இலட்சுமிபுரத்தையும்
இந்திரா நகரையும் ஒரு பூங்காதான் இணைக்கிறது அல்லது பிரிக்கிறது என்று
சொல்லவேண்டும். புல்தரை இல்லாத ரொம்பவும் வறட்சியான பூங்கா. சுற்றுச்சுவரையொட்டி
ஆறேழு மரங்கள். சுற்றுப் பாதையையொட்டி பத்து சிமெண்ட் பெஞ்சுகள். அவற்றில் மூன்று
பெஞ்சுகளுக்கு முதுகு கிடையாது. சிலுவைபோல வெறும் கம்பிகள்மட்டுமே
நீட்டிக்கொண்டிருக்கும். இரண்டு பெஞ்சுகள் பொக்கையும் பொறையுமாக இருக்கும்.
அவற்றில் உட்கார்வது எளிது. எழுந்திருக்கும்போது கவனமாக இல்லையென்றால் எங்கேயாவது
சிக்கிக்கொள்ளும் புடவையோ வேட்டியோ கிழிந்துபோவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூன்று
பெஞ்சுகள் கால் உடைந்தவை. ஏதாவது ஒரு கால் உடைந்து ஒரு பக்கமாகச்
சாய்ந்திருக்கும். செங்கற்களாலும் சின்னச்சின்ன மரக்கட்டைகளாலும் முட்டுக்கொடுத்து
ஓரளவு நிறுத்தப்பட்ட அந்தப் பெஞ்சுகளில் உட்கார்வதற்கு சற்றே சாமர்த்தியம்
வேண்டும். முழு எடையையும் தாங்குமா என்று ஒரு கணம் முழுக்கப் பரிசோதனை செய்து
பார்த்துவிட்டுத்தான் உட்காரவேண்டும். கவனமில்லாமல் எங்கேயாவது வேடிக்கை
பார்த்தபடியோ அல்லது யாருடனாவது சுவாரஸ்யத்தோடு உரையாடியபடியோ உட்கார்பவர்கள்
நிலைகுலைந்து தடுமாறி விழுவது உறுதி. மிச்சமிருக்கும் ஒரேஒரு பெஞ்சுமட்டும்
மழமழவென்று குளிர்ச்சியாக ஒரு மரமல்லியின் கீழே இருக்கும். ஆனால் எல்லாச்
சமயங்களிலும் அதில் காவல்காரத் தாத்தாதான் உட்கார்ந்திருப்பார். அவர்
இல்லாவிட்டாலும் அவருடைய அடையாளமாக போர்வையோ அல்லது துணிமணிகளோ அதன்மீது அவர்
இருப்பைப் புலப்படுத்தியபடி விரிக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த இருக்கையில்
அமரும் வாய்ப்பு பொதுமக்களுக்குக்
கிடைப்பது அரிது.
சலசலப்புக்குக்
குறைவில்லாத அந்தப் பூங்காவுக்கு எப்படியோ ஏபிசிடி பூங்கா என்ற பெயர்
உருவாகியிருந்தது. பூங்காவின் ஒரு பக்கத்தில் ஏபிசிடி என்னும் ஆங்கில எழுத்துகளின்
வடிவில் வளைத்து இரும்புக் குழாய்களால் உருவாக்கப்பட்ட உயரமான விளையாட்டு ஏணிகள்
தள்ளித்தள்ளி நிற்கும் காரணத்தால் அப்படி ஒரு பெயரை யாரோ முதன்முதலாகச் சூட்டி
அழைக்க,
பிறகு அதுவே நின்று நிலைத்துவிட்டது. எல்லாச் சமயங்களிலும்
ஒரு பத்துக் குழந்தைகள் அந்த ஏணியில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும். அருகில் இரண்டு
சறுக்கு மரங்களும் இரண்டு ஊஞ்சல்களும் உண்டு. இரண்டுக்கும் கீழே அரையடி
ஆழத்துக்குப் பள்ளம் காணப்படும். அடிபடுவதற்கு ஐம்பது சதவீதம் வாய்ப்புகள்
எப்போதும் உள்ள அந்த ஊஞ்சல்களிலும் சறுக்குமரங்களிலும்கூட ஆட பிள்ளைகளிடையே போட்டி
இருக்கும்.
