Home

Saturday, 23 February 2019

புல்லாங்குழல் - கட்டுரை



பள்ளிக்கூடத்தில் பாடம் இல்லாத நேரங்களில் எதைக் குறித்த பேச்சாக இருந்தாலும் என்னமோ ஓர் உலக அதிசயத்தைப்பற்றிய பேச்சைப்போல  நடித்து இட்டுக்கட்டிப் பேசுவதுதான் பழக்கம். சினிமா, நாடகம், கூத்து, குழாயடிச் சண்டை, மூணு சீட்டு ஆட்டம் எல்லாமே எங்களுக்கு அதிசயங்கள்தான். கண்டதையும் காணாததையும் இழுத்து இழுத்துப் பேசுவோம்.

ஒருநாள் மாணிக்கம் எப்போதோ பார்த்த தெருக்கூத்தில் மோகினி வேஷதாரி செய்த சில்மிஷங்களை ஜோடனையோடு சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் நடுவில் புகுந்த குமரவேல்  ஏரிக்கரையோரத்தில் தெலுங்குக்காரக் கூட்டமொன்று கிடை போட்டிருப்பதாகவும் சதுரம்சதுரமாக முள்வேலி கட்டி ஆடுகளை அடைத்திருப்பதைப் பார்த்ததாகவும் சொல்லி அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பினான். “எப்படியும் நூறு நூத்தியம்பது ஆடு இருக்கும்என்று புருவங்களை உயர்த்திக்கொண்டு சொன்னான்.
மறுநாள் காலையிலேயே தோப்புக்குப் போகிற சாக்கில் ஏரிக்கரைக்கு ஓடி ஆட்டுக்கிடையைப் பார்த்துவிட்டேன். காதில் விழுந்த ம்மே குரலுக்கு இசைவான ம்மே குரல் தன்னிச்சையாக என் நெஞ்சில் எழுந்தது. நாவல்பழங்களென மின்னும் விழிகளை உருட்டி ஆடுகள் நாலுபக்கமும் பார்த்தபடி இருந்தன. இன்னும் அருகில் சென்று அவற்றைப் பார்க்க நினைத்தபோது, ஒரு புல்லாங்குழலின் இசை சட்டென என் கவனத்தைத் திசைதிருப்பியது. கோணல் பனைமரத்தடியில் போட்டிருந்த கட்டிலில் அமர்ந்தபடி ஒருவன் குழலூதிக்கொண்டிருந்தான். அருமையான இசை. ஒருகணம் ஏரி, ஆடு, உலகம் எல்லாமே மறந்துவிட சிறகசைத்து வானில் மிதப்பதைப்போல இருந்தது.
குழலோசை நின்றது. கைகளை உயர்த்தி இடுப்பை வளைத்து நெட்டி முரித்தபடியே கட்டிலிலிருந்து இறங்கினான் அவன். என்னுடைய வயதுதான் இருக்கும். தலைநிறைய அடர்த்தியான முடி. மேல்சட்டை இல்லை. கழுத்தில் ஒரு தாயத்து தொங்கியது. மார்பெலும்பு வரிசையை எண்ணிவிடலாம்போல தெரிந்தது. சதைப்பற்றே இல்லாத குச்சி உடல். அவன் உடலுக்கு சற்றும் ஒவ்வாத அலட்சியமான பார்வை அவன் கண்களில் நிறைந்திருந்தது.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான் அவனிடம் உன் வாசிப்பு ரொம்ப நல்லா இருந்தது. இது எந்தப் பாட்டு?” என்று கேட்டேன். அவன் எரிச்சலுற்றவனைப்போல உடனே?” என்று குரலை இழுத்தவனாக என்னை வெறுப்போடு பார்த்தான். நான் அவனுடைய கையிலிருந்த புல்லாங்குழலையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் கரிய நிறமும் பளபளப்பும் ஆச்சரியமூட்டின.
நீ புல்லாங்குழல் வாசிப்பியா?” என்று உற்றுப் பார்த்தபடி கேட்டான். நான் ஆமாம் என்பதுபோல தலையசைத்தேன். “ரங்கராஜன் மாஸ்டர்கிட்ட கத்துக்கறேன். வாரத்துக்கு ரெண்டுநாள் க்ளாஸ். போட்டில ப்ரைஸ்லாம் வாங்கியிருக்கேன்என்றேன். பிறகு மெதுவாகநீ பாடினது என்ன பாட்டு?” என்று மீண்டும் கேட்டேன். “பாரதியார் பாட்டு, ஆண்டாள் பாட்டு, சினிமா பாட்டு, அந்த மாதிரி....?”
அவன் உடனே முகத்தைச் சுருக்கி கையை உயர்த்தி இல்லை என்பதுபோல தலையசைத்தான். “எல்லாத்தயும் நானா சொந்தமா கட்டித்தான் பாடிடுவன். நேரா இங்கேருந்து வருதுஎன்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியபடி சொன்னான்.
