Home

Wednesday 26 October 2016

நம்பிக்கைத் தடங்களைத் தேடும் பயணம் - (புத்தக அறிமுகம்)



மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன. சண்டை போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்கின்றனஎன்னும் வாக்கியத்திலிருந்து தல்ஸ்தோயின்அன்னா கரினினாநாவல் தொடங்குகிறது. இது குடும்பத்துக்கு மட்டுமல்ல, எல்லா அமைப்புகளுக்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மை. முக்கியமாக மதம். ஒவ்வொரு மதமும் மோதலுக்கான காரணத்துக்காகக் காத்திருக்கிறது. நெருக்கடி மிகுந்த நவீன வாழ்வில் பொருளாதாரம், அரசியல், வசிப்பிடம், சமூகம், குடும்பம், தேசம், பாலியல், தன்னலம் எனப் பல்வேறு காரணங்களால் தனிமனிதனின் மனத்திலும் சமூக மனத்திலும் வன்முறை சிறுகச்சிறுக உருவாகி வளர்ந்து பெருகிப் பொங்கியபடி இருக்கிறது. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் இந்த வன்முறை மோதலாக உடனடியாக வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் பெருகி வரும் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மதமோதல்களுக்கும் கலவரங்களுக்கும் கூடுதலான முக்கியத்துவத்தை வழங்குகின்றன. அவ்வப்போது நிகழும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் தற்கொலைப்படைத் தாக்குதல்களும் அந்த முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க செய்கின்றன. இதன் விளைவாகத் தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் மதத்தின்மீது, தீவிரவாத முத்திரை விழுந்துவிட்டது. இதில் திரைப்படங்களின் பங்கு ஒரு முக்கியமான அம்சம். திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்க்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகளில் எல்லாத் திரைப்படங்களிலும் தீவிரவாதிகளை முஸ்லிம் பிரிவினராகத் தொடர்ச்சியாகச் சித்தரிப்பதன் வழியாக, முஸ்லிம்கள்மீது தீவிரவாத முத்திரை அழுத்தமாகவே விழுந்துவிட்ட சூழலில் நாம் வசிக்கிறோம். தம்மிடையே வாழும் முஸ்லிம்களை அவநம்பிக்கையோடும் கசப்போடும் பார்க்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது வரலாற்றின் மிகவும் துரதிருஷ்டமான தருணம். ஆனால், இன்றைய இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மதத்தூய்மைவாதம் பேசக்கூடிய முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட (நாலைந்து விழுக்காடு இருக்கலாம்) அல்லது மத அடிப்படைவாதம் பேசக்கூடிய முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட (ஒன்றிரண்டு விழுக்காடு இருக்கலாம்), மதநல்லிணக்கத்துடன் வாழ்ந்து பழகிய, வாழ விரும்புகிற முஸ்லிம்களின் எண்ணிக்கையே பெரும்பான்மையாகும். ஆனால், அவர்கள் அங்கங்கே சிதறியிருக்கிறார்கள். இந்தியாவின் பற்பல பகுதிகளில் சிறுசிறு சமூகங்களாகத் தனித்தனியாக வாழ்ந்துவருகிறார்கள். இந்தப் பெரும்பான்மையினரைப் பற்றிப் பத்திரிகைகளோ ஊடகங்களோ ஒருபோதும் பதிவு செய்வதில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் மிக எளிமையாக இயல்பாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சக மனிதனோடு சகஜமாக இருக்கிறார்கள். ஒருவன் பாசமிகு தந்தை. அவனுக்கு இலக்கிய ஆர்வமுண்டு. இடதுசாரிச் சிந்தனையில் சாய்வு