சந்தடி மிகுந்த அந்தப்
பூங்காவில்தான் கடந்த பதினாறு ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் படிப்பதையும்
எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நிழல் தங்கியிருக்கிற ஏதாவது ஒரு மரத்தடியை என்னுடைய இடமாகத்
தேர்ந்தெடுத்துக்கொள்வேன். என் வேலையில் மூழ்கியிருக்கும்போது திடீரென
"அங்கிள் அங்கிள்" என்று சில குரல்கள் அழைக்கும். நிமிர்ந்து
பார்ப்பதற்குள் பூங்காவின் வேறொரு பக்கத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும்
சிறுவர்களின் பந்து என்னைநோக்கி உருண்டுவரும். அதை எடுத்துப் போடச் சொல்லித்தான்
அக்குரல்கள் அவசரமாக அழைக்கும். நானும் எடுத்துப் போட்டுவிட்டு மீண்டும் என்
வேலையில் மூழ்கிவிடுவேன். சில சமயங்களில் எந்தக் காரணமும் இல்லாமலேயே
"அங்கிள் அங்கிள்.." என்று சில குரல்கள் அழைக்கும். குழப்பத்துடன்
நிமிர்ந்து பார்க்கும்போது "ஹெள ஆர் யூ அங்கிள்?" என்று மிகவும் உரிமையோடும் அக்கறையோடும் ஒரு குழந்தை கேட்கும். சில குழந்தைகள்
"டைம் எஷ்டாயித்து அங்கிள்?"
என்று கேட்கும். சில குழந்தைகள் "தண்ணிபாட்டில்
வச்சிருக்கிங்களா அங்கிள்?" என்று தயங்கித்தயங்கி கேட்கும். இன்னும் சில குழந்தைகள் உண்மையாகவோ அல்லது
வேடிக்கைக்காகவோ அருகில் நெருங்கி வந்து "க்ளாட் டு மீட் யு
அங்கிள்" என்று புன்னகைத்தபடி
பிஞ்சுக்கையை நீட்டும். அப்புன்னகையில் மனம் பறிகொடுக்காமல் இருக்கமுடியாது. வேறு
சில பிள்ளைகள் கையசைத்து விடைபெற்றுவிட்டுப் போகும். இப்படி பிள்ளைகளோடு
எதிர்பாராத விதமாக ஏற்படுகிற அனுபவங்கள் தினந்தினமும் புதுசுபுதுசாக இருக்கும்.
அவர்களுடைய பெயர்கள்
சரியாகத் தெரிவதில்லை என்றாலும் அக்குழந்தைகளோடு எனக்கு நல்ல உறவு இருந்தது.
அவர்கள் முகங்களில்தான் எவ்வளவு உற்சாகம். எவ்வளவு ஆனந்தம். பரபரப்புக்கும் துடிப்புக்கும்
சுறுசுறுப்புக்கும் பஞ்சமே கிடையாது. எப்போதும் ஓயாத சிரிப்புதான். "சின்னஞ்சிறிய குருவி - அது ஜில்லென்று
விண்ணிடை ஊசலிட்டேகும்" என்னும்
பாரதியாரின் கவிதைவரிதான் அக்குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் மனத்திலெழும்.
உண்மையிலேயே அக்குழந்தைகள் குருவிகளைப்போல அங்குமிங்கும் பறந்தபடியேதான்
இருப்பார்கள்.
ஒருநாள் ஏதோ
எழுதிக்கொண்டே இருந்தேன். பூங்காவுக்குள் நுழைந்த ஓர் இளைஞனும் இளம்பெண்ணும்
என்னைப் பார்த்துக்கொண்டே மூலையில் இருக்கிற பெஞ்சைநோக்கிச் சென்றார்கள். அங்கே
உட்கார்ந்த பிறகும் அந்த இளைஞன் என்னைக்காட்டி அவளிடம் எதையோ சொல்வதுபோலத் தெரிந்தது.
அந்த நடவடிக்கையால் என் எழுத்துவேகம் தடைப்பட்டுவிட அவர்களுடைய உரையாடலைக்
கவனிக்கத் தொடங்கினேன். கூச்சமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அக்கணத்தில் அந்த
மனவேகத்தைத் தடுக்க இயலவில்லை.
"இந்த அங்கிள் எவ்வளவு காலமா இங்க வந்து படிக்கறாரு தெரியுமா? நான்,
மனோ, சிவா எல்லாம்
மூணாங்கிளாஸோ நாலாங்கிளாஸோ படிக்கும்போது இங்க வந்துதான் பந்து விளையாடுவோம்.
