும் உண்டாவதை உணர்ந்தாள். சாணம் பொறுக்குகிற சிறுவர்கள் ஒவ்வொரு மாட்டின¢பின்னாலும் கூடை எடுத்துக்கொண்டு அலைந்தார்கள். உய்ங்கென்று காற்று சுழற்றி அடித்தது. எந்தத் தடுப்பும் இல்லாது முழு வீச்சோடு வீசுகிற  காற்றின் சத்தம் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாய் இருந்தாலும் போகப்போக வேதனை தருவதாய் உணர்ந்தாள். வேதனை மனசைக் குடைகிறமாதிரி இருந்தது. பத்து வயசுப் பெண்ணாய் இருக்கும்போது நேர்ந்த தாயின் சாவு, அதைத் தொடர்ந்த தந்தையின் சாவு, புருஷனின் சாவு, பெற்ற மகளின் சாவு, தனக்குத் தெரிந்த உறவுக்காரர்களின் சாவு, சிநேகிதர்களின் சாவு எல்லாவற்றிலும் எழுந்த துக்கமான ஒப்பாரியின் சாயல் அநதக் காற்றின் சத்தத்தில் இருப்பதாய் உணர்ந்தாள். சில வினாடிகளில் ஒப்பாரிகளின் மொத்தக் கலவையாய் இருப்பதாகவும் பிரமை தட்டியது. காதுக்குள் ரீங்காரம் செய்யும் காற்றின் சத்தம் உச்சத்துக்கு எழுகிற ஒவ்வொரு தருணத்திலும் ஆழமான வேதனை பரவியது. தொடர்ந்து வாழ்வுச் சித்திரங்கள் சின்னச்சின்னதாய் மூண்டு கலைவதாக நினைத்தாள். யோசனைகளைத் தவிர்க்கிற ஒரு முயற்சியாக வேகமுடன் நடக்க ஆரம்பித்தாள்.

