நான் தொலைபேசித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் பயணம் என்பது என் பணியின் ஒரு பகுதியாகவே இருந்தது. கள ஆய்வுக்காக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஓர் ஊரை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பேன். பயணத்தில் முற்றிலும் அறிமுகமே இல்லாத மனிதர்களாக இருந்தாலும், ஏதாவது ஒரு செய்தியைக் குறித்து அவர்களோடு நானே மெல்ல உரையாடலைத் தொடங்குவேன். அவர்களுடைய பதில்கள் வழியாக அவர்களிடம் மேற்கொண்டு உரையாடமுடியுமா, இல்லையா என்பதைப் புரிந்துகொள்வேன். உரையாடலில் அவர்களும் விருப்பம் உள்ளவர்களாகத் தெரிந்தால் பயணம் முழுதும் பேசிக்கொண்டே செல்வேன். அப்படி ஒரு பழக்கம் என்னிடம் உண்டு.
2001ஆம் ஆண்டில் ஒருமுறை நான் மைசூருக்குச் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் வேலை.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்புவதற்காக ரயில்நிலையத்தில் நின்றிருந்தேன்.
காலை நேரம். நல்ல குளிர். இளஞ்சூரியன் அப்போதுதான் கீழ்வானத்தில் உதயமாகிக்கொண்டிருந்தது.
நடைமேடையில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. ரயில் ஏற்கனவே நின்றிருந்ததால்
நான் வண்டிக்குள் என்னுடைய இருக்கையைத் தேடி உட்கார்ந்துகொண்டேன். அக்கம்பக்கத்தில் உள்ள இருக்கைகளில் அங்கொருவர்
இங்கொருவராக மட்டும் அமர்ந்திருந்தனர். பிறகு ஜன்னல் வழியாக வெளிநடமாட்டத்தை வேடிக்கை
பார்க்கத் தொடங்கினேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு கலகலப்பாகப் பேசிச் சிரித்தபடி இளைஞர்கள் குழுவொன்று
பெட்டிக்குள் ஏறி வந்து எங்கெங்கும் நிறைந்தனர். சிரிப்பும் கொண்டாட்டமுமான அவர்களுடைய
கலகலப்பான பேச்சினால் அந்தப் பெட்டிக்கே ஒரு மகிழ்ச்சிக்களை வந்துவிட்டது. ஒவ்வொருவருடைய
முகத்தையும் அதில் படர்ந்திருக்கும் மகிழ்ச்சிக்களையையும் பார்க்கப்பார்க்க என் நெஞ்சிலும்
ஒருவித மகிழ்ச்சிக்களை படர்ந்தது.
“யாரும் இடம்மாறி உட்காராதீங்கப்பா. ஒவ்வொருத்தரும் அவுங்கவுங்க நெம்பரப் பார்த்து உட்காரணும். பெட்டிகளை
கவனமா வச்சிக்குங்க. யாரும் பிரிஞ்சி தனியா போவாதீங்க” என்று அவர்களைப் பார்த்து கன்னடத்தில்
சொல்லிக்கொண்டே எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பெரியவர். அவர் கையில்
பயணச்சீட்டுகள் இருந்தன. “இது சீட் நெம்பர் பதினேழுதானே?” என்று உறுதிப்படுத்திக்கொள்ளும்
விதமாக என்னிடம் கேட்டார். நான் ”ஆமாம்” என்று சொன்னதும் தன் பெட்டியை அந்த இருக்கைக்கு
அடிப்புறத்தில் தள்ளிவிட்டு, வேறுவேறு இடங்களில் அமர்ந்திருந்த இளைஞர்களிடம் மீண்டும்
ஏதோ சில கவனக்குறிப்புகளைச் சொல்லத் தொடங்கினார்.
சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவர் தன் இருக்கையில் அமர்ந்தார். வெள்ளைவெளேரென
கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தார் அவர். அவர் தோளிலும் கதர்த்துண்டுதான்
தொங்கிக்கொண்டிருந்தது. அவர் அந்தத் துண்டைப் பிரித்து முகத்தில் துளித்துளியாக பூத்திருந்த
வேர்வைத்துளிகளைத் துடைத்துக்கொண்டார். அந்தக் குளிரிலும் அவர் முகத்தில் வேர்வை படிந்திருப்பதைக்
காண வியப்பாக இருந்தது. தலைநிறைய நரைத்த தலைமுடி அடர்த்தியாக இருந்தது. படிய வாரியிருந்தார்.
ஒரு பேராசிரியர் தோற்றம்.
“இருபத்தஞ்சி பேரு சார். இன்னையிலேர்ந்து பத்து நாளுக்கு இவுங்கள கட்டி மேய்க்கணும்.
இவுங்கள பெத்தவங்க என்ன நம்பித்தான் அனுப்பியிருக்காங்க. அழச்சிட்டுப் போறமாதிரி மறுபடியும்
அழச்சிக் கொண்டுவந்து சேக்கறவரைக்கும் இவுங்களுக்கு குரல் கொடுத்துகிட்டே இருக்கணும்.”
