Home

Wednesday, 22 August 2018

நான்கு கனவுகள் – சிறுவர் கதைத்தொகுதி





முன்னுரை

அன்புள்ள சிறுவர் சிறுமியருக்கு

வணக்கம். உங்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும்? பத்து, பதினொன்று, பன்னிரண்டு என ஏதோ ஒன்றாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஒருவேளை அதற்கும் குறைவாகவும் இருக்கலாம். குழந்தைகளே, அந்த வயதை நானும் கடந்து வந்திருக்கிறேன். அதனாலேயே உங்களைப்போன்ற வயதினருக்கு மிகவும் பிடித்த விஷயங்களை நானும் தெரிந்துவைத்திருக்கிறேன். உங்களைப்போலவே, நானும் விளையாடியிருக்கிறேன், கதை கேட்டிருக்கிறேன். கதைகள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.


எனக்கு என் அம்மாதான் கதைகள் சொல்வார். ஏராளமான கதைகள். விலங்குக்கதைகள், தேவதைக்கதைகள், புராணக்கதைகள், நீதிக்கதைகள். என்னுடைய அப்பா வேலையை முடித்துக்கொண்டு இரவில் வீடு திரும்ப வெகுநேரமாகும். அவர் வந்த பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். அதுவரை பொழுதுபோக்காக அம்மா கதைசொல்வார். நானும் தம்பிகளும் தங்கையும் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்துகொள்ள, அம்மா ஒன்றையடுத்து ஒன்றென கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார். அம்மா கதைசொல்லாத நேரங்களில் எங்கள் பாட்டி கதை சொல்வார்.



எங்கள் தெருமுனையில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதன் முன்னே சின்ன மணல்முற்றம் இருக்கும். அங்குதான் நாங்கள் விளையாடுவோம். அந்தக் கோவிலுக்கு சாயங்கால வேளைகளில் ஒரு தாத்தா வந்து உட்கார்வார். அவரை நாங்கள் மீசைக்காரத் தாத்தா என்று அழைப்போம். பிள்ளையார் முன்னால் உட்கார்ந்து அவர் பாடல்கள் பாடுவார். ஒவ்வொரு வரியாக இசையோடு சொல்லிக் கொடுத்து எங்களையும் பாடச் சொல்வார். பிறகு ஒரு தூணில் சாய்ந்தபடி எங்களோடு பேசுவார். மனத்துக்குத் தோன்றியபடி எங்களை நோக்கி விசித்திரமான கேள்விகளையெல்லாம் கேட்டுவிட்டு பதில் சொல்லும்படி தூண்டுவார். விடுகதைகள் சொல்வார். மேலும் ஏராளமான கதைகளைச் சொல்வார்.

சின்ன வயதில் நான் கேட்ட கதைகளே, எனக்குக் கதைமீது அளவு கடந்த ஆர்வம் பிறக்கக் காரணம். நாளடைவில் நானே கதைகளை உருவாக்கி எழுதவும் சொல்லவும் தொடங்கினேன். எனக்கு மகன் பிறந்தபோது, அவனுக்கு கதைசொல்லி உறங்கவைப்பது எனக்கு மிகவும் பிடித்த வேலை. இப்போதும் நான் உறவினர்கள் வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ சென்று தங்க நேரும் சமயங்களில் அந்த வீட்டுக் குழந்தைகளோடு சேர்ந்துகொள்வேன். அவர்களும் என்னோடு ஒட்டிக்க்கொள்வார்கள். அவர்கள் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்பேன். பிறகு நான் சொல்லும் கதைகளையும் பாடல்களையும் அவர்கள் மிகவும் விரும்பிக் கேட்பார்கள். எந்தக் கதையையும் திட்டமிட்டு உருவாக்குவதில்லை. அந்த நேரத்து மனநிலைக்குத் தகுந்தபடி சம்பவங்களைப் பின்னிப்பின்னி சொல்லிக்கொண்டே செல்வேன். எங்கோ ஒரு கட்டத்தில் கதையின் வேகம் அதிகரித்துவிட, எல்லோருக்கும் உற்சாகம் பிறந்துவிடும்.

சொல்லப்பட்ட கதைகளை எழுதிவைத்தால் என்ன என்று ஒரு தருணத்தில் தோன்றியது. அதன் விளைவாகவே அவற்றை எழுதிப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். இக்கதைகள் அவ்வப்போது சுட்டிவிகடன், சிறுவர் மணி, புதுவைபாரதி போன்ற இதழ்களில் வெளிவந்தன. வெளிவந்தவை, வெளிவராதவை என அனைத்துக் கதைகளையும் கொண்ட தொகுதியாக இந்த நூல் உருவாகியிருந்தது.

இந்தக் கதைகளை நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன். என் இளமைக்காலத்தை இனிமை நிரம்பிய கதைகளால் ஆனதாக வளம்பெறச் செய்த கதைச்சுரங்கமான என் அம்மாவுக்கு இந்தத் தொகுதியைச் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதை அழகுற வெளியிடும் நியு செஞ்சுரி புக் ஹவுஸின் சகோதர நிறுவனமான நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (பி) லிட், நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.