அப்பப்ப பந்து அவர் பக்கமா ஓடிப்போயிடும். அங்கிள்னு ஒரு குரல் கொடுத்தா போதும்.
எடுத்துப் போட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பாரு. ஒருநாளும் எங்கள திட்டனதில்லை
தெரியுமா?
ரொம்ப நல்ல அங்கிள்."
கூட இருந்தவள் காதலியா
மனைவியா என்று தெரியவல்லை. விழிகள் விரிய அவள் என்னையே ஏதோ ஒரு புராதானத்துச்
சிற்பத்தைப் பார்ப்பதைப்போல உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். சட்டென்று என்
பார்வையை விலக்கி என் வேலையில் மூழ்கினேன். அவன் வார்த்தைகள் மீண்டும்மீண்டும்
மனத்தில் ஒலித்து ஒருவித நெகிழ்ச்சியை உருவாக்கியது. ஒருகணம் அவன் என்னை நெருங்கி
"அங்கிள்" என்று சொல்லி கைகுலுக்குவான் என்று தோன்றியது.
சிறிது நேரத்துக்குப்
பிறகு எனக்கு அருகிலேயே இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் வேறொரு இளைஞனும்
இளம்பெண்ணும் வந்து அமர்ந்தார்கள். இருவரும் தனித்தனி வாகனங்களில்
வந்திருப்பார்கள் என்று தோன்றியது. இருவரிடமும் தனித்தனி தலைக்கவசம் இருந்தது. தன்
தலைக்கவசத்தை பெஞ்சின் நடுவே வைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்தார்கள்.
கவசத்தை எடுத்ததால் கலைந்துபோன தலைமுடியை இருவருமே சரிப்படுத்திக்கொண்டார்கள்.
அப்பெண் அதற்கென்றே மிகச்சிறிய கண்ணாடியொன்றை தன் கைப்பையிலிருந்து எடுத்தாள்.
உடனே அதை வாங்கி ஆசையோடு திருப்பித்திருப்பிப் பார்த்தான் அவன். அவள் எதிரிலேயே
அக்கண்ணாடியின்மீது உதடு பதித்து முத்தமிட்டான். தன் உதட்டின்மீதே
முத்தமிட்டுவிட்டதைப்போன்ற ஒரு பதற்றத்தோடு அவள் சீ என்று வெட்கம் படர
ஆனந்தத்துடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு கண்ணாடியை வாங்க கையை நீட்டினாள். அவள்
எட்டித் தொடமுடியாதபடி அவன் கையை வேறு திசையில் திருப்பினான். எதிர்பாராத ஒரு
கணத்தில் மறுபடியும் அக்கண்ணாடிக்கு முத்தமிட்டான். அவளுடைய கூச்சமும் பதற்றமும்
உச்சத்துக்குப் போயின. "கொடுக்கறியா
இல்லையா இப்ப" என குரல் எழுந்துவிடாதபடி கெஞ்சினாள். அவன் கையிலிருப்பதைப்
பறிப்பதற்காக எழுந்து நின்று அவன் கையை மடக்கினாள். வேண்டுமென்றே அவன் இன்னொருதரம் அக்கண்ணாடிக்கு
முத்தமிட்டுவிட்டு திருப்பித் தந்தான். அவள் சட்டென அதை தன் கைப்பைக்குள் போட்டு
மூடினாள். "இருஇரு. உன் பைக்குள்ள
இன்னும் என்னென்ன புதையல் இருக்குது பார்ப்போம்" என்று அவன் எட்டிப் பார்ப்பதற்குள் பை மூடப்பட்டுவிட்டது.
எதையோ யோசிப்பதுபோல
குனிந்த வாக்கில் அவள் தன் கையை தலைக்கவசத்தின்மீது வைத்தாள். அவன் அக்கையை
எடுத்து தன் கைக்குள் வைத்துத் தடவிக்கொடுத்தான். அவள் விரலில் இருந்த மோதிரத்தைக்
கழற்றி வேறொரு விரலில் போட்டுவிட்டான். பிறகு தன்னுடைய விரலில் இருந்த மோதிரத்தைக்
கழற்றி அவள் விரலில் போட முயற்சி செய்தான். அவளுடைய கையின் ஐந்து விரல்களுக்கும்
பொருத்தமில்லாமல் அது அகலமாக இருந்தது. அவளுடைய விரலின் மெலிவைச் சுட்டிக்காட்டி
அவன் நகைச்சுவையாக என்னமோ சொன்னான். அவள் தன் துப்பட்டாவைச் சரிப்படுத்தியபடி அவனை
அடிப்பதற்கு கையை ஓங்கினாள். அடியிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்கிய அவன்
தடுமாறி பெஞ்சின் சமநிலை குலைந்ததால் கீழே சரிந்தான்.