கொண்டவன். அதே நேரம் காந்தியத் தாக்கமும் அவனிடமுண்டு. பெண்கள், தலித் முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களில் அவனுக்கு ஈடுபாடு அதிகம். சுற்றுச் சூழல் தூய்மையில் அவனுக்கு அக்கறையுண்டு. செய்யும் தொழில் அவனுக்குத் தெய்வம். இவ்விதமான பல அடையாளங்கள் அவனுக்கு உண்டு. இந்த அடையாளங்களோடுதான் அவன் வாழ்கிறான். ஆனால் அவனது மதத்தையே அவனதுஒற்றை அடையாளமாகமதத்தூய்மைவாதிகளும் மத அடிப்படைவாதிகளும் முன்நிறுத்தி அந்த அடையாளத்தை அவன்மீது திணிக்கும் செயல் இப்போது நிகழ்ந்துவருகிறது. இத்தகைய வன்முறை, வரலாற்றில் எல்லாக் காலகட்டத்திலும் சாதி, இனம், மொழியின் பெயரால் நிகழ்ந்துவந்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் எந்த மதத்திலும் கட்டாயத்திற்கோ நிர்ப்பந்தத்திற்கோ இடமில்லை என்பதே உண்மை. மத அடையாளம் ஒன்றையே பிரதான அடையாளமாகக் கொள்ளாது இந்தியா நெடுக வாழும் வித்தியாசமான எளிய சிறிய குழுக்களை இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார் சபா நக்வி. இவர்களின் வேறுபட்ட வினோதமான வாழ்க்கைமுறையும் பழக்கங்களும் சடங்கு சம்பிரதாயங்களும் சுவாரசியமானவை. இவர்களையும் இவர்களின் வினோதப் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்வதனாலேயே இப்புத்தக ஆசிரியர் இந்த மனிதர்கள்தாம் இந்தியா என்பதாகவோ அல்லது இந்த வாழ்க்கை முறையையே அவர் அனைவருக்கும் பரிந்துரைக்கிறார் என்பதாகவோ நாம் கருதத் தேவையில்லை. மாறாக இந்த மனிதர்களையும் உள்ளடக்கியதுதான் இந்தியா என்பதையும், இவர்கள் இதயத்தில் மட்டுமல்லாது பெரும்பான்மையான சாமானிய மக்கள் மனங்களில் வாழும் இறைவனின், சமயத்தின் வேர்களை இந்த மண்ணின் சூஃபி , பக்தி இயக்கத்தின் வேர்களிலும் தேடமுடியும் என்பதையும் உணரும்விதமாக எழுதப்பட்டிருக்கிறது என்று கருதலாம். ஒருவகையில் நல்லிணக்கத்துடன் வாழும் இந்தியாவை மீட்டெழுப்புவதே இப்புத்தகத்தின் நோக்கமாக உள்ளது. இந்த இந்தியாவிற்காகவே காந்தி வாழ்ந்து மடிந்தார் என்பதும் வரலாறு.
தன் குடும்பப் பின்னணியின் வழியாகவும் கல்வியின் வழியாகவும் ஓய்வற்ற பயணங்கள் வழியாகவும் பத்திரிகையாளரான சபா நக்வி இந்தப் பேருண்மையை உணர்ந்திருக்கிறார். குற்றம்குறைகளைக் கண்டறிவதற்காகவே பயணம் செய்கிற பத்திரிகையாளர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில் ஒரு மானுட உண்மையைக் கண்டறிவதற்காக சபா நக்வி மேற்கொண்ட பயணங்கள் முக்கியமானவை. காஷ்மீரில் தொடங்கி உத்தரப்பிரதேசம், அசாம், மணிப்புரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், தமிழகம் என இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம்செய்து, என்றென்றும் வாழும் நல்லிணக்கத்தை நேருக்குநேராகக் கண்டிருக்கிறார். அத்தருணங்களில் அவர் எழுதிய ஏராளமான சிறுசிறு அனுபவக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2012இல் நூலாக வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை வாசித்து அகஎழுச்சி பெற்றமுடவன் குட்டிமுகம்மது அலி மிகச் சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அறிவுலகத்துக்கு மிகமுக்கியமான பங்களிப்பாக உள்ள இந்தப் புத்தகத்தைகாலச்சுவடுநல்லமுறையில் வெளியிட்டிருக்கிறது.
