Home

Saturday, 7 September 2019

ஞானத்தின் கண்கள் - கட்டுரை



கடந்த மாதத்தில் நான்கு மரணங்களை அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இருபதாண்டுகளாகத் தினமும் பார்த்து உரையாடியவர். படுக்கச் சென்றவரை நள்ளிரவு நேரத்தில் தாக்கிய நெஞ்சுவலி உயிரைப் பறித்துவிட்டது. இரண்டாவதாக நிகழ்ந்தது எங்கள் உறவுக்காரர் ஒருவரின் மனைவியுடைய மரணம். இடைவிடாத காய்ச்சல் என்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவரைப் பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள். மூன்றாவதாகப் பார்த்த நிகழ்ச்சி என் அலுவலக நண்பரின் தந்தையாருடைய மரணம். நான்காவதாக எங்கள் தெருவில் வாழ்ந்த ஒரு பிரமுகரின் மரணம். அதன் விளைவாக அதிர்ச்சியும் வெறுமையும் என்னை இடையிடாமல் அலைக்கழித்தன. மரணத்தைப் பற்றிச் சிறிய வயதிலிருந்து படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட செய்திகள் ஒவ்வொன்றாக ஆழ்மனத்திலிருந்து மிதந்துவந்து நெஞ்சை நிரப்பின. ஆனாலும் அவற்றில் ஒன்றுகூட அமைதியை அளிக்கவில்லை. மரணம் தவிர்க்க முடியாதது. மாற்ற முடியாத உண்மை அது. இயற்கையின் விதி. அது ஒரு துயில் நிலை. எல்லாமே தெரிந்த சங்கதிகள்தாம். ஆனாலும் மரணத்தை ஏற்றுக்கொள்ள மனத்துக்கு விருப்ப மில்லை. இந்த மரணம் நிகழாமல் இருந்திருக்கக் கூடாதா என்று பொங்கும் தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

புத்தரிடம் தன் குழந்தையின் உயிரைத் திருப்பித் தருமாறு கேட்ட தாயின் உள்ளமும் இப்படித்தான் தவித்திருக்கக்கூடும். மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பு அது என்பதை இக்கணத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. மரணத்தின் நிழல் படியாத வீடே உலகில் இல்லை என்பதை அவளாகவே புரிந்துகொண்டு அமைதியுறுமாறு செய்கிறார் புத்தர். தவிப்பும் பதற்றமும் கவிந்திருந்த நெஞ்சில் ஒளியின் சுடர் பரவுகிறது. நேற்று இருந்த உயிர் இன்று இல்லை என்பது உலக இயற்கை என்னும் தெளிவு அக்கணத்தில் அவளுக்குச் சாத்தியமாகிறது.
சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு நாட்டுப் புறக் கதைபோலச் சொல்லப்பட்ட இச்சம்பவம் இன்னும் மனத்தில் பசுமையாகப் படிந்துள்ளது. ஆண்டு விழா நிகழ்ச்சியொன்றில் சின்னப் பிள்ளை களெல்லாரும் சேர்ந்து இக்கதையை நாடகமாய் நடித்ததையும் நினைத்துக் கொண்டேன். மரணம் இயற்கையானது என்னும் வரி சற்றே தத்துவச் சாயலைக் கொண்டது போலத் தோற்றமளித் தாலும் ஆழ்ந்த பொருளொன்றை அந்த வரி வழங்கு கிறது. மரணத்தையொட்டி ஒருவர் மனத்தில் உருவாகக் கூடிய அதிர்ச்சி, துயரம், இழப்பு, அச்சம் எல்லாவற்றையும் செரித்துக்கொள்ள அக்கணம் நம்மைத் தயார் செய்கிறது. அப்போதுதான் மரணம் இயற்கையானது என்று புரிந்துகொள்ள முடியும். உணர்வுகளையும் உண்மையையும் பிரித்தறிய முனையும்போது இந்த அம்சத்தை இன்னும் துல்லிய மாக உள்வாங்குதல் என்ற செயலாக மாறுகிறது.
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இந்தக் கதையை நினைத்துக்கொள்கிறவர்களும் சொல்லிப் பகிர்ந்துகொள்கிறவர்களும் என்னைப் போலவே பலர் இருக்கக்கூடும். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் ஒரு கதை உயிர்ப்புடன் உலவுவதற்கான ஒரே காரணம் எல்லாத் தலைமுறையினரும் அறியத் தேவையான ஒரு பொது உண்மையை அது உணர்த்தியபடியே இருக்கிறது என்பதுதான்.