பள்ளிக்கூடத்தில் அவனைப்பற்றிய கதையைச் சொன்னபிறகு நண்பர்களுக்கும் அவனைப் பார்க்கும் ஆசை எழுந்தது. அன்று பள்ளிக்கூடம் விட்டதும் அவர்களையெல்லாம் நேராக ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு பகுதி ஆடுகள் மட்டுமே அங்கிருந்தன. புல்லாங்குழல்காரனை எங்கும் காணமுடியவில்லை. நண்பர்கள் என்னை சந்தேகத்தோடு பார்த்தார்கள். “குழல் வாசிக்கிற அண்ணன் இன்னும் வரலையா?” என்று நான் அங்கிருந்த பெரியவரிடம் கேட்டேன். அவர் பதில் எதுவும் பேசாமல் உதட்டைப் பிதுக்கினார். நண்பர்கள் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார்கள். மனவருத்தத்தோடு நான் மட்டும் அங்கேயே ஒரு பனைமரத்தடியில் உட்கார்ந்தேன். அவன் முன்னால் என் திறமையைக் காட்டவேண்டும் என ஆவலோடு கொண்டுவந்த என் புல்லாங்குழலை எடுத்து எனக்குப் பிடித்ததுன்பம் நேர்கையிலேபாட்டை வாசிக்கத் தொடங்கினேன்.
நல்ல வேளை. பாடல் முடியும் தருணத்தில் அவன் வந்துவிட்டான்.  ஒனக்குள்ள நல்ல தெறமை இருக்குதுஎன்று சொன்னான். பிறகு கூடாரத்துக்குள் சென்று தன் குழலை எடுத்து வந்து என் முன்னால் மேட்டில் உட்கார்ந்து ஒரு பாட்டை வாசித்தான். பூக்கள் மீது அமரும் தேனீக்களென அவன் விரல்கள் குழலின் துளைகள்மீது பட்டு விலகிய வேகம் அதிசயமாக இருந்தது. காற்றின் வேகத்திலேயே ஆற்றின் போக்கில் செல்லும் படகுபோல அவன் இசை எங்கோ சென்றது. ஒரு கட்டத்தில் சட்டென நிறுத்தி என்னைப் பார்த்தும். நீ பாடு, பார்க்கலாம்என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். ஒரு கணம் கண்களை மூடி அந்த இசையின் தடத்தை நடந்துமுடிந்த கனவைத் தொகுத்துப் பார்த்துக்கொள்வதுபோல மனசில் தொகுத்துக்கொண்டு வாசித்தேன். “வித்தைக்காரன்தான் நீஎன்று பக்கத்தில் வந்து சொன்னான். அதற்குப் பிறகுதான் என் மீது காரணமில்லாமல் வெறுப்பைக் கொட்டுவதை மெல்ல மெல்ல நிறுத்தினான் அவன்.
ஒவ்வொரு நாளும் அவன் எனக்கொரு புதிய பாட்டைக் கற்றுக்கொடுத்தான். ஒருமுறை பாடிய தாளக்கட்டில் ஒருபோதும் அவன் அடுத்தமுறை பாடுவதில்லை. ஒவ்வொரு முறையும் புதிய ராகம். புதிய இசைக்கோவை.
ஒருநாள்ஒரு கேள்வி கேக்கறேன். பதில் சொல்றியா?” என்று கேட்டான் அவன். என்ன என்பதுபோல நான் அவன் முகத்தைப் பார்த்தேன். “இந்தப் புல்லாங்குழல் இருக்குதே, அது எந்தக் கடவுளுக்குச் சொந்தம்?” என்று கேட்டான். ஒருகணம் கூட யோசிக்காமல் நான்இது என்ன கேள்வி, கிருஷ்ணனுக்குத்தான் குழல் சொந்தம்என்றேன். அவன் சிரித்தபடிஇல்ல, முருகனுக்குத்தான் சொந்தம்என்று பதில் சொன்னான். “அது எப்படி?” என்று குழப்பத்தோடு நான் எழுந்துவிட்டேன். “நீ படிச்சவன்தான? யோசிச்சி ஏன்னு கண்டுபிடிஎன்று சொன்னபடி புல்லுக்கட்டுகளைப் பிரித்து உதறப் போய்விட்டான்.
ஒருமுறை எங்கள் அப்பாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடவேண்டுமென ஒரு சூரணம் கொடுத்திருந்தார் வைத்தியர். “எங்கடா போவறது ஆட்டுப் பாலுக்குஎன்று அம்மா தவித்தபோது அந்தப் பிரச்சினையை மிக எளிதாக நான் தீர்த்துவைத்தேன். கிடைக்குச் சென்று ஒரு பாலாடை நிறைய பால் வாங்கி வந்தேன். புல்லாங்குழல்காரனே கறந்து கொடுத்தான்.