நூலெங்கும் சபா நக்வி திரட்டித் தொகுத்திருக்கும் தகவல்கள் அளவற்றவை; மதிப்பு மிக்கவை. முஸ்லிம்கள் அனைவருக்கும்வேறுபாடில்லாத ஒரே மாதிரியானவர்கள்என்னும் அடையாளம் பொருந்தாது என்பது அத்தகவல்களின் சாரம். மேற்கு எல்லைப்புறத்திலுள்ள ராஜஸ்தானிய லங்காக்கள், கிழக்கே தனித்தன்மை வாய்ந்த தங்களின் சொந்த வாழ்வியல் நெருக்கடிகளோடு மல்லாடிக்கொண்டிருக்கும் வங்காளத்தின் படசித்ரா ஓவியர்கள், தமிழகத்துத் தெருக்களில் சாம்பிராணிப்புகை நிரம்பிய பாத்திரத்தை ஏந்தி அப்புகையால் கடைகளையும் வீடுகளையும் நிறைத்து வாழ்த்திவிட்டுச் செல்லும் எளிய மனிதர்கள் என ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமானவர்கள். அதே சமயத்தில் வாழும் சூழலில் அனைவரோடும் சேர்ந்து இணைந்து வாழும் நல்லிணக்க மனம் கொண்டவர்கள். தன் பயணங்களின் ஊடே அத்தகையோரின் வாழ்க்கைமுறைகளைத் தேடித் திரட்டித் தொகுத்தபடி செல்கிறார் சபா நக்வி. ஒரு கோணத்தில் சமூக ஆய்வாகவும் இந்தத் தகவல்கள் அமைந்திருக்கின்றன. அவர்கள் அனைவரும் அமைப்புசார் மதங்களின் விளிம்பில் உயிர்வாழ்ந்தபடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் முஸ்லிம்களாக உள்ளார்கள்.
புத்தகத்தை வாசித்துமுடித்ததும் சபா நக்வி தேசமெங்கும் பயணம்செய்து கண்டு கேட்டு விசாரித்து முப்பத்திரண்டு அத்தியாயங்களில் பதிவு செய்திருக்கும் உண்மைகளால் நாம் பெறும் மனநிறைவு அபூர்வமானது! எத்தனைவிதமான வாழ்க்கைமுறைகள். எத்தனை விதமான நம்பிக்கைகள். படிக்கப்படிக்க நம் தேசத்து மனிதர்களின் மனவிரிவை நினைத்துப் பெருமிதம் ஏற்படுகிறது. மேற்கு வங்கத்தில் மிதுனாப்பூர் மாவட்டத்தில் நியாயா என்பது ஒரு சிறிய கிராமம். அங்கே சுருள் ஓவியங்களை வரையும் முஸ்லிம் கலைஞர்கள் வாழ்ந்துவருகிறார்கள். சித்ரகார் அல்லது பட்டுவா என அழைக்கப்படும் இக்கலைஞர்கள் உருவங்களை வரைகிறார்கள். பிறகு அக்காட்சிகளைப் பாடல்களாகப் பாடி விரித்துரைக்கிறார்கள். வெகுசில ஓவியங்கள் உள்ளூர் சூஃபி ஞானியர் பற்றியதாகும். பல ஓவியங்கள் ராமாயண - மகாபாரத நிகழ்ச்சிகளைப் பற்றியதாகும். இரு மதப் பண்டிகைகளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது இக்கலைஞர்கள் சமூகம். ஈகைப் பெருநாளையும் துர்கா பூசையையும் ஒரேவிதமான உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள் அவர்கள். உள்ளூர் முல்லாக்களின் வெறுப்புக்கு அவர்கள் இலக்கானவர்கள் என்றாலும், தாம் வாழும் விதத்தைப்பற்றிய எவ்விதக் குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை.
இந்து மதத்துக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயான பரிமாற்றங்கள் பல வசீகரமான மரபுகளை வங்காளத்தில் உருவாக்கியிருக்கின்றன. அத்தகு மரபில் உருவானவர்கள் வங்கதேச இந்திய எல்லைப்பகுதியில் அலைந்துதிரியும் பால் பாடகர்கள். ஒற்றை நாண் இசைக்கருவியைக் கையால் இசைத்தவாறு இறைவனைப்பற்றிய பாடல்கள் பாடியபடி கிராமங்களின் ஊடே அலைகிறார்கள் அவர்கள். இந்து சமய பால்கள்மீது செல்வாக்குச் செலுத்தியவர் சீர்திருத்தவாதியான சைதன்யர். சூஃபி ஞானிகளின் மறைஞானக் கருத்தாக்கம் முஸ்லிம் சமூக பால்கள்மீது செல்வாக்குச் செலுத்தியது. பால் அமைப்பு என்பது வைணவ பக்தி - சூஃபி கூட்டிணைவின் விளைவு. இறைவன் கோயிலிலோ மசூதியிலோ இல்லை, மனிதர்களின் இதயத்தில் இருக்கிறான் என்பது பால்களின் நம்பிக்கை.