வெறிச்சென்று கிடந்தது ஏரி. வெட்டி வெட்டி அடுக்கிய மாதிரி பூமி பாளம் பாளமாய் வெடித்திருந்தது. எட்டிய மட்டும் ஒரு காக்கை, குருவி கூட இல்லை. மாட்டு மந்தை கூட எவ்வளவோ தூரத்துக்குப் பின்னால் போய்விட்டிருந்தது. கண்ணைக் கூசவைக்கிற ஆகாயமும் சுட்டுப் பொசுக்குகிற பூமியும்தான் கண்முன் விரிந்திருந்தது. இயக்கமற்ற பகல் நேர அமைதியும், வெக்கையும் அழுத்தமாய் மனசில் பதிந்தது. தவிர்க்க நினைத்த காட்சிகள் மீண்டும் கூட ஆரம்பித்தன. நெஞ்சில் எங்கிருந்தோ ஒரு பயம் பரவி உலுக்கியது. ஒற்றை வேளைக் கூழுக்கு பசிக்கிற வயிறோடு துவண்டு காத்துக் கிடந்த நாள்களின் வறுமை, ஆதரவாய்க் கூப்பிட்டு பசிக்கிற வயிற்றுக்கு சோறுபோட்டுப் பேசியவர்களின் பிரியம், மார்கெட் கமிட்டியில் நடுமுதுகு விரிய நெல் கூட்டி அளக்கிற உத்தியோகத்தில் சிதறிய உழைப்பு, ஒன்றுக்கு பத்தாய்க் கோள் சொன்ன உறவு ஜனத்தின் பழிச்சொல், வார்த்தைக்கு வார்த்தை இடித்துப் ¢¢பேசியவர்களின் கோபம் எப்போதும் அடிவயிற்றில் நெருப்புக்கங்காய் எரிந்து குடலுக்குள் சுருண்டு வதைத்த பசி, பார்கிறவர்கள் கண்களில் மூண்டு எழுந்த பொறாமை தூரத்துச் சொந்தக்காரன் ஒருவனோடு நிகழ்ந்தேறிய கல்யாணம், ஏழு வருஷமோ எட்டு வருஷமோ அவனோடு இருக்க நேர்ந்த வாழ்வு, வயிற்றுப்பாட்டுக்கு ஆப்பக்கடையினை ஆரம்பிக்க நேர்ந்த அவலம், ஐந்து வயசுப் பெண்ணோடு போராடிப்போராடி ஒவ்வொரு நாளையும் நசுக்கிநசுக்கி நகர்த்திய பிடிவாதம். சந்தோஷமாய் வாழ பெண்ணுக்கு பார்த்துப் பார்த்து மாப்பிள்ளை தேடி நடத்தி வைத்த திருமணம், எந்த சாபமோ எந்தக் குறையோ நாலு வயசில் ஒரு  பையனை பெற்றுக் கொடுத்துவிட்டு செத்துப் போன அவளது அகால மரணம், பேரப்பிள்ளையோடு வாழவில் ஆரம்பமான இன்னொரு அத்தியாயம், வேறொரு பெண்ணோடு வாழ்வை மீண்டும் வசந்தமாக்கிக் கொண்ட மருமகனின் போக்கு, தள்ளாத வயசிலும் கருக்கலில் எழுந்து ஆப்பம் சுட்டு, இட்லி சுட்டு, அரிசி உருண்டை பிடித்து கூடை நிறைய எடுத்துக்கொண்டு நடையாய் நடந்து ஏரியைக் கடந்து சாலையாம்பாளையத்துக்கு ஓடுகிற ஓட்டம், முரடும் கோபமுமாகவே வளர்ந்துவிட்ட பேரனின் இளமை எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாய் அடுத்தடுத்து வேகமாய் நகர்ந்தது. காட்சிகளின் வேகமான இயக்கத்தைத் தொடர்ந்து இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்வு என்று யோசனை வந்தபோது மேலும் மேலும் பயம் அதிகமானது. திடீரென அற்பமாகி அழிந்துவிட்டமாதிரி உணர்ந்தாள். காற்றில் கரைந்து விட்டது போலவும், பூமி வெடித்து உள்ளே இழுத்துக்கொண்டது போலவும் ஒரு நடுக்கம் உடம்பெங்கும் பரவயிது. நீண்டதூர நடையில் வெற்றுக்கூடை சுமைக்குக்கூட தலை வலித்தது. சிம்மாட்டுத் துணியைச்சிறிது நகர்த்தி முன்பாரம் சரிசெய்து கொண்டு நடந்தாள்.

நொடி நேரம் விடுபட்ட கூடையின் இருப்பில் தலை இதம் அடைந்தது. தொட்டுப் பிடித்துவிட்டமாதிரி உணர்ந்தாள். ஏதோ இளகி வழிகிறமாதிரியும் இருந்தது. நுண்மையான ஒரு வேதனையையும், பிடறி நரம்புகளில் வலியையும் உணர்ந்தாள். அப்போது அருகில் வேலங்காட்டுப் பக்கத்தில் இருந்து வேட்டுச் சத்தம் கேட்டது. சற்று நேரம் நிமிர்ந்து பார்த்தாள். வடக்குக் கோடியில் படபடத்து ஆகாயத்தைநோக்கி எழும்பிய பறவைகளின் கூட்டத்தைப் பார்த்ததும் வேட்டு விழுந்ததும் அங்குதான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கூடாரம் அடித்திருக்கிற நடோடிகளோ அல்லது பொழுது போகாத யாரோ இளவட்டக்காரன் ஒருவனுடைய வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தாள். திடீரென்று எழுந்த வேட்டுச்சத்தம் யோசனைகளை முழுக்கக் கலைத்துவிட்டது. யோசனைகளிலிருந்து விடுதலையானதுகூட ஏதோ ஒரு அவஸ்தையில் இருந்து எதேச்சையாய் தப்பிவிட நேர்ந்ததுபோல் உணர்ந்தாள். சமீபிக்கிற வேலங்காட்டின் பச்சை நிறமும் மஞ்சள் பூக்களும் வசீகரமாய் இருந்தன. அவற்றின்பால் கவனத்தைப் பதித்து நடக்க ஆரம்பித்தாள்.