மரணத்தின் இயல்பைப் புத்தரைப் போலவே கனிவுடன் உணர்த்தும் டென்மார்க் தேசத்துச் சிறுகதையொன்றைத் தற்செயலாகப் படித்து மலைத்துவிட்டேன். கிட்டத்தட்ட புத்தர் கதையைப் போலவே முடிவைக்கொண்ட கதை அது. ஆனால் பயணம் செய்யும் புள்ளிகள் வேறானவை.
இக்கதையின் ஆசிரியர் ஹான்ஸ் கிறிஸ்தியஸ் ஆன்டர்ஸன். இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் க.நா.சு.
நோய்வாய்ப்பட்டு சாகக் கிடக்கிற குழந்தையின் பக்கத்திலேயே சோகமே உருவாக உட்கார்ந்து இருக்கும் ஒரு தாயின் சித்திரிப்பிலிருந்து அந்தக் கதை தொடங்குகிறது. தன் குழந்தை இறந்து விடுமோ என்று அவள் அச்சம் கொள்கிறாள். நோயின் தீவிரத்தால் குழந்தையின் முகம் வெளுத் திருக்கிறது. சரியாக மூச்சுவிட முடியாமல் திணறு கிறது குழந்தை. அது எப்படியாவது பிழைத்துவிட வேண்டுமே என்று ஒவ்வொரு கணமும் பைத்தியம் போல நினைத்தபடி குழந்தைக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறார் அந்தத் தாய்.
அப்போது வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. எந்திரம்போல எழுந்து சென்று கதவைத் திறக்கிறாள். அழுக்கான ஒரு போர் வையைப் போர்த்திக்கொண்டு ஒரு கிழவன் குளிரில் நிற்கிறான். அவன் யார் என்று தெரியா விடினும் குளிரில் நடுங்குவதைக் கண்டு மனமிரங்கி உள்ளே வருமாறு அழைக்கிறாள் அந்தத் தாய். குளிருக்கு இதமாக எரிந்துகொண்டிருந்த கணப்பில் ஏதோ ஒரு பானத்தைச் சூடு செய்துகொண்டு வந்து கொடுக்கிறாள். அதைப் பருகியபடி ஒரு நாற்காலியில் உட்கார்கிறான் கிழவன். ஆற்றாமை யோடு அந்தக் கிழவனிடம் தன் குழந்தையைக் காட்டி இது பிழைத்துக் கொள்ளுமா என்று பித்துப் பிடித்ததுபோலத் திருப்பித்திருப்பிக் கேட் கிறாள். கடவுள் நல்லவர் என்று தானே எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறார் என்று அலுத்துக் கொள்கிறாள். அவள் கேள்விக்குக் கிழவன் விடையெதையும் அளிக்கவில்லை. மாறாக, அக்குழந்தையையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். அவன் வேறு யாருமல்ல. அந்தக் குழந்தையின் உயிரைக் கவர்ந்துசெல்ல வந்த எமன். மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் கண்விழித்துக் குழந்தையின் அருகிலேயே இருந்த தாய் அசதியின் விளைவாகச் சில நொடிகள் கண்மூடுகிறாள். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு நடுக்கலுடன் கண்விழித்துப் பார்க்கும் போது குழந்தை ஒரு மரக்கட்டையைப்போல அசைவின்றிக் கிடக்கிறது. அதிர்ச்சியோடு கிழவன் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பார்க்கிறாள். அந்தக் கிழவனையும் காணவில்லை. அந்தக் கணத்தில் தான் அவள் மனம் வந்தவன் எமன் என்னும் உண் மையைப் புரிந்துகொள்கிறது. குழந்தையின் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டானே என்று கதறி யழுகிறாள்.
