1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான படைப்புகள் எழுதப்பட்டன. அவற்றில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்று மிகமுக்கியமானது.
’இரவிலே பொசுக்கப்பட்ட அனைத்துக்கும் அஸ்தி கண்டார் நாகரிகம் ஒன்று நீங்க’ என்பவை அக்கவிதையின் இறுதிவரிகள். மனிதகுலம் சமூகவளர்ச்சியின் ஊடாக, தாமே உருவாக்கித் தொகுத்துப் பின்பற்றி வந்த பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் அக்கணத்தில் பொசுங்கி சாம்பல் கூட எஞ்சாமல் மறைந்துவிட்டன. வரலாற்றில் அது நீக்கமுடியாத ஒரு மாபெரும் கறை. ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்குப் பிறகு அதேபோன்ற ஒரு கொடுமை ஈழத்தில் நிகழ்ந்தது. உடன்வாழ்ந்த ஓர் இனத்தை இன்னொரு இனம் கருணையே இல்லாமல் அநீதியான வழியில் அழித்தொழித்தது. தன் படை வெட்டிச் சாய்த்த கதைகளும் உண்டு. வரலாற்றிலிருந்து மானுடன் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதை மனிதகுலம் மீண்டும் மீண்டும் நிரூபித்தபடியே இருக்கிறது. அகரமுதல்வனின் போதமும் காணாத போதம் நாவல், நமக்குக் கிடைத்திருக்கும் சமகால துயரவாழ்வின் ஆவணம். முகமற்ற எண்ணற்றோர் சிந்திய துயரமெனும் கண்ணீர்க்கடலில் ஒரு துளி.செட்டிக்குளம் அகதிமுகாமில் அடைககப்பட்டு பல மாத காலம் சொல்லவொணாத்
துயரங்களுக்கு இலக்கானவர்களை ராணுவம் ஒருநாள்
சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புகிறது. மீள்குடியேற்றம் தொடங்குகிறது. புதர் மண்டிவிட்ட
வீடுகளையும் காடு கழனிகளையும் தோப்புகளையும் கோவில்களையும் சுத்தப்படுத்தி, வாழ்வதற்குத்
தகுதிப்படுத்திக்கொள்வது எளிதான செயலல்ல. அல்லும் பகலும் பல நாட்கள் பாடுபட்டு உழைத்து
ஒவ்வொன்றையும் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. அந்தத் துயரங்களை ஓர் இழையாகவும் அகதிமுகாமில்
அடைக்கப்படுவதற்கு முந்தைய போர்க்காலச் சூழலை இன்னொரு இழையாகவும் மாறிமாறித் தொடுத்து படைப்பாக்கி இருக்கிறார் அகரமுதல்வன்.
அவர் திரட்டித் தொகுத்திருக்கும் மனிதர்களின் கதைகள் ஒவ்வொன்றும் நம் நினைவில் பதிந்துவிடுகின்றன.
ஒவ்வொருவருடைய துயரமும் ஒவ்வொரு விதமாக அமைந்து மனத்தைப் பாரமாக்குகின்றன.
ஆரூரான் என்றொரு பணியாளர். மரணமடைந்த உடல்களைப் புதைப்பதற்கு
குழிகளைத் தோண்டும் பணிசெய்கிறார் அவர். நாட்டுக்காக உழைத்து உயிர்நீத்த மாவீரர்களை
அடக்கம் செய்வதற்கான குழிகளைத் தோண்டும் பணிக்கு ஊதியம் பெற அவர் மனம் குற்ற உணர்ச்சியில்
தயங்குகிறது. குழிவெட்டும் பணியும் ஒருவகையில் நாட்டுக்காக ஆற்றும் பணியெனக் குறிப்பிட்டு
ஊதியம் பெற மறுக்கிறார். ஆயினும் அமைதியான குரலில் அவரிடம் உரையாடி, அவருடைய தயக்கத்தை
நீக்கி ஊதியமளிக்கிறார் பொறுப்பாளர். (அகரமுதல்வன் சடலத்தை வித்துடல் என்றும் புதைக்கும்
இடத்தை துயிலுமில்லம் என்றும் குறிப்பிடுகிறார்.)