காட்டுக்குள் நுழைகிறபோது வேறு ஏதோ இதமான பிரதேசத்துக்குள் நுழைகிற மாதிரி உணர்ந்தாள். பிரகாசமான சூரிய வெளிச்சத்தைவிட்டு நிழல்படர்ந்த இடங்களில் பதிய நேர்ந்த  கண்களுக்குள் ஜிவுஜிவு என்று குறுகுறுப்பான உணர்வு படர்ந்தது. உடம்பிலும் சட்டென்று ஒரு குளுமை தோன்றி மறைந்தது. அலுப்பையும் தளர்ச்சியையும் பூரணமாய் உணர்ந்தாள். சிம்மாட்டுத் துணியைப் பிரித்து முகத்திலும் கழுத்திலும் வழிந்த வேர்வையைத் துடைத்தாள். முள் இல்லாத இடமாய்ப் பார்த்து உட்கார்ந்தாள்.

இடுப்பு வேதனைக்கும், பின்னிப்பின்னி இழுத்த கால் நரம்புகளுக்கும் உட்கார்தல் ரொம்பவும் ஆசுவாசப்படுத்துவதை உணர்ந்தாள். இரண்டு மூன்றுதரம் நீண்ட மூச்சாக இழுத்துவிட்டாள். கைகளை பின்பக்கம் ஊன்றி அழுத்தியபோது விரல்கள் தாமாக சொடக்கு எடுத்துக்கொண்டன. அப்படி ஒரு அழுத்தம் முதுகுப்பட்டைக்கும் தேவைப்பட்டது. அண்ணாந்தபடி பேரழகுடன் பூத்துக் குலுங்கிய மஞ்சள் பூக்களையும் அங்கங்கே சன்னமாய் நுழைகிற சூரியக்கதிர் மின்னுகிற முள்களின் கூர்மையையும் வெறித்துப் பார்த்தாள். அதே தருணத்தில் வேட்டுச் சத்தம் பலமாகக் கேட்டது. போனதரம் போல அல்லாமல் இந்த தரம் சத்தம் பலமாக இருந்தது. வடக்கு மூலையில் இருந்தே இந்தச் சத்தம் புறப்படுவதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.

வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த திசையிலிருந்து ஆட்டு மந்தை ஒன்று நுழைந்தது. பச்சையாய்ச் சிதறிய தழைகளுக்கு ஓடிஓடி அலைந்தன ஆடுகள். களைப்போடு ஓர் இடத்தில் தரிக்காமல் சுற்றிச்சுற்றி வந்தன. பின்னால் வந்த சின்னப்பையன் ஒருவன் உல்லாசமாய் ஆடுகளைத் தட்டிக்கொண்டே வந்து தாழ்வான மரம் ஒன்றில் ஏறிக் கத்தியால் கிளைகளைக் கிழித்துப்போட்டான். சுற்றி மொய்த்து ஆக்கிரமித்துக்கொண்ட ஆடுகளுக்கு இடையில் நுழைந்து செல்ல முயற்சி செய்து தோற்றுப் போனதால், ஒரு இலையில்கூட வாய் வைக்க முடியாத ஆத்திரத்தில் சத்தமாக கனைத்தபடி அலைந்த ஆடுகளுக்குத் தனியாக வேறொரு கிளையைக் கழித்துத் தூரமாய்ப் போட்டான். தின்னும்போதே ஒரு ஆடு பக்கத்து ஆட்டைக் கொம்பால் முட்டிமுட்டி விளையாடியது. மரத்தைவிட்டு இறங்கிவந்த பையன் வேண்டுமென்றே ஒரு ஆட்டின் வாலை முறுக்கித் தின்னவொட்டாமல் பின்னுக்கு இழுத்தான். மே என்று பரிதாபமாய் ஆடு கனைப்பதும், தோ தோ என்று உற்சாகமாய்ப் பாட்டு பாடிக்கொண்டு பையன் ஆடு முன்னால் செல்லும் வகையில் வாலைப் பிடித்த கையை நெகிழ்த்துவதும் அது தழையில் வாய் வைக்கிற தருணம் வேண்டுமென்றே மீண்டும் பின்னுக்கு இழுப்பதும், மீண்டும் மீண்டும் ஆடு பரிதாபமாய் கனைப்பதும் ஆட்டம் மாதிரி நிகழ்ந்து கொண்டிருந்தது. 

