Home

Sunday 9 October 2016

வள்ளல் - (சிறுகதை)


“இன்னைக்காவது எம்ஜியாரு வருவாராடா?” என்று கிண்டலான குரலில் பன்னீர் கேட்டதுமே தங்கமணிக்குக் கோபம் வந்தது. அவனும் ரங்கசாமியும் அப்போது தண்டவாளத்துக்கு இரண்டு பக்கமும் ஊஞ்சல்போல தொங்கிக்கொண்டிருந்த லெவல் கிராஸிங் தடுப்புச்சங்கிலிகளில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். பன்னீரின் வார்த்தைகளை கொஞ்சம்கூட கவனிக்காதவன்போல சின்னச்சின்ன கற்களாக தேடியெடுத்து  தண்டவாளத்தின்மீது வைப்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தான் தங்கமணி. “உங்கிட்டதான்டா  கேக்கறன் செவுடா? காதுல என்ன பஞ்சியா வச்சி அடச்சிருக்குது?” என்று மறுபடியும் கேட்டுவிட்டுச் சிரித்தான் பன்னீர்.

அதைக் கேட்டதுமே தங்கமணிக்குக் கோபம் வந்தது. “கேட்டுகேட்டு கடுப்பேத்தாதடா சொல்லிட்டன். வெறி வந்துட்டா நான் பொல்லாத ஆளாய்டுவன், தெரியுமில்ல?” விரலை நீட்டி எச்சரிக்கும் குரலில் சொன்னான்.
அதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அவனைப்போலவே விரலை நீட்டி, அவனைப்போலவே பேசிவிட்டு அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். மேலும் தொடர்ந்து   “அட போடா குள்ள வாண்டு. நீ என்ன பெரிய ராவணனா? உன்ன பாத்து ஊரே நடுங்குதா?” என்று சீண்டினான்.
அடுத்த கணமே கையிலிருந்த கற்களோடு அவனை நோக்கி ஓடினான் தங்கமணி. சங்கிலியிலிருந்து அவசரமாக குதித்து கீழே இறங்கிய ரங்கசாமி ஓடிவந்து தங்கமணியைத் தடுத்து நிறுத்தினான். “என்னடா இதுக்கு போயி கோவிச்சிக்கற? மாமன் மச்சானுங்க நடுவுல இதெல்லாம் ஒரு தப்பாடா?” என்றபடி அவன் தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தான்.
“ஒருதரம் கேட்டா பரவாயில்ல. ரெண்டு தரம் கேட்டா பரவாயில்லடா. இதோட நூறுதரம் கேட்டுட்டான், தெரிமா? என்ன பாத்தா அய்யாருக்கு கேணப்பையன்மாரி தோணுதுபலக்குது”
கையில் எடுத்த கற்களை ஒவ்வொன்றாக தொலைவிலிருந்த வேலமரத்தை நோக்கி கெட்ட வசையோடு வேகமாக வீசினான். அவன் எரிச்சல் சற்றே தணிந்ததுபோல இருந்தது. அவனுக்கும் பன்னீருக்கும் இடையிலான பிரச்சினைகள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருந்தன. எல்லாக் கட்டங்களிலும் தங்கமணியை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருந்தான்  பன்னீர். எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் “ஒனக்கென்னடா தெரியும், பேசாம இரு” என்று ஒரே வார்த்தையில் அடக்கத் துடிப்பான். “இங்க பாரு. நீ படிச்சிகினு லீவு நாள்ல மாடு மேய்க்க வர ஆளு. படிப்பும் வேணாம் கிடிப்பும் வேணாம்னு எல்லாத்தயும் தூக்கி கெடாசிட்டு மாடு மேய்க்கற ஆளு நானு. அத ஞாபகம் வச்சிக்கோ” என்று விரலை நீட்டி மீண்டும்மீண்டும் சொல்வதில் அவனுக்கு என்னமோ பெரிய பெருமை.     அவனை நினைத்தால் கோபமாகவும் இருந்தது. பாவமாகவும் இருந்தது. “இங்க உக்காந்திருக்கறதுல ஒரு அர்த்தமும் இல்லடா. எம்ஜியாரும் வரமாட்டாரு. சிவாஜியும் வரமாட்டாரு. சினிமாகாரங்க நம்மள நல்லா ஏமாத்திட்டு போயிருக்காங்க”  என்று மெதுவாக ரங்கசாமியிடம் சொன்னான்.
வானத்தில் ஒரு கொக்குக்கூட்டம் பறந்துபோனது. வெட்டவெளி மேட்டில் மாடுகள் எங்கெங்கோ புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. தன்னிச்சையாக அவன் கண்கள் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன. “வாடா போவலாம். எங்கயாச்சிம் பள்ளத்துல மாடுங்க எறங்கிடபோவுது. அப்பறம் அதுங்கள மேல ஏத்தறதுக்குள்ள நம்ம உயிருதான் போவும்” என்றான்.
பன்னீர் சங்கிலியிலிருந்து இறங்கி தங்கமணிக்குப் பக்கத்தில் வந்தான். அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தான். கால்சட்டைப் பையிலிருந்து கர்ச்சிப்பை எடுத்து சுழற்றி மடித்து, கழுத்தைச் சுற்றி கட்டிக்கொண்டான். அவனுக்கு உருண்ட முகம். உதடுகளுக்குமேல் முளைக்கத் தொடங்கியிருந்த பூனைமுடியை அழுத்தியழுத்தித் தடவினான். பிறகு அவனைப் பார்த்து “நீ எம்ஜியாரு ஆளுதான? கோவம் வந்தா சிவாஜிமாரி வசனம் பேசறியே, அது எப்பிடிடா?” என்று கேட்டான். அதைக் கேட்டதும் தங்கமணிக்கு சிரிப்பு வந்தது.
“வெக்கம் கெட்டவனே, உனக்கு சூடுசொரணயே கெடயாதா? உன்ன என்ன செய்றன் பாரு” என்று முட்டித் தள்ளுவதுபோல தலையைக் குனிந்துகொண்டு அவனைநோக்கி வேகமாக ஓடினான். ஒரே கணத்தில் விலகி தங்கமணியைப் பிடித்து நகரமுடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுவிட்டான் பன்னீர். “உடுடா உடுடா. வலிக்குது” என்று எம்பிய பிறகுதான் பிடியைத் தளர்த்தினான். 
