Home

Wednesday 13 January 2016

சமூகத்தின் தழும்புகள் - ’கவர்ன்மென்ட் பிராமணன்’ புதிய பதிப்புக்காக எழுதிய முன்னுரை




இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வதைமுகாமில் அனுபவித்த கொடுமைகளை பன்னிரண்டு வயதுச் சிறுமியின் நாட்குறிப்புகள் வழியாகவும் வெவ்வேறு படைப்பாளிகளின் சுயசரிதைக்குறிப்புகள் வழியாகவும் அறிய நேரும்போது பதறாத நெஞ்சமே உலகில் இல்லை. வதைப்பவனும் மனிதன். வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றி கருணையில்லாமல்  எதற்காக ஒருவன் இன்னொருவனை இப்படி வதைக்கவேண்டும்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? இந்தக் கேள்விகளால் அலைக்கழிக்கப்படாத மனமே இருக்கமுடியாது. இத்தகு வதைகளுக்காவது போர் என்னும் காரணம் இருக்கிறது. எந்தப் போர்ப்பின்னணியும் இல்லாமல் காலம் காலமாக சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்லமுடியும்? வெறியா? அகங்காரமா? வெறுப்பா? கசப்பா? ஆத்திரமா? சீற்றமா? எரிச்சலா? எது இவர்களைத் தூண்டுகிறது? எது இவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது? ஒரு பிறப்பையே கேவலம் என்று ஏளனம் செய்யும் உரிமை மேல்சாதியினருக்கு எப்படி வந்தது? சாதி என்னும் அடையாளத்துக்கு அந்த அளவுக்கு சக்தி எப்படி வந்தது? அதை வழங்கியது யார்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்பவர்களால்மட்டுமே மானுட வரலாற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.  