தான் ஆடு வளர்த்த கதையை நினைத்துக் கொண்டாள் கிழவி. ஆறேழு வருஷங்களுக்கு முன்னால் நிகழ்ந்த கதை. வாசல் தூணில் தான் ஆடு எப்போதும் கட்டியிருக்கும். பலகாரம் வாங்கித் தின்ற கடனுக்கு காசு கொடுக்க முடியாத பஞ்சாயத்து போர்டு தோட்டி ஒருவன் பணத்துக்குப் பதிலாகத் தந்த ஆடு அது. தானும் பேரனும் மட்டுமேயான உலகத்தில் மூன்றாவது ஜீவனின் வரவைச் சந்தோஷமாகவே நினைத்தாள். சாயங்காலமாய் குள்ள உடையார் பம்ப்செட் பக்கம் போய் கணிசமான அளவுக்குப் புல் அறுத்து வருவது, நிறைய வேலைகளுக்கு மத்தியில் கூடுதலான ஒரு வேலைதான் என்றாலும் உற்சாகமாய் உணர்ந்தாள். சில சமயங்களில் பேரப் பையனே கூட தழையைப் பறித்துக்கொண்டு வருவான். பேரனுக்கும் ஆட்டுக்கும் தான் எப்போதும் ஆட்டம், முன்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்கால்களால் நடக்க விடுவான். காதைப் பிடித்துத் தூக்குவான். தலைகீழாய்ப் பிடித்து கிறுகிறுவென்று நாலு சுற்று சுற்றுவான். சின்ன கிழங்குத்துண்டு போன்ற கொம்புக்கு வர்ணம் பூசுவான். கொண்டு வருகிற புல்களைக் கூட கொஞ்சம்கொஞ்சமாய்க் கையில் எடுத்து குழந்தைக்கு ஊட்டுகிறமாதிரி ஊடடுவான். வாயைத் திறக்கிற ஆட்டுக்கு முன் புல்லைக் காட்டிக்காட்டி ஏமாற்றி கனைக்க விடுவான். ஒரு வருஷ காலத்துக்கு வீட்டோடேயே இருந்தது அது. அப்புறம்தான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ரொம்பவும் பணக்கஷ்டம் என்று சொல்லிக்கொண்டு வந்து நின்ற மருமகனுக்கு ஆட்டை விற்று காசாக்கிக்கொள்ள தரவேண்டியதாய் ஆனது. ஆரம்பத்தில் இருந்தே அப்பன் என்றால் ஒட்டாமல் இருந்த பேரனுக்கு இந்தச் சம்பவம் இன்னும் கொஞ்சம் வெறுப்பு மூட்டக்கூடியதாகவும் ஆத்திரம் தருவதாகவும் இருந்தது.

