(இன்று நம்மிடையில் வாழும் மூத்த படைப்பாளுமைகளில் முக்கியமானவர்
விட்டல்ராவ். கடந்த ஐம்பத்தேழு ஆண்டுகளாக, தமிழிலக்கிய வெளியில் நாவல்கள்,
சிறுகதைகள், நுண்கலைசார் கட்டுரைகள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், வாழ்வனுபவக்கட்டுரைகள்
என பல தளங்களில் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். குரலற்றவர்களின் குரலாகவும் முகமற்றவர்களின்
முகமாகவும் விட்டல்ராவின் படைப்புலகம் விளங்குகிறது போக்கிடம், நதிமூலம், வண்ணமுகங்கள்,
காம்ரேடுகள், காலவெளி, நிலநடுக்கோடு ஆகிய அவருடைய நாவல்கள் அனைத்துமே காலத்தைக் கடந்து
நிற்பவை. அரை நூற்றாண்டு காலமாக அவை மீண்டும் மீண்டும் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
அவருடைய சில நூல்களை சமீபத்தில் ஜெய்கிரி பதிப்பகம்
மறுபதிப்பாகக் கொண்டுவந்து, அவருடைய படைப்புகள் சார்ந்து கூர்மையான வாசிப்பு உருவாக
வழிவகுத்துள்ளது. விட்டல்ராவுடைய கட்டுரைகள் வரலாறு சார்ந்த தகவல்களையும் வாழ்க்கை
அனுபவங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால், ஒவ்வொரு கட்டுரையும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை
வழங்குகிறது. சமீபத்தில் வெளிவந்த அவருடைய ‘தொலைபேசி நாட்கள்’ என்னும் புத்தகம் சென்னையில்
தொலைபேசி உருவாகி நிலைபெற்று வளர்ந்த வரலாற்றையும் தொலைபேசி அலுவலகப்பணியின் வழியாக
சந்தித்த மனிதர்களின் குணச்சித்திரங்களையும் நம்மால் உணரமுடியும். தமிழ்ப்புத்தாண்டு
தினத்தன்று சந்தித்தபோது அவருடன் நிகழ்த்திய உரையாடலின் எழுத்துவடிவம் புத்தகம் பேசுது
வாசகர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.)
பேசும் புதிய சக்தி இதழில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீங்கள்
எழுதி வந்த கலையும் காலமும் தொடர் இந்த மாதத்தோடு நிறைவடைந்துவிட்டது. சுவரோவியம்,
சுடுமண் சிற்பம், சிற்பக்கலை என ஆதிமனிதனின்
கலைவெளிப்பாட்டில் தொடங்கி நவீன மனிதனின் கலைவெளிப்பாடு வரைக்குமான சாதனைகளை ஒரு பொது
வாசகரும் புரிந்துகொள்ளும் வகையில் அழகாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். இப்படி தொகுத்துப்
பார்க்கும் எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்பட்டது?
எப்போது ஏற்பட்டது என்பதோடு, எப்படி ஏற்பட்டது என்பதையும்
சேர்த்துச் சொன்னால்தான் என் பதிலை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். இந்தச் சிந்தனை
எனக்கு ஏற்படுவதற்கு என்னுடைய பழைய ஃபிலிம் காமிராதான் மிகமுக்கியமான காரணம். அந்தக்
காமிராவைப் பயன்படுத்தி கோட்டைகள், பழங்காலச் சிற்பங்கள், சிற்பக்கோவில்கள், இயற்கைக்காட்சிகள்,
பல்வேறு மனிதத்தோற்றங்கள் என கிட்டத்தட்ட 1200 படங்கள் எடுத்து ஆல்பமாக்கியிருக்கிறேன்.
ஃபிலிம் சுருள்களை டெவலெப் செய்து ப்ரிண்ட் போடுவதற்கு ஏராளமாக செலவாகும். நான் எக்ஸ்ரே
படிப்பு படித்தபோது புகைப்படம் எடுப்பது, டெவலப் செய்வது, இருட்டறையில் கழுவி ப்ரிண்ட்
போடுவது பற்றி கற்பிக்கும் ஒரு பாடம் இருந்தது. ஆனால் அத்துறையில் என்னால் அதிக அனுபவம்
அடையமுடியாமல் போய்விட்டது. டிஜிட்டல் நிக்கான் காமிரா வாங்கிய பிறகு படமெடுப்பதும்
பாதுகாப்பதும் எளிதாகிவிட்டது. எல்லாவற்றையும் எளிதாக ஒரு பென்டிரைவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
டிஜிட்டல்முறையில் ஹம்பியை மட்டும் நான் முந்நூறு படங்கள் எடுத்திருக்கிறேன். ஆசை காரணமாக, இந்தப் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது ஒருமுறை கல்கத்தாவில்
உள்ள விக்டோரியா மெமோரியலின் ஓவியக்கூடத்தில்
உள்ள தாமஸ் வில்லியம் டானியல் சகோதரர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் தீட்டிய ஓவியங்களின்
பிரதிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்தருணத்தில் பெற்ற உந்துதலின் விளைவாகத்தான்
‘தமிழகக்கோட்டைகள்’ என்னும் புத்தகத்தை பயண அனுபவங்களின் தொகுப்பாக எழுதினேன். பயணம், வரலாறு, சிற்பம், ஓவியம், கட்டடக்கலை என
பல அம்சங்கள் இணைந்த புத்தகமாக அது அமைந்தது. கோட்டைகள் என்பதுதான் அந்தப் புத்தகத்தின்
மையம் என்பதால், அது சார்ந்த அம்சங்களுக்கு மட்டுமே அப்புத்தகத்தில் முக்கியத்துவம்
அளிக்க முடிந்தது. அவற்றுக்கு அப்பால் நான் கற்றுக்கொண்ட, சேகரித்த, உய்த்துணர்ந்த
பல விஷயங்கள் அப்படியே ஒரு பெரும்பாரமாக நெஞ்சிலேயே தேங்கிக் கிடந்தன. அப்படிப்பட்ட
ஒரு நேரத்தில் பேசும் புதிய சக்தியின் இதழாசிரியர் ஜெயகாந்தன் கலை, கோவில் சிற்பம்,
ஓவியம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒரு தொடரை எழுதும்படி கேட்டுக்கொண்டார். மனபாரத்தை
இறக்கிவைக்க ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு, அது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
என் பென் டிரைவ்களில் சேமித்து வைத்திருந்த படங்களையெல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்து,
பழைய கணங்களையும் எண்ணங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்து அசைபோட்டேன். சிற்பம், ஓவியம்,
கட்டிடம் என்ற மனிதக் கலைவெளிப்பாடுகளை அவற்றின் கலை வடிவத்துக்கான ஊடகங்கள் (மீடியம்கள்)
வழியாகச் சொல்லலாம் என நினைத்து எழுதத் தொடங்கிவிட்டேன். குகைமனித ஓவியம், சுடுமண், மரம், கல், சுதை, சுண்ணாம்புக்காரை
என தொகுத்துக்கொண்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக எழுதிவந்த தொடர் இப்போதுதான் முடிந்தது.