எல்லோரும் திரும்பி நடந்தார்கள்.
புல்வெளிக்கு மறுபக்கம் மேற்கில் பெரிய காடு. அதைத் தாண்டி பச்சைப்பசேலென மலை அடுக்குகள். அருவி. பள்ளத்தாக்கு. அங்கே படம் பிடிப்பதற்காக அபூர்வமாக சிலர் வந்துபோனதுண்டு. அவர்களுடைய வாகனங்கள் ஆளில்லாத லெவல் க்ராஸிங்கைத் தாண்டுவதற்காக நிற்கும்போது, அக்கம்பக்கத்தில் காத்திருப்பவர்களைப் பார்த்து கையசைப்பார்கள். சிரிப்பார்கள். காரைவிட்டு இறங்கிவந்து சிலர் பணமும் தருவார்கள். 
வேலமரத்தடியில் சாக்கு விரித்து பலகாரக்கூடையோடு உட்கார்ந்திருந்தாள் மீனாட்சி ஆயா. துணிபோட்டு மூடிய கூடையிலிருந்த மள்ளாட்டை சட்னியின் மணம் வீசியது. ஓரங்களில் வாழையிலை நறுக்குகள் செருகப்பட்டிருந்தன.
அவர்களைப் பார்த்ததும் ஆவலோடு “எம்ஜியார பாத்திங்களாடா?” என்று கேட்டாள்.
“நீ ஒன்னு ஆயா. எவனோ கத உட்டுட்டு போயிருக்கானுங்க. அத நம்பி அங்க போயி நின்னு நாங்கதாம் முட்டாளாயிட்டம்…….” சலிப்புடன் பதில் சொன்னான் ரங்கசாமி.
“அருவி பக்கம் படம் புடிக்கறாங்கன்னு பேசிகிட்டாங்க……”
“அது யாரு நடிக்கற படமோ. யாருக்கு தெரியும்? போற போக்குல எவனோ எம்ஜியாரு படம்னு இங்க சொல்லிட்டு போயிட்டானுங்க. அதான் வென.”
ரங்கசாமி பையிலிருந்து பத்து பைசாவை எடுத்து ஆயாவின் பக்கம் நீட்டியபடி “ஆளுக்கு ஒரு அரிசி உண்ட குடு ஆயா” என்றான்.
“இன்னும் அஞ்சி பைசா?”
“நாளைக்கி குடுக்கறன் ஆயா.”
உண்டையின் ஒருபக்கத்தில் பல்லால் கடித்து நாக்கில் வைத்து குதப்பியதும் அதன் இனிப்பு வாய்முழுக்கப் பரவியது. பிறகு, தொண்டைக்குழியில் தேங்கி உடல்முழுக்க படர்ந்தது.
ஒரு வருடத்துக்கு முன்னால் பொங்கல் சமயத்தில் எம்.ஜி.ஆர். மன்றத்தில் எல்லோருக்கும் காலண்டர் வழங்கினார்கள். அந்த விழாவுக்காக, மன்றத்தின் வாசலைப் பெருக்கி, குளத்திலிருந்து பத்து பதினைந்து குடங்கள் தண்ணீர் எடுத்துச் சென்று தெளித்து சுத்தமாக வைத்திருந்தான் தங்கமணி. அதனால் அந்தக் கூட்டத்தில் அவனுக்கும் ஒரு காலண்டர் கிடைத்தது. அன்று இரவு தன் வீட்டுச் சுவரில் அதை மாட்டிவைத்தான். செக்கச் செவேலென தாமரை இதழ்போன்ற முகம். எந்தப் பக்கம் நின்றாலும் தன்னையே திரும்பிப் பார்ப்பதுபோன்ற கண்கள். புன்சிரிப்பு ததும்பி நிற்கும் உதடுகள்.
சூளையில் செங்கல்லுக்காக மண்ணைக் குழைத்துக்கொண்டிருந்த ஆறேழு பேர் கூட்டமாக வந்து ஆயாவிடம் இட்லி வாங்கிக்கொண்டு சென்றார்கள்.
“நான் அந்த காலத்துல பாலையாவ பாத்திருக்கேன் தெரியுமாடா பசங்களா?” என்று வெற்றிலைபாக்கு பையை எடுத்து பிரித்தபடி கேட்டாள் ஆயா. தோல் சுருங்கிய முகத்தில் சில கணங்கள் பரவசம் படர்ந்து மறைந்தது. சுடர் எரிவதுபோல அவள் கண்களின் வெளிச்சம் மின்னியது.
“சும்மா கத உடாத ஆயா” என்று சொல்லிவிட்டு உடனே சிரித்தான் பன்னீர். அவனை கோபத்தில் முறைத்தான் தங்கமணி. ”துடுக்குத்தனமா ஏதாச்சிம் ஒளறாதடா. ஆயா சொல்றத மொதல்ல காது குடுத்து கேளுடா” என்றான் அவன். அதை சற்றும் பொருட்படுத்தாதவனாக “மொதல்ல பாலையா யாருன்னு நீ சொல்லு ஆயா. நீ பாத்த கத, பேசன கதயலாம் அப்பறமா வச்சிக்கலாம்” என்று அலட்சியமாகச் சொன்னான்.
”நான் சொல்றதுல ஒனக்கு நம்பிக்க இல்லன்னா, நேரா போயி ஒங்கம்மா கிட்ட கேளுடா. ஒங்கப்பன் கிட்ட கூட கேட்டுப் பாரு. அதுவும் பத்தாதுன்னா நீ மாடு மேய்க்கற ஊட்டு படயாச்சிகிட்ட கூட கேட்டுப் பாரு. அவுங்க சொல்வாங்க. பாலையாவ நான் பாத்தனா இல்லயான்னு……” கொஞ்சம்கூட கோபமே இல்லாமல் பொறுமையாக சொன்னாள் ஆயா. வெற்றிலையின் சுருக்கத்தை நீவி பாக்குத்துணுக்குகளையும் புகையிலைத் துணுக்கையும் வைத்து மடித்து வாய்க்குள் அதக்கிக்கொண்டாள்.
