Home

Sunday, 21 July 2024

வாழ்வின் திசைகள் - 5

 

ஐந்து

வெடிஞ்சி இன்னுமாய்யா -தூக்கம் ஏந்துரு ஏந்துரு

எவனோ ஒருவன் அதட்ட அரைகுரையாய் விழிப்பு மூள  அப்புறம் சட்டென்று எழுந்து  உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான் குமரேசன்.

என்னப்பா பாக்கற? ஏந்துரு

மணி என்ன

வெடிஞ்சி அரமணி நேரம் ஆச்சி, ஏந்து நடயக் கட்டு

ம்

உம் கிம்னு ஒக்காந்துக்னு ராமாயணம் படிக்காத மொதல்ல எழுந்துரு. சேட்டு வந்தான்னா பல்ல பேத்துருவான். பெரிய ஆளு சேட்டு. போலீஸ் கீலீஸ்னு கூப்ட்டு முட்டிக்கு முட்டிய தட்டிருவான். ஏதோ ராத்திரி வந்தியே புதுசா இருக்கியேன்னு படுக்கச் சொன்னன். ஏந்துரு, எழுந்து கைகால்களை உதறிக் கொண்டான். இடுப்புத் துணியைச் சரி செய்தான். தலைக்கு வைத்த துணிப்பையை உதறித் தட்டினான். மரத்தடியில் இருந்த டீக்கடையில் தண்ணீர் வாங்கி கொப்பளித்தான். சூடாய் டீ வாங்கி அதட்டியவனுக்கும் கொடுத்து தானும் குடித்தான்.

யாரு சேட்டு

சேட்டு பெரிய கை. லட்சம் லட்சமா சொத்து இருக்குது. அவன் சொன்னா போலீஸ் ஆடும். நெறய தரம் வாசப் படில -தூங்கனவங்கள போலீஸ்க்கு புடிச்சி குடுத்திருக்கான். அதுக்குத்தா உஷாரா இருக்கணும். அதுசரி இதயெல்லாம் கேக்கறியே எந்த ஊரு நீ

வெளியூரு

அது தெரிது. எங்க ஊருன்னு கேட்டன்

வாய்க்கு வந்த ஊரைச் சொன்னான்.

இங்க எப்பிடி வந்த?’

லாரில வந்தன், நடுவுல வண்டி பிரேக் டௌன். பேன் பெல்ட் கட்டாய்டுச்சி. வாங்கியாறன்னு ஊருக்குள்ள வந்தன். திரும்பி போவறதுக்குள்ள வண்டி போய்ருச்சி. அப்றம்தா இங்கயே தங்கிட்டன்

கூசாமல் வாயில் பொய் வந்தது. தடுமாறாமல் வார்த்தைகளை ஜோடிக்க முடிந்தது. ஒர்க்ஷாப்பை விட்டு வந்த வேதனை முள்ளாய்க் குதறினாலும் மறைத்துச் சிரிக்க முடிந்தது. பத்து வருஷத்து  பழக்கத்தையும் உறவையும் ஒரு நொடியில் முறித்துக்கொள்ள முடிந்த விஷயம் இன்னும் கூட தெளிவில்லாமல் இருந்தது. மலையாளத்துப் பெண்ணுடனான மயக்கம் மனசின் மூலையில் சந்தோஷமாய் இருந்தது.

இங்க லாரி ஆபீஸ் ஏதாச்சும் இருக்குதா?’

அதோ கோயில் தெரியுதில்ல. அதுக்குப் பக்கத்துல ஒரு சந்து போவும். அதுலயே நடந்து போனா ஒரு ரேஷன் கடை வரும். அங்க வளஞ்சி முன்னால போய்க்னே இருந்தா, அங்க ஒரு புக்கிங் ஆபீஸ் இருக்குது-.’’

டீக்குப் பணம் கொடுத்து விட்டு நடந்தான்.

