Home

Saturday, 4 May 2024

சரோஜினி தேவி : இந்தியப்பெண் என்னும் அடையாளம்

 

முப்பத்தொன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு லக்னோவில் 26.12.1916 முதல் 30.12.1916 வரை அம்பிகா சரண் மஜும்தார் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காந்தியடிகள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் அயல்நாட்டுக்குத் தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக, அதுவரை அரசாங்கம் பின்பற்றி வந்த நடைமுறையை எதிர்த்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அந்தத் திட்டத்தின் கீழ் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் மரபை உடனடியாக அரசு கைவிடவேண்டும் என்றும் குரல் கொடுத்தார். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு பார்வையாளர்களிடமிருந்து மகத்தான ஆதரவும் கிடைத்தது.

அதே மாநாட்டில் சுயராஜ்ஜியத்தைக் குறித்து ஒரு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதையொட்டிய விவாதத்தில் பலரும் கலந்துகொண்டு தம் கருத்துகளைத் தெரிவித்தனர். அச்சமயத்தில் ஒரு பெண்மணி அரங்கில் இருப்பவரைக் கவரும் வகையில் உணர்ச்சிமயமாக உரையாற்றினார். அப்போது இந்தியர்கள் தம்மிடம் ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்றொரு சட்டம் நடைமுறையில் இருந்தது. அப்பெண்மணி தம் உரையில் அச்சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தார் ஆங்கில மொழியில் அமைந்த அவருடைய உரை அனைவரையும் கவர்ந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கவர்னர் ஜேம்ஸ் மெஸ்டன் அவருடைய ஆங்கில உரையைப் பாராட்டி வாழ்த்துரைத்துவிட்டுச் சென்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேருவும் பிற தலைவர்களும் அவருடைய தெளிவான மொழியாற்றலைப் பாராட்டினர்.  அவருடைய உரையைக் கேட்ட காந்தியடிகள்  ஆயுதத்துக்கு வேலையில்லாத அகிம்சை வழியே சுயராஜ்ஜியத்துக்கான போராட்டத்துக்கு சிறந்த வழி என்றும் அதே சமயத்தில் நம் குடிமக்களை அடிமையாக நினைத்து அரசு கொண்டுவரும் எந்தச் சட்டமும் எதிர்க்கத் தக்கதுதான் என்றும்  அவரிடம் தெரிவித்தார்.

இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே கோகலேயின் ஆலோசனையின் பேரில் 1914இல் ஒருமுறை இங்கிலாந்தில் காந்தியடிகளை அந்தப் பெண்மணி சந்தித்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடைய முயற்சியால் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களுக்கு சில முக்கிய உரிமைகள் கிடைக்கும்படி செய்த செயலைப் பாராட்டி அவருக்காக லண்டன்வாழ் இந்தியர்கள் ஒரு கூட்டத்தைத் திரட்டியிருந்தனர். அக்கூட்டத்தில் அந்தப் பெண்மணியும் காந்தியடிகளுடைய சேவைகளைப் பாராட்டிப் பேசினார். அப்போதே அவ்விருவிருவரிடையேயும் அன்பும் மதிப்பும் உருவாகியிருந்தன. அந்தப் பெண்மணியின் பெயர் சரோஜினி தேவி.

இருபது வயதிலேயே நாடறிந்த கவிஞராகிவிட்டார் சரோஜினி தேவி. அவருடைய ஆங்கிலக்கவிதைகள் இலக்கிய ஈடுபாடுள்ள அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டிருந்தன. கவிதைகள் மீது கொண்ட ஈடுபாட்டைப்போலவே, அவருக்கு அரசியலிலும் ஈடுபாடு இருந்தது. முதன்முதலாக 1904ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொண்டார். நாட்டுநடப்புகளைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை உள்வாங்கிக்கொள்ள இம்மாநாடு அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.

1905இல் இந்திய வைசிராயாக இருந்த கர்சன் வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரித்தபோது, ஆட்சியாளரின் சூழ்ச்சியை மக்களுக்கு எடுத்துரைப்பதை தன் கடமையென உணர்ந்த சரோஜினி தேவி முழுநேர அரசியலில் இறங்கினார். உடனே அவர் வங்காளத்துக்குச் சென்று பிரிவினையை எதிர்த்து பல மேடைகளில் குரல் கொடுத்தார். அப்போதுதான் முதன்முதலாக பொதுமக்களிடையில் ஆங்கிலேயர் ஆட்சி குறித்த அதிருப்தியும் எதிர்ப்புணர்ச்சியும் பரவத் தொடங்கின. கல்கத்தாவில் ஒலிக்கத் தொடங்கிய எதிர்ப்புக்குரல் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் பரவியது.