அவராகவே ஓர் உரையாடலைத் தொடங்கியதும் எனக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனே நான்
உற்சாகம் கொண்டு “என்ன சார் விசேஷம்? ஏதாவது
காலேஜ் டூரா? எந்த காலேஜ்? எந்த டிப்பார்ட்மென்ட்?” என்று கேட்டேன். அவர் புன்னகையோடு
தலையசைத்து மறுத்தார். “டூர்தான். ஆனால் காலேஜ் டூர் கிடையாது. நானும் காலேஜ் வாத்தியார்
இல்லை. அந்த இளைஞர்களும் மாணவர்கள் கிடையாது” என்றார்.
அவர் சொல்வதை என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை. எதுவும் பேசாமல் தயக்கத்துடன்
அவர் முகத்தையே நான் ஒரு கணம் பார்த்தேன்.
“இது நானே ஏற்பாடு செஞ்சி அழைச்சிட்டு போகிற டூர். இந்த இருபத்தஞ்சி பேரும் எங்க
வட்டாரத்துல இருக்கிற இளைஞர்கள். இதுல காலேஜ் படிக்கிறவங்களும் இருக்காங்க. படிச்சி
முடிச்சவங்களும் இருக்காங்க. படிப்பை முடிச்சிட்டு வேலை கிடைக்காதவங்களும் இருக்காங்க.
வேலை செய்யறவங்களும் இருக்காங்க. எல்லாருமே நல்ல ஆர்வமுள்ள துடிப்பான பசங்க.” என்றார்
அவர்.
“எந்த ஊருக்குப் பயணம்?” என நான் அடுத்த கேள்விக்கு நகர்ந்தேன்.
“இங்கேர்ந்து முதல் இடமா அகமதாபாத் போறோம். அங்க சபர்மதி ஆசிரமத்துல ரெண்டு நாள்
தங்கறோம். பிறகு அங்கேருந்து நேரா நாக்பூர் போயி வார்தா ஆசிரமத்துக்குப் போறோம். அங்கே
ரெண்டு நாள். அதுக்கப்புறம் டில்லி. அங்கயும் ரெண்டு நாள் தங்கி பிர்லா மந்திர்ல காந்தி
உயிர்விட்ட இடத்தையும் காந்தி மியூசியத்தையும் பார்க்கறோம். அதுக்கப்புறம் டில்லியிலிருந்து
நேரா மைசூர்.”
அந்தப் பயணத்திட்டத்தைக் கேட்க எனக்கு வியப்பாக இருந்தது. இப்படியெல்லாம் யோசிப்பவர்கள்
இருப்பார்கள் என்பதையே என் மனம் நம்ப மறுத்தது. “எல்லாமே காந்தி சம்பந்தப்பட்ட இடங்களாவே
இருக்குதே? ஏன் அப்படி? நீங்களே அப்படி அமைச்சிகிட்டீங்களா?
வேற எந்த இடத்தயும் பார்க்கலையா? ஏன் இப்படி ஒரு டூர்?” என்று என் சந்தேகத்தை முன்வைத்தேன்.
அதற்கிடையில் ஒருவர் இருவராக வந்துகொண்டே இருந்ததில் எங்கள் பெட்டி நிறைந்துவிட்டது. ரயில் எல்லாத் திசைகளிலும்
எதிரொலிக்கும்படியாக ஒரு குரலைக் கொடுத்துவிட்டு புறப்பட்டது. பெரியவர் ஒருகணம் எழுந்து
நின்று இளைஞர்கள் பக்கம் திரும்பி எண்ணிப் பார்த்துவிட்டு தலையை அசைத்தபடி மீண்டும்
அமர்ந்தார்.
“என்ன கேட்டீங்க? வேற எங்கயும் போவலையானுதான கேட்டீங்க? போவலாம். இந்தப் பயணத்துல
போகறதுக்கு நிறைய இடங்கள் இருக்குது. அதலஜ் வாவ், தாதா ஹரீர் வாவ், ஹுத்தீசிங் சமணக்கோவில்,
தாஜ்மகால், ஜெய்ப்பூர், ஜோத்பூர்னு ஏராளமான இடங்கள். ஆனா, இந்தப் பயணத்துடைய நோக்கம்
அது இல்லை.”