சத்தமிட்டுக் கொண்டு வாகனங்கள் பறந்தன. பெரிய பெரிய கட்டடங்களும் சந்தடி மிக்க பிளாட்பாரமும் வரிசை வரிசையாய்ப் பறந்து கொண்டிருந்த பஸ்களும் எதிரும் புதிருமாய் அவசரம் அவசரமாய் நடந்த ஜனங்களும் வீசத் தொடங்கிய காற்றும் காற்றில் பறந்த காகிதக் குப்பைகளும் நிற்கிற போதே இடித்து விட்டுப் போன ஆட்களின் நடவடிக்கையும் குமரேசனுக்குத் தனிமையை அதிகப்படுத்திக் காட்டின.

புக்கிங் ஆபீஸில் நிறைய லாரிகள் நின்றுகொண்டிருந்தன. -தூக்குக் கம்பியில் டீ கிளாஸ்களை மாட்டிக்கொண்டு உள்ளே போனான் ஒரு பையன். ஆபீஸ் வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் நிறைய ஆள்கள் படுத்துக் கிடந்தார்கள். சன்னல் ஓரமாய் மேசை நாற்காலி இருந்தது. பழைய பேப்பரும் புது பேப்பருமாய் நிறைய அறைமுழுக்கச் சிதறிக் கிடந்தன. நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் வெளியே வந்து சிகரெட் புகைக்கும் போது நெருங்கினான் குமரேசன்.

வணக்கங்க

யாரு

டிரைவருங்க. லாரியெல்லாம் ஓட்டுவன். லைசன்ஸ் வச்சிருக்கன். ஊர்ல கொஞ்சம் கஷ்டம். ஊட்ட உட்டு வந்துட்டன். ஓட்டறதுக்கு வண்டி கெடைச்சா உபசாரமா இருக்கும்

எதுவும் இல்லயேப்பா

அப்டி சொல்லாதீங்க சார். நெறய பேர கேட்டன். எல்லா எடத்துலயும் ஒங்களப் பத்தி விமரிசையா சொல்றாங்க. நீங்க மனசு வெச்சி ஒரு குடும்பத்துக்கு வௌக்கேத்தனா புண்ணியமா  இருக்கும்

இல்லியேப்பா. இருந்தா குடுக்கலாம்

ஒரு சான்ஸ் குடுத்துப் பாருங்க சார். இது வரிக்கும் லைசன்ஸ்ல ஒரு ரிமார்க்ஸ் கெடையாது. வேணும்னா இதப் பாருங்க. லோக்கலோ வெளியூரோ வாரத்துக்கு ரெண்டு நாளோ மூணு நாளோ கெடைச்சா கூட போதும் பொழைச்சிக்குவன்...’

சரி சரி பாப்பம். அப்பிடி ஒக்காரு

ஆபீஸில் எதிர்த்தாற் போல காட்டுவாகை மரத்தடியில் உட்கார்ந்தான் குமரேசன். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் காத்திருந்தான். சூரியன் விழுந்து ஆகாயம் நிறம் மங்கத் தொடங்கிய பொழுதில் ஆபீஸில் இருந்து ஒரு பையன் வந்து கூட்டிப் போனான். உள்ளே போய் கைகட்டி நின்றான் குமரேசன்.

பெங்களூர் ட்ரிப் போவணும். ரூட் தெரிமா

தெரியும் சார்

இதுக்கு முன்னால போய்ருக்கியா

போய்ருக்கன் சார்

சாமராஜ்பெட் தெரியுமா

தெரியும் சார்

அங்கதான் பார்ட்டி நிக்கும். பத்தரமா எறக்கணும். உருளக் கெழங்கு மூட்ட. பத்தரமா போய் சேரணும்

சரி சார்

பேரு இன்னா சொன்ன?’

குமரேசன் சார்

சரி இவருங் கூட வருவாரு. மீதிய இவரே பாத்துக்குவாரு

சரி சார்

கூட வருகிறவரைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தான் குமரேசன்.