கிராமம் சார்ந்தவர்களாக வாழும் வங்காள முஸ்லிம்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள். அலைந்து திரியும் பீர்களின் பங்களிப்பு வங்க இஸ்லாமிய மதத்துக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பீர்களின் முக்கியமான செய்தி, கோட்பாட்டுறுதி கொண்ட இஸ்லாம் அல்ல. இஸ்லாமிய மதத்திற்கு வருவதற்கு முன்னால் பின்பற்றிய பழக்க வழக்கங்களுக்கும் பற்றுகளுக்கும் இடமளித்த இணக்கமான நம்பிக்கையாகும். வங்காள தர்காக்களும் மஸார்களும்தான் இம்முஸ்லிம்களின் மத நம்பிக்கை மையங்களாக இருக்கின்றன, பள்ளிவாசல்கள் அல்ல. சமூகங்களுக்கு இடையே ஆரோக்கியமான உறவு வளர இந்த சூஃபி ஞானியரின் புனித அடக்கத்தலங்களும் பங்காற்றி வருகின்றன. இந்த வழிபாட்டு மரபு இஸ்லாம் மதத்தையோ அல்லது இந்து மதத்தையோ சார்ந்ததல்ல. இவற்றின் கூட்டிணைவாக உருவான ஒரு வெகுஜன மதமாகும்.
பக்தி, சூஃபி அற்புதச் சங்கமம் மகாராஷ்டிரப் பரம்பரையின் ஒரு பகுதியாகும். சூஃபி ஞானியான செய்யத் யாகூபுக்கும் சிவாஜிக்கும் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவ நடவடிக்கைகளில் இறங்கும் முன்பாக அந்த இறைஞானியைக் கலந்தாலோசிப்பதை சிவாஜி பழக்கமாகக் கொண்டிருந்தார். முஸ்லிம்களாக இருக்க நேர்ந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக எண்ணற்ற யுத்தங்களில் சிவாஜி ஈடுபட்டார் என்னும் உண்மை, அவர் இஸ்லாத்தையோ முஸ்லிம் சமுதாயத்தையோ வெறுத்தார் என்பதாகப் பொருள்படாது. அவர் பெருமதிப்பு கொண்டிருந்த ஞானமரபு இன்றைக்கும் அழியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீகோண்டாவில் உள்ள ஷெய்க் முகம்மது தர்காவில் அவரைப் பின்பற்றிப் பாடுபவர் ஷெய்க் மக்பூல். அவர் தினமும் யோக சங்கரமம் பாடுகிறார். அந்தப் பாட்டுக்குப் பிறகு தொழுகை நடக்கிறது.
மன்புரி பாபா என அறியப்பட்ட இந்து மகான் எண்ணற்ற பக்திப்பாடல்களை இயற்றிப் புகழ் பெற்றவர். ஒவ்வொரு வியாழக்கிழமை இரவிலும் தவுலதாபாதில் உள்ள அவருடைய சமாதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுசேர்ந்து அவருடைய பக்திப்பாடல்களைப் பாடுகிறார்கள். அவுரங்கபாத்தைச் சேர்ந்த சூஃபி ஞானியான ஷாநூர் மியானுடன் மன்புரி பாபாவுக்கு நல்ல நட்பு இருந்தது. மன்புரி பாபாவின் சமாதிக்கு மேல் இறை ஞானி ஷாநூரின் படம் இன்னும் சுவரில் தொங்குகிறது. வாழும் காலத்தில் இந்து, முஸ்லிம் கூட்டிணைவை வற்புறுத்தியவர் மகான் ஷிர்டி சாய்பாபா. அவரால் ஏற்றிவைக்கப்பட்டதாக நம்பப்படும் புனித நெருப்பு பள்ளிவாசலில் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் கிராமக்கோயிலிலிருந்து அந்த உள்ளூர்ப் பள்ளிவாசலுக்கு ஓர் ஊர்வலம் அவருடைய படத்தை எடுத்துச்
செல்கிறது.
