Home

Sunday 10 September 2023

சி.சுப்பிரமணியம் : உலகத்தார் உள்ளத்தில் உறைந்தவர்

  

காந்தியடிகள் 05.09.1920 அன்று அறவழியில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.  ஒவ்வொரு குடிமகனும் தம் எதிர்ப்பைப் புலப்படுத்தும் விதமாக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். அவருடைய ஆணைக்கிணங்கி, வழக்கறிஞர்கள் அரசு நீதிமன்றங்களையும் மாணவர்கள் அரசு கல்லூரிகளையும் புறக்கணித்து வெளியேறினர். அரசு ஈட்டிவந்த வருமானத்தைக் குறைக்கும் வகையில், அயல்நாட்டு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பும் கள்ளுக்கடைகள் முன்பும் நின்றும் தொண்டர்கள் மறியல் செய்தனர். இவ்வியக்கத்துக்கு நாடெங்கும் கிடைத்த மகத்தான ஆதரவினால் எங்கெங்கும் அகிம்சை வழியிலான போராட்டம் பரவியது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, அதில் ஈடுபட்ட தொண்டர்களை காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைத்தனர். எனினும் தியாக உள்ளம் கொண்ட தொண்டர்கள் உறுதியான மனநிலையுடன் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டனர். உப்பு சத்தியாகிரகத்துக்குப் பிறகு 05.03.1931 அன்று காந்தியடிகளுக்கும் வைசிராயாக இருந்த இர்வினுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக கள்ளுக்கடை மறியலுக்கும் துணிக்கடை மறியலுக்கும் அரசு அனுமதி வழங்கியது.


இப்படிப்பட்ட பின்னணியில் 1932ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பொள்ளாச்சியில் கள்ளுக்கடைகளை எடுத்து நடத்துவதற்காக ஏலம் விடும் முயற்சியை அரசு தொடங்கியது. காந்தியக்கொள்கைகளில் ஆர்வமும் உறுதியான நம்பிக்கையும் கொண்ட பொள்ளாச்சி இளைஞரொருவர் அப்போதுதான் சென்னையில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு கிராமத்துக்குத் திரும்பியிருந்தார். நகராட்சி அலுவலராக இருந்த அவருடைய தந்தையார்தான் ஏல நடவடிக்கைகளுக்கான வேலைகளைச் செய்யும் பொறுப்பில் இருந்தார். தந்தையைச் சந்தித்து தன் வேலையை உதறிவிட்டு வெளியேறி, காங்கிரஸின் பக்கம் நிற்கும்படி கேட்டுக்கொண்டார் அந்த இளைஞர். ஆனால் அவருடைய தந்தை அக்கோரிக்கையை ஏற்கவில்லை. அரசு ஊழியர் என்னும் பெருமையை உதற அவர் மனம் விரும்பவில்லை.

17.07.1932 அன்று ஏலம் நடைபெற்றது. மன உறுதிமிக்க மகன் பிற காங்கிரஸ் தொண்டர்களோடு இணைந்துகொண்டு நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று ஏலத்தையும் கள்ளுக்கடைகளையும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளோடு மறியலில் ஈடுபட்டார். தந்தையின் முன்னிலையிலேயே அந்த இளைஞரையும் பிறரையும் காவதுறையினர் கைது செய்தனர். ஒரு நாள் முழுதும் காவல் நிலையத்தில் சிறைவைக்கப்பட்டு அடுத்தநாள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.  விசாரணையில் அந்த இளைஞரின் கல்வித்தகுதியைப்பற்றி நீதிபதி தெரிந்துகொண்டதால் மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்துவிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் அந்த இளைஞர் மன்னிப்பு கோர மறுத்தார். எனவே, நீதிபதி அவருக்குப் பத்து மாத கடுங்காவல் தண்டனையை விதித்தார். கூடுதலாக ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த இளைஞர் அபராதத் தொகையை கட்ட மறுத்ததால்  அவருடைய தண்டனைக்காலத்தை ஓராண்டாக மாற்றினார் நீதிபதி. பேருந்து நிலையம் வரை அந்த இளைஞரை கைவிலங்கு பூட்டிய நிலையில் அழைத்துச் சென்ற காவலர்கள் கோவை சிறையில் அடைத்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றி தண்டனைக்காலம் முழுவதும் அங்கேயே வைத்திருந்தனர். அச்சிறைத்தண்டனை அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இளைஞர் சி.சுப்பிரமணியம்.

இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு மாநிலக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சுப்பிரமணியம் தேசப்பற்றும் விடுதலை தாகமும் கொண்டவராக இருந்தார். சென்னையில் இராஜாஜி, சத்தியமூர்த்தி, திரு.வி.க. போன்றோரின் உரைகள் அவரை ஈர்த்தன. மாநிலக்கல்லூரியிலேயே வெவ்வேறு பிரிவுகளில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களான பெரியசாமித் தூரன், ஜி.பார்த்தசாரதி, எல்.கே.முத்துசாமி, ஓ.வி.அளகேசன், எச்.வி.காமத் ஆகியோருடன் இணைந்து நிகழ்த்திய உரையாடல்களின் விளைவாக அவருடைய விடுதலை வேட்கை பெருகியது. இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வனமலர்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டனர். 1928இல் சென்னை மாகாண அரசு பாரதியார் பாடல்களுக்கு விதித்த தடை உத்தரவை எதிர்த்து கூட்டங்கள் நடத்தி குரல்கொடுத்தனர். பித்தன் என்னும் பெயரில் ஓர் இலக்கிய இதழைத் தொடங்கி பாரதியார் பாடல்களை வெளியிட்டு தம் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வனமலர்ச்சங்கம் வேகமாக வளர்ந்து தமிழ்நாட்டில் பல கிளைகள் உருவாகின. விடுமுறைக்காலங்களில் சுப்பிரமணியமும் பிற மாணவர்களும் விடுதலைப்பிரச்சாரத்திலும் கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு ஆகிய தேசிய நிர்மாணப்பணிகளிலும் ஈடுபட்டனர். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவேண்டும் என்னும் விருப்பத்தை சுப்பிரமணியம் கைவிட்டார். அயல்நாட்டு ஆடைகளை ஒதுக்கி கதராடைகளை மட்டுமே அணிந்தார். இராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு நூலை நூற்கும் பணியையும் செய்தார்.

சைமன் குழு  மாநிலக்கல்லூரிக்கு வருகை தந்தபோது, சுப்பிரமணியமும் அவருடைய நண்பர்களும் கருப்புத்தொப்பிகளை தலையில் அணிந்துகொண்டு ‘சைமனே திரும்பிப் போ’ என்று எதிர்ப்புக்குரல் எழுப்பினர். கல்லூரி நிர்வாகம் அனைவருக்கும் ஐந்து ரூபாய் அபராதம் விதித்தது. 02.01.1930 அன்று நேரு தலைமையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் பூரண சுதந்திரம் வேண்டும் என்று குரலெழுப்பியது. 26.01.1930 அன்று நாடெங்கும் பூரண சுதந்திர தினமாகக் கொண்டாடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதை ஏற்று மாநிலக்கல்லூரி மாணவர்களாக இருந்த சுப்பிரமணியமும் பிறரும் திரளாகக் கூடி சுதந்திர தின உறுதிமொழியை ஏற்றனர்.

வேலூர் சிறையிலிருந்து விடுதலை பெற்ற சுப்பிரமணியம் கோவையில் அவினாசிலிங்கத்தின் முயற்சியால் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்விநலனுக்காக போத்தனூரில் நடைபெற்று வந்த இராமகிருஷ்ணா மிஷன் வித்தியாலத்தில் இணைந்து ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்போது கல்வி பயின்று வந்தனர். அப்போது பெ.தூரனும் அங்கே பணிபுரிந்தார்.

அரிஜன இயக்கத்துக்காக நாடெங்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் 06.02.1934 அன்று மிகவும் தாமதமாக கோவைக்கு வந்தார். அப்பயணத்திற்குப் பொறுப்பேற்றிருந்த அவினாசிலிங்கம் காந்தியடிகளை வித்தியாலயத்திலேயே தங்க வைத்திருந்தார். காந்தியடிகளின் வருகையை தமக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதிய மாணவர்கள் உறங்காமல் விழித்திருந்து அவரை வரவேற்று வணக்கம் தெரிவித்தனர். மாணவர்களோடு காந்தியடிகளும் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்து, அவர்களைப் படுக்கைக்குச் செல்லுமாறு அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு தனக்கு வந்திருந்த அஞ்சல்களையெல்லாம் பார்த்தார். அன்று பலவேறு நிகழ்ச்சிகளின் வசூலான தொகைகளின் கணக்கைப் பார்த்துக் குறித்துக்கொண்டார்.  அன்று அவருக்கு அருகிலிருந்து தேவைப்படும் உதவிகளைச் செய்தார் சுப்பிரமணியம். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைகளைத் தொடங்கி, நேரம் கழிவதைக் கருதாது அன்றைய எல்லா வேலைகளையும் முடித்த பிறகு உறங்கச் செல்லும் காந்தியடிகளுடைய ஈடுபாடு அவரை மலைக்கவைத்தது. அந்த ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் தம் வாழ்விலும் கடைபிடிக்கவேண்டும் என அக்கணமே மனத்துக்குள் உறுதியெடுத்துக்கொண்டார்.