ராஜாராமா பாத்துப் போ. இதுல ஆயிரம்ரூபா இருக்குது. வச்சிக்க. டீசல் போட்டுக்னும் போ. இங்கேர்ந்து  இந்தாள்  கிட்டயே வண்டி குடு. ஒடைக்கறது, திருப்பறது, சிக்னல் பாக்கறது, ப்ரேக் க்ளச் அழுத்தம் கவனிச்சிக்கோ. டீசல் டேங்க் வரிக்கும் பாரு. தோதுப்பட்டிச்சின்னா முன்னால இட்டும் போ. இல்ல நாயர் கடைல சோறு வாங்கிக் குடுத்துட்டு எறக்கி உட்டுடு. நீயே எடுத்தும் போ. என்ன ஒன்னயும் வச்சிக்னுதா சொல்றன். இதுல மூடு மந்தரம் எதுவும் இல்ல

சரி சார்

நீயே சரிப்பட்டு வந்துட்டன்னா வழில சாப்பாட்டுக்கு மத்ததுக்கு ராஜாராமனே பாத்துக்குவாப்பல. திரும்பி வந்து முந்-நூறு ரூபா வாங்கிக்க. இல்லன்னா ஒன் தலயெழுத்து எப்படியோ அப்பிடிதா. நா ஒன்னும் செய்ய முடியாது.’

சரி சார்

போய் வாங்க

குனிந்து வணங்கினான். லைசன்ஸ் மடித்து பைக்குள் வைத்தான். புது ரத்தம் புகுவது போல உணர்ந்தான். எட்டு டன் உருளைக் கிழங்கு மூட்டை பாரம் அடுக்கிய வண்டியை மனசுக்குள் கும்பிட்டான். சுற்றி வலம் வந்து தார்ப்பாய்க் கட்டைச் சோதித்தான். டயர்களைத் தட்டினான். ராஜாராம் பக்கத்தில் உட்கார டிரைவர் சீட்டில் உட்கார்ந்துமாரியாத்தா தாயேஎன்று கண்களை மூடித் திறந்தான். சாவியைப் பொருத்தித் திருப்பி க்ளச்சை அழுத்தினான். சீரான சத்தத்தில் வண்டி கிளம்பியது. சூடாகி, வேக்கம் இன்டிகேட்டர் சரியாகிற வரை காத்திருந்து கியர் மாற்றி ஆஸிக்ஸிலேட்டரை அழுத்தினான். வண்டி அசைந்து ஓடத் தொடங்கியது. இருபது கஜத்தில் முதல் கியரில் இருந்து மூன்றுக்கு மாறி நாலாவதுக்கு வந்து சீராக்கினான். வழுக்கிக் கொண்டு ஓடியது வண்டி.

சபாஷ்

ராஜாராம் அப்போதே குமரேசன் முதுகைத் தட்டினான். தள்ளி உட்கார்ந்து அவன் வளைகிற தினுசைக் கவனித்தான். டீசல் நிரப்பிக் கொண்டுநீயே ஓட்டுப்பாஎன்றான்.

குமரேசனுக்கு உயிர் வந்தது. மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

ஆறு

குறுக்கும் நெடுக்குமாய் நிறைய கட்டைகள். சிமெண்ட் கலக்கும் பெரிய பெரிய மிஷின்கள். அம்பாரமாய் ஜல்லியும் மண்ணும் ஆற்றுப் பாலத்தில் தற்காலிகமாய் நிற்கும் கீற்றுக் கொட்டகை. திறந்த லாரியில் இருந்து ஜல்லியை வாரிவாரித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். கண்ணாடித் துண்டு மாதிரி பளபளக்கும் ஜல்லி பாலம் முழுக்கப் பரவி இருந்தது. நடப்பதே கஷ்டம். நடக்கவும், வண்டிகள் போகவும், ஆற்றில் இறங்கிப் போகிற இன்னொரு பாதை இருந்தது. ரொம்ப சரிவு. சறுக்கிக் கொண்டே கிடுகிடுவென்று இறங்கி ஏற வேண்டும். கொஞ்சம் வழுக்கினாலும் சறுக்கி கைகால் உடையும் அபாயம். ஆற்று மண் லோடுக்கு லாரியை உள்ளேதான் இறக்கியாக வேண்டும். உள்ளே இறக்க தைரியம் வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் வண்டி சிக்கிக் கொள்ளும். புரண்டு விடும். எந்த ஜாக் வேலையும் எடுபடாது. டவுனில் இருந்து கிரேன் வந்து தான் -தூக்க வேண்டும். கிரேன் வைத்துத் -தூக்குகிற அளவுக்கு வண்டியை இறக்கி விட்டு வேடிக்கை காட்டுகிற டிரைவரை வைத்துக் கொண்டு வேலை வாங்குகிற அவஸ்தையை எந்த முதலாளியும் விரும்ப மாட்டான். ஒரு லோடு மண்ணுக்கு நூற்றி ஐம்பது ரூபாய்தான். ஒரு கிரேன் வந்து போக நாலாயிரம் செலவு. எல்லா டிரைவர்களுக்கும் இது கொஞ்சம் பயமான விஷயம். ஆற்றில் மண் லோடு அடிப்பது முதலை வாயில் போய் வருகிற மாதிரி. பாலம் வரைக்கும் வந்துபத்து தரம் யோசிப்பார்கள். யோசிக்கிற ரைவர்களுக்கு தைரியம் கொடுப்பதற்கு கூலி டிரைவர்கள் பாலத்தில் உட்கார்ந்திருப்பார்கள். சாமர்த்தியமாய் இறக்கி ஏற்றுவது மாத்திரமே வேலை. ஒரு லோடுக்கு சுலபமாய் முப்பது நாற்பது கிடைக்கும். குமரேசனுக்கு தினமும் ஐந்தாறு லோடு கிடைத்தது. கூட இருந்த இன்னும் சில கூலி டிரைவர்களைக் காட்டிலும் கூடுதலாய் இருந்த சாமர்த்தியத்தின் காரணமாக குமரேசனுக்கு கூடிய சீக்கிரத்திலேயே செல்வாக்கு வந்தது.

