Home

Saturday 13 February 2021

கக்கன் : விலைமதிக்க முடியாத இரத்தினம் - கட்டுரை

 

தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்துக்காகவும் அரிஜன நல நிதி திரட்டுவதற்காகவும் 1934 ஆம் ஆண்டு தொடங்கியதும் காந்தியடிகள் தென்னிந்தியப்பயணத்தை மேற்கொண்டார். முதலில் கேரளப்பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 25.01.1934 அன்று  இரவு மதுரைக்கு வந்து சேர்ந்தார். காந்தியத் தொண்டரான என்.எம்.ஆர்.சுப்பராமனுடைய வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் 26.01.1934 அன்று அவர் மதுரை நகராட்சி ஊழியர்களிடையில் உரையாற்றினார். அப்போது நகராட்சியின் சார்பில் காந்தியடிகளுக்கு ஒரு வரவேற்பு மடல் படித்தளிக்கப்பட்டது.  மதுரையின் நகரப்பகுதிகளைப் பராமரிப்பதைப்போலவே தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடியிருப்புபகுதிகளையும் நகராட்சி ஊழியர்கள் அக்கறையோடு பராமரிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காந்தியடிகள் உரையாற்றத் தொடங்கியதும் அவர்கள் குறிப்பிட்ட அந்த அக்கறை என்னும் சொல்லிலிருந்தே தொடங்கினார். அக்கறை என்பது வாய்ச்சொல்லாக மட்டும் எஞ்சியிருப்பதில் ஒரு பயனும் இல்லை என்றும் அது உள்ளார்ந்த அன்பின் வழியாகவும் மதிப்பின் வழியாகவும் பிறந்து வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பாகத்தான் அவர் வைத்தியநாத ஐயரின் துணையோடு அருகிலிருந்த  தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் மூன்று குடியிருப்புகளுக்குச் சென்று நேரிடையாகப் பார்வையிட்டு வந்திருந்தார். அங்கிருந்த சுகாதாரமின்மை அவருக்கு வருத்தமூட்டியது. அப்பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் போதிய அக்கறையுடன் பணியாற்றவில்லை என்பதை அவரால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு குடியிருப்பைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் கழிவுநீர் தேங்கியிருந்தது. மற்றொரு குடியிருப்பு சாலையைவிட தாழ்வான பகுதிகளில் இருந்தது. அதனாலேயே அங்கும் அளவுக்கு அதிகமாக நீர் குளமாகத் தேங்கியிருந்தது. மழைக்காலத்தில் மனிதர்கள் வாழ்வதற்கே அந்த இடம் தகுதியற்றதாக இருக்கும் என்பதை அந்த நிலையைப் பார்த்ததுமே அவருக்குப் புரிந்துவிட்டது. எல்லாக் குடியிருப்புகளிலும் ஏராளமான குடிசைகளும் கூரைவீடுகளும் காணப்பட்டாலும், எந்த இடத்திலும் தெரு ஒழுங்கு என்பதே இல்லை.