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1906இல் கல்கத்தாவிலேயே கூடியது. சரோஜினிதேவி அந்த மேடையில் மக்களிடையில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படும் வகையில் சிறப்பாக உரையாற்றினார். 1907இல் அவர் கோகலேயைச் சந்தித்தார். சரோஜினிதேவிக்கு தன் எதிர்ப்புணர்வைக் கூர்மைப்படுத்திக்கொள்ள அச்சந்திப்பு பேருதவியாக இருந்தது. “உன் வாழ்க்கை, உன் மதிநுட்பம், உன் கவிதை, உன் பேச்சு, உன் எண்ணம் எல்லாவற்றையும் இந்தத் தேசத்துக்கே அர்ப்பணித்துவிடு” என்று கூறி சரோஜினிதேவிக்கு எழுச்சியூட்டினார் கோகலே. கோகலே ஊட்டிய ஊக்கத்தின் விளைவாக சரோஜினி தேவிக்கு சமூக சேவையிலும் அரசியலிலும் ஈடுபாடு பிறந்தது. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று இளைஞர்கள் அனைவரும் தேசப்பணிகளில் ஆர்வத்துடன் உழைக்கத் தூண்டும் வகையில் எண்ணற்ற மேடைகளில் உரையாற்றினார்.

1915ஆம் ஆண்டில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்று போரிடத் தீர்மானித்தது. பம்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சரோஜினிதேவி, இளைஞர்களிடையே எழுச்சியுரை ஆற்றினார். முக்கியமாக, பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்தது. ஆந்திரப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தாய்நாட்டுப்பற்றைத் தூண்டும் வகையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

1916ஆம் ஆண்டில் லக்னோவில் நடைபெற்ற இந்திய முஸ்லிம் சங்கத்தில் சரோஜினிதேவி சுயராஜ்ஜியம் பற்றிப் பேசினார். அவருடைய சொல்லாற்றல் பல இளைஞர்களின் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாகக் கிடந்த நாட்டுப்பற்றைக் கிளறிவிட்டது. பல கூட்டங்களில் அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து சரோஜினிதேவியும் உரையாற்றினார். அக்கூட்டங்கள் பல தலைவர்களைச் சந்திக்கவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் உதவியாக இருந்தன.  அத்தருணத்தில்தான் அவர் அடுத்தடுத்து தன் தந்தையையும் தாயையும் இழந்தார். அவருடைய தேசபக்திக்குத் தூண்டுகோலாக இருந்தவர் அவர் தந்தை  அவருடைய கவிதையுணர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர் அவர் தாயார். அந்தப் பிரிவுத்துயரை மறக்க இடைவிடாத சுற்றுப்பயணங்களும் இளைஞர்கள் சந்திப்புகளும் அவருக்குப் பெரிதும் உதவின.

சமூகப் போராட்டங்களில் பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்பது சரோஜினிதேவியின் எண்ணமாக இருந்தது. எனவே தான் உரையாற்றும் ஒவ்வொரு மேடையிலும் அவர்கள் பங்கேற்கவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார். 1918 ஆம் ஆண்டு மே மாதத்தில்  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸின் சென்னை மாகாண மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றிய சரோஜினி தேவி,  ''குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் பெண்களின் முக்கியமான கடமைகள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நாளில் அந்தக் கடமைகளைச் செய்துமுடித்த பிறகு எஞ்சியிருக்கும் பொழுதுகளில் உலகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளிலும் பெண்கள் ஈடுபட முயற்சி செய்யவேண்டும். அதை தவறு என எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. . 'என் வீடு,  என்  குடும்பம், என் குழந்தைகள்' என  எல்லோரும் இருந்துவிட்டால், மக்களுக்குச் சேவை செய்ய ஒருவரும் எஞ்சமாட்டார்கள்.  சகோதரிகளே, சொந்தக் கடமைகளை மறக்கவேண்டாம். அதே நேரத்தில்  பொதுப் பணியையும் மறக்கவேண்டாம்''   என்று பெண்களை நோக்கி ஊக்கமூட்டினார்.  

அடுத்து இளைஞர்களை நோக்கி ''இளைஞர்களே,  உங்கள்  செயல்பாடுகள் ஒவ்வொன்றும் உங்கள் வீடு, குடும்பம், உறவினர், கடைத்தெரு, கல்விநிலையம், சாதி, கிராமம், நகரம் என்ற அளவோடு முடிவடைந்துவிடுகின்றன. உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிவடைந்துவிடுகின்றன. இந்த வாழ்க்கையை தன்னலம் படிந்த வாழ்க்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்? மற்றவர்களைத் திரும்பிப் பாராமல், அவர்களைப்பற்றி கவலைப்படாமல் ஒதுங்கும் தன்மையை நீங்கள் முதலில் கைவிட வேண்டும். உங்கள் தெருவில் வசிப்பவர்களை, கிராமத்தில் வசிப்பவர்களை, நகரத்தில் வசிப்பவர்களை, நாட்டில் வசிப்பவர்களை அனைவரையும் சகோதரர்களாகப் பார்த்துப் பழகும் எண்ணம் வரவேண்டும். அந்த எண்ணம் வந்தால்தான் நமக்கு விடுதலை கிடைக்கும்” என்றுரைத்து பொதுவாழ்க்கையில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தார். அவருடைய உரைக்கு நாளடைவில் தக்க பயன் கிடைக்கத் தொடங்கியது. பெண்களும் இளைஞர்களும் தத்தம் பகுதிகளில் சமூகப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இந்தியர்களின் எதிர்ப்பை மீறி ஆங்கிலேய அரசு 1919இல் ரெளலட் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டது. அதை எதிர்த்து இந்தியாவில் எல்லா நகரங்களிலும் எதிர்ப்புப்பேரணிகளும் கூட்டங்களும் நடைபெற்றன. 30.03.1919 அன்று டில்லியில் நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் படுகாயமடைந்தனர். 06.04.1919 அன்று பம்பாயில் நடைபெற்ற எதிர்ப்புக்கூட்டத்தில் காந்தியடிகளும் சரோஜினிதேவியும் ஆங்கிலேய ஆட்சியின் தவறான முடிவுகளை விமர்சித்து உணர்ச்சி ததும்ப சொற்பொழிவாற்றினர். அடுத்தநாள் காந்தியடிகள் டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் பயண வழியிலேயே காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 13.04.1919 அன்று ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவர் தலைமையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தப்பிக்க வழியின்றி எண்ணற்றோர் மரணமடைந்தனர்.

படுகொலையைப்பற்றி விசாரித்த குழு குறைந்த தண்டனையோடு டயரை தப்பிக்கவைத்துவிட்டது. இங்கிலாந்தில் இருந்த ஆங்கிலேயர்கள் இருபதாயிரம் பவுன் அடங்கிய பணப்பையை டயருக்கு விருதுப்பணமாக அனுப்பிவைத்தனர். அந்தச் செய்தி இந்தியரின் கோபத்தைத் தூண்டியது. அம்ரித்சரில் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. காந்தியடிகள், மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோர் துயருற்ற மக்களுக்கு நிவாரணம் அளிக்க தீவிரமாக உழைத்தனர். தம்முடைய சமூக சேவையைப் பாராட்டி ஏற்கனவே அரசாங்கம் தனக்கு அளித்திருந்த தங்கப்பதக்கத்தை சரோஜினிதேவி திருப்பியனுப்பினார்.

படுகொலையைப்பற்றி நேரில் முறையிடுவதற்காக ஹோம்ரூல் இயக்கத்தின் சார்பாக ஒரு குழு இங்கிலாந்துக்குச் சென்றது. சரோஜினிதேவியும் அக்குழுவில் ஒருவர். பஞ்சாப் படுகொலையைப்பற்றி உணர்ச்சி ததும்ப லண்டன் கிங்க்ஸ்வே அரங்கில் அவர் ஓர் உரையை நிகழ்த்தினார். ஆனால் அதையொட்டி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் அவருக்கு ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. எட்வின் மாண்டேகுவை நேரில் சந்தித்து நீண்டதொரு அறிக்கையையும் சமர்ப்பித்தார். ஆனால் சரோஜினி தேவியின் குரல் அரசின் காதுகளை எட்டவில்லை. அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள் என ஒற்றை வரியில் அரசு அதைக் கடந்துபோனது. அவையில் நடைபெற்ற விவாதங்களையும் அரசின் இறுதி அறிவிப்பையும் பற்றி மனம் நொந்து, ஆங்கிலேயர்களின் நீதியுணர்ச்சி மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அங்கிருந்தபடியே  காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார் சரோஜினிதேவி. அதற்குப் பிறகு இங்கிலாந்தில் இருக்க விரும்பாத சரோஜினிதேவி சுவீடன், ஜெனிவா, பாரிசு வழியாக இந்தியாவுக்குத் திரும்பினார். எல்லா இடங்களிலும் அவர் சத்தியாகிரகம் தொடர்பாகவும் இந்திய நாட்டின் நிலையைப்பற்றியும் உரையாற்றினார். 

ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியதும் காங்கிரஸில் இருந்த எல்லாத் தலைவர்களும் தொண்டர்களும் கதராடைகளை அணியத் தொடங்கினர். சரோஜினிதேவியும் கதராடை உடுத்தி மேடைகளில் உரை நிகழ்த்தினார். 1921இல் டிசம்பர் மாதத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டமொன்றில் சித்தரஞ்சன்தாஸ் தலைமை வகிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருடைய தலைமையுரையை சரோஜினிதேவி வாசித்தார். அதே மேடையில் காந்தியடிகள் ‘அரசாங்கத்தோடு ஒத்துழையாதிருத்தல், அரசாங்கம் தடை விதித்தாலும் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், தொண்டர் படையில் சேருதல், கைது செய்யப்பட்டால் அதற்கு அமைதியாக உடன்படுதல்’ போன்ற செயல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார். அவருடைய கூற்றை சரோஜினிதேவி ஆதரித்துப் பேசினார்.

ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் வேகவேகமாகப் பரவி வந்த சூழலில் 04.02.1922 அன்று செளரிசெளரா என்னும் இடத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, காந்தியடிகள் போராட்டத்தை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்தார்.  அடுத்து சில நாட்களிலேயே, பத்திரிகைகளில் அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளைக் காரணமாகக் காட்டி காந்தியடிகளைக் கைது செய்தது அரசு. அகமதாபாத் நீதிமன்றம் அவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனைவை வழங்கியது. தீர்ப்பைக் கேட்டு வேதனையில் மூழ்கிய சரோஜினிதேவி, காந்தியடிகளின் பணிகளைத் தொடரும் வகையில் தொடர்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அவர் இலங்கைக்குச் சென்றார். அங்கு வசித்த மக்களிடம் காந்தியடிகளைப்பற்றியும் ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

1923இல் தென்னாப்பிரிக்காவிலும் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் குடியேறியிருந்த இந்தியர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் உதவியை நாடினர். அப்போது இந்தியாவிலும் அரசியல் கொந்தளிப்புகள் நிறைந்திருந்தன. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸின் பிரதிநிதியாக ஆப்பிரிக்காவுக்குச் செல்ல சரோஜினிதேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு சரோஜினிதேவி 1924 ஜனவரியில் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு செயல்பட்டுவந்த நிர்வாகிகளுக்கு தம் ஆலோசனைகளை வழங்கினார். மொம்பாஸா என்னும் இடத்தில் ’கிழக்கு ஆப்பிரிக்கா இந்திய காங்கிரஸ்’ கூட்டத்துக்குத் தலைமை வகித்து உரையாற்றினார். இன அடிப்படையில் பாரபட்சமுடன் அமைந்திருக்கும் சட்ட விதிகளை எதிர்ப்பதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்களை முன்வைத்த விவாதங்களில் கலந்துகொண்டு தம் கருத்தை எடுத்துரைத்தார்.  பிறகு டர்பன் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற சந்திப்புகளிலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு திரும்பி வந்தார்.

ஆர்வத்துடன் கூடிய ஓய்வில்லாத உழைப்பு அவரை முன்வரிசைத் தலைவர்களில் ஒருவராக்கியது. 1925இல் கான்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைவராக சரோஜினிதேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பொறுப்பை அதற்கு முந்தைய ஆண்டில் பொறுப்பு வகித்த காந்தியடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார் அவர். ஏற்கனவே எழுதி எடுத்துவரும் உரையையே தலைமைப்பொறுப்பில் இருப்பவர் வாசிக்கும் பழக்கம் நிலவிய சூழலில் சரோஜினிதேவி நேரிடையாகவே பேசினார். அதற்குப் பின்னரே அவருடைய உரை எழுதி அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன.