ஆந்திரக் கடற்கரைப்பகுதியில் முஹர்ரம் ஒரு பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. தசரா, தீபாவளியைப் போலவே முஹர்ரத்தையும் முக்கியமாகக் கருதுகிறார்கள் லம்பாடிகள். முஹர்ரம் பற்றிய முழுமையான நாட்டுப்பாடல் தொகுப்பே படிப்படியாக உருவாகி வளர்ந்திருக்கிறது. கவிஞர் பாலையாவும் ராமண்ணாவும் முஹர்ரம் பற்றிப் பற்பல வசன கவிதைகளை எழுதிய தெலுங்குக் கவிஞர்கள். விஜயநகரில் ஆலம்கள் வைக்கப்பட்டுள்ள பல கூடாரங்கள் உள்ளன. உள்ளூர் மக்கள் மத பேதமின்றி ஆலம்களுக்கு மாலை அணிவித்துக் குங்கும பொட்டு வைத்து வழிபடுகிறார்கள். ஆலம்களை வழிபட்டால் துரதிருஷ்டம் தூர விலகும் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்களுக்கு கர்பலாவைப்பற்றி எதுவும் தெரியாது. இருந்தும் பிருலுவை ஸ்ரீராமனோடு சரிசமமாகக் காண்பதில் அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. பழைய ஐதராபாத்தில் இன்னும்கூட இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஒரிசாவின் நிலைமை இன்னும் முக்கியமானது என்கிறார் சபா நக்வி. பூரியில் பகவான் ஜகந்நாதர் மீது ஒரிய மொழியில் பக்திப் பாடல்களை இயற்றிய பக்தர் சாலெபெக் ஒரு முஸ்லிம். திருவிழா சமயத்தில் ஜகந் நாதரின் ரதம் ஊர்வலத்தின்போது அந்தப் பக்தருக்காக அவருடைய சமாதியின் முன்பு சிறிது நேரம் நின்று விட்டுச் செல்கிறது. முன்னொரு காலத்தில் சாலெ பெக் இருந்ததைப்போலவே இன்றும் சிக்கந்தர் ஆலம் விளங்குகிறார். ஜகந்நாதரைப்பற்றி நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். மத எல்லைகள் பெரிய அளவில் பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்பதற்கு இத்தகு கவிஞர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.
திருச்சியைச் சேர்ந்த நத்ஹர்வலி தர்காவும் நாகூர் தர்காவும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சூஃபி மையங்களாகும். மத வேறுபாடின்றி அனைவரும் அங்கு சென்று இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள். ஆர்க்காடு நவாபுகள் இந்து, முஸ்லிம் புனித ஆலயங்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்களாக வாழ்ந்தார்கள். மதுரை திருப்பரங்குன்றத்தின் மீது ஒரு புனிதத்தலம் உள்ளது. அதில் இளைஞர் சிக்கந்தர், முருகன் இருவருக்குமே நினைவிடமும் கோயிலும் உள்ளன.
ராஜஸ்தான் இசைக்கலைஞர்களில் எண்பது விழுக்காடு முஸ்லிம்களே ஆவார்கள். இருந்தபோதிலும் அவர்களை ஆதரிக்கும் புரவலர்கள் பெரும்பாலும் இந்துக்கள். ஜெய்சல்மர், பானர்பீக்கானிர், ஜோத்புர் போன்ற குறிப்பிட்ட பாலைவன மாவட்டங்களில் உள்ள இந்துக்களின் திருமணங்கள், பிறப்பு மற்றும் பண்டிகைகள் தொடர்பான பல சடங்குகளில் இசைநிகழ்ச்சி நிகழ்த்துபவர்களும் இந்த முஸ்லிம் கலைஞர்கள்தான். இந்த லங்காக்களும் மங்கானியர்களும் தம் பழக்கவழக்கங்களாலும் அணியும் ஆடைகளாலும் இஸ்லாத்தை வெளிப்படையாகப் புலப்படுத்தினாலும் வாழ்க்கைமுறையில் இந்துக்களைப்போலவே வாழ்கிறார்கள்.