இவை அனைத்தும் நான் கண்ணால் பார்த்தவை, ரசித்தவை. இதே வகைமைகளில் நான் பார்க்காதவை
ஏராளமாக இருக்கின்றன. அவறை நான் எழுதவில்லை. இத்தொடரின் வழியாக உத்வேகம் பெறுபவர்கள்
அவற்றை நாடிச் செல்லவேண்டும். அப்போதுதான் அது ஒரு தொடர்பயணமாக அமையும்.
நேரடி அனுபவங்கள் வழியாக ஒரு கலைப்பயணத்தைப் பகிர்ந்துகொள்வது என்பது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அதை ஒரு வரையறையாக வகுத்துக்கொள்வதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?
அந்த வரையறை ஒரு மனிதனுக்கு மிகமிக முக்கியம் என்பது என்
எண்ணம். அது என் இயல்பு. திரைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கட்டுமானங்கள், கோட்டைகள்
என நான் எழுதியிருப்பவை அனைத்தும் நான் பார்த்தவையே. மகாபலிபுரத்துக்கும் காஞ்சிபுரத்துக்கும்
மட்டுமே என்னுடைய புகைப்பட நண்பரோடு சேர்ந்து பத்து முறைக்கும் மேலாகச் சென்றிருக்கிறேன்.
காஞ்சிபுரத்தில் தான்தோன்றீசுவரர் கோவில் பல்லவர் காலத்தில் மணற்கல் பாணியில் எழுப்பப்பட்ட
கோவிலாகும். இக்கோவில் சுவரில் ஆளுயரத்துக்கு செதுக்கப்பட்ட மிக அரிய மணற்கல் புடைப்புச்சிற்பங்கள்
கொண்ட நான்கு சட்டகங்கள் இருக்கின்றன. அவை
கபாலிகர்கள் மது அருந்திவிட்டு ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து கூத்தாடும் சித்தரிப்பு. அகக்கூத்து புறக்கூத்து காட்சிகளாக செதுக்கப்பட்டவை. காளாமுகச் சைவர்களை உருவகிக்கும் சிற்பங்கள் வேறெங்கும்
உள்ளதா என்று தெரியவில்லை. இச்சிற்பங்களை பல்வேறு கோணங்களில் வெயில் வரும் நேரத்துக்குக்
காத்திருந்து படமெடுக்கவென்றே நான்குமுறை அந்தக் கோவிலுக்குச் சென்றேன். ஒரு புத்தகத்தைப்பற்றி
அதைப் படிக்காமல் பேசவோ, எழுதவோ முடியாது அல்லவா? ஒரு சினிமாவைக்கூட பார்க்காமல் எப்படிப்
பேசமுடியும்? அதே வழிமுறையைத்தான் சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் நான் கடைபிடிக்கிறேன். ஓவியங்கள், சிற்பங்கள், கோவில்கள் என அனைத்தையும்
ஒன்றுக்கு பலமுறை பார்ப்பது என் இயல்பு. அதைப்பற்றி
எழுதுவதும் என் இயல்பு.
இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் கலைச்செல்வங்கள் பல இடங்களில்
சிதறிக் கிடக்கின்றன. அனைத்தையும் பார்க்க நமக்கு ஆசையாக இருந்தாலும் அவற்றுக்கெல்லாம்
நேரக்கட்டுப்பாடு, செலவுக்கட்டுப்பாடு என பலவிதமான சிக்கல்களில் சிக்கித் தவிக்கும்
நடுத்தட்டு வாழ்க்கை இடம்கொடுப்பதில்லை என்பது எனக்கும் புரிகிறது. உங்கள் பயணங்களில்
நீங்கள் பார்த்து ரசித்த இடங்களும் பார்க்காமல் விட்ட இடங்களும் என்னென்ன?
தாஜ்மகாலை நான் பார்த்ததில்லை என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா?
பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டைகளையும் நான்
பார்த்ததில்லை. அஜந்தாவைப் பார்த்தவன் எல்லோராவைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டேன்.
எலிஃபண்டா பார்த்தவன் அவுரங்காபாத் கோட்டையையும் புனேயில் உள்ள பெளத்த குகைக்கோவில்
சிற்பங்களையும் கொனார்க், பூரி, கஜுரோஹோவைப் பார்க்கவில்லை. மைசூரில் மானசகங்கோத்ரி பல்கலைக்கழக வளாகத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் கிராமிய மியூசியம் மிக அற்புதமான இடம். அவற்றை நான் இருமுறை
பார்த்திருக்கிறேன். அங்கு இலக்கிய வகுப்பறைக்கூடமொன்றில் கர்நாடகத்தின் புகழ்பெற்ற
ஓவியரான கே.கிருஷ்ண ஹெப்பார் தீட்டிய ‘புத்தரின் பயணம்’ என்னும் தைலவண்ண ஓவியம் வைக்கப்பட்டிருக்கிறது.
நான் மூன்றுமுறை சென்று அதைப் பார்த்தேன். விக்டோரியா மெமோரியலைப் பார்க்கவேண்டும்
என்பதற்காகவே நான் இரண்டுமுறை கல்கத்தாவுக்குச்
சென்றுவந்தேன். மகாபலிபுரத்தில் தர்மராஜா குடைவரைக்கோயிலின்
முதலிரண்டு மேல் தளங்களில் உள்ள சிவபுராணச் சிற்பங்களை காலை ஆறுமணிக்கு ஒருமுறையும்
ஒன்பது மணிக்கு மேல் இன்னொருமுறையும் படமெடுத்திருக்கிறேன். இன்னொரு செய்தியையும் இங்கு
குறிப்பிட விரும்புகிறேன். தஞ்சை பெருவுடையார் கோவில், தாராசுரம் கோவில், கங்கைகொண்ட
சோழபுரம், மதுரை, கிருஷ்ணாபுரம், ஆவுடையார் கோவில் போன்ற பிரும்மாண்டமான கோவில்களுக்கெல்லாம்
நான் சென்று வந்திருக்கிறேன். அவற்றின் சிற்ப அழகில் மயங்கியிருக்கிறேன். ஆனால் நான்
அவற்றைப்பற்றியெல்லாம் எழுதவில்லை. ஏற்கனவே பலர் எழுதிய விஷயங்களை நாமும் எழுதுவதில்
எந்தச் சிறப்பும் இல்லை. ஒருவேளை எழுத நேரிட்டால்,
அவர்கள் சொல்லாதுவிட்ட கூறுகளை யோசித்துப் பார்த்து, அவற்றைமட்டுமே சொல்ல முயற்சி செய்வேன்.
பல எழுத்தாளர்களுக்கு ஓவியம், சிற்பம், இசை என பிற கலைத்துறைகள்
சார்ந்து ஆழ்ந்த ஈடுபாடே இருப்பதில்லை. எல்லாத் துறைகள் சார்ந்தும் உங்களுக்கு அமைந்திருக்கும்
ஈடுபாடு, உங்களைத் தனித்துவம் வாய்ந்த படைப்பாளியாக உணரவைக்கிறது. பிற துறை ஈடுபாடுகள்
உங்களுக்கு எப்படி ஏற்பட்டன? அவற்றை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இசை, நடனம், ஓவியம், இலக்கியம்
என ஏதோ ஒன்றின் மீதான நாட்டம் ஆழ்ந்து புதைந்துதான் இருக்கும். ஏதோ ஒரு புறத்தூண்டுதல்
சரியாக அமைந்துவிடும்போது, அது தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிறது. சிலருக்கு இப்படிப்பட்ட
தூண்டுதல் அமைகிறது. சிலருக்கு அமையாமல் போகிறது. அதுதான் வேறுபாடு. என் மூத்த அக்காவுக்கு செவ்வியல் இசையில் பயிற்சி
அளிப்பதற்காக ஓர் இசையாசிரியர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். அவர் சேலம் மாடர்ன்
தியேட்டர்ஸ் எடுத்த சில திரைப்படங்களுக்கு
இசையமைத்தவர். அவர் அக்காவுக்கு இசை சொல்லிக்கொடுக்கும்போது நானும் ஆர்வமுடன் கவனிப்பேன்.
அக்காவைப்போலவே நானும் பாடலை மனப்பாடம் செய்வேன். குளியலறையில் தனிமையில் பாடிப் பார்ப்பேன்.
பிறகு பள்ளியில் படிக்கும்போது ஏத்தாப்பூர் சீனிவாசன் என்பவர் ஏழைப்பிள்ளைகளுக்கு இலவசமாக
கர்னாடக இசைப்பயிற்சி அளித்தபோது நானும் போய் அவரிடம் கற்றுக்கொண்டேன். பாட்டுப்போட்டிகளில்
நிறைய பரிசு வாங்கினேன். ஒருமுறை தமிழ்த்திரைப்படமொன்றில் மகாதேவன் இசையில் ஏ.எம்.ராஜா
குழுவினரோடு கோரஸ் பாட்டில் பாடியிருக்கிறேன். இந்தக் குறைந்தபட்ச இசையறிவு, பல கர்னாடக,
இந்துஸ்தானி கச்சேரிகளுக்குச் சென்று கேட்க உதவியாக இருந்தது. அதுவும் வளர்ந்து பல்வேறு
சிம்பனிகள், பாப், ஜாஸ் வரை கேட்டு ரசித்தேன். பல இந்திய இசைக்கலைஞர்களும் அயல்நாட்டு
இசைக்கலைஞர்களும் வெளியிட்ட இசை குறுந்தகடுகள் என் வீட்டில் ஏராளமாக உள்ளன.