அவனை எப்படியாவது வழிமறித்து குழந் தையின் உயிரை மீட்டுக்கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் தெருவில் இறங்கி ஓட்டமாய் ஓடுகிறாள். தெருவின் திருப்பத்தில் ஒரு பனிக்கட்டியின்மீது ஒரு கிழவி அமர்ந்திருக்கிறாள். அவனிடம் சென்று கிழவன் சென்ற திசையைக் கேட்கிறாள். அதற்குக் கிழவி, “அவன் எமன் என்பதும் உன் குழந்தையின் உயிரைத்தான் அவன் எடுத்துச் செல்கிறான் என்பதும் எனக்குத் தெரியும். அவன் செல்லும் திசையையும் அறிவேன். ஆனால் அதை உனக்குச் சொல்ல மாட்டேன். சொல்ல வேண்டும் என்றால் எனக்காக ஒரு செயலைச் செய்ய வேண்டும். செய்வாயா? சொல்என்று கேட்கிறாள். கிழவியின் கோரிக்கை எதுவானாலும் செய்யத் தயாராக இருக்கிறாள் தாய். யோசனைக்கே இடமில்லாமல் சரியென்று சொல்கிறாள். உன் குழந்தை பிறந்தது முதல் இக்கணம்வரையில் நீ அவனுக்காகப் பாடி யிருக்கும் பாட்டுகளையெல்லாம் இப்போது எனக் காகப் பாடிக் காட்ட வேண்டும்என்று சொல் கிறாள் கிழவி. தாயாருக்கு அவசரம் தாங்கவில்லை. எமனிடம் இருந்து குழந்தையைப் பெற்று வந்த பிறகு பொறுமையாகப் பாடிக் காட்டுவதாகவும் வழியை முதலில் சொல்லுமாறும் கெஞ்சிக் கேட் கிறாள். ஆனால் கிழவியிடம் அவள் சொற்கள் எதுவும் எடுபடவில்லை. இப்போதே பாடிக் காட்டுஎனப் பிடிவாதம் பிடிக்கிறாள். வேறு வழி யில்லாமல் கண்களில் கண்ணீர் வழியவழிய அவளுக்காக எல்லாப் பாடல்களையும் பாடிக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கிழவி மனநிறைவோடு அவன் ஊருக்கு வலதுபுறம் உள்ள காட்டின் வழியாகத்தான் சென்றான், நீயும் அந்தப் பக்கமாகவே செல்என்று சொல்கிறாள்.
உடனே கிழவிக்கு நன்றி சொல்லிவிட்டு காட்டை நோக்கி ஓடுகிறாள் தாய். காட்டின் மையப் பகுதியில் நான்கு பாதைகள் பிரியும் இடத்தில் தயங்கி நிற்கிறாள். எந்தப் பாதையைப் பின்பற்றுவது என்று புரியாமல் குழம்புகிறாள். அருகில் ஒரு பெரிய முள்புதர் அடர்ந்திருக்கிறது. அதன் நிழலில் நின்று ஒரு கணம் சொல்லிப் புலம்புகிறாள். உடனே புதர் பேசத் தொடங்குகிறது.
எனக்கு அந்தக் கிழவன் போன பாதை தெரியும். ஆனால் எனக்காக நீ ஒரு செயலைச் செய்ய வேண்டும். குளிரில் என் உடல் நடுங்குகிறது. அந்த நடுக்கத்தைப் போக்க என்னை உன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொள்வாயா?” என்று கேட் கிறது புதர். முள்ளும் கிளையும் அடர்ந்த அந்தப் புதரின் மேல் பனிக்கட்டி விழுந்து மூடியிருக்கிறது. அந்தத் தாய் தன் குழந்தையை மீட்டெடுக்கும் வேகத்தில் அந்தப் புதரைக் கட்டித் தழுவுகிறாள். அவள் உடலின் வெப்பத்தால் பனி கரைந்து போகிறது. முட்கள் அவள் உடலில் தைத்து ரத்தம் கசிகிறது. புதர் அவளுடைய தழுவலில் மகிழ்ந்து எமன் சென்ற வழியைச் சொல்கிறது.
