Home

Friday 10 April 2015

நூறாவது படம்

செய்வதற்கு எந்த வேலையும் இல்லாதபோது நானும் சீனி என்கிற சீனிவாசனும் பொதுவாக சினிமாவுக்குப் போவதுதான் வழக்கம். டிக்கட் வாங்க பணம் இல்லாத சமயங்களில் மட்டும் எங்கள் ஊர் நாற்சந்தியில்  சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். அதுவும் அலுத்துவிட்டால் வெற்றிலைத்தோட்டம் வழியாகச் சென்று ஐயனார் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றையடிப்பாதையில் சிறிது தூரம் நடந்து பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் அரசமரத்தடிக்குப் போய் உட்கார்ந்துவிடுவோம். கைப்பேசியில் பாட்டு ஒலிக்க, அந்த இசையின் தாலாட்டில் லயித்தபடி மல்லாந்து படுத்து வளைந்துவளைந்து போகும் மரக்கிளைகளின் பின்னலையும் வெண்ணீல வானத்தையும் கொசுக்கடியைச் சகித்துக்கொண்டு பார்த்திருப்போம்.
ஒருநாள் பாட்டு கேட்டபடி புரண்டு படுத்தபோது, அரசமரத்தை ஒட்டியிருந்த குளத்தில் இறங்கி, அதில் உதிர்ந்துகிடக்கும் அரச இலைகளை எடுத்து ஒரு பையில் சேகரித்துக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன்குளத்தைநோக்கி குனிந்திருந்ததால் அவன் முகம் தெரியவில்லை. முதுகைமட்டுமே பார்க்க முடிந்தது. எங்கள் வயதுதான் அவனுக்கும் இருக்கும் என்று தோன்றியது. மரக்கிளைகளின் இடுக்குவழியாக நுழைந்த சூரியக்கதிர்கள் படிந்து அவன் முதுகில் வட்டவட்டமாக விழுந்து மாறும் ஒளியும் நிழலும் இணைந்து ஓர் ஓவியத்தின் தோற்றத்தை நினைவூட்டியது. அவசரமாக சீனியை அசைத்து, அந்த இளைஞனைப் பார்க்கும்படி சைகை செய்தேன். சில கணங்கள் அவனைப் பார்த்தபிறகு சிரித்துக்கொண்டேயாருடா அவன், என்னமோ தங்கத்த எடுக்கறமாதிரி எடுக்கறான்?” என்று கேட்டான் சீனு.
தெரியலைடா” என்று பதில் சொன்னாலும் அவனைத்தான் நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்பிள்ளையாருக்கு பூசை செய்ய வருபவர்களும் மாடுகளை குளிப்பாட்டவோதண்ணீர் குடிப்பாட்டவோ வருபவர்களும்தான் பொதுவாக அந்தக் குளத்தின் பக்கம் ஒதுங்குவார்கள்.. சந்தைக்கு வந்து போகிறவர்கள் களைப்புநீங்க மரத்தடியில் சிறிதுநேரம் படுத்திருந்துவிட்டுகுளத்தில் இறங்கி முகம் கழுவிக்கொண்டு செல்வதும் நடக்கும்ஊர்ப்பெண்கள் நெல் அவிப்பதற்காக கரையோரமாக உதிர்ந்துகிடக்கும் சருகுகளைச் சேகரிப்பதும் உண்டுஆனால்அவன் செய்வது என்னமோ புதுசாக இருந்தது
ஒரு வேகத்தில் சரிவில் இறங்கிச் சென்று அவன் பக்கத்தில் போய்விட்டேன். “இந்த எலைங்கள வச்சி என்ன செய்யப் போற?” என்றேன்சத்தம் கேட்டு அவன் என் பக்கமாகத் திரும்பினான்என்னைப் பாத்துச் சிரித்தபடி “சும்மாதான்” என்றான்பிறகு முகமலர்ச்சி மாறாமல் ”படம் வரையறதுக்கு” என்றான்அவன் வலதுகை தன்னிச்சையாக ஓவியம் தீட்டுவதுபோல ஒருகணம் காற்றில் செய்து காட்டியதுமறுகணமேநீருக்குள் இன்னும் இரண்டடி முன்னால் நகர்ந்து கையிலிருந்த கோலால் மிதக்கும் இலைகளை இழுத்து பைக்குள் போட்டுக்கொள்ளத் தொடங்கினான்என்னால் அவன் சொன்னதை நம்பவே முடியவில்லைஅதற்குள் முழங்கைமீது அமர்ந்து கடித்த கொசுக்களை அடித்து உதறினேன்எனினும் தொடர்ந்து கேள்வி கேட்கவோ பேசவோ தோன்றாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தேன்
அவன் மறுபடியும் என் பக்கமாகத் திரும்பினான்அவன் நெற்றியின்மீது ஒரு கொசுப்படையே சுற்றியதுஅவற்றை கைகளால் ஒதுக்கிவிட்டுமுகம் மலர என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “என்னநம்பமுடியலையா?” என்று கேட்டபடியே கரைக்கு வந்தான்அவனோடு சேர்ந்து நானும் சரிவில் ஏறி கோவிலுக்கு முன்னால் வந்து நின்றேன்உண்டியல் கட்டையோரமாக இலைகள் நிறைந்த பையைச் சாய்மானமாக வைத்துவிட்டு கைக்குட்டையால் முகத்தையும் கைகளையும் துடைத்தபடியே ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்தான்கைப்பேசியில் ”வெண்ணிலவே வெண்ணிலவே” முதல் பாட்டு முடிந்து ”சின்னச்சின்ன ஆசை” தொடங்கியதுநான் அவனை நெருங்கிக் கூர்ந்து பார்த்தேன்.
மேற்கிலிருந்து ஒரு நாய் வேகமாக எங்களை நோக்கி மூச்சு வாங்க ஓடிவந்து நின்றதுகாதுமடல்கள் அசையநாக்கைத் தொங்கவிட்டபடி தலையைத் தூக்கி என்னைப் பார்த்தது.  ஹ்க் ஹ்க் என்கிற விசித்திரமான ஒலியுடன் சற்றே பின்வாங்கி நின்று மீண்டும் பார்த்ததுஅப்புறம் காலைத் தூக்கி கல்மீது வைத்துக்கொண்டு வால்சுழல இடுப்பை அசைத்து நடனமிட்டதுநாங்கள் அதை கொஞ்சம்கூட  பொருட்படுத்தவில்லை என்பதை உணர்ந்ததும்மறுகணமே ஒற்றையடிப்பாதையில் ஊரைநோக்கி ஓடியது.
இலையில எப்படி படம் வரையமுடியும்கிழிஞ்சிடாதா?” என்று சீனு சந்தேகத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டான்பதிலுக்கு அவன் புன்னகைத்தான்பிறகு, “தண்ணில ஊறிய பழுத்த எலயா பாத்து எடுத்தா பாடம் பண்ணறது சுலபம்அதுக்கப்புறம் அதுமேல வரையலாம்” என்றான்.
நல்லா வருமா?”
வராம எங்க போவும்தாள்லதுணியிலசுவத்துல வரையறமாதிரி இலையிலயும் வரையலாம்சுவரோவியம்போல இது இலையோவியம்.”
பேசிக்கொண்டேதன் பையிலிருந்து ஒரு நோட்டையும் பென்சிலையும் எடுத்து பிரித்துவைத்துக்கொண்டு “அப்படியே அசையாம ரெண்டுபேரும் நில்லுங்க” என்று சொல்லிவிட்டு எங்களை வரையத் தொடங்கினான்அவன் விழிகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கஅவன் விரல்கள் தன்போக்கில் அசைந்தபடி இருந்தன. ’சின்னச்சின்ன ஆசை’ முடிந்து ‘கண்ணாளனே’ வைத் தொடங்கியது கைப்பேசிஅதுவும் முடிந்து ‘உயிரே உயிரே’  தொடங்கிய சில கணங்களில் அவன் வரைந்து முடித்துவிட்டான்புன்னகைத்தபடியே அந்த நோட்டை எங்களிடம் நீட்டினான்ஒரு நிலைக்கண்ணாடியில் எங்கள் முகங்களைப் பார்ப்பதுபோலவே இருந்ததுஎங்கள் கண்கள்நெற்றிகன்னம்முடிக்கற்றைஎல்லாமே அச்செடுத்து ஒட்டியதுபோல தத்ரூபமாக இருந்ததுஅவன் கைகளை வாங்கி அழுத்திக் குலுக்கினோம்அக்கணத்திலேயே அவன் எங்களுடைய நண்பனாகிவிட்டான்பல வருஷத்து நண்பன்போல சட்டென்று அவனுடன் ஒரு நெருக்கம் உருவாகிவிட்டதுஉடனே பாட்டை நிறுத்தி கைப்பேசியை பைக்குள் போட்டுக்கொண்டு “வாடீ சாப்பிடலாம்” என்றபடி அவனை அழைத்துக்கொண்டு கடைத்தெருவை நோக்கி நடந்தோம்அவன் குறும்பான புன்னகையுடன் ”என் பேரு குமாரசாமி” என்றான்உடனே சீனு, “சரிவா குமாரசாமிடீ சாப்பிடலாம்” என்று சொன்னதையே மறுபடியும் சொல்லிவிட்டுச் சிரித்தான்நாங்களும் எங்கள் பெயர்களைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
சாலையோரமாக நின்றிருந்த பூவரச மரங்களையும் புளிய மரங்களையும் பார்த்தபடியே வந்தான் அவன். “ஒங்க ஊருகாரங்க  ரொம்ப ரொம்ப நல்லவங்க போலகொளம் நெறய தண்ணியோட அப்பிடியே வச்சிருக்கிங்கநான் பார்த்த பல ஊருல கொளத்த மூடி ஊடு கட்டிட்டாங்கஇல்லைன்னா பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டாங்க…..” என்று சிரித்தான்நாங்கள் பெருமையுடன் அவன் முன்னால் தலையசைத்துக்கொண்டோம்.
லீவ் நாள்ல இதான் இப்ப எனக்கு வேலைமுடிஞ்ச அளவு எலைங்கள தேடி எடுத்துவச்சிக்கணும்இலையுதிர்காலம் முடிஞ்சிட்டா மூணு மாசத்துக்கு எலயே கெடைக்காதுஇதுக்காகவே தேங்காதிட்டுதவளகுப்பம்மடுகரைஉஷ்டேரிதிருபுவனன்னு சுத்திச்சுத்தி வரேன்ஒங்க மதகடிப்பட்டு கொளத்தபத்தி எங்க ஊரு கோயில் பூசாரி போன வாரம் சொன்னத வச்சிதான் இங்க வந்தன்…….” என்றான்பிறகு கையில் வைத்திருந்த பையைப் பார்த்தபடி “வந்ததுக்கு நல்ல பலன்தான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
டீ குடித்தபடி அவன் தன்னைப்பற்றிச் சொன்னான்படம் வரைவதெல்லாம் ஆசைக்குத்தானே தவிரஅதையே வாழ்க்கையாக வைத்துக்கொள்ளவில்லை அவன்ஒரு குடும்பத்தைத் தாங்கவேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்ததுஅம்மாதான் குடும்பத்தலைவிஅப்பா போஸ்ட்மேனாக இருந்து இறந்துபோய்விட்டார்பரிவு அடிப்படையில் அஞ்சல்துறை அவனுக்கு கடைநிலை ஊழியர் வேலை கொடுத்திருந்ததுதொழிற்சங்கத்தின் பரிந்துரையால் அந்த வேலை வில்லியனூரிலேயே  கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்ஓய்வு நேரங்களில் விதம்விதமாக படம் வரைவதுதான் அவன் பொழுதுபோக்குதன் ஓவியங்களைமட்டும்  கொண்ட கண்காட்சிகளை அவன் இரண்டு முறை பாண்டிச்சேரியில் நடத்தியிருக்கிறான்விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரி கடற்கரையில் உட்கார்ந்து அவன் படங்களை விற்பனை செய்வான்ஆசையோடு கேட்பவர்களின் படங்களை அந்தக் கணத்திலேயே வரைந்துகொடுத்து பணம் சம்பாதிப்பதும் உண்டுஒரு படத்துக்கு நூறு ரூபாய்அவனைப்பற்றிய விவரங்கள் எங்களை மலைக்கவைத்தன.
ஒன்னமாதிரி எங்களுக்கு வேலையும் இல்லபடம் வரையறமாதிரி  திறமையும் இல்லசும்மா சினிமா பாட்டு கேப்போம்அவ்ளோதான்” விழிகளைத் தாழ்த்தியபடி மெதுவான குரலில் கூச்சத்துடன் சொன்னபடி என்னைப் பார்த்தான் சீனுகுமாரசாமி அவன் தோளை அழுத்தி, “அதெல்லாம் வரும்போது வரும்இப்ப எதுக்கு அந்தப் பேச்சு?” என்றான். “பேங்க் எக்ஸாம்லாம் எழுதிகிட்டுதான் இருக்கோம்சீக்கிரம் கெடச்சிடும்போனதரம் ஸ்டேட் பேங்க் எக்ஸாம்ல ரெண்டு பேருமே இண்டர்வியு வரைக்கும் போயிருந்தோம்த்ச்அப்பறம் எப்படியோ தட்டிப் போயிடுச்சி” என்று என் பங்குக்குச் சொன்னேன் நான்டீ குடித்தபிறகு தம்ளரைக் கொடுத்துவிட்டுத் திரும்பினான் அவன்.
இந்த எலையில எப்படி படம் வரையறஅத சொல்லு” என்று சீனு பேச்சை திசைமாற்றினேன். ”அது ரொம்ப சுலபம்நானே அத தற்செயலாதான் கத்துகிட்டேன்” என்றான் அவன்.
டீக்கடையிலிருந்து பேருந்து நிறுத்தத்தை ஒட்டியிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம்.
சின்ன வயசிலேருந்து கோயில் சிற்பங்கள பாத்து வரையறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்ஒருநாள் வரையறதுக்காக மாமல்லபுரம் போயிருந்தன்.  அங்க ஒரு பிரும்மாண்டமான சிங்கம் செல இருக்குதுரொம்ப அபூர்வமான செலஉக்காந்து அத வரஞ்சிகினே இருந்தேன்……”
தெரியும் தெரியும்எங்க காலேஜ்ல சுற்றுலா அழச்சிகினு போயிருந்தப்போ பாத்திருக்கேன்அந்த சிங்கம் முன்னால தலயில்லாத ஒரு காளமாடு செல இருக்கும்சரியா?” என்று இழுத்தேன் நான்.
நல்லா ஞாபகம் வச்சிருக்கியே” என்றான் குமாரசாமிபிறகு தொடர்ந்து, ”கோயில சுத்தி பார்க்க வந்த ஒரு வெளிநாட்டு ஜோடி என் பக்கத்துல வந்து நின்னு நான் வரயற படத்தயே பாத்தாங்கநான் வரஞ்சி முடிக்க மூணுமணி நேரம் ஆச்சிமூணு மணி நேரமும் அவுங்களும் என் பக்கத்திலயே நின்னாங்கஃபைன் ஃபைன்னு இங்கிலீஷ்லயே தஸ்புஸ்னு சொல்லிகினு கைய புடிச்சி குலுக்கனாங்கஎனக்கு ரொம்ப கூச்சமா இருந்திச்சி……”
கூச்சம் என்ன கூச்சம்ரொம்ப ஜாலியா இருந்திருக்கும்ன்னு சொல்லு…..” என்று பற்கள் தெரியச் சிரித்தான் சீனுஅந்தக் கிண்டலை ஒரு புன்னகையாலேயே கடந்துவிட்ட குமாரசாமி ”அப்ப அந்த பொண்ணு இதுமாதிரி எனக்கும் ஒன்னும் வரஞ்சி தரமுடியுமான்னு கேட்டுதுஒரு வேகத்துல நானும் சரின்னு தலய ஆட்டிட்டன்பையிலேருந்து ஒரு பெய்ண்டிங்க எடுத்துக்காட்டி இது மாதிரி வரையணும்ன்னு சொல்லிச்சிஒரு நிமிஷம் நான் ஆடி போயிட்டன்கார்ட்போர்ட் பேப்பர்ல ஒட்டன ஒரு அரச எலையில யாரோ ஒரு பூவ வரஞ்சி வச்சிருந்தாங்கமதுரையில வாங்கனாங்களாம்அப்பதான் மொதல்மொதல்ல ஒரு அரச இலை பெய்ண்டிங்க பாத்தேன்லைக் திஸ்லைக் திஸ்னு அந்த பொண்ணு அதயே காட்டிக்காட்டி சிரிச்சிதுபுரியுது புரியுதுன்னு நான் தலய ஆட்டன பிறகுதான் அதுஞ் சிரிப்பு நின்னுது. ”டுமாரோடுமாரோதிஸ் டைம்னு எனக்குத்  தெரிஞ்ச இங்கிலீஷ்ல சொன்னன்சரின்னு டாட்டா காட்டிட்டு கெளம்பி போயிட்டாங்க…..”
அடடாகத எங்கயோ போவுதேவரைஞ்சியா இல்லையா அத சொல்லு” சீனு அவசரமாக எழுந்து அவன் தோளைத் தொட்டான்.
குமாரசாமி புன்னகையுடன் தொடர்ந்தான். ”நல்ல வேளநான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பின்னால ஒரு அரசமரம் இருந்திச்சிஉழுந்து கெடந்த எலைங்கள்ல சக்கையா பழுத்து காய்ஞ்சி கெடந்த ஒரு எலய எடுத்தும்போயி தொடச்சி பாடம் பண்ணி ஒரு அட்டையில ஒட்டி போஸ்டர் கலர அடிச்சி காய வச்சிட்டேன்அது காய்ஞ்சதுக்கப்புறமாஸ்கெட்ச் பண்ணி வச்சிருந்த சிங்கத்த பார்த்துசின்ன ப்ரஷ்ஷால எலமேல வரஞ்சன்அடுத்த நாள் அவுங்களா தேடி வந்தா குடுக்கறதுஇல்லன்னா ஊருக்கு கெளம்பிடறதுன்னு ஒரு திட்டத்தோட போயிருந்தன்ஆனா அந்த ஜோடி சொன்னமாதிரியே வந்து சேர்ந்துட்டாங்கபடத்த பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்கவெரி ப்யூட்டிஃபுல்வெரி ப்யூட்டிஃபுல்னு சொல்லிகினே இருந்தாங்க…..” கண்முன்னால் அந்தக் காட்சி மறுபடியும் நடப்பதுபோல அவன் முகம் மலர்ச்சியாக இருந்தது.
அதிர்ஷ்டக்காரன்தான் நீ
அந்த பொண்ணுகூட இருந்தவன் ஒடனே ஒரு ஐநூறு ரூபா நோட்ட எடுத்து என் சட்ட பாக்கெட்ல வச்சிட்டான். ’நோ நோ’ ன்னு நான் அந்த பணத்த அவன்கிட்ட திருப்பிக் குடுக்க போவும்போது அவன் வாங்கிக்கவே மாட்டேன்னுட்டான்திஸ் பெய்ண்டிங் நைஸ் பெய்ண்டிங்யு ஆர் நைஸ் ஆர்டிஸ்ட்னு சொல்லிட்டு என் கன்னத்துல தட்டிட்டு போயிட்டான்வெறும் தாள்ல வரையறதக் காட்டிலும் இப்படி இலையில வரையறதுக்கு மதிப்பு அதிகம்ன்னு அப்பதான் புரிஞ்சிகிட்டேன்.”
இருட்டு கவியும்வரைக்கும் அவன் பேசிக்கொண்டே இருந்தான்அவன்  சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நேராக எங்கள் மனச்சுரங்கத்துக்குள் சென்று விழுந்ததுசினிமாவைத் தவிர பேசத்தக்க விஷயங்களே உலகத்தில் கிடையாது என்று எண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு அவன் சொல்லும் ஒவ்வொன்றும் ஒரு அபூர்வக்கதையாகத் தோன்றியதுஅவனே ஓர் அபூர்வப்பிறவியாகத்தான் எங்கள் கண்களுக்குத் தெரிந்தான்.
முடிஞ்சா நாளைக்கி சாயங்காலம் போஸ்ட் ஆபீஸ்பக்கமா வாங்கவில்லிநூரு ஸ்டாப்ல எறங்கி யார கேட்டாலும் வழி சொல்வாங்கநெறயா நேரம் பேசிட்டிருக்கலாம்……..”
அவன் சொல்லிமுடித்ததுமே நாங்கள் தலையாட்டினோம்அதற்கப்புறமும் அவன் பேசினான்பேசிப்பேசி தானாக ஒரு கட்டத்தில் பேச்சு தளர்ந்து நின்றபிறகுதான் அவனை பஸ்ஸில் ஏற்றி அனுப்பினோம்.
அவன் கிளம்பிச் சென்றபிறகும் நாங்கள் பிரிய மனமில்லாமல் அந்த நிறுத்தத்திலேயே பேசிக்கொண்டிருந்தோம்பள்ளியில் படிக்கும்போது ஓவிய வகுப்பில் ஒரு பானையை ஒழுங்காக வரையத் தெரியாமல் அசிங்கப்பட்ட சம்பவம் திடீரெனு ஞாபகம் வந்துவிட்டதுகாம்பஸ் வைத்து நாங்கள் வரைகிற வட்டம்கூட ஒரு பக்கமாக கோணலாய்ப் போய்விடும். ”ஒங்க வெரல முரிச்சி அடுப்புலதாட்டா வைக்கணும்” என்று திட்டு வாங்காத நாளே இல்லைஅறிவியல் நோட்டில் எங்களுக்கு படம் வரைந்துகொடுப்பதற்காகவே இளங்கோவன் என்பவனுடன் நட்பாக இருந்தோம்ஒரு படத்துக்கு ஒரு ஐஸ்கிரீம் கட்டணம்ஒன்பது மணி ஆனபிறகுகூட எங்கள் பேச்சு முடியவில்லைபழைய நினைவுகள் பொங்கித் ததும்பினஎங்கள் வீடுகளிலிருந்து திரும்பத்திரும்ப அழைப்புகள் வரத் தொடங்கிய பிறகுதான் பிரிந்து சென்றோம்.
அடுத்தநாள் சாயங்காலம் நாங்கள் இரண்டு பேரும் வில்லியனூர் அஞ்சல்நிலையத்தின் வாசலில் காத்துக்கொண்டிருந்தோம்ஐந்தரை மணிக்கு அவன் வெளியே வந்தான்எங்களைப் பார்த்ததும் கையசைத்துச் சிரித்தான்மூங்கில்கடைக்குப் பக்கத்தில் இருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்தான்அதற்குப் பிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்வீட்டில் தன் அம்மாவையும் தம்பிதங்கைகளையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தான்.
கூடத்தை ஒட்டி அவனுக்கென தனியாக ஒரு அறை இருந்ததுசுவர்முழுக்க பற்பல ஓவியங்கள் சட்டமிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தனஎதை முதலில் பார்ப்பதுஎதை  இரண்டாவதாகப்  பார்ப்பது என்றே எங்களுக்குப் புரியவில்லைகட்டில்மீது எங்களை அமரவைத்துவிட்டுஅலமாரியைத் திறந்து ஒரு படத்தை எடுத்து எங்களிடம் நீட்டினான்சதுரமான ஓர் அட்டையில் ஒட்டப்பட்டிருந்த அரச இலையில் எங்களிருவரையும் அவன் தீட்டியிருந்தான்நேற்று தாளில் வரைந்த அதே படம்அதைப் பார்த்ததுமே ஒரு பிரமிப்புஆச்சரியம்பேச்சே வரவில்லைஎழுந்து அவன் கைகளை வாங்கிப் பற்றிக்கொண்டோம்அப்போது அவன் கண்கள் ஒரு குழந்தையின் கண்கள்போல இருந்தன.  சிறிது நேரத்துக்குப் பிறகு “உங்களுக்குத்தான்இந்த பைக்குள்ள பத்தரமா வச்சிக்குங்க” என்றபடி படத்தை எடுத்து ஒரு பைக்குள் வைத்து நீட்டினான்.
அலமாரி அடுக்கிலிருந்து சில படங்களை எடுத்துக் கொடுத்து எங்களைப் பார்க்கும்படி சொன்னான் குமாரசாமிஒவ்வொரு படத்துக்கும் அவனிடம் சொல்வதற்கு ஒரு கதை இருந்ததுஅவன் பார்த்த ஊர்அவன் பார்த்த காட்சிஅவன் பார்த்த மனிதர்கள்சொல்லச்சொல்ல ஒவ்வொன்றும் எங்களுக்குப் பிரமிப்பாகவே இருந்ததுஅவன் வேலைக்கும் போகிறான்குடும்பத்துக்கும் உதவி செய்கிறான்அவனே இலைகளுக்காக அலைகிறான்அவனே பக்குவப்படுத்துகிறான்அவனே படம் வரைகிறான்அவனே அவற்றை விற்கிறான்பல வேடங்களில் நடிக்கும் ஆற்றல் மிக்க ஒரு நடிகரைப்போல அவனை நினைத்துக்கொண்டோம்அவனுக்கும் எங்களுக்கும் ஒரே வயதுதான்ஆனால்அவன் எங்களால் எட்டிக்கூட தொடமுடியாத உயரத்தில் இருந்தான்அதைப்பற்றிய எந்த பெருமிதத்தையும் காட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பாக எங்கள் அருகில் உட்கார்ந்து பேசினான்இரவு வெகுநேரம் கடந்த பிறகும்கூட எங்களுக்கு அங்கிருந்து புறப்படவே தோன்றவில்லைஅவன் அம்மா எங்களைச் சாப்பிடவைத்து வழியனுப்பினார்கிளம்பும்போது நான் குமாரசாமியிடம், “இங்க பாருநீ ஆர்டிஸ்ட்எலைக்காக அலைஞ்சி திரிஞ்சி நீ உன் நேரத்த வீணாக்கக்கூடாதுஉனக்கு தேவையான எலைங்கள கொண்டாந்து தரவேண்டிதுஇனிமேல எங்க வேலைபுரியுதா?” என்றேன்சீனுவும் கரெக்ட்அவன் சொல்றதுதான் சரி” என்று சேர்ந்துகொண்டான். “ஒங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?” என்று குமாரசாமி முதலில் தயங்கினாலும்இறுதியில் ஒத்துக்கொண்டான்.
அன்றைய பஸ் பயணம் ஒரு கனவுபோலவே இருந்ததுமுதலில் மானைப் பார்க்கும் சீதையின் ஓவியத்தைப்பற்றி சீனு சொன்னான்அவன் முடித்ததும் குழலூதும் கண்ணனின் மார்பில் சாய்ந்திருக்கும் ராதையின் ஓவியத்தைப்பற்றி நான் பேசத் தொடங்கினான்நான் முடிக்கக் காத்திருந்தவன்போல ஊஞ்சலாடும் பெண்ணின் ஓவியத்தைப்பற்றி சீனு உடனே விவரித்தான்இப்படி மாறிமாறி நாங்கள் பார்த்த குமாரசாமியின் ஓவியங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் முதல் வங்கித் தேர்வுக்கான படிப்பு மற்றும் பயிற்சி நேரத்தைத் தவிர மற்ற எல்லாச் சமயங்களிலும் நாங்கள் குமாரசாமியின் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினோம்அல்லது குமாரசாமிக்காக ஊரூராக அலைந்து அரச இலைகளைத் தேடிச் சேகரித்தோம்அல்லது அவனோடு சேர்ந்து பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்றோம்அவன் ஓவியம் தீட்டும்போதுஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து கற்பனையில் மூழ்கியிருந்தோம்.
ஒருநாள் இலை பதிந்த சதுர அட்டையை மேசைமீது வைத்துவிட்டு வண்ணங்களைக் குழைக்க ஆரம்பித்தான்நீலம்வெள்ளைபச்சைசிவப்புமஞ்சள் என ஒவ்வொரு நிறமும் ஒரு கிண்ணத்தில் இருந்ததுதூரிகையின் மென்முடிக் கற்றையை வெள்ளை நிறத்தில் தொட்டு இலைமுழுக்க தீட்டினான்பால்கிண்ணத்தைக் கவிழ்த்ததுபோல இருந்ததுபிறகு மற்ற நிறங்களில் ஒவ்வொன்றாகத் தொட்டு சிற்சில இடங்களில் புள்ளிகள் வைத்தான்சிற்சில இடங்களில் கோடுகளை இழுத்தான்அந்தத் தூரிகையின் முனையிலிருந்து சின்னச்சின்ன உருவங்கள் தென்பட ஆரம்பித்தனஅடர்த்தியான பனி விலகியதும் தென்படும் குன்றுபோலஇலையின் அடிப்பகுதியில் குன்று உயர்ந்தும் விரிந்தும் உருவாவதைப் பார்த்தேன்பிறகு மெல்லமெல்ல மரங்கள்பாறைகள்சுனைகள்பாதைகள்மேடுகள்பள்ளங்கள் என ஒவ்வொன்றாக தெரியத் தொடங்கினநான் அவன் விரல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்சில நிமிடங்களிலேயே வெண்ணிற மேகங்கள் சூழ பச்சைப்பசேலென நின்றிருக்கும் ஒரு குன்றைப் பார்க்கமுடிந்தது.
என்னப்பாமுருகரா?” என்று அவசரமாகக் கேட்டுவிட்டேன் நான்இலையின்மீது நகரும் தூரிகையை நிறுத்திவிட்டு “எப்பிடி சொல்ற?” என்று என்னைப் பார்த்துக் கேட்டான். “குன்றுதோறும் ஆடுபவன் குமரன்தானே?” என்று பாட்டுபோல அபிநயத்துடன் சொல்லிவிட்டுச் சிரித்தேன் நான்.
அவனேஅவனே” என்றபடி புன்னகையுடன் மீண்டும் அந்த இலைக்குள் மூழ்கிப் போனான் குமாரசாமிஅவன் விரல்கள் வண்ணத்தைத் தொடுவதும் தீட்டுவதுமாக இருந்தனசட்டென ஒரு கணத்தில் அடர்த்தியான மேகப்புகையின் நடுவில் மயில்மீது அமர்ந்த முருகனின் தோற்றம் மெல்லமெல்ல எழுந்துவந்ததைக் கண்டேன்மயில்தோகைமணிமகுடம்வேல்மார்புப்பதக்கம்மாலைகள்காற்றில் அசையும் செவ்வாடைசேவல்கொடி என ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வந்தபடி இருந்தனகடைசியாக கண்களைத் தீட்டியபோதுமுருகனின் முகம் கருணைவடிவாக சுடர்விட்டதுவேறுவேறு கோணங்களில் முகத்தைத் திருப்பிப் பார்த்தபிறகுதூரிகையை கிண்ணத்தில் வைத்துவிட்டு திரும்பினான். “பிரமாதம்டா” என்றபடி சீனு அவனை இழுத்துத் தழுவிக்கொண்டான்நான் அவனுடைய கைகளை அழுத்திக் குலுக்கினேன்.
சாமியே ஒன் உயிர்லேருந்து விரல்வழியா மெதுமெதுவா எறங்கிவந்து எலையில உட்கார்ந்துட்டமாதிரி இருக்குது.”
அவன் சிரித்தான்மேசையில் வைக்கப்பட்டிருந்த செம்பிலிருந்து தண்ணீரை எடுத்து சிறிது குடித்தான்.
முருகன் காலடியை வணங்கினால்னு பாடணும்போல இருக்குது குமாரசாமிபடத்த பாக்கப்பாக்க நமக்கே பக்தி வந்துடும்போல இருக்குது.” அந்தப் படத்திலிருந்து என்னால் கண்களை விலக்கவே முடியவில்லை.
எல்லா சாமி படங்களயும் வரைஞ்சிருக்கியா?” மெதுவாக அவனிடம் கேட்டேன்அவன் “ம்” என்று தலையசைத்தான்.
எந்த சாமிக்கு ரொம்ப வேலை வாங்கும்?”
அவன் ஒருகணம் யோசித்தான்பிறகு “நடராஜர தீட்டும்போதுதான் ரொம்ப மெனக்கிடணும்” என்றான்.
ரொம்ப சுலபமானது?”
அதுல என்ன சந்தேகம்நம்ம புள்ளயாருதான்.” அவன் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.
பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் தம்பி கதவருகில் வந்து ”அண்ணாயாரோ உன்ன தேடி வந்திருக்காங்க” என்று அழைத்தான்அவன் எழுந்திருப்பதற்குள் அவன் அம்மா வாசல்பக்கம் சென்று “வாங்க வாங்கஉள்ள வாங்க” என்று அழைப்பது கேட்டது. ”உக்காருங்க” என்று நாற்காலையை இழுத்துப் போடுவதும் கேட்டதுகுமாரசாமி அறையிலிருந்து வெளியே சென்றான்நாங்கள் அவனுக்குப் பின்னால் சென்றோம்.
வணக்கம் சார்” குமாரசாமி அவரை வணங்கினான்மொட்டைத்தலையோடு காணப்பட்டார் அவர்நெற்றியில் திருநீறுக் கோடுகள்புன்னகையோடு அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டவராக “நல்லா இருக்கியா தம்பி?” என்று கேட்டபடி தன் கைப்பையிலிருந்து ஒரு படத்தை எடுத்து அவனிடம் நீட்டினார்.
நம்ம நிர்மலா படம் தம்பிஅரச எலயில இவ முகத்த வரைஞ்சி குடுஅத லேமினீஷன் பண்ணி அவ ஞாபகமா என் மேசை மேலயே வச்சிக்கணும்ன்னு  ஒரு ஆசை” 
குமாரசாமி கைநீட்டி அந்தப் படத்தை வாங்கிக்கொண்டான்அம்மா உள்ளேயிருந்து ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்அவர் அதை சம்பிராதயமாக வாங்கி சில கணங்கள் கையில் வைத்திருந்துவிட்டு மேசைமீது வைத்தார்.
சரி தம்பிஒரு வாரம் கழிச்சி வரட்டுமா?” என்று கேட்டார்குமாரசாமி சரியென்று தலையசைத்ததும் அவரும் தலையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
இந்த வார்ட் கவுன்சிலர்” என்று மெதுவான குரலில் சொன்னான் குமாரசாமி. ”ஒரு வாரத்துக்கு முன்னால அவரு பொண்ணு டெங்கு காய்ச்சல்ல செத்துபோயிடுச்சிஈஸ்ட்கோஸ்ட்ல வச்சி எவ்வளோ செலவு செஞ்சாங்ககாப்பாத்த முடியாம போயிடுச்சிஒரே பொண்ணுபாவம்” என்றான்அவன் அப்படிச் சொன்னபோது அவனுடைய குரல் உடைந்திருந்ததுதொடர்ந்து, “என்கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணுதான் அதுரொம்ப பெரிய புத்திசாலிஆறாங்கிளாஸ்லயே அவுங்கப்பா இங்கேருந்து டிசி வாங்கினும் போயி பாண்டிச்சேரியில க்ளூனியில சேர்த்துட்டாருஅப்பறம் அப்பிடியே இஞ்சினீரிங் போயிட்டுதுபெங்களூரு விப்ரோவுல வேல கெடச்சி போயிட்டுதுன்னு சொன்னாங்கயாருக்கோ கல்யாணம்ன்னு பத்து நாள் லீவ் போட்டுட்டு வந்திச்சி போலவந்த எடத்துல இப்பிடி உயிரு போவணும்ன்னு அதும் தலயெழுத்து………” அவனால் சொல்லி முடிக்கவில்லைகண்கள் கலங்கத் தொடங்கிவிட்டன.
அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்துத்தான் குமாரசாமியை நாங்கள் பார்க்கச் சென்றிருந்தோம்வளவனூருக்கும் சிறுவந்தாட்டுக்கும் சென்று ஏரிக்கரையில் கிடந்த ஏராளமான அரச இலைகளை ஒரு சின்ன மூட்டை நிறைய சேகரித்துச் சென்று அவனிடம் அன்று கொடுத்தோம்அவன் அதை கூடத்தில் நிரப்பிஅவற்றில் உதவக்கூடியவற்றை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டு மற்றவற்றை தள்ளிவிட்டான். ”தண்ணி சுடவைக்க உதவும்” என்று அவன் அம்மா அவற்றை சமையலறைக்கு எடுத்துச் சென்றாள்.
அந்தப் பெண்ணின் படத்தை வரைந்துலேமினேஷன் செய்து கவுன்சிலர் வீட்டில் கொடுத்துவிட்டு வந்ததாகச் சொன்னான் குமாரசாமிஓர் உறையில் பணத்தை வைத்து அவனிடம் அவர் கொடுத்ததாகவும் ”என் க்ளாஸ்மெட்டுக்கு என்னுடைய சின்ன அஞ்சலி சார் இது” என்று சொல்லி அதை வாங்க மறுத்துவிட்டதாகவும் சொன்னான். “நீ செஞ்சதுதான்டா சரி” என்று அவன் முதுகைத் தட்டினான் சீனு.
அந்த வாரத்திலும் அதற்கடுத்த வாரத்திலும் அவன் ஏராளமான முருகர் படங்களையே போட்டான்இருபது படங்களுக்குக் குறையாமல் இருக்கும். “அடுத்த வாரம் கடற்கரைக்கு போவலாம்நிறைய வித்தா நமக்கு நல்லதுதான?” என்று சிரித்தான். ”திடீர்னு பக்தி முத்தி எங்க ஞானப்பழமாய்ட்டயோன்னு ஒரு பயம் வந்துட்டுதுஅதான் கேட்டன்” என்று கிண்டல் செய்தான் சீனுஅவன் முதுகிலேயே செல்லமாக தட்டினான் குமாரசாமி. “கையில கொஞ்சம் பணம் சேந்தாதங்கச்சிக்கு சின்னதா நக ஒன்னு வாங்கணும்டா” என்று மெதுவான குரலில் சொன்னான்.
ஞாயிறு அன்று நாங்களும் அவனுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தோம்கரையோரம் நின்றிருந்த ஒரு சிமெண்ட் குடையின் கீழே உட்கார்ந்து ஒரு பிளாஸ்டிக் விரிப்பை முதலில் விரித்துவிட்டுஅதன்மீது ஓவிய அட்டைகளை வைத்தோம்சாமி படங்களைத் தவிரகுமாரசாமி வேறு சில படங்களையும் அவன் கொண்டு வந்திருந்தான்.
எங்களுக்கு முன்னால் கடல் பேரோசையுடன் கரையில் மோதி நுரைகளை ஒதுக்கிவிட்டுத் திரும்பிச் சென்றது.  நீண்ட கரையின் காலடியில் ஏதோ எழுதப்படாத ஒரு நீதிக்குக் கட்டுப்பட்டு உடலை வளைத்துவளைத்து நெளியும் எளிய மிருகத்தைப்போல காணப்பட்டது கடல்காலை வெளிச்சம்  அலைகளில் பட்டு மின்னியதுகாற்று வீசிய அதே கணத்தில் ஒருவித வெப்பமும் கலந்து வீசியதுசின்னச்சின்ன கும்பலாக மக்கள் கரையோரத்தில் குழுமியபடி இருந்தார்கள்அன்றுதான் அவனுடன் முதன்முறையாக விற்பனைக்கு ஒத்தாசையாக நின்றிருந்தோம்கடலைப் பார்க்க வருபவர்கள் அனைவரும் எங்கள் படங்களைப் பார்க்க வந்துவிடுவார்கள் என்றும்பார்த்ததுமே போட்டிபோட்டுக்கொண்டு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்றும் நான் நினைத்திருந்தேன்கடைவிரித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியும் ஒருவர்கூட அந்தப் பக்கம் திரும்பாமலேயே சென்றதைப் பார்த்து வருத்தமாக இருந்ததுஎன் நம்பிக்கையெல்லாம் உடைந்து சரிய என் மனத்தில் அவ்வளவு கசப்பு ஏன் பிறந்தது என்பது எனக்கே புரியவில்லை.
சில கல்லூரிப்பெண்கள் வந்து படங்களைப் புரட்டிப்புரட்டி வெகுநேரம் பார்த்துவிட்டு ஆளுக்கொரு முருகர் படம் வாங்கினார்கள். “ஏது சார் இந்தப் படங்கள்எங்கேருந்து வாங்கி வரீங்க?” என்று அப்பாவியாகக் கேட்டாள் ஒரு பெண்சீனு அமைதியான குரலில் அவர்களிடம், “எதுவும் வாங்கினதில்லிங்கஒரிஜினலா வரைஞ்ச ஓவியம்இதோ இவர்தான் ஆர்ட்டிஸ்ட்” என்று குமாரசாமியைச் சுட்டிக்காட்டிச் சொன்னான் சீனு. ”ஸாரி சார்ஸாரி சார்” என்று அவர்களில் மூத்தவளாகக் காணப்பட்ட ஒரு பெண் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்அவளை அப்படியே சில நிமிடங்கள் நிற்கச் சொல்லிவிட்டுஅவள் முகத்தை மட்டும் ஒரு தாளில் வரைந்து அவளிடமே கொடுத்து அனுப்பினான் குமாரசாமி. “தேங்க்ஸ் சார்தேங்ஸ் சார்” என்று திரும்பித்திரும்பிச் சொல்லிக்கொண்டே போனார்கள் அவர்கள்திருமணமான ஒரு புதுஜோடி வந்து ஒரு படத்தை வாங்கிக்கொண்டு சென்றதுவட இந்தியாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த பயணிகள் பத்து படங்கள் வாங்கினார்கள்அரவிந்தர் ஆசிரமத்துக் கூட்டமொன்று நின்று வேடிக்கை பார்த்துவிட்டு நான்கு படங்கள் வாங்கிச் சென்றார்கள்குமாரசாமிதான் அவற்றை வரைந்த ஓவியன் என்று தெரிந்ததும்அவனிடம் அவர்கள் தம் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள்.
பளிச்சென்று வேட்டி கட்டிய ஒருவர் எங்களுக்கு அருகில் வந்து படங்களைப் பார்த்தார்அப்போது ஒரே ஒரு முருகர் படம்தான் இருந்ததுமற்றவையெல்லாம் வேறுவேறு படங்கள்சற்றே தள்ளி உட்கார்ந்தபடி தம் நோட்டில் சாலைக்கு மறுபுறம் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஓவியமாக வரைந்துகொண்டிருந்த குமாரசாமியையும் முருகர் படத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு மிகவும் திருப்தியாக தலையசைத்துக்கொண்டார்.
அந்த பழனிமலை முருகனையே சன்னிதியில பாக்கறமாதிரி தத்ரூபமா வரைஞ்சிருக்கியே தம்பிஇந்தச் சின்ன உருவத்துல ரொம்ப நுணுக்கமா இருக்குதுமுருகனுடைய கண்ண பார்க்கும்போதே யாமிருக்க பயமேன்னு கேக்கறமாதிரி தோணுதுரொம்ப நல்ல படம் தம்பிஇத நான் எடுத்துக்கட்டுமா?” என்றபடி விலை விசாரித்துவிட்டு பணத்தைக் கொடுத்தார்.
எனக்கு இந்தமாதிரி நூறு படம் வேணும் தம்பிவரைஞ்சி தர முடியுமா?” என்று குமாரசாமியைப் பார்த்துக் கேட்டார் அவர்.  அவரை நிமிர்ந்து பார்த்த குமாரசாமி “வரைஞ்சிடலாம் சார்ஒரு பிரச்சினயும் இல்ல” என்றான்நாங்கள் நம்பமுடியாமல் அந்த உரையாடலைக் காதுகொடுத்துக் கேட்டோம்.
இன்னும் பத்து பன்னெண்டு நாள்ல வேணும்என் பொண்ணுக்கு கல்யாணம்கல்யாணத்துக்கு வரக்கூடிய பெரிய ஆளுங்களுக்கு அன்பளிப்பா பையில போட்டு குடுக்கலாம்ன்னு ஒரு யோசனைஅதான்….…” என்றார் அவர்குமாரசாமி அதற்கும் தலையாட்டினான்.
ஏதாச்சிம் அட்வான்ஸ் வேணுமா?” அவர் தன் பைக்குள் கையை விட்டார். “அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார்படங்களை கொண்டாந்து குடுத்துட்டு மொத்தமா வாங்கிக்கறோம்” என்று தடுத்துவிட்டான் குமாரசாமிதொடர்ந்து ஏதோ சொல்ல வாயெடுத்துகுமாரசாமியின் கண்களைப் பார்த்துவிட்டு அமைதியானார்பிறகு அமைதியாக தன் வீட்டு முகவரி அட்டையை எடுத்து அவனிடம் கொடுத்தார்அவன் தன் நோட்டிலேயே ஒரு தாளைக் கிழித்து தன் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் எழுதிக் கொடுத்தான்நான் அவருடைய அட்டையில் அவர் பெயரைப் பார்த்தேன்திருவேங்கடம் என்று அச்சிடப்பட்டிருந்தது.
இன்னிக்கு தேதி அஞ்சிபதினாறு பதினேழு தேதிக்குள்ள குடுத்துட்டா நல்லது” என்றார் அவர். “நீங்க தைரியமா போங்க சார்ஒங்க வீட்டுக்கு படங்க வந்துடும்” என்றான் குமாரசாமி. “இதே போலவே இருக்கட்டும்” என்று கையிலிருந்த முருகர் படத்தை எடுத்துக் காட்டிவிட்டுச் சென்றார்.
நாங்கள் மூன்று பேரும் அன்று ராம் ஓட்டலில் சாப்பிட்டோம்பிறகு ராஜா தியேட்டரில் பகல்காட்சி பார்த்தோம்சாயங்காலம் மீண்டும் கடற்கரைக்குச் சென்று அலைந்து திரிந்துவிட்டுஇரவுதான் வீட்டுக்குத் திரும்பினோம்.
பத்து நாள்ல நூறு படம்முடியுமாடா?” என்று மெதுவாக குமாரசாமியிடம் கேட்டேன். ”நாளைக்கே பத்து நாள் லீவ் குடுத்துட்டு வேலய ஆரம்பிச்சிடறன்ஒரு நாளைக்கு பத்து படம்பத்து நாள்ல நூறு படம்தாராளமா முடிச்சிடலாம்டா” என்று நம்பிக்கையுடன் சிரித்தான் அவன்வில்லியனூர் நெருங்கும் சமயத்தில் திடீரென நினைவு வந்தவனாக “இருக்கிற எலைகள் போதுமாஇன்னும் வேணுமாடா?” என்று கேட்டேன்அவன் சிரித்துக்கொண்டே “இருக்கறத வச்சி இன்னும் நூறு படம் வரையலாம்” என்று சொல்லிக்கொண்டே இறங்கிச் சென்றுவிட்டான்அதற்குப் பிறகு நாங்கள் மதகடிப்பட்டுக்குப் போனோம்.
அடுத்தநாள் சாயங்காலம் நாங்கள் அவன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவன் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தான்ஆறு படங்களை முடித்துவிட்டிருந்தான்எல்லாம் மேசையில் உலர்ந்துகொண்டிருந்தனநாங்கள் அவனிடம் அதிகம் பேச்சுக் கொடுக்காமல் ஒதுங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்த்தோம்அவன் அம்மா எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார்அதை அருந்தும் சமயத்தில் மட்டும் சிறிது நேரம் பேசினோம்நேற்றுப் பார்த்த திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியை ஒட்டியே எங்கள் உரையாடல் அமைந்துவிட்டதுநாங்கள் புறப்படும் சமயத்தில் திருவேங்கடம் சாரை எங்கள் முன்னிலையிலேயே கைப்பேசியில் அழைத்து வேலை தொடங்கிவிட்ட தகவலைத் தெரியப்படுத்தினான் குமாரசாமி.
எல்லாம் நல்லபடியாக நடந்துமுடிந்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக குமாரசாமிக்கு காய்ச்சல் வந்துவிட்டதுடாக்டரிடம் செல்ல அவன் சுத்தமாக மறுத்துவிட்டான். ”ஒரு குரோசின் போட்டா போதும்எல்லாம் சரியாய்டும்” என்றான்ஆனால் மூன்று குரோசின்கள் போட்டும் காய்ச்சல் நிற்கவில்லைமறுநாள் அவன் உடலிலிருந்து அனல் வீசியதுஅவ்வளவு காய்ச்சல்.  அவன் அம்மா கொண்டு வந்து கொடுத்த கஞ்சியில் இரண்டு வாய்தான் குடித்தான்பிறகு “வாய் கசப்பா இருக்குதுடாகுடிக்க முடியலை” என்று வைத்துவிட்டான்கைமருந்தாக கொடுத்த கஷாயத்தைமட்டும் வாங்கி ஒரே மடக்கில் குடித்தான்ஆனால் அப்போதும் அவன் ஓவியம் தீட்டுவதை நிறுத்தவே இல்லைஎங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லிவிட்டு நாங்கள் அவன் அறையிலேயே தங்கிவிட்டோம்அவனை உறங்கவைத்துவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து ஈரத்துணியை அவன் நெற்றியில் வைத்து வைத்து எடுத்தேன்காய்ச்சல் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தது.
அடுத்த நாளும் அவன் டாக்டரிடம் வர மறுத்துவிட்டான். “ஒரே ஒரு மணி நேரம்தான்டாஓடி போயி ஓடியாந்துடலாம்வாடா’ என்று என்னென்னமோ சொல்லி அவனை அமைதிப்படுத்திவிட்டு அழைத்துச் சென்றோம். ”ரெண்டு நாளா ஜுரம்” என்று சொன்னதுமேஅவர் கசப்புடன் “நீங்கள்ளாம் படிச்சவங்கதானநீங்களே இப்பிடி அலட்சியமா இருக்கலாமா?” என்று கசப்புடன் சொன்னார். “இந்த ஊருபூரா டெங்கு டெங்குனு பேசிக்கறாங்களேஒங்க காதுல அது உழவே இல்லயா?” என்றார்அவன் கண்களையும் நாக்கையும் சோதித்துவிட்டு “மொதல்ல பெட்ல சேருங்கப்பாவெய்ன் ஆண்டிபயாட்டிக்தான் இதுக்கு ஒரே மருந்துநாலு நாள் போடணும்” என்றார்தொடர்ந்து “ரத்தத்தட்டு கொறஞ்சிட்டாயாராலயும் ஒன்னும் செய்யமுடியாது” என்று எச்சரித்தார்குமாரசாமி அதற்கு உடன்பட அக்கணமே மறுத்துவிட்டான். ”தம்பிஇது சாதாரண ஜொரம் இல்லஉயிரோட வெளயாட நெனைக்காதஅது எதுல போயி முடியுமோ தெரியாது” என்று எச்சரித்தார்குமாரசாமியை அவர் எச்சரிக்கைகள் தொடவே இல்லை. “சரிஒங்க இஷ்டம்சொல்லவேண்டியது என் கடமசொல்லிட்டன்” என்று முணுமுணுத்தபடி முதல் உதவி ஊசி மட்டும் போட்டு அனுப்பினார் டாக்டர்.
பயத்தில் என்னால் யோசிக்கவே முடியவில்லைமெதுவாக “திருவேங்கடம் சார்கிட்ட வேணும்னா நான் பேசறேன்டாமொதல்ல ஒடம்புதான்டா முக்கியம்” என்றபடி நான் அவன் தோளைத் தொட்டேன். “த்ச்பைத்தியமாட்டம் பேசறியடாவெய்ன்ல ஊசி போட்டுட்டா படம் எப்பிடிடா வரயமுடியும்எனக்கு ஒன்னும் ஆவாதுமொதல்ல வீட்டுக்கு போவலாம்வா” என்று அவன் தன் வார்த்தைகளில் உறுதியாக இருந்தபோது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.
வீட்டுக்குப் போனதுமே குமாரசாமி வண்ணங்களைக் குழைக்கத் தொடங்கினான்அவன் அம்மா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார்எங்கோ ஓடி பப்பாளி இலைகளைக் கொண்டு வந்து சாறு எடுத்து மணிக்கு ஒருதரம்  குடிக்கச் சொன்னார்வேளைக்கு ஒரு தரம் நிலவேம்புக்கஷாயம் வைத்துக் கொடுத்தார்நல்லவேளையாக எந்த மறுப்பும் சொல்லாமல் அவற்றையெல்லாம் வாங்கி அருந்தினான் அவன்ஓர் எந்திரத்தின் உறுப்புபோல அவன் கைகள் தாமாக இயங்கியபடி இருந்ததை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அவன் வரைந்து சுவரோரமாகவும் மேசையின்மீதும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த முருகர்கள் அனைவரும் அவனை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியதுதண்ணீர் ஆகாரத்தை மட்டுமே அவன் உணவாகிப் போனதால் நாலே நாளில் அவன் எலும்பும் தோலுமானான்உதடுகள் வெடித்தனகண்களில் குழி விழுந்துவிட்டன.
ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தபோதே ஒருமுறை தன் கட்டுப்பாட்டை மீறி அவன் கட்டிலில் மயங்கி விழுந்துவிட்டான்அவன் தம்பிகளும் தங்கையும் ஓடிவந்து அவனைச் சுற்றி நின்று அழத் தொடங்கிவிட்டார்கள்அவன் அம்மாவால் அங்கே நிற்கவே முடியவில்லைஓடிச் சென்று சாமி மாடத்தின்முன்னால் உட்கார்ந்து அழுதார்நீண்ட நேரத்துக்குப் பிறகு சட்டென சுயநினைவு வரப் பெற்றவனாக அவன் எழுந்து உட்கார்ந்து கருத்து மெலிந்துபோன உதடுகளைப் பிரித்து சிரிப்பதுபோல எல்லோரையும் பார்த்தான்சைகையாலேயே தம்பிதங்கைகளை வெளியே அனுப்பிவிட்டு மறுபடியும் இலை மீது வண்ணத்தை நிரப்பத் தொடங்கினான்எங்கள் அறிவுரை எதுவும் அவன் இதயத்தைச் சென்று அடையவே இல்லைஅவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கேட்கிற பொருளை உடனுக்குடன் எடுத்துக் கொடுப்பதுமட்டுமே எங்கள் வேலையாக இருந்தது.
மெதுவாக என் பக்கம் திரும்பி, “பாட்டு எதயாச்சிம் வை” என்று முனகினான்ஒருகணம் நான் அவன் சொன்னதைச் சரியாக கவனிக்கவில்லைஉடனே என் தலையில் கைவைத்து “பாட்டுபாட்டு” என்றபடி கைப்பேசியைச் சுட்டிக் காட்டினான்உற்சாகமில்லாமல் விரலால் தேடித்தேடி அழுத்தியதும் ’அரிமா அரிமா’ பாட்டு ஒலிக்கத் தொடங்கியது.
பத்தாவது நாள் அவன் இரவிலும் ஓவியம் தீட்டினான்அவன் உடல் காற்றில் அசைகிற கொடிபோல நடுங்கியதுஅவன் முகத்தில் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கினநள்ளிரவைக் கடந்த நேரத்தில் பலவீனமாக புன்னகைத்தபடி “இது நூறாவது படம்” என்று என்னிடம் சொல்லிவிட்டு பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்தான்அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கவே முடியவில்லைஅவன் அருந்துவதற்கு கொஞ்சம் பழச்சாறு கொடுத்தேன்அதை அருந்திவிட்டு “தல வலிக்குதுடா’ என்றபடி கண்களை மூடினான்மறுகணமே திறந்து “காலையிலயே திருவேங்கடம் சார் வீட்டுக்குப் போயி குடுத்துட்டு வந்துடு” என்றான்வலியில் உதடுகளைக் கடித்தபடி அவன் முனகுவதைப் பார்க்க பாவமாக இருந்தது.
வேலையைத்தான் முடிச்சிட்டியே குமாரசாமிஇப்பவாவது டாக்டர்கிட்ட போவலாமா….?” என்றபடி அவன் கைகளைப் பற்றினேன்முழுசாய் சொல்லிமுடிக்க முடியாதபடி எனக்கு தொண்டை அடைத்ததுஅவன் மெதுவாக விழிநிமிர்த்தி என்னையே பார்த்தான்பிறகு “சரிபோவலாம்” என ஒவ்வொரு சொல்லாகச் சொன்னான்..
அடுத்தநாள் விடிந்ததுமே நாங்கள் மருத்துவமனைக்கு அவனை அழைத்துக்கொண்டு சென்றோம்எங்களைப் பார்த்ததுமே டாக்டர் எங்கள்மீது எரிந்து விழுந்தார். “படிச்ச முட்டாள்ங்கடா நீங்கள்ளாம்” என்று நேரிடையாகவே திட்டினார். “என்னால முடியாதுபோயிடுங்க” என்று விரட்டினார்நாங்கள் அவர் காலில் விழாத குறையாக கெஞ்சினோம்மெல்லமெல்ல அவனைப் பற்றியும் அவனுக்கு இருந்த நெருக்கடிகளைப்பற்றியும் பொறுமையாகச் சொல்லி அவரை அமைதிப்படுத்தினேன்ஆனாலும் ”அதுக்காக உயிரோட வெளயாடணுமா?” என்று என்னைப் பார்த்து சத்தம்போட்டார்சில கணங்களுக்குப் பிறகு மெளனமாக அவனைப் பரிசோதித்தார்.
டெங்குதான்சந்தேகமே இல்ல.” ரத்தம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அக்கணமே வலதுகை மணிக்கட்டின்கீழே நரம்பைத் தேடி நிரந்தர ஊசிவழிச் சாதனமொன்றைப் பொருத்தினார்தீவிரமான ஆன்டிபயாடிக்  மருந்தை அதில் நேரிடையாகச் செலுத்தினார்அரைமணி நேரம் கழித்து டிரிப்ஸ் போட்டுவிட்டார்.
சீனுவை குமாரசாமிக்குத் துணையாக இருக்கச் செய்துவிட்டு நான் திருவேங்கடம் வீட்டுக்குச் சென்றேன்ஒரு சூட்கேஸ்,, இரண்டு பைகள் நிறைய படங்களை அடுக்கி எடுத்துச் சென்றேன்புறப்படும் முன்னால் கைப்பேசியில் தகவல் சொல்லியிருந்ததால் அவர் எனக்காகக் காத்திருந்தார்.
ஆர்டிஸ்ட் வரலையா?”
நான் மெதுவாக நடந்த விஷயங்களையெல்லாம் அவரிடம் எடுத்துரைத்தேன்நான் சொன்னதைக் கேட்கக்கேட்க அவர் முகத்தில் ஒரு சோகம் படிவதைப் பார்க்கமுடிந்தது.
கவலைப்படாத தம்பிஎங்கப்பன் முருகன் சோதிப்பான்ஆனா கைவிடமாட்டான்” என்று ஆறுதல் சொன்னார் அவர்.
நான் படங்களை எடுத்து அவர் மேசையில் அடுக்கி வைத்தேன்அவர் ஒரு படத்தை எடுத்துப் பார்த்தார். “அச்சு அசலாஅந்த படத்துல இருந்த அதே முருகர்” என்று சொல்லும்போதே அவர் கண்கள் மின்னின. ”குறிச்ச நேரத்துக்குள்ள உங்கள கொண்டுவந்து சேர்க்க வச்சிட்டான் எங்கப்பன்” என்று சொன்னபடி நெஞ்சோடு வைத்து சில கணங்கள் கண்களை மூடியிருந்துவிட்டு திறந்தார்தொடர்ந்து “ஃப்ரேம் போட்டு குடுக்க போறேன்பார்க்கறவங்க அப்படியே அசந்துடணும்” என்றார்மேலும், “ஒருவேளஇந்தத் திட்டம் வேற யாருக்காவது புடிச்சி கூடுதலா ஆர்டர் வந்தாலும் வர்லாம்அந்த முருகர் நெனச்சா எத வேனும்னாலும் செய்ய வச்சிருவார்எல்லாம் அவன் திருவிளையாடல்தானஆர்டிஸ்ட்கிட்ட சொல்லி வைங்க” என்று சொல்லிமுடித்தார்பிறகு வெளியே இருந்த ஓர் உதவியாளை அழைத்துபடங்களை எண்ணி எடுத்து உள்ளே வைக்கச் சொன்னார்
ஒரு வேலைக்காரன் பழச்சாறு நிரம்பிய ஒரு தம்ளரைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தான்நான் திருவேங்கடம் சாரைப் பார்த்தேன். “சாப்புடுங்கஉங்களுக்குத்தான்” என்றார் அவர்நான் பருகி முடிப்பதற்குள் உதவியாள் படங்களை எண்ணி முடித்து “தொண்ணத்தொம்பது படம் ஐயா” என்றான்நான் குழப்பத்தோடு “நூறு கொண்டாந்தனே” என்று இழுத்தேன்.
அவன் மறுபடியும் எண்ணிப் பார்த்துவிட்டு “இல்ல சார்நூறுக்கு ஒன்னு கொறையுது” என்றார்திருவேங்கடம் சார் என்னைப் பார்த்து ‘வேணும்ன்னா நீங்களும் ஒருதரம் எண்ணிப் பார்த்துடுங்க” என்றார்நான் அவசரமாக மறுத்தபடி ”பரவாயில்லஇருக்கட்டும் சார்” என அவர் முகத்தைப் பார்த்தேன்.
பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி எனக்கு முன்பாக வைத்துவிட்டு “நீங்க ஒருதரம் எண்ணிப் பார்த்துக்குங்க தம்பி” என்று சொன்னார் திருவேங்கடம்நான் எடுத்து எண்ணிப் பார்த்தேன்பத்தாயிரத்துக்கு நூறு ரூபாய் குறைந்தது.
படத்துக்கு நூறு ரூபா அன்னிக்கு பேசனதுதொண்ணத்தொம்பது படத்துக்கு ஒம்பதாயிரத்து தொளாயிரம் ரூபாஎன்ன சரிதானா?” என்று கேட்டார் அவர்நான் ஒன்றும் சொல்லவில்லை. “சரி சார்” என்று சொன்னபடி வெற்றுப் பைகளோடு வீட்டைவிட்டு வெளியே வந்தேன்.
மருத்துவமனையில் குமாரசாமியை எட்டுநாள்கள் வைத்திருந்தார் டாக்டர்காய்ச்சல் முழுமையாக நின்று ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து நிரந்தரமாக நிலைபெற்ற பிறகுதான் வீட்டுக்கு அனுப்பினார். ”ராஸ்கல் ஆர்டிஸ்ட்” என்று செல்லமாக அவன் முதுகைத் தட்டி விடைகொடுத்தார்.
கூடத்திலேயே குமாரசாமியை உட்காரவைத்துவிட்டு அவன் அறையை நாங்கள் சுத்தப்படுத்தினோம்கட்டிலுக்குக் கீழே இருந்த ஏராளமான துண்டுத்தாள்களையும் குப்பையையும் குனிந்து வாரும்போதுஒரு பழைய செய்தித்தாளும் சேர்ந்து வந்ததுதூசுகளை உதறிவிட்டு அந்தச் செய்தித்தாளைப் புரட்டியபோதுஅதற்குள் ஒரு படம் இருப்பதைப் பார்த்தேன்உடனே அவசரமாகப் புரட்டினேன்குன்றின்மேல் நிற்கும் முருகர் படம்ஒரு புதையலைக் கண்டுபிடித்ததுபோல என் உடல் சிலிர்த்ததுஅக்கணமேஅது திருவேங்கடம் சாருக்காக வரைந்த படங்களில் ஒன்று என்பது புரிந்துவிட்டதுஎண்ணிக்கையில் விடுபட்டுப் போன நூறாவது படம்நான் உடனே அதை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் சென்றேன்.
காணோம் காணோம்ன்னு தேடிட்டிருந்தமேஅது இங்க கெடக்குது பாருடா” என்றபடி சீனுவிடம் காட்டினேன்சீனு அதை வாங்கி குமாரசாமிக்குக் காட்டினான்குமாரசாமி டீத்தம்ளர்களோடு சமையலறையிலிருந்து வந்த அம்மாவிடம் காட்டினான்அம்மா  அந்தப் படத்தை வாங்கிபுதுசாகப் பார்ப்பதுபோல நீண்ட நேரம் பார்த்தார்அவர் கண்கள் சில கணங்கள் தளும்பி அடங்கினபிறகு மெல்ல புன்னகைத்தபடி “இந்தப் படத்த நீயே வச்சிக்கஎப்பவும் ஒன்கிட்டயே இருக்கட்டும்” என்று என்னிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.

(அம்ருதா – பிப்ரவரி 2015 இதழில் வெளிவந்த சிறுகதை)