Home

Monday, 27 June 2016

குழந்தையும் தெய்வமும் - (கட்டுரை)


     இந்திரா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்டு சாந்தி சாகர் உணவு விடுதியைக் கடந்து காவேரி பாடசாலையைநோக்கி அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி சீருடை அணிந்த பத்துப் பதினைந்து பிள்ளைகளை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு தினமும் வருவார்.  ரயில் விளையாட்டுபோல ஒரு சிறுவனின் இடுப்புப்பட்டையை அல்லது தோளை இன்னொரு சிறுவன் அல்லது சிறுமி பிடித்தபடி செல்வார்கள். சில சிறுவர்கள் குதித்துக்குதித்து உண்மையிலேயே சிக்குபுக்கு சிக்குபுக்கு என்று சொல்வது கேட்கும். மானசிகமாக அவர்களே ஒரு ரயிலாக மாறி அந்த சாலையைக் கடப்பார்கள்.  போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் காவலர் அந்த வரிசையைப் பார்த்ததுமே வாகனங்களை நிறுத்தி உதவி செய்வார்.

Saturday, 18 June 2016

பழங்களைத் தேடி - (கட்டுரை)


      புளியம்பழம், கொய்யாப்பழம், நாவற்பழத்துக்கெல்லாம் ஒரு பருவம் இருப்பதைப்போல வேப்பம்பழத்துக்கும் ஒரு காலம் உண்டு. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கும் காலம் என்பது வேப்பம்பழங்கள் சேகரிக்கும் காலம். காற்று வேகமாக வீசும்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள வேப்பமரங்களிலிருந்து பழங்களின் மணம் எங்கள் வீடுவரைக்கும் வரும். முதலில் நுகரும் கணத்தில் தித்திப்பாகப் படரத் தொடங்கும் மணம் நேரம் செல்லச்செல்ல கசப்பான குமட்டும் மணமாக மாறும். ஆரம்பத்தில் மட்டும்தான் அப்படிக் குமட்டும். பழகப்பழக அதை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும்.

Saturday, 11 June 2016

ஒட்டகம் கேட்ட இசை - (கட்டுரை)



     அரிசி, புளி, உப்பு, காய்கறி வாங்கிவர அம்மா கடைக்கு அனுப்பும்போது நடைஅலுப்பை மறப்பதற்காக, ஒரு மனப்பாடச் செய்யுளைப்போல "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.." பாட்டை உற்சாகமுடன் பாடிக்கொண்டே ஓடுவேன். அப்போது என் வயது பத்திருக்கலாம். ஏரியில் குளித்துவிட்டு, துவைத்த வேட்டியை உதறி முதுகுப்பக்கமாக இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்து உலர்த்தியபடி "ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே.." என்று பாடியபடி அப்பா நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூடவே நடந்துவந்த காலம் அது. பின்கட்டில் துணிதுவைக்கும்போதும் புளிஉரிக்கும்போதும் மெல்லிய குரலில் "பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ.." என்று அம்மா பாடுவதையும் கேட்டிருக்கிறேன். ஞாயிறு மதியநேரத்திலும் புதன்கிழமை இரவிலும் ஒளிபரப்பப்படும் நேயர் விருப்பப்பாடல்களை வானொலியில் நாங்கள் எல்லாருமே கேட்போம். பாடல் என்பதை வரிகள் என்பதாகப் புரிந்துகொண்ட காலம் அது. வரிகளில் தொனிக்கும் மகிழ்ச்சியும் துயரமும் கசப்பும் மாறிமாறி மனத்திலும் சிறிதுநேரம் தேங்கிநின்றுவிட்டு, மறைந்துபோகும். மணலில் ஊற்றப்பட்ட தண்ணீர்போல. பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முழுக்க இப்படித்தான். பெரிதும் மாற்றமில்லை.

Wednesday, 1 June 2016

கே.ஜே.அசோக்குமாரின் கதையுலகம்


  
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.