போர் உச்சத்தில் நிகழும் கணத்தில் ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்கும்
மேற்பட்ட உடல்களைப் புதைக்கவேண்டி வருகிறது. மெல்ல மெல்ல அந்த எண்ணிக்கை பெருகிக்கொண்டே
செல்கிறது. ஒருநாள் மன்னார் களமுனை முற்றிலுமாக கைவிட்டுச் சென்றுவிடுகிறது. தெய்வம்
தம்மைக் காக்கவில்லை என்று உணர்ந்ததும் விசைகொண்ட ஆரூரன் மனத்துயரத்தின் விளைவாக வீரபத்திரரின்
பீடத்துக்குக் கீழே குழி தோண்டத் தொடங்குகிறார். தம்மை வழிபட்ட மக்களைக் காப்பாற்றாது
நிற்கும் நிலையே தெய்வமும் வீரமரணம் அடைந்துவிட்டது என்பதற்குச் சாட்சி என்று கசப்போடு
சொன்னபடி, வீரபத்திரச் சூலத்தைப் பிடுங்கி விதைகுழிக்குள் வைத்து மூடிவிடுகிறார் ஆரூரன்.
முள்ளிவாய்க்காலில் போர் மூண்டுவிட்ட தருணத்தில், அவர் மீது
அன்புகொண்ட நண்பர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பதுங்குகுழிக்குள் பாதுகாப்பாக
வைத்திருக்கின்றனர். ஆயினும் பதுங்குகுழியையும்
புதைகுழியையும் மாறிமாறி நினைத்து இரண்டையும் ஒன்றெனக் கருதி மனம் பேதலித்து உயிரை
இழந்துவிடுகிறார். நூற்றுக்கணக்கானவரின் வித்துடலை குழிதோண்டி அடக்கம் செய்த ஆரூரனுக்கு
பதுங்குகுழியே துயிலுமில்லமாக அமைந்துவிடுகிறது.
கேணியடி என்பது ஒரு கிராமம். இருபத்தைந்து ஆண்டுகள் ராணுவத்தின்
கட்டுப்பாட்டிலேயே இருந்த கிராமத்தை மீள்குடியேற்றத்தின்போது மக்களுக்கு அக்கிராமத்தை
அளிக்கிறது ராணுவம். சொந்த மண்ணில் குடியேறி வாழப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கிராமத்தில்
நுழைகிறார்கள் ஏழைகள். ஒருத்தி மண்ணைத் தொட்டு நெற்றியில் குங்குமமென தொட்டெடுத்து
வைத்து மகிழ்கிறாள். சின்னாச்சி என்பவளுக்கு சொந்த மண்ணைத் தீண்டியதும் சந்நதமே வந்துவிடுகிறது.
யாரோ கொண்டுவந்த வேப்பிலைக்கொத்துகளை ஏந்தியதும் அவள் வேகம் பெருகுகிறது. பல இடங்களில்
ஓடி ஓடி நின்று ஆடுகிறாள். ஏதோ ஒரு மரத்தடியில் அவள் நின்று ஆடும்போது எப்போதோ அவ்விடத்தில்
ராணுவத்தால் புதைத்துவைத்த கண்ணிவெடி வெடித்து உடல் துண்டுதுண்டாகச் சிதறிவிடுகிறது.
அவளைச் சுற்றியிருந்த கூட்டமு திகைத்து ஓடி ஒதுங்கிவிடுகிறது. புழுதி அடங்கியதும் அனைவரும்
திரும்பிவருகிறார்கள். அச்சத்தை உதறிவிட்டு, ஆழ்ந்த துயரத்துடன் உயிரிழந்த உடல்துண்டுகளைச்
சேகரித்துக் குவித்து கேணியடி கிராமத்தின் சுடலையில் தகனம் செய்ய முனைகிறார்கள். ராணுவம்
தலையிட்டு அவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறது. கோபம் கொண்ட மக்கள் அவள் உடல்பகுதிகளைச்
சுமந்துவந்து படைமுகாம் முன்னாலேயே வைத்து விறகுகளை அடுக்கி தீமூட்டுகிறார்கள்.
