Home

Thursday, 26 July 2018

கல்யாண்ஜியின் ’அந்தரப்பூ’ - விண்ணும் மண்ணும்




 சமீபத்தில் இயல் விருது ஏற்புரையின்போது வண்ணதாசன் தன்னைசின்ன விஷயங்களின் மனிதன்என்ற அடைமொழியோடு முன்வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே தலைப்பில் அவர் எழுதிய ஒரு கட்டுரைத்தொகுதி கூட வெளிவந்தது. அவருடைய இணையதளமானசம்வெளியில் அவர் ஒராண்டு காலத்தில் அவ்வப்போது எழுதிய அனுபவக்கட்டுரைகளின் தொகுதி அது. ’சின்னஎன அவர் முன்வித்திருக்கும் சொல்லுக்குரிய பொருள் புழங்குதளத்தில் உள்ள பொருளல்ல. மாறாக விரிவுக்கு நேரெதிராக உள்ள ஒன்று என்பதே பொருளாகும். எடுத்துக்காட்டாக பிரம்மாண்டமான செதுக்குவேலைகளோடும் சிலைகளோடும் ரகசிய இணைப்புகளோடும் கூடிய மாபெரும் அரண்மனைக்கதவுகளை அவர் தன் படைப்புகளில் முன்வைக்க முயற்சி செய்யவில்லை. அதற்கு மாறாக உருக்கிய தங்கத்திலிருந்து மிகச்சிறிய மூக்குத்தியை பிசிறேயில்லாமல் நுட்பமான வேலைப்பாடோடு செய்யும் கலைஞனைப்போல சின்னஞ்சிறு காட்சித்துண்டுகளை மட்டும் தேடித்தேடிக் கண்டடைந்து தன் படைப்புகளில் முன்வைக்கிறார் அவர். மேலதிகமாக, அந்த அரண்மனைக்கதவுகளின் நிழலை மூக்குத்தியின் பளபளப்பில் தேடிக் கண்டுபிடிக்கும் விழைவும் அவர் ஆழ்மனத்தில் நிறைந்திருக்கும்.


சுள்ளி பொறுக்க வந்த முதியவர்
மழைபெய்த ஈரத்தரையில்
குச்சியால் கீறிக்கொண்டே போகிறார்
இதைவிடச் சரியாக அவருடைய தன்வரலாற்றை
அவரால் எழுதமுடியாது

கல்யாண்ஜியின் சமீபத்தியஅந்தரப்பூதொகுதியில் உள்ள கவிதை இது. அவருடைய கவனம் தன்னைச்சுற்றி இந்த உலகில் முகில்நிறைந்து கருத்திருக்கும் வானத்தின்மீதோ, கொட்டிமுடித்த மழையின்மீதோ மழையில் நனந்து சிலிர்த்திருக்கும் மரங்கள்மீதோ பதியவே இல்லை என்பதை நம் முதல் வாசிப்பிலேயே உணரலாம். மாறாக, மழைமுடிந்த ஈரத்தரையில் தன் கையிலிருக்கும் குச்சி இழுபட்டு கோடிழுக்கச் செல்லும் முதியவர்மீது படிகிறது. அக்கணத்திலேயே அந்தக் கோட்டை அவர் மனம் முதியவரின் வாழ்க்கைவரலாறென நினைத்துப் படிக்கத் தொடங்கிவிடுகிறது. மாபெரும் காட்சியொன்றைத் துண்டுதுண்டாக நறுக்கி அப்புறப்படுத்திவிட்டு ஏதோ ஒரு துண்டை மட்டும் எடுத்து தன் உள்ளங்கைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்.
கல்யாண்ஜியின் இந்தத் தேர்வுக்கு என்ன காரணம்? ஏதோ ஒரு  சங்கேதச்சொல்லால் தன் மனத்திலிருப்பதை உணர்த்திவிடும் காதலனைப்போல அல்லது காதலியைப்போல, குறிப்பால் உணர்த்துவதற்கு ஏதுவாக இந்தத் தேர்வு உள்ளது என்பதுதான் காரணம். உள்ளங்கையில் நீரைத் தேக்கி, அருகில் நின்றிருக்கும் பனையின் நிழலை அதற்குள் பார்க்கவைக்கும் ஆவல் என்று இதைச்சொல்லலாம்.

