Home

Sunday, 25 March 2018

கோபால் மேஷ்ட்ரு - கட்டுரை



      "மேஷ்ட்ரு" என்னும் கன்னடச் சொல்லுக்கு ஆசிரியர் என்பது பொருள். கோபால் மேஷ்ட்ரு எனக்கு அறிமுகமாகும்போதே வேலையில் சேர்ந்திருந்தார். ஹோஸ்பெட் என்னும் ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு சிற்று¡ரில் அவர் பணிபுரியும் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கே அவர் கன்னட ஆசிரியர். அவர் தாய்மொழி மலையாளம். துங்கபத்ரா இரும்பு எஃகு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக மலப்புரத்திலிருந்து இடம்பெயர்ந்தவர் அவர் தந்தை.  அப்போது சிறுவனாக இருந்த கோபால் கன்னடப்பள்ளியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கி கன்னட ஆசிரியராகவே வேலைபார்க்கத் தொடங்கிவிட்டார். அவரது சகோதரர் விஜயன். அதே தொழிற்சாலையில் ஊழியராக இருந்தார். அவர்களுடைய வீட்டின் ஒரு பகுதியில்தான் நானும் என் மனைவியும் முதன்முதலாக வாடகைக்குக் குடிபுகுந்தோம்.

     சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஊருக்குத் திரும்பும் அன்று அவருடைய பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். சில கன்னடச் சொற்களுக்கான பொருளை அறிந்துகொள்வதற்காக நானும் அவர் வருகைக்காக் காத்திருப்பேன். துங்கபத்ரா கால்வாய் ஓரமாக நடந்தபடி இருவரும் பேசிக்கொண்டிருப்போம்.
     ஒரு ஞாயிறு அன்று அவர் மாலை நடைக்கு வரவில்லையென்று சொன்னார். பள்ளிப் பிள்ளைகள் எழுதியிருந்த பயிற்சி நோட்டுகளைத் திருத்தும் வேலை மிச்சமிருப்பதாகச் சொன்னார். கிட்டத்தட்ட இருநு¡று நோட்டுகள் அவரது மேசையின்மீது அடுக்கப்பட்டிருந்தன. எல்லாம் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்புப் பிள்ளைகள் எழுதியவை. என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அறியும் ஆவலில் பிரித்துப் படித்தேன். தேசத் தலைவர், பூங்கா, இன்பச்சுற்றுலா என்பதுபோன்ற கட்டுரைகள் இருக்கக்கூடும் என்று நினைத்திருந்த என் எண்ணப்போக்குக்கு மாறாக அவை கடிதங்களாக இருந்தன. அன்புள்ள அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்று தொடங்கும் கடிதங்கள்.
     "என்ன மேஷ்ட்ரே, புள்ளைகளுக்கு இதுதான்  பயிற்சியா?" ஆச்சரியம் தாங்காமல் கேட்டேன். அவர் "ஆமாம்" என்று தலையசைத்தார். உடனே நான் வேகவேகமாக  சில கடிதங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
     "அன்புள்ள அம்மாவுக்கு, வணக்கம். நான் இருக்கற ஊருல இப்ப மழ பெய்யுது. அங்கயும் மழ பெய்யுதா? மழத்தண்ணியில ஏரி ரொம்பிகெடக்குது. ஒரு பெரிய தாம்பாளத்தட்டுல பால ஊத்தி வச்சிமாதிரி இருக்குது ஏரி. மாமாவும்  அத்தையும் புதுத்தண்ணியில குளிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கரையில நின்னு வேடிக்க பாக்கறேன். ரொம்ப அழகா இருக்குது. மாடுங்க மேயறதுக்காகவே இங்க பெரிய பெரிய புல்லுக்காடு வளந்துகெடக்குது. இப்படிக்கு வணக்கத்துடன் கரியப்பா."