யே ஊரய்யா நுவ்வு?’

தெலுங்கில் கேட்டவனுக்குப் பதில் சொன்னான் குமரேசன்.

தமிழ்காரனா?’

குரலில் கொஞ்சம் எரிச்சல். கொஞ்சம் இயலாமை, கொஞ்சம் கோபம் எல்லாம் வெளிப்பட கேட்டான்.

ஏன் ஒங்க ஊர்ல வேல கெடைக்கலியா?’

ம்

அப்பறம் ஏன் இங்க வந்த?’

சும்மா

சும்மாதா எதுக்கு வந்த?’

ஊரச் சுத்தி பாக்கலாம்னு வந்தன். இங்கயே தங்ககிட்டன்.

பொண்டாட்டி புள்ள எதுவும் இல்லியா?’

இல்ல

இங்க வந்து எங்க வவுத்துல எதுக்கு மண்ணப் போடற? எங்க பொண்டாட்டி புள்ள ஒன்னால பட்டினி கெடக்கணுமா?’

ஆத்திரமாய்க் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தான் குமரேசன். கஷ்டமாய் இருந்தது.

எனக்கு மாத்திரம் கொடு என்று யாரிடமும் நேரிடையாய்க் கேட்கவில்லை-. பிளாட்பாரத்துக் கூலி மாதிரி ஓரமாய்த்தான் உட்கார்ந்திருக்கிறான். வருகிறவர்கள் இவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதற்கு யார் பொறுப்பு. யோசிக்க யோசிக்கச் சங்கடமாய் இருந்தது. ராத்திரி முழுக்க யோசித்தவன் அடுத்த நாள் காலை பாலத்துப் பக்கம் வரவில்லை. டவுன் கேட்டுக்கு வெளியே போனான். டவுன் கேட்டிலும் கூலி டிரைவர்கள் உண்டு. லோடு எடுத்து வருகிற வடநாட்டு தென்னாட்டு புது டிரைவர்கள் டவுன் லிமிட்டில் நின்று யோசிப்பார்கள். சிக்னல், ஒன்வே டிராபிக் சிக்கல் குழப்பத்தைத் தவிர்க்க கூலி டிரைவர்களைக் கூப்பிடுவார்கள். டவுன் லிமிட்டில் இருந்து லோக்கல் டெலிவரி பாய்ண்ட வரைக்கும் ஓட்டிக் கொடுத்து காசு வாங்குவார்கள். நாலைந்து நாள் குமரேசன் அங்கே இருந்தான். அடுத்த நாள் மண்லோடு அடிக்கிறவெங்கடேஸ்வரா ரோட்வேஸ்காரன் தேடிக் கொண்டு வந்து விட்டான்.

