Home

Thursday, 7 February 2019

நாவல் பழம் - கட்டுரை




இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிவசமுத்திரத்தையும் மைசூரையும் இணைக்கும் வழித்தடத்தை   ஆய்வு செய்வதற்காகச் சென்றிருந்தேன். சிவசமுத்திரத்தைச் சேர்ந்த நண்பரொருவர் எனக்குத் துணையாக வந்திருந்தார். கடுமையான வெயில். நாங்கள் கொண்டுசென்றிருந்த தண்ணீர்ப்பாட்டில்கள் எல்லாமே காலியாகிவிட்டன. ”கோயில் பக்கம் போயிட்டா கிடைக்கும் சார்என்று நண்பர் தொலைவில் தெரிந்த கோபுரத்தைக் காட்டினார்.
வேர்வை வழியவழிய நடந்து சென்றோம். வழிநெடுக இருபுறங்களிலும் மல்பெரித் தோட்டங்கள் பச்சை நிறத்தில் விரிந்திருந்தன. வெயிலில் அவற்றின் இலைகள் தாம்பூலத்தட்டுகள் போலப் பளபளத்தன. சொட்டுநீர்ப்பாசன ஏற்பாட்டில் சுழன்றுசுழன்று வெள்ளிமணிகளெனத் தெறித்த நீர்த்துளிகளை கைகுவித்து ஏந்திக்கொள்ளலாம் போல இருந்தது. ”அந்தத் தண்ணீரையே அருந்தலாமா?” என்று நண்பரிடம் கேட்டேன். “வேணாம் சார். இதோ நெருங்கிட்டோம். கோயிலுக்கே போயிடலாம்என்றார்  நண்பர்.
ஒரு காலத்துல இந்த இடமெல்லாம் பெரிய தோப்பா இருந்தது சார். பட்டுப்புழு தொழில் சூடு பிடிச்சதுமே எல்லாத்தயும் அழிச்சி தோட்டமாக்கிட்டாங்க. வருமானத்துக்காக மக்கள் எல்லாத்துக்கும் தயாரா இருக்காங்க சார்என்ற நண்பரின் குரலில் எதையோ இழந்துபோன ஆதங்கம் வெளிப்பட்டதை உணரமுடிந்தது.
கோயிலுக்கு அருகில் ஒரு மரத்தடியில் இளநீர்க்குலைகளைப் பரப்பிவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் ஒருவர். ஆளுக்கு ஒரு இளநீர் அருந்தினோம். எதிர்ப்புறத்தில் இன்னொரு மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு பாட்டியிடமிருந்து தொன்னைகளில் நாவல் பழங்கள் வாங்கிவந்து என்னிடம் கொடுத்தார் நண்பர். கொஞ்சமாக சதைப்பகுதியைக் கடித்துத் தின்றேன். அருமையான சுவை.
ஆறேழு சிறுவர்கள் கூட்டமாகச் சென்று பாட்டியைச் சுற்றி வட்டமாக உட்கார்வதைப் பார்த்தேன். “வாங்க வாங்க கண்ணுகளா, வாங்கஎன்று அந்தப் பாட்டி அவர்களை அழைத்தபடி ஆளுக்கொரு தொன்னையை நீட்டினார். எல்லாவற்றிலும் நாவல் பழங்கள் இருந்தன.
ஒருவன் திடீரெனநாளைக்கு எங்களுக்கு பரீட்ச ஆரம்பிக்குது பாட்டிஎன்றபடி எழுந்து நின்றான். ”கவலப்படாம எழுது ராஜா. போய்வா.  நூத்துக்கு நூறு நிச்சயம்என்றாள் பாட்டி. உடனே இன்னொருவன் கையைத் தூக்கிஅப்ப எனக்கு?” என்று கேட்டான். “உனக்கும் நூறுதான்என்று சொன்னாள் பாட்டி. அதைத் தொடர்ந்து கேட்ட எல்லாப் பிள்ளைகளிடமும் நூறு நூறு என்றே சொன்னாள். உரையாடலின் முடிவில் திடீரென ஒரு சிறுவன்உன் வயசென்ன பாட்டி?” என்று கேட்டான். பாட்டி அதற்கும் சிரித்தபடியேநூறுஎன்றாள். சிறுவர்கள் எல்லோரும் என்று சிரித்தபடி ரயில் எஞ்சின்போல ஒருவர் பின்னால் ஒருவரென சட்டையைப் பிடித்தபடி அங்கிருந்து எழுந்து ஊரைநோக்கி ஓடினார்கள்.
