ஆற்றுப்படை இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் அல்லது வழிப்படுத்துதல் என்று பொருள். ஓர் அரசனையோ அல்லது வள்ளலையோ சந்தித்து தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் விதமாக போதுமான செல்வத்தைப் பெற்றுவந்த ஒருவர் திரும்பி வரும் வழியில் சந்திக்க நேரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரிடம் அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை. பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன. கால ஓட்டத்தில் மரபுவழிப்பாடல்கள் குறையக்குறைய, இந்த வகைமையிலான பாடல்களை எழுதுவதும் நின்றுவிட்டது.
என் கல்லூரிக்காலத்தில் பாவலர் ம.இலெ.தங்கப்பா எழுதிய இயற்கையாற்றுப்படை
என்னும் புத்தகத்தைப் படித்த நினைவிருக்கிறது. இயற்கையில் தோய்ந்திருப்பதையே மானுட
வாழ்வில் பேரின்பம் என்று கருதிய அவர், அக்கருத்தை வலியுறுத்தும் வகையில் இயற்கையின்
கூறுகளை பல கோணங்களில் உணர்த்தி மனிதகுலத்தை இயற்கையை நோக்கிச் செலுத்தும் விதமாக அந்த
நூலை அவர் எழுதியிருந்தார். அமெரிக்கச் சிந்தனையாளரான எமர்சன் இயற்கை சார்ந்து எழுதிய
கட்டுரைகளின் சாரத்தை அந்த ஆற்றுப்படைநூலில் உணரமுடியும். ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகால
இடைவெளிக்குப் பிறகு புதுவையைச் சேர்ந்த பேராசிரியரான மு.இளங்கோவன் புதியதொரு வகைமை
சார்ந்த ஆற்றுப்படை நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு இணையம்
உருவான காலத்திலிருந்து நிகழ்ந்த பலவிதமான மாற்றங்களை ஒன்றையடுத்து ஒன்றாக எடுத்துரைத்து,
ஒவ்வொரு காலகட்டத்திலும் அம்மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப தமிழைத் தகவமைத்து
வளர்த்தவர்களின் பங்களிப்பையும் எடுத்துரைத்து, அவ்வழியில் எதிர்காலத்துக்கு ஏற்ற சாதனைகளை
நிகழ்த்த அனைவருக்கும் ஒரு பொது அழைப்பு விடுத்து இணையத்தை நோக்கி ஆற்றுப்படுத்தும் விதமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
முதன்முதலாக வங்கித்துறை தொழில்நுட்பத்தில் இணையம் நுழைந்த
ஆதிக்கதையை சுருக்கமாக எடுத்துரைக்கும் இளங்கோவன், மெல்ல மெல்ல அது ஒவ்வொரு துறையிலும்
நுழைந்து தன்னைத் தவிர்க்கவே முடியாத ஒரு பேராளுமையாக நிறுவிக்கொண்டுவிட்டது. இணையத்தின்
உதவி இல்லாமல் அடுத்தகட்ட வாழ்வோ, வரலாறோ இல்லவே இல்லை என்னும் நிலைக்கு இன்று நாம்
வந்தடைந்துவிட்டோம். நடைமுறை வாழ்வியல் தேவைகளை
எதிர்கொள்ள இணையத்தின் உதவியை ஏற்றுக்கொள்வது என்பது வளர்ச்சியின் ஒரு பக்கமே. பல நூற்றாண்டுகளாக
ஓலைச்சுவடிகள் வழியாகவே காப்பாற்றப்பட்டு வந்த தமிழிலக்கியப்பிரதிகள் ஒரு நூற்றாண்டுக்கு
முன்புதான் கொஞ்சம் கொஞ்சமாக அச்சுவடிவத்துக்கு மாறின. இன்று அவையனைத்தும் எண்மவடிவத்துக்கு
மாறவேண்டிய நெருக்கடி உருவாகிவிட்டது. அடுத்த தலைமுறையின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில்
அவற்றைப் பாதுகாக்க இணையம் அருந்துணையாக வாய்த்திருக்கிறது.
‘வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான்
இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளத்தால் எவராலும் களவாட முடியாது கல்வி
என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும் பொருள்தேடி உழல்வதேனோ’ என்னும் விவேகசிந்தாமணி
கல்விச்செல்வத்தை மாபெரும் செல்வமாக எடுத்துரைக்கிறது. அத்தகு மாபெரும் செல்வத்தைப்
பாதுகாக்கும் நிரந்தரப்பெட்டகமாக இணையம் இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. வங்கிப்பெட்டகம்
போல, இணையவழி உருவாகும் நூலகம் இன்று அனைவரும்
அணுகுவதற்கு எளிதான அறிவுப்பெட்டகமாக விளங்குகிறது.
வங்கித்துறையை அடுத்து அறிவுசார் துறைகள் அனைத்தும் படிப்படியாக
இணையவசதிகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கின. ஏறத்தாழ
முப்பத்தைந்து ஆண்டுகளில் இணையம் இல்லாத கல்வி நிலையங்களோ, பல்கலைக்கழகங்களோ
இல்லவே இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது.
கணிப்பொறி என்பது அடிப்படையில் மேலை நாட்டினரின் கண்டுபிடிப்பு.