சுருக்குப்பையைப் பிரித்து வெற்றிலையை எடுத்து உதறினாள். வதங்கலைத் தடவி, காம்பைக் கிள்ளி வீசியபின் சிரத்தையுடன் சுரண்டவத்திலிருந்து சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையின் பின்னால் பூசினாள். போதும் என்ற திருப்தி வந்ததும் சின்ன பாக்குத் துண்டை மத்தியில் வைத்து மடித்து மெல்லத் தொடங்கினாள். வெற்றிலைச்சாற்றின் சுகம் உறைக்க ஆரம்பித்த வினாடியே வயிறு பசியின் தீவிரத்தை உணர்த்தியது. காலையில் நீராகாரத்துக்குப்பின் எதையுமே உட்கொள்ளாததன் உக்கிரத்தைத் துள்ளுதலும் நெளிதலும் முறுக்கிப் பிழிதலுமாய் குடல் சுட்டிக்காட்டித் துடித்தது. உறுமிஉறுமிப் புரள்கிற ஒரு காட்டு மிருகம் மாதிரி வயிற்றுக்குள் நிகழ்கிற பிரளயத்தை உணர்ந்தாள். வெற்றிலைச்சாற்றின் குழைவு நாக்கையும் தொண்டையையும் நனைக்கிறவரை அவஸ்தைதான்.

வேதனை தாளாமல் கண்ணை மூடிக்கொண்டாள். மூச்சு வாங்கியது. சில வினாடிகளில் வயிற்றை முறுக்கிய இறுக்கம் கொஞ்சகொஞ்சமாய் நெகிழ்வதை உணர்ந்தாள். வியாதிக்கார மாடு கட்டைத் தளர்த்திக்கொண்டு படுக்கிறமாதிரி இருந்தது. உயிர்போய் உயிர் வந்தது.

சிவந்த எச்சிலைத் துப்பிவிட்டு நிமிர்ந்தபோது தூரத்துத் தடத்தில் வளவனூர்ப் பக்கத்தில் இருந்து யாரோ பெண்கள் வருகிறமாதிரி தென்பட்டார்கள். மங்கலாய்த் தெரிந்தன உருவங்கள். மரங்களுக்கு அப்பால் தெரிந்த வானத்தின் பிரகாசத்தை வெறித்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்கள் நெருங்கினார்கள். தயிர்க்காரப் பெண்கள், பேசிக்கொண்டே கிழவியைத் தாண்டிக் கடந்துபோனார்கள்.

கைகளை உதறிக்கொண்டு எழுந்தாள் கிழவி. வெற்றிலைக் கலவையைப் பூரணமாய்த் துப்பினாள். ஆட்டுக்காரப் பையனைக் கூப்பிட்டுக் கூடையைத் தூக்க ஒரு கை பிடிக்கச் சொன்னாள். சிம்மாட்டுத் துணி நகர்ந்து விழுந்தபோது சரியாய் வைக்கச் சொல்லிக் குனிந்து சுமை சரியானதும் நடக்க ஆரம்பித்தாள்.

நடை தளர்த்தி நிதானமாகவே செல்ல முடிவடுத்£ள். தடத்துக்கு இரண்டு பக்கமும் வேல மரங்கள் செறிவாக இருந்தன. உதிர்ந்த மஞ்சள் பூக்கள் உலர்ந்து ஒருவிதமான வாசனை வீசியது. நிழலுக்கு வந்திருந்த மாடுகள் அசை போட்டபடி சுதந்திரமாய்ப் படுத்துக் கிடந்தன. மாடுகளுக்குக் காவலாய் காட்டின் இறுதியில் கிழவன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனைக் கடந்து போகிற தருணத்தில் அவன் தன்னையே பார்ப்பதாக உணர்ந்தான். வேட்டுச் சத்தம் இன்னொரு தரம் கேட்டது.