நான் நண்பரைப் பார்த்தேன். என் கேள்வியைப் புரிந்துகொண்டதுபோலபாட்டி எப்பவுமே அப்படித்தான் சார். சிரிச்சிகிட்டே இருக்கும். ரொம்ப நல்ல பாட்டிஎன்றார். அப்போதுதான் பழம் வாங்கிய பிள்ளைகளில் யாருமே பாட்டிக்கு பணம் தரவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
ரொம்ப விசித்திரமான பாட்டி சார். ஒண்டிக்கட்ட. காலையில சூரியன் உதிக்கறதுக்கு முன்னாலயே காட்டுக்குள்ள ஒரு நட போய் வந்துடும். எவ்ளோ பெரிய காத்து மழ குளிரா இருந்தாலும் சரி, எதுக்கும் அஞ்சாம பாட்டி போய் வந்துடும். திரும்பி வரும்போது கூடை நிறைய நாகப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம்னு எதயாவது ஒன்னு கொண்டாந்து இங்க ஒக்காந்துக்கும். யாரு போயி கேட்டாலும் மகராசி வாய்ல இல்லைன்னு வார்த்தயே வராது.”
நான் திடீரென நினைத்துக்கொண்டவனாகநீங்க அவங்களுக்குப் பணம் கொடுத்தீங்களா?”என்று கேட்டேன். “சார், நா குடுத்துட்டுதான் வாங்கனேன்என்று பதற்றத்தோடு சொன்னார் நண்பர்.
நாலஞ்சி வருஷத்துக்கு முன்னால இங்க வந்த டூரீஸ்ட் பஸ்ங்கள்ல ஏதோ ஒன்னுலதான் பாட்டி வந்தாங்க. திட்டம் போட்டு நடந்ததா தற்செயலா நடந்ததாங்கறதுலாம் யாருக்கும் தெரியாது. வந்த பஸ்லாம் போயிடுச்சி. இந்த பாட்டி மட்டும் தனியா நின்னுட்டாங்க. யாரு கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லலை. குனிஞ்ச தலயை நிமித்தாம ராத்திரி முழுக்க உக்காந்துட்டே இருந்தாங்க. விடிஞ்ச சமயத்துல அவங்க முகத்துல ஒரு தெளிவு வந்துட்டுது. அதுக்கப்புறம் எதக் கேட்டாலும் சிரிப்புதான். ரொம்ப சீக்கிரத்துல கைராசிப்பாட்டின்னு பேர் வாங்கிட்டாங்க
ஏராளமானவர்கள் அவரிடம் குங்குமம் வாங்கிய பிறகு எதிரில் விழிமூடி சிறிதுநேரம் அமர்ந்துவிட்டுச் சென்றார்கள். அப்போது ஒரு பெரிய கார் வந்து நின்றது. பட்டு அணிந்த ஒரு குடும்பமே இறங்கியது. அந்தப் பெரிய மனிதர் கார்ச்சாவியை பாட்டியின் காலடியில் வைத்து வணங்கிவிட்டு எடுத்துக்கொண்டு சென்றார். தட்டிலிருந்த குங்குமத்தை வந்தவர்களின் நெற்றி நிறைய பூசிவிட்டுநல்லது, இதுமாதிரி இன்னும் நூறு வண்டி வாங்கு, போஎனச் சொல்லிச் சிரிப்பதைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து ஒரு பெண்கள் கூட்டம் வந்து காலில் விழுந்து கும்பிட்டுஇன்னிக்கு நம்ம பெரியவள பொண்ணு பார்க்க வராங்க பாட்டிஎன்று சொல்வதையும்  பாட்டி எல்லோருக்கும் குங்குமம் பூசிவிடுவதையும் பார்த்தேன்.