மதுரையின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகள் சேரிப்பகுதிகளைச் சென்றடைய தடையாக இருப்பது ஊழியர்களின் மனநிலையே என்பதை நேரிடையாகவே அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.  எண்ணங்களில் படிந்திருக்கும் தீண்டாமை உணர்வின்  விளைவாகவே அந்த மனநிலை உருவாகிவருகிறது என்றும் அந்த மனநிலையைத் துறந்தால் மட்டுமே உண்மையான சேவையை வழங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். நகராட்சி ஊழியர்கள் அந்த மனத்தடையைக் கடந்து நகரம், சேரி என்னும் வேறுபாடுகளை மறந்து எல்லா இடங்களிலும் ஒரே விதமான ஈடுபாட்டோடும் அக்கறையோடும் பணியாற்றவேண்டுமென்றும்  சமமான வாழ்க்கைத்தரத்துக்கு சேரிப்பகுதிகள் உயர்ந்துவரும்போதுதான் சமவாய்ப்புகளைப்பற்றி நாம் பேசமுடியுமென்றும் தெரிவித்தார். மதுரையிலேயே வேறொரு இடத்தில் மின்சாரம், குடிநீர் வசதிகளோடு புதிதாக உருவாகிவரும் தொழிலாளர்கள் குடியிருப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிமுடிக்க வேண்டுமென்றும் பழைய குடியிருப்புகளில் வசிப்பவர்களை அவ்வீடுகளில் குடியேற்றும் முயற்சியை உடனுக்குடன் மேற்கொள்ளவேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்டோர் வாழ்வின் முன்னேற்றம் தொடர்பான அக்கறையை வெளிப்படுத்தும் காந்தியடிகளின் உரையால் ஈர்க்கப்பட்டவர்களிடையில் இருபத்தாறு வயது இளைஞரொருவரும் இருந்தார்.  தாழ்த்தப்பட்டோர் கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தோடு உழைத்துவந்தவர் அவர். வைத்தியநாத ஐயர் தன்  வளர்ப்புமகனைப்போலக் கருதி அவரை ஆதரித்துவந்தார். குடியிருப்புகளை ஆய்வு செய்ய காந்தியடிகளுக்குத் துணையாகச் சென்ற வைத்தியநாத ஐயரோடு அவரும் சென்றிருந்தார்.  மதுரையிலேயே மகளிர் சபையிலும் இந்தி பிரச்சார சபையிலும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றிவிட்டு காரைக்குடிக்குச் செல்வது வரைக்கும் காந்தியடிகளுக்குத் துணையாக இருந்தார் அவர். காந்தியடிகளின் பேச்சையும் செயல்பாடுகளையும் மிக அருகிலிருந்து கூர்ந்து கவனிக்க அவருக்கு அது ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த இளைஞரின் பெயர் கக்கன். மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். காந்தியடிகளின் எளிமையையும் மக்களுடன் நெருங்கிப்பழகும் விதத்தையும் கண்டு மனம்நெகிழ்ந்தார் அவர்.  தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தின் மீது காந்தியடிகளுக்கு இருந்த  அக்கறையும் உறுதியும் அவர்மீது நம்பிக்கை கொள்ளவைத்தது.  அன்றுமுதல் பொதுவாழ்வில் காந்தியடிகளையே கக்கன் தன் வழிகாட்டியாக நினைக்கத் தொடங்கினார்.

கக்கன் இளம்பருவத்தில் கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். கோவில் பூசாரியாக இருந்த அவருடைய அப்பாவுக்கும் அவருடைய கல்வி மீது ஆர்வமிருந்தது. கிராமத்து ஆரம்பப்பள்ளியில்  ஐந்தாவது வகுப்புவரைக்கும் படித்துவிட்டு மானாமதுரையைச் சேர்ந்த ஒரு கிறித்துவப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து கல்விக்கட்டணம் செலுத்த முடியாததால் ஊருக்கே திரும்பிவந்துவிட்டார். பிறகு மேலூர் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். தொடர்ந்து பசுமலை பி.கே.எம்.நாடார் பள்ளியில் படிக்கச் சென்றார். விடுதிக்கட்டணம் செலுத்த முடியாத சூழலில் பள்ளி வளாகத்திலேயே படுத்துறங்கி கல்வியைத் தொடர்ந்தார். உடன்படித்த மற்ற மாணவர்களின் கேலிச்சொற்களைப் பொருட்படுத்தாமல் கல்வியில் மனம் குவித்திருந்தார். ஆயினும் பள்ளி இறுதித்தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்றார்.

கக்கனின் கல்வியார்வத்தை அறிந்து அவரைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அவர் படிப்பதற்கு வழிசெய்துகொடுத்தார் வைத்தியநாத ஐயர். ஆயினும் அந்த ஆண்டிலும் அவரால் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. அப்போது வைத்தியநாத ஐயர் மேலூரில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக சேவாலயம் என்னும் பெயரில் ஒரு விடுதியைத் தொடங்கி நடத்திவந்தார். அந்த விடுதியின் காப்பாளராகப் பணிபுரியும் பொறுப்பை கக்கனிடம் ஒப்படைத்தார் ஐயர். கக்கனின் எளிமையும் உண்மையும் பண்பான பேச்சும் பழகும் விதமும் ஐயரை பெரிதும் கவர்ந்தன. பகலில் விடுதி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் சேவா சங்க வளர்ச்சிப் பணிகளைப் பற்றி அவருடன் தொடர்ந்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.