என்னுடைய இளமைக்காலத்தில் சில ஆண்டுகள் மேச்சேரியில் கழித்திருக்கிறேன்.
அங்கு திரெளபதை அம்மன் கோவில் வளாகத்தில் விழா சமயத்தில் குருக்ஷேத்திரப்போர் தொடர்பான
ஓவியங்களைத் தீட்டி வைத்திருந்தார்கள். நான் அவற்றை ஆவலோடு பார்ப்பேன். ஒருமுறை அந்த
ஓவியர் வில்லினை கீழே போட்டுவிட்டு கைகட்டி நிற்கும் அர்ஜுனனின் ஓவியத்தைத் தீட்டியிருந்தார்.
ஒருபுறம் குதிரைகள் பூட்டிய தேர். மறுபுறம் கைநீட்டி உபதேசித்து கட்டளையிடும் கண்ணன்.
அது ஓர் அரிய ஓவியம். என் நெஞ்சில் அப்படியே பதிந்துவிட்டது. ‘வில்லினை எடடா அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் புழுதியாக்கடா’ என்ற பாரதியாரின் வரிகள் அதற்குக் கீழே எழுதப்பட்டிருக்கும்.
நான் அந்த ஓவியத்தைப் பார்த்து என் நோட்டுப்புத்தகத்தில் அப்படியே தீட்டிவைத்துக்கொண்டேன் அங்கு நடக்கும் தெருக்கூத்துகள் அருமையாக இருக்கும்.
கூத்துக்கலைஞர்களின் ஒப்பனை, உடை எல்லாமே வண்ணமயமாக இருக்கும். அவை என்னை பெரிதும்
ஈர்த்தன. பன்னிரண்டு மெழுகுவண்ண கிரேயான்கள் கொண்ட ஒரு பெட்டியை வாங்கிவைத்துக்கொண்டு
நோட்டுகளிலிருந்து காகிதங்களைக் கிழித்தெடுத்து படங்கள் வரைந்துவரைந்து பழகுவேன். காந்தி, ராஜாஜி படங்களுக்கு தாடி, மீசை, கிரீடம்
வைத்து கையில் வில்லையும் கதாயுதத்தையும் ஏந்த வைத்து அவர்களைக் கூத்துப் பாத்திரங்களாக
மாற்றிவிடுவேன். பிறகு வேடதாரிகளின் அபிநயங்களை நினைவுக்குக் கொண்டுவந்து வரைந்து பார்க்கத்
தொடங்கினேன். வகுப்பு ஆசிரியர்களையும் மாணவர்களையும் பார்த்து வரைவேன். பள்ளியில் நடைபெற்ற
பல ஓவியப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றேன். ஓவியம் கற்பதற்காகவே சென்னைக்கு
வந்து தொலைபேசித்துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். மலையாள இலக்கிய இதழான சமீக்ஷாவின்
ஆசிரியர் எம்.கோவிந்தன் அப்போது என் அறைக்கு எதிர்வீட்டில் இருந்தார். அவருடைய நட்பின்
விளைவாக சென்னை கைவினைப்பள்ளியின் தலைவரான கே.சி.எஸ்.பணிக்கரின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது நடந்துவந்த இரண்டாண்டு மாலை வகுப்பில் சேர்ந்து ஓவியம் கற்றுக்கொண்டேன். சந்தானராஜ்,
ராணிபூவய்யா, அந்தோணிதாஸ், ராம்கொபால் ஆகிய மாஸ்டர்கள் எங்களுக்கு ஓவியம் கற்பித்தனர்.
படிப்பு முடிந்ததும் பணிக்கரின் அறிவுரைப்படி மெட்ராஸ் ஆர்ட் க்ளப்பில் சேர்ந்து ஓவியப்பயிற்சியில்
ஈடுபட்டேன். ஏறத்தாழ 30 ஓவியக்காட்சிகளில் என்னுடைய படைப்புகள் இடம்பெற்றன. இதன் நீட்சியாகவே சிற்பங்கள் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது.
உங்களுடைய ’ஓவியக்கலை உலகில்’ என்னும் புத்தகத்தை நான் எழுத
வந்த புதிதில் படித்திருக்கிறேன். அதுதான் ரசனை சார்ந்து ஓவியங்களைப் பற்றி தமிழில்
எழுதிய முதல் புத்தகம் என்று நினைக்கிறேன்.
இலக்கியச்சிந்தனை விருது பெற்ற உங்கள் போக்கிடம் நாவல் வெளிவந்த காலகட்டத்திலேயே படைப்புலகுக்கு
அப்பால் சென்று உங்கள் ரசனையின் தேடல் காரணமாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறீர்கள்?
சிறுகதைகளும் நாவல்களும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் இதுபோன்ற ரசனைசார் நூலை எழுதும்
எண்ணம் எப்படி ஏற்பட்டது? அக்காலத்தில் அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
நான் எழுதிய வகைமை சார்ந்து அதை முதல் நூலாகக் கருதலாம்.