சங்கன் ஒரு விசித்திரமான மனிதன். கிணறுவெட்டில் பாடுபட்டு
உழைப்பவன். வேலை கிடைக்காத தருணத்தில் அவன் மனத்தில் கள்ளம் புகுந்துகொள்கிறது. யாருமில்லாத
கிராமத்தில் புகுந்து வைரவர் கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியல் என
அனைத்தையும் திருடிக்கொண்டு செல்கிறான். இன்னொரு முருகன் கோவிலில் இருந்த வேலையும்
எடுத்துக்கொள்கிறான். ”எங்களுக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்த அரசாங்கத்தையே தண்டிக்காத
நீ, உன்னிடம் திருடிய என்னையும் தண்டிக்கமாட்டாய் என்று நம்புகிறேன்” என்று வணங்கி
பதிகம் பாடிவிட்டுச் செல்கிறான். திருடிய பொருட்களையெல்லாம் ஊருக்கு வெளியே யாருமில்லாத
இடத்தில் புதைத்துவைக்கிறான். அந்த வேலை உருக்கித்
தங்கக்கட்டியாக மாற்றும் திட்டத்துடன், பொன்வேலை செய்கிறவர்களுக்காக தேடி அலைகிறான்.
.
கிளிநொச்சியில் ஒரு குடும்பம். போர்ச்சூழலில் அங்கே வசிக்க
விரும்பவில்லை ஒரு குடும்பம். குடும்பத்தின்
தலைவர் பச்சை. மனைவி சுகந்தா. மகன் சித்திரன். இருக்கும் சொத்தை விற்று பணமாக மாற்றி
எடுத்துக்கொண்டு இலங்கையைவிட்டு வெளியே செல்லவேண்டும் என்று திட்டமிடுகிறார் அவர்.
மகன் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் மனைவிக்கு அதில் உடன்பாடில்லை. அவளிடம்
மெல்லமெல்லப் பேசி ஏற்றுக்கொள்ள வைக்கிறார் அவர். அவர் வாழும் வளாகத்திலேயே நறுமுகை
என்னும் பெண்ணும் அவள் தந்தையும் வசிக்கிறார்கள். அவர்களிடம் பச்சையின் வாதம் எடுபடவில்லை.
அங்கிருந்து வெளியேறுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. புலிகளின் பார்வையில் அகப்படாமல்
வெளியேறுவது சாத்தியமில்லை என்பது அவர்களின் வாதம்.
ஒருநாள் இரவில் பச்சை, சுகந்தா, சரித்திரன் மூவரும் படகில்
ஏறி பயணத்தைத் தொடங்குகிறார்கள். எங்கோ தப்பிச் சென்று வாழப் போகிறோம் என்ற எண்ணத்தில்
அவர்கள் மூழ்கியிருக்கும்போது, அவர்கள் புலிகளிடம் அகப்பட்டுக்கொள்கிறார்கள். சுகந்தாவை
மட்டும் விடுவித்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பச்சையும் சித்திரனும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தொடக்கத்தில் வெளியேற மறுத்த நறுமுகையும் அப்பனும் ஒருவருக்கும் தெரியாமல் ஒருநாள்
ஊரைவிட்டு வெளியேறி வேதாரண்யம் கடற்கரையை அடைகிறார்கள்.
போருக்கு நடுவில் காதலுக்கும் இடமிருக்கிறது. காமத்துக்கும்
இடமிருக்கிறது. அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளைஞன் ஒருவனும் இளம்பெண் ஒருத்தியும்
காதல்வசப்பட்டிருக்கிறார்கள். கடைவீதியில் சுண்டல் விற்கும் இடத்தில் அறிமுகமாகி அவர்கள்
காதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஒருநாள் நடைபெற்ற குண்டுவீச்சில் அவள் இறந்துவிடுகிறாள்.
வீட்டுக்கு அருகிலேயே அவளைப் புதைத்துவிடுகிறார்கள். உயிருடன் இருக்கும்போது கடைத்தெருவில் அவளை சுண்டல்
விற்குமிடத்தில் பார்த்துப் பேசிய இளைஞன், அவள் மறைந்த பிறகு அவள் புதையுண்டிருக்கும்
இடத்தில் சென்று மானசிகமாக உரையாடிவிட்டு் வரத் தொடங்குகிறான்.