அயோத்தி நகரில் நேரிடையாகப் பார்த்த அனுபவங்களை சபா நக்வி மிகவும் துயரார்ந்த தொனியுடன் முன்வைத்துள்ள பகுதி மிகமுக்கியமானது. அயோத்தியில் உள்ள ராமர் கோயில்களில் ஒன்றான சுந்தர் பவன் என்னும் கோவிலின் காப்பாளராக இருப்பவர் முன்னு பாபா என அழைக்கப்பட்ட ஹுஸைன் என்னும் முஸ்லிம் பெரியவர். மதக்கொள்கைகளை நடைமுறையில் பேணும் முஸ்லிம் ஒருவர், இந்து புனித யாத்திரை நகரத்தைச் சேர்ந்த கோவிலொன்றில் காப்பாளராக நியமிக்கப்படுவது ஒரு விந்தையான ஏற்பாடு. அந்த இடத்துக்கு அருகில் பாஸ்தர் மாவட்டத்தில் வாழ்ந்த பண்ணையார் ஒருவர்தான் இதற்குக் காரணம். 1947இல் சுந்தர்பவன் கோவில் நிர்வாகத்தை அவருடைய குடும்பத்தினர்தான் அவரிடம் ஒப்படைத்தார்கள். தேசப்பிரிவினையின்போது உருவான கொந்தளிப்பையே சமாளித்துப் பணியாற்ற முடிந்த அவரால் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு பணியாற்ற முடியவில்லை. உயிர்பிழைப்பதற்காக ஊரைவிட்டே சென்று சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்துவிட்டுத் திரும்பி வர நேர்ந்திருக்கிறது. அதன் பிறகும் தனது இறுதி மூச்சுவரைக்கும் கோவில் சேவையில் ஈடுபட்டபடியே வாழ்ந்து மறைந்தார் அவர்.
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியைத் தொடர்ந்து பல சூஃபி ஞானிகள் உருவானார்கள். இறைவனுடன் நேரடியான தனித்த அனுபவங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் தந்தார்கள். அலைந்து திரியும் துறவிகளாக அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் கடைப்பிடித்த தாராளத்தன்மையும் மனிதாபிமானமும் பலரை ஈர்த்தது. இந்தியச் சூழலில் சூஃபிகள் புனிதர்களாக வணங்கப்பட்டனர். அவர்களுடைய மறைவுக்குப் பிறகு, அவர்களுடைய கல்லறைகள் அதிசய சக்தி கொண்டவையாக நம்பப்பட்டன. தர்காக்கள், மஸார்கள் என அந்த அடக்கத்தலங்கள் அழைக்கப்பட்டன. சூஃபி சிந்தனை மக்களிடையே ஒரு சீர்திருத்த எழுச்சியை உருவாக்கும் தூண்டுகோலாக இருந்தது.
வரலாற்றின் தருணங்கள் இவ்விதமாக இருக்க, தர்க்கரீதியாகப் பார்க்கும்போது இந்தியத் துணைக்கண்டம் இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் நிலையாக மோதிக்கொண்டிருக்கும் களமாக மாறியிருக்கக்கூடாது. அதனால் துரதிருஷ்டவசமாக புனிதமும் புனிதமின்மையும் அருகருகேயே எப்போதும் வாழ்ந்துவந்திருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே வகுப்புவாத ரீதியில்அரசியல் ஒருமுனைவாக்கம்உருவாகி நிலைபெற்றுவிட்டது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனித் தொகுதிகள் வரையறுக்கப்பட்டன. இறுதியாக இது பாகிஸ்தான் கோரிக்கைக்கு வழிவகுத்தது. இதன் பின்னர் மதக்கலவரம் வாழ்வின் நிரந்தர அம்சமாகத் துணைக்கண்டத்தில் உருவானது. சுதந்திர இந்தியாவில் நாம் பின்பற்றத் தொடங்கிய தேர்தல்முறை மக்களைச் சாதி சமூகப் பின்னணியின் அடிப்படையில் பிரிப்பதில் வெற்றிபெற்றுவிட்டது. அரசியல் கணக்குகளை நேர் செய்து கொள்ள மீண்டும்மீண்டும் எழும் கலவரங்களாலும் தாக்குதல்களாலும் நம் நாடு கொஞ்சம்கொஞ்சமாக அமைதியை இழந்துவருகிறது.