1927இல் மேயோ என்ற அமெரிக்கப்பெண்மணி ’மதர் இந்தியா’ என்னும் தலைப்பில் இந்தியாவைப்பற்றி எழுதிய புத்தகம் வெளிவந்தது.  அப்புத்தகம் இந்தியாவைப்பற்றி பல இழிவான குறிப்புகளைக் கொண்டிருந்தது. அதைப் படித்த காந்தியடிகள் பெரிதும் வருந்தினார்.  அந்தப் புத்தகம் வழியாக அமெரிக்காவில் பரவிவிட்ட பிழையான கருத்துகளை நீக்கும் முயற்சியாக 1928இல் சரோஜினிதேவியை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தார்.

சரோஜினிதேவி அமெரிக்காவில் பல எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், கல்வியறிஞர்கள் போன்றோரைச் சந்தித்து உரையாற்றினார். இந்தியாவில் நடைபெற்றுவரும் சுதந்திரப் போராட்டத்தைப்பற்றியும் காந்தியடிகளின் கொள்கைகளைப்பற்றியும் எடுத்துரைத்தார்.  மேயோவின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எப்படி பொய்யாகப் புனைந்து முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உண்மையான எடுத்துக்காட்டுகளோடு நிறுவினார். கனடா, வாஷிங்டன், கலிபோர்னியா என பல இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டுத் திரும்பினார்.

1930ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ராவி நதிக்கரையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிய நேரு ’இனி பூரண சுயராஜ்ஜியமே நம் குறிக்கோள்’ என முழங்கினார். 26.01.1930 அன்று சுதந்திரப்பிரகடனம் வெளியிடப்பட்டது. உப்பு மீதான வரியை நீக்கக் கோரி காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். எழுபத்தைந்து தொண்டர்களைக் கொண்ட குழுவுடன் காந்தியடிகள் 12.03.1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து  உப்பு காய்ச்சுவதற்காக தண்டி கடற்கரையை நோக்கி நடந்து சென்றார். வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரோடு சேர்ந்துகொண்டனர். இருபத்து நான்கு நாட்களில் இருநூறு மைல் தொலைவு நடந்து தண்டி கடற்கரையை அடைந்த கூட்டத்தில் ஏறத்தாழ 75000 பேர் இருந்தனர்.  ஏராளமான பெண்கள் தொடர்ந்து வர சரோஜினிதேவி தண்டியில் அக்கூட்டத்தோடு சேர்ந்துகொண்டார். பெண்கள் தாம் கொண்டுவந்திருந்த விதவிதமான பாத்திரங்களால் கடல்நீரை எடுத்துவந்தனர்.  அதுவரை வீட்டை விட்டு வெளியேறி அறிந்திராத அப்பெண்களுக்கு சட்டத்தை மீறும் அளவுக்கு துணிவையூட்டிய சரோஜினிதேவியை காந்தியடிகள் பாராட்டினார்.

நாடுமுழுதும் பல்வேறு கடற்கரைப்பகுதிகளில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. அதன் தீவிரத்தை மெல்ல மெல்ல உணரத் தொடங்கிய ஆங்கிலேய அரசு ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. காந்தியடிகள் தம் கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டார். தம் பணியைத் தொடர்ந்து நடத்த அவர் அப்பாஸ் தியாப்ஜியை நியமித்திருந்தார். அடுத்தநாள் அவரும் கைது செய்யப்பட்டார். அவரையடுத்து அப்பொறுப்பை சரோஜினிதேவி ஏற்றுக்கொண்டு அணியினரை வழிநடத்தினார்.

கூடாரத்திலிருந்து யாத்திரையைத் தொடங்கும் முன்பாக இருபத்தைந்தாயிரம் தொண்டர்கள் முழங்காற்படியிட்டு இருக்க, அவர்கள் முன்னிலையில் சரோஜினிதேவி பிரார்த்தனை நடத்தினார். பிறகு உருக்கமான குரலில் “இந்தியாவின் கெளரவம் உங்கள் கையில்தான் இருக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. உங்களை அடித்தாலும், நீங்கள் அதைத் தடுக்கக்கூடாது” என்று சத்தியாகிரகத்தில் தொண்டர்கள் நடந்துகொள்ளவேண்டிய விதம் குறித்து தெளிவுபடுத்தினார். அவர்கள் உப்பு எடுக்கும் இடத்தை நெருங்கியபோது காவல்துறையினர் தொண்டர்களை கடுமையாகத் தாக்கினர். முள்வேலியால் சூழப்பட்ட வேலிக்கிடையில் அவர்கள் கடும் வெயிலில் அடைக்கப்பட்டனர்.  அன்று மாலை சரோஜினிதேவி  கைது செய்யப்பட்டார். உப்பு சத்தியாகிரகம் ஏராளமான பெண்களை சுதந்திரப் போராட்டத்தை நோக்கி அழைத்துவந்து சேர்த்தது.

காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக, உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்கள் அனைவரும் 05.03.1931 அன்று விடுதலை செய்யப்பட்டனர். சரோஜினிதேவியும் விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது சில மலர்ச்செடிகளை தாம் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகில் நட்டு வளர்த்துவந்தார். அவை மலரும் பருவத்தில் அவருக்கு விடுதலை ஆணை வந்துவிட்டது. அம்மலர்களைக் காண்பதற்காக இன்னும் ஒரு நாள் சிறையிலேயே இருக்க தம்மை அனுமதிக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருடைய வேண்டுகோளை அதிகாரிகள் ஏற்கவில்லை. குறிப்பிட்ட நாளன்றே விடுதலை பெற்று வெளியே வரவேண்டியதாயிற்று.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸின் பிரதிநிதியாக காந்தியடிகள் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக சரோஜினிதேவியும் சென்றார். 07.09.1931 முதல் 01.12.1931 வரை மாநாடு நடைபெற்றது. வெறும் விவாதங்களிலேயே காலம் கழிந்ததே தவிர, ஆக்கபூர்வமான எந்த முடிவையும் எட்டமுடியவில்லை. சில தலைவர்களைச் சந்திக்கவும் சில கூட்டங்களில் உரையாடவும் வாய்ப்புகள் கிடைத்தன. அயல்நாட்டில் வாழும் மக்களுக்கு உண்மையான இந்திய அரசியல் நிலைமையை உணர்த்துவதற்கு இருவரும் அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததும் காவல்துறையினர் காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தனர். இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று வேறொரு நாளில் தாமதமாகத் திரும்பி வந்த சரோஜினிதேவியும் கைது செய்யப்பட்டு பம்பாயில் சிறை வைக்கப்பட்டார்.  காந்தியடிகள் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியபோது அரசாங்கம் சரோஜினிதேவியை அச்சிறைக்கு மாற்றியது. காந்தியடிகளின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த இருபத்தெட்டு நாட்களும் சரோஜினிதேவி அவரை கண்ணை இமைகாப்பதுபோல பாதுகாத்து வந்தார். சிறையில் காந்தியடிகளைச் சந்திக்க வந்தவர்கள் அனைவரும் சரோஜினிதேவியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டினர். உடல்நலம் தேறியதும் காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்பைப் பிரச்சாரம் செய்யவும் அரிஜனர் நல மேம்பாட்டுக்காக நிதி திரட்டவும் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அவருடைய பயணம் தென்னிந்தியாவில் ஐதராபாத்தைத் தொட்டபோது, அங்கிருந்த சரோஜினிதேவியின் வீட்டில் தங்கினார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1934இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு பம்பாயில் கூடியது, அக்கூட்டத்தில் சரோஜினி தேவி  ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. வார்தாவில் காந்தியடிகள் புதிதாக உருவாக்கிய ஆசிரமத்துக்கு சேவாகிராமம் என்று பெயர் சூட்டிய விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றினார் சரோஜினி தேவி.

1942இல் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கி, பம்பாயில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் அதைப்பற்றி விளக்கினார். அடுத்தநாளே காந்தியடிகளும் சரோஜினி தேவியும் கைது செய்யப்பட்டு பூனாவில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டனர்.   சில நாட்களுக்குப் பிறகு கஸ்தூர் பாவும் மீரா பென்னும் கைது செய்யப்பட்டு அச்சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். சிறையில் சரோஜினி தேவியே சமையல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எல்லோருக்கும் தம் கைகளாலேயே  உணவைப் பரிமாறினார். யாருக்காவது உடல்நலம் குன்றிவிட்டால், அவரை தனிப்பட்ட அக்கறையோடு கவனித்து குணப்படுத்தினார். சரோஜினி தேவியின் அன்பும் பணிவிடையும் அச்சிறைவாசம் பாசம் நிறைந்த குடும்பத்தினர் ஓரிடத்தில் ஒன்றாகத் தங்கியிருப்பதுபோலவே இருந்தது.