சமூகத்தொண்டு சார்ந்த புரிதலை வளர்த்துக்கொள்ள இந்த இளமைக்கால உரையாடல் கக்கனுக்கு பெரிதும் உதவியது. விடுதிப்பணிகளுக்கு அப்பால் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இரவுப்பள்ளிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்தார். கல்வியில் ஆர்வமுள்ளோர் வசிக்கும் கிராமங்களில் உடனடியாக இரவுப்பள்ளிகளைத் தொடங்க ஏற்பாடுகளைச் செய்தார். தகுதியான ஆசிரியர்களைத் தேடியலைந்து  கண்டுபிடித்து அப்பள்ளிகளில் பாடம் நடத்தும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார். பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை சேவா சங்கம் வழியாகப் பெற்றுக் கொடுத்து அடிக்கடி சென்று மேற்பார்வை செய்துவந்தார். மேலூரிலிருந்து சிவகங்கை வரைக்கும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் இரவுப்பள்ளிகள் உருவாக, கக்கனே மூலவிசையாகச் செயல்பட்டார். சில இடங்களில் இவருடைய தொண்டுணர்வுக்கு வரவேற்பும் சிற்சில இடங்களில் எதிர்ப்பும் இருந்தன. எல்லாவற்றையும் மனத்துணிவோடு எதிர்கொண்டு செயலாற்றினார் அவர். அவருடைய ஒழுக்கமும் நேர்மையும் அவரை நோக்கி அனைவரையும் ஈர்த்தன.

காந்தியடிகளைச் சந்தித்த பிறகு தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக உழைப்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாக நினைத்துச் செயல்படத் தொடங்கினார் கக்கன். தான் பிறந்த ஊரிலிருந்தே அவர் தன் சேவையைத் தொடங்கினார். தும்பைப்பட்டி கிராமத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டோர் அனைவரும் ஒரு குளத்திலிருந்தும் பிற சாதியினர் அனைவரும் வேறொரு ஊருணியிலிருந்தும் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இருந்த காலம் அது. தாழ்த்தப்பட்டோர் பொது ஊருணியிலிருந்து தண்ணீர் எடுக்க தடையிருந்தது. தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் குளம் பொதுவாக மக்கள் வெளியே சென்றுவந்து கைகால் கழுவுவதற்கும் மாடுகள் குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வந்த இடம். அந்தக் குளத்தின் தண்ணீரைத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீராகப் பயன்படுத்தவேண்டியிருந்தது.

பொது ஊருணியின் தண்ணீரை அனைவரும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் ஊர்க்கட்டுப்பாட்டை விலக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஊர்ப்பெரியவர்களோடு பேசினார் கக்கன். தொடக்கத்தில் அதற்கு எதிர்ப்பிருந்தாலும் அவருடைய பேச்சைக் கேட்டு சிலர் மனம் மாறினர். ஊர்த்தலைவர்களாக இருந்த ஒருங்கான் அம்பலம் என்பவரும் கருப்பன் செட்டியார் என்பவரும் கக்கனுக்குத் துணையாக இருந்தனர். ஒருநாள் கக்கன், ஒருங்கான் அம்பலம், கருப்பன் செட்டியார் மூவரும் முன்னணியில் நின்று வழிநடத்த தாழ்த்தப்பட்டோர் அனைவரும் அவர்கள் பின்னால் அணிவகுத்து ஊர்வலமாகச் சென்று குளத்தை அடைந்து குடங்களில் நீர் நிறைத்துக்கொண்டனர். திரும்பிவரும் வழியில் அவர்களை ஆயுதங்களோடு வந்த பிற சாதிகளைச் சேர்ந்த மக்கள் குறுக்கிட்டு வழிமறித்தனர்.

