Home

Friday 23 September 2016

மீசைக்காரப்பூனை தொகுதியிலிருந்து சில பாடல்கள்

தக்காளியின் கதை


கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு
கால் முளைத்ததாம்
கூடத்திலிருந்து வாசலுக்கு
துள்ளிக் குதித்ததாம்

துள்ளிக் குதித்த தக்காளி
தூணில் இடித்ததாம்
தூணிலிருந்து சுவரை நோக்கி
உருண்டு போனதாம்


சுவரில் மோதி மரத்தில் மோதி
அலைந்து களைத்ததாம்
சுருண்டு கிடந்த நாயின் காலில்
இடித்து நின்றதாம்

திரும்பிப் பார்த்த கருப்பு நாய்க்கு
கோபம் வந்ததாம்
தக்காளியைக் கவ்விக்கொண்டு
ஓடி விட்டதாம்

கன்றுக்குட்டி

சின்னச் சின்னக் கன்றுக்குட்டி
சிவப்பு வண்ணக் கன்றுக்குட்டி
துள்ளி ஓடும் கன்றுக்குட்டி
துடுக்குக் காரக் கன்றுக்குட்டி

தோப்பில் சுற்றும் கன்றுக்குட்டி
சுறுசுறுப்பான கன்றுக்குட்டி
கோழியை விரட்டும் கன்றுக்குட்டி
கூடையைக் கவிழ்க்கும் கன்றுக்குட்டி

முட்டத் துடிக்கும் கன்றுக்குட்டி
முரண்டு பிடிக்கும் கன்றுக்குட்டி
அழைத்தால் திரும்பும் கன்றுக்குட்டி
அசைந்து நடக்கும் கன்றுக்குட்டி

தலையை அசைக்கும் கன்றுக்குட்டி
தவலையை உருட்டும் கன்றுக்குட்டி
பாலைக் குடிக்கும் கன்றுக்குட்டி
படுத்துத் தூங்கும் கன்றுக்குட்டி


மீசைக்காரப் பூனை


மீசைக்காரப் பூனை
மிரண்டு ஓடும் பூனை
உருட்டி வைத்த உரலிலே
ஒளிந்துகொள்ளும் பூனை

ஆளில்லாத நேரத்தில்
அலைந்து திரியும் பூனை
கண்ணில் பட்ட பண்டத்தை
கவ்வி ஓடும் பூனை

பாலைக் குடிக்கும் பூனை
பாயசம் நக்கும் பூனை
சட்டியை உருட்டும் பூனை
சாம்பாரைக் கவிழ்க்கும் பூனை

இடுப்பை அசைக்கும் பூனை
எகிறி ஓடும் பூனை
அருகில் நெருங்கிப் போனால்
பறந்து போகும் பூனை

எங்கள் வீட்டுப் பூனை
கெட்டிக் காரப் பூனை
வாவா என்று அழைத்தால்
மடியில் அமரும் பூனை

அப்பாவும் மகனும்

பள்ளிக் கூடம் கிளம்ப வேண்டும்
எழுந்து வாடா தம்பி

தூக்கக் கலக்கம் நீங்கவில்லை
எழுப்ப வேண்டாம் அப்பா

பல்லைத் துலக்கு, பாலைக் குடிக்கணும்
எழுந்து வாடா தம்பி

கண்ணைத் திறந்தால் நெருப்பாய் எரியுது
எழுப்ப வேண்டாம் அப்பா

குளிக்க வேண்டும், உடுக்க வேண்டும்
எழுந்து வாடா தம்பி

தலையும் வலிக்குது, உடம்பும் வலிக்குது
எழுப்ப வேண்டாம் அப்பா

தோசையும் சட்னியும் தயாராய் உள்ளன
எழுந்து வாடா தம்பி

தொண்டையில் கசப்பு, நாக்கிலும் கசப்பு
எழுப்ப வேண்டாம் அப்பா

விடுப்பென்று தகவல் அனுப்பி விட்டேன்
தூங்கி ஓய்வெடு தம்பி

காய்ச்சலும் போச்சு, களைப்பும் போச்சு
எழுந்து வந்தேன் அப்பா