ஆனால் அதற்குமுன் தொல்லியல் அறிஞர் க.சிவராமமூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய INDIAN
PAINTINGS என்னும் நூல் எம்.எஸ்.ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட்
வழியாக வெளிவந்திருந்தது. மேலும் டாக்டர் நாகசாமி காஞ்சி கைலாசநாதர் கோவில், சித்தன்ன
வாச்சல், திருப்பருத்திக்குன்றம், ஸ்ரீரங்கம், திருப்புடைமருதூர் கோவில்களின் சுவரோவியங்களை
முன்வைத்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். என்னுடைய புத்தகம் இத்தாலிய கலைமறுமலர்ச்சி
காலத்திலிருந்து ஜென் புத்திச காலம் வரையிலான ஓவியர்களையும் ஓவியங்களையும் அறிமுகப்படுத்தும்
வகையில் 1979இல் வெளிவந்தது. டாவின்சி, மைகேலாஞ்சலோ, ரஃபேல் வெலாஸ்கஸ், ரூபென்ஸ், டிஷியன்,
ரெம்ப்ரெண்ட்,வெர்மீர் என பல கலைஞர்களை மையப்படுத்தி அப்புத்தகத்தை நான் எழுதியிருந்தேன்.
1979இல் எங்களுக்கு மகள் பிறந்தாள். மனைவியும் குழந்தையும் பிறந்த வீட்டிலிருக்க, நான்
வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியின் தூண்டுதலால் ஓவியக்கலை
புத்தகத்தை குறுகிய காலத்தில் எழுதிமுடித்தேன். ஆனால் அப்புத்தகம் வெளிவந்த சமயத்தில்
ஓர் ஓவியம் கூட இல்லாமலேயே வெளிவந்தது. அப்புத்தகத்தை
முதல் ஆளாகப் பாராட்டியவர் ஓவியர் ஆதிமூலம். பிறகு அல்ஃபோன்ஸ், ஏ.வி.தனுஷ்கோடி, அச்சுதன்
கூடலூர், சந்தானராஜ் என பலரும் பாராட்டினர். கலை விமர்சகரான இந்திரன் இன்றும் இந்தப்
புத்தகத்தைப்பற்றி நினைவுபடுத்திப் பேசுகிறார். முன்பு சேர்க்கமுடியாத ஓவியங்களோடு
இப்புத்தகத்தை மறுபதிப்பாக ஜெய்ரிகி பதிப்பக நண்பர் சாய்ரமணா தம்புராஜ் வெகுவிரைவில் கொண்டுவர இருக்கிறார்.
அம்ருதா இதழில் ஏறத்தாழ இருபத்தைந்து மாதங்களாக நீங்கள் எழுதிவந்த
தொலைபேசி நாட்கள் என்னும் தொடர் முடிவடைந்து புத்தகமாகவும் வந்துவிட்டது. துறை சார்ந்த
அனுபவங்கள் என்ற சொல்லோடு அப்புத்தகத்தைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. ஒருபுறம்
சென்னையில் தொலைபேசி நிலையம் வளர்ந்த வரலாற்றையும் சென்னை வரலாற்றையும் மறுபுறம் தொலைபேசி
நிலையத்தால் பெற்ற நட்புகளால் கிடைத்த அனுபவங்களையும் இணைத்துப் பின்னிய அழகானதொரு
ஆவணம் என்றே சொல்லவேண்டும். பணியிடங்களில் உங்களுக்கு அமைந்த நட்புச்சூழல் உங்களை மிகப்பெரிய
பேறு பெற்றவராக நினைக்க வைக்கிறது? இந்த நட்பை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்? இன்றும்
அந்த நட்பு தொடர்கிறதா? அவர்களில் யாரைப்பற்றியாவ்து நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல
விரும்புகிறீர்களா?
இயல்பாகவே திறந்த மனத்துடன் கலகலப்பாக பேசிப் பழகும் சுபாவம்
உள்ள எனக்கு எப்போதும் நட்புச்சூழல் இயற்கையாகவே எளிதாக அமைந்துவிடும். அது ஒரு காரணம். என் தொழிற்சங்கத் தொடர்பு இன்னொரு
காரணம். தொழிற்சங்கம் சார்பாக ஆண்டுதோறும்
நிகழும் மாநிலமாநாடும் அகில இந்திய மாநாடும் மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். தொலைபேசித்துறை
வழியாக எனக்குக் கிடைத்த நட்புவட்டம் ஒரு பெரிய செல்வத்தைவிட மேலானது. தினகரபாண்டியன்
என்றொரு நண்பர். என்னோடு பணியில் இருந்தவர். காலமாகிவிட்டார். ஏ.கே.வி. என்று அழைக்கப்படும்
ஏ.கே.வீரராகவன் தொலைபேசி இன்ஸ்பெக்டராக இருந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்
இருந்தவர். பணிநிறைவுக்குப் பிறகு தீக்கதிர் நாளேட்டில் உதவி செய்தார். சென்னை தொழிற்சங்கத்தில்
முக்கியமான தூண். அவருடைய வீட்டின் பின்பகுதியில் நான் இரண்டாண்டு காலம் வாடகைக்குக்
குடியிருந்தேன். அவருடைய நேர்மை, சேவை, கொள்கைப்பற்று ஆகியவற்றையெல்லாம் மறக்கவே முடியாது.
இப்போது உயிருடன் இல்லை. சா.மாணிக்கம் என்றொரு தோழர். சென்னையில் என் வாழ்க்கையில்
காலூன்ற பல வகைகளிலும் உதவியவர். இன்றும் தொடர்பில் இருக்கிறார். எம்.கோவிந்தராஜன்
என்றொரு தோழர். நாங்கள் அவரை செல்லமாக எம்.ஜி.ஆர். என்று அழைப்போம். நாடகம் போட்டு நடிப்பார். பாடுவார். பல திறமை உள்ளவர்.
