Home

Saturday 16 January 2021

சத்தியமூர்த்தி : சோர்விலாத சொலல்வல்லன் - கட்டுரை

 

1914ஆம் ஆண்டில் தொடங்கிய முதலாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏறத்தாழ பதினைந்து லட்சம் இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்களில் 74000 பேர் மரணமடைந்தனர்.  மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள,  இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சியை வழங்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டது. அதற்காக தலைமைச்செயலாளர் மாண்டேகுவும் வைசிராயான செம்ஸ்போர்டும் இணைந்து சுதந்திரப்போராட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹோலி ஹட்சின்சன், வில்லியம் டியூக், சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி 1917இல் அறிக்கையொன்றைத் தயாரித்து ஒப்புதலுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சியை வலியுறுத்தும் அந்த அறிக்கையை காந்தியடிகளும் பிற முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

தேசமெங்கும் மாகாண அளவிலான காங்கிரஸ் மாநாடுகளில் இந்தக் கருத்தையொட்டு விவாதங்கள் நடைபெற்றன. சென்னை மாகாணத்தில் காஞ்சிபுரத்தில் சரோஜினி நாயுடு தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையார், அரசு அறிவித்திருக்கும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்களும் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் மனநிலையில் இருந்தனர். அந்த ஆதரவு, சட்டக்கல்வியை முடித்துவிட்டு இளம்வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் தன் பணியைத் தொடங்கியிருந்த இளைஞரொருவருக்கு அதிர்ச்சியை அளித்தது. அம்மையார் உரையாற்றி முடித்ததும் மேடைக்குச் சென்று கணீரென்ற குரலில் அத்தீர்மானத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கினார் அவர். அந்த உரை உறுப்பினர்களின் மனநிலையை மாற்றிவிட்டது. இறுதியாக குறைந்த வாக்குகளையே பெற முடிந்ததால் அந்தத் தீர்மானம் தோல்வியுற்றது.

அன்று அந்தத் தீர்மானத்துக்கு எதிராக சுயாட்சிக்கான குரலை எழுப்பிய இளைஞர் எஸ்.சத்தியமூர்த்தி. இருபது வயது இளம்பருவத்திலேயே விபின் சந்திரபாலின் உரையைக் கேட்டு கொதித்தெழுந்து தான் அணிந்திருந்த அயல்நாட்டுத்தொப்பியை அங்கேயே தீக்கிரையாக்கும் அளவுக்கு தேசபக்தி கொண்டவர் அவர். படிப்படியாக கல்வியின் வழியாகவும் அனுபவத்தின் வழியாகவும் தன் தேசபக்தியை வளர்த்துக்கொண்டவர். 1917இல் கல்கத்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு அச்சுச்சட்டத்தை எதிர்த்து அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் உரையாற்றி, பரவலாக அனைவரும் அறிந்த முகமாக மாறியவர்.

முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல புரட்சி இயக்கங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. அவற்றை ஒடுக்கிக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்துடன் ஆங்கில அரசு சிட்னி ரெளலட் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. புரட்சி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கருதும் எவரையும் அரசு எவ்விதமான வழக்கு விசாரணையுமின்றி கைது செய்து இரண்டாண்டுகள் வரைக்கும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் வழிவகுத்தது.

ரெளலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் 06.04.1919 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தார். ரெளலட் சத்தியாகிரகம் நாடெங்கும் பரவி வலிமையடைந்து வரும் வேளையில் 13.04.1919 அன்று பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன்வாலா பாக் என்னும் இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை ஜெனரல் டயர் என்னும் ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். ஏறத்தாழ 380 பேர் மரணமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர். டயரின் செயலைக் கண்டித்து நாடே கொதித்தெழுந்தது. நீதி விசாரணையை வலியுறுத்தி போராட்டங்கள் வலிமையடைந்தன. மக்களின் கிளர்ச்சிக்குப் பணிந்த அரசு விசாரணைக்காக இங்கிலாந்து பாராளுமன்றக் குழு ஒன்றை நியமித்தது. அக்குழுவின் முன் சாட்சியமளிக்க இந்தியாவிலிருந்து பலர் சென்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு தூதுக்குழு செல்ல ஆயத்தமானது. அக்குழுவின் செயலராக சத்தியமூர்த்தி லண்டனுக்குச் சென்றார்.