அது காட்டிய வழியிலேயே நடந்து சென்று ஒரு பெரிய ஏரிக் கரையை அடைகிறாள் அவள். கரையில் படகோ அல்லது கப்பலோ எதுவுமே இல்லை. எப்படி அதைக் கடப்பது என்று புரியாமல் குழப்பத்தோடு தவிக்கிறாள். துக்கத்தில் தவிக்கிற ஒரு தாய்க்காக ஏரி தன் தண்ணீரையெல்லாம் வற்றிப் போகும்படி செய்யக்கூடாதா என்று மன முருக வேண்டிக் கொள்கிறாள். அப்போது ஏரி பேசுகிறது. அது முடியாத காரியம். ஆனால் எனக்காக நீ ஒரு வேலை செய்தால் நானே உன்னை எமனுடைய இருப்பிடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன்என்று நிபந்தனை விதிக்கிறது ஏரி. வேறு வழியில்லாத தாய் என்ன வேண்டும்?” என்று கேட்கிறாள். எனக்கு முத்துகள் என்றால் மிகவும் பிடிக்கும். உன் கண்கள் முத்துகள் போல அழகாக உள்ளன. இதுவரை இப்படிப்பட்ட கண் களை நான் பார்த்ததே இல்லை. உன் இரண்டு கண்களையும் எனக்குக் கொடுப்பாயா?” என்று கேட்கிறது. என் குழந்தைக்காக எதுவேண்டு மானாலும் செய்வேன்என்று வேகவேகமாகத் தன் விழிகளைப் பிடுங்கி ஏரியில் வீசுகிறாள். அடுத்த நொடியே அவை முத்துகளாக மாறி விடுகின்றன. உடனே ஏரி ஒரு ஊஞ்சலில் வைத்துத் தூக்கிச் செல்வது போல அவளைச் சுமந்து சென்று மறுகரையில் சேர்க்கிறது. அங்கே மிகப் பெரிய வீடொன்றும் அதைச் சுற்றி வனம் போன்ற ஒரு காடும் இருக்கிறது. ஆனால் கண்ணை இழந்து விட்ட தாயால் எதையும் பார்க்க இயலவில்லை.
அருகில் யாரோ நடந்துவரும் சப்தம் கேட்டு, அது எமனாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தில் தன் குழந்தையின் உயிரைத் திருப்பித் தருமாறு மன்றாடிக் கேட்கிறாள். அவளை நெருங்கி வந்த ஒரு கிழவி இன்னும் எமன் வரவில்லை என்று தெரிவிக்கிறாள். தன் குழந்தை இருக்கும் இடம் தெரியுமா என்று அந்தக் கிழவியிடம் கேட்கிறாள் தாய். அது தனக்குத் தெரியாது என்று சொல்லும் கிழவி வேறு சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறாள்.
இங்குள்ள தோட்டத்தில் ஏராளமான செடி களும் மரங்களும் உள்ளன. மண்ணுலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் இணையாக இவை இங்கே நிரம்பியுள்ளன. இவற்றிலும் மனிதர்களுக்கு இருப்பது போல இதயம் துடித்துக்கொண்டிருக்கும். ஒவ் வொரு செடியாகத் தொட்டுத் தொட்டுப் பார்த்தால் உன் குழந்தையின் உயிர் நிலையாக இருக்கும் செடியைக் கண்டுபிடித்துவிடலாம். உன் குழந் தையின் இதயத் துடிப்பை உன் கைகள் உணரக் கூடும். உனக்குக் கண் தெரியவில்லை. அதனால் நான் உன் கைகளைப் பற்றி ஒவ்வொரு செடியாகத் தொட்டுப் பார்க்க உதவி செய்கிறேன். ஆனால் அதற்குக் கைம்மாறாக நான் கேட்பதைத் தருவாயா?” என்று கேட்கிறாள். கொஞ்சம்கூட யோசிக்காமல் தாய் மறுகணமே அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள் கிறாள். தன் நரைத்த தலைமுடியை எடுத்துக் கொண்டு கன்னங்கருத்த நீண்ட கூந்தலைத் தருமாறு கேட்கிறாள் கிழவி. தாயும் அப்படியே செய்கிறாள்.
இரண்டு பேரும் எமனுடைய தோட்டத்துக்குச் செல்கிறார்கள். குழந்தையைப் பறிகொடுத்த தாய் ஒவ்வொரு சின்னச் செடியையும் தொட்டுத்தொட்டுப் பார்த்து, தன் குழந்தையின் இதயத் துடிப்பை அறிந்துகொண்டு விட்டாள். இதுதான் என் குழந்தைஎன்று ஒரு சிறிய பூச்செடியைத் தொட்டுக் காட்டுகிறாள். அவளை அங்கே அழைத்துவந்த கிழவி, “அவசரத்தில் பூவைத் தொட்டுவிடாதே, அது ஏற்கனவே கசங்கி வாடிப் போய் இருக்கிறது. இந்தச் செடியின் அருகிலேயே நீ இரு. எமன் வந்தால் அவன் இச்செடியைப் பிடுங்காதபடி பார்த்துக்கொள். அவன் ஏதாவது சொன்னால் தோட்டத்தில் உள்ள மற்ற செடிகளைப் பிடுங்கி யெறிந்து விடுவதாக அச்சுறுத்து. எமனுக்கு அச்ச முண்டாகும். கடவுளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் அவன். கடவுள் உத்தரவு இல்லாமல் எந்தச் செடியாவது பிடுங்கப்பட்டு விடுமானால் அதற்கு அவன் தான் பொறுப்பேற்க வேண்டும்என்று சொல்லிவிட்டு மறைந்து போகிறாள். தாய் அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கிறாள்.