மறுநாள் காலையில் போத்தனூரிலேயே வேறொரு இடத்தில் வித்தியாலயத்துக்காக கட்டப்படவிருந்த புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக காந்தியடிகளை அழைத்துச் சென்றார் சுப்பிரமணியம். ”இந்த வித்தியாலயம் தேசிய ஊழியர்களுக்கு ஒரு கேந்திரமாக இருக்கும் என்றும் இதில் படித்து வெளிவரும் மாணவர்கள் உண்மையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் மன உறுதி கொண்டவர்களாகவும் அஞ்சாதவர்களாகவும் கடவுளுக்கு அஞ்சுகிறவர்களாகவும் இருந்து மனித குலத்துக்குச் சேவை செய்வார்கள் என்றும் நம்புகிறேன்” என்று உரைத்துவிட்டு அடிக்கல் நாட்டினார் காந்தியடிகள். அதற்குப் பிறகு குன்னூருக்குச் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அங்கிருந்து புறப்படவிருந்த தருணத்தில் சொக்கம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் காந்தியடிகளை நெருங்கி தம் கிராமத்துக்கு வருகை புரியுமாறு வேண்டிக்கொண்டார். அவருடைய பயணவழியிலேயே அந்தக் கிராமம் இருந்தாலும், ஏற்கனவே முடிவுசெய்திருந்த பயணத்திட்டத்தில் அந்தக் கிராமம் சேர்க்கப்படவில்லை. ஆயினும் அரிஜன மேம்பாட்டுக்காக தம் பகுதியில் நடைபெற்றிருக்கும் ஏராளமான நற்பணிகளைப்பற்றி அந்த ஊழியர் எடுத்துரைத்ததைக் கேட்ட பிறகு, காந்தியடிகள் அக்கிராமத்தைப் பார்க்க விழைந்தார். அதனால் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அக்கிராமத்துக்குச் சென்று அரிஜன சேவையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களைப் பாராட்டி, அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் சிறிது நேரம் உரையாடினார். கோவைக்கு அருகிலிருந்த கூகலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சுப்பண்ணக்கவுண்டர் என்பவர் தண்ணீர்த்தேவைக்காக அலைந்துகொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த அரிஜனக்குடும்பங்களின் நலனுக்காக, தன் குடும்பக் கிணற்றிலிருந்து நீரெடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறார் என்னும் செய்தியை அறிந்து, அவரையும் காந்தியடிகள் சந்தித்துப் பாராட்டிவிட்டுச் சென்றார்.

காந்தியடிகள் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டாலும், சில நாட்கள் அவரோடு நெருங்கியிருந்த அனுபவங்கள் வழியாக காந்தியடிகளின் செயல்திட்டங்களையும் சேவை மனப்பான்மையையும் அர்ப்பணிப்புணர்வையும் சுப்பிரமணியம் எளிதாகப் புரிந்துகொண்டார். அந்தப் பாதையிலேயே தம் வாழ்வை அமைத்துக்கொள்ள முடிவெடுத்தார். 1938இல் எல்.கே.முத்துச்சாமி என்னும் நண்பருடன் வார்தாவுக்குச் சென்று காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே தங்கியிருந்து தமக்கிருந்த ஐயங்களையெல்லாம் அவரிடம் உரையாடி தெளிவுபடுத்திக்கொண்டு திரும்பினார். வழக்கறிஞர் தொழிலை நடத்தியபடியே தம்மால் செய்ய முடிந்த தேசப்பணிகளையும் ஆற்றி வந்தார் சுப்பிரமணியம்.

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் 03.09.1929 அன்று போர் மூண்டது. அதுவே படிப்படியாக விரிவடைந்து இரண்டாம் உலகப்போராக மாறியது. அச்சமயத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியாவும் போரில் கலந்துகொள்ளும் என ஆங்கிலேய அரசு தன்னிச்சையாக அறிவித்தது. இந்தப் போர்களில் ஈடுபட்டு இந்தியா தன் மனித ஆற்றலை இழக்கத் தயாராக இல்லை என காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது. எதிர்ப்பின் அடையாளமாக மாகாணங்களில் ஆட்சிப்பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகினர். 17.10.1940 அன்று காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். முதல் சத்தியாகிரகியாக களத்தில் இறங்கி போர் எதிர்ப்புப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வினோபாவை காவலர்கள் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சத்தியாகிரகத்துக்கான அழைப்பு வந்ததும் சுப்பிரமணியம் தம் பணிகள் அனைத்தையும் இளநிலை வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு்  சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அன்று நிலவிய அரசு தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேய அரசின் போர்முயற்சிக்கு மக்கள் ஒத்துழைக்கக்கூடாது என உரையாற்றினார். காவல் துறையினர் சுப்பிரமணியத்தை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆறு மாத சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன. பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அலிப்புரம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கே மேலதிகாரியாக இருந்த ஹோ கைதிகளிடம் மிகவும் கடுமையான முறையில் நடந்துகொண்ட போதும், அத்துன்பங்களையெல்லாம் சுப்பிரமணியமும் மற்ற தொண்டர்களும் தமக்குள் நிகழ்த்திய அரசியல் விவாதங்கள் வழியாக மன உறுதியுடன் கடந்துசென்றனர்.

சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் மீண்டும் வழக்கறிஞர்  தொழிலுக்குத் திரும்பினார் சுப்பிரமணியம். ஆனால் அது நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. 1942இல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியதும், நாடெங்கும் பல தலைவர்கள் நாள்தோறும் கைது செய்யப்படுவது தொடர்ந்தது.   கோவை மாவட்டத்தில் ரகசிய பிரசுரங்களை விநியோகிப்பதில் சுப்பிரமணியம் முக்கியப் பங்காற்றினார். எதிர்பாராத விதமாக பஞ்சாலைத்தொழிலாளர்களும் அப்போராட்டத்தில் பங்கேற்று நாசவேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். போர்த்தளவாடங்களை ஏற்றிச் சென்ற ஒரு ரயில் கோவை அருகில் கவிழ்க்கப்பட்டது. கோவையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு ராணுவ விமான நிலையத்தில் விமானக்கொட்டகைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கே.வி.ராமசாமி, கே.பி.திருவேங்கடம் இருவரும் மறைவிடம் தேடி சுப்பிரமணியத்தை நாடி வந்தனர். அவர்களைக் காப்பாற்றுவது அவருடைய பொறுப்பாகிவிட்டது. முதலில் ஒருசில நாட்கள் குடிசைப்பகுதியில் அவர்கள் மறைந்திருக்கவும் பிறகு கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்துக்குச் சென்று மறைந்து வாழவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். மறுபுறத்தில், அந்த வழக்கில் அகப்பட்டு கைதான மற்றவர்களுக்காக நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் வாதாடினார்.

ஆனால் தொடர்ந்து அவரால் இரு திசைகளிலும் பயணம் செய்யமுடியவில்லை. சாதாரண உடையணிந்த ரகசியக்காவலர்கள் அவருடைய வீட்டை எப்போதும் கண்காணித்துவந்தனர். 1943இல் ஒரு வழக்கில் ஆஜரான பிறகு உடுமலைப்பேட்டையிலிருந்து கோவைக்குத் திரும்பி வரும் வழியில் அவருடைய வண்டியை நிறுத்தி அவரைக் கைது செய்தனர் காவலர்கள். அரசு உத்தரவுக்கடிதம் அவர்களுடைய கையில் இருந்தது. அரசு ஆணைக்கு அவர் கட்டுப்படவேண்டியதாக இருந்தது.  அங்கிருந்து அவர் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். எதிர்பாராத விதமாக அவர் சிறையிலிருந்து ஆறு மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டார். தண்டனைக்காலம் முடியும் முன்பே தன்னை விடுதலை செய்த காரணத்தைப் புரிந்துகொள்ளாமலேயே அவர் ஊருக்குத் திரும்பினார்.

அப்போது மாகாணத்திலேயே கிரிமினல் வழக்கை எடுத்து நடத்துவதில் மிகவும் தேர்ச்சிபெற்றவர் நியுஜென்ட் கிரான்ட் என்னும் மூத்த வழக்கறிஞர். கோவையில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் அவர் ஆஜராவதாக இருந்தது. சுப்பிரமணியத்தின் மதிநுட்பத்தின் மீதும் சட்ட ஞானத்தின் மீதும் அந்த வழக்கறிஞருக்குப் பெருமதிப்பு இருந்தது. சுப்பிரமணியம் தன் உதவியாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. அதனால் அரசு மேல்மட்டத்தில் தேவையான அழுத்தம் கொடுத்து, தண்டனைக்காலம் முடிவடையும் முன்னரே அவரை விடுதலை செய்ய வைத்துவிட்டார். அக்காரணத்தைத் தாமதமாகப் புரிந்துகொண்ட சுப்பிரமணியம் அந்த வழக்கறிஞரைச் சந்தித்து தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தார்.

சுப்பிரமணியம் மீண்டும் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினாலும் மறுபுறம் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுதலை பெற்றனர். இந்தியாவின் எதிர்காலம் குறித்து இந்தியத் தலைவர்களுக்கும் ஆங்கிலேயே அரசினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதன் விளைவாக 1946ஆம் ஆண்டில் நாடெங்கும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலையடுத்து, இந்திய அரசியல் சாசனம் ஒன்றைத் தயாரிப்பதற்காக அரசியல் நிர்ணய சபையை அரசு அமைத்தது. அச்சபையில் பனியாற்றுவதற்கு பல்வேறு மாகாணங்களில் அமைந்திருந்த சட்டப்பேரவைகள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பின. சென்னை மாகாணத்தின் சார்பாக சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சபைக்குச் சென்றார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவது, இடைக்கால நாடாளுமன்றத்தில் பணி புரிவது என்ற இருபெரும் பொறுப்புகளை அந்தச் சபை ஏற்றுக்கொண்டது. அச்சபையின் தலைவராக அனைவராலும் இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல சுற்றுகளாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும், அனைத்தும் தோல்வியிலேயே முடிய, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் தனிநாடாகப் பிரிந்து சென்றது. 15.08.1947 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அரசியல் நிர்ணய சபை தனது பணியை முடித்து, 26.11.1949 அன்று இந்திய அரசியல் சட்டத்தை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அரசியல் நிர்ணய சபை, நாடாளுமன்றமாகச் செயல்படத் தொடங்கியது. சுப்பிரமணியம் தற்காலிக நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தொடர்ந்தார்.

புதிய அரசியல் சட்டப்படி 1952ஆம் ஆண்டில் மக்களவைக்கும் மாகாணச் சட்டப் பேரவைக்கும் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன.  சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பாக இராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்றார். கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பிரமணியம் நிதி, உணவு ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார்.