அவனிடம் விதம்விதமான அளவுகளில் நிறைய புல்லாங்குழல்கள் இருந்தன. அவற்றை என்னிடம் ஒருமுறை பெருமையாகக் காட்டினான். அபூர்வமான நிறக்கலவைகளில் மூங்கில் கிட்டும்போதெல்லாம் அவற்றை பதப்படுத்தி குழல் செய்து பாதுகாப்பது தன் பொழுதுபோக்கு என்றான். “இது மட்டும் ஒரு காட்டுல ஒரு சாமியார் கொடுத்தார்என்று வெள்ளை நிறத்திலிருந்த குழலை எடுத்துக் காட்டினான். நான் அதை ஆச்சரியமாகப் பார்த்தேன். “இந்தா பாருஎன்றபடி அவன் அந்தக் குழலை என் கையிலேயே கொடுத்துவிட்டான். நான் அதை வாங்கி இரு கைகளிலும் ஏந்தி உருட்டி உருட்டிப் பார்த்தேன். ஒரே சீராக செதுக்கப்பட்ட சின்னச்சின்ன வட்டத்துளைகள் ஒரு கோணத்தில் என்னையே பார்க்கும் விழிகளெனத் தோன்றின.
என்ன பார்க்கிற? மூங்கில்னு நெனச்சிட்டியா? அசல் கரடி எலும்புஎன்று சிரித்தான் அவன். ஒருகணம் என் உடல் நடுங்கிக் குளிர்ந்தது. “என்னடா, பயந்துட்டியா?” என்று சிரித்தபடியே வாங்கி வைத்துக்கொண்டான் அவன். நான் அவனிடம் தயக்கத்தோடுஉண்மையிலேயே அது கரடி எலும்புதானா?” என்று கேட்டேன். “சத்தியம். சத்தியம். சத்தியம்என்றபடி அந்தக் குழலை உதட்டோரம் வைத்து இசைக்கத் தொடங்கினான் அவன். ”எந்தப் பாட்டு மாதிரியும் இல்லாம உனக்கு மட்டும் புதுசுபுதுசா எப்படி இதெல்லாம் தோணுது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன். புன்னகைத்தபடி அவன் எல்லாம் இங்கேருந்து வருது, இங்கேருந்துஎன்று தன் நெஞ்சை அடித்துக் காட்டினான்.
ஏரில அந்தக் கரையோரமா ஆடுங்க மேயற எடத்துல ஒரு நல்ல மூங்கில் பார்த்து வச்சிருக்கேன். குழல் செய்ய ஏத்த மூங்கில். இன்னும் பக்குவத்துக்கு வரலை. அடுத்த வாரம் செய்யும்போது ஒனக்கும் ஒன்னு செஞ்சித் தரேன். என் ஞாபகமா வச்சிக்கோஎன்று சொல்லிக்கொண்டே கூடையை எடுத்துக்கொண்டு நடந்துபோய்விட்டான். பழகிய சில நாட்களிலேயே அவனுக்கும் எனக்கும் நெருக்கம் வளர்ந்துவிட்டது.
சரியாக ஒரு வாரம் கழித்து அந்தப் புல்லாங்குழல் விஷயத்தைப்பற்றி பேச்சோடு பேச்சாகக் கேட்டேன். “இன்னும் ரெண்டுநாள்ள செஞ்சிடலாம். பொறுத்துக்கோஎன்றான். நான் என்னுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு எனக்கே எனக்கென கிடைக்கப்போகும் குழலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.
ஆனால் இரண்டு நாட்கள், இரண்டு நாட்களென பல நாட்கள் கடந்து சென்றன. அவன் அதைப்பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. பிறகு அவனாகவேஅங்க கொஞ்சம் வேலை இருந்தது” “மூங்கில் இன்னும் சரியா முத்தலைஎன்று மனசுக்குத் தோன்றிய காரணங்களையெல்லாம் சொன்னான். நான் அதற்கும் பதிலொன்றும் சொல்லவில்லை.
மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைத்திருந்த சமயத்தில் அப்பாவுக்கு மீண்டும் மஞ்சள் காமாலை வந்துவிட்டது.  வைத்தியர் மருத்துவமனையில் காட்டும்படி கைகாட்டிவிட்டார். அம்மாவும் நானும் வீடு, மருத்துவமனை என மாறிமாறி ஓடிக்கொண்டிருந்தோம். அப்பா குணமடைந்து வீடு திரும்ப ஒரு மாதத்துக்கும் மேல் ஓடிவிட்டது.
ஒருநாள் அடுப்புக்கு விறகு சேகரித்து வருவதற்காக ஏரிக்கரையின் பக்கம் சென்றிருந்தேன். கிடை எதுவும் அப்போது காணப்படவில்லை. வேறு ஊர்தேடி சென்றிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். ஒருகணம் புல்லாங்குழல்காரனின் நினைவு பொங்கி வந்தது. எங்கிருந்தோ ஓர் இசைத்துணுக்கு மழையெனப் பொழிவதுபோல இருந்தது. அவன் கொடுப்பதாக வாக்களித்திருந்த புல்லாங்குழலைப்பற்றியும் நினைவுகள் அலைமோதின. எதையோ இழந்ததுபோல ஒரு வலி ஒரு கணம் பரவி அடங்கியது. மறுகணமே அதைக் கடந்துவந்துவிட்டேன்.
செலவை முன்னிட்டு ஏற்கனவே இசைப்பயிற்சியிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தேன். குழலுக்கான உடனடித்தேவை எதுவும் இல்லை என்பது அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது. அதற்குப் பிறகும் அதற்கான தேவை எழவே இல்லை.