ஆட்கள் எல்லோரும் சென்றுவிட அந்த இடம் வெறிச்சென்றிருந்தது. அக்கணத்தில்நீங்க பாட்டிகிட்ட பேசறீங்களா சார்?” என்று திடீரென கேட்டார் நண்பர். “பாட்டிக்கு தமிழ், கன்னடம், தெலுங்குன்னு எல்லா மொழிங்களும் அத்துபடி சார். ஒன்னும் பிரச்சினை இல்ல. வர ஆளுங்க போற ஆளுங்க பேசிப்பேசியே அவுங்களுக்கு கத்துக் குடுத்துட்டாங்க….” என்றார். நான் ஒருவிதமான குழப்பமான மனநிலையில் அவரோடு நடந்து பாட்டிக்கு அருகில் சென்று உட்கார்ந்துவிட்டேன்.
வா வா. இந்தா பழம். எடுத்துக்கோஎன்றபடி கூடையிலிருந்து நாவற்பழங்களை அள்ளி ஒரு தொன்னையில் நிரப்பிக் கொடுத்துவிட்டுநூறு வருஷம் நல்லா இருஎன்றபடி குங்குமம் வைத்துவிட்டார் பாட்டி. உலர்ந்த கொப்பரைபோல அவர் முகம் சுருங்கியிருக்க கோடுபோட்டதுபோல அங்கங்கே தோல் மடிந்திருந்தது. நரைத்த புருவம். உள்ளொடுங்கிய விழிகள். நெற்றியில் வட்டமான குங்குமம். எதையும் சொல்லி கண்ணீர் விடாமல், எதையும் கோரிக்கையாக முன்வைக்காமல் ஒரு சொல்லின்றி அவர் முன்னிலையில் உட்கார்ந்திருக்கும் எனது தோற்றம் அவருக்கு விசித்திரமாகத் தோன்றியிருக்கக்கூடும். கனிவுடன் என்னைப் பார்த்துஎன்ன யோசனை? என்ன பிரச்சினை? எதுவா இருந்தாலும் காத்துல பறக்கவிடுஎன்று சொல்லிவிட்டுச் சிரித்தார். எனக்கு உண்மையிலேயே அப்போது சிரிக்கவேண்டும்போல இருந்தது. பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவர் கண்களைப் பார்த்துநீங்க என்ன குறி சொல்ற சாமியாரா?” என்று மெதுவான குரலில் கேட்டேன்.
பாட்டி வாய்கொள்ளாமல் சிரித்தார். இல்லை என்பதுபோல தலையை இப்படியும் அப்படியுமாக சிறிது நேரம் அசைத்தார். பிறகுநான் வெறும் கூடக்காரிஎன்று தனக்கு முன்னால் பழம் நிறைந்த கூடையைச் சுட்டிக்காட்டினார்.
எல்லை மீறிச் செல்கிறேனோ என எனக்குள் ஒரு பதற்றம் பரவி குரல்நடுங்க வைத்தது. “அப்புறம் எதுக்கு வரவங்களுக்கு பிரசாதம் கொடுக்கறீங்க, ஏன் குங்குமம்  வச்சிவிடறீங்க? இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா தெரியுதா?”             
பாவம் நம்ம மக்கள். எல்லோரும் நல்லவங்கதான். ஆனா, கஷ்டம்னு ஒன்னு வந்தா தாங்கமுடியாம துவண்டுபோயிடறாங்க. ஒரு வார்த்தை ஒரு நம்பிக்கையை கொடுக்கும்ன்னா, அத ஏன் சொல்லக்கூடாது?” அவர் உதடுகளில் சிரிப்பு அப்படியே எஞ்சியிருந்தது.