பேச்சாற்றல் மிக்க சத்தியமூர்த்தி இங்கிலாந்து பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் ஆற்றிய தெளிவான உரை அனைவரையும் கவர்ந்தது. அவருடைய ஆங்கில மொழிப்புலமை ஒவ்வொருவரையும் வியப்பிலாழ்த்தியது. பாராளுமன்றத்துக்கு வெளியே நகரத்தில் பல இடங்களில் அவர் பொதுமக்களிடையே உரையாற்றினார். ஒவ்வொரு மேடையிலும் ஆங்கில அரசின் ஆதிக்க உணர்வையும் இந்தியர்களின் விடுதலை உணர்வையும் விரிவாக எடுத்துரைத்தார். ஏறத்தாழ ஆறு மாத காலம் லண்டனிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றினர். லண்டன் நிகழ்ச்சிகளையும் தன்னுடைய உரைகளையும் பற்றி ஒவ்வொரு நாளும் அவர் எழுதியனுப்பிய குறிப்புகள் சென்னையில் இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்தன.

இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு சுதந்திர வேட்கையை ஊட்டும் வகையில் உரையாற்றினார். நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய விடுதலையால் சாத்தியமாகப் போகும் சமத்துவமான வாழ்க்கை சார்ந்த கனவுகளை தம் அழகான சொற்களால் விரிவுபடுத்திப் பேசி அனைவரையும் கவர்ந்தார். கடந்த காலத்துக் கோட்பாடுகளுக்கும் இந்தக் காலத்து எண்ணங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விரிவாக விளக்குவதில் அவர் எப்போதும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவரிடம் மற்ற சிந்தனைகளைவிட அரசியல் சிந்தனையே  மேலோங்கியிருந்தது. அவருடைய உரையைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுவந்தனர். குறுகிய காலத்திலேயே அவர் நாடறிந்த பேச்சாளராக வலம்வரத் தொடங்கினார்.

22.09.1921 அன்று மதுரைக்கு வந்திருந்த காந்தியடிகள் தேவகோட்டை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, கோயம்புத்தூர் என பல இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடையில் உரையாற்றினார். இராட்டையில் நூல்நூற்று கதராடைகளை உடுத்தி  அயல்நாட்டு ஆடைகளையும் பொருட்களையும் புறக்கணிக்கவேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இடத்திலும் வலியுறுத்தினார். தீண்டாமையை கைவிட்டு அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து ஆங்கில அரசுடன் அனைத்துச் செயல்பாடுகளிலும் ஒத்துழைக்காமல் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். காந்தியடிகள் வகுத்த ஒத்துழையாமையின் வெற்றி இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை.

அந்தக் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் இராமநாதபுரம் சமஸ்தானமும் ஆங்கிலேய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திவிட்டு தம் பகுதிகளை ஆண்டு வந்தன. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் காங்கிரஸ் கட்சியின் கிளை எதுவும் இல்லையென்றாலும் மகா ஜனசபை என்ற இயக்கம் செயல்பட்டு வந்தது. காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களே அந்த இயக்கத்தில் இருந்தனர். இளைஞரான சத்தியமூர்த்திக்கு தாம் பிறந்த மண்ணான புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு காந்தியடிகளை வரவழைத்து மக்களிடையில் உரையாற்றும்படி செய்யவேண்டுமென்ற விருப்பமிருந்தது.  ஏற்கனவே சத்தியமூர்த்தியின் உரைகளால் சுதந்திரவேட்கை கொண்டிருந்த புதுக்கோட்டை மக்களும் காந்தியடிகளின் உரையைக் கேட்க ஆவலாக இருந்தனர். எதிர்பாராத விதமாக புதுக்கோட்டை சமஸ்தான அதிகாரிகள் தம் சமஸ்தான எல்லைக்குள் காந்தியடிகள் வரக்கூடாது என்று தடை விதித்தது. இதனால் பயணத்திட்டத்தை மாற்றி காரைக்குடியில் காந்தியடிகளுக்கு வரவேற்பளிக்க முடிவெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மக்கள் அனைவரும் கூட்டமாக காரைக்குடிக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்தனர். அவர்கள் வாசித்து வழங்கிய பாராட்டுப்பத்திரத்தை காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார்.