அவர் சொல்வதைக் கேட்க புதிராக இருந்தது. “அது இல்லைன்னா, வேறென்ன நோக்கம்?” என்று
கேட்டேன். அவர் உடனே ” காந்தியடிகள்
நடமாடிய இடங்களை நேருக்கு நேர் பார்த்து, அவரைப் பத்தி இன்றைய தலைமுறை இளைஞர்கள் தெரிஞ்சிக்கணும்ங்கறதுதான் ஒரே நோக்கம். ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு
காந்தி வந்த பிறகு ஒரு பதினஞ்சி வருஷம் சபர்மதி ஆசிரமத்துல இருந்தாரு. அதுக்கப்புறம்
ஒரு பதினஞ்சி வருஷம் வார்தா ஆசிரமத்துல இருந்தாரு. கடைசி காலத்துல சுடப்பட்டு சாகறதுக்கு
முன்னால அஞ்சாறு மாசம் டில்லியில இருந்தாரு. இந்தத் தகவலை ஒரு புத்தகத்தைப் படிச்சி
தெரிஞ்சிக்கறதுக்கும் நேருக்கு நேரா பார்த்துத் தெரிஞ்சிக்கறதுக்கும் ஏராளமான வித்தியாசம்
உண்டு. அந்த அனுபவம் இந்த இளைஞர்களுக்குக் கிடைக்கணும்னுதான் இவங்கள அங்க அழச்சிட்டு
போறேன்”
அவர் சொன்னதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டபடி நான் அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் விழிகளில் சுடர்விட்ட நம்பிக்கையையும் உறுதியையும் பார்த்தபோது மலைப்பாக இருந்தது.
“நீங்க நினைக்கிற உணர்வை உங்களோடு வரக்கூடிய எல்லாப் பிள்ளைகளும் அடைவார்கள்னு
உங்களுக்கு நம்பிக்கை இருக்குதா?” என்று சற்றே தடுமாற்றத்தோடு கேட்டேன்.
“அப்படியெல்லாம் எந்த நம்பிக்கையும் கிடையாது. அடைஞ்சாலும் அடையலாம். அடையாமல்
போனாலும் போகலாம். ஒன்னுரெண்டு பேருங்க அடைஞ்சால்கூட போதும். அதுவே பெரிய வெற்றிதான்.”
“அது சரி”
“என்னைப் பொறுத்தவரையில இது எனக்கு ஒரு கடமை மாதிரி. பணம்பணம்னு எல்லாத் திசைகளிலும்
எல்லாரும் பறந்து ஓடிட்டே இருக்கிற இந்தக் காலத்துல ஒரு குறிக்கோளுக்காக வாழறதுங்கற
இலட்சிய வாழ்க்கையைப்பற்றி யாருக்குமே தெரிய வாய்ப்பில்லாம இருக்குது. குடும்பம், பள்ளிக்கூடம்,
வேலை செய்யற இடம் எங்கயும் இதப்பத்தி தெரிஞ்சிக்க வாய்ப்பே இல்லாமல்தான் இந்தத் தலைமுறை
இளைஞர்கள் வளர்றாங்க. இன்னைய தேதியில காந்தியடிகளுடைய வாழ்க்கையை விட்டா இலட்சியவாதத்துக்கு
எடுத்துக்காட்ட ஒருத்தரும் கிடையாது. நம்ம நாட்டுல வாழ்ந்த மாபெரும் லட்சியவாதி காந்திதான்.
பசுக்கூட்டத்தை ஏரிக்கரைக்கு அழைச்சிட்டு போய் நிறுத்தற மாட்டுக்காரன் மாதிரி, இவுங்களை
ஆசிரமத்துக்கு அழைச்சிட்டு போய் நிறுத்தறதுதான் என் வேலை. தாகமா இருக்கிற பசுக்கள்
தண்ணீரைக் குடிக்கும். தாகமே இல்லாத பசுக்கள் முகத்தைமட்டும் தண்ணியில நனைச்சிகிட்டு
திரும்பும்.”
“ஆசிரமத்துக்குப் போனா இலட்சியவாதம் புரிஞ்சிடுமா?” என நானாகவே ஒரு சந்தேகத்தை
எழுப்பினேன்.
“கண் உள்ளவர்கள் பார்ப்பார்கள். காது உள்ளவர்கள் கேட்பார்கள்னு ஒரு வசனம் உண்டு.
அந்த மாதிரி ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த இடத்துல ஒரு புரிதல் கிடைக்கும். அந்த ஆசிரமத்துல
காந்தி மட்டுமா தங்கியிருந்தாரு? அவர்கூட ஒரு நூறு பேராவது அங்க தங்கியிருந்தாங்க.
அந்த இடமெல்லாம் இன்னும் அப்படியேதான் அங்க இருக்குது. அந்த இடத்தைத் தேடிப் போய் நிக்கிறவங்களுக்கு
அந்த இலட்சியவாதிகளைப் பத்தி அலுப்பே இல்லாம மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்றவங்களும்
இருக்காங்க. ஒரு நூறு பேருடைய வாழ்க்கைநிகழ்ச்சிகளை காது கொடுத்துக் கேட்கிற சமயத்துல
ஒரு சிலருடைய வாழ்க்கைச் சம்பவங்களாவது நம்ம நெஞ்சைப் பாதிக்கும் இல்லையா? இலட்சியவாதம்
அப்படித்தானே பிறக்கமுடியும்?”
அவருடைய நம்பிக்கையும் உறுதியும் ஒருகணம்
என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. ஒரு பத்து விழுக்காடாவது இதேபோன்ற எண்ணம் என் நெஞ்சிலும்
உண்டு என்பதால் