Home

Tuesday, 7 August 2018

மனக்குதிரையேறிச் செய்த பயணங்கள் – கட்டுரை


ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும்  ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து முடித்தேன். ஆறு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.


இங்கே குறிப்பிட்ட எல்லாப் பள்ளிகளிலும் நூலகங்கள் இருந்தன. வாரத்துக்கு ஒரு முறை நூலகவகுப்பு என்றொரு பாடப்பிரிவு இருந்தது. அந்த வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் வரமாட்டார். பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. நூலகர் வருவார். வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தமாதிரி புத்தகங்களை அவர் கொண்டு வருவார். வருகைப்பதிவேட்டைப் பார்த்து பெயரைப் படிக்கப்படிக்க, நாங்கள் ஒவ்வொருவராக அவருக்கருகில் சென்று அவர் கொடுக்கும் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புவோம். சத்தம் போடாதீங்கடா, கதைகளை மனசுக்குள்ளயே படிச்சிப் பாருங்கஎன்று சொல்லிவிட்டு வகுப்பறையைச் சுற்றிச்சுற்றி வலம்வருவார்.

எல்லாமே சின்னச்சின்ன கதைப்புத்தகங்கள். எல்லாமே இரண்டு பக்கங்கள் முதல் மூன்று பக்கங்கள் அளவில் அமைந்திருக்கும் கதைகளைக் கொண்டவை. பெரும்பாலும் விலங்குகளைப்பற்றியும் பறவைகளைப்பற்றியுமான கதைகள். அவற்றை நான் விரும்பிப் படிப்பேன். விலங்கு கூக்குரல் கொடுப்பதாக எழுதியிருக்கும் வரிகளைப் படிக்கும்போது மனசுக்குள்ளேயே அந்தக் கூக்குரலை நான் எழுப்பிப் பார்த்து மகிழ்ச்சியடைவேன். பறவைகள் நீலவானில் எழுந்து பறக்கும் வரிகளைப் படிக்கும்போது நானும் இல்லாத இறக்கைகளை விரித்து வானத்தில் பறப்பதுபோல கற்பனையில் மூழ்கிவிடுவேன்.

குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, எல்லோரும் புத்தகங்களை எடுத்துச் சென்று மேசையில் வைத்துவிட்டு இருக்கைக்குத் திரும்புவோம். ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைவரைக்கும் உட்கார்ந்திருப்பவர்கள் மீது  யாரையோ தேடுபவர்போல பார்வையைப் படரவிட்டு, சட்டென ஒரு மாணவன்மீது விழியைப் பதித்து இங்க வாடாஎன்று அருகில் அழைப்பார். சின்னச்சின்ன கேள்விகளாக அவனிடம் கேட்டு சிறிது நேரம் அவனைச் சீண்டிச் சிரிக்கவைப்பார். அதற்குள் அவன் தன் பதற்றமெல்லாம் விலகியோட இயல்பான நிலைக்குத் திரும்பியிருப்பான். கடைசியில் இப்ப என்ன கதை படிச்ச, சொல்லு பார்ப்போம்என்று கேட்பார். அவனும் ஆர்வத்தோடு சொல்லத் தொடங்குவான். என்ன எதுக்குடா பார்த்துச் சொல்ற, அவனுங்களும் கேக்கணுமில்ல, அந்தப் பக்கம் திரும்பிச் சொல்லுஎன்று புன்னகைத்தபடியே தோளைத் தொட்டு அமர்ந்திருக்கும் மாணவர்களை நோக்கித் திருப்பிவிடுவார் நூலகர். அவன் தன் கதையை மொத்த வகுப்பை நோக்கியும் சொல்லத் தொடங்குவான்.

வகுப்பு நேரத்துக்குள் எந்தப் புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க முடிந்ததில்லை. பத்து முதல் பதினைந்து பக்கங்களைக் கூட கடந்துபோனதில்லை. ஆனால் படிக்கப்படிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.  நூலகரின் அறை தலைமையாசிரியர் அறைக்குப் பக்கத்தில் இருந்தது. புத்தகங்களைப் பார்க்கும் ஆவலில் கட்டிடத்தின் ஓரமாகவே நடந்து சென்று ஜன்னல் வழியாக பல சமயங்களில் எட்டிப் பார்ப்போம். நல்ல உயரமான மரஅலமாரிகளிலும் புத்தகத்தாங்கிகளிலும் புத்தகங்கள் நிரப்பப்பட்டிருக்கும். பார்க்கப்பார்க்க மலைப்பாக இருக்கும். ஒரு ஆளால இத்தன புத்தகங்களயும் படிச்சி முடிக்கமுடியுமா?” என்று கேட்டபடி உதடுகளைப் பிதுக்கி ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவோம்.

இலக்கிய ஆர்வமிருந்த சில மூத்த அண்ணன்கள் இணைந்து எங்கள் ஊரில் திருக்குறள் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கி மாதம்தோறும் கூட்டம் நடத்தினார்கள். வெளியூர்களிலிருந்து பல பேச்சாளர்கள் வந்து திருக்குறள் கழகம் ஏற்பாடு செய்த கூட்டங்களில் உரைநிகழ்த்துவார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருக்குறள் ஒப்பித்தல் என்னும் நிகழ்ச்சியும்  நடைபெறும். பல பள்ளிகளிலிருந்தும் பல மாணவமாணவிகள் வந்து திருக்குறளை மனப்பாடமாகச் சொல்வார்கள். அவரவர்கள் நினைவாற்றலுக்குத் தகுந்தமாதிரி எத்தனை குறள்கள் வேண்டுமானாலும் சொல்லலாம். சிலர் பத்து குறள்கள் சொல்வார்கள். சிலர் இருபது சொல்வார்கள். எவ்விதமான கட்டுப்பாடும் இல்லை. நான் அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்பித்து பரிசு பெறுவேன். பரிசுப்புத்தகத்தோடு ஒருமுறை எனக்கு தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழைக் கொடுத்தார்கள். அதில் படங்கள் எதுவும் இல்லை. ஆனால் பாடல்களும் சின்னச்சின்ன கதைகளும் கட்டுரைகளும் இருந்தன. ஒரு புதுமாதிரியான அமைப்பு. துரை.மாணிக்கம் அவ்விதழின் ஆசிரியர். அவர் எழுதிய பாடல்கள் நிறைய இருந்தன. அழகான தாளக்கட்டில் அமைந்த அப்பாடல்கள் படிக்கவும் பாடவும் சுவையாக இருந்தன. ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்கும்போதெல்லாம் ஒரு தமிழ்ச்சிட்டு இதழ் எனக்கு இலவசமாகவே கிடைத்துவந்தது.

எங்கள் வளவனூரிலும் நூலகம் இருந்தது. அது கடைத்தெருவில்  ஏராளமான கடைகளுக்கு இடையில் இருந்தது. கடைத்தெருவில்தான் எங்கள் அப்பாவும் கடை வைத்திருந்தார். அப்பாவைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் நூலகத்துக்கும் சென்று திரும்புவேன். நூலக மேசையில் ஏராளமான நாளிதழ்களும் வார இதழ்களும் சிதறிக்கிடக்கும். தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த சிந்துபாத் படக்கதையைத்தான் ஓடிச்சென்று பிரித்துப் படிப்பேன். லைலாவுக்கு என்ன ஆயிற்றோ, பூதத்துக்கு என்ன ஆயிற்றோ என மனம் பரபரத்தபடி இருக்கும்.

ஒருநாள் தினத்தந்திக்கு அருகில் கிடந்த அம்புலிமாமா என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். மிகநீண்ட வாளை உறையிலிருந்து உருவியெடுத்த நிலையில் நிற்கும் ஒரு வீரனையும் அவனுக்கு எதிரில் பாய்வதற்குத் தயாராக இருந்த புலியையும் கொண்ட வண்ணப்படம் அந்தப் புத்தகத்தின் அட்டையில் காணப்பட்டது. அதைப் பார்ப்பதற்காகத்தான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். பிரித்துப் புரட்டியபிறகுதான் ஒவ்வொரு பக்கத்திலும் படமும் கதையும் இருப்பதை உணர்ந்தேன். அங்கேயே உட்கார்ந்து படிக்கத் தொடங்கினேன். எனக்கு அந்தப் புத்தகம் மிகவும் பிடித்துவிட்டது.

அந்த நூலகத்தில் எங்கள் அப்பாவுக்கு நெருக்கமான நண்பர் பணிபுரிந்துவந்தார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். நான் அம்புலிமாமாவைத் தொடர்ந்து படிப்பதைப் பார்த்துவிட்டு, அறைக்குள் சென்று பழைய இதழ்களையும் எடுத்துவந்து கொடுத்தார். விக்கிரமாதித்தன் அலையும் காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் திரிவதுபோன்ற கற்பனைகளை அக்கதைகள் எனக்கு வழங்கின. கதைப்புத்தகங்கள் வாசிக்கும்போது கிட்டும் ஆனந்தத்தை மெல்ல மெல்ல மனம் விரும்பத் தொடங்கியது.

சில ஆண்டுகள் கழித்து ஒருநாள் நான் மாலைநேரத்தில் நூலகத்திலிருந்து திரும்பும் வழியில் பட்டாணிக்கடையில் அணில் என்னும் பெயரில் ஒரு சின்னஞ்சிறிய பத்திரிகை தொங்குவதைப் பார்த்தேன். மிகச்சிறிய புத்தகம். அட்டைப்படம் அழகாக இருந்தது. புத்தகத்தின் விலை பதினைந்து காசு. வாங்கிக்கப்பா, நிறைய கதைகள் இருக்குது  என்று கடைக்காரர் ஆசை காட்டினார். எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது.  ஆனால் பணமில்லை. எங்கள் அப்பா எனக்கு தினமும் மாலையில் ஐந்து காசு கொடுப்பார். அதை மூன்று நாட்கள் எந்தச் செலவும் செய்யாமல் சேர்த்துவைத்தால் வாங்கிவிடலாம் என்று மனத்துக்குள்ளேயே திட்டமிட்டேன்.

ஒவ்வொரு நாளும் மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது பட்டாணிக்கடைக்குச் சென்று அணில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத் திரும்புவேன். கொடியில் தொங்கும் இதழ்களுக்கு நடுவில் அதைப் பார்த்தபிறகுதான் மனம் நிம்மதியடையும்.

மூன்றுநாட்களாக சேமித்துவைத்த காசுகளோடு ஒருநாள் அணில் இதழை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். அட்டையில் அழகான வண்ணப்படம். அதன் முதல்பக்கத்தில் கையில் கனியுடன் அமர்ந்திருக்கும் அணிலின் படமொன்று சின்ன அளவில் வரையப்பட்டிருந்தது. அதுதான் அணில் இதழுக்கான அடையாளம். இதழ்முழுக்க கதைகள். சில படங்களோடும் சில படமில்லாமலும் இருக்கும். மாயாஜாலக்கதைகள், விலங்குகள் பற்றிய கதைகள், வீர்ர்கள் பற்றிய கதைகள் என அனைத்துவகையான கதைகளும் கலந்ததாக இருந்தது இதழ். சாப்பிட்டு முடித்ததும் ஒரே மூச்சில் நான் அணிலைப் படித்துவிட்டேன். கதைகளின் சுவாரசியம் நெஞ்சை நிரப்பி மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியபடியே இருந்தது.