உணவு அமைச்சராக சுப்பிரமணியம் பொறுப்பேற்ற பிறகு இயற்றப்பட்ட சட்டங்களில் முதன்மையானது குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டமாகும். தமிழ்நாட்டில் காவிரியாற்றின் கரையோரமாக உள்ள ஊர்களிலும் ஆந்திரத்தில் கோதாவரி – கிருஷ்ணா நதிக்கரையோரமாக உள்ள ஊர்களிலும் உள்ள விவசாயநிலங்கள் உணவு தானியங்களை மிகுதியாக உற்பத்தி செய்பவை. ஆனால் அப்பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான நிலங்களுக்கு உரிமையாளர் ஒருவராகவும் அந்நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து பாடுபடுகிறவர்கள் ஒருவராகவும் இருந்தனர். வற்றாத பாசனவசதியும் நல்ல விளைச்சலும் இருந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அவற்றால் எந்தப் பயனையும் பெறாதவர்களாக இருந்தனர். அதற்கு முக்கியமான காரணம் அப்போது நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்த குத்தகைமுறை.

நிலத்துக்கு உரிமையாளர்கள் விதிக்கும் பங்கீட்டுமுறையையே குத்தகைதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு விஷயம். குத்தகைதாரர்களை எந்த நேரத்திலும் வெளியேறச் செய்யும் உரிமை நில உரிமையாளர்களுக்கு இருந்தது என்பது இன்னொரு விஷயம். இவையெல்லாம் நடைமுறையில் விவசாயிகளுக்கு உரிய  பயன் சேராதபடி தடுத்தன. நில உரிமையாளர்கள், விவசாயிகள் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் சுப்பிரமணியம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். மொத்த விளைச்சலில் குத்தகைதாரர் சாகுபடிக்காகச் செலவிட்டிருக்கும் தொகையை முதலில் கழித்துவிட்ட பிறகே பங்கீடு பற்றிய கணக்கைத் தொடங்கவேண்டும் என்பது முதல் விதி. அடுத்து, எஞ்சிய விளைச்சலில் நில உரிமையாளருக்கு 60 விழுக்காடு அளவு, குத்தகைதாரருக்கு 40 விழுக்காடு அளவு என பிரித்துக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாம் விதி. நிலத்தில் சாகுபடி செய்பவர்களை உரிய காரணமில்லாமலும் சாகுபடிக்கு இடையிலும் மாற்றுவது கூடாது என்பது மூன்றாம் விதி.

இந்த விதிகள் குறித்து கிராமங்கள் தோறும் ஏராளமான கூட்டங்களை நிகழ்த்தி இரு தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது. சட்டசபையில் நீண்ட  விவாதங்களுக்குப் பிறகு இந்த விதிகள்  சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. பங்கீடு விகிதாச்சாரம் தொடர்பாக தொடக்கத்தில் அவற்றை எதிர்த்த பொதுவுடைமைக்கட்சியினரும் சுப்பிரமணியம் அளித்த விளக்கங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொண்டனர். நில உரிமையாளர்களின் தன்னிச்சைப்போக்கிலிருந்து விடுபட்டு சாகுபடியாளர்கள் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பினர். எல்லா இடங்களிலும் விவசாயம் செழிக்கும் வகையில் குந்தா, ஆழியாறு, பரம்பிக்குளம் போன்ற இடங்களில் நீர்மின்திட்டங்களைத் திட்டமிட்டு வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

இந்தியா குடியரசு நாடாக உருவான பிறகு, சென்னை மாகாணத்தின் முதலாவது நிதிநிலை அறிக்கையை சுப்பிரமணியம் சமர்ப்பித்தார்.  அப்போது ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் போன்றோர் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் நிறைவளிக்கும் விதத்தில் பதில் அளிக்கவேண்டியது சுப்பிரமணியத்தின் கடமையாக இருந்தது. திட்டங்கள் அறிவிப்புக்கும் அவை நடைமுறைப்படுத்தப்படும் காலத்துக்கும் இடையில் உருவாகும் இடைவெளியைக் குறைப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதை உணர்ந்து, அதற்கு இசைவாக இரண்டாவது நிதிநிலை அறிக்கையை அமைத்தார். நிதி ஒதுக்கீடும் வேலை மதிப்பீடும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை நிகழுமாறு மாற்றியமைத்தார். குறிப்பிட்ட கால இடைவெளியில் துறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகள் பெறுவதும் சந்திப்புகளை நிகழ்த்துவதும் தக்க பயனளிப்பதை அவரே நேரிடையாக உணர்ந்தார். இந்த நடைமுறையின் விளைவாக, அரசாங்க நிர்வாகம் கட்டுக்கோப்புடன் செயல்படத் தொடங்கியது.

தெற்குக் கன்னட மாவட்டத்திலிருந்து இளைஞராக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த இளைஞர்களில் ஒருவரான டி.ஏ.பய் என்பவர், கல்வி அமைச்சராக இருந்த சுப்பிரமணியத்திடம் ஒருமுறை ஒரு கோரிக்கையை முன்வைத்தார். தன்னுடைய மாவட்டத்தில் உடுப்பிக்கு அருகில் உள்ள மணிப்பால் என்னும் சிற்றூரில் ஒரு மருத்துவக்கல்லூரியைத் தொடங்குவதற்கு நிலம் ஒதுக்கி அளிக்குமாறு வேண்டினார். நேரடி ஆய்வுக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த சுப்பிரமணியம் டி.ஏ.பய்யையும் அழைத்துக்கொண்டு ஒருமுறை மணிப்பாலுக்குச் சென்றார். அவர் சுட்டிக் காட்டிய இடம் தரிசாகவும் கற்கள் மண்டிய இடமாகவும் இருந்தது. அந்த இடத்தில் மருத்துவமனையை கட்டியெழுப்ப நினைக்கும் அவர் கனவை நினைத்து அவருக்கு விசித்திரமாக இருந்தது. அவரோ அந்த இடத்தில் மருத்துவமனையை எழுப்புவதில் உறுதியாக இருந்தார். குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு எதிர்பார்க்கும் விளைவு எதுவும் ஏற்படவில்லையென்று கருதினால் நிலத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கும் அளவுக்கு அவர் உறுதியோடு உரையாடினார். அவருடைய உறுதியைக் கண்ட சுப்பிரமணியம் அந்த இடத்தை ஒதுக்குவதற்கான அரசு ஆணையில் கையெழுத்திட்டார். ஒருவரும் நினைத்துப் பார்த்திராத வேகத்தில் அந்தத் தரிசு நிலத்தில் அழகான மருத்துவமனையைக் கட்டியெழுப்பி அருகிலிருக்கும் ஊர்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் பயன்பெரும் வகையில் செய்து காட்டினார் பய்.

பதினான்கு வயது வரையில் எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி வழங்க அரசியல் சாசனம் வகை செய்தபோதும், நடைமுறை எதார்த்தத்தில் பெரும்பாலான ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் சேர இயலாத சூழலே இருந்தது. பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தம்முடன் சேர்ந்து உழைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஒவ்வொரு சிறுவனையும் சிறுமியையும் பள்ளிக்கூடத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் அன்றைய முதல்வராக இருந்த இராஜாஜி ஒரு புதிய மாற்றியமைக்கப்பட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்த விரும்பினர். அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகள் கல்வியறிவைப் பெறும் வகையில் பள்ளி இயங்கும் கல்வி நேரத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பதுதான் அத்திட்டம். ஒரு வேளை மட்டும் பள்ளிக்கு வந்து கல்வி கற்ற பிறகு, அடுத்த வேளையில் விரும்பும் வகையில் உடலுழைப்பில் ஈடுபடலாம்  அல்லது பெற்றோர்களுக்கு உதவிசெய்யச் செல்லலாம் என்று அவர் விளக்கம் கொடுத்தார். கெடுவாய்ப்பாக, அது சமூகத்தில் சாதிமுறையை நீடித்திருக்கச் செய்யும் ஏற்பாடு என எதிர்ப்பு எழுந்தது. தீயெனப் பரவிய அந்த எதிர்ப்பின் விளைவாக, அவர் பதவியை விட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களின் ஆதரவோடு காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். முதல்வர் வேட்பாளராக காமராஜருடன் போட்டியிட்டு போதிய ஆதரவு கிட்டாத சூழலில் சுப்பிரமணியம் வெற்றி பெற முடியாமல் போனது. ஆயினும் அவருடைய ஆற்றலும் அர்ப்பணிப்புணர்வும் மாநில மக்களுக்குப் பயன்படவேண்டும் என்னும் எண்ணத்தோடு, அவரைச் சந்தித்து அவர் தன் அமைச்சரவையில் நீடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் காமராஜர். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டார் சுப்பிரமணியம். கடந்த முறை பார்த்துவந்த நிதி, கல்வி, சட்டம், செய்தித்துறை ஆகிய துறைகளுக்கு சுப்பிரமணியம் அவர்களே மீண்டும் அமைச்சராகப்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இ்ருந்த காலத்தில் மாநிலமெங்கும் ஏராளமான பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக பின்தங்கிய வகுப்பினரின் குடும்பங்களிலிருந்தும் தாழ்த்தப்பட்டோரின் குடும்பங்களிலிருந்தும் நிறைய பிள்ளைகளை அழைத்துவந்து பள்ளிகளில் சேர்க்க முயற்சி நடந்தது. தொடக்கத்தில் அது வெற்றியைக் கொடுத்தாலும், பெரும்பாலானோர் பாதியிலேயே பள்ளியை விட்டு நின்றுவிடுவது தொடர்ந்தது. இதற்கான காரணத்தைக் குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல சிற்றூர்களுக்கெல்லாம் பயணம் செய்து, பலரையும் சந்தித்துப் பேசினார் சுப்பிரமணியம். இறுதியில், ஏழைகளின் குழந்தைகள் பசியின் காரணமாக பள்ளிக்கு வர இயலாத சூழல் இருப்பதை உறுதி செய்துகொண்டார்.