நிழலின் ஆறுதல் விலகி வெய்யிலின் பிடியில் மறுபடியும் பூமி தகித்துக் கிடந்தது. நிதான நடை உதவாது என்று நினைத்து வேகத்தைக் கூட்டினாள். விசையுடன் காலை இழுத்துஇழுத்து நடக்கும்போது பசியின் தீவிரம் மறுபடியும் உறைத்தது. குடல் சுருங்கி ஒரு அழுத்தத்தோடு மறுபடியும் விடுதலையாகிற ஒவ்வொரு கணமும் வயிறே அறுந்துபோகிறமாதிரி வேதனை தந்தது. பல்லைக் கடித்தபடி நடந்து கரையைத் தொட்டாள்.

கரையேறி மூச்சு வாங்கியபோது திடீரென்று புதிய ஊரைப் பார்ப்பதுமாதிரி உணர்ந்தாள். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்ட திருப்தியும் தைரியமும் தோன்றியது. கூப்பிடு தூரத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், ஆலமரம், நாவல்மரம், இலுப்பைமரம்   என்று சுற்றிலும் மரங்களாய் முளைத்து வெயிலையே அண்டவிடாது தடுத்த அந்தச் சின்ன பிரதேசம், பின்னால் ஆரம்பித்து விரிகிற ஊர் எல்லாமே ஒரு கணத்தில் சொந்தமாகி அரவணைத்துக் கொள்கிற மாதிரி இருந்தது. ரயில்வே கேட்டைத் தாண்டும்போது பாய்ண்ட்மேன் ஒருவன்பலகாரம் இருக்குதா?’ என்று கேட்டான். ‘இல்லப்பாஎன்று பதிலோடு அவனைக் கூப்பிட்டு கூடையை இறக்கச் சொல்லி குடிக்கத் தண்ணீர் கேட்டாள். தண்ணீர் தருகிறவரைக்கும் சிமெண்டு பெஞ்ச்சில் உட்கார்ந்தாள். குடித்த பிறகும் இரண்டு நிமிஷம் கூடுதலாய் உட்கார்ந்திருந்தாள். காற்றின் இதத்தைத் தேகமும் மனசும் விரும்பிய மாதிரி இருந்தன. பாண்டிச்சேரிக்குப் போகிற ஜனங்கள் கொத்துக்கொத்தாய் நீளத்துக்கும் இருக்கிற சிமெண்ட் பெஞ்சுகளில் சிதறி இருந்தார்கள். பயம் தெரியாத மூன்றுவயசுக் குழந்தை ஒன்று ரயில் தண்டவாளத்தில் இறங்கிப் பக்கத்தில் இருந்த கற்களையெல்லாம் பொறுக்கி மடியில் கட்டியது. பின்னாலேயே ஓடிவந்த நடுவயசுப்பெண் ஒருத்தி குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெஞ்சுக்குப் போனான்.

ஸ்டேஷனைக் கடந்து நீண்ட தெருவுக்குள் நடந்தாள். புளிய மரங்கள் வரிசையாக இருந்தன. மர நிழலிலேயே நடப்பது ஏதோ பந்தலுக்குக் கீழே நடப்பதாக உணர்ந்தாள். ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டுப் போகிற வெளியூர் ஜனங்கள், காசு வைத்துக் குண்டு விளையாடும் மத்திய வயசு ஆம்பளைகள், முள் நறுக்குகிற ரயில்வே க்வாட்ரஸ் நாடோடி ஜனங்கள் எல்லாரும் நீண்ட அந்த நிழல் பிரதேசத்துக்குள் இருந்தார்கள். தெருவின் கடைசியில்தான் இவள் வீடு இருந்தது.

வீட்டை அடைந்து கூடையை இறக்கிவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள். நிம்மதியாய் இருந்தது. சுவரில் சாய்ந்து கழுத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்தாள். கதவு திறந்திருந்ததால் பேரன் உள்ளே இருக்கவேண்டும் என்று ஊக்கத்துடன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாள். பதில் இல்லை. தூங்குகிறானோ என்னமோ என்ற நினைப்போடு சும்மா இருந்தாள். களைப்பில் பசியின் தீவிரத்தை இன்னும் அதிகமாக உணர்ந்தாள்.