சத்தியமூர்த்தியின் அன்றைய சொற்பொழிவை ஜனமித்திரன், தேச ஊழியன் ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டன. அதனால் சமஸ்தான அதிகாரிகள் சத்தியமூர்த்தியையும் தேச ஊழியன் பத்திரிகை ஆசிரியரையும் சமஸ்தானத்தைவிட்டு வெளியேற்றியது. ஜனமித்திரன் பத்திரிகை ஆசிரியர் மீது தேசத்துரோக குற்றத்தைச் சுமத்தி கைது செய்து ஆறுமாத காலம் சிறைத்தண்டனையை வழங்கியது.

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்டவ வைரவத்தொண்டைமான் பாரிஸ் நகரில் காலமானார். அதைத் தொடர்ந்து வாரிசுரிமை சார்ந்து குழப்பங்கள் உருவாகின.   நீண்ட கால இழுபறிக்குப் பிறகு தொண்டைமானின் சகோதரியினுடைய பேரனான ராஜகோபால் தொண்டைமான் என்பவருக்கு முடிசூட்டப்பட்டது. அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்த்து சத்தியமூர்த்தி மீதும் பத்திரிகையாசிரியர் .எஸ்.நாகரத்தினம் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையாணைகளை நீக்கி உத்தரவிட்டார். அதற்குப் பிறகே சத்தியமூர்த்தி தன் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கத்துக்கான ஆதரவு பெருகிவந்த நேரத்தில் 05.02.1922 அன்று உத்தரப்பிரதேசத்தில் செளரிசெளரா என்னும் இடத்தில் காவல் துறையினருக்கும் சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு சில வீரர்கள் மரணமடைந்தனர். இதனால் சீற்றமுற்ற மற்றவர்கள் காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். 22 காவலர்கள் கொல்லப்பட்டனர். அறவழியில் நடைபெற்று வந்த இயக்கம் வன்முறைப்பாதையில் செல்வதைக் காணப் பொறுக்காத காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார்.  இதனால் காங்கிரஸ் தலைவர்கள் காந்தியின் மீது அதிருப்தியடைந்தனர். வன்முறை ஓயும் வரைக்கும் காந்தியடிகள் மூன்று வார காலம் உண்ணாவிரதமிருந்தார். ஆட்சிக்கு எதிரான எழுத்துகளை வெளியிட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, கேல்கர் போன்ற தலைவர்கள் காங்கிரஸிலிருந்து விலகி சுயராஜ்ஜியக்கட்சி என்றொரு புதிய கட்சியைத் தொடங்கினார்.

காந்தியடிகள் மீது ஈடுபாடு கொண்டிருந்தாலும் 1923இல் அறிவிக்கப்பட்ட தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் அவருடைய முடிவை சத்தியமூர்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சியதிகாரத்தைப் பழக சட்டமன்ற நுழைவு நல்ல பயிற்சியாக இருக்கும் என்பது அவர் எண்ணமாக இருந்தது. அதனால் சுயராஜ்ஜியக்கட்சியில் இணைந்து தமிழ்மாகாணத்தில் அக்கட்சியை வளர்க்கப் பாடுபட்டார்.

தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பாக பெரியதொரு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தார் சத்தியமூர்த்தி. அவருடைய நாவன்மையைக் கண்டு பெருந்தலைவர்கள் அனைவரும் பாராட்டினர். தனி மனிதராக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பிரயாணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் சத்தியமூர்த்தி. சுயராஜ்ஜியக் கொள்கைகளை விளக்கியும் நாடு சுதந்திரம் அடையவேண்டியதன் அவசியத்தை விளக்கியும்  உரையாற்றினார். இவருடன் இசையுலகில் அரசியாக விளங்கிய கே.பி.சுந்தராம்பாளும் பரப்புரையில் சேர்ந்துகொண்டார். ஒவ்வொரு கூட்டத்தையும் தேசபக்திப் பாடல்களைப் பாடி அவரே தொடங்கிவைத்தார். தேர்தல் முடிவுகள் சுயராஜ்ஜியக்கட்சிக்கு சாதகமாக இல்லையென்றாலும் பட்டதாரிகள் பிரிவில் போட்டியிட்ட சத்தியமூர்த்தி வெற்றி பெற்று எதிர்க்கட்சி உறுப்பினராக விளங்கினார்.