உதவிப் பொறியாளர் நிலைவரைக்கும் உயர்ந்து பணிநிறைவு செய்தவர். இப்போதும் ஓய்வூதியதாரர்களுக்கான
தொழிற்சங்கத்தில் தொண்டாற்றி வருகிறார். மற்றொரு
நல்ல தோழர் ஸ்ரீதர். நடிகர் ஜெமினிகணேசன் அபிமானி. ஜெமினி ஸ்ரீதர் என்றே நாங்கள் அவரை
அழைப்போம். சமீபத்தில் சென்னைக்குச் சென்றிருந்தபோது இவர்கள் அனைவரையும் பார்த்து,
பேசி, விருந்துண்டது இனிய அனுபவம். சிலர் மறைந்துவிட்டனர்.
சிலர் இன்னும் இருக்கின்றனர். அனைவரோடும் நான் தொடர்பில் இருக்கிறேன்.
தொலைபேசித்துறையில் பணிபுரிந்துவந்த காலத்தில் நீங்கள் தொழிற்சங்கத்திலும்
சிறப்பான பங்காற்றியிருக்கிறீர்கள். அப்போதுதான் நீங்கள் எழுதிய காம்ரேடுகள் நாவலும்
வெளிவந்திருக்கிறது. அந்த நாவல் அன்றைய தமிழ் வாசகச் சூழலிலும் உங்கள் அலுவலகச்சூழலிலும்
நட்புச்சூழலிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
காம்ரேடுகள் நாவலின் நாயகன் என் அறைநண்பர். என்னோடு பணியாற்றியவர்.
பெரிய தொழிற்சங்கவாதி. பெயர் பிரசன்னா. அந்த நாவலில் நானும் ஒரு பாத்திரமாக நடமாடுகிறேன்.
அந்த நாவலுக்கு அப்போது தீக்கதிர் இதழின் ஆசிரியராக இருந்த அகத்தியலிங்கம் விரிவான
ஓர் அறிமுகக்கட்டுரையை எழுதியிருந்தார். சமீபத்தில் ஓசூரில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது
அதை நினைவுபடுத்தி உரையாடினார். என்னுடைய ‘நிலநடுக்கோடு’ நாவலுக்கும் அவரே முதல் விமர்சனக்
கட்டுரையை எழுதினார். என்னுடன் பணியாற்றிய பலருக்கும் அந்த நாவல் பிடித்திருந்தது.
நாடகக்கலைஞரான கோபாலி என்பவர் அந்த நாவலுக்கு அப்போது இந்தியா டுடே இதழில் ஒரு விமர்சனக்கட்டுரையை
எழுதியிருந்தார். தொழிற்சங்க வாசகர்களில் தோழர் ஜெகன் அவர்களும் தோழர் ஏ.கே.வீ. அவர்களும்
நாவல் பிடித்திருந்ததாகவே சொன்னார்கள். காம்ரேடுகள் நாவலின் காலம் பொதுவுடைமை கட்சி
கருத்தியல் அடிப்படையில் இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த காலம். எங்கள் தொழிற்சங்கம்
வலது அணியிலிருந்தது. அதிருப்தியாளர்கள் என கருதப்பட்ட இடது அணியினரான ஏ.கே.வீரராகவன்,
சந்திரசேகரன் போன்றவர்களோடு இணைந்த இளைஞர்களில் நானும் ஒருவன். அச்சூழலில் காம்ரேடுகளில்
சில பாத்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சில விமர்சனச்சொற்களை அந்தந்த பாத்திரங்களின்
தன்மைக்கேற்ப எழுதியிருப்பேன். பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரானவர்கள் இந்த அம்சத்தைத்
தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு நாவலை வேறு விதமாக மதிப்பிட்டனர். ஆனால் இலக்கியவட்டத்துக்குள்
ஆளுமைகளாக இருந்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், சா.கந்தசாமி ஒருவரும்
அந்த நாவலைப் பொருட்படுத்தவில்லை.
புக்
டே இணையதளத்தில் எழுதிவரும் ‘பயோஸ்கோப்காரன்’ தொடரும் கிட்டத்தட்ட நிறைவெய்தும் புள்ளிக்கு
வந்துவிட்டது. பால்ய வயதில் கீற்றுக்கொட்டகையில் படம் பார்க்கத் தொடங்கும் ஒரு சிறுவன்,
வளர்ந்து பெரியவனாகி சென்னைக்கு வந்து திரையரங்கிலும் திரைப்படக்கழகங்களிலும் திரைப்பட
விழாக்களிலும் தன் ரசனைக்கேற்ற விதமாக திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பவனாக
வளர்ந்த அனுபவத்தைச் சொல்வதுபோல இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற
பிற நாடுகளில் எடுக்கப்பட்ட சாதனைத்திரைப்படங்களை அறிமுகப்படுத்திய முக்கியமான தொடர். இளமையில் உங்கள் நெஞ்சில் திரைப்பட ஆர்வம் எழுவதற்கு
இசைவாக இருந்த சூழலைப் பற்றிச் சொல்கிறீர்களா?
இதையெல்லாம் மிக விரிவாகவே பயாஸ்கோப்காரன் அத்தியாயங்களில்
சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் கட்டுமானத் திரையரங்குகளை மாவட்டத்தலைநகரங்களில்
மட்டுமே காணமுடியும். பிற இடங்களில் சர்க்கஸ் கூடாரம் போன்ற துணிக்கூடாரங்கள்தான்.
