10.06.2019 அன்று காலை எட்டரை மணியளவில் தேசிய அளவில் அனைத்து மொழி நாடக ஆர்வலர்களும் பார்வையாளர்களும் நெருக்கமாக அறிந்த கிரீஷ் கார்னாட் இயற்கையெய்தினார். ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகளாக உயிர்க்காற்றை நிரப்பியிருக்கும் உருளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறுகுழாய் மூக்கோடு பொருந்தியிருக்கும் நிலையிலேயே அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துவந்தார். அந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ஒருகணம் சற்றே பதற்றம் கொண்டு கலங்கிவிடுவார்கள். ஆனால் கார்னாட் வழக்கமான தன் ஒளிரும் புன்னகையோடு அரங்குக்கு வந்து அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு உரையாடிவிட்டுச் செல்வார். தன் முடிவு நெருங்கிவருவதை அப்போது அவர் அறிந்திருக்கக்கூடும். ஆனால் அதை எண்ணிக் கலங்கியவராக அவரை எங்கும் என்றும் கண்டதில்லை. நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, சில நாடகங்களைப் பார்ப்பதற்குக்கூட அவர் அந்தக் கோலத்திலேயே வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். நாடகமே அவருக்கு உலகமாகவும் உயிராகவும் இருந்தது. முதலில் ஓவியராக இருக்க விரும்பி, பிறகு கவிஞராக மலர நினைத்து, இறுதியில் நாடகமே தனக்குரிய களம் என்பதைக் கண்டுகொண்டவர் அவர்.