சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா. தமிழின் முக்கியமான மரபுக்கவிஞர். தனித்தமிழில் ஈடுபாடு கொண்டவர். அவர் கவிதை என்னும் சொல்லுக்கு இணையாக பாடல் என்னும் சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆங்கிலத்திலும் இவர் புலமை பெற்றவர். பல சங்கப்பாடல்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவை ஏற்கனவே சிறுசிறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கலிங்கத்துப்பரணியையும் மொழிபெயர்த்திருக்கிறார். வள்ளலாரின் சில தேர்ந்தெடுத்த பாடல்களும் பாரதிதாசனின் சில பாடல்களும் கூட தங்கப்பாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாடல்களைப்போலவே தங்கப்பாவின் உரைநடையும் சுவையானது. வாழ்க்கையை மனத்துக்குப் பிடித்தமாக அமைத்துக்கொள்வது என்பது ஒரு கலை. ஒவ்வொரு நொடியையும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதிலேயே செலவழித்து சலித்துக் களைப்பதற்கு மாறாக, ஒவ்வொரு நொடியையும் தன் நெஞ்சையும் நினைவுகளையும் நிறைத்துக்கொள்ளும்வண்ணம் அமைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் உண்டு என உணர்ந்தவர் தங்கப்பா. அடுத்தவர்களிடம் அன்போடு இருத்தல், எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்தல், மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தல்
என சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொண்டால் நம்மால் தங்கப்பாவின் வாழ்க்கைப்பார்வையைப் புரிந்துகொள்ள முடியும். ’எது வாழ்க்கை’ என்னும் நூல் முழுக்க அத்தகைய கட்டுரைகளே உள்ளன.
ஒருமுறை நான் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் எழுதிமுடித்த ஒரு கட்டுரை அவர் மேசை மீது வைக்கப்பட்டிருந்தது. நான் அக்கட்டுரையின் தலைப்பை மட்டும் பார்த்தேன். பாட்டு வாழ்க்கை. மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தேன். அந்தச் சொல்லிணைவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “அது என்ன பாட்டு வாழ்க்கை?” என்று வியப்புடன் கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. மாறாக ஒரு புன்னகையோடு “நீ என்ன நினைக்கிறாய், சொல் பார்ப்போம்” என்றார்.
அடிப்படையில் பாட்டு என்பது ஒரு சட்டகம். சொற்கள், தாளம், இசை போன்றவற்றால் உருவாக்கப்பட்ட வசீகரமான சட்டகம். அந்த ஒருங்கிணைவு மிகமுக்கியம். வாழ்க்கையிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உண்டு. அந்த ஒழுங்குடன் அமைந்ததே வாழ்க்கை. அந்த ஒழுங்கு வாழ்க்கைக்கு இனிமை தரும். எக்கணமேனும் அந்த ஒழுங்கு பிசக நேர்ந்தால், வாழ்க்கையின் இனிமை குன்றத் தொடங்கும். இவ்விதமாக நினைவுகள் புரண்டன. அதையே அவரிடம் சொன்னேன்.
அவர் இல்லை என்பதுபோலத் தலையசைத்தார். ”வழக்கமாக ஒவ்வொரு நாளும் செய்வதையே அட்டவணை மாறாமல் அப்படியே செய்வது ஒரு வாழ்க்கை. அட்டவனை பிசகுவதைப்பற்றி வருத்தப்படாமல் கற்பனையில் மிதந்தும் மனம்போன திசையில் நடந்தும் கற்பனையில் திளைத்தும் வாழ்வது ஒரு வாழ்க்கை. முதலில் சொன்னது உரைநடை வாழ்க்கை. அடுத்து சொன்னது பாட்டு வாழ்க்கை” என்றார்.
நான் அக்கட்டுரையை அவரிடமிருந்து வாங்கி அந்த இடத்திலேயே அமர்ந்து படித்துமுடித்தேன். உலகியல் நோக்கங்களைப்பற்றி மட்டுமே நினைத்து பொழுதெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பதில் பொருளில்லை. நம் வாழ்க்கையை ஒரு போதும் எந்திரத்தனமாக மாறிவிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஒரு சிறிய இடைவெளியைக் கண்டுபிடித்து சிரிப்பும் விளையாட்டுமாக வேறுவிதமாக வாழ்ந்து பார்க்கலாம். மனைவி, பிள்ளைகளோடு நேரத்தைச் செலவு செய்யலாம். பயணம் செல்லலாம். எதைச் செய்தால் அனைவரும் மகிழ்ச்சிகொள்வார்களோ, அதைச் செய்து மகிழ்ச்சியடையலாம். அலுவலகம் செல்வதும் கடமைகளைச் செய்வதும் உரைநடை வாழ்க்கை. குழந்தைகளுக்குப் பொம்மைகள் செய்துகொடுப்பதும் அவர்களோடு சேர்ந்து பட்டம் விட்டு விளையாடுவதும் பாட்டுவாழ்க்கை.