இன்னா ஆளுய்யா நீ. இங்க வந்து நின்னுக்ன? பாலம் புடிக்கலியா?’

சும்மாதா

நேத்து வண்டி மாட்டிக்கிச்சி. வரதராஜிதா கீழேந்து மேல எடுத்தான். நடுவுல ரிவர்ஸ் கீர்ல வரும்போது மாட்டிக்கிச்சி.-நூத்தி எட்டு தரம் கீர் மாத்தறான். ஒன்னும் தேறல. ஒரே நடுக்கமா போச்சி. என்னமோ செய்யப்போறான்னு வெங்கடாஜலப்   பெருமாளேன்னு தலைல கை வச்சிகினு ஒக்காந்துட்டன். அப்பிடி இப்பிடி ஒடைச்சி ஒரு வழியா மேல வந்தான். ஒரு பக்கம் பம்பர் ராட் அவுட். மேல வந்தா ஸ்டார்ட் ஆவல. கீர் ப்ராப்ளம். மெக்கானிக் வந்து பாத்து முந்-நூறு ரூபா செலவு

த்ச்

நீ வந்துடு வாத்யார. எந்த புடுங்கி ஒன்ன ஒரு வார்த்த சொல்றான்னு பாக்கறன்...’

குடும்பம்லாம் பட்டினியா இருக்குதுன்னு அவனுங்கதா கோபப்பட்டாங்க

அதனால எங்க குடும்பம் பட்டினி கெடக்கணுமா சொல்லு? மொதலாளி சீட்டு கிழிச்சா எங்க போயி நிக்க முடியும்?’

மறுபடியும் குழம்பினான் குமரேசன். தடுமாறினான். கை பிடித்து இழுத்த லாரிக்காரனோடு ஏறி உள்ளே உட்கார்ந்தான்.

பாலத்துப்பக்கம் வந்தபோது மற்றவர்கள் ஓரமாய் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். இவன் இறங்கி ஒரு குவளைத் தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டு குடித்தான். அதனை பேர்பக்கமும் பார்த்து சிநேகமாய் சிரித்தான். அவர்கள் இவனை ஒரு எதிரியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.

திரும்பி வண்டிக்குள் ஏறி ஆற்றுக்குள் இறக்கினான் குமரேசன். லோடு நிரம்பும் வரை ஓரமாய் உட்கார்ந்து சிகரெட் புகைத்தான். நிரம்பிய பிறகு லாவகமாக ரிவர்ஸ் எடுத்து மேலே வந்தான். குழந்தை இழுக்கிற நடை வண்டி மாதிரி மேலே வந்தது லாரி.

இந்த கைராசிக்குத்தான்யா ஒன்ன கூப்ட்டாந்தது

சந்தோஷத்துடன்வெங்கடேஸ்வரா ரோட் வேஸ்காரன் பணம் கொடுத்து விட்டு நகர்ந்தான்.

ஓரமாய்ப்போய் உட்கார்ந்தான் குமரேசன். டீ குடித்தவர்கள் இவனை நோக்கி வந்தார்கள். சாதாரணமாய் வருகிற மாதிரி வந்தவர்கள் சூழ்ந்து நின்றார்கள். சட்டென்று சூழ்நிலையில் ஒரு அசாதாரணம் உருவானது.

எதுக்குடா மறுபடியும் வந்த

அவுருதா கூப்ட்டுக்னு வந்தாரு

அதான் எதுக்கு வந்தன்னு கேக்கறம்

நீதா நேத்து வண்டிய ரிப்பேர் பண்ணிட்டியாம

பேசிக் கொண்டிருக்கும்போதே பளிச் சென்று ஒரு அறை கன்னத்தில் விழுந்தது. பொறி கலங்கத் திணறினான் குமரேசன். கண் இருண்டது. தாடை கிழிந்து ரத்தம் வந்தது. நிமிர்வதற்குள் மூக்கில் இன்னோர் குத்து இறங்கியது. அண்ணாந்து கீழே விழுந்தவன் முடியைக் கொத்தாய்ப் பிடித்து -தூக்கினான் இன்னொருவன். எழுந்திருக்கும்போதே மார்பில் ஒரு உதை விழுந்தது.