“அவுங்கள இவுங்கள கேக்கற கதைலாம் எதுக்கு ஆயா?. பாலையா யாருன்னு மொதல்ல ஒன் வாயால நீயே சொல்லு. அது போதும்” என்று எழுந்து நின்று மறுபடியும் சிரித்தான் பன்னீர். அந்த நேரத்தில் அவனை அப்படியே கீழே தள்ளி காலால் மிதிக்கவேண்டும்போல தங்கமணிக்குக் கோபம் வந்தது. பற்களைக் கடித்தபடி அவனைப் பார்த்து முறைத்தான்.
“உண்ட கட வச்சி பொழைக்கறவதான, இவ எந்த காலத்துல சினிமாவ பாத்திருக்கப் போறான்னு நெனச்சிட்ட, இல்ல? அந்த காலத்துல புளியாந்தோப்பு பக்கத்துல நடராஜ மொதலியாரு கொட்டாய கட்டி இந்த ஊருக்கு சினிமாவ கொண்டாந்த நாள்லியே சினிமா பாத்தவ நானு, தெரிமா?  தாத்தா செத்ததுக்கப்பறம் நானாவேதான் எல்லாத்தயும் நிறுத்திட்டன்” நிறுத்திநிறுத்தி நிதானமாகப் பேச ஆரம்பித்தாள் ஆயா.
”அந்த கதைலாம் எதுக்கு ஆயா? பாலையா யாருன்னு சொல்லு. அது போதும்” என்று கையை ஆட்டி சிரித்தான் பன்னீர். தனக்குள் பொங்கிய எரிச்சலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் தங்கமணி.
“ராஜகுமாரின்னு அந்த காலத்துல ஒரு படம் வந்திச்சி. அதுல எம்ஜியாரு கூட கத்திசண்ட போட்டவரு பாலையா. ஆர்யமாலாவுல பி.யு.சின்னப்பாவுக்கு எதிரியா நடிச்சவரு பாலையா. அந்த பாலையாவே வேற. காலத்துக்கு தகுந்தபடி சிரிப்பு நடிகரா நடிச்சி எல்லாரயும் குலுங்ககுலுங்க சிரிக்கவச்ச பாலையாவே வேற………” தன் நினைவுகளிலிருந்து பாலையாவின் விதவிதமான தோற்றத்தை எடுத்தெடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தாள் ஆயா.  அதை வாய்பிளந்தபடி ஆச்சரியத்தோடு கேட்ட பன்னீர் சில கணங்கள் உறைந்துவிட்டான். பிறகு மெதுவாக ஆயாவின் அருகில் நெருங்கிவந்து ”போதும் ஆயா. போதும் ஆயா. தப்பா கேட்டுட்டன். மன்னிச்சிக்க. உண்மையிலயே நீ பெரிய ஆளுதான்” என்று கைகுவித்து கும்பிட்டு அவள் பேச்சை நிறுத்தினான். அவனைப் பார்த்து ’கொன்னுடுவன் கொன்னு’ என்பதுபோல விரலைக் காட்டி அசைத்தபடி வெற்றிலைக் கறைபடிந்த பற்கள் தெரிய சிரித்தாள் ஆயா.
கிழக்குப் பக்கமாக மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்ற இரண்டு பேர் “ஆளுக்கு ரெண்டு தோச குடு ஆயா” என்று கேட்டு நின்றதும் ஆயாவின் கவனம் திரும்பியது. வேகமாக கூடையிலிருந்து இலையை எடுத்து சுருக்கம் நீக்கி, தோசைகளை வைத்து நீட்டினாள். சட்னி சிந்திவிடாமல் இலையை கையில் வாங்கிக்கொண்டு மரத்தடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள் அவர்கள். சைக்கிளில் வந்து இறங்கிய ஒருவன் தூக்குவாளியில் இட்லியும் சட்னியும் வாங்கிக்கொண்டு சென்றான்.
“பாலையாவ எங்க ஆயா பாத்த?” என்று கேட்டு மறுபடியும் பேச்சைத் தொடங்கினான் ரங்கசாமி.
“எம்ஜியார பாக்கறதுக்கு நீங்க எந்த எடத்துல நின்னிங்களோ, அந்த எடத்துலதான் பாலையாவ நான் பாத்தன். அப்பலாம் அந்த க்ராஸிங்க் பக்கத்துல பெரிசுபெரிசா நாலஞ்சி நாவமரங்க இருந்திச்சி. நல்லா நெழலா இருக்கும். அங்கதான் கட போடுவன். ஒரு பெரிய புயலடிச்சி அந்த மரம்லாம் உழுந்துட்டுது. அதுக்கப்புறம்தான் இந்த பக்கம் வந்துட்டன்……..”
“பாலையா கதய சொல்லுன்னா புயலடிச்ச கதய சொல்றியே ஆயா” பொறுமையில்லாமல் துடித்தான் பன்னீர்.