எதிர்பாராமல் விழுந்துவிட்ட அவன் கோலத்தைக் கண்டு
அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவள் சிரிப்பு
பல நொடிகள் நீடித்தன. கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும் அளவுக்கு அவளுடைய சிரிப்பு
இருந்தது. முதலில் அவனும் சிரிக்கவே செய்தான். என்றாலும் அவளுடைய தொடர்ச்சிரிப்பு
அவனை ஏதோ ஒரு விதத்தில் பாதித்துவிட்டதைப்போல இருந்தது. முகம் சுண்டியவனாக மண்ணை
உதறிக்கொண்டு எழுந்து சரியாகப் பார்த்து உட்கார்ந்தான். முகம் சட்டென
இருண்டுவிட்டது. அவன் முகமாற்றத்தைச் சரியாகக் கவனிக்காதவளாக அவனுடைய தோளைத்
தட்டித்தட்டி "எப்படி எப்படி?" என்று அவன் விழுந்துகிடந்த கோலத்தை நடித்துக்காட்டி மீண்டும்மீண்டும்
சிரிக்கத் தொடங்கினாள். சிரிப்பின் முடிவாக அவள் தன் கையை அவனுடைய தோளில்
வைத்தபோது சட்டென அக்கையை வேகமாக
உதறிவிட்டான் அவன். அக்கணத்தில்தான் அவள் சிரிப்பு நின்றது. அதிர்ச்சியிலும்
அச்சத்திலும் அவள் முகம் சட்டென வாடியது.
"என்னப்பா என்னப்பா" என்று அவன் முகத்தைத் திருப்ப அவள் படாதபாடு
பட்டாள். அவனோ உறுதியாக் குனிந்த தலை நிமிராமல் அவளை ஏறிட்டுப் பார்க்க
விரும்பாதவனைப்போல உட்கார்ந்திருந்தான். அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
ஒருவித இயலாமையோடும் கவலையோடும் அவனையே ஒரு கணம் பார்த்தாள். பிறகு
வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு அவனை நெருங்கி குனிந்திருக்கும் அவன் உச்சந்தலையில்
விரல்களைவிட்டு முடியைக் கலைத்தாள். அவளுடைய விரல் தன்மீது பட்டுவிடாதபடி குனிந்த
நிலையிலேயே நழுவிநழுவி விலகினான் அவன். சில கணங்கள் அவனையே வெறித்துப்
பார்த்தவிட்டு அமைதியாக தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தாள். தனக்கும் யாரோடும் பேச
விருப்பமில்லாததைப்போல அவளும் தலைகுனிந்தவாறு
மெளனம் காத்தாள்.
அந்த மெளனம் அவர்களைவிட
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு வேதனையாக இருந்தது. என்ன பிள்ளைகள் இவர்கள் என்று
சலிப்பாகவும் இருந்தது. விளையாட்டை
வினையாக்கிக்கொண்டு எதிரிகள்போல எவ்வளவு நேரம்தான் இப்படி அமர்ந்திருக்கப்
போகிறார்களோ என்ற வருத்தத்தில் பெருமூச்செழுந்தது.
ஏறத்தாழ பத்து நிமிடங்கள்
வரைக்கும்கூட அவர்களிடையே எந்தவிதமான பேச்சுமில்லை. இரண்டு தலைக்கவசங்களும்
இடையில் சாட்சியாக இருக்க ஆளுக்கொரு பக்கம் மெளனமாக தலைகுனிந்திருந்தார்கள். அவள்
இடைவிடாமல் தன் துப்பாட்டாவின் நுனியில் முடிச்சுப் போடுவதும் அவிழ்ப்பதுமாக
இருந்தாள். அவன் தன் கைக்கடிகாரத்தை அவிழ்ப்பதும் போடுவதுமாக இருந்தான். இருவருடைய
பார்வையும் தரைமீதே படிந்திருந்தது.
எதிர்பாராதவிதமாக அவன் சட்டென பெஞ்சிலிருந்து எழுந்தான்.
அவளைப் பார்க்காமலேயே பூங்காவுக்குள் இருந்த நடைவட்டப் பாதையில் நடக்கத்
தொடங்கினான். கைக்கு எட்டிய ஏதோ ஒரு செடியிலிருந்து நாலைந்து இலைகளை உருவி
ஒவ்வொன்றாக கிழித்தெறிந்தபடி நடந்தான். நடந்து செல்பவனுடைய முதுகுப்பக்கத்தை
நிமிர்ந்து பார்த்தாள் அப்பெண். எங்காவது ஒரு புள்ளியில் நின்று அவன் தன்னை
அழைக்கக்கூடும் என்று அவள் எதிர்பார்த்ததைப்போல இருந்தது. அவன் திரும்பவே இல்லை.
ஒரு மூலைவரை சென்று பிறகு தலைகுனிந்தவாக்கிலேயே திரும்பி வந்து அதே இடத்தில்
உட்கார்ந்தான். சட்டென அவளும் வேகம் கொண்டவளைப்போல எழுந்து வேறொரு திசையில்
நடக்கத் தொடங்கினாள் . அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறிதுதொலைவு
செல்லும்வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அதற்குப் பிறகும் அவனால்
கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. "லலிதா லலிதா" என்று அவள் பெயரைச்
சொல்லி அழைத்தான். இப்போது வருத்தமும் வாட்டமும் அகன்று அவன் முகத்துக்கு
சிரிப்புக்களை வந்துவிட்டது. சிரிப்போடு மறுபடியும் பெயர் சொல்லி அழைத்தான். அவளோ
திரும்பிப்பார்க்காமலேயே நடந்தாள். எதிர்விளிம்புவரை சென்று கைக்குக் கிடைத்த
குச்சியொன்றோடு திரும்பினாள். அக்குச்சியாலேயே கண்ணில் பட்ட செடி, கொடி,
பெஞ்சு, கல், குரோட்டன்கள், மரம் எல்லாவற்றுக்கும்
ஒரு அடி கொடுத்தபடி வந்தாள். எதுவுமே இல்லாத இடங்களில் காற்றில் விர்விர்ரென்று
வீசினாள். பெஞ்சை நெருங்கியதும் குச்சியை கீழே எறிந்துவிட்டு தலைகுனிந்தவாக்கில்
உட்கார்ந்தாள்.
இருவருடைய நிலையையும்
பார்க்க பரிதாபமாக இருந்தது. இருவரும் அக்கணமே பேசி ஒன்றுபட்டுவிட வேண்டும் என்று
மனதார நினைத்துக்கொண்டேன். இப்போது அவன் அவளை பெயர் சொல்லி அழைத்தபடி
நெருங்கினான். அவள் பேசாமல் தலைக்கவசத்தின்மீது கையை உறுதியாக ஊன்றியபடி
அமர்ந்திருந்தாள். அவளுடைய கையை வருடிவிட முனைந்தான் அவன். லாவகமாக அவன்
பிடியிலிருந்து நழுவிய அவள் மறுபடியும் அந்த இடத்திலிருந்து எழுந்தாள். வேறொரு
திசையை நோக்கி நடந்தாள். "நான்
சொல்றத கேளும்மா" என்று இறைஞ்சியபடி
அவளைத் தொடர்ந்து நடந்தான் அவன். இருவருடைய தலைக்கவசங்களும் அந்தப் பெஞ்சில்
இருந்தன.
நடந்துநடந்து கிட்டத்தட்ட
பூங்காவின் வாசல்படியை நெருங்கிவிட்டாள் அவள். அவளைத் தடுத்து நிறுத்தி அவன் எதையோ
சொல்வதைப்போலத் தெரிந்தது. அப்போதும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வேறு ஏதோ
திசையைப் பார்த்தபடி நின்றிருந்தாள். ஒரு மெளனப்படத்தின் காட்சியைப்போல அவர்கள்
நிற்கும் கோலம் கண்ணுக்குத் தெரிந்தது. ஐந்தாறு நிமிட உரையாடல்களுக்குப் பிறகு
அவள் வெளியேறுவதையும் அவன் பின்தொடர்ந்து செல்வதையும் பார்க்கமுடிந்தது. ஐயோ, தலைக்கவசங்களை மறந்துவிட்டுப் போகிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்.
