மூன்று
மேகத்தின் மார்பில் குத்தப்போகிற மாதிரி சர்ரென்று புறப்பட்ட சரவாணம் ஒரு புள்ளியில் வெடித்து வண்ணப் பூக்கள் சிதறின. அடர்த்தியான இருளுக்கு நடுவில் வர்ணப் பொறிகளின் அழகு கவர்ச்சியான விஷயம். கவர்ச்சியில் திளைப்பதற்கே அப்பாவோடு கூடக்கூட நடந்தான் குமரேசன். மார்பு கொள்ளாமல் வெடிகளை அணைத்தபடி அப்பாவுக்கு ஒவ்வொன்றாய் எடுத்துத் தரும்போது சந்தோஷமாய் உணர்ந்தான்.
‘யாருடா நீ...?’
‘வாணக்கார குப்புசாமி புள்ள’
சொல்லிக் கொள்வதில் கம்பீரமாய் இருந்தது. அப்பாவையும் தன்னையும் சுற்றி வளையமாய் ஜனங்கள் நின்று வேடிக்கை பார்ப்பது அதிசயமாய் இருந்தது. ‘நவுறுங்கடா அந்தப்பக்கம். மேல படும்’ என்று நெருங்குகிற பிள்ளைகளை அதட்டும் அதிகாரத்துக்கு மனசு அலைந்தது.
தேர் பெரிய தெரு முக்கு திரும்பிக்கொண்டிருந்தது.
‘குமரேசா’
‘ம்பா’
‘இன்னம் இருபத்தஞ்சி வெடி இருக்குமா...?’
‘இருக்கும்பா’
‘எல்லாத்தயும் தேர் வந்து சேர்றதுக்குள்ள தீத்துரணும். ஒன்னொன்னா குடு’
‘சரிப்பா’
நெருப்புக்கங்கு எரியும் கயிற்று நுனியை வாணத்தில் பற்ற வைத்து சாய்மானமாய் மேலே ஏற்றிக் கொண்டிருந்தார் அப்பா. ஒவ்வொரு வாணமும் சொல்லிவைத்தமாதிரி ஒரே நேர இடைவெளியில் தொடர்ந்து வெடித்தன. மேகத்தில் இருந்தே பூக்கள் சிதறுகிறமாதிரி வானத்தின் எல்லாத் திசையிலும் சிதறின. இருளே பகலாகிய மாதிரி ஒரே வெளிச்சக்காடு.
‘வாணம்லாம் ஆச்சிதா?’
‘ஆச்சிப்பா...’
‘தேர் கோயில் வாசலுக்கு வர்றதுக்குள்ள குழாய்ல மருந்து இடிக்கணும்டா, ஆவுமா’
‘ஆவும்பா’
பாலித்தீன் பையில் வைத்திருந்த உயர்ந்த வெடி மருந்தை வெடிக்குழாயில் திணித்தார்கள். ஆளுக்கொரு குழாயில் மூங்கில் குச்சியால் திணித்துத்திணித்து அடைத்தார்கள். மேற்கு வாசலில் ஆறு குழாய்களையும் அடுக்கி நெருப்பு வைக்கத் தோதாய் கரித்தூள் இழுத்தார்கள். வாசலில் தேர் வந்து நின்றது.
மேளக்காரர்கள் தளுக்கு காட்டி அடித்தார்கள். நாக சுரங்கள் போட்டியிட்டு ஊதின. கற்பூரம் ஏற்றி ஆராதனை நடத்தினார் பூசாரி.
‘வெடி வைக்கச் சொல்லுய்யா சீக்கிரம் சாமிய எறக்கணும்’
கும்பலில் கட்டளை எழுந்தது. ஆள் மாறிமாறி கட்டளை அப்பாவுக்கு வந்து சேர்ந்தது. அப்பா நெருப்புக் கயிற்றை எடுத்துக் கொண்டு முன்னால் அடிஅவைத்தார்.
‘நா வய்க்கட்டாப்பா...’
போய்க் கொண்டிருந்தவரைப் பார்த்துக் கேட்டான் குமரேசன். திரும்பிப் பார்த்துச் சிரித்தார் அப்பா.
‘மீச மொளச்சி பெரிய ஆளாவுடா மொதல்ல. அப்புறம் நீதா வாணக்கார வாரிசு...’
சொல்லிக் கொண்டே நடந்த அப்பா ‘மாரியாத்தா’ என்று ஆகாயத்தையும் பார்த்துக் கும்பிட்டு வெடியில் தீ வைத்தார். பற்றியதும் நகர்ந்து பின்வாங்கினார். சரசரவென்று பாம்பு நகர்கிற மாதிரி கரிக்கோடுகள் எரிந்து குழாயில் இருந்த திரியில் முடிந்தது. எல்லார் கவனமும் வெடிக்குழாயில் இருந்தது. வெடி மருந்துப் பையைக் கட்டிக் கொண்டு அப்பாவை ஒட்டி நின்றான் குமரேசன்.