     "அன்புள்ள அம்மாவுக்கு, வீட்டில் அப்பா, அக்கா, அண்ணன், தம்பி எல்லாரும் எப்படி இருக்காங்க? அப்பா இன்னும் சாராயக்கடைக்கு போகிறாரா? ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கிவந்தாரா? கால் காயத்துக்கு கட்டு போட்டிருக்கிறாரா? கருப்புக்கோழி எப்படி உள்ளது? தினமும் முட்டை போடுதா? திடீர்திடீர்னு அது காணாம போயிடும். அதுக்காக நீங்க கவலப்படாதிங்க. வீட்டுக்குப் பின்னால மாமரத்துக்கு கீழ இருக்கற புதர்ல உக்காந்திட்டிருக்கும். புடிச்சிட்டு வந்துடுங்க. இப்படிக்கு ஸ்ரீலட்சுமி."
     "அன்புள்ள அம்மாவுக்கு, எப்படிம்மா இருக்கிங்க. எனக்கு இங்க மனசே சரியில்ல. அப்பா ரொம்ப கெட்டவரு. அவர் அன்னிக்கு ஒன்ன அடிச்சத என்னால மறக்கவே முடியலை. ஒரு தப்பும் செய்யாதவங்கள எதுக்கு அடிக்கணும். எந்தக் காரியத்த செஞ்சாலும் நல்லது கெட்டது யோசிச்சி செய்யணும்னு ஸ்கூல்ல சொல்லறாங்க. அப்பா ஏன் எத செஞ்சாலும் யோசனையே இல்லாம செய்யறாரு. எனக்கு அவர புடிக்கவே இல்ல. நீ எதுக்கும் கவலப்படாதே. நான் பெரியவனா ஆனதும் நல்ல பெரிய வேலைக்கு போயி ஒன்ன நான் காப்பாத்தறேன். இப்படிக்கு கனகராஜ்."
     ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. பிஞ்சு மனங்களில் உறங்கிக் கிடக்கும் கோபத்துக்கும் சந்தோஷத்துக்கும் அக்கடிதம் மிகப்பெரிய வடிகாலாக இருப்பதைப் பார்த்தேன்.
     "என்ன மேஷ்ட்ரே, எல்லாரயும் எழுத்தாளராக்கி பாக்கணும்னு கனவா? "
     "கனவெல்லாம் கெடையாதுங்க சார். இவுங்க வாழ்க்கையில இந்த எழுத்தறிவாவது மிஞ்சிநிக்கணும்னு ஒரு எண்ணம். அவ்வளவுதான்."
     "அப்படி ஏன் அவநம்பிக்கையா நெனைக்கறிங்க?"
     "நம்ம நாட்டு நெலைமை உங்களுக்குத் தெரியாதா சார்? இங்க தொடர்ந்து படிக்கறவங்களவிட படிக்காதவங்க எண்ணிக்கையும் படிப்ப பாதியில நிறுத்தறவங்க எண்ணிக்கையும்தானே அதிகமா இருக்குது."
     "ஆமாம்."
     "உதாராணமா, எங்க பள்ளிக்கூடத்துலியே முதல் வகுப்பிலேருந்து அஞ்சாம் வகுப்புவரைக்கும் ஒரு முந்நு¡று புள்ளைங்க படிக்கறாங்கன்னு வச்சிக்குங்க. எல்லாருமே ரொம்ப ரொம்ப ஏழைப் புள்ளைங்க. ஆறாவது வகுப்பு படிக்கறதுக்கு இங்கேருந்து அடுத்த ஊருக்கு ஒரு பத்து இருபது புள்ளைங்க போனா போகலாம். அவ்வளவுதான். அதுக்கும் மேல போவறதுக்கு வாய்ப்பே இல்ல. அவுங்கள பொறுத்தவரைக்கும் கல்விங்கறது அதோட முடிஞ்சுபோச்சி. ஆம்பளப் புள்ளயா இருந்தா அப்பாவோட சேர்ந்து உழவுவேலைக்குப் போவுங்க. பொம்பளப்புள்ளையா இருந்தா அம்மாவோட சேர்ந்து களயெடுக்கறது, விறகு சொமக்கறதுன்னு போயிடுவாங்க. எதாவது கடகண்ணின்னு பாத்து உடறவங்களும் உண்டு.