கதவை முழுக்கவும் தள்ளி நுழைந்தபோது உள்ளே பேரன் இல்லை. அடுப்புப் பக்கத்தில் பூனை ஒன்று படுத்திருந்தது. சத்தம் போட்டு விரட்டினாள். பேரனையும், பூனையையும் திட்டிக்கொண்டே பெருக்கினாள். குழி குழியாய் இருந்த தரையில் துடைப்பம் சிக்கிச்சிக்கி மீண்டது. அடுப்பைச் சுத்தம் செய்து உலையிலேற்றிவிட்டு அரிசி கழுவ உட்கார்ந்தாள். ‘எப்ப வந்த ஆயா?’  என்று கேட்டபடி பேரன் உள்ளே வருவது தெரிந்தது. அதுவரை இருந்த மௌனத்தையும் தனிமையையும் விலக்கியது அந்தக் குரல். அவனுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமலேயே அரிசியை வெறித்தபடி கழுவிக்கொண்டிருந்தாள் கிழவி. இதன் மூலமாகவே தனது கோபத்தையும், அவன் பொறுப்பின்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

ஒங்க அப்பன போயி பாக்க சொன்னேனே, பாத்தியா?’

கொஞ்ச நேரத்துக்குப்பிறகு அவளே கேட்டாள். இந்த தரம் பேரன் பேசாமல் இருந்தான். கொடியில் கிடந்த பழைய துணிகளைச் சீய்த்து எதையோ தேடுகிறமாதிரி இருந்தான் அவன். பதிலுக்குச் சிறிது அவகாசம் கொடுத்துவிட்டு அமைதியாய் இருந்தாள் கிழவி. மார்க்கெட்டுக்கு அரிசி வாங்கப் போன ஒரு நாள் மருமகனைச் சந்திக்க நேர்ந்த விஷயத்தையும், மகனை எங்கேயாவது உத்தியோகத்தில் இழுத்துவிடக்கூ£தா என்று கேட்டதையும், வனஸ்பதி பேக்டரியில் முயற்சி செய்வதாகவும் ஒரு வாரம் கழித்து வீட்டுப் பக்கம் அனுப்பித்தரும்படி சொன்ன விஷயங்களையும் அவன் பதிலுக்கு காத்திருந்த இடைவெளியில் ஞாபகத்தில் கொண்டுவந்து நிறுத்தினாள். அவன் எந்தப் பதிலையும் சொல்லாமல் இருப்பது கண்டு மீண்டும் தானாகவே பேசினாள்.

வேல வாங்கித்தரன் அனுப்பிவைன்னு சொன்னானே பாத்தியான்னு கேட்டா மதுரை வீரன் செலயாட்டம்மா ஒக்காந்துக்னு இருக்கியே, இன்னாடா அர்த்தம்? பாத்தியா? கேட்டியா? இன்னா சொன்னான் ஒங்கப்பன்? சொல்லுடா...’

பாரு கெழவி. இன்னொருதரம் அப்பன் கிப்பன்னு பேசன, எனக்கு கெட்ட கோவம் வரும், சொல்லிட்டன்.’

அப்ப அவனப் போயி பாக்கலியா?’

எந்தப் பொறுக்கியயும் போயி நான் பாக்கமாட்டன்.’

வேல வாங்கித் தரன்னு சொன்னான்டா.’

எந்த மயிரானும் எனக்கு வேல வாங்கித் தரவேணாம். எல்லாம் எனக்குத் தேடிக்கத் தெரியும்.’

இன்னா நீ அவ்ளோ எளக்காரமா பேசற... பாரு.’

கால் சட்டைப்பைக்குள் கையைவிட்டு கைக்கு வந்த சில்லறைக்காசுகளை அள்ளி வீசினான் அவன். ஒன்றிரண்டு அழுக்கு நோட்டுகளும் வந்து விழுந்தன.