ஒருநாள் அப்படி ஒரு கற்பனை உரையாடலில் அவன் திளைத்திருக்கும்போது,
அருகில் எங்கோ வெடிச்சத்தம் கேட்கிறது. கடுமையான மோதல் நிகழும் அடையாளம். புதைமேட்டின்
அருகிலேயே குண்டுகள் விழுந்து வெடிக்கின்றன. ஆயினும் அங்கிருந்து நகராமல் அமர்ந்திருக்கிறான்
அவன். அங்கு வந்த யாரோ ஒரு போராளி, அவரிடம் விசாரணை நடத்திவிட்டு தன்னுடைய பதுங்குகுழிக்கு
அழைத்துச் சென்று தங்கவைத்து காப்பாற்றுகிறார். சண்டை நடக்கிற இடத்திலே இப்படி தனியே
இருப்பது பிழை அல்லவா என்று கேட்கிறார். அவனோ போரைவிட எல்லாமே சரி என்று புன்னகைக்கிறான். விடியும் வரை அவனைத் தன்னோடு வைத்திருந்த போராளி,
விடிந்த பிறகு அவனை வெளியே அனுப்புகிறார். காற்றில் மிதந்துவரும் அவளுடைய குரலைக் கேட்டபடியும்
கற்பனையில் அவளோடு உரையாடியபடியும் அவன் புறப்பட்டுச்
செல்கிறான்.
அதிபத்தன் என்பவர் ஒரு போர்வீரர். கடல் வழியாக போர் புரிவதற்காக
ஓர் அணியை அழைத்துச்செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர். புறப்படும் முன்பாக சோதியைச்
சந்திக்க வருகிறார். அவருக்கு மீன்குழம்பு வைத்து சோறு போடுகிறாள் சோதி. அவருக்கு விடைகொடுத்து
அனுப்பிவிட்டு சாமி படத்தட்டுக்கு முன்னால் இருந்த விளக்கை ஏற்றிவைக்கிறாள் அவள். அதிபத்தனுக்கு
எதுவும் நேராமல் காக்கவேண்டும் என்றும் அவர் திரும்பி வரும்வரை அச்சுடர் அணையாமல் எரியவேண்டும்
என்றும் வேண்டிக்கொள்கிறாள். மூன்று நாட்கள் இடைவிடாத மோதல் நிகழ்கிறது. இயக்கத்துக்குச்
சொந்தமான இரு பெரிய கப்பல்களை மூழ்கடித்துவிடுகிறது இராணுவம். போராளிகளின் படகுகளும் சுக்குநூறாகச் சிதறிவிடுகின்றன. யாரும் எதிர்பாராத முற்றுகை அகழிக்குள் அகப்பட்ட
போராளிகளை பகைவர் கொன்று தீர்க்கின்றனர்.
கிளிநொச்சியை விட்டு உடனே இடம்பெயருமாறு மக்களுக்கு உத்தரவு
வருகிறது. சோதி அதிபத்தனின் அணையா விளக்கை ஏந்திக்கொண்டு வெளியேறுகிறாள். போர் விமானங்கள்
தினமும் நான்குமுறை குடியிருப்புகள் மீது குண்டுமழை பொழிகின்றன. விளக்கில் எண்ணெய்
வற்றிப் போகிறது. நந்திக்கடலிலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கை எஎரியவைக்கலாம் என்று
அவள் நினைக்கிறாள். ஒரு பெண் போராளி ஒரு வெடிகுண்டின் வெற்றுக்கோதில் கடல்நீரை நிரப்பிக்
கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உடனே அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்கிறாள். நீரில்
நின்றெரிகிறது விளக்கு. ஆனால் அவள் ஒரு போர்வீரனால் சாய்க்கப்பட்டுவிடுகிறாள்.
முன்னொரு காலத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு அச்சமூட்டிய
அதியமான் என்னும் வீரனைப்பற்றிய சித்தரிப்பும் இத்தொகுதியில் உண்டு. களத்தில் வெல்லமுடியாத
வீரராக விளங்கியவர். ஆனால் முள்ளிவாய்க்காலில் போர் நிகழ்ந்த சமயத்தில், இயக்கத்தின்
படைரகசியங்களை எதிரிகளிடம் தெரிவித்ததாகக் குற்றம் சுமத்தி, இயக்கமே அவருக்கு மரணதண்டனை வழங்கி, சுட்டுக் கொன்றுவிடுகிறது.