அலுவல் பார்க்கத்தான் வேண்டும், பொருள் ஈட்டத்தான் வேண்டும். அந்த முயற்சிகளிலிருந்து யாரும் பின்வாங்கிவிடவும் கூடாது. விட்டுவிடவும் கூடாது. அத்தோடு சற்றே வாழ்க்கையைச் சுவையாக வாழவும் தெரிந்திருக்கவேண்டும் என்பதுதான் தங்கப்பாவின் பார்வை. அவரைப் பொறுத்தவரையில் கல்லூரிக்கு தினமும் சென்று பாடம் நடத்துவது ஒருவித உரைநடை வாழ்க்கை. அதே தருணத்தில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் பிள்ளைகளை அமரவைத்துக்கொண்டு , பையில் உப்புக்கடலையும் மணிலாக்கொட்டையும் நிரப்பிக்கொண்டு சிரித்துப் பேசியபடி ஏரிக்குப் போவதும் பறவைகள் பார்ப்பதும் மரக்கிளைகளில் ஏறி ஊஞ்சலாடுவதும் பாட்டு வாழ்க்கை. விறைத்துக்கொண்டே வாழாமல் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவும் வாழ்ந்து பார்க்கலாம். ஒரு காட்டுக்குள் மரம் வெட்டச் செல்பவனும் விலங்குகளை வேட்டையாடச் செல்பவனும் போல நமக்குநாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளுக்குள் முடங்கி வறட்டுத்தனமாக வாழ்வது உரைநடை வாழ்க்கை. காட்டுக்குள் மலர்ந்து மணம்பரப்பும் பூக்களைக் காணவும் விதவிதமான ஓசைகளோடு பறந்து திரியும் பறவைகளைப் பார்க்கவும் நெளிந்தோடும் நீரோடைகளையும் பார்க்கவும்
செல்லும் பயணியைப்போல சுதந்திரமாக இயற்கையில் தோந்து வாழ்வது பாட்டு வாழ்க்கை.
சிறப்பான கட்டுரை. ஒரு கோணத்தில், ஒவ்வொரு முறையும் நம் எல்லையை நாமே மீறிச் செல்வதன் வழியாக அடையப்பெறும் மகிழ்ச்சியையே அவர் பாட்டு வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். நம் எல்லையை நாமே மீறுவது என்பது, நம் எல்லையை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே செல்வதாகும்.
அடுத்து சில மாதங்களில் வாழ்வியல் அனுபவக்கட்டுரைகள் பலவற்றை ஒன்றையடுத்து ஒன்றாக அவர் எழுதிமுடித்தார். பிறகு, அந்த ஆண்டு இறுதியில் அவற்றைத் தொகுத்து ‘பாட்டு வாழ்க்கை’ என்ற தலைப்பிலேயே புத்தகமாக வெளியிட்டார். முதல் பதிப்பில் ஏழு கட்டுரைகள் மட்டுமே இருந்தன. அடுத்த பதிப்பில் மேலும் ஆறு கட்டுரைகள் சேர்க்கப்பட்டன.
இத்தொகுதியில் உள்ள ‘என்ன கெட்டுவிட்டது?’ ஒரு முக்கியமான கட்டுரை. இந்த ஒரு தொடருக்கு நம் எல்லையை விரிவாக்கும் ஆற்றல் உள்ளது. இதன் வழியாக ஒரு புதிய வாழ்க்கைமுறைக்கு நம் உள்ளம் பழகுகிறது. நம் சிக்கல்களின் பிறப்பிடமே நம் உள்ளம். உள்ளம் சரியாக இருந்தால் எதையும் நாம் எதிர்கொள்ள முடியும். எதிலும் சிக்கல் இல்லாமல் தப்பிக்கலாம். பார்ப்பதற்கு ஓர் எளிய நடைமுறைத் தந்திரம் போல இது தோற்றமளித்தாலும் இதில் ஆழ்ந்த பொருள் இருப்பதை கட்டுரையை முழுமையாக வாசித்தபிறகு உணர்ந்துகொள்ளலாம்.
‘என்ன கெட்டுவிட்டது?’ என்பதற்குப் பொருத்தமான பல எடுத்துக்காட்டுகளை இக்கட்டுரை முழுதும் அடுக்கிவைத்திருக்கிறார் தங்கப்பா. எடுத்துக்காட்டாக, நாம் குளிப்பதற்காக வேகமாக குளியலறைக்குள் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். உள்ளே சென்றபிறகுதான் குழாயில் வெந்நீர் வரவில்லை என்னும் உண்மையைத் தெரிந்துகொள்கிறோம். அக்கணம் விர்ரென்று உச்சிக்கேறும் சினத்தை ‘இப்போது என்ன கெட்டுவிட்டது?’ என நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வியால் ஆற்றிவிட முடியும். இன்னொரு எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில்
வேலை செய்கிறவருக்கு திடீரென இடமாற்றம் வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது உருவாகும் எரிச்சலையும் தன்னிரக்கத்தையும் ‘இப்போது என்ன கெட்டுவிட்டது?’ என கேட்டுக்கொள்ளும் கேள்வி ஆறுதலையும் தெம்பையும் வழங்குகிறது. அந்த ஊரிலும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள், அந்த வாழ்க்கையையும் பழகி அறிந்துகொள்ளலாமே என நேர்மறையாக நினைக்கும்போது மனச்சுமை இறங்கிவிடுகிறது.