வேல வேலன்னு கெடந்து துடிக்கிறியே. அவன் ஒர்த்தன்தா ஒலகத்துக்கெல்லாம் வேல வாங்கித் தரானா? பெரிய சூரனா இல்ல பெரிய பிஸ்தாவா? இன்னமோ அவனப் போயி பாரு பாருன்னு அடிச்சிக்கிறியே. அவனுக்கு மட்டும்தான் சம்பாதிக்க தெரியும்னு நெனச்சிக்காத. ம்க்கும்... எனக்கும் தெரியும்...’

கூரையை, ஓலைத்துவாரம் வழியே வந்து விழுகிற வெளிச்சத்தை, கொடியில் கிடந்த அழுக்குத் துணிகளைப் பார்த்தபடி மெதுவாகச் சொல்லிக்கொண்டே இருந்தான் அவன். துக்கத்தில் குரல் கம்மியது. அரிசிச்சட்டியைத் தள்ளிவிட்டு நகர்ந்த பேரனின் முதுகைத் தொட்டாள் கிழவி. பலகை பலகையாய் இருந்த அவன் முதுகையும், கருகருவென்று அடர்ந்த தலை முடியையும், காப்புக் கயிறு தவழும் கழுத்தையும் முதன்முதலாய்ப் பார்ப்பதுபோல உணர்ந்தாள். கிழவியின் வாஞ்சைமிக்க தடவுதலில் அவனுக்கு மனம் குழைகிறமாதிரி இருந்தது. காசை எடுத்து வீசியதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டான்.

‘‘எனக்குதான் புடிக்காதுன்னு தெரியுமில்ல. பின்ன எதுக்கு அந்த ஆளப்பத்திப் பேசற...?’’

‘‘சரி சரி. உடு.’’

நகர்ந்து தரையில் கிடந்த சில்லறைகளையெல்லாம் பொறுக்கி கிழவியின் தளர்ந்த கைக்குள் வைத்தான்.

இந்தா வச்சிக்க...’

ஏதுடா இது?’

யேன் திருடுனன்னு நெனச்சிக்கினியா?’

இல்லடா ஏதுன்னு கேட்டன்.’

நீதான் தெனமும் வேல வேலன்னு பொலம்பறியே. இன்னிக்கு நானே போய் வேலைல சேர்ந்தன்.’

வேலைக்கா?’

எதுக்கு வாயப் பொளக்கற? ஊர்ல ஒன் மருமவனுக்குத்தா எல்லாம் தெரியும்னு நெனச்சிக்கினியா...?

எங்கடா?’

கமிட்டில லோடு ஏத்தனன்.’

கிழவிக்கு லேசாக சிரிப்பு வந்தது. பெருமையாகவும் இருந்தது. நெஞ்சின் ஆழத்தில் என்னமோ சுரந்து குளிர்விக்கிற மாதிரி உணர்ந்தாள். பெரிய மனுஷனாய் உயர்ந்து நிற்கிற பேரனைக் கௌரவிக்கவேண்டும்போல உணர்ந்தாள். தானாகவே பேச ஆரம்பிக்க கொஞ்சம் கூச்சமாகவும் உணர்ந்தாள்.

காச நீயே வெச்சிக்கடா. எங்கயும் போவாம திண்ணையிலியே கொஞ்சநேரம் ஒக்காரு. சித்த நாழில சோறாக்கிர்றன்.’

எனக்கொன்னும் காசி வேணாம். நீயே வெச்சிக்க...’

தோல் சுருங்கிய கிழவியின் கையைப் பிடித்து பணத்தை திணித்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அவன் முதுகுப்பட்டையையே ரொம்ப நேரம் பிரியத்தோடு பார்த்தாள்.

(பிரசுரமாகாதது -1985)