குலவையிட்டபடியே செல்லும் ஒரு பைத்தியக்காரியை
நிறைபனி விழும் மூன்றாம் ஜாமத்தில் பார்த்தேன்
கிண்ணம்போல ஒரு பூசணிப்பூ மலர்ந்ததும்
அப்போதுதான்

தலைப்பிடப்படாத இன்னொரு கவிதை இது. இந்த உலகை, இந்த இரவை ஒரு கவிதைக்குள் முன்வைக்க ஏராளமான அம்சங்கள் இருக்கும்போது கல்யாண்ஜி ஒரு மூன்றாம் ஜாமத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அந்த நள்ளிரவில் தொடர்பே இல்லாமல்  ஆடிப்பாடி கொண்டாட்டத்தோடு குலவையிட்டவண்ணம் செல்லும் ஒரு பைத்தியக்காரியை மட்டும் தேர்ந்தெடுத்து, தன் கவிதைக்குள் உலவிவரும் பாத்திரமாக்கிவைக்கிறார். சூரியனைக் கண்டு மலரும் தாமரையைப்போல, நிலவைக்கண்டு மலரும் முல்லையைப்போல பைத்தியக்காரியின் வருகையையைக் கண்டு மலர்வதற்கென ஒரு பூ இருப்பதையும் அப்போதுதான் அவர் கண்டுபிடிக்கிறார். அந்தப் பூசணிப்பூவுக்கும் கவிதைக்குள் ஓர் இடம் கிடைத்துவிடுகிறது. தேர்வுமுறைகளும் அடுக்குமுறையும் ஓர் அழகான கவிதையின் உருவாக்கத்தில் வகிக்கும் பங்கை வாசகர்கள் உணர்ந்துகொள்ளலாம்.
ஒரு தென்னங்கீற்று பழுத்து மரத்தின் பிடியிலிருந்து விலகி காற்றில் சுழன்று இறங்கி தரையில் விழும் சித்திரத்தை முன்வைத்திருக்கும் கவிதை முக்கியமானதொரு கவிதை. கீற்று உதிரும் சித்திரம் மீளமீள மனத்தில் உருவானபடி இருக்கிறது.

எப்போதாவது யார்க்கேனும் வாய்க்கும் பெருந்தருணம் அது
உச்சியிலிருந்து தானாகக் காய்ந்து கழன்று இறங்கியது
தென்னங்கீற்று
கனத்தும் கனமற்றும் காற்றில் தோகை விரித்தது
இருப்பிலிருந்து இல்லாமைக்குக் கரணமடித்தது
ஒரு பழுப்புக்கழுகின் உகிரிறகுக் காம்பென
மண்ணில் குத்திச் சாய்ந்தது
புழுதிப்படலத்தில் முழு உடல் கிடத்தி,
அமைதியின் சாசுவதத்தில் மெய்மறந்தது
மீளப்பெரும் தருணம்
அணிலாகத் தென்னையில் பாய்ந்தேறிவிட்டது

மரத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விழும் தென்னங்கீற்று ஏறத்தாழ ஒரு மரணக்காட்சியையே மறைமுகமாக உணர்த்துகிறது.  இது ஒரு மரணத்தின் கவிதைதான். சந்தேகமில்லை. ஆனால், துயரம் நிறைந்ததாகவோ அதிர்ச்சி நிறைந்ததாகவோ காட்டுவதற்கு கல்யாண்ஜியின் மனம் இடமளிக்கவில்லை. அதனால் வண்ணத்துணிகளைப் போர்த்துவதுபோல ஓர் உவமையையும் அழகான சில தொடர்களையும் கண்டறிந்து போர்த்திவிடுகிறார். ’இருப்பிலிருந்து இல்லாமைக்குஎன்பது எவ்வளவு அழகான தொடர். குத்திச் சாயும் பழுப்புக்கழுகின் உகிரிறகுக்காம்பு என்பது எவ்வளவு அழகான உவமை. மரணத்தோடு அக்காட்சியை உறையவைக்க அவர் மனம் இடம்தரவில்லை. சட்டென அங்கே வந்த அணிலொன்று தென்னையில் ஏற, விழுந்த கீற்றுக்கு ஈடுகட்டுவதுபோல அதன் பாய்ச்சலைக் கண்டபிறகே அவர் மனம் ஓய்வடைகிறது.  
தலைப்புக்கவிதையானஅந்தரப்பூஇடம்பெறும் கவிதையும் ஏறத்தாழ இந்த வகையைச் சேர்ந்த ஒன்று. ஒரே ஒரு வேறுபாடு. கீற்று விடுபட்டு விழுந்ததைப்போல பூ இன்னும் விழவில்லை. விழும் கணத்தில் பார்க்க விழையும் விருப்பம் மட்டும் முன்வைக்கப்படுகிறது. அந்தக் கவிதை:

மரத்தில் கிளையில்
மஞ்சரியில் பார்த்தாயிற்று

கீழ்த் தூரில். மண்ணில்
கிடப்பதையும் ஆயிற்று

வாய்க்கவேண்டும்
காம்பு கழன்றபின்
தரை இறங்குமுன்
காற்றில் நழுவி வருமோர்
அந்தரப்பூ காணல்