டமால் டமால் என்று தொடர்ந்து ஐந்து வெடிகள். பூமியையே அதிர வைக்கிற வெடிகள். கொஞ்ச நேரத்துக்கு புகை உயரே எழும்பித் தணிந்தது. வெடிக்குழாய்கள் இருந்த இடம் சின்னதாய்ப் பள்ளமானது வெடித்த குழாய்கள் சிதறி இங்குமங்கும் விழுந்து
கிடந்தன. விலகி சாதாரணமானது. திரும்பித் தேர்ப்பக்கம் நடக்கத் தலைப்பட்டார்கள்.
‘வெடி கிட்ட வராதீங்க. இன்னோர் வெடி வெடிக்கல இன்னம்’
அப்பா சத்தம் போட்டு கைகளை ஆட்டித் தடுத்தார். ஜனங்கள் பின்வாங்கித் திகைத்து நின்றது. தேர்ப்பக்கம் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்.
‘இன்னாயா இன்னா குப்புசாமி’
‘இன்னம் ஒரு வெடி பாக்கி இருக்குது’
‘சீக்கிரம் ஆவட்டும்பா. ஆத்தாவ எறக்கணும்’
‘தோ வெடிச்சிருங்க’
‘எப்படா வெடிக்கறது? சாமிய எப்படா உள்ள கொண்டும் போறது’
‘ஆச்சிங்க கொஞ்ச நேரம். இந்த மாதிரி ஆனதில்ல இதுவரைக்கும்’
வெடியைப் பார்த்துக்கொண்டே சொன்னார் அப்பா. வெடிக் குழாய்மேல் கண்மண் தெரியாமல் எரிச்சல் புரண்டது அப்பாவுக்கு. பல்லையும் உதட்டையும் கடித்துக்கொண்டார். புசுபுசுவென்று மூச்சு வாங்கினார்.
‘சீக்கிரம்டா குப்புசாமி. நெறயவேல நிக்குது. இப்ப வெடிக்குமா வெடிக்காதா ஒன் வெடி...’
அடிபட்ட மாதிரி அப்பா திரும்பிப் பார்த்தார்.
‘பின்ன இன்னாடா? இவ்ளோ ஜனத்த நிக்க வச்சிகினு வேடிக்க பாக்கறியே. புஸ்வாணத்த கொண்டாந்து போட்டுக் காசி வாங்கலாம்ணு பாத்தியா? வெடிக்காட்டா கூட போனாப் போவுது, தண்ணிய கொண்டாந்து ஊத்தி அவி. எல்லா வேலயும் உட்டுட்டு ஒன் பின்னால நாங்க நிக்கறதுக்கு ஒன்னும் கொழந்த கெடையாது...’
அப்பாவின் முகம் குன்றியது. அவரிடம் இருந்து தன் பார்வையை விலக்கி வேறுபக்கம் பார்த்தார்.
‘ஆமாய்யா. மொதல்ல தரித்திரத்த தண்ணி ஊத்தி அவி. யார் காலயாவது புடுங்கப் போவுது...’
ஆளாளுக்குப் பேசினார்கள். உடபெல்லாம் சாட்டை கொண்டு விளாசியமாதிரி இருந்தது அப்பாவுக்கு. குமரேசன் கையில் இருந்த கயிற்றை வாங்கிக் கொண்டு வெடியை நெருங்கினார்.
அப்பா...’
எதுவும் கேட்காது படிப்படியாய் முன்னேறி வெடிக் குழாய்க்குப் பக்கத்தில் போனார் அப்பா. ஒன்றும் தெரியவில்லை. குனிந்து கைநீட்டி குழாயைத் தொட்டார். டமால் என்று வெடித்தது. என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வதற்குள் அப்பா சிதறி விழுந்தார். உடம்பு முழுக்க ரத்தம், தசை பிய்ந்து தொங்கியது. கோடாலியால் குறுக்கே பிளந்த மாதிரி மார்பில் அறுந்து கிடந்தது. அறுந்த உடம்பு துடித்தது.
‘அப்பா...’
கனவு கலைய சட்டென்று அலறலுடன் எழுந்து உட்கார்ந்தான் குமரேசன். முகம் வியர்த்தது. நெஞ்சு வேகமாய்த் துடித்தது. கையும் காலும் நடுங்கின.
கூடப் படுத்திருந்த தாஸ் சட்டென்று எழுந்து குமரேசன் பக்கத்தில் வந்து உலுக்கினார்.
‘இன்னாச்சிடா குமரேசா...?’
‘கனவுண்ணே’
‘பேய்க் கனவா?’
‘ம்ஹூம்’
‘பொம்பளையா’
‘இல்லண்ணே’
‘பின்ன’
‘அப்பா வந்தாருண்ணே கனவுல. போன வருஷம் கூட திருச்சில ஒரு நாளு வந்திருச்சின்னு சொன்னனே அதே மாதிரி கனவு...’
‘ஒங்கப்பா செத்த கனவா’
‘ம்’
‘எத்தினி வருஷம் இருக்கும் ஒங்கப்பா செத்து’
‘எட்டு வருஷம் இருக்கும்ண்ணே’
‘இன்னும் மறக்க முடியாமயோ அவஸ்தப்படற? சரி சரி படுத்துத்தூங்கு’
தாஸ் படுத்துக் கொள்ள எழுந்து நின்றான் குமரேசன். பக்கத்தில் வண்டி நின்றிருந்த தோரணை இரவில் பெரிய வைக்கோல் போரை நிறுத்திய மாதிரி இருந்தது. வெளிச்சம் குறைந்த நிலா இருட்டையே பூமியில் கரைத்து ஊற்றியது. ஆகாயத்தைப் பார்த்து அப்பா என்று தழுதழுக்கச் சொல்லும் போது அழுகை பெருகியது. கண்களில் நீர் கசிந்தது. அழுகையூடே அப்பா சாவைத் தொடர்ந்து ஒவ்வொன்றாய் நினைத்துக் கொண்டான்.
அனாதையாக நின்றதை, ஒரு வாரத்துக்கு மணியக்காரர் வீட்டில் சோறு தின்றதை, அவர் மாடுகளையெல்லாம் மேய அழைத்துக்கொண்டு போய் வேலங்காட்டில் விட்டுவிட்டு ஏரியில் குளித்து ஆடியதை, கூடக் குளித்துக்கொண்டிருந்த சிநேகிதன் ஆழத்தில் மூச்சு முட்டி செத்துப் போனதை, இரண்டு அடுத்தடுத்த சாவுகளும் மனசில் உண்டாக்கிய நெருக்கடியும் பலவீனமும் உந்தித் தள்ள அந்தச் சூழலில் இருந்தே தப்பித்துக் கொள்ள ஊரைவிட்டு ஓடிவந்ததை, இன்னொரு ஊரில் ரைஸ்மில்லில் நெல் காயவைத்து வாரியதை, இன்னொரு பையனுக்கு நெருப்பு தள்ளுகிற குச்சியால் ஏதோ தப்பு நேர்ந்து விட்டதற்காக சூடு வைத்த முதலாளியைப் பார்த்துவிட்டு மனம் வெறித்து ஓட நேந்ததை, கரும்பு பனங்கிழங்கு தேங்காய் என்று கிராமங்களில் தோப்பில் திருடித் தின்று கண்ட இடத்தில் படுத்துத் தூங்கியதை, ரயிலுக்குப் போகிற ஒருவர்க்காக கூலிக்குச் சுமைதூக்கிக்கொண்டு போனதை, ரயிலைப் பார்த்ததும் ஏதோ மன உந்துலில் உள்ளே ஏறி உட்கார்ந்து சதாகாலமும் இரைச்சலும், பதட்டமும் அவசரமுமான இந்த ஊர்க்கு வந்ததை, பஸ்ஸ்டாண்ட், சினிமா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன் என்று சுற்றித் திரிந்ததை, ஒர்க்ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்ததை, எட்டு வருஷமாய் லாரியில் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி என்று அலைந்து நாலு நல்லதும் கெட்டதும் கற்றுக் கொண்டதை, தாஸின் ஒத்தாசையில் வண்டி சூட்சுமும் நீக்குப்போக்கும் கற்று டிரைவிங் லைசென்ஸ் வாங்கிக் கொண்டதை...’
ரொம்ப தூரத்துக்கு நடந்துபோய்த் திரும்பவும் வண்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான் குமரேசன். சின்ன வாய்க்காலாய் துங்கபத்ரா நதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம்
ஆற்றில் காலை விட்டு அளைந்து விட்டு மீண்டும் படுக்க வந்தான் குமரேசன். நல்ல உறக்கத்தில் இருந்தார் தாஸ். கைகளை மார்மீது கோர்த்தபடி சன்னதாய் வாய் திறந்திருக்க குறட்டைச் சத்தத்தோடு தூங்குவதைப் பார்த்ததும் தவிர்க்க முடியாமல் சட்டென்று அப்பாவின் ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.
(தொடரும்)