சட்டசபைக்குச் சென்ற சத்தியமூர்த்திக்கு அரசாங்கத்தை எதிர்த்துப் பேச பல வாய்ப்புகள் கிட்டின. முதல் வாய்ப்பிலேயே சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய சிவாவுக்காக அவர் வாதாடினார். அப்போது சுப்பிரமணிய சிவா தமிழகமெங்கும் சிவாஜி என்னும் நாடகத்தை எழுதி அரங்கேற்றி வந்தார். ராமதாசர் பாத்திரத்தை அவரும் சிவாஜி பாத்திரத்தை சோழவந்தானைச் சேர்ந்த சீனிவாசவரதன் என்பவரும் ஏற்று நடித்தார்கள். நாடகத்தில் பாரதியாரின் தேசியப் பாடல்கள் சேர்க்கப்பட்டன. பாரதமாதாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் அந்த நாடகத்தை நடத்திவந்தார். நாடகத்தின் வசனங்கள் அரசாங்கத்தை மறைமுகமாகத் தாக்குவதாகக் குற்றம் சாட்டி அதிகாரிகள் நாடகத்துக்கு தடைவிதித்தனர்.

இந்தத் தடையைக் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்த சத்தியமூர்த்தி வரலாற்றுப் பாத்திரமான சிவாஜியைப்பற்றி ஏராளமான தகவல்களைத் திரட்டி முன்வைத்தார். சிவாவின் நாடகக் காட்சிகள் அனைத்தும் அப்பாத்திரத்தை பார்வையாளர்கள் உயிர்ப்புடன் உள்வாங்கிக் கொள்வதற்காக எழுதப்பட்டவையே அன்றி உள்நோக்கம் கொண்டவை அல்ல என்று அழுத்தம் திருத்தமாக வாதாடினார். அவருடைய தெளிவான சிந்தனையும் ஆற்றொழுக்கான ஆங்கிலப்பேச்சும் அவருடைய வெற்றிக்கு வழிவகுத்தன. சிவாஜி நாடகத்தின் மீது விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டது.

16.06.1925 அன்று சித்தரஞ்சன் மறைந்தார். அதற்குப் பிறகு சுயராஜ்ஜியக்கட்சியைச் சேர்ந்த பலரும் தம் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படத் தொடங்கினர். அவ்வரிசையில் சத்தியமூர்த்தியும் ஒருவர். சென்னை நகரத்தில் பல இடங்களில் காங்கிரஸ் மேடைகளில் அவர் உரையாற்றினார். உணர்ச்சிமயமான அவர் உரை பலரை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தது.

1927 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில் காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது, சத்தியமூர்த்தி அவருடன் நெருங்கிப் பழகினார். காந்தியடிகள் கலந்துகொண்ட கூட்டங்களில் சத்தியமூர்த்தியும் கலந்துகொண்டார். 09.09.1927 அன்று திருவல்லிக்கேணியில் சத்தியமூர்த்தியே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காந்தியடிகளை அழைத்து வந்தார். மறைந்த பெருந்தலைவர் சித்தரஞ்சன்தாஸின் உருவப்படத்தை திறந்துவைப்பதற்காக அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் காந்தியடிகளுக்கு நன்றியுரைத்த சத்தியமூர்த்தி 19.04.1925 அன்று சித்தரஞ்சன்தாஸ் தனக்கு இறுதியாக எழுதிய ஒரு கடிதத்தை பார்வையாளர்களுக்குப் படித்துக் காட்டினார். நீளமான அக்கடிதத்தின் இறுதிப்பகுதியில் உணர்ச்சிகள் கொட்டப்பட்டிருந்தன.