சரி மேஷ்ட்ரே, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
     "இருக்குதுங்க சார். எங்க இருந்தாலும் அவுங்க அம்மா அப்பாவுக்கு ஒரு வரி தகவல் தெரிவிக்கறவங்களா இருக்கணும். அவுங்க படிக்கற படிப்பு அதுக்காவது பயன்படணும். அடுத்தவங்களபோயி ஐயா எழுதிக்குடுங்கன்னு கேட்டு நிக்கக்கூடாது. அதுதான் என் ஆசை."
     அந்த ஆசையின் ஆழத்தையும் வாழ்வின் எதார்த்தத்தை அவர் புரிந்துகொண்டிருக்கிற விதத்தையும் என்னால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. விவேகமுள்ள இந்த அணுகுமுறையால் நிச்சயம் பயன் ஏற்படும் என்று என் மனம் சொன்னது.
     "நான் டீச்சர் டிரெய்னிங்க்காக பெங்களூர்ல தங்கியிருந்தப்போ நடந்த ஒரு சம்பவம்தான் இதுக்கெல்லாம் வித்து. எங்க அறையிலேருந்து கொஞ்ச து¡ரத்துல ஒரு போஸ்ட் ஆபீஸ் உண்டு. ஒருநாள் மணிஆர்டர்  செய்யறதுக்காக அங்க போயிருந்தேன்.  வரிசையில நிக்கும்போதே வாசல்ல ஒரு பையன் நின்னு எல்லாரயும் வழிமறிச்சி எதயோ கெஞ்சிக் கேக்கறமாதிரி இருந்திச்சி. யாரும் அவன் பேசறத முழுசா காதுகொடுத்து கேக்கறதுக்குக்கூட தயாராயில்ல. பன்னெண்டு பதிமூணு வயசுதான் இருக்கும் அவனுக்கு. ரொம்ப பாவமா இருந்தது.  வழிவிடு வழிவிடுன்னு சொல்லிட்டே எல்லாரும் போயிட்டிருந்தாங்க. மொதல்ல  எனக்கு எதுவுமே புரியலை. அப்பறமாத்தான் புரிஞ்சிகிட்டேன். கையில ஒரு லெட்டர வச்சிகிட்டு கொஞ்சம் எழுதிக்குடுங்க சார்னு எல்லாரயும் அவன் கேட்டுகிட்டிருந்தான்."
     "ஒரு சின்ன பையனுக்கு கடிதம் எழுதித்தரக்கூடவா அந்த ஊர்க்காரங்களுக்கு முடியலை?" ஆதங்கத்துடன் கேட்டேன்.
     "ஆமாம். அப்படி போவறதுக்கு அவுங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா அதப் பாத்ததும் எனக்கு ரொம்ப சங்கடமா போயிடுச்சி. நான் பணம்கட்டி ரசீது வாங்கிட்டு போவறவரைக்கும் யாருமே அவன் பேச்ச கேக்கலை. நேரா அவன்கிட்டயே போயி என்னப்பா வேணும்னு கேட்டேன். அவன் அந்த லெட்டர காட்டி எங்க அம்மாவுக்கு எழுதணும் சார்னு சொன்னான். சொல்லும்போதே அவனுக்கு அழுகை முட்டிகிச்சி. இங்க வான்னு அவனயும் கூட்டிகிட்டு வெளியில திண்ணையில போயி ரெண்டுபேருமா உக்காந்தோம். சொல்லுன்னு கேட்டதும் தேம்ப ஆரம்பிச்சிட்டான். ஹாஸன்  பக்கத்துல ஏதோ ஒரு கிராமம். குடும்பக் கஷ்டத்தால யாரோ இவன இங்க கூட்டியாந்து ஒரு ஓட்டல்ல வேலைக்கி சேத்து உட்டிருக்காங்க. வந்து பத்து நாளாயிடுச்சி. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குது. ராத்திரி து¡ங்கவே முடியலை. வீட்டு ஞாபகமாவே இருக்குது. இருந்தாலும் என்னப் பத்தி கவலப்படாதீங்க, தைரியமா இருங்கன்னு எழுதச் சொன்னான். நான் அவன் கைய பாத்தேன். விரல் சந்தெல்லாம் ஒரே புண்ணு. வெந்து வெள்ளவெள்ளயா இருந்தது. எழுதி ஒட்டிக் குடுத்ததும் அவன் பொட்டியில போட்டுட்டு கையெடுத்து கும்புட்டு போயிட்டான். அப்பதான் எனக்கு அந்த யோசனை வந்திச்சி. பள்ளிக்கூடம் வர புள்ளைங்கள்ள முக்கால்வாசி பேருக்கும் மேல தொடர்ந்து படிப்பாங்களா மாட்டாங்களான்னு எப்பவுமே ஒரு பயம் உண்டு. அவுங்க படிப்ப நிறுத்தறதுக்குள்ள எல்லாருக்குமே குறைந்தபட்சம் ஒரு கடிதம் எழுதவாவது கத்துக்குடுத்துடணும்னு முடிவு செஞ்சிட்டேன். அந்த முடிவுதான் இதுக்கெல்லாம் காரணம்."