அடுத்த நாள் அணில் இதழை பள்ளிக்கு எடுத்துச் சென்று என் நண்பர்களுக்கெல்லாம் காட்டினேன். அவர்கள் அனைவருமே கூடிக்கூடிப் படித்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். அணில் பழம் வைத்திருக்கும் படத்தைப் பார்த்து வரைவது எங்களில் பலருக்குப் பொழுதுபோக்காக இருந்தது. ஒருமுறை அணில் இதழில் தவளைத்தீவு என்னும் தொடர்கதை வெளிவந்தது. ஒவ்வொரு இதழையும் படித்து முடித்ததும் ஐயோ, அடுத்து அடுத்து என்ன ஆகுமோஎன்று பதற்றத்தோடு கூடிக்கூடிப் பேசிக்கொண்டோம். அந்தக் கதையைப் படித்த வேகத்தில் ஒவ்வொருவரும் முதலைத்தீவு, பாம்புத்தீவு, ஆந்தைத்தீவு என்றெல்லாம் பெயர்சூட்டி புதியபுதிய கதைகளையெல்லாம் உருவாக்கிப் பகிர்ந்துகொண்டோம்.

மாதத்துக்கு இருமுறை அணில் வெளிவரும். அதற்குத் தேவையான காசுகளைச் சேர்க்க நான் மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. நான் செலவு செய்யாமல் சேர்த்துவைக்கிற ஆள் என்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அதனால் குடும்பச்செலவுக்கு பணம் குறைகிற சமயத்தில் எல்லாம் நான் அணில் இதழுக்காகச் சேர்த்துவைத்திருக்கும் சேமிப்பை சுதந்திரமாகக் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஆனால் ஒருமுறையும் அந்தப் பணம் எனக்குத் திரும்பக் கிடைத்ததே இல்லை.

அம்புலிமாமா இதழை நூலகத்தில் பொது வாசிப்புக்கு வைப்பதுபோல அணில் இதழையும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒருநாள் தோன்றியது. எதையாவது வாங்கித் தின்ன கொடுக்கிற காசுகளை இப்படிச் சேர்த்துவைத்து புத்தகம் வாங்கவேண்டி இருக்கிறதே என யோசித்துக்கொண்டிருந்தபோது அந்த எண்ணம் எழுந்தது.  அடுத்தமுறை அம்புலிமாமா படிக்க நூலகத்துக்குச் சென்றிருந்தபோது அப்பாவின் நண்பரிடம் மெதுவாக இதைப்பற்றிக் கேட்டேன். அவர் நல்ல யோசனைதான். ஆனா அப்படியெல்லாம் வாங்கமுடியாதுடா தம்பிஎன்று என் முதுகில் தட்டிக்கொடுத்தார். தொடர்ந்து அரசாங்கம் எந்தப் புத்தகத்த நமக்கு அனுப்பி போடச் சொல்லுதோ, அதமட்டும்தான் இங்க வைக்கமுடியும். மத்த புத்தகங்களை வைக்க சட்டத்தில இடமில்லஎன்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

வேதாளம் கதையில் இடம்பெறும் விக்கிரமாதித்தன், தினத்தந்தி படக்கதையில் இடம்பெறும் சிந்துபாத் போன்ற பாத்திரங்களின் வரிசையில்  அணில் கதைகளில் இடம்பெற்ற வீரப்பிரதாபன் பாத்திரத்தையும் வைக்கலாம். வீரப்பிரதாபனுக்கு சண்டைகள் தெரியும். மந்திரங்கள் தெரியும். ஆபத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மற்றவர்களை உடனுக்குடன் சென்று காப்பாற்றும் ஆற்றலும் துணிச்சலும் உள்ளவன்.

ஒருமுறை அணில் இதழ் தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பிதழை அறிவித்திருந்தது. அதை வாங்கிப் படித்திருந்தால் ஒருவேளை நான் அன்றே மறந்து போயிருப்பேன். அதை வாங்காததாலேயே இன்னும் என் நினைவில் தங்கியிருக்கிறது.

அந்த இதழின் விலை ஐம்பது காசு. தீபாவளிக்கு முன்பே இந்த விவரம் வெளிவந்துவிட்டது.  ஒவ்வொரு இதழுக்கும் பதினைந்து காசு சேமிப்பதற்கே தடுமாறும் நான் ஐம்பது காசுக்கு எங்கே போவது எனத் தோன்றியது. ஒரு கட்டத்தில் அது என் சக்திக்கு மீறிய செயல் என்று தோன்றியது.  அதனால் ஒருநாள் ஒரு நல்ல நேரம் பார்த்து எங்கள் அம்மாவிடம் செய்தியைச் சொல்லி அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு  அதுக்கென்ன தம்பி, புத்தகம்தான, வாங்கனா போச்சுஎன்று உடன்பாடாகவே பதில் சொன்னார்.