இழந்துகொண்டிருக்கும் அமைதியை மீண்டும் பெற்று நிலைபெறும்படியாகச் செயலாற்றுவதே இன்றுள்ள பணிகளில் மிகமுக்கியமான பணியாகும். இரண்டு மதங்களும் இசைந்து வாழக் கற்பித்த சூஃபி ஞானமரபின் தடங்களைக் கண்டறியும் நடவடிக்கையை முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க முயற்சியாகவே கருதவேண்டியிருக்கிறது. சபா நக்வியின் நம்பிக்கைகளையும் முயற்சிகளையும் இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது.
சபா நக்வி அடுக்கிவைத்திருக்கும் எண்ணற்ற தகவல்களின் நீட்சியாக ஒரு தகவலை முன்வைக்கத் தோன்றுகிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக கிராமத்தில் எங்கள் தெருவில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் இருந்தன. இருவர் கறிக்கடை வைத்திருந்தார்கள். இருவர் தையல்கடை நடத்தினார்கள். அந்தக் குடும்பத்தின் மூத்த ஆண்கள் என் அப்பாவைஅண்ணேஎன்று அழைப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சிறியவர்களான எனக்கும் தங்கைக்கும் தம்பிக்கும் சித்தப்பா வீடுகள். ஒரு சித்தப்பாவின் மகன் குத்தூசி என் வகுப்புத்தோழன். ஞாயிறு அன்று எங்கள் அப்பா என்னிடம் ஐந்து ரூபாய் கொடுத்துசித்தப்பா கடைக்கு போயி கறி போடச் சொல்லி கேட்டு வாங்கி வாஎன்று அனுப்புவது வழக்கம். தீபாவளிக்கு எங்கள் வீட்டுச் சாப்பாடு சித்தப்பா வீட்டுக்குப் போகும். ரம்ஜான் அன்று அவர்கள் வீட்டுச் சாப்பாடு எங்கள் வீட்டுக்கு வரும். விடுமுறை நாட்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் விளையாடுவோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அப்படித்தான் வளர்ந்தோம். சாதி என்பதையோ மதம் என்பதையோ எங்கள் மனத்தில் யாரும் விதைத்ததில்லை. இன்றும் அதே நிலைமைதான். இன்று சித்தப்பாவின் பிள்ளைகள் என்னைஅண்ணேஎன்று அழைக்கிறார்கள். சித்தப்பா என்னை நெஞ்சோடு ஆரத் தழுவிக்கொள்கிறார். அவர்கள் வீட்டுத் திருமணத்துக்கு என் தம்பிகள்தான் பக்கத்தில் நின்று ஒத்துழைக்கிறார்கள். மத வேறுபாடு எங்களையோ எங்கள் நெருக்கத்தையோ சிறிதேனும் பிரிக்கவில்லை. தேசமெங்கும் பேச்சாக இருக்கும் மத அடிப்படைவாதமும் மதத் தூய்மைவாதமும் அவர்களைச் சிறிதும் அசைக்கவில்லை. இயற்கையாகவே அவர்கள் நெஞ்சில் நல்லிணக்க உணர்வு நிறைந்திருக்கிறது. அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து வாழ நினைக்கிறார்கள்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நான் கர்நாடகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் - முஸ்லிம்கள் பெருமளவில் வாழக்கூடிய பீஜப்பூர், குல்பர்கா, பெல்காம், தார்வாட் பகுதிகள் உட்பட- தொடர்ச்சியாகப் பயணம் செய்து வருகிறேன். இப்பகுதிகளில்தான் அடிக்கடி கலவரங்கள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட இடங்களில்கூட நல்லிணக்கத்துடன் வாழும் பல குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். சபா நக்வியின் புத்தகம் அவர்களையெல்லாம் நினைத்துக்கொள்ள வைக்கிறது. இந்த மொழியாக்கத்தின் வழியாக தரமான ஒரு மொழிபெயர்ப்பாளராகத் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார் முடவன்குட்டி முகம்மது அலி.

( காலச்சுவடு – பிப்ரவரி 2016 இதழில் வெளிவந்த புத்தக அறிமுகக்கட்டுரை )