     நான் நெருங்கி அவரருகில் உட்கார்ந்துகொண்டேன். நானும் நடக்கப் போகவில்லை. அவருடன் அமர்ந்து நானும் அந்த நோட்டுகளையெல்லாம் படித்தேன்.
     "இந்தப் பயிற்சி, இந்த யோசனை இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப பெரிய நல்ல பெயர எதிர்காலத்துல கொண்டுவந்து சேக்கப்போவுது" என்றேன்.
     "எனக்கெல்லாம் எதுக்கு சார் பேரு? என்கிட்ட படிக்கற புள்ளைங்க யாரும் கடிதம் எழுதற ஒரு சின்னக் காரியத்துக்காக இன்னொருத்தவங்க முன்னால கைகட்டி நிக்கக்கூடாது. அதுதான் எனக்கு வேண்டியது" என்றார்.
     "யார்யாருக்கோ எதுக்கெல்லாமோ விருது குடுக்கறாங்களே, மொதல்ல உங்களமாதிரி ஆளுக்கு விருது குடுத்து கெளரவிக்கணும்" நான் அவர் தோளைப் பற்றி அழுத்தினேன்.
     "அதெல்லாம் நமக்கெதுக்கு சார்? நான் சாதாராண ஒரு கன்னட மேஷ்ட்ரு. எனக்குத் தெரிஞ்சத செய்றேன். அவ்வளவுதான்" அவர் மெதுவாகப் புன்னகைத்தார். சில கணங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்து "ஒருதரம் எங்க ஸ்கூலுக்கு நீங்க வரீங்களா சார்? எங்க புள்ளைங்களையெல்லாம் பாக்கலாமே" என்று கேட்டார். எனக்கு அந்த அழைப்பு விசித்திரமாக இருந்தது.
     "வரேன் மேஷ்ட்ரே. ஆனா அவுங்ககிட்ட நான் என்ன பேசறது?" சற்றே என் மனம் தடுமாறியது.
     "நீங்க அவுங்களுக்கு எந்த உபதேசமும் செய்யவேணாம். சும்மா அவுங்களுக்கு நாலஞ்சி கதைங்க சொல்லுங்க. அது போதும்" அவர் உற்சாகப்படுத்தினார்.
     "கதைகளா?" நம்பமுடியாமல் அவர் முகத்தைப் பார்த்தேன்.
     "ஆமா சார். கதைங்கதான். நீங்க நாலு கதைங்க சொல்லுங்க. பதிலுக்கு அவங்களயும் நாலு கதைங்கள சொல்லச்சொல்லுங்க. அதுபோதுமே."
     "வேற ஒன்னும் அவுங்க எதிர்பாக்கமாட்டாங்களா?"
     "எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஒரு எழுத்தாளர் நம்ம ஸ்கூல்ல வந்து கதசொன்னார்ங்கறது அவுங்களுக்கு பெரிய அனுபவமா இருக்கும். வாழ்க்கையில அது பசுமையா என்னைக்கும் நின்னுடும்."