தீபாவளி வரைக்கும் நான் அவர் சொற்களை உண்மையென நம்பி என்னென்னமோ கற்பனைகளில் மிதந்தபடி இருந்தேன். ஆனால் எதுவும் அவர் சொன்னபடி நடக்கவில்லை. தீபாவளி அன்று பட்டாணிக்கடையில் அந்தச் சிறப்பிதழ் வந்து கொடியில் அசைந்தபடி இருந்ததை நான் என் கண்ணாலேயே பார்த்துவிட்டேன். ஓடி வந்து அம்மாவிடம் பழைய வாக்குறுதியை நினைவூட்டி புத்தகம் வாங்கித் தரும்படி சொன்னேன். அவர் ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு என்னை சில கணங்கள் பார்த்துவிட்டு பாக்கலாம், பாக்கலாம்என்று தலையசைத்தபடியே போய்விட்டார். தலையில் இடி விழுந்ததுபோல இருந்தது எனக்கு. அன்று கடைக்குச் சென்றிருந்த போது அந்த  அண்ணனும் என்னடா, வேணுமா?” என்று இரண்டுமூன்றுதரம் கேட்டுவிட்டார். நாளைக்குன்னு சொல்லியிருக்காங்கண்ணேஎன்று நானும் ஒப்புக்கு பதில் சொல்லிவிட்டு புன்னகையோடு அப்படியே பின்வாங்கித் திரும்பி நடந்தேன்.

அதற்கப்புறம் நான் அம்மாவிடம் பணம் கேட்கவில்லை. அவரும் தரவில்லை. விற்பனைக்கு வந்திருந்த பத்து புத்தகங்களில் ஒவ்வொன்றாக விற்றுவிற்று, கடைசிப் புத்தகமும் ஒரு வாரத்துக்குள் போய்விட்டது. வாங்காததாலேயே ஒரு வடுவாக அந்த நினைவை என் மனம் இன்னும் சுமந்துகொண்டிருக்கிறது.

ஏறத்தாழ அந்தச் சமயத்தில்தான் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கள் வகுப்பறைக்குள் உலவத் தொடங்கின. இரும்புக்கை மாயாவி எங்களிடையே பேசப்படும் பாத்திரமானார். ஆனால் அந்தப் புத்தகத்தின் விலை ஒரு ரூபாய். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு இது நமக்கு எட்டாக்கனி என்று விலகிச் சென்று மனத்தைத் தேற்றிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். எங்கள் பள்ளித்தோழன் ராஜசேகரன் அந்த அவநம்பிக்கையை இரும்பை உடைப்பதுபோல உடைத்து நொறுக்கினான்.

அவன் அந்தப் புத்தகத்தை எப்படியோ வாங்கிவிட்டான். வாங்கிய வேகத்தில் படித்து முடித்துவிட்டான். அன்று பள்ளிக்கூடத்தில் அவன் ஒரு திட்டத்தை  அறிமுகப்படுத்தினான். அவன் மனத்தில் அந்த வயதில் அப்படி ஒரு திட்டம் எப்படி உதித்தது என்பது இன்றும் கூட எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. படிக்க விருப்பம் உள்ளவர்கள் தன்னிடம் மாயாவி புத்தகத்தை கடனாகப் பெற்றுப் படிக்கலாம் என்று சொன்னான் அவன். ஆனால் வாசிப்புக் கட்டணம் கொடுக்கவேண்டும் என்றான். வகுப்பிலேயே படிப்பதென்றால் ஒரு ஆளுக்கு ஐந்து காசு. வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தால் பத்து காசு. ஐந்து காசு வைத்திருந்த பையன் உடனடியாக அவனிடம் காசைக் கொடுத்துவிட்டு புத்தகத்தை வாங்கிப் பாடப்புத்தகத்துக்கு நடுவில் வைத்துக்கொண்டு பாட நேரத்திலேயே படித்துவிட்டுக் கொடுத்துவிட்டான். இன்னொருவன் உணவு இடைவேளை நேரத்தில் வாங்கிப் படித்துவிட்டுக் கொடுத்தான்.  கிட்டத்தட்ட ஒருவார காலத்தில் எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருமே இரும்புக்கை மாயாவியைப் படித்துவிட்டோம்.