இக்குறைபாட்டை நீக்குவதற்கு, பள்ளியில் ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் முடிவை அரசு அறிவித்தது. இதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை பொதுமக்களிடமிருந்து நிதி வசூலித்து சமாளிப்பது என்றும் இன்னொரு பகுதியை அரசு அளிக்கவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. காய்கறிகள், பருப்பு, எரிபொருள் போன்றவற்றை வாங்குவதற்கு ஆகும் செலவை அமெரிக்காவின் கேர் என்னும் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. பால், எண்ணெய், வெண்ணெய்  போன்றவற்றை மாநில அரசு வழங்கும், மதிய உணவுத்திட்டம் நடைமுறைபப்டுத்தப்பட்ட பிறகு கல்வி கற்க வருவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.

தமிழ் மொழியை அனைத்து நிலைகளிலும் ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவை 12.12.1956 அன்று சட்டப் பேரவையில் கொண்டுவந்த சுப்பிரமணியம் நெகிழ்ச்சியோடு உரையாற்றினார். “ஒரு பூ மலர்கின்றது. அது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்தப் பூ மேலும் வளர்ந்து பிஞ்சாகி, காயாகி, கனியாகவும் மாறி மக்களுக்குப் பயனுள்ள ஒன்றாக மாறுகிறது. அதுபோலவே நம் நாட்டில் கடந்த ஐம்பது, அறுபது ஆண்டு காலமாக நடந்த தொடர் நிகழ்ச்சிகளின் பயனாக இந்தப் பூ இன்று மலர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு இந்த நிலத்தை உழுது பண்படுத்தியவர்களை, விதை நட்டவர்களை, நீர் பாய்ச்சியவர்களையெல்லாம் இந்நேரத்தில் நினைத்து வாழ்த்துவோம்” என்று தொடங்கி அனைத்து உறுப்பினர்களின் பாராட்டுமழைக்கு நடுவில் நீண்ட நேரம் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து 1959இல் தமிழ் வளர்ச்சி மன்றத்தை சுப்பிரமணியம் உருவாக்கினார். கல்லூரிகளில் பாடமொழியாகத் தமிழைக் கொண்டுவருவது அதன் நோக்கங்களில் ஒன்றாகும். பல பேராசிரியர்களின் ஒத்துழைப்போடு உயகல்விக்கான பாடநூல்களை தமிழிலேயே உருவாக்கும் முயற்சியும் தொடங்கப்பட்டது. அந்நூல்களை வெளியிடுவதற்காக தமிழ்நூல் வெளியீட்டுக்கழகம் உருவாக்கப்பட்டது. உளவியல், வானியல், வேதியியல், புள்ளியியல் என பல துறைகள் சார்ந்து கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு அகராதிகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

உயர்தொழில்நுட்ப நிறுவனமான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (I.T.I.)கான்பூர், காரக்பூர் ஆகிய ஊர்களை அடுத்து மூன்றாவதாக ஒன்றை தென்னாட்டில் அமைப்பதற்கு இடம் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் நிதியமைச்சராகவும் கல்வியமைச்சராகவும் இருந்த சுப்பிரமணியம், அந்நிறுவனத்தினரை சென்னைக்கு அழைத்துவந்து, ஒரு புதிய கிளையைத் தொடங்குவதற்குப் போதுமான நிலத்தை ஒதுக்கியளித்தார்.

1962இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தில்லிக்குச் சென்றார். பிரதமர் நேரு அவரை எஃகு சுரங்கம் ஆகிய துறைகளுக்கு அவரை அமைச்சராக்கினார். வெகுவிரைவில் அந்தத் துறைசார்ந்த பயிற்சியைப் பெற்ற சுப்பிரமணியன் பொகாரா என்னும் இடத்தில் ஓர் உருக்கு ஆலையை உருவாக்குவதற்கான முயற்சியைத் தொடங்கினார். ஒருமுறை தொழிலதிபர் டாட்டா  தன் ஆலையை (டிஸ்கோ) நவீனப்படுத்திக்கொள்ள வசதியாக, அதில் உற்பத்தியாகும் உருக்குப் பொருட்கள் மீதான விலையில், ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அதிகரித்துக்கொள்ள அரசு அனுமதியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்தத் தொகை அவர் கேட்டுக்கொண்ட விதத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பது அமைச்சரான சுப்பிரமணியத்துக்குத் தெரியவந்தது. உடனே தொழிலதிபரை ஒரு சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். டாட்டாவும் அமைச்சரைச் சந்திக்க வந்தார். பிழையை டாட்டாவிடம் சுட்டிக்காட்டிய சுப்பிரமணையம் அந்தக் கூடுதல் தொகையை அரசுக்குத் திருப்பிச் செலுத்துமாறு தெரிவித்தார். அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட டாட்டா “ஒருவேளை செலுத்தாவிட்டால்?” என்று கேட்டார். அவரை நேருக்கு நேர் பார்த்த சுப்பிரமணியம் “உங்கள் ஆலைகளை அரசு எடுத்துக்கொள்ளும்” என்று உறுதியான குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டு திடுக்கிட்ட டாட்டா பணத்தைச் செலுத்துவதாகச் சொல்லி விவாதிப்பதை நிறுத்திக்கொண்டார்.