அதைக் கண்டு அனைவரும் திகைத்து நின்ற சூழலில், ஒருங்கான் அம்பலம் துணிவுடன் முன்னால் சென்றுதாழ்த்தப்பட்ட மக்களும் நம்மைப்போன்றவர்களே. பூமியிலிருந்து இயற்கையாக ஊறிவரும் நீரை ஒரு பிரிவினர் மட்டும் பயன்படுத்த, மற்றொரு பிரிவினர் பயன்படுத்த தடைவிதிப்ப்பது மிகப்பெரிய துரோகம்என்று எடுத்துரைத்தார்.  ஆனால் சீற்றத்தோடு திரண்டுநின்ற கூட்டம் அவர் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்தது. அதனால் ஒருங்கான் மீண்டும் அவர்களைப் பார்த்துநம் உடன்பிறந்தவர்களாகக் கருதவேண்டிய இவர்களை வெட்டிக் குவித்தால்தான் உங்கள் சீற்றமும் வேகமும் அடங்குமென்றால் முதலில் அவர்களையெல்லாம் இங்கு அழைத்துவந்த என்னை வெட்டிவிட்டு அவர்களை நோக்கிச் செல்லுங்கள்என்று சொல்லிக்கொண்டே சென்று அவர்கள் முன் அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து அதே சொற்களைச் சொன்னபடி கருப்பன் செட்டியாரும் சென்று அமர்ந்தார்.

அவர்களோடு நின்றிருந்த கக்கன் கூடியிருந்தவர்களை நோக்கிஎங்கள் சமுதாயத்தினரின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் வந்து நின்றிருக்கும் இவ்விருவரும் வெட்டுண்டு சாவதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு முன்னால் நான் மரணமடையவேண்டும். என்னை முதலில் வெட்டிவிட்டு அவர்களுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்என்றபடி அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்தப் பேச்சு வந்தவர்களை நிதானம் கொள்ளவைத்தது. வன்முறையை கைவிட்டு நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றுவழியைக் குறித்து ஆலோசித்தனர். ஊருணியின் ஒருபக்கக் கரையிலிருந்து மற்ற சாதியினரும் மறுபக்கக் கரையிலிருந்து தாழ்த்தப்பட்டோரும் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. பிறகு கால ஓட்டத்துக்குப் பிறகு அந்த வேறுபாடு அழிந்து ஊருணி அனைவருடைய பயன்பாட்டுக்கும் உரியதானது.

12.11.1935 அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட எல்லா இந்து ஆலயங்களும் தாழ்த்தப்பட்டோருக்கு திறந்துவிடப்படுவதாக அறிவித்தது. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் சார்ந்து உழைத்துவந்த வைத்தியநாத ஐயர் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் - இதுபோன்றதொரு ஆலயப்பிரவேசம் உடனடியாக நிகழவேண்டுமென விரும்பினார். இதே காலகட்டத்தில்தான் திருச்சி, தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, சிதம்பரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருச்செந்தூர், பழனி, காஞ்சிரம்பட்டி என பல இடங்களில் அரிஜன மாநாடுகள் நடைபெற்றன. அவை அனைத்திலும் ஆலயப்பிரவேசத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாடுகள் வழியாகவும் பொதுக்கூட்டங்கள் வழியாகவும் பொதுமக்களிடையே ஆலயப்பிரவேசத்துக்கு ஆதரவான மனநிலை உருவாக்கப்பட்டது. ஜி.ராமச்சந்திரன், இராஜாஜி, தக்கர்பாபா, தேவதாஸ் காந்தி, டாக்டர். இராஜேந்திர பிரசாத் போன்றோர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆலயப்பிரவேசக் கூட்டங்கள் நடத்தினர். அவர்களுடைய உரைகள் வழியாக பொதுமக்களிடையில் மாநாட்டுக்கு ஆதரவான மனநிலை உருவானது. அவர்கள் அனைவரையும் அழைத்து மதுரையில் உரையாற்றவைத்தார் வைத்தியநாத ஐயர். மதுரையில் ஆலயப்பிரவேசத்துக்கு சாதகமான மனநிலை ஆழமாக வேரூன்றி வளர்வதற்கு வைத்தியநாத ஐயரே மூலகாரணமாக இருந்தார். அவரோடு பணியாற்றிய கக்கனும் அவர் செயல்களுக்குத் துணையாக இருந்தார். 1939 ஆம் ஆண்டில் மதுரையிலேயே ஆலயப்பிரவேச மாநாடு நடைபெற்றது. மதுரை மக்கள் மீனாட்சியம்மன் கோவிலை தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்துவிட்டு இந்து மதத்திலுள்ள களங்கத்தைப் போக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் இராஜாஜி.