சிற்றூர்களில் அவற்றை டெண்ட் என்றே அழைப்பார்கள். துணிக்கூடாரம் மறைந்து தென்னங்கீற்றுக்
கொட்டகை வந்தது. மக்கள் அதை டெண்ட் கொட்டாய் என்று குறிப்பிட்டனர். எங்கள் குடும்பச்சூழல்தான்
என் இளமையில் திரைப்படங்கள் மீது ஆர்வம் எழுவதற்கு
முக்கியக்காரணம். இசைப்பயிற்சியும் நடனப்பயிற்சியும்
பெற்ற என் மூத்த அக்கா திரைப்படத்தில் நடிக்க விரும்பினாள். அவருக்கு இசை கற்பித்தவர்
திரைப்படங்களுக்கு இசை அமைப்பவர். அதனால் அவர் பரிந்துரையின் பேரில் மாடர்ன் தியேட்டர்ஸ்
படங்களில் நடிக்கவும் நடனமாடவும் வாய்ப்புகள் கிடைத்தன. அக்காலத்தில் குடும்பத்தோடு
புறப்பட்டுப் போய் திரைப்படம் பார்ப்பது ஒரு வழக்கமாக இருந்தது. சில சமயங்களில் பக்கத்து ஊர்களுக்கு வண்டி கட்டிக்கொண்டு
போய் படம் பார்த்துவிட்டு வருவோம். சேலத்துக்கு
குடும்பமாகச் சென்று சத்திரத்தில் தங்கி, சினிமா பார்த்துவிட்டு திரும்புவோம். இப்படித்தான்
நான் வளர்ந்த சூழல் இருந்தது.
நீங்கள் மிகவும் விரும்பும் சென்னையையும் சென்னை நண்பர்களையும்
விட்டு குடும்பநலன் கருதி பெங்களூருக்கு வந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன?
இந்த இடப்பெயர்ச்சியை உங்கள் மனம் எப்படி எதிர்கொள்கிறது?
கருப்புத்துணியால் என் இரு கண்களையும் கட்டி என்னைக் கொண்டுபோய்
சென்னையில் எங்காவது விட்டுவிடுங்கள். அப்போதும் அந்தக் கண்கட்டை அவிழ்க்காமலேயே என்னால்
நினைத்த இடத்துக்குச் சென்று சேர்ந்துவிட முடியும். மின்சார ரயில், மெட்ரோ, பஸ், வெள்ளைநிற ஷேர் ஆட்டோ என எதிலும் ஏறி இறங்கி பயணம் செல்லமுடியும். ஆனால்
பதினைந்து ஆண்டுகளாக இந்தப் பெங்களூரில் இருக்கிறேன். எனினும் இங்கு கண்ணைத் திறந்துகொண்டு
கூட என்னால் எங்கும் செல்லமுடியாது. எங்கே சென்றாலும் எந்த இடத்துக்கும் நாயாய் பேயாய்
அலைந்து விசாரித்து அவஸ்தைப்படாமல் போய்ச் சேரவே முடியாது. எனக்கு இன்னும் திசையே புரியாத
இந்தப் பெருநகரம் ஒத்துவரவில்லை என்பதுதான் சோகமான உண்மை.
உங்கள்
வீட்டு வாசலில், பழைய சைக்கிள்கால அனுபவங்களின் சாட்சியாக நின்றிருக்கும் பழைய சைக்கிளைப்
பார்க்கும்போதெல்லாம் நெருக்கடியான சென்னைத் தெருக்களில் நீங்கள் சைக்கிளை எப்படித்தான்
ஓட்டினீர்களோ என்று தோன்றும். உங்கள் சைக்கிள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இந்த சைக்கிளுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.
அந்தக் காலத்தில் தொலைபேசித் துறையில் ஊழியர்கள் சைக்கிள் வாங்கிக்கொள்ள இருநூறு ரூபாய்
கடன் அளிப்பார்கள். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருபது ரூபாய் என பத்து மாதத்தில்
அந்தக் கடனை அடைக்கவேண்டும். ஆனால் அந்தத் தொகைக்கு கடைத்தெருவில் புது சைக்கிள் கிடைக்காது.
பழைய சைக்கிள்தான் கிடைக்கும். அதற்கும் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட்ட
ரசீதை வாங்கிவந்து அலுவலகத்தில் கொடுக்கவேண்டும். எனக்கு கடன் கிடைத்தபோது கூடுதலாகச்
செலவு செய்து புதுசைக்கிள் வாங்க வழியில்லை. அப்போது என்னோடு பணிபுரிந்த குண்டு சிவப்பிரகாசம் என்பவர் தான் ஏற்கனவே வாங்கிய
செக்கண்ட் ஹாண்ட் சைக்கிளை விற்பதற்கு ஆள் பார்த்துக்கொண்டிருந்தார். அது இங்கிலாந்து
நாட்டிங்ஹாமில் செய்யப்பட்ட அசலான ராலி சைக்கிள். த்ரீ ஸ்பீட் வசதி. ட்ரம் ப்ரேக் இருந்தது.
ட்ரமுக்குள்ளேயே விளக்கெரிய வைக்க ஒரு காயிலும் இருந்தது. தர்ட் ஹேண்டாக இருந்தாலும்
பரவாயில்லை என இருநூறு ரூபாயைக் கொடுத்து அந்த சைக்கிளை வாங்கிக்கொண்டேன். அவர் அதை
விற்றதற்குக் காரணத்தை அதற்குப் பிறகுதான் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அந்த
சைக்கிள் பழுதானால், பழுது பார்க்கத் தேவையான உதிரி பாகங்கள் கடைதெருவிலேயே இல்லை என்பதுதான்
காரணம். என்னை ஏமாளி என நினைத்து என் தலையில் கட்டிவிட்டார். மலிவாகக் கிடைக்கிறதே
என நானும் வாங்கிவிட்டேன். அந்த சைக்கிளில் கியர் மாற்றும் வசதியும் இருந்தது. பரங்கிமலை
தேவாலயத்துக்குச் செல்லும் மலைப்பாதையில் டாப் கியரில் மாற்றி சிரமமே இல்லாமல் சைக்கிளை
ஓட்டிக்கொண்டு செல்லலாம். இறங்கும்போது லோயர் கியருக்கு மாற்றி சிரமப்படாமல் இறங்கிவிடலாம்.
சிறிது காலம் வரைக்கும் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருமுறை லஸ்ஸில்
இருக்கும் சாந்திவிகாருக்குச் சென்று சாப்பிட்டு வருவதற்காக சைக்கிளை வாங்கிக்கொண்டு
சென்றார் ஒரு நண்பர். ஓட்டலுக்கு வெளியே சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டார்.
அப்போது கியர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்பீடாமீட்டர் மீது யாரோ ஒரு
வழிப்போக்கனின் கண் விழுந்துவிட்டது. ஒருவருக்கும் தெரியாமல் அப்படியே வெட்டி எடுத்துக்கொண்டு
சென்றுவிட்டான். கியரை இயக்காமல் வண்டியை இயக்கமுடியாது. அவர் அஞ்சிக்கொண்டே என்னிடம்
கொண்டுவந்து சைக்கிளைக் கொடுத்துவிட்டார். நான் அதை எடுத்துக்கொண்டு பழுது பார்ப்பவரிடம்
சென்றேன். அவரோ எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்துவிட்டு நாட்டிங்ஹாமுக்கே சென்றுதான்
பழுது பார்த்து எடுத்துவர வேண்டும் என்று சொல்லிவிட்டார். பிறகு நான் கெஞ்சிக் கேட்ட
காரணத்தால் அவர் எப்படியோ தன் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு கியரில் மட்டும் ஓடும்வகையில்
வடிவமைத்துக் கொடுத்தார். அதுவும் சில ஆண்டுகளில் சிக்கலைக் கொடுக்கத் தொடங்கியது.
அதே தொழிலாளி எல்லாவற்றையும் உருவி எடுத்துவிட்டு சாதாரண மிதிவண்டியாக மாற்றிக் கொடுத்தார்.
அந்த மாதிரியே பல ஆண்டுகள் சென்னைத் தெருக்களில் ஓட்டினேன். சென்னை வீட்டை விற்றபோதுகூட
எனக்கு சைக்கிளை விற்க மனம் வரவில்லை. பெங்களூருக்கு எடுத்து வந்தேன். ஆரம்பத்தில்
ஒரு சில மாதங்கள் இங்கும் ஓட்டிப் பார்த்தேன். ஆனால் இங்குள்ள போக்குவரத்து நெருக்கடிகளுக்கு
நடுவில் சைக்கிளை தொடர்ந்து ஓட்டுவது சாத்தியப்படவில்லை. அதே சமயத்தில் அதைக் கழித்துக்
கட்டவும் மனம் வரவில்லை. இப்போது என் பழங்காலத்தின் நினைவுச்சின்னத்தைப்போல வீட்டு
வாசலில் முழு ஓய்வில் நிற்கிறது. அதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
உங்களுடைய
எதிர்கால எழுத்துத்திட்டங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?
பேசும் புதிய சக்தி, நிழல், அம்ருதா ஆகிய இதழ்களில் எழுதி
வந்த தொடர்கள் சமீபத்தில்தான் அடுத்தடுத்து
முடிவுற்றன. பயாஸ்கோப்காரன் தொடருக்கு மட்டும்
இன்னும் நாலைந்து அத்தியாயங்கள் எழுதவேண்டும்.
அதை நிறைவு செய்ததும் என் கண் பிரச்சினையைக் கவனிக்கவேண்டும். பல்லிலும் பிரச்சினை
உள்ளது. எல்லாவ்வற்றையும் சரிசெய்துகொள்ள இரண்டுமூன்று
மாதங்கள் தேவைப்படும். அதற்குப் பிறகு முழுவீச்சோடு எழுதத் தொடங்குவேன். ஏறத்தாழ முப்பது
சிறுகதைகள் எழுதும் அளவுக்கு குறிப்புகள் வைத்திருக்கிறேன். மூன்று நாவல்களை எழுதும்
திட்டமும் உண்டு. இங்கு வீட்டில் தனிமையில்
இருக்கிறேன். வீட்டுவேலை, கடைகண்ணிக்கு ஓடுதல், சமையல் என எல்லா வேலைகளையும் நான்தான்
பார்த்துக்கொள்கிறேன். ஒரு நாளில் நீண்ட நேரத்தை அது எடுத்துக்கொள்கிறது. சிற்சில சமயங்களில்
மன அழுத்தமும் ஏற்படும். அப்போதெல்லாம் நண்பர்களை அழைத்து உரையாடி சோர்வு அண்டாத வகையில்
உற்சாகத்தைத் திரட்டிக்கொள்வேன். அந்த உற்சாகம்தான் என்னை இயக்கும் மூலவிசை.
(புத்தகம்
பேசுது – மே 2024)