இன்று என் வாழ்வின் இறுதிக்கணத்தில் நான் இருக்கிறேன். நான் ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டன என்று தோன்றுகிறது. மறுபுறத்தில் நின்றுகொண்டு என்னை யாரோ அழைக்கும் குரல் தொடர்ந்து கேட்டபடி இருக்கிறது. எல்லாச் செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு, என் பயணத்துக்கு நான் ஆயத்தமாகவேண்டும். நான் ஆற்றிய கடமைகளை இளைய தலைமுறையினர் ஏற்று தொடர்ந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

கடித வாசிப்பின் தொடர்ச்சியாக உரையாற்ற எழுந்த காந்தியடிகள் தனக்கும் சித்தரஞ்சன்தாஸுக்கும் இருந்த நெருக்கத்தையும் மதிப்பையும் விவரிக்கத் தொடங்கி அரைமணி நேரத்துக்கும் மேலாக நெகிழ்ச்சியோடு உரையாற்றினார். சட்டசபையில் பங்கேற்பது தொடர்பான காந்தியடிகளுடைய கருத்துகளில் முரண்பட்டிருந்தாலும் அவரிடம் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவராகவே இருந்தார் சத்தியமூர்த்தி. அவருடைய தலைமையின் கீழ் பல தொண்டர்கள் இணைந்து துணிக்கடைகள் முன் நின்று அயல்நாட்டுத் துணிகளை விற்பது தொடர்பாகவும் வாங்கியணிவது தொடர்பாகவும் முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

11.09.1928 அன்று பர்மா அரசு பாரதியார் பாடல்களுக்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசும் தடை விதித்தது. இந்தி பிரச்சார சபையிலும் புத்தகக் கடைகளிலும் இருந்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகளை சென்னை காவல்துறை பறிமுதல் செய்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சத்தியமூர்த்தி. அத்துடன் சட்டசபையில் ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவந்து உரையாற்றினார். பாரதியாருடைய ஒவ்வொரு தேசபக்திப் பாடலையும் வரிவரியாகப் பிரித்து பாடிக் காட்டி, அதன் பொருளை எடுத்துரைத்தார். பிறகு மேனாட்டுக் கவிஞர்களின் பாடல்களையும் பாரதியாரின் பாடல்களையும் ஒப்பிட்டு உரையாற்றினார். மேனாட்டுக் கவிஞர்கள் மன்னர் வாழ்த்துப்பாடல்களை எழுதும்போது தேச வாழ்த்துப்பாடல்களை எழுதிய பாரதியாரின் மேன்மையைச் சுட்டிக்காட்டினார். ஒரே ஒரு பிரதிகூட எஞ்சியிருக்காதபடி எல்லாப் பிரதிகளையும் பறிமுதல் செய்தாலும் பாரதியாரின் பாடல்கள் பரவுவதை யாராலும் தடுத்துவிடமுடியாது என்று முழக்கமிட்டார். ஒரு சிறு ஏட்டுப்பிரதி கூட இல்லாத பழங்காலத்தில் வேதவரிகளை காலம்காலமாக மனப்பாடத்தின் வழியாகவே தக்கவைத்துக்கொண்டிருக்கும் மரபில் தமிழ்மொழி உள்ளளவும் கடைசித்தமிழன் உள்ளளவும் மனப்பாடப்பயிற்சி வழியாகவே பாரதியாரின் பாடல்கள் பாதுகாக்கப்படும் என்றும் முழங்கினார். இறுதியாக அவர் முன்வைத்த தீர்மானத்துக்கு 76 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்ததால் அரசு விதித்த தடை திரும்பப் பெறப்பட்டது.  இதற்குப் பிறகு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்து பாரதியார் பாடல்கள் தேசவிரோதமானவை அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டது.

1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது இராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். அவருக்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெற்ற பிறகு எவ்விதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என உறுதிமொழி வழங்கும்படி அரசு அவரைக் கட்டாயப்படுத்தியது. அதற்கு அவர் உடன்பட மறுத்ததும் ஓராண்டு தண்டனை விதித்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தது. சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றார்.  

சென்னை நகரில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஊர்வலம் செல்லவும் அரசு தடை விதித்திருந்தது. தடையை மீறி ஊர்வலமாகச் சென்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மண்டபத்துக்கு முன்பாக தேசியக்கொடியை ஏற்றுவதற்குத் திட்டமிட்டார் சத்தியமூர்த்தி. வந்தே மாதர முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கோவில் வாசலை அடைவதற்குள் காவல்துறையினர் கொடிக்கம்பத்தைப் பிடுங்கியெறிந்துவிட்டனர். துணிவுமிக்க சத்தியமூர்த்தி தன் முயற்சியில் சற்றும் பின்வாங்காதவராக இன்னொரு கம்பத்தை அதே இடத்தில் ஊன்றி வந்தே மாதர முழக்கத்துக்கு நடுவில் கொடியேற்றி பறக்கவைத்தார். காவல்துறை அவரை கைது செய்து அழைத்துக்கொண்டு சென்றது. அடுத்தநாள் விசாரணையில் தான் கொடியேற்றியதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அதனால் நீதிபதி அவருக்கு அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்துவிட்டார்.

அந்த வழக்கில் அவர் விடுதலை பெற்றபோதும் துணிக்கடைகள் முன் மறியல் நடத்திய வழக்கில் அவருக்கு ஆறுமாத காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் சிறையில் இருந்தபோதும் நகரில் பல்வேறு இடங்களில் மறியல்களும் போராட்டங்களும் அறவழியில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இதைக் கண்டு கொதிப்படைந்த அரசு காங்கிரஸ் கட்சியை சட்டத்துக்கு எதிரான கட்சியாக அறிவித்து தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்த சத்தியமூர்த்தியும் இராஜாஜியும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பதினெட்டு மாத கால தண்டனையை சென்னை மத்திய சிறையிலும் வேலூர் சிறையிலும் கழித்தார் சத்தியமூர்த்தி. சிறையில் அவருடைய உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். சென்னைக்குத் திரும்பிய சத்தியமூர்த்தி மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இத்தருணத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் போட்டியிடலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது. 1932 செப்டம்பர் மாதத்தில்  சென்னை நகராட்சிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்பாளராக மனுச் செய்தார். பிணையில் வெளியே விடமுடியாத குற்றமிழைத்து தண்டனை பெற்றிருப்பதால் தேர்தலில் நிற்கமுடியாது என நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தியின் மனுவை நிராகரித்துவிட்டார். ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகே அவருடைய மனுவை நகராட்சி ஏற்றுக்கொண்டது. தேர்தலில் சத்தியமூர்த்தி வெற்றியடைந்து  நகராட்சி உறுப்பினரானார்.

1934இல் மத்திய சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவர் சத்தியமூர்த்தி. அந்தக் காலத்தில் நிலவரி, வீட்டுவரி கொடுப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. தேர்தலில் நிற்பவர்களுக்கு தனிச்சின்னங்களும் கிடையாது. நிறங்களே சின்னங்களாகக் கொடுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறம் ஒதுக்கப்பட்டது. சத்தியமூர்த்தி தன் பேச்சாற்றலால் மக்களிடையில் காங்கிரஸ் மீது நம்பிக்கை பிறக்கும்படி செய்தார். தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்று டில்லி சட்டசபையில் பதவியேற்றார். டில்லி சட்டசபையில் அடக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மசோதா மீது ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சத்தியமூர்த்தி ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. சட்டசபையில் அவர் எழுப்பிய ஆணித்தரமான கேள்விகளையும் பதில்களையும் எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி வெளியிட்டு சத்தியமூர்த்திக்குப் பெருமை சேர்த்தன.

1936இல் அறிவிக்கப்பட்ட சென்னை மாகாணத் தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வெற்றிக்காக மாகாணம் முழுதும் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டு கிராமங்கள்தோறும் அலைந்து கட்சிக்கொள்கைகளை மக்களிடையில் பரப்புரை செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டார் சத்தியமூர்த்தி. ஒரு நாளில் இருபது இருபத்தைந்து கூட்டங்களில் கலந்துகொண்டு காங்கிரஸின் கொள்கைகளையும் போராட்டங்களையும் பற்றி பேசினார் அவர். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் இரவுபகல் பாராமல் காத்திருந்தனர். பிரபல பாடகியான கே.பி.சுந்தராம்பாள் மூலம் காங்கிரஸின் பெருமைகளையும் காந்தியடிகளின் பெருமைகளையும் விளக்கும் பாடல்களைப் பாடச் செய்து இசைத்தட்டுகளை பதிவு செய்து பொதுக்கூட்டங்களில் ஒலிக்கச் செய்தார்.