உதிரும் காட்சிகளில் அல்லது அந்தரத்தில் நிகழும் காட்சிகளில் பொதிந்திருக்கும் அழகையும் புதிர்த்தன்மையையும் மீண்டும் மீண்டும் பல இடங்களில் கண்டடைந்தபடி விரிகின்றன கல்யாண்ஜியின் கவிதைகள்.
ஒரு காட்சியில் மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்  ஒரு பெண் இடம்பெறுகிறாள். அவள் தலையிலிருந்து மழைநீர் சொட்டுசொட்டாக சொட்டிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சொட்டு மழைநீரிலும் அவள் நனைந்து நடந்தபடி இருக்கிறாள்.
தள்ளுவண்டியில் மரச்சீனி விற்கும் ஒரு பெண்ணைப்பற்றிய சித்திரம் வேறொரு கவிதையில் இடம்பெறுகிறது. ஒரு பழைய தராசில் சீனிக்கிழங்குகளை வைத்துவிட்டு நிறுத்து எடைபோடுகிறாள் அவள். அப்போது அங்கே பறந்துவரும் ஒரு மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி அவள் தலையில் தற்செயலாக அமர்கிறது. ஒருகணம் அவள் உச்சந்தலையில் உட்கார்ந்துவிட்டு உடனே பறந்துபோகிறது. தன் காலிடையே அந்தப் பெண்ணையே சுமந்துசெல்வதுபோலத் தோற்றமளிக்கிறது அக்காட்சி.

உங்களிடம் என்னுடைய அந்தப் பழைய படம்
இருப்பதில் மகிழ்ச்சியே
நான் சொல்வதெல்லாம் அதை என்னிடம்
காட்டியிருக்க அவசியமில்லை என்பதுதான்
என்று தொடங்கும் ஒரு கவிதை தொகுப்பின் ஒரு முக்கியமான கவிதை. ஒரு பிரகடனம்போலவோ அல்லது ஒரு வருத்தக்குறிப்பு போலவோ அமைந்திருக்கும் இக்கவிதையை வாசிக்கும்போது மனம் தன்னையறியாமல் பதற்றம் கொள்கிறது. நெருங்கி வருபவர்களை மறுகரைக்கு அனுப்பிவைக்கும் புதிர் முதலில் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது. பிறகு, தன்னைக் கலைத்துக்கொள்ள விரும்பாத கலைஞனின் குரலாகவே அந்த வேண்டுகோளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை மெல்ல மெல்ல புரிந்துகொள்ள முடிகிறது. சிப்பிகளுக்காக அலைகளையும் கரையையும் மாறிமாறிப் பார்த்தபடி கவனத்தைக் குவித்திருக்கும் சிறுமிபோல காட்சித்துண்டுகளுக்காக கணந்தோறும் காத்திருக்கிறார் கவிஞர்..

ஒரே ஒரு நாரத்தங்காய் மணி கட்டிய பசு இருந்தது
எங்கள் தொழுவில்
தொழு போனபின்
ஒரே ஒரு நாரத்தங்காய் மணி மட்டும் இருந்தது
எங்கள் பரணில்
பரண் போனபின்
ஒரே ஒரு நாரத்தங்காய் மணி மட்டும் இருக்கிறது
என்னுடன்
எங்கும் போய்விடாமல்
ஒரே ஒரு நாரத்தங்காய் மணிக்குள் வைத்திருக்கிறேன்
ஒரு பரணை, ஒரு தொழுவை, ஒரு பசுவை

தொழுவைக் காட்டி, தொழுவில் உலவும் பசுவைக் காட்டி, பசு அணிந்திருக்கும் மணியைக் காட்டி அற்புதமான படக்காட்சித்தொகுப்பு போல தொடங்குகிறது கவிதை.. ஆனால் அது ஒரு காலம்.  இன்றில்லை. ஒவ்வொன்றாக அனைத்தும் போய்விட்டன. இருப்பதெல்லாம் அந்த மணி மட்டுமே. அந்த மணியை முன்வைத்து மற்றவற்றையெல்லாம் கற்பனையில் விரித்தெடுக்க விரும்புகிறது மனம்.
விசைகொண்ட ஒரு பறவை விரிவிலிருந்து புள்ளியை நோக்கியும் புள்ளியிலிருந்து விரிவை நோக்கியும் மாறிமாறிப் பறந்தபடி இருப்பதுபோல, கல்யாண்ஜியின் கவிதைகள் பறப்பதற்கு ஏற்றவகையில் இலகுவான இறக்கைகள் கொண்டவையாக உள்ளன. விரிவில் தொடங்கி புள்ளியில் முடிவடைகின்றன. புள்ளியைச் சுடரவைத்து தொலைவிலிருக்கும் விரிவை உணரவைக்கின்றன.

(அந்தரப்பூ- கவிதைகள். கல்யாஞ்னி. சந்தியா பதிப்பகம், 53வது தெரு, 9வது அவென்யு, அசோக்நகர், சென்னை-83. விலை. ரூ.100)


(மலைகள் 150 வது சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட புத்தக அறிமுகக்கட்டுரை)