     "நீங்க இவ்வளவு சொல்லும்போது எனக்கும் ஆசை வருது. என்னைக்குப் போவலாம் சொல்லுங்க?"
     அவர் மேசைமீது இருந்த காலண்டரை இழுத்து தேதியைக் குறித்து "வர திங்கள் கிழமையே போகலாம். லீவுக்கு வந்து திரும்பும்போது நீங்களும் என்னோடயே வந்துடலாம். சரிதானே?" என்றார்.
     "சரி"
     புறப்படும்போது மேசையிலிருந்து கைநிறைய சில நோட்டுகளை அள்ளிக்கொண்டேன். "படிச்சிட்டு ராத்திரி கொண்டுவந்து தரேன்" என்றேன். நடக்கப்போவதை மறந்து அந்த நோட்டுகளில் மூழ்கினேன். அந்த எழுத்துகளில் பிஞ்சுமுகங்கள் தெரிவதை என்னால் உணரமுடிந்தது.
     அடுத்த வாரம் அவருடைய பள்ளிக்குச் சென்றேன். அக்குழந்தைகள் என்னைக் கண்டதும் எழுந்துநின்று "நமஸ்காரா சார்" என்று ஒரே குரலில் வணங்கிய போது என் மனம் தத்தளித்தது. ஒரு கணம் கண்களில் நீர் தேங்கித் தளும்பி உதிர்ந்தது. எங்கிருந்தோ ஒரு உத்வேகம் என் நெஞ்சில் புகுந்தது. அவர்கள் அனைவரும் என் பிள்ளைகள் என்பதைப்போன்ற எண்ணம் மனத்தில் புரண்டது. கதைகள் மட்டுமல்ல, சின்னச்சின்ன விடுகதைகள், கணக்குகள், விளையாட்டுகள் என மாற்றிமாற்றிச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினேன். அவர்களையும் பாடச்செய்தும் கதைசொல்லச்செய்தும் கேட்டேன். ஒருமணிநேரம் என்று நான் வகுத்திருந்த நேர எல்லை மாறி கிட்டத்தட்ட அரைநாள்வரை அவர்களுடன் பொழுதைக் கழித்தேன். புறப்படும்போது மீண்டும் அக்குழந்தைகள் எழுந்துநின்று ஒரே குரலில் "நமஸ்காரா சார்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். பேருந்து நிறுத்தம்வரை வந்து என்னை வண்டியேற்றி வழியனுப்பினார் கோபால்.
     அடுத்த ஆண்டில் கர்நாடகத்தின் உட்பகுதியிலிருக்கும் இன்னொரு கிராமத்துக்கு தானாகவே மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றார் கோபால். அப்போதுதான் அவருக்குத் திருமணமும் நடந்தது. மனைவி கொச்சின் பகுதியைச் சேர்ந்தவர். மலையாள ஆசிரியராக இருந்தார். இருவருமாக இணைந்து இல்லறம் நடத்தும் வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆண்டுக்கு இரண்டுமுறையோ மூன்றுமுறையோ விடுப்புக்காலத்தில் கோபால் ஊருக்குச் சென்று வருவார். அவ்வளவுதான். மற்றபடி பள்ளிக்கூடம் இருக்கும் கிராமத்திலேயே ஒரு வீடு பார்த்து சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட்டபடி பள்ளிக்குழந்தைகளுடன் பொழுதைக் கழித்துவிடுவார். பாடம் போதிப்பது என்பது அவரைப்பொறுத்தவரை மூச்சுவிடுவதுபோல நிறுத்தமுடியாத செயலாக இருந்தது.
     அதற்கு அடுத்த ஆண்டில் நாங்களும் அந்த ஊரைவிட்டுக் கிளம்பினோம். தொடக்கத்தில் ஆண்டுக்கு நாலைந்து கடிதங்களாவது எழுதினார் கோபால். பெரும்பாலும் தினசரிப் பத்திரிகையில் வெளிவந்திருக்கும் எந்தக் கட்டுரையையாவது படித்துவிட்டு அதைப்பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதாகவே அக்கடிதங்கள் இருந்தன. எப்போதாவது சில புத்தகங்களை வாங்கியனுப்புமாறு தனிப்பட்ட கோரிக்கையாக எழுதினார். பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதத் தரும் பயிற்சி எந்த அளவில் முன்னேறியிருக்கிறது என்ற ஒவ்வொரு கடிதத்திலும் நான் தவறாமல் கேட்டு எழுதினேன். எப்படியோ திடீரென்று மடல்வரத்து நின்றுபோனது.