அவர்களுக்கும் வெளியுலகத்துக்கும் எந்தத் தொடர்பும்  கிடையாது. வெளியேயிருந்து ஒருவரும் அவர்களைப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. கடிதங்கள் எழுதவோ, பெறவோ அனுமதி இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக, அந்தக் காலகட்டத்தில்தான் மகாதேவ தேசாய் சிறையிலேயே  உயிர்துறந்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு சரோஜினிதேவியும் கடுமையான காய்ச்சலின் விளைவாக படுத்த படுக்கையானார். சிறை மருத்துவர்களின் மருத்துவம் எவ்விதமான பயனையும் அளிக்கவில்லை.  நாட்டுமக்களின் அன்புக்குப் பாத்திரமான சரோஜினி தேவி, தேசாயைப்போல சிறையிலேயே இறக்க நேரிட்டால் தங்களுக்கு ஆபத்து வரும் என ஆங்கிலேய அதிகாரிகள் அஞ்சினர். எனவே, விருப்பமின்றி, சரோஜினி தேவியை மட்டும் சிறையிலிருந்து விடுதலை செய்தனர்.

ஐதராபாத்துக்குச் சென்ற சரோஜினி தேவி சில மாத தொடர் மருத்துவத்துக்குப் பிறகு உடல்நலம் தேறினார். சிறையிலேயே கஸ்தூர் பா இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு அவர் அதிர்ச்சியில் மூழ்கினார். சில மாதங்களுக்குப் பிறகு காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டார். உலகப்போர் முடிவுக்கு வந்ததையொட்டி, சிறையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக சரோஜினி தேவி வாழ்நாள் முழுதும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிரைத்த நீர்போல வீணாகிவிட்டன. அவருடைய உள்ளத்தைப் புண்படுத்தும் விதமான நிகழ்ச்சிகள் தேசமெங்கும் நடைபெற்றன. எங்கெங்கும் மோதல்கள் உயிரிழப்புகள். கலவரங்கள். குழப்பங்கள். மனமுடைந்த காந்தியடிகள் கலவரம் அதிகமாக நடைபெற்று வந்த நவகாளி பகுதிக்கு தனிமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்தார். சரோஜினிதேவியின் உடல்நிலை இடம்கொடுக்காததால், அவர் அந்தப் பயணத்தில் காந்தியடிகளுடன் இணைந்துகொள்ளவில்லை.

1947ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஆசிய உறவு மாநாடு தில்லியில் நடைபெற்றது. ஆசிய நாடுகளின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் ஒற்றுமைக்காகவும் ஆவன செய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். உலகப்புகழ் பெற்ற அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார் சரோஜினிதேவி. மாநாடு பத்து நாட்கள் நடைபெற்றன. அதன் இறுதி நாளன்று காந்தியடிகள் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூட்டத்தினர் எல்லையில்லாத உற்சாகம் கொண்டனர். அதற்குப் பிறகு சரோஜினிதேவி முடிவுரையாற்றினார்.

15.08.1947 அன்று நாட்டை இரண்டாகப் பிரித்து, ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை வழங்கினர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். சரோஜினி தேவிக்கு எவ்விதமான அரசியல் பதவியிலும் நாட்டமில்லை. அவர் அமைதியாக வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதிக்கொண்டும் புத்தகங்களை வாசித்துக்கொண்டும் பொழுதைப் போக்கவே விரும்பினார்.

உத்தரப்பிரதேசத்தின் கவர்னர் பதவி பி.சி.ராய்க்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் அச்சமயத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். எனவே, அவர் திரும்பி வரும் வரை அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி சரோஜினிதேவியைக் கேட்டுக்கொண்டார் நேரு. வேறு வழியில்லாமல், சரோஜினிதேவி அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சில மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்த பி.சி.ராய் கவர்னருக்குரிய பணிகளை சரோஜினி தேவியே சிறப்பாக செய்துவருவதைப் பார்த்துவிட்டு, அவரே அப்பதவியில் தொடரட்டும் என்று நேருவிடம் தெரிவித்துவிட்டார். வேறு வழியின்றி, சரோஜினி அப்பதவியில் தொடரவேண்டியிருந்தது.