அதியமானுக்கு நேர்ந்த முடிவை அறிந்து, அவரை நன்கறிந்த ஒரு பெண்மணி அந்த மாவீரனை துரோகி
எனச் சொல்ல ஒருவருக்கும் தகுதி இல்லை என்று கோபத்துடன் சத்தமிடுகிறாள். அழுது ஓய்ந்த
பிறகு, ஒரு காலத்தில் அவர் அவளுக்குப் பரிசாக அளித்த தோட்டாவை தன்னுடைய குரல்வளையில்
வைத்து உள்ளங்கையால் அழுத்தி ரத்தம் பீறிட தற்கொலை செய்துகொள்கிறாள்.
இப்படி, போரின் வெவ்வேறு முகங்களும் வெவ்வேறு காட்சிகளும்
நாவல் முழுதும் மாறிமாறி வந்தபடி இருக்கின்றன. போர் மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை.
அமைதியையும் கொண்டுவரவில்லை. விடுதலையையும் கொண்டுவரவில்லை. ஒருவர் மீது இன்னொருவருக்கு,
அச்சத்தையும் ஐயத்தையும் மாறிமாறி விதைத்தபடியே இருக்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்குகிற
வரை லாபம் என்னும் மனநிலை கொண்டவர்களாக, உயிர் பிழைத்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வில் பின்பற்றத்தக்க எந்த மதிப்பீடுகளும் நெறிகளும் இல்லை. அவர்கள் வாழ்வும்
எவ்வகையிலும் மதிக்கத்தக்கதாக இல்லை. அகரமுதல்வன் இந்த நாவலை ஒற்றைமையம் கொண்ட கதையாக
இல்லாமல், ஒரு தருணத்தில் வெவ்வேறு நிலங்களில், வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு மனிதர்களின்
வாழ்க்கையையும் மரணத்தையும் தொகுத்துச்சொல்லும் படைப்பாக எழுதியிருக்கிறார்.
வீடுகளில் உணவு பரிமாறுவதற்கு இருவிதமான இலைகளைப் பயன்படுத்துவதைப்
பார்த்திருப்போம். ஒன்று வாழையிலை. இன்னொன்று தையல் இலை. இருபது முப்பது அரச இலைகளை
ஒன்றோடு இன்னொன்றை இணைத்துத் தைத்து வட்டமான வடிவில் உருவாக்கப்படும் இலை. தையலிலையைப்
போல, இருபத்தைந்து தனித்தனி சித்திரங்களை அழகாக இணைத்துக் கூட்டி ஒரு பெரிய தொகுப்போவியமாக
உருவாக்கியிருக்கிறார் அகரமுதல்வன். உலகெங்கும் பல நாவலாசிரியர்கள் இந்த வடிவத்தை இப்போது
வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறார்கள். நவீன தமிழ் நாவல் வரிசையில் கோபல்ல கிராமம் நாவல்
வழியாக தொடங்கிவைத்தவர் கி.ராஜநாராயணன். அவ்வரிசையில் இந்த வடிவத்தை வெற்றிகரமாகக்
கையாண்டிருப்பவராக எழுத்தாளர் அகரமுதல்வனையும் சேர்த்துக்கொள்ள முடியும்.
இந்த நாவலின் ஊடே ஓரிடத்தில் உரையாடலின் போக்கில் அகரமுதல்வன்
பட்டினத்தாரின் பாடலொன்றைக் குறிப்பிடுகிறார். ‘அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை,
தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ, சலியாதிரு ஏழை நெஞ்சே’ என்பதுதான் அப்பாடல். நாவலின் இருபத்தைந்து
அத்தியாயங்களிலும் வெவ்வேறு விதமான மானுடச்சரிவையும் ஓலத்தையும் துக்கத்தையும் படித்துமுடித்த
நிலையில் மனபாரத்துடன் ஒருவித செயலின்மையில் திகைத்துவிட்டேன். அப்போதுதான் தற்செயலாக
பட்டினத்தார் பாடலை நினைவுகூர்ந்தேன். ‘சலியாதிரு ஏழை நெஞ்சே’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டபோது
ஒருவித ஆறுதல் படர்வதை உணர்ந்தேன்.
(போதமும் காணாத போதம்.
நாவல். அகரமுதல்வன். நூல்வனம் வெளியீடு. எம்22, ஆறாவது அவென்யு, அழகாபுரி நகர், இராமபுரம்,
சென்னை -600089. விலை. ரூ.320)
(புக் டே – இணைய தளம்
– 25.08.2024)