கணிப்பொறியின் விசைப்பலகை முழுக்கமுழுக்க ஆங்கிலமயமானது. ஆங்கில எழுத்துக்களுக்காகவே
வடிவமைக்கப்பட்டது. மாற்ற முடியாத சட்டகத்தை தமிழ் மொழியின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்
தகவமைத்ததுதான் முதல் தலைமுறை ஆய்வாளர்களின் சாதனை. விசைப்பலகையை மாற்றாமல் ஆங்கில
எழுத்துகள் வழியாகவே தமிழ் எழுத்துகளை உருவாக்கிய கலை அவர்கள் நிகழ்த்திய பெரும்சாதனை.
ஆய்வாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக, அவர்கள் உருவாக்கிய எழுத்துருக்களும் பெருகின.
அது ஒரு சாதனை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த வளர்ச்சியே ஒரு
கட்டத்தில் இடராக மாறியது. ஒவ்வொரு எழுத்துருவும் ஒவ்வொரு குழுவுக்குள் மட்டுமே பரிமாறிக்கொள்ளக்கூடிய
ஒன்றாக சுருங்கிவிட, பரவலாக்கத்துக்கு அதுவே தடையாக நின்றுவிட்டது. கணிப்பொறியும் அடுத்த
கட்ட வடிவத்தை நோக்கி வளரத் தொடங்கியது. அதன் விளைவாக, அனைத்து வகை கணிப்பொறிவடிவங்களும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு ஒரு பொது வடிவத்தை அமைத்துக்கொள்ள
வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த மாற்றம் கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வைத்தது.
தரப்படுத்தப்பட்ட வடிவத்துக்கு ஒரே நாளில் அனைவரும் மாறுவது
எளிதான செயலல்ல. நீண்ட காலம் கைவிரல்களுக்குப் பழகிய ஒரு வடிவத்தை சட்டென உதறிவிட்டு,
முற்றிலும் புதுவகையான ஒரு வடிவத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியாது. நேரிடையாக
புதுவடிவத்தை உடனடியாக கையாளமுடியாத அத்தகையோருக்கு ஏற்ற வகையில் பழைய வடிவத்திலிருந்து
புதுவடிவத்துக்கு தானாகவே உருமாற்றிக் கொடுப்பதற்கு ஒரு தற்காலிக நிவாரணமென ஓர் உருமாற்றியை
தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இந்த உருமாற்றியை ஒருபக்கம்
பயன்படுத்தியபடியே புதுவடிவத்தைக் கையாளும் திறமையையும் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டனர்.
ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே உருமாற்றியின் தேவையே இல்லாத வகையில், முதல் தலைமுறையினரும்
இரண்டாம் தலைமுறையினரும் இணைந்து தரப்படுத்தப்பட்ட புதுவடிவத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டனர்.
அதற்குத் தோதான வகையில் கணிப்பொறியின் அல்லது மடிக்கணினியின் வடிவமைப்பிலும் மாற்றங்கள்
ஏற்பட்டன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கணினியில் தமிழின் பயன்பாடு தொடரும்
வகையில் தன்னலமற்ற ஆர்வலர்கள் உலகெங்கும் பல மூலைகளிலிருந்து உருவானபடி இருந்தனர்.
அவர்களுடைய உழைப்பு அளப்பரியது. மதிப்புக்குரியது. அது முதல்கட்ட சாதனை. காகிதப்பக்கத்தை
எண்மப்பக்கமாக உருமாற்ற முடியும் என்ற கண்டுபிடிப்பையும் இணையவசதிகளைப் பயன்படுத்தி
அவற்றை கண்ணால் பார்க்கமுடியாத எண்ம அறைகளில் சேமித்துவைப்பதில் வெற்றி கண்டது இரண்டாம்
கட்ட சாதனை. இதன் விளைவாக, மேலைநாட்டினர் ஏற்கனவே தொடங்கி உருவாக்கிப் பாதுகாத்து வரும்
சேமிப்புப்பெட்டகங்களின் வரிசையில் இப்போது தமிழும் இணைந்துகொண்டது. கடந்த பத்தாண்டுகளில்
தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் இணைய சேமிப்புப்பெட்டகத்தில் கணக்கிலடங்காத
புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. இது ஒரு தொடக்கம்
மட்டுமே. இன்னும் நாம் செல்லவேண்டிய தொலைவு அதிகம்.
இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு தொடங்கிய காலகட்டத்திலிருந்து,
இன்று இணையப்பெட்டகத்தில் எண்மவடிவ தமிழ்நூல்களைக் கொண்டு சேர்த்துள்ள காலம் வரையிலுமான
வரலாற்றுச் செய்திகளை ஆய்வாளர் மு.இளங்கோவன் ஆற்றுப்படை நூலின் வடிவத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
ஒரு கதையைப் படிக்கும் சுவாரசியத்தோடு அதைப்
படித்துவிடலாம். ஒரு சுருக்கக் கையேடாக விளங்குகிற இந்த ஆவணம், இந்த வரலாற்றை இன்னும்
விரிவாகத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது. நூலின்
பிற்பகுதியில் தமிழ் இணையத்துறைக்குப் பங்காற்றியிருப்பவர்களைப்பற்றிய குறிப்புகளும்
தமிழ்வளம் தாங்கிய இணையதளங்களைப் பற்றிய குறிப்புகளும் அடங்கியுள்ளன. முனைவர் மு.இளங்கோவனின்
முயற்சி பாராட்டுக்குரியது.
(இணைய ஆற்றுப்படை . முனைவர்
மு.இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம்
வழி, அரியலூர் மாவட்டம் – 612901. விலை ரூ.100)
(புக் டே – இணைய தளம். 15.08.2024)