30.01.1948 அன்று காந்தியடிகள் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். செய்தியை அறிந்ததுமே, சரோஜினி தேவி தில்லிக்கு விரைந்துவந்தார். அடுத்தநாள் காந்தியடிகள் மறைவு குறித்து சரோஜினி தேவி வானொலி நிலையத்தில் நிகழ்த்திய உரை உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

29.01.1949 அன்று லக்னோ பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. அன்று பல்வேறு சாதனையாளர்களுக்கு கெளரவப்பட்டம் வழங்கப்பட்டது. சரோஜினி தேவி அனைவருக்கும் பட்டம் வழங்கி உரையாற்றினார். அன்று பட்டம் பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவருடைய நண்பர்கள். அதனால் ஒவ்வொருவருக்கும் பட்டம் வழங்கும்போது பழைய அனுபவமொன்றை நினைவுகூர்ந்து நகைச்சுவையாகப் பேசிவிட்டுக் கொடுத்தார் சரோஜினி தேவி. அன்று நேருவுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற அவர் வந்து நின்றதும் “உன்னைப்பற்றி எவ்வாறு எடுத்துரைப்பது? நீ ஓர் அறப்போர் வீரன், கவிஞன், அரசியல்வாதி, காந்தியடிகளின் அரசியல் வாரிசு, ஆன்மிக வாரிசு, ஒரு நாட்டின் தலைவன், எங்களுடைய விளையாட்டுத்தோழன், நண்பன், என்னுடைய சகோதரன், என் மகன்….” என்று அடுக்கிக்கொண்டே சென்றார். பிறகு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்திருக்க, அன்று நேருவுக்கு பட்டமளித்தார்.   அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் உடல்நலம் குன்றி இயற்கையெய்தினார். உலகப்புகழ் பெற்ற அந்தக் கவிக்குயிலுக்கு கோமதி நதிக்கரையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.

பல தனிப்பட்ட உரையாடல்களிலும் மேடையுரைகளிலும் சரோஜினி தேவி அடிக்கடி கூறும் சொற்கள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. ''நான் எப்போதும் என் வாழ்க்கையில் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்பவர்களில் ஒருத்தியாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள்.   ஐதராபாத்தில் கல்வி கற்றவள். தில்லியில் நடமாடியவள்.  சென்னைக்கும்  சொந்தமானவள்.  ஐதராபாத்திலேயே திருமணம் செய்துகொண்டு வாழ்பவள். ஆனால் நான் வங்காளியும் அல்ல. சென்னைக்காரியும் அல்ல.  ஹைதராபாத்காரியும் அல்ல. தில்லிக்காரியும் அல்ல. நான் ஓர் இந்தியப் பெண்''  என்று உள்ளார்ந்த பெருமிதத்துடன் குறிப்பிடுவார். அதையே தன் அடையாளமாக தன் இறுதிமூச்சுள்ள வரை அறிவித்துக்கொண்டே இருந்தார் சரோஜினி தேவி.

 

 

சரோஜினி தேவி ஐதராபாத் நகரில் 13.02.1879 அன்று பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் அகோரநாத் சட்டோபாத்யாய. தாயார் பெயர் வரதசுந்தரி அம்மையார். 1891இல் தன் பன்னிரண்டாவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். பட்டப்படிப்பைப் படிக்க இங்கிலாந்து சென்றார். கவிதை எழுதுவதில் அவருக்கு இருந்த ஆர்வம் கல்வியில் குறைந்துவிட்டதால் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் தாய்நாட்டுக்கே திரும்பி வந்துவிட்டார். கோபாலகிருஷ்ண கோகலேயின் வழிகாட்டுதலோடு அரசியல் மேடைகளில் பேசத் தொடங்கினார். காந்தியடிகளின் கொள்கைகள் மீது கொண்ட ஆர்வம் அவரை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைத்தண்டனை அனுபவித்தார். ’இந்தியாவின் கவிக்குயில்’ என்று மக்களால் பாசமுடன் அழைக்கப்பட்டார்.  விடுதலைக்குப் பிறகு,உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக சிறிது காலம் பணியாற்றினார்.  அவருக்கு உருது, தெலுங்கு, வங்காளம், பாரசிகம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் தெரியும். அவருடைய கவிதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு ஐந்து தொகுதிகளாக வெளிவந்தன. சிறந்த கவிஞராகவும்  தேசியப்பற்றாளராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் வாழ்ந்த அவர் 02.03.1949 அன்று மாரடைப்பால் மறைந்தார்.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஏப்ரல் 2024)