சிறிது நேரத்தில் எமன் அங்கே வந்து சேர் கிறான். தனக்கு முன்னால் அந்தத் தாய் அங்கே நிற்பதைப் பார்த்து வியப்படைகிறான். அவளிடம் பேச்சு கொடுத்தபடி அவள் குழந்தைக்கு உரிய செடியைப் பிடுங்க எமன் முயற்சி செய்கிறான். அதற்கு இடம் தராதபடி நிற்கிறாள் தாய். காலம் கடப்பதை அறிந்து எமன் கவலை கொள்கிறான். இங்கே பார் அம்மா, கடவுளுடைய தோட்டக் காரன் நான். என் கையில் எதுவும் இல்லை. எந்தச் செடியை எப்படி வளர்க்க வேண்டுமென்று கடவுள் சொல்கிறாரோ அதன் படியே செய்கிறேன் நான். சில செடிகளை அவர் இந்தச் சமயத்தில் சொர்க்கத்தில் உள்ள தோட்டத்தில் கொண்டுபோய் வைக்குமாறு கட்டளையிடுகிறார். அந்தக் கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான். என் தனிப் பட்ட விருப்பமென எதுவும் இல்லைஎன்று சொல்கிறான் எமன்.
அந்தத் தத்துவ வார்த்தை களையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை அந்தத் தாய். தனக்குத் தன் குழந்தை வேண்டும் என்று அழுது மன்றாடுகிறாள். ஒரு கணத்தில் பொறுமை இழந்து பக்கத்தில் இருந்த இரண்டு வேறு செடி களை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு தன் குழந்தையைத் திருப்பித் தராவிட்டால் அவற்றைப் பிடுங்கி எறிந்துவிடுவதாக சத்தம் போடுகிறாள். எமன் அவற்றை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட் கிறான். அவை பிடுங்கப்படுமானால் உலகத்தில் அவளைப் போலவே இன்னும் இரண்டு அபலைத் தாயார்கள் கண்ணீர் வடிக்க வேண்டி நேரும் என்று எடுத்துச் சொல்கிறான். பிழையை உணர்ந்த வளாகத் தன் பிடியை விலக்கிக் கொள்கிறாள் அந்தத் தாய்.
அமைதியாக நின்றிருந்த தாயிடம் இந்தா உன் கண்கள். ஏரியில் இவற்றைக் கண்டெடுத்தேன். இவை உன்னுடையவை என்று தெரியாமலேயே எடுத்து வந்தேன். இந்தா, உன் கண்களைக் கொண்டே நீ பார். நீ சற்று முன்பாகப் பிடுங்கியெறிய முயன்ற செடிகளின் மனித உருவத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் பார்என்று ஒரு கிணற்றின் அருகில் அழைத்துச் செல்கிறான் எமன்.
கண்களைத் திரும்பப் பெற்ற தாய் கிணற்றுக்குள் எட்டிப் பார்க்கிறாள். தண்ணீர்ப் பரப்பில் அரு கருகே இரு காட்சிகள் தெரிகின்றன. ஒரு குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாகி உலகுக்கே அழகும் ஆனந்தமும் தருகிறவளாக வாழ்கிறாள். இன் னொரு குழந்தையின் வாழ்க்கை முழுதும் ஏழ்மையும் கவலையும் தொல்லைகளும் உள்ளன.
கிணற்றிலிருந்து பார்வையை விலக்கிய தாய் எமனையும் அருகில் உள்ள செடிகளையும் பார்த்து இவற்றில் மகிழ்ச்சியாகக் காணப்படுகிற குழந்தைக் குரிய செடி எது? துன்பத்தில் உழலும் குழந்தைக்குரிய செடி எது?” என்று கேட்கிறாள். அதை உனக்குச் சொல்லக்கூடாது. ஆனால் இந்த இரண்டில் ஒன்று உன் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை. அது எது என்று மட்டும் என்னைக் கேட்காதேஎன்று சொல்கிறான் எமன். குழந்தையின் தாயார் முடி வெடுக்க முடியாமல் தயங்குகிறாள். அவளுக்கு அழுகை பொங்கி வருகிறது. கஷ்டப்படப் பிறந்த குழந்தையா என் குழந்தை? அப்படியென்றால் என் குழந்தையை நீ எடுத்துச் செல்வதே சரி...என்று திரும்பத்திரும்பப் புலம்புகிறாள்.