வருவியா இந்த பக்கம் இனிமே

மார்பில் மாறிமாறி உதை விழுந்தது. சட்டென்று கையை முதுகுப்பக்கம் வளைத்துப் பிடித்தார்கள். நாலு பேரும் கைப்பக்கமும் கால்பக்கமும் இறுக் ஆரம்பிக்க அவர்களின் நோக்கம் இவனுக்குச் சட்டென்று தெரிந்தது. சரேலென்று திமிறினான் கைகால்களை ஆன மட்டும் எத்தி உதைத்தான். கொஞ்சம் பிடி தளரத்தளர தலையால் முட்டினான். பிடி விலக எட்டி ஓட ஆரம்பித்தான். பின்பக்கமாய்த் தாவிப் பிடித்தவன் பக்கம் சட்டைக்காலர் மாட்டியது. இறுக்கமாய்த் திமிறி முன்னேறும் போது சட்டை கிழிந்தது. வேட்டி அவிழ்ந்தது. வெறி கொண்டு தாக்க வந்தவர்கள் முகத்தைப் பார்த்து நிற்காமல் வெறும் உள்ளாடையோடு ஓடினான் குமரேசன். அப்புறமும் துரத்தினார்கள்.

ஆற்றைத் தாண்டிச் சட்டென்று மூங்கில் காட்டுக்குள் புகுந்தான் குமரேசன். நிற்காமல் ஓடினான். கிளையிலும், முள்ளிலும் வரிவரியாய்ச் சிராய்த்து உடம்பு காயங்களாக நிற்காமல் ஓடினான். ரொம்ப -தூரத்துக்குப் பிறகு ஒரு பள்ளத்தில் தடுக்கி விழுந்து மூச்சு வாங்கினான். காலடிச் சத்தம் எதுவும் கேட்காமல் இருந்ததை ஆயாசமாய் உணர்ந்தான்.

இரவு கவியத் தொடங்குகிற நேரம் வரை அப்படியே கிடந்தான். காயம் பட்ட இடத்தில் ரத்தம் பெருகி உலர்ந்திருந்தது. மணல்துகள் பட்டு உறுத்தியது. எழுந்து உட்கார்ந்து கைகளை உதறினான். வலித்தது. கொஞ்சம் ஏமாந்திருந்தால் கையை உடைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான். குளிர்ந்த காற்று ரணங்களில் தாக்க வேதனையாய் உணர்ந்தான். சட்டை ஞாபகம் வந்தது. சட்டை ஞாபகம் வந்தபோதுதான் சட்டைக்குள் இருந்த லைசன்ஸ் ஞாபகம் வந்தது. பரபரக்க எழுந்தான். ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டான். அவசரம் அவசரமய்க் காட்டை விட்டு வெளியே வந்தான். விளிம்பில் நின்று ஆற்றுப் பாலம் பக்கம்  பார்த்தான். யாரும் தெரியவில்லை, ஆள்கள் போயிருக்கக் கூடும் என்று எண்ணி மணலில் நடந்தான். சட்டை எங்கேனும் கிடக்குமோ என்று பார்த்தான். இரவு வேறு கவியத் தொடங்க ஓடி வந்த திசை தெரியாமல் குத்துமதிப்பாகவே தேடினான். ரொம்ப நேரத் தேடுதலுக்குப் பிறகு சட்டைத் துணுக்குகள் கிடைத்தன. நார்நாராய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்தன. அவசரமாய் பை இருந்த துண்டில் கைவிட்டான், காலியாய் இருந்தது. அதிர்ச்சியாய் இருந்தது. தலையில் மாறிமாறி அடித்துக் கொண்டான். நடுங்கி உட்கார்ந்தான். பதினைந்து வருஷத்துக்குப் பிறகு வாழ்க்கை மறுபடியும் ஆரம்பித்த புள்ளியிலேயே வந்து நிற்பதை நினைத்தபோது துக்கமாய் இருந்தது, நெஞ்சை அடைத்தது. தன்னை மீறி அழுகை உடைத்துக்கொண்டு வர உதட்டைக் கடித்துக்கொண்டான் குமரேசன்.

(பிரசுரமாகாதது -1988)