08.07.1939 அன்று காலை வைத்தியநாத ஐயருடன் கக்கன், முத்து, கோபாலசாமி, பூவலிங்கம், சின்னையா, ஆவலம்பட்டி முருகானந்தம், சண்முக நாடார் ஆகியோர் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றனர்.   பொற்றாமரைக்குளத்தில் கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு கருவறைக்குச் சென்று மீனாட்சியம்மனை கண்குளிர வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கோவிலில் மற்ற இடங்களுக்கும் சென்று வழிபட்ட பிறகு தெற்கு கோபுரவாசல் வழியாக வெளியே வந்தனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நிகழ்ச்சி மிக அமைதியான முறையில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மேலூர் வட்டச் செயலாளராக 12.07.1940 அன்று பொறுப்பேற்றுக்கொண்ட கக்கன் அக்கம்பக்கத்தில் இருந்த கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து அங்கு வாழ்ந்துவந்த மக்களிடையில் காங்கிரஸைப்பற்றி எடுத்துரைத்து காங்கிரஸ்க்கு ஆதரவான மனநிலையை உருவாக்கப் பாடுபட்டார். பொதுமக்களிடயில் காங்கிரஸின் செயல்பாடுகளைப் பிரச்சாரம் செய்வதையும் அவர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விதமாக மூவண்ணக்கொடியை ஏற்றுவதையும் இடையறாது செய்துவந்தார். பொது இடத்தில் கொடியேற்றுவது தடைசெய்யப்பட்டிருந்த காலம் அது. அதனால் காவல்துறை 14.09.1940 அன்று வாஞ்சி நகரம் என்னும் ஊரில் கக்கன் கொடியேற்றிவிட்டு வந்தே மாதரம் என முழங்கிய தருணத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து விடுதலையானதும் அவர் முன்பைவிட  அதிக வேகத்தோடும் ஈடுபாட்டோடும் ஆங்கிலேயர் ஆட்சிக்கொடுமையைப் பற்றியும் சுதந்திரத்தின் தேவையைப்பற்றியும் உரையாற்றத் தொடங்கினார்.

இந்தியாவுக்கு சுய ஆட்சி அளித்து பிரிட்டிஷ் அரசின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்ளும் என்ற அரசின் முடிவை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து நாடு தழுவிய அளவில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கியது. இந்திய மக்களின் ஒப்புதலைப் பெறாமல் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தது. அரசு கடுமையான சட்டங்கள் வழியாக காங்கிரஸின் எதிர்ப்பை அடக்க முனைந்தது. இதனால் நாட்டில் இயக்கம் சற்றே மந்தநிலையை அடைந்தது. இதைக் கண்டு காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்துக்கு அனுமதி வழங்கினார். இந்தத் திட்டப்படி, ஒவ்வொருவரும் கைதாகும் வரை சளைக்காது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே சத்தியாகிரகம் செய்யவேண்டும். ஒருவேளை விடுதலை பெற்றாலும் மீண்டும் எதிர்ப்பைத் தெரிவித்து சுயவிருப்பத்துடன் சிறைபுகவேண்டும். இந்தச் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள காந்தியடிகள் அனைவரையும் அனுமதிக்கவில்லை. விண்ணப்பங்களின் அடிப்படையில் காந்தியடிகளே நேரிடையாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவ்விதமாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரையில் தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்துக்கொண்டவர் கக்கன். தடையை மீறி சத்தியாகிரகம் செய்ததற்காக அவரைக் கைதுசெய்து தேசதுரோகக் குற்றம் செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் நிறுத்தியது. 1941இல் விடுதலை பெற்றதும் மதுரை மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

08.08.1942 அன்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்று முழங்கினார். இதுவே வெள்ளையனே வெளியேறு இயக்கமாக நாடெங்கும் பரவியது. காந்தியடிகள், நேரு, ராஜேந்திர பிரசாத் என பல தலைவர்கள் நாடெங்கும் கைது செய்யப்பட்டனர். 10.08.1942 அன்று மதுரையில் காவல்துறை கக்கனை கைது செய்தது. உடனடியாக மேலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை என்கிற பெயரில் அவரைக் கொடுமைப்படுத்தினர். ஐந்து நாட்கள் அவரை சிறையிலேயே வைத்திருந்து சவுக்கால் அடித்துத் துன்புறுத்தினர். அவருடைய காங்கிரஸ் ஆதரவு மனநிலையை மாற்றவேண்டும் என்னும் நோக்கத்தில் காவல்துறை, கக்கனின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவியை காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கக்கனுக்கு கசையடி கொடுத்து வீழ்த்தினர். ஐந்து நாட்களுக்குத் தொடர்ச்சியாக இந்தக் கொடுமை நடந்தது. ஆயினும் கக்கனின் மனநிலையை மாற்ற முடியவில்லை. சீற்றம் கொண்ட காவல்துறை பல பொய்க்குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியது. தேசதுரோக வழக்கில் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது. பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அலிப்புரம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கக்கன் சிறையில் பதினெட்டு மாதங்கள் கழித்தார்.

நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் காந்தியடிகளின் மரணம் அவரை துயரத்தில் ஆழ்த்தியது. அவரும் வைத்தியநாத ஐயரும் தொடங்கிய விடுதிகளுக்கும் இரவுப்பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடையில் உரையாற்றுவதன் வழியாகவும் பொதுமக்களின் தேவையை அறிந்து சேவைகளை ஆற்றுவதன் வழியாகவும் அந்தத் துக்கத்தைக் கடந்துவந்தார் அவர்.

1952இல் நடைபெற்ற முதல் பாராளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் கக்கன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1955இல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு வெற்றிகரமான முறையில் சென்னையில் நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கக்கன் அதைச் சிறப்பாக நிறைவேற்றினார்.  1957இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். முதலமைச்சர் காமராஜரின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறைக்கும் அரிசன நலத்துறைக்கும்  அமைச்சராகப் பணியாற்றினார்.  கக்கன் அமைச்சரானதும் செய்த முதற்பணி கல்விப்பணியே. தமிழகமெங்கும் பயணம் செய்து பள்ளிகள் இல்லாத கிராமங்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சமாக ஓராசிரியர் பள்ளியைத் தொடங்க ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் இருக்கும் ஊர்களில் அரசு விடுதிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தார். அங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமன்றி பிற வகுப்பைச் சேர்ந்த ஏழைகளின் பிள்ளைகளும் சேர்ந்து படிக்கும் வகையில் விதிகளை உருவாக்கினார். சீரான இடைவெளியில் ஒவ்வொரு பள்ளியும் விடுதியும் எப்படி இயங்குகின்றன என்பதை நேரிடையாகக் கண்காணிக்கும் வகையில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டார்.  இதன் வழியாக விடுதிப்பொறுப்பாளர்களிடையில் விழிப்புணர்வை உருவாக்கி தமிழகத்தில் எல்லா விடுதிகளும் நல்லமுறையில் செயல்பட துணைநின்றார். அவருடைய இடைவிடாத தூண்டுதலாலும் கண்காணிப்பினாலும் ஆறாண்டுகளுக்குள் 1052 பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டு இயங்கத் தொடங்கின.