எமன் அவசரப்படுத்துகிறான். இரண்டில் ஒன்று சரியாகப் பதில் சொல். உனக்கு உன் குழந் தையைத் திருப்பித் தரட்டுமா வேண்டாமா? சொல்என்று இறுதியாகக் கேட்கிறான். கையைப் பிசைந்த வாறு ஒரு நொடி தயங்குகிறாள் அந்தத் தாய். பிறகு துக்கம் தாளாமல் மண்டியிட்டு உன் விருப்பம் போலச் செய் என்று அழுதபடி சொல்கிறாள். துக்கமும் பாசமும் தாளாமல் நெஞ்சு விம்ம தரையில் சரிந்து உட்கார்கிறாள் அவள். அவளுடைய குழந்தை யோடு கண்காணாத கடவுளின் தேசத்துக்குப் பறந்து செல்கிறான் எமன்.
தண்ணீர்த் திரையில் குழந்தையின் எதிர் காலத்தைப் பார்த்து தாய் மனம் மாறுவதுதான் கதையின் உச்சம். சந்தோஷமாக ஆடி விளையாடுகிற குழந்தை தன் குழந்தையாக இருக்கலாம் என்று அவள் மனம் ஏன் நினைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. துன்பப்படும் குழந்தையே தன் குழந்தை என அவள் மனம் உணர்ந்த விதம் பெரிய விசித்திரம். செடிகளின் மூச்சுக் காற்றில் தன் குழந்தையின் இதயத் துடிப்பை அறிந்துகொள்ள முடிந்த தாயின் உள்ளுணர்வுக்குத் துன்பப்படும் குழந்தையே தன் குழந்தை என்று தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தையை மீட்டெடுத்து விட முடியும் என்ற உள்ளுணர்வின் தூண்டுதலால்தான் பல சிரமங்களைத் தாண்டி எமனுடைய தோட்டத்துக்குள் நுழைகிறாள் அவள். அந்தப் புள்ளிவரை அவள் உள்ளுணர்வே அவளை வழி நடத்துகிறது. துன்பப்படும் குழந்தையே தன் குழந்தையென எதிர்காலக் குழந்தையின் தோற்றத் தையும் அவள் உள்ளுணர்வே தீர்மானிக்கிறது. உள்ளுணர்வின் பாதையிலிருந்து அவளால் விலக்கி நடக்க முடியாத ஒரு புள்ளி அது. மரணம் என்னும் பேருண்மையின் வெளிச்சத்தை அவள் தரிசிக்க வழிவகுத்த புள்ளி அது. தொடக்கத்தில் பொங்கிய பதற்றம் தணிந்து முதன்முதலாக அந்த உண்மையில் அவள் மனம் நிலை கொள்கிறது. பிறகு மெல்ல மெல்ல கரைந்து போகிறது.
எமன் தன் வழியில் ஏரியில் கண்டெடுத்ததாகச் சொல்லி அவள் கண்களைத் திருப்பித் தரும் தருணம் முக்கியமானது. பதற்றத்தின் உச்சத்தில் பாசத்தின் விளைவாகத் தன்னையே அவள் இழக்கிறாள் என்பதன் குறியீடாகவே அவள் தன் கண்களைத் தொலைப்பதைப் பார்க்கலாம். அந்தக் கண்களைத் திரும்பப் பெறுவது என்பது இழந்துபோன தன் உணர்வை மீண்டும் அவள் அடைவதன் அடையாளம். அவை ஒருவகையில் உண்மையைத் தரிசிக்கும் ஞானத்தின் கண்களைப் புறவயமாக நம் எளிய கண்கள் அறியும் விஷயங்கள் எளிமையானவை. அகவயமாக ஞானக்கண்கள் அறியும் விஷயங்கள் எளிமையானவை. அகவயமாக ஞானக்கண்கள் அறியும் விஷயங்கள் மேலானவை. தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை.