‘மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன. சண்டை
போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்கின்றன’ என்னும் வாக்கியத்திலிருந்து தல்ஸ்தோயின் ‘அன்னா கரினினா’ நாவல் தொடங்குகிறது. இது குடும்பத்துக்கு மட்டுமல்ல, எல்லா அமைப்புகளுக்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மை. முக்கியமாக மதம். ஒவ்வொரு மதமும் மோதலுக்கான காரணத்துக்காகக் காத்திருக்கிறது. நெருக்கடி மிகுந்த நவீன வாழ்வில் பொருளாதாரம், அரசியல், வசிப்பிடம், சமூகம், குடும்பம், தேசம், பாலியல், தன்னலம் எனப் பல்வேறு காரணங்களால் தனிமனிதனின் மனத்திலும் சமூக மனத்திலும் வன்முறை சிறுகச்சிறுக உருவாகி வளர்ந்து பெருகிப் பொங்கியபடி இருக்கிறது. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் இந்த வன்முறை மோதலாக உடனடியாக வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் பெருகி வரும் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மதமோதல்களுக்கும் கலவரங்களுக்கும் கூடுதலான முக்கியத்துவத்தை வழங்குகின்றன. அவ்வப்போது நிகழும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் தற்கொலைப்படைத் தாக்குதல்களும் அந்த முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க செய்கின்றன. இதன் விளைவாகத் தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் மதத்தின்மீது, தீவிரவாத முத்திரை விழுந்துவிட்டது. இதில் திரைப்படங்களின் பங்கு ஒரு முக்கியமான அம்சம். திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்க்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகளில் எல்லாத் திரைப்படங்களிலும் தீவிரவாதிகளை முஸ்லிம் பிரிவினராகத் தொடர்ச்சியாகச் சித்தரிப்பதன் வழியாக, முஸ்லிம்கள்மீது தீவிரவாத முத்திரை அழுத்தமாகவே விழுந்துவிட்ட சூழலில் நாம் வசிக்கிறோம். தம்மிடையே வாழும் முஸ்லிம்களை அவநம்பிக்கையோடும் கசப்போடும் பார்க்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Wednesday, 26 October 2016
Tuesday, 25 October 2016
ஒரு புதிய மனிதனின் கதை - ( புத்தக அறிமுகம் )
விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய
சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில்
எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள்
ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால் அந்தப் பள்ளி செயல்படாத
பள்ளியாகவே இருக்கிறது. அந்தச் சூழலில் சுகவனம் என்னும் இளைஞர் பயிற்சி பெற்ற ஆசிரியராக
அந்தப் பள்ளிக்கு வருகிறார். மாணவமாணவிகளுக்கு பேச்சில் இருக்கிற ஆர்வம் படிப்பதிலோ
எழுதுவதிலோ இல்லை. வகுப்பறை எப்போதும் சத்தமாகவே இருக்கிறது. அவர்களுக்கு எப்படி கற்பிப்பது
என்பது தெரியாமல் தொடக்கத்தில் திணறும் சுகவனம், இக்கட்டான ஒரு தருணத்தில் தானாகவே
ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.
ஒரு புதிய வழிமுறை - தமிழகக் கோட்டைகள் - ( நூல் அறிமுகம் )
மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று
திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே
கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகிவிட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும்
பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில்
மற்ற அரசுகளின் மதிப்பில் கெளரவத்துக்குரிய தோற்றத்தைச் சம்பாதித்துக்கொள்கிறது.
அரசகுல வரலாற்றில் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதும் ஒருவர் கோட்டையை இன்னொருவர் இடிப்பதும்
மாறிமாறி நிகழ்ந்திருக்கிறது. சிலர் இயற்கையாகவே உள்ள மலையரண்களை தமக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொண்டு கோட்டைகளை எழுப்பினார்கள். சமவெளிப்பிரதேசத்தில் அரசாண்டவர்கள்
புதிய கோட்டையை தமக்கு விருப்பமான வகையில் வடிவமைத்துக்கொண்டார்கள். எல்லாமே வெற்றியின்
அடையாளங்கள்.
சுடர்மிகுந்த வரிகள் - (கட்டுரை)
புத்தகக்கடைகளுக்குச் சென்று
திரும்பும் ஒவ்வொருமுறையும் ஒருசில கவிதைத்தொகுதிகளை விருப்பத்தோடு வாங்குவது என் வழக்கம்.
கவிதைகள் எப்போதும் என் விருப்பத்துக்குரிய உலகம். அசைபோட்டபடி நடப்பதற்கு கவிதைவரிபோன்ற
உற்ற துணை உலகத்திலேயே இல்லை என்று நினைப்பவன் நான். புதியவர்களின் கவிதைத்தொகுதிகளை
விருப்பத்துடன் படிப்பதுமட்டுமன்றி, அவற்றைப்பற்றி ஒருசில வரிகளையாவது என் குறிப்பேட்டில்
குறித்துக்கொள்வதையும் ஒரு பழக்கமாகக் கடைபிடித்து வருகிறேன். நாற்பது, ஐம்பது கவிதைகள்
கொண்ட ஒரு தொகுதியில் பத்து கவிதைகள் சிறப்பானவையாக இருந்தால் போதும், அதை ஒரு நல்ல
தொகுதி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஐந்து கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு
கிடைத்தால், அதை ஒரு நல்ல முயற்சி என்றும் சொல்வேன். அதைக்கூட என் வாசிப்பில் கண்டுபிடிக்க
முடியாமல் போகிற நிலையில்தான் என் மனம் ஏமாற்றமடைகிறது. கவிதை பற்றிய ஒரு தெளிவு கவிஞர்களிடம்
இல்லை என்பதை அவர்களுடைய வரிகள் உணர்த்திவிடுகின்றன.
Monday, 24 October 2016
வண்ணதாசனுக்கு வணக்கம் - (கட்டுரை)
எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை
முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன்.
பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும்
ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன்.
எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம் இருந்தது. நேரம் கிட்டும்
போதெல்லாம் அந்த நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகருடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது.
அவருக்குத் தேவையான சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொடுத்ததால் அவர் எனக்குச் சில சலுகைகள்
கொடுத்திருந்தார். அறைக்குள் தாங்கிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த
புத்தகங்களைத் தொட்டுப் புரட்டலாம். எடுத்துக்கொண்டு வந்து அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம்.
உறுப்பினராக இல்லாத எனக்கு அது பெரிய சலுகை.
சத்யஜித்ரேயின் சிறுகதைகள் - (புத்தக அறிமுகம்)
சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர
கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும்
பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான
சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு
சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர
நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில்
ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் ஆண்டில் ஏதோ ஓர் ஆர்வம் உந்த தன் நாற்பதாவது வயதில்
சத்யஜித்ரே தன் நண்பரொருவருடன் சேர்ந்து நின்றுபோயிருந்த சந்தேஷ் இதழுக்குப் புத்துயிரூட்டத்
தொடங்கினார். இதழில் தன் பங்களிப்பாக சில படைப்புகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்
சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகளை தொடர்ந்து எழுதினார். சிறுவர்களுக்கானவை என்பதால்,
சுவாரசியத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய புதிய பின்னணியில் கற்பனை வளத்தோடு எழுதினார்
ரே. தன் திரைப்படங்களின் வழியாக அவர் ஒரு தவிர்க்கப்பட
முடியாத இந்திய ஆளுமையாக வளர்ந்த பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவருடைய சந்தேஷ்
சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வெளிவரத்தொடங்கின. பிறகு புத்தகமாகவும்
தொகுக்கப்பட்டு வெளிவந்தது.
Labels:
சத்யஜித் ரே,
சந்தேஷ்,
பாவண்ணன்,
மொழிபெயர்ப்பு
Sunday, 16 October 2016
அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள் - (புத்தக அறிமுகம்)
தமிழகத்தில் பிறந்திருந்தாலும்
இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்
ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி,
இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக கொலராடோ பல்கலைக்கழகத்தில் இணைந்து, அங்கேயே சில
ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒஹையா பல்கலைக்கழகத்தில்
பதினான்கு ஆண்டுகளாக நீரியல் வள மேலாண்மைத்துறையின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பும்
அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிறுகதைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
அவருடைய சிறுகதைத்தொகுதிக்கு, இவ்வாண்டுக்குரிய இயல் விருது கிடைத்துள்ளது.
Sunday, 9 October 2016
வள்ளல் - (சிறுகதை)
“இன்னைக்காவது எம்ஜியாரு வருவாராடா?”
என்று கிண்டலான குரலில் பன்னீர் கேட்டதுமே தங்கமணிக்குக் கோபம் வந்தது. அவனும் ரங்கசாமியும்
அப்போது தண்டவாளத்துக்கு இரண்டு பக்கமும் ஊஞ்சல்போல தொங்கிக்கொண்டிருந்த லெவல் கிராஸிங்
தடுப்புச்சங்கிலிகளில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். பன்னீரின் வார்த்தைகளை
கொஞ்சம்கூட கவனிக்காதவன்போல சின்னச்சின்ன கற்களாக தேடியெடுத்து தண்டவாளத்தின்மீது வைப்பதிலேயே கண்ணும்கருத்துமாக
இருந்தான் தங்கமணி. “உங்கிட்டதான்டா கேக்கறன்
செவுடா? காதுல என்ன பஞ்சியா வச்சி அடச்சிருக்குது?” என்று மறுபடியும் கேட்டுவிட்டுச்
சிரித்தான் பன்னீர்.
Labels:
அம்ருதா,
தமிழ்ச்சிறுகதை,
பாவண்ணன்
Subscribe to:
Posts (Atom)