     ஒரு கிராமத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் என்பது அவர் கணக்கு. அதற்கப்புறம் அவராகவே வேறொரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து மாற்றலுக்கு விண்ணப்பித்துவிடுவார். அவருடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஒரே வாரத்தில் மாற்றல் ஆணை வந்துவிடும் என்பதில் அவருக்குத் திடமான உறுதி இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகால ஆசிரியர் பணியில் அவர் ஆறேழு பள்ளிகளில் வேலை செய்துவிட்டார்.
கடந்த ஆண்டு அவர் தன் மகளுடைய திருமண அழைப்பை அனுப்பியிருந்தார். காலம் பறக்கும் வேகம் விசித்திரமாக இருந்தது. மலப்புரத்தில் திருமணம். நானும் என் மனைவியும் சென்றிருந்தோம். எவ்விதமான பதற்றமும் இல்லாமல் மிக எளிதான முறையில் ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. வீட்டு வாசலிலேயே பந்தலிட்டு விருந்துவைத்தார்கள். வேலைகள் முடிந்தபிறகு காற்று இதமாகத் தழுவிச்செல்லும் காற்றில் மொட்டைமாடியில் உட்கார்ந்து பேசினோம்.
     "உங்க திருமணமே இப்பத்தான் நடந்தாப்பல இருக்குது. அதுக்குள்ள உங்க பொண்ணுக்குக் கல்யாணம்ங்கறத நம்பவே முடியலை. "
     கோபால் சிரித்தார். அவர் தலையின் முன்பக்கம் எனக்கு நேர்ந்ததைப்போலவே வழுக்கை விழுந்திருந்தது. காதோரம் எஞ்சியிருந்த முடியெல்லாம் வெளுத்திருந்தது.
"கடிதம் எழுதற பயிற்சியெல்லாம் எப்படி இருக்குது?" நான் ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.
     "நான் வேலையில இருந்த கடைசிநாள் வரைக்கும் அந்தப் பயிற்சிய விடலை. அது ஒன்னுதான் இந்த ஆசிரியர் வாழ்க்கையில எனக்கு மிகப்பெரிய திருப்தி."
     "அப்படின்னா?" புரியாமல் குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன்.
     "ரெண்டு வருஷத்துக்கு முன்னால மடிக்கேரிக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்தப்போ திடீர்னு நெஞ்சுவலி வந்து பாடாபடுத்திடுச்சி. நகரத்துக்கு வரதுக்குள்ளே உயிரே போய்ட்ட மாதிரி ஆயிடுச்சி. அப்பதான் என் ஆரோக்கியத்த முன்னிட்டு நகரத்துக்குள்ள மாற்றல் வேணும்னு ஒரு விண்ணப்பம் குடுத்தேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம போன வருஷம் கட்டாய ஓய்வு வாங்கி இங்க கொச்சினுக்கே வந்துட்டேன்."
     நான் நம்பமுடியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
     "ஆனா ஒரு சந்தோஷமான விஷயம் சார். இப்பவும் மாசத்துக்கு ஒன்னோ ரெண்டோ கடிதங்கள யாரோ சில புள்ளைங்க ஏதோ ஒரு கிராமத்திலேருந்து அன்புள்ள கோபால் மேஷ்ட்ருக்குன்னு எழுதிட்டே இருக்காங்க. "
     அவர் கண்களில் நிறைவின் ஒளி சுடர்விட்டதைப் பார்த்தேன். பிறகு ஒருகணம் நட்போடு புன்னகைத்தபடி "வாழ்க்கையில எனக்கு எந்தப் புகாரும் இல்ல சார்" என்றார்.