ஒருமுறை திருவண்ணாமலையில் காத்திருந்த பொதுமக்களிடையில் தேர்தல் பரப்புரையை ஆற்றும்போது பொழுது நள்ளிரவைத் தொட்டுவிட்டது. ஆயினும் சத்தியமூர்த்தியின் பேச்சைக் கேட்கவேண்டும் என்ற ஆவலோடு மக்கள் காத்திருந்தனர். அன்று அது அவருக்கு இருபத்தியோராவது கூட்டம். மோசமான உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அன்று அவர் மக்களிடையில் உற்சாகமாக உரையாற்றினார்.  அவர் தங்குவதற்காக திருக்கோவிலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருக்கோவிலூருக்குச் செல்லும் வழியில் அவருடைய வாகனத்தை நிறுத்தி அருகிலிருக்கும் தம் ஊரான மணலூர்ப்பேட்டைக்கு வந்து அங்கு காத்திருக்கும் மக்களிடையில் உரையாற்ற வேண்டும் என்று ஒரு தொண்டர் வேண்டிக்கொண்டார். காத்திருக்கும் மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உடல்நிலை நலிந்திருந்தபோதும் நண்பர்கள் தடுத்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் சத்தியமூர்த்தி இருபத்திரண்டாவது கூட்டமாக மணலூர்ப்பேட்டைக்குச் சென்று உரையாற்றிய பிறகே தன் தங்குமிடத்துக்குச் சென்றார்.

நாடகம், நடனம் போன்ற நிகழ்கலைகளையும் அரசியலில் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணமுடையவராக இருந்தார் சத்தியமூர்த்தி. பேசும் படம் திரையிடப்படத் தொடங்கியதும், மக்களிடம் தேசியக்கருத்துகளை எடுத்துச் செல்ல அந்த ஊடகத்தையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவர் கருதினார். கல்விவசதிகள் குறைந்த சூழலில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களிடம் கருத்துகளைக் கொண்டுசேர்க்க பொழுதுபோக்கு ஊடகங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. சமூக அரசியல் களத்தில் எழும் கேள்விகளை உள்ளடக்கமாகக் கொண்டு விவாதிக்கும் திரைப்படங்களை இயக்குநர்கள் எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதினார். உரிய முக்கியத்துவத்துடன் திரைப்படங்களை அணுகும்படி பிற தலைவர்களிடமும் கேட்டுக்கொண்டார். திரையுலகப் பிரதிநிதியாக சட்டசபைக் கூட்டங்களில் குரல்கொடுக்க அவர் தயங்கியதில்லை. காங்கிரஸின் தேர்தல் பரப்புரைக்காகவே இரண்டு குறும்படங்களை அவர் தயாரித்தார். ஒரு படம் பரவலாக எல்லா இடங்களிலும் வெளியிடப்பட்டது. இராஜாஜி, பூலாபாய் தேசாய், சத்தியமூர்த்தி போன்றோர் தோன்றி உரைநிகழ்த்தும் காட்சிகளைக் கொண்ட  இரண்டாவது படம் தடை செய்யப்பட்டது. பெரும்பான்மையான இடங்களை வென்ற காங்கிரஸ் இராஜாஜியின் தலைமையில் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

1939இல் சென்னை நகராண்மைக்கழகத்துக்கான தேர்தலில் சத்தியமூர்த்தி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அவர் நகராண்மைக்கழகத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சென்னை நகரம் கடுமையான குடிநீர்ப் பிரச்சினையில் சிக்கித் தவித்தது. அதைத் தீர்ப்பதற்காக அவர் கருத்தில் உதித்ததுதான் பூண்டி நீர்த்தேக்கத்திட்டம். முதலில் போர்ச்செலவைக் காரணம் காட்டி, அத்திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்தது ஆங்கில அரசு. ஆயினும் ஓராண்டுக்காலம் தொடர்ச்சியாக அரசுடன் போராடி ஒப்புதல் பெற்று அடிக்கல் நாட்டி வேலையைத் தொடங்கவைத்தார் சத்தியமூர்த்தி.