“சொல்லிகினேதான வரன். எதுக்குடா அவசரப்படற? சரியான முந்திரிக்கொட்டயா இருக்கியே நீ. ஒரு நாளு பலகார கூடய வச்சிகினு ஒக்காந்தினிருந்த சமயத்துல சர்புர்னு ஏழெட்டு காருங்க வந்து க்ராஸிங் பக்கத்துல நின்னுட்டுது. ஒருத்தன் என்ன பாத்து ரயிலு எப்ப வரும்னு கேட்டான். வண்டி ஏற வந்த ஆளுங்கன்னு நெனச்சிகினு, ஸ்டேஷனு அந்த பக்கம் இருக்குங்க சாமின்னு எழுந்து நின்னு கைய காட்டனன். அப்பறம்தான் அவன் கிராஸிங் எப்ப தெறப்பாங்கன்னு கேட்டான். தண்டவாளத்த தாண்டி போவ கேக்கறான்னு எனக்கும் அப்பதான் புரிஞ்சிது. நேரா போயி சங்கிலிக்கு போட்டிருந்த நடுகொக்கிய எடுத்து பிரிச்சி வழிய உட்டன். அது பூட்டியிருக்குதுன்னு அவுங்க நெனச்சிட்டாங்க போல. சிரிச்சிகினே கைய காட்டிட்டு வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க. சர்சர்னு எல்லா வண்டியும் தாண்டி போனதும் மறுபடியும் சங்கிலிய இழுத்து நடுகொக்கிய மாட்டி உட்டுட்டு திரும்பனன். கடசியா போன வண்டியிலேருந்து ஒருத்தர் எறங்கி அம்மா, கொஞ்சம் நில்லும்மான்னு சொல்லிகினே என் பக்கமா வந்தாரு. பாத்தா பாலையா நிக்கறாரு. என்னால நம்பவே முடியலை. ஐயா கும்புடறன் சாமி. நீங்கன்னு எனக்கு தெரியாம போய்ட்டுதே சாமின்னு என்னென்னமோ ஒளறனன். இங்க என்னம்மா பண்றீங்கன்னு கேட்டாரு அவரு. பலகாரம் வித்து பொழைக்கறன் சாமின்னு கூடைய காட்டனன். புது படம் ஒன்னு, அந்த அருவி பக்கமா எடுக்க போறாங்க. அங்கதான் நாங்க போறம்னு சொன்னாரு அவரு. எங்க ஊரு கொட்டாய்ல ஒங்க படங்கள நெறயா பாத்திருக்கேன் சாமின்னு சிரிச்சிகினே சொன்னன். அவரும் சிரிச்சிகிட்டாரு. அப்பறமா பையில கைய உட்டு ஒரு நூறு ரூபா நோட்ட எடுத்து இந்தாங்கம்மா வச்சிக்குங்கன்னு என் கைய புடிச்சி வச்சிட்டு சிரிச்சிகினே போயிட்டாரு….”
“நூறு ரூபாதான?”
“டேய். அந்த காலத்துல நூறு ரூபான்னா எவ்ளோ மதிப்பு தெரிமாடா? எங்க குடிசைய பிரிச்சிட்டு அந்த பணத்துலதான் அந்த காலத்துல ஊட்டயே மாத்தி கட்டனன். பெரிய மவராசன். இந்த ஊருக்கே தெரியும் நான் ஊடு கட்டன கத.”
”நீ பெரிய தப்பு பண்ணிட்டியே ஆயா” என்று குறுக்கில் புகுந்து சொன்னான் ரங்கசாமி.
“என்னடா தப்பு?” ஆயாவின் புருவங்கள் உயர்ந்தன.
“அந்தப் பணத்துக்கு அவ்ளோ மதிப்புன்னா, பேசாம நீ ஒரு கன்னுகுட்டியோ, கறவ மாடோ பாத்து வாங்கியிருக்கணும்.  ஒரு பக்கம் பால் கெடச்சிகினே இருக்கும். இன்னொரு பக்கம் மாடு, கன்னுகுட்டி, மாடு கன்னுகுட்டின்னு பெருத்துகினே போவும். இன்னிய தேதிக்கு ஒரு மாட்டு பண்ணயே ஒங்கிட்ட இருந்திருக்கும். நாங்களும் ரெட்டியாரு ஊட்டு மாடுங்க, படயாச்சி ஊட்டு மாடுங்களோட ஒன் ஊட்டு மாடுங்களயும் ஓட்டியாந்து மேய்ச்சிட்டிருப்பம். கெடைக்கற லாபத்துல இந்த ஒரு ஊடு இல்ல, இதுமாரி நாலு ஊடுங்க கட்டியிருக்கலாம்…….” ரங்கசாமி சொல்லச்சொல்ல ஆயாவுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. வெற்றிலைச்சாறு கடைவாயின் ஓரம் வழியவழிய அடக்க முடியாமல் சிரித்தாள். பிறகு எழுந்து சென்று வெற்றிலைச்சாறை துப்பிவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். “ரொம்ப அருமயா யோசன சொல்றியே, ஒன் அளவுக்கு எனக்கு அந்த காலத்துல புத்தி இல்லாம போயிடுச்சே” என்று மறுபடியும் சிரித்தாள்.
வெயில் சுட்டெரித்தது. மேட்டைத் தாண்டி வெகுதொலைவில் பனைமரங்கள் தெரிந்தன. ஒரு பெரிய கழுகு அவற்றின்மீது வட்டமடித்து பறந்தபடி இருந்தது. எங்கோ ஒரு மாட்டின் அழைப்புக்குரல் கேட்டது.
மூன்று பேரும் ஒரே நேரத்தில் திரும்பினார்கள். “மாடுங்க பள்ளத்து பக்கமா போவுது டோய்” என்று சத்தம் கொடுத்தபடி எழுந்த ரங்கசாமி அவற்றை நோக்கி ஓடத் தொடங்கினான். அடுத்த கணமே பன்னீரும் தங்கமணியும் அவனுக்குப் பின்னால் ஓடினார்கள்.
சேற்றில் இறங்கிவிட்டால் மாடுகளை மேட்டில் ஏற்றுவது ரொம்ப கஷ்டம். பத்து பேர் பிடித்து இழுத்தாலும் நகர்த்த முடியாது. அதுவாகவே உடன்பட்டு ஏறி வந்தால்தான் உண்டு.  பொசுக்கும் வெயிலில் மாடுகள்  இதமான சேற்றை விரும்பின. மாட்டின்மீது சேற்றுக்கறை படிந்திருப்பதைப் பார்த்தாலேயே ரெட்டியாருக்கு கோபம் வந்துவிடும். ஓடும்போது ஏதேதோ நினைவுகள் அலைமோதிக் குழப்பின. ரெட்டியார் பயன்படுத்தும் விதவிதமான வசைகள் காதுக்கு மிக அருகில் ஒலிப்பதுபோலத் தோன்றியது.