எதிர்பாராத விதமாக 1955இல் உடல்நலம் குன்றி வைத்தியநாத ஐயர்  மறைந்தார். தம் வாழ்வில் குருவாகவும் தந்தையாகவும் தலைவராகவும் விளங்கிய அவருடைய மறைவு அவரை துயரத்தில் ஆழ்த்தியது. சிறுவனாக இருந்த காலம் முதல் தன்னை மகனாகவே கருதி வளர்த்தவர்  என்பதால் அந்தப் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய சொந்தப் பிள்ளைகளைப்போலவே அவரும் தலையை மழித்துக்கொண்டு மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து சடங்குகளைச் செய்தார். அதைக் கண்டு ஐயரின் உறவினர்கள் வெகுண்டெழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஐயரின் பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில் தம்மைப்போலவே கக்கனும் வைத்தியநாத ஐயருக்கு ஒரு பிள்ளை என்றும் தம்முடன் இணைந்து அவர் சடங்கு செய்வதில் பிழையே இல்லையென்றும் தெளிவாகச் சொல்லி அடக்கினர். ஒரு தந்தைக்கு மகன் ஆற்றவேண்டிய எல்லாச் சடங்குகளையும் அன்று செய்தார் கக்கன். ஐயர் மீது அவருக்கு இருந்த மதிப்பையும் பாசத்தையும் அன்று அனைவரும் புரிந்துகொண்டனர்.

மாணவ மாணவிகளுக்காக பள்ளிகளும் விடுதிகளும் தொடங்கப்பட்ட காலகட்டத்திலேயே தாழ்த்தப்பட்டோருக்கென தனி வீட்டு வசதி வாரியத்தைத் தொடங்கினார் கக்கன். அதன் வழியாக புதிய வீடுகள் கட்டப்பட்டு குடிசைவாழ் மக்களுக்கும் போதிய வசதியில்லாத ஏழை எளியவர்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

1962இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற கக்கனுக்கு அமைச்சராகப் பணிபுரியும் வாய்ப்பை மற்றொருமுறை காமராஜர் வழங்கினார். இம்முறை கக்கனுக்கு அரிசன நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, கால்நடைக்காப்பு, சிறுபான்மையினர் நலம் ஆகிய துறைகள் அளிக்கப்பட்டன.

மதுரை வேளாண்மைக்கல்லூரி கக்கன் உருவாக்கிய வளர்ச்சித்திட்டங்களில் முக்கியமானது. ஆனால் அதைத் தொடங்கும் முன்பாக அவர் பல கசப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. கல்லூரியைத் தொடங்குவதற்கு அன்று முன்னூறு ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. தனியாரிடத்தில் இருக்கும் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை வெளியிட்ட முதல்வர் அப்பொறுப்பை கக்கனிடம் ஒப்படைத்தார். குறிப்பிட்ட இடத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன. கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு பலவிதமான இடையூறுகள் உருவாகின. நிலத்துக்குச் சொந்தக்காரர் ஒவ்வொருவரையும் கக்கன் தனிப்பட்ட விதத்தில் சந்தித்து, கல்லூரியால் விளையும் நன்மைகளைப்பற்றிப் பேசிப்பேசி ஒப்புக்கொள்ள வைத்தார். கக்கனின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு எல்லா நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு கல்லூரிக்கான கட்டடவேலை தொடங்கியது.

பத்தாண்டு காலம் தொடர்ந்து அமைச்சராக கக்கன் பணிபுரிந்தபோதும் தன் குடும்பத்தினர் யாரும் அதிகாரத்தில் தலையிடுவதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. ஒருமுறை அவர் தம்பிக்கு காவல்துறையில் வேலை கிடைக்க ஒரு அதிகாரி உதவி செய்யவிருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் அந்த அதிகாரியை அழைத்து அந்த முயற்சியை உடனடியாகக் கைவிடும்படி செய்தார். இன்னொருமுறை தன் சகோதரருக்கு அரசு குடியிருப்பில் ஒரு வீட்டை ஒதுக்கித் தர ஒரு அதிகாரி செய்யும் முயற்சியை அறிந்து, அக்கணமே அவரை அழைத்து அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி செய்தார். மற்றொருமுறை அரசுப் பணியாளரை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தினார் என்ற காரணத்துக்காக, எல்லோருக்கும் முன்னிலையில் தன் மனைவியைக் கடிந்துகொண்டார்.