எல்லாத்துக்கும் எதுக்கு பித்து பிடிச்ச ஆள்மாதிரி சிரிச்சிகிட்டே இருக்கீங்க?”
வாய்     விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்னு ஊருல சொல்வாங்களேபாட்டி நீண்ட நேரத்துக்கு நிறுத்தாமல் சிரித்தார். அவருடைய கைகள் குச்சிகள் போல நீண்டிருந்தன. தளர்ந்த கையை நீட்டி பாதங்களைத் தொட்டு குதிகாலை அழுத்தி நீவிவிட்டுக்கொண்டார்.
உங்களுக்கு உண்மையிலேயே நூறு வயசா?”
. நூறு. ஏன், இருக்கக்கூடாதா? நூறு எப்பவுமே ஒரு சந்தோஷமான நெம்பர். நீயும் சொல்லிப் பாரு. உனக்கும் பிடிக்கும்நெற்றியின் பக்கம் சுருண்டுசுருண்டு விழுந்த நரைத்த தலைமுடியை ஒதுக்கியபடி சிரித்தார் பாட்டி. அவர் கண்களில் குறும்பு நிறைந்திருப்பதைக் கவனித்தேன்.
ஒரு வண்டி வந்து பக்கத்து மரத்தடி நிழலில் நின்றது. கதவுகளைத் திறந்து இறங்கிய கூட்டம் பாட்டியை நோக்கி வருவதைப் பார்த்தேன். பாட்டியின் முன்னிலையிலிருந்து விலகிவர அதுவே சரியான நேரமென்று தோன்றியது. பாட்டி சிரித்தபடியே ஒரு தொன்னையில் நாவல்பழங்களை நிரப்பியெடுத்து என்னை நோக்கி நீட்டினார். “ஏற்கனவே வாங்கிட்டேனேஎன்று என் குரல் இழுபட்டது. “இருக்கட்டும். வச்சிக்கோ. வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. மனைவி, பிள்ளைகளுக்கு கொடுஎன்றார் பாட்டி.
சட்டென ஒருவித வீம்புணர்ச்சி பொங்கியெழ மெளனமாக அவரையே சிறிதுநேரம் பார்த்திருந்துவிட்டு எதையும் வாங்காமலேயே திரும்பிவிட்டேன். பேசாமலேயே என்னோடு நடக்கத் தொடங்கிய நண்பர்ரொம்ப முகராசியான பாட்டி சார். அவுங்க சிரிப்பை பார்த்துட்டு போன நாள்முழுக்க நல்ல நாளாதான் போயிருக்குஎன்று மீண்டும் பேச்சைத் தொடங்கினார்.
ஊருக்குத் திரும்பிய பிறகு அவரைப்பற்றி எல்லோரிடமும் நீண்ட நாட்கள் சொல்லிக்கொண்டே இருந்தேன். காலப்போக்கில் பேச்சிலிருந்து முதலில் மறைந்து, நினைவிலிருந்தும் மறைந்தே போய்விட்டார்.
நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சிவசமுத்திரம் சென்றிருந்தபோது, அந்தக் கோவில் பக்கமாகச் சென்றிருந்தோம். நான் மிகவும் எதிர்பார்த்துச் சென்றிருந்த பாட்டியை அங்கே காணவில்லை. தயக்கத்துடன் அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். யாருக்கும் தெரியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய கணத்தில் ஒரு கடைக்காரர்அப்பவே அந்தப் பாட்டி காணாம போயிட்டாங்க சார். ஒருநாள் காலையில காட்டுக்குள்ள போனவங்க திரும்பி வரவே இல்லைஎன்றார்.
மெளனமாகத் திரும்பி இருக்கையில் உட்கார்ந்துவிட்டேன். என்னைச்சுற்றி ஒரு கணம் ஒரு சிரிப்புச்சத்தம் கேட்பதுபோல இருந்தது. அடித்தொண்டையில் ஒரு நாவல்பழத்தின் சுவை ஊறி நிறைவதுபோலவும் இருந்தது.