மேல்சாதியினர் செய்யும் ஒவ்வொரு கொடுமையும் சமூகத்தின் உடலில் தழும்பாக நின்று நிலைத்துவிடுகின்றது. பல நூற்றாண்டுகளாக இவர்கள் நிகழ்த்திய கொடுமைகளின் விளைவாக சமூகத்தின் உடல்முழுக்க காய்ப்பேறிய தழும்புகள் மட்டுமே உள்ளன. ஒரே ஒரு அங்குலம் கூட அதன் உடல்பகுதி வெளியே தெரியாதபடி எங்கெங்கும் தழும்புகள்.
அரவிந்த மாளகத்தியின் எழுத்துகள் வழியாக இத்தகு தழும்புகளையே நாம் காண்கிறோம். நம் மூத்த தலைமுறையினர் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து நமக்குள் ஆழ்ந்த வருத்தமும் கூச்சமும் பிறக்கின்றன. நம்மை தலைகுனிய வைத்துவிடுகின்றன. எழுத்தும் படிப்பும் கைவரப் பெற்ற ஒருவரின் குறிப்புகளே இந்த அளவுக்கு நமக்குத் தலைக்குனிவையும் நாணத்தையும் உண்டாக்கவல்லன எனில், படிப்பும் எழுத்தும் அறியாத பாமரமக்கள் வாய்திறந்து பேசத் தொடங்கினால் நம் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
இந்தத் தன்வரலாற்று நூலில் ஒரு நிகழ்ச்சி. ஒரு சிறுவனுக்கு பண்டமாற்றாக ஒரு கடையில் லட்டு உருண்டை தரப்படுகின்றது. அச்சிறுவன் கடையின் படிகளில் ஏறி நின்று மற்றவர்களைப்போல கடையில் இருக்கும் பாட்டிலைத் தொட்டு சுட்டிக்காட்டிக் கேட்கமுடியாது. படிகளை மிதிக்காமல் தள்ளி நின்றுதான் கேட்கவேண்டும். அவன் கையில் நேரிடையாகவும் அந்த இனிப்பு தரப்படுவதில்லை. கையில் விழும்படி வீசப்படுகிறது. அவ்வளவுதான். அந்த இனிப்பு அவன் கையில் விழுந்தாலும் சரி, மண்ணில் விழுந்தாலும் சரி. ஊதிவிட்டு தின்றுகொண்டே செல்வேன் என்று நகைச்சுவை உணர்வுடன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் அரவிந்த மாளகத்தி. ஆனால் படிக்க நேரும் எந்த வாசகனாலும் மறுகணமே அந்த நகைச்சுவையின் அடியில் தேங்கியிருக்கும் வேதனையையும் கசப்பையும் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். இந்தக் கசப்பு வாசிப்பவனின் நெஞ்சில் படரப்படர ஒருவித தயக்கமும் தடுமாற்றமும் உருவாகும். அரவிந்த மாளகத்தியின் தன்வரலாற்றில் இப்படி பல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. படிக்க நேரும் ஒவ்வொரு காட்சியின் போதும் பெருமூச்சும் தடுமாற்றமும் கூச்சமும் நம்மை ஆக்கிரமிக்கின்றன.
இன்றும் நிலைமை மாறிவிடவில்லை. சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலைக்கூட ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் தொடர்ந்து நடத்தமுடியாத நிலைதான் நிரந்தரமாக இருக்கிறது. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பவர்களின் வாயில் மலம் திணிப்பவர்களும், வளைத்துக்கொண்ட நிலத்தைத் திருப்பிக் கேட்பவர்களை சாணிப்பால் குடிக்கவைப்பவர்களும்கூட இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் உடலைக் கீறிக்கீறி மென்மேலும் தழும்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தத் தன்வரலாற்று நூல் மீண்டும் வெளிவருகிறது. மனசாட்சியில்லாத சமூகத்தின்மீது எழும் சீற்றம் வலுப்பெறும் அடையாளமாகவே நான் இதைப் புரிந்துகொள்கிறேன். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் பிரஜாவாணி என்னும் கன்னட நாளிதழில் இந்தப் புத்தகத்தைப்பற்றிய ஒரு குறிப்பைப் படித்து மன எழுச்சியுற்றேன். அதே வாரத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துமுடித்தேன். சாதிய நடைமுறைகள் பள்ளிக்கூடத்திலும் பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும் இருந்த விதத்தை ஒரு சிறுவனின் பார்வைக்கோணத்தில் அரவிந்த மாளகத்தி விவரித்திருக்கும் விதம் ஒரு நாவலைப் படிப்பதுபோல இருந்தது. அந்த நூலுக்கான அறிமுகத்தை ஒன்றிரண்டு பகுதிகளின் மொழிபெயர்ப்போடு ஒரு அகட்டுரையாக எழுதி  வெளியிடவேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டமாக முதலில் இருந்தது. ஆனால் விரைவிலேயே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். முழுப் புத்தகத்தையும் மொழிபெயர்க்கும் விருப்பம் உருவானது. அனுமதிக்காக அன்றே அரவிந்த மாளகத்திக்கு மடல் எழுதினேன். அவரும் உடனடியாக எனக்கு அனுமதி கொடுத்து பதில் கடிதம் எழுதியிருந்தார். அந்த வேகம், எனக்குள் இருந்த விருப்பத்தை இருமடங்காக்கி, குறுகிய காலத்தில் முழுநூலையும் மொழிபெயர்த்து முடித்தேன். ஒரு வாசகராக, புத்தகத்தின் கையெழுத்துப்பிரதியைப் படித்த நண்பர் ரவிக்குமார் பகிர்ந்துகொண்ட சொற்கள் என்னை மிகவும் ஊக்கம் கொள்ளவைத்தன. பிறகுவிடியல்வழியாக புத்தகத்தை வெளியிட அவரே எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். நண்பர் ரவிக்குமார், சிவா இருவரையும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். புத்தகத்தை மொழிபெயர்க்க அன்புடன் அனுமதியளித்த அரவிந்த மாளகத்தியும் நன்றிக்குரியவர். என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு உற்ற துணையாகவும் ஊக்கசக்தியாகவும் விளங்குபவர் என் அன்பு மனைவி அமுதா. அவரையும் இக்கணத்தில் அன்புடன் நினைத்துக்கொள்கிறேன். இந்தப் புதிய பதிப்புக்கென சிறப்பான முன்னுரையொன்றை எழுதிக் கொடுத்த நாவலாசிரியரும் கன்னடப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரஹமத் தரிகெரெ அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும். இந்தப் புத்தகத்தை மிகவும் சிறப்பான முறையில் வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் என் நன்றி
 பாவண்ணன்