மாயாவியைத் தொடர்ந்து பாம்புத்தீவு, பாதாள நகரம், விண்ணில் மறைந்த விமானங்கள் என கடையில் வெளிவரும் ஒவ்வொரு படக்கதைப் புத்தகத்தையும் அவன் உடனுக்குடன் பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி மிகக்குறைந்த செலவில் படிக்க உதவினான்.

அந்தக் கட்டத்தில் நூலகத்தில் எனக்கு இளம்உறுப்பினர் அட்டை கிடைத்துவிட்டது. என்னுடைய புத்தகவாசிப்பை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகக் கவனித்துவந்த என் அப்பாவின் நண்பரின் பரிந்துரையில் எனக்கு அந்த அட்டை கிடைத்தது.  அதற்குப் பிறகுதான் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறைக்குள் நான் அனுமதிக்கப்பட்டேன். முதல் நாள் அந்தப் புத்தகத்தாங்கிகளுக்கிடையில் நின்றிருப்பதும் சாய்ந்த வாக்கில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் தலைப்புகளை கழுத்தை வளைத்து வாசித்தபடி சுற்றிச்சுற்றி வருவதும் ஆனந்தமாக இருந்தது. என்னப்பா, கோயில சுத்தறமாதிரி சுத்தற? சீக்கிரமா எடுத்துட்டு வாஎன்றார் நூலகர். என்னிடம் இருந்த அட்டைக்கு ஒரு புத்தகம் மட்டுமே எடுக்கலாம்.

நான் மீண்டும் சிறுவர் நூல்கள் என அடையாள அட்டை தொங்கவிடப்பட்டிருந்த புத்தகத்தாங்கியைச் சுற்றி வந்தேன். என் பார்வையில் பஞ்சதந்திரக்கதைகள் பட்டது. சட்டென்று எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். அதைத் தொடர்ந்து தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள், மரியாதைராமன் கதைகள் என வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை மாற்றிமாற்றி எடுத்துப் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். தேர்வுக்காலம் நெருங்கியதும் அவரே புத்தகம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். முதல்ல பரீட்சைக்குத் தேவையான பாடத்த படி. நல்லா எழுது. அப்புறமா தான் இங்க வரணும், சரியா?” என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டார்.

அது எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்வதற்கான தேர்வு என்பது என் நினைவு. தேர்வுகளையெல்லாம் முடித்துவிட்டு ஒரு பயணமாக நறையூரிலிருந்த உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் தமிழ்வாணன் வாசகர். நேரிடையாக புத்தகத்திலிருந்து தொடர்கதைப்பக்கங்களைக் கிழித்துத் தொகுத்துத் தைத்து ஏராளமான புத்தகங்களை வைத்திருந்தார். பெரும்பாலும் துப்பறியும் நாவல்கள். அக்கதைகளின் முடிச்சுகளும் புதிர்களும் அளித்த சுவாரசியம் எனக்கு இன்னொரு உலகத்திற்குள் அழைத்துச்சென்றது. பிறகு அங்கிருந்து தேவன், கல்கி, சாண்டில்யன், சுஜாதா என வளர்ந்துபோனது. சிந்துபாத்தோடும் தெனாலிராமனோடும் இரும்புக்கை மாயாவியோடும் சேர்ந்து பயணம் செய்த என் மனக்குதிரை கண்ணில் தெரிந்த மற்றொரு திசையில் வல்லவராயன் வந்தியத்தேவனைப் பின்தொடர்ந்து ஓடத் தொடங்கியது.


(பஞ்சுமிட்டாய் - சிறுவர் இணைய இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)