1964இல் நேருவின் மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் சுப்பிரமணியத்தை உணவு அமைச்சராகப் பதவியேற்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சில ஆண்டுகளாக பருவமழை பிழைத்ததால் எங்கெங்கும் பஞ்சம் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த காலம் அது. நாடெங்கும் விவசாய உற்பத்தி குறைந்து பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருந்த நேரம். குறுகிய கால கள ஆய்வுக்குப் பிறகு சுப்பிரமணியம் விவசாயத்தொழிலில் ஏற்பட்டிருக்கும் சோர்வுக்கு இரு முக்கிய சிக்கல்களே காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஒன்று, விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையை உறுதி செய்வது. இரண்டு, விவசாய உற்பத்தியில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அதைப் பின்பற்றுமாறு விவசாயிகளைத் தூண்டுவது. இரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கடுமையாக உழைத்தார். அவருடைய தளராத முயற்சியால் 1965 ஜனவரியில் விவசாயப் பொருட்களுக்கான விலைநிர்ணயக்குழு உருவாக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அடுத்து கலப்பின விதைகளை உருவாக்குவது, இரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, எந்திரங்களைப் பயன்படுத்துவது என பல விஷயங்கள் சார்ந்து நாடெங்கும் ஒரு விழிப்புணர்வு வளர கூடுமான அளவு பிரச்சாரங்களை முடுக்கி, விவசாயிகளுக்கு ஒரு தெளிவு பிறக்க உதவினார். தற்காலிக ஏற்பாடாக அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுடைய உதவியோடு வீரிய விதைகள் உருவாக்கப்பட்டன. நெல். கோதுமை, மணிலாவின் உற்பத்தி பெருகியது. உரங்களை முறையாக பங்கீடு செய்ய இந்திய உர நிறுவனம் உரு்வாக்கப்பட்டது. உணவு தானியங்களைச் சேமித்துவைக்கவும், விநியோகங்களை ஒழுங்கு படுத்தவும் இந்திய உணவு நிறுவனம் அமைக்கப்பட்டது. நாடெங்கும் பண்டகசாலைகள் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் வரை 6 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி சுப்பிரமணியம் இட்ட அடித்தளத்தால் இருபது மில்லியனுக்கு மேல் உயர்ந்தது.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாருலால் நந்தா இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் பெரிய கிளர்ச்சி உருவாகக் காரணமானது. மத்திய அரசு பின்பற்றிய இந்திமொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போது அமைச்சர்களாக இருந்த சுப்பிரமணியமும் ஓ.வி.அளகேசனும் தம் பதவிகளைத் துறந்துவிட்டு தமிழகத்துக்குத் திரும்பினார். 

சுப்பிரமணியம் தமிழகத்தை நாடி வந்தபோதும், வாய்ப்புகள் அவரை தில்லியை நோக்கியே அழைத்துச் சென்றன. அடுத்தடுத்து இந்திராகாந்தியின் அமைச்சரவையில் முதலில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் சரண்சிங் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் வாய்ப்பு சுப்பிரமணியத்தைத் தேடி வந்தது. சில ஆண்டுகள் மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் பணியாற்றினார்.  ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கு உகந்த வகையில் ஊக்கத்துடனும் அர்ப்பணிப்புணர்வோடு உழைக்கும் ஆர்வமும் அவரிடம் இறுதிவரையில் குடியிருந்தன. இன்று அவரை மதிப்பிடும்போது, எளிமையில் காந்தியடிகளையும் அறிவியல் பார்வையில் நேருவையையும் சிக்கல்களை ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுப்பதில் இராஜாஜியையும் தனக்கு முன்னுதாரணமாகக் கொண்ட மாமனிதர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

 

 

( சி.எஸ். என அழைக்கப்படுகிற சி.சுப்பிரமணியம் பொள்ளாச்சியைச் சேர்ந்த செங்குட்டைப்பாளையம் என்னும் சிற்றூரில் 30.01.1910 அன்று பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் சிதம்பரம். தாயார் பெயர் வள்ளியம்மா. சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணிபுரிந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்காற்றினார். தமிழக மாநில அளவில் இராஜாஜியின் அமைச்சரவையிலும் காமராஜரின் அமைச்சரவையிலும் கல்வி, சட்டம், நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பங்காற்றியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லிக்குச் சென்றபோது நேரு, இந்திரா காந்தி, சரண்சிங் ஆகிய பிரதமர்களின் அமைச்சரவையில் உணவு, விவசாயம், எஃகு, சுரங்கம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிறிது காலம் கவர்னராகவும் பணியாற்றினார். ஆங்கிலத்தில் இவர் HAND OF DESTINY என்னும் தலைப்பில் எழுதிய தன்வரலாற்று நூலை பாரதிய வித்யா பவன் வெளியிட்டது. கருப்பையா என்பவரின் மொழிபெயர்ப்பில் திருப்புமுனை என்னும் தலைப்பில் என்சிபிஎச் 1994இல் வெளிவந்தது. நான் சென்ற சில நாடுகள், உலகம் சுற்றினேன், தமிழால் முடியும், INDIA OF MY DREAMS  ஆகியவை அவர் எழுதிய சில முக்கியமான நூல்கள். 07.11.2000 அன்று இயற்கையெய்தினார்.)

(ஆகஸ்டு – 2023 )