உரிய ஒப்புதலை உரிய காலத்தில் வழங்காமல் இழுக்கடித்தாலும் 1939-40 காலகட்டத்தில் அவர் மேயராகப் பணியாற்றிய முறை ஆங்கில அரசின் உயர்மட்டத்தினருக்குப் பிடித்திருந்தது.  அவருடைய தன்னலம் சாராத நுட்பமான அணுகுமுறையையும் ஆட்சித்திறமையையும் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் நினைத்தார்கள். அதனால் மேயரின் பதவிக்காலம் முடிவடையும் தருணத்தில் அவருக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை அளிக்க முன்வந்தது அரசு. ஆயினும் சத்தியமூர்த்தி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஆங்கில அரசு இந்திய மக்களின் ஒப்புதலைப் பெறாமலேயே இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியதை எதிர்த்து 1940இல் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பொறுப்புக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் காமராஜரைப் போட்டியிடச் செய்தார் சத்தியமூர்த்தி. வெற்றி பெற்ற காமராஜர் தலைவரானதும் சத்தியமூர்த்தி செயலாளரானார். பிறகு காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்று தனிநபர் சத்தியாகிரகத்தில் இணைந்து போர் தொடர்பாக ஆங்கில அரசுக்கு இந்தியர்கள்  ஒருபோதும் உதவக்கூடாது என முழக்கமிட்டார். ஆங்கில அரசு அவரைக் கைது செய்து ஒன்பது மாத காலம் சிறைத்தண்டனை விதித்தது. சத்தியமூர்த்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். வேலூர், திருச்சி, சென்னை என மூன்று சிறைகளில் அவருடைய தண்டனைக்காலம் கழிந்தது.

08.08.1942 அன்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் நண்பர்களுடன் சென்றார் சத்தியமூர்த்தி. அந்த நிகழ்ச்சியில்தான் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டு புதியதொரு போராட்டத்தைத் தொடங்கினார். அதையொட்டி அவரும் நாடெங்கும் நிறைந்திருக்கும் மற்ற தலைவரகளும் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டனர். பம்பாயிலிருந்து திரும்பிவரும் வழியில் அரக்கோணத்திலேயே சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார். முதலில் வேலூர் சிறையில் அவரை அடைத்துவைத்த அரசு பிறகு  அமராவதி சிறைக்கு அனுப்பிவைத்தது. சில மாதங்களிலேயே சிறையில் அவர் உடல்நிலை நலிவடைந்தது. அதனால் அவரை சென்னைக்கு அழைத்துவந்து மருத்துவமனையில் சேர்த்தது அரசு. ஆயினும் சிகிச்சை பலனற்றுப் போக 28.03.1943 அன்று அவர் இயற்கையெய்தினார்.

வாழ்க்கை என்றால் என்ன என்னும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடையை அளிக்கக்கூடும். சிலர் அதை ஒரு பயணம் என கூறக்கூடும். அதை ஒரு கனவும் என்றும் சிலர் சொல்லலாம். அதை ஒரு தவம் என்று வரையறுப்பவர்களும் இருக்கக்கூடும். தியாகத்திரியில் எரியும் அகல்விளக்கு என்று முன்வைப்பவர்களும் உண்டு.  பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட சத்தியமூர்த்தி போன்ற ஆளுமைகள் தான் நம்பிய ஒன்றுக்காக தன்னையே முழுதாக அளிப்பது என்று சொல்லக்கூடும்.

அச்சத்தை உதறிவிட்டால் இந்த உலகில் நம்மை ஒருவராலும் அச்சுறுத்தமுடியாது என்பது காந்தியடிகளின் வாக்கு. அதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்களில், அச்சத்தை உதறி ஒவ்வொரு படியாக கடந்துவந்த சத்தியமூர்த்தியும் ஒருவர். தான் நம்பிய ஒன்றுக்காக தன்னையே அளித்தவர் அவர். சோர்வில்லாத அவருடைய உழைப்பும் கேட்போரை வசப்படுத்தும் உண்மை தோய்ந்த அவருடைய சொல்வன்மையும் அதன் அடையாளங்களாக உள்ளன.

( சர்வோதயம் பேசுகிறது - ஜனவரி 2021 இதழில் வெளிவந்த கட்டுரை )