ஒருமுறை மலேசியாவிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் அவர் சாதாரணமான பேனாவைப் பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு தன்னிடம் இருந்த தங்கப்பேனாவை பரிசாக ஏற்றுக்கொள்ளும்படி சொன்னார். கக்கனோ அமைதியான குரலில் அந்த அன்பளிப்பை அப்படி எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அரசு குறிப்பேட்டில் பதிவு செய்து அரசுக்குச் சொந்தமான சொத்தாக மாற்றிய பிறகே பயன்படுத்தமுடியும் என்றும் பயன்படுத்திய பிறகு அரசுக்கே திருப்பிக்கொடுத்துவிடவேண்டும் என்றும் தெரிவித்தார். வந்திருந்த நண்பர் தனிப்பட்ட வகையில் அவருக்கு அந்தப் பேனாவை அன்பளிப்பாக கொடுப்பதை மட்டுமே தான் விரும்புவதாகத் தெரிவித்தார். ஓர் அமைச்சர் என்கிற நிலையில் தனிப்பட்ட வகையில்  எந்த அன்பளிப்பையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கக்கனும் தீர்மானமாகத் தெரிவித்தார். வேறு வழியின்றி அந்தப் பேனாவைத் திரும்ப வாங்கிக்கொண்டார் மலேசிய நண்பர்.

அமைச்சராக இருந்தாலும் கக்கன் எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். உடுத்தியிருக்கும் வேட்டி சட்டையைத் தவிர ஒரே ஒரு மாற்றுடையை மட்டுமே அவர் இறுதிவரை தனக்கென சொந்தமாக வைத்திருந்தார். எளிமை அவருடைய இயல்பாகவே இருந்தது. பொருள்மீதான நாட்டமே அவருக்கு என்றும் இருந்ததில்லை. பற்றற்ற துறவியாகவே அவர் இறுதிவரைக்கும் வாழ்ந்துவந்தார். 1967இல் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்த பிறகு அவர் வாடகைவீட்டுக்குக் குடியேறினார். அவருக்கு மணிவிழா கொண்டாடிய நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சம் தொகையைத் திரட்டி இருபத்தோராயிரம் ரூபாய் கொண்ட பணமுடிப்பை அளித்தனர். அவருடைய நீண்டநாள் கடனை அடைப்பதற்கு அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொண்டார்.

இறுதிக்காலத்தில் அவர் முடக்குவாதத்தால் அவதியுற்றார். கேரளத்தில் அதைக் குணப்படுத்தும் மருத்துவமனை இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்று தங்கி மருத்துவம் பார்த்துக்கொண்டார். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஊருக்குத் திரும்பிவர நேர்ந்தது. அதற்குப் பின் அவர் நீண்டகாலம் உயிருடன் இல்லை.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கெளரவிக்கும் விதமாக அரசு கக்கனுக்கு சிறிது நிலத்தை மதுரைக்கு அருகில் தனியாமங்கலம் என்னும் கிராமத்தில் ஒதுக்கியளித்தது. அதை ஏற்றுக்கொண்ட கக்கன், பூமிதான இயக்கத்துக்காக வினோபா மதுரைக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து, அந்த நிலத்தை கொடையாக அளித்துவிட்டார். இறுதிவரைக்கும் ஒரு துண்டு நிலம் கூட வாங்காதவராகவே வாழ்ந்து மறைந்தார்

(சர்வோதயம் மலர்கிறது -பிப்ரவரி 2021 இதழில் வெளிவந்த கட்டுரை )