வாழ்க்கையில் அவ்வப்போது அவலங்கள் ஏற்படுவது இயற்கை. அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வதே நல்லது. மாறாக, அவற்றைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவதோ, துயரத்தில் மூழ்குவதோ கூடாது. தன்னிரக்கம் என்பது நம்மை கொஞ்சம்கொஞ்சமாக கொன்று தின்னும் விலங்கு. அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அவலமும் வாழ்வின் ஒரு பகுதியே. அதைக் கடந்துசெல்லும் வழியறிந்து கடப்பதே நல்ல வழி. நம் வாழ்வில் நிகழும் அவலங்கள் ஒருவகையில் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. அந்த அவலம் நம் வாழ்வில் நிகழ என்ன காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும் வாய்ப்புகளை நமக்கு வழங்குகின்றன. அதனால் பிறக்கும் தெளிவு ஓர் அனுபவப்பாடம்.
‘எதிர்விசை தவிர்த்தல்’ என்பது இன்னொரு முக்கியமான கட்டுரை. விசை என்பது ஒருவரிடம் செயல்படும் ஆணவம். ஆணவத்தை எதிர்கொள்ளும் வழி நம்முடைய ஆணவத்தைத் துறத்தல் மட்டுமே. தங்கப்பா தன் கட்டுரையை ஒரு நடைமுறைக் காட்சியை முன்வைத்துத் தொடங்குகிறார். அக்காட்சியில் கடற்கரையில் இடுப்பளவு நீரில் அலைகளுக்கிடையில் ஒருவர் நின்றுகொண்டு குளிக்கிறார். ஒவ்வொரு முறையும் அலை அவரை நோக்கிப் பாய்ந்துவருகிறது. அப்போது அவர் குனிந்து நீருக்குள் மூழ்கிக்கொள்கிறார். அலை கடந்துபோனதும் எழுந்து நிற்கிறார். சில நொடிகளில் அடுத்த அலை வருகிறது. அப்போதும் அவர் வேகமாகக் குனிந்துகொள்கிறார். அந்த அலை கடந்துபோனதும் மீண்டும் எழுந்து நிற்கிறார். எதிர்விசை தவிர்க்கும் திட்டத்தால் அலைகளுக்கு நடுவிலும் இழுபட்டுப் போகாமல் நின்ற இடத்திலேயே நின்று அவரால் குளிக்கமுடிகிறது. வாழ்க்கையிலும் எதிர்விசை தவிர்க்கும் கலையை நாம் கடைபிடித்தால் பல மோதல்களைத் தவிர்க்கமுடியும். பல வேண்டாத எதிர்ப்புகளைத் தவிர்த்துவிடலாம்.
தங்கப்பா வாழ நினைத்ததும் வாழ்ந்ததும் ஒருவித பாட்டுவாழ்க்கை. பேராசைக்கு இடமின்றி, சுற்றியிருப்பவர்களோடுன் நட்பு பேணி இயற்கையோடு இயைந்துவாழும் ஒருவித எளிய வாழ்க்கை. அன்போடும் கனிவோடும் மாந்தர்களோடு பழகி, வியப்பையும் மகிழ்ச்சியையும் அனைவரோடும் பகிர்ந்து வாழும் வாழ்க்கை. நினைத்தால் நம் அனைவருக்கும் சாத்தியப்படக்கூடிய வாழ்க்கையே என்பதில் ஐயமில்லை.
நூலின் இறுதியில் ‘இருவேறு வாழ்க்கை’ என்னும் தலைப்பில் ஒரு பாடல் உள்ளது. வாழ்வின் இருவேறு போக்குகள் அழகாக அடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. நம்முடைய தேர்வு என்ன என்பதை நாமே முடிவுசெய்யவேண்டும்.
‘கடலுக்குள் மூச்சடக்கி முத்தெடுத்து வந்து
காசுபணம் பண்ணிடுதல் அதுவேறு வாழ்க்கை
கடலோரம் அழகழகுக் கிளிஞ்சல்கள் பொறுக்கி
கலைவடிவம் சமைத்திடுதல் இதுவேறு வாழ்க்கை
புத்தகங்கள் பலஎழுதி ஆய்வுரைகள் இயற்றி
புகழுக்கே ஏங்கிடுதல் அதுவேறு வாழ்க்கை
எச்செயலும் அச்செயல்மேல் அன்பாலே செய்தல்
இயல்பாக வாழ்ந்திடுதல் இதுவேறு வாழ்க்கை’.