மறந்துவிட்டுப் போகிற அளவுக்கு அது ஒன்றும் சாதாரணப் பொருளல்ல என்பதால்
திரும்பவும் வருவார்கள் என்று உறுதியாக நம்பினேன். வாசலில் நடந்த உரையாடலால்
அல்லது வாசலைக் கடந்து சென்றபோது நடந்த
உரையாடலால் அவர்களுடைய ஊடல் தணிந்திருக்கும் என்றும் வெளியே தேநீரோ அல்லது
பழச்சாறோ அருந்திவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர அவர்கள் எக்கணமும்
வந்துவிடக்கூடும் என்பது என் எண்ணமாக இருந்தது.
அவர்களால் சிதறிப்போன
கவனத்தை மீண்டும் ஒருமுகப்படுத்தி படிப்பதில் ஈடுபட்டேன். ஏறத்தாழ ஒருமணிநேரம்
கடந்த பிறகும் அவர்கள் வரவில்லை. என் கவனம் மறுபடியும் சிதறியது. வாசலையும்
பெஞ்சையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டேன். அற்பமான ஒரு விஷயத்துக்காக இப்படி
முறுக்கிக்கொண்டு போய்விட்டார்களே என்று நினைத்தபோது கவலையாக இருந்தது. அந்தத்
தலைக்கவசங்களைப் பார்க்கப்பார்க்க என் கவலை இன்னும் பல மடங்காகப் பெருகியது. யாரோ
அந்தத் தலைக்கவசங்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளும்படி என்னிடம்
சொல்லிவிட்டுச் சென்றதைப்போல அவற்றுக்குக் காவலிருக்கத் தொடங்கினேன்.
கிட்டத்தட்ட உச்சிக்கு
வந்துவிட்டது பொழுது. பசி வேளையும் நெருங்கிவிட்டது. ஏ,பி,சி,டி என ஒவ்வொரு எழுத்திலிருந்தும் இறங்கிவந்த பிள்ளைகள் வீட்டுக்கு ஓடினார்கள்.
பெஞ்சுகளிலும் நிழலோரங்களிலும் அமர்ந்திருந்தவர்கள்கூட ஒவ்வொருவராக எழுந்து
வெளியேறத் தொடங்கியிருந்தார்கள். என்னைச் சுட்டிக்காட்டி தமக்குள் பேசியவாறு
பூங்காவுக்கள் அமர்ந்திருந்த இளஞ்சோடி கிளம்பிப்போனதைக்கூட என்னால் சரியாகக்
கவனிக்கமுடியவில்லை. மதிய உறக்கத்துக்காக உள்ளே வந்து சிலர் இடங்களை
ஆக்கிரமித்துக்கொண்டு துண்டுவிரித்தார்கள். யாரோ ஒருவர் இழுத்த பீடியின் மணம்
காற்றில் மிதந்துவந்து கடுமையாகத் தாக்கியது. எதிர்பாராத விதமாக மரத்தின்
உச்சியிலிருந்து விர்ரென்று இறங்கிவந்த குருவியொன்று அந்தத் தலைக்கவசத்தின்மீது
அமர்ந்து வாலாட்டியபடி அந்தப்பக்கமும் இந்தப் பக்கமுமாக மாறிமாறிப் பார்த்தது.
கரிய நிறம். கழுத்தில்மட்டும் கோடு
இழுத்ததுபோல மஞ்சள். கண்களின் ஓரத்திலும் சின்ன மஞ்சள் பொட்டு காணப்பட்டது.
வாலின் அடிப்பகுதியிலும் கொஞ்சமாக மஞ்சள் வரிவரியாக ஓடியிருந்தது. ஏதோ
நலம்விசாரிக்க வந்ததைப்போல டுவ்வி டுவ்வி என்று நாலு பக்கமும் பார்த்து கூவிவிட்டு
அடுத்த தலைக்கவசத்தின்மேல் சுதந்திரமாகத் தாவி உட்கார்ந்தது. சிறிது நேரத்துக்குப்
பிறகு குருவி மீண்டும் மரத்தைநோக்கித் தாவிவிட்டது.
