பழனியும் நானும் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். அவனுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தவையெல்லாம் அவனுக்கும் பிடிக்கும். அவன் ஓவியம் பயிலத் தொடங்கியபோது நானும் ஓவியம் தீட்டினேன். பாடப்புத்தகங்களைக் கடந்து நான் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியபோது அவனும் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவரிடையேயும் இப்படி பல ஒற்றுமைகள் இருந்தன. எங்கே சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே செல்வோம். அவனைக் காணவில்லை என்றால் என்னைக் கேட்பார்கள். என்னைக் காணவில்லை என்றால் அவனைத்தான் கேட்பார்கள். அப்படி ஒரு நெருக்கம்.
இன்று நாங்கள் இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம். நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் காலை, மாலை இரு வேளைகளிலும் இருவரும் சேர்ந்தே நடைப்பயிற்சிக்குச் செல்வோம். எந்த இலக்குமில்லாமல் ஏதேனும் ஒரு திசையில் நடந்துபோய்த் திரும்புவோம். வழிமுழுக்க உரையாடியபடியே நடப்போம். கவிதை, கதை, கட்டுரை என ஏதோ ஒரு புள்ளியிலிருந்து பேச்சு தொடங்கினாலும் சட்டென்று அவையெல்லாம் பின்னகர்ந்துவிட, ஒரு தருணத்தில் எங்கள் சிறுவயது பள்ளி அனுபவங்கள் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவோம். பள்ளி ஆசிரியர்கள் பற்றி பொதுவாகத் தொடங்கும் உரையாடல் அங்குமிங்கும் அலைந்து திசைமாறி எங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாக மாறிவிடும். எங்களுக்கே தெரியாமல் அந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். பேசிய செய்திகளே மீண்டும் மீண்டும் இடம்பெற்றுவிடாமல் ஒவ்வொருமுறையும்
புதியபுதிய செய்திகள் நினைவுக்கு வருவது வியப்புக்குரிய செய்தி.
சின்ன வயது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியதுமே நாங்கள் வயதை மறந்து சிறுவர்களாக மாறிவிட்டதுபோலத் தோன்றும். பேசப்பேச எங்கள் உற்சாகமும் பெருகியபடி செல்லும். ஒருமுறை எங்கள் பள்ளியின் சட்டாம்பிள்ளையைப்பற்றி நினைத்துக்கொண்டு அவர் தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினோம். சற்றே குள்ளமானவர் அவர். கதர்வேட்டியும் சட்டையும் அணிந்திருப்பார். பள்ளி தொடங்கும் முன்பாகவே வகுப்பறைகளையெல்லாம் சுத்தம் செய்து, பழைய நீரை ஊற்றிவிட்டு குடிநீர்ப்பானைகளைக் கழுவி புதிய நீரை நிரப்பிவைப்பார். நேரம் தவறாமல் மணியடிப்பார். முதல் மணி எட்டே முக்காலுக்கு. இரண்டாவது மணி ஒன்பதுக்கு. உடனே கொடிவணக்கத்தைத் தொடர்ந்து பள்ளி தொடங்கிவிடும்.
பிறகு ஒவ்வொரு பாடவேளையும் முடியும்போதும் மணியடிப்பார்.
கணகணவென அவர் மணியடித்து எழுப்பும் ஓசை எங்கள் காதுகளுக்கு இனிமையாக இருக்கும். அந்தச் சித்திரம் சட்டென எங்கள் மனத்திலிருந்து உருப்பெருக்கம் பெற்று பெரிதானபடி இருந்தது. அவரைப்பற்றி அன்று மாலை முழுதும் பேசிக்கொண்டிருந்தோம். ஊருக்குத் திரும்பியபிறகு ஒருநாள் இரவு அந்த நினைவு தூண்டிய வேகத்தில் ஒரு பாடலை எழுதினேன். பழனிக்கு அப்பாடலை அனுப்பிவைத்தேன். அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
பிறகு ஒவ்வொரு நாளும் அந்தப் பழைய நினைவுகளில் திளைத்துத் திளைத்து பாடல்களை எழுதத் தொடங்கினேன். எங்கள் சிறுவயது வாழ்க்கை மீண்டும் வாழ்வதற்குக் கிடைத்ததுபோல இருந்தது. ஒவ்வொன்றையும் அவன் படித்துவிட்டு தன் எண்ணங்களை அவன் அனுப்பிக்கொண்டே இருந்தான். அவன் சொற்களால் நான் மென்மேலும் ஊக்கம் கொண்டு பாடல்களை எழுதியபடியே இருந்தேன். ஒருவகையில் இப்பாடல்கள் அனைத்திலுமே நாங்கள் இருவரும் இருக்கிறோம்.
கல்லூரியில் நான் படித்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெ.தங்கப்பா. தமிழ் மரபுக்கவிதை வரலாற்றில் அவருக்கு முக்கியமான இடமுண்டு. குழந்தைகளுக்கான பாடல்களை மனம்தோய்ந்து எழுதியவர் அவர். பள்ளிக்காலத்தில் படிக்க நேர்ந்த அழ.வள்ளியப்பா, கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்களைத் தொடர்ந்து தங்கப்பாவின் பாடல்களை மிகவும் விருப்பத்துடன் நான் படித்தேன். இனிய தாளக்கட்டோடு அவர் எழுதிய ‘மழலைப்பூக்கள்’ என்னும் தொகுதியை ஒருமுறை எனக்கு அன்பளிப்பாக அளித்தார். இந்த முன்னோடிகளின் பாடல்கள் வழியாக பெருக்கெடுத்த ரசனையே எனக்குள் உரமாகப் படிந்தது.
என் பாடல்கள் தொகுப்பாக உருப்பெறும் இத்தருணத்தில் என் ஆசிரியர் ம.இலெ.தங்கப்பாவை மிகவும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இன்று அவர் இல்லை. கடந்த ஆண்டில் இயற்கையெய்திவிட்டார். இத்தொகுதியை அவருக்குச் சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தொகுதியில் உள்ள ஒருசில பாடல்களை வெளியிட்ட பஞ்சுமிட்டாய், புதுவைபாரதி ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்கு நன்றி. என் மனைவி அமுதா அளிக்கும் ஊக்கம் எனக்கு எப்போதும் அருமருந்தாகும். அவர் என் நெஞ்சில் நிறைந்திருப்பவர். இத்தொகுதியை அழகான ஓவியங்களுடன் சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் நன்றி.
அன்புடன்
பாவண்ணன்