ஓடும்போதே மூன்று பேரும் மூன்று திசைகளில் பிரிந்து ஓடியதால் மாடுகளை எளிதாக சுற்றி வளைத்துக்கொள்ள முடிந்தது. அதட்டி அதட்டி வேறு பக்கமாக ஓட்டி வந்தார்கள்.  சேற்றின் திசையிலிருந்து திரும்ப மறுத்த மாடுகளிடம் செல்லம் கொஞ்சி, கழுத்தைத் தடவி, வருடிக் கொடுத்து மெதுவாக திருப்பி அழைத்துவந்து வேறொரு பக்கத்தில் மேயவிட்டார்கள். கூட்டத்தில் அடங்காப்பிடாரியான ஒரு மாடு இருந்தது. உடல்முழுதும் வெள்ளைவட்டங்களும் கருப்புவட்டங்களும் மாறிமாறி நிறைந்திருந்தன. அரிவாள்மாதிரி வளைந்த சின்ன கொம்புகள். மெலிந்த உடலென்றாலும் உறுதியான உடல்வாகு. அது ஒருபக்கமாக அடங்கி மேய்வதைப் பார்த்தால் போதும், மற்ற மாடுகளும் அதைச் சுற்றி ஒழுங்காக மேய ஆரம்பித்துவிடும். கவனம் மாறி எல்லா மாடுகளும் புல்லைத் தின்னத் தொடங்கிவிட்டதை உறுதி செய்துகொண்ட பிறகு மெதுவாக ஆயாவிடம் திரும்பினார்கள்.
ஆயாவைச் சுற்றி ஆறேழு தயிர்க்காரப் பெண்களும் தட்டுக்கொடி அறுத்து சுமந்துவந்த பெண்களும் உட்கார்ந்து தோசை தின்றுகொண்டிருந்தார்கள். நெற்றியில் பெரிய வட்டமாக குங்குமம் வைத்துக்கொண்டிருந்த ஒருத்தி “இன்னம் கொஞ்சம் சாம்பார ஊத்து ஆயா” என்று இலையை நீட்டினாள். “எவ்ளோ ஊத்தனாலும் வெடியாதுடி ஒனக்கு” என்று சிரித்தபடி வாளியிலிருந்து சாம்பாரை கரண்டியால் எடுத்து ஊற்றினாள் ஆயா. சாப்பிட்டு முடித்து இலையை வீசிவிட்டு கைகழுவிக்கொண்டு திரும்பி சாப்பாட்டுக்கணக்கைக் கேட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
கொண்டையில் செம்பருத்திப்பூவைச் செருகிக்கொண்டிருந்த ஒருத்தி ரங்கசாமியைப் பார்த்து “எந்தத் தெரு பசங்கடா நீங்க?” என்று கேட்டாள். அவள் கண்களிலிருந்து பார்வையை வேகமாக விலக்கிய ரங்கசாமி ”ம். மோட்டுத்தெருவு” என்று பதில் சொன்னான். சரி என்பது போல தலையசைத்துக்கொண்டு போனாள் அவள். அவள் சிறிது தூரம் செல்வதுவரை காத்திருந்துவிட்டு “எதுக்குடா அந்த அம்மாகிட்ட பொய் சொன்ன?” என்று கேட்டான் தங்கமணி. அவன் தங்கமணியின் பக்கமாகத் திரும்பி சில கணங்கள் முறைத்துப் பார்த்தான். பதில் எதுவும் சொல்லவில்லை.
“எம்ஜியார பாத்தா என்னாடா கேப்பீங்க பசங்களா?” என்றொரு கேள்வியைக் கேட்டுவிட்டு சிரித்தாள் ஆயா.
“சும்மா இரு ஆயா. ஆளே வரலைன்னு நாங்களே வெறுப்புல கெடக்கறோம். நீ வேற, இல்லாததயும் பொல்லாததயும் கேட்டு  வெறுப்பேத்தறியே” என்றான் ரங்கசாமி.
“வராரு, வரலை. அதெல்லாம் அப்பறம் வச்சிக்கலாம். அவர பாத்தா என்ன கேப்பீங்க, சும்மா சொல்லுங்கடா.” என்று மீண்டும் சிரித்தாள் ஆயா.
“அதிகமாலாம் ஆசப்படக்கூடாது ஆயா. அவரா பாத்து என்ன குடுக்கறாரோ அத வாங்கிகினு போய்ட்டே இருக்கணும்…” என்றான் ரங்கசாமி.
“எங்க அம்மா ஆஸ்பத்திரி செலவுக்கு ரொம்ப கஷ்டப்படுது. ஒரு ஐந்நூறு ரூபா இருந்தா போதும்ன்னு கேப்பன்” என்ற பன்னீர் மறுகணமே யோசனையில் மூழ்கினான்.
“பணம்லாம் வேணாம் சாமி. நான் படிக்கணும். என்ன படிக்கவைங்கன்னு கால்ல உழுவன்” என்றான் தங்கமணி.
“நல்லா வெவரமான பசங்கதான்டா நீங்க” என்று சிரித்த ஆயா கூடையிலிருந்த அரிசி உண்டைகளில் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொடுத்தாள்.
“எங்களுக்கு எதுக்கு ஆயா உண்ட? ஏற்கனவே அஞ்சி பைசா பாக்கி நிக்குது. மேலமேல கடன் வாங்கி தின்னா, அடைக்கவேணாமா?” என்று கேட்டான் ரங்கசாமி.
“டேய் பெரிய மனுஷா, கடனா குடுக்கறன்னு ஒங்கிட்ட யாருடா சொன்னா? சும்மாதான் குடுக்கறன். தின்னுங்கடா” என்றாள் ஆயா.
”என்னா ஆயா திடீர்னு?” என்று தயங்கினான் தங்கமணி. ”ஒன்னுமில்லடா பசங்களா. சும்மா ஒரு பிரியத்துக்குதான்டா ஆயா குடுக்கறன்., தின்னுங்கடா” என்றாள் ஆயா.
வெல்லத்தின் சுவையும் துருவிப்போட்ட தேங்காய்ப்பூவின் சுவையும் நாக்கில் குழைந்தது. சீக்கிரம் தீர்ந்துபோய்விடக்கூடாது என நினைத்து கொஞ்சம்கொஞ்சமாக கடித்துத் தின்றும்கூட விரைவிலேயே உண்டை கரைந்துவிட்டது. உள்ளங்கையில் ஒட்டியிருந்த சின்னச்சின்ன இனிப்புத்துணுக்குகளை நாக்கால் தொட்டு விழுங்கினான் தங்கமணி.
“எம்ஜியாரு பெரிய கொடவள்ளல் ஆயா. ஏழைங்களுக்குலாம் வாரிவாரி குடுக்கறதுல மன்னன். அவரமாரி அள்ளிக்குடுக்கற ஆளு இந்த ஒலகத்துலயே  இல்ல.”
“ரிக்‌ஷா ஓட்டறவங்களுக்கு ரிக்‌ஷா. இஸ்திரிவண்டி வச்சிருக்கவங்களுக்கு இஸ்திரி பொட்டின்னு ஏராளமா வாங்கி குடுத்திருக்காரு.”
”மெட்ராஸ்ல மழபேஞ்சி வெள்ளம் வந்து குடிசைங்கலாம் அடிச்சிம்போன சமயத்துல எல்லார்க்கும் ஆயிரக்கணக்குல குடுத்தாராம். எல்லோருக்கும் புதுசா வேட்டிசட்ட, புதுசா பொடவ. புதுசா ஊடுன்னு கட்டி குடுத்தாராம். பேப்பர்ல கொட்ட எழுத்துல போட்டிருந்தாங்க. மன்றத்துல படிச்சத நான் காதால கேட்டிருக்கன்.”
ஆயாவைச் சுற்றி அமர்ந்துகொண்டு எம்.ஜி.ஆர்.பற்றி  தெரிந்துவைத்திருக்கும் தகவல்களையெல்லாம் சொன்னார்கள் அவர்கள்.
எல்லாவற்றையும் கேட்டு தலையசைத்துக்கொண்டாள் ஆயா. பிறகு “ஒங்ககிட்ட இன்னொரு கேள்வி கேக்கறன். பதில் சொல்றிங்களாடா?” என்று  மூன்று பேரையும் பார்த்துக் கேட்டாள். “கேளுங்க ஆயா. சொல்றம்” என்று சொல்லி ஆயாவை உற்சாகப்படுத்தினான் தங்கமணி.
“ஒங்கள பாத்ததுமே எம்ஜியாரே எறங்கி வந்து நூறு ரூபா நோட்ட எடுத்து ஆளுக்கொன்னு குடுக்கறாருன்னு வை, அப்ப என்னடா செய்விங்க?” என்று கேட்டாள் ஆயா.
ஒருகணம் கூட தாமதிக்காத ரங்கசாமி, கைவிரல்களால் தலைமுடியை கோதியபடி “ரயில புடிச்சி நேரா டவுன்ல போயி எறங்கி கோழி பிரியாணி சாப்படறதுதான் மொதல் வேல. அப்பறம் ஒரு சினிமா. ராத்திரிக்கு மறுபடியும் கோழி பிரியாணினு தின்னுட்டு வரவேண்டிதான்” என்றான். திகைப்புடன்  அவனையே பார்த்துக்கொண்டு நின்றார்கள் மற்றவர்கள். அவர்களுக்கு பேச்சே வரவில்லை.
“நீ” என்று பன்னீரின் பக்கம் ஆயா கையை நீட்டிய பிறகுதான் அவனுக்கு சுய உணர்வு திரும்பியது. ”அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது ஆயா. வாங்கிம் போயி எங்க அம்மாகிட்ட குடுத்துருவன். அதுவா பாத்து எந்த செலவு முக்கியமோ அத செய்யும்” என்றான்.
ஆயா தங்கமணியின் முகத்தைப் பார்த்ததும் “ஸ்கூலுக்கு போட்டுக்க நல்ல சொக்காவே இல்ல ஆயா. எங்க அம்மாகிட்ட சொல்லி ரெண்டுமூணு சட்ட எடுத்துக்குவேன்” என்றான் தங்கமணி.
எல்லோருமே சந்தோஷமான ஒரு மனநிலையில் இருந்தார்கள். திடீரென பன்னீர் கையைத் தட்டி கேலியாகச் சிரித்தபடி “இவன் ஒருத்தன் ஆக்கம் கெட்ட கூவ. எப்ப பாரு தவளயாட்டம் ஸ்கூலு ஸ்கூலுனு அடிச்சிங்கெடப்பான். படிச்சிட்டு நீ என்னாடா கலெக்டரு வேலைக்கா போவபோற? அப்பவும் மாடுதான மேய்க்க போற? இதுக்கு போயி பெரிசா பீத்திக்கிற?” என்று சொன்னதும் எல்லாமே சரிந்துவிட்டது.
அந்த அவமானத்தை தங்கமணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “படிப்பபத்தி ஒனக்கு என்னாடா தெரியும் முண்டம்” என்று அவனும் வேகமாகச் சொல்லிவிட்டான். பன்னீர் சட்டென்று தாவி அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிக்கவந்தான். ”உடுடா உடுடா” என்று நடுவில் புகுந்தான் ரங்கசாமி. பன்னீரின் பிடியிலிருந்து தங்கமணியை விடுவித்தபடி “பேசிட்டிருக்கும்போதே ஏன்டா கொரங்குங்களாய்டறிங்க? ஒங்களுக்குலாம் அறிவே கெடயாதுடா” என்று கோபத்தோடு தள்ளிவிட்டான்.
தங்கமணிக்கு அக்கணத்தில் அந்தக் கூட்டத்தில் நிற்கவே பிடிக்கவில்லை. சட்டென விலகி மாடுகள் மேயக்கூடிய இடத்தைநோக்கிச் சென்றான். ஒரு சினைமாடு வெயில் தாங்கமுடியாமல் கீழே சாய இடம் தேடி தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து கோடுபோல நுரை இறங்கியிருந்தது. அதைத் துடைத்த பிறகு மெதுவாக தொலைவில் தெரிந்த புங்கமரத்தின் நிழல்வரைக்கும் ஓட்டிச் சென்று அமரவைத்தான். கழுத்துக் கயிற்றை மரத்துடன் கட்டிவிட்டு ஓடைப்பக்கம் போனான். உடைந்துபோன வாயில்லாத பானையில் தண்ணீரை நிரப்பி எடுத்துக்கொண்டு வந்து பசுவின் முன்னால் வைத்தான். தவிப்போடு நாக்கை நீட்டி வேகவேகமாக தண்ணீரை குடித்தது பசு.
நிலைகொள்ளாத எண்ணங்களுடன் மனம்போன போக்கில் வெகுதொலைவு நடந்துபோய் திரும்பினான் தங்கமணி. சிறுநீர் கழிப்பதற்காக ஓரிடத்தில் ஒதுங்கிவிட்டு மறுபடியும் திரும்பி நடந்துவந்தான். காலையில் தண்டவாளத்தின்மீது அவன் அடுக்கிய கல்வரிசையைப் பார்த்த பிறகுதான் மறுபடியும் க்ராஸிங் பக்கத்தில் வந்துவிட்டதை உணர்ந்தான். புன்னகையோடு கல்வரிசையை காலாலேயே கலைத்து கீழே தள்ளியபோது தொலைவில் எங்கோ ஹார்ன் சத்தம் கேட்டது. முதலில் அவன் மனம் ரயில் என நினைத்து துணுக்குற்று கல்குவியலை ஒரே தாவாகத் தாண்டி கீழே இறங்கினான். இருபக்கங்களிலும் தன்னிச்சையாக பார்வை படர்ந்து மீண்ட பிறகுதான், இந்த நேரத்தில் எந்த ரயிலும் இல்லை என்னும் எண்ணம் உறைத்தது. மறுபடியும் சத்தம் வந்து பார்வையை எல்லாப் பக்கங்களிலும் படரவிட்டபோது எதிர்ப்பக்கத்தில் புழுதி பறக்க ஒன்றன் பின்னால் ஒன்றாக மூன்று கார்கள் வருவது தெரிந்தது.
தங்கமணி விலகி நின்றான். அந்தக் கார்கள் வேகமாக வந்து நின்றன. முதல் காரில் வண்டியோட்டி தவிர முன்பக்கத்தில் ஒருவர் பின்பக்கத்தில் ஒருவர் என இருவர்மட்டுமே வண்டியில் இருந்தார்கள். முன்பக்கத்தில் இருந்தவர் என்னை கைகாட்டி அழைத்து “இந்த நேரத்துல ரயில் இருக்குதா தம்பி? எப்ப அது போவும்?” என்று கேட்டார். “இப்ப ரயில் எதுவும் இல்லிங்க” என்றான் தங்கமணி. அவர் ஒருகணம் குழம்பி ”அப்படின்னா, க்ராஸிங் சங்கிலிய எப்ப எடுப்பாங்க?” என்று சந்தேகத்தோடு கேட்டார்.
“நான் எடுத்து உடறேன் சார், கொஞ்சம் இருங்க” என்றபடி சங்கிலிகளின் பக்கம் ஓடினான் தங்கமணி. இணைப்புக்கொக்கிகளை விடுவித்து இரண்டு சங்கிலிகளையும் பிரித்து விலக்கி கார் செல்ல வழிசெய்துவிட்டு, அவர் அருகில் ஓடிவந்து “இப்ப போவலாங்க” என்றான். அதே கணத்தில்  அடுத்த வண்டியின் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்மீது தற்செயலாக அவன் பார்வை படிய, பரவசத்திலும் அதிர்ச்சியிலும் பேசுவதற்கு நாக்கு புரளாதவனாக கைகுவித்து வணங்கினான். எம்ஜியார் என என் ஆழ்மனம் உச்சரித்தது. தினம்தினமும் தன் வீட்டுக் காலண்டரில் அவன் பார்க்கும் செக்கச் செவேலென தாமரை இதழ்போன்ற முகம். புன்சிரிப்பு ததும்பி நிற்கும் உதடுகள். பரபரப்போடு கிளம்பிவிடக்கூடும் என அவன் நினைத்ததுபோல வாகனம் உடனே கிளம்பவில்லை. தன் அருகில் வரும்படி அழைத்தார் அவர். வண்டியை சுற்றிக்கொண்டு அவரிருந்த ஜன்னலுக்கருகில்  போய் நின்றான் அவன்.
“ஒன் பேரென்ன?”
”தங்கமணி”
“படிக்கறியா?”
“ம்”
“என்ன படிக்கற?”
“ஆறாவது”
“நல்லா படிக்கணும். தெரிதா?” என்றபடி அவன் தோளைத் தொட்டு அழுத்தினார் அவர். பிறகு வண்டிக்குள் குனிந்து ஒரு பையை எடுத்து அவனிடம் கொடுத்தார். அக்கணமே அவன் கால்கள் பின்வாங்க “வேணாங்க” என்றான். அவர் புன்சிரிப்பு மாறாமலேயே “வச்சிக்கோ, வா,வா” என இழுத்து கையில் வைத்துவிட்டு, அவன் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார். மறுபடியும் ஒரு புன்னகை. அப்போது முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவரும் வண்டியோட்டியும்கூட புன்னகைத்தார்கள். இருவரும் கையசைக்க மறுகணமே வண்டிகள் ஒவ்வொன்றாக நகர்ந்து தண்டவாளத்தைக் கடந்துசென்றன. வாகனங்கள் ஒரு புள்ளியாக மாறி கண்பார்வையைவிட்டு மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, பைக்குள் இருப்பதென்ன என பார்த்தான் தங்கமணி. செக்கச்சிவந்த நிறத்தில் ஆப்பிள்கள். வேகவேகமாக சங்கிலிகளை இழுத்து கொக்கிகளுடன் இணைத்துவிட்டு ரங்கசாமியிடம் செய்தியைச் சொல்ல ஓடினான் அவன். “எம்ஜியாரு போறாருடா டேய்” என அவன் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அவர்கள் எழுந்திருந்து நிற்பதை அவனால் பார்க்கமுடிந்தது.
“என்னடா புதுசா கத உடற?” என்று கோணலாகச் சிரித்தான் பன்னீர். அவன் பார்வையில் ஒரு வெறுப்பும் அவநம்பிக்கையும் தெரிந்தது. தங்கமணி அவன் பக்கம் திரும்பாமலேயே ரங்கசாமியையும் ஆயாவையும் பார்த்து ”எம்ஜியாரு போறாரு. நான்தான் சங்கிலி கொக்கிங்கள தெறந்து வுட்டன்” என்று கூவினான். ”தகதகன்னு என்னா ஒரு நெறம். என்னா ஒரு சிரிப்பு. செக்கச்செவேல்னு செலயாட்டம் இருக்காரு” என்று ஆனந்தத்தில் கூத்தாடினான். “உண்மையாவா? உண்மையாவா? என்று கேட்டபடி மற்றவர்களும் மாறிமாறி கூவினார்கள்.
“ஆமாம்டா. தோ பாரு, எனக்கு ஆப்பிள்லாம் குடுத்தாரு”
எம்ஜிஆர் கொடுத்த பையை அவர்களிடம் பிரித்துக் காட்டினான் தங்கமணி. “எங்களுக்கும் ஒரு கொரல் குடுத்திருக்கலாமில்ல, நாங்களும் ஓடியாந்து பார்த்திருப்பம். அவர பாக்க நாங்களும்தான ஆசயா இருந்தம்…” என்றான் ரங்கசாமி. அவன் குரலில் ஏமாற்றமும் எரிச்சலும் கலந்திருந்தன.
“நானே மொதல்ல பாக்கலைடா. வண்டி கெளம்பும்போதுதான் கண்டுபுடிச்சி பேசனன்” என்றான் தங்கமணி. தனக்குள் பொங்கிவழியும் ஆனந்தத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“அவரும் பேசனாரா உன்கிட்ட? என்ன பேசனாரு?” என்று ரங்கசாமி ஆவலோடு கேட்டான்.
”நல்லா படிக்கணும்னு சொல்லிட்டு இந்த ஆப்பிள் பைய குடுத்தாரு” என்றான் தங்கமணி.
“நீ மட்டும் ஆப்பிள் பைய வாங்கிக்கின. நாங்களும் பார்த்திருந்தா எங்களுக்கும் ஏதாச்சிம் குடுத்திருப்பாரு, இல்ல” ரங்கசாமியின் குரலில் ஏக்கம் தொனித்தது. அதைப் பார்க்கும்போது தங்கமணிக்கும் கஷ்டமாக இருந்தது. பரபரப்பில் எதுவுமே தோன்றாததை நினைத்து அவனுக்குள் குற்ற உணர்ச்சி எழுந்தது. மறுகணமே அந்த உணர்விலிருந்து மீண்டெழுந்து “எனக்கு குடுத்தா என்ன, உனக்கு குடுத்தா என்னடா? இது எல்லாருக்குமே குடுத்தமாதிரிதான்டா” என்றான். எப்படி அந்த வார்த்தைகளை சொன்னோமென அவனுக்கே புரியவில்லை. ரங்கசாமி குழப்பத்தோடு ஒருகணம் அவனைப் பார்த்தான்.
”ஆளுக்கொன்னு எடுத்துக்கலாம், இந்தாடா” என்றபடி ரங்கசாமியிடம் ஒரு ஆப்பிளைக் கொடுத்தான். நம்பிக்கை இல்லாதவன்போல அவன் அதைப் பெற்றுக்கொண்டான். இன்னொரு ஆப்பிளை ஆயாவிடம் கொடுத்தான். “எனக்கு எதுக்குடா பையா, நீ சின்னப்புள்ள. நீதான் சாப்ட்டு உறுதியா இருக்கணும்” என்று மறுத்தாள் ஆயா. “சும்மா அறுத்து தின்னு ஆயா. நீ உண்ட குடுத்தா நாங்க வாங்கிக்கல, அதுமாரி நான் குடுக்கறத நீ வாங்கிக்க” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகுதான் வாங்கிக்கொண்டாள்.
அடுத்த ஆப்பிளை எடுத்து பன்னீரிடம் கொடுத்தான் தங்கமணி. ஒருகணம் நம்பிக்கையில்லாமல் தயக்கத்தோடு அவனைப் பார்த்தான் பன்னீர். “இந்தாடா, புடிடா” என்றபடி அவன் கையை இழுத்து வைத்தான். திடீரென ஏதோ நினைவு வந்தவனாக ”உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரிக்கு போறாங்க இல்ல. அவுங்களுக்கும் ஒன்னு எடுத்தும் போயி குடு” என்று மேலுமொரு ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

தனக்கொரு ஆப்பிளை வைத்துக்கொண்டதுபோக, இன்னுமொரு ஆப்பிள் மிச்சமிருப்பதைப் பார்த்தான் தங்கமணி. “என்னடா செய்லாம் இத?” என்று கேட்டதுமே “ஆளுக்கு கொஞ்சம் கடிச்சிக்கலாம்டா” என்றான் ரங்கசாமி. “இருடா இருடா” என்றபடி யோசனையோடு நாலுபக்கமும் திரும்பிப் பார்த்த கணத்தில் மரத்தோடு கட்டப்பட்டிருந்த பசுவின்மீது பார்வை படிந்தது. “இந்த ஆப்பிள நம்ம செனமாட்டுக்கு குடுத்துடலாம்டா” என்றபடி மரத்தின்பக்கம் கையைக் காட்டினான். “மாடு ஆப்பிள் தின்னுமாடா?” என்று ஒருகணம் சந்தேகத்தோடு கேட்டான் ரங்கசாமி. “எல்லாம் தின்னும், வாடா” என்றபடி மரத்தைநோக்கி ஓடத் தொடங்கினான் தங்கமணி. ”ஏய்ய்ய்ய்” என்று சத்தமிட்டபடி ரங்கசாமியும் பன்னீரும் அவனுக்குப் பின்னால் ஓடினார்கள்.

(அம்ருதா இதழில் வெளிவந்த சிறுகதை)