இன்னும் அந்தப் பிள்ளைகள்
வரவில்லை. எழுந்து போகலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. தலைக்கவசங்களையே
பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். பசியை இன்னும் ஓர் அரைமணிநேரம் தாங்கிக்கொள்ள முடியும்
என்று தோன்றியது. அதுவரை பார்த்திருந்துவிட்டு செல்லலாம் என்று நானே ஒரு திட்டத்தை
வகுத்துக்கொண்டேன். "அதுக்குள்ள வந்துருங்க பிள்ளைங்களா" என்று காற்றில்
அவர்களைநோக்கி ஒரு செய்தியை அனுப்பிவிட்டு வாசல்பக்கமாகப்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்துக்குப்
பிறகு ஆறேழு இளைஞர்கள் ஆர்ப்பா¡ட்டமான குரல்களுடன்
பூங்காவுக்குள் நுழைந்தார்கள். சமீபத்திய திரைப்படப் பாடலொன்றை ஒருவன் உச்ச
ஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தான். அவனுக்குப் பின்பாட்டைப்போல மற்றவர்களும் அதையே
தொடர்ந்து பாடினார்கள். இரண்டுபேர்கள் தம் மேல்சட்டையைக் கழற்றி உருண்டையாக கையில்
சுற்றிவைத்திருந்தார்கள். உடற்பயிற்சியில் முறுக்கேறியிருந்த தசைப்பகுதியிலிருந்து
வேர்வை கோடாக அடிவயிற்றைநோக்கி பாய்ந்துகொண் டிருந்தது. சற்றே தொலைவிலிருந்து
பெஞ்சைநோக்கித்தான் அவர்கள் முதலில் போனார்கள். கும்பலாக அங்கேயே உட்கார்ந்து
உரத்த குரலில் அரட்டை அடித்தார்கள். ஆனந்தத்தில் உச்சத்துக்குப் போன ஒருவன் அதைக்
கொண்டாடுவதற்காக நடனமிடத் தொடங்கினான். தன்னுடைய மனத்துக்குகந்த திரைப்பட நாயகனின்
நடன அசைவுகளை அப்படியே கண்முன்னால் நிகழ்த்திக்காட்டுவதைப்போல இருந்தது அந்த
நடனம்.
எதிர்பாராத ஒரு கணத்தில்
அக்கும்பலிலிருந்து ஒருவன் விலகி தலைக்கவசங்கள் வைக்கப்பட்டிருந்த பெஞ்சைநோக்கி
வந்தபோது என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சட்டென்று எழுந்து நின்றேன். என்
உடலில் ஒருவித பதற்றம் படர்வதை என்னால் உணரமுடிந்தது. ஏதோ பந்தையெடுத்து
உருட்டுவதைப்போல அவன் அக்கவசங்களை எடுத்து மாற்றிமாற்றி உருட்டினான். து¡க்கிப்போட்டுப் பிடித்தான். "தம்பி தம்பி" என்று அழைத்தபடி நான்
வேகமாக அவனை நெருங்கினேன். விளையாட்டை நிறுத்திவிட்டு என் பக்கமாகப் பார்வையைத்
திருப்பினான் அவன்.
"அத அங்கயே வச்சிருங்க தம்பி."
"உங்களுதா?"
அவன் அலட்சியமாகக் கேட்டான். "ஒரே நேரத்துல ரெண்டு ஹெல்மெட் போட்டுக்குவிங்களா?" அவன் உதடுகளில் சிரிப்பு நெளிந்தது.
"என்னுடையதில்லை தம்பி, இங்க ரெண்டு பேரு
உக்கார்ந்திருந்தாங்க. இங்க வச்சிட்டு இப்பதான் வெளியே போயிருக்காங்க."
"உங்ககிட்ட சொல்லிட்டு போயிருக்காங்களா?"
"சொல்லலை,
ஆனா இப்ப வந்துருவாங்க."
"உங்களுடையதும் கெடையாது. உங்ககிட்ட பாத்துக்கச் சொல்லி யாரும் சொல்லிட்டும்
போகலை. அப்பறம் எதுக்கு சொத்தே பறிபோகறமாதிரி கவலைப்படறிங்க? பேசாம எழுந்து போங்க."
"இல்லப்பா,
சொன்னா கேளு, இப்ப வந்துருவாங்க."
"எங்க இருக்காங்க? காட்டுங்க."
"இங்கதான் இருந்தாங்கப்பா, வெளிய போயிருக்காங்க.
எந்த நேரத்திலும் வந்துரலாம்".
"வரட்டும்,
யார் வேணாம்னாங்க. வந்தா குடுத்துட்டு போறோம். நீங்க ஏன்
அதுக்குக் கவலைப்படறிங்க? நாங்க தொட்டா
தீட்டாயிடுமா?"
"அப்படியெல்லாம் இல்ல தம்பி, அடுத்தவங்க பொருளை
எதுக்கு தொடணும்னுதான் சொல்றேன்" என் வார்த்தைகள் தடுமாற்றத்தோடு ஒலிப்பதை
என்னால் உணரமுடிந்தது.
"தோ பார்டா காந்தி, ஊராமூட்டு சொத்துக்கு
காவல் காக்க வந்துட்டாரு, பேசாம எழுந்து வாய
மூடிகிட்டுப் போங்க சார்."
அவன் குரல் ஒரு
கட்டளையைப்போல ஒலித்தது. ஆனாலும் அப்படி அக்குரலுக்குக் கட்டுப்பட்டு எழுந்து
செல்ல மனமில்லாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். வைத்துவிட்டுச் சென்ற
இளம்பெண்ணும் இளைஞனும் திரும்பிவந்தால் இந்தத் தலைக்கவசங்கள் அவர்களுக்குச்
சொந்தமானவைதாம் என்று சாட்சி சொல்லி வாங்கித் தருவதற்காகவாவது நான் அங்கேயே
இருக்கவேண்டும் என்று உறுதியோடு உட்கார்ந்திருந்தேன். நொடிக்கொரு முறை பார்வையை
வாசலைநோக்கிப் படரவிட்டபடி அவர்கள் வரவுக்கு மெளனமாகக் காத்திருந்தேன். எந்த
அர்த்தமும் இல்லாமல் என் காத்திருப்பு வீணாகக் கழிந்தது. இடைப்பட்ட நேரத்தில்
அவர்கள் என்னையும் என்னுடைய அக்கறையையும் மிகவும் கேவலமான முறையில் சித்தரித்து
கிண்டலடித்து சிரித்தார்கள். ஒருவன்
திடீரென என்னைப்போலவே பேசிக்காட்டி மற்றவர்களைச் சிரிக்கவைத்தான். இன்னும் இருவர்
அந்தத் தலைக்கவசங்களை பந்துபோல ஒருவரைநோக்கி ஒருவர் து¡க்கிப்போட்டுப் பிடித்து விளையாடினார்கள். பொறுமையாக எல்லாவற்றையும் சகித்தபடி
வாசல் பக்கமாகவே பார்த்திருந்தேன்.
அந்தக் கூட்டம்
தலைக்கவசங்களோடு விளையாட்டைத் தொடர்ந்தபடியே எழுந்து நடக்கத் தொடங்கியது. தடுக்க
இயலாத சங்கடத்தோடு அவர்களையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரே
கும்மாளம். சிரிப்பு. கிண்டல், கேலி. பாட்டு.
நடனம். உறைந்த நிலையில் அக்காட்சியையே
பார்த்திருந்தபோது அளவற்ற கசப்பும் வேதனையும் நெஞ்சில் மண்டியது. துயர்மிகுந்த
அக்கணத்தில் சட்டென ஒரு குறுந்தொகை வரி மனத்தில் மிதந்துவந்தது. காதல் நோயைப்
பற்றிச் சொல்லும் வரிதான் அது. "கையில் ஊமன் காவல் காக்கும் வெண்ணெய்
உணங்கல்போல" என்று நீளும் அவ்வரியின் உவமை. ஆனால் அக்கணத்தில் என்னுடைய
நிலைக்கு மிகவும் பொருத்தமானதாகத் தோன்றியது. அடிப்படையிலேயே கையில்லாத ஒருவன்.
அக்குறையோடு வாய்ப்பேச்சும் வராத குறை. வெண்ணையைக் காவல் காக்க அவனால் எப்படி முடியும்
என்று ஒருவித இயலாமையைப் பதிவுசெய்கிறது அந்த உவமை. தலைக்கவசங்களைக் காக்கமுடியாத
என் இயலாமையும் கிட்டத்தட்ட அதற்கு இணையானதுதான் என்று நினைத்தபடி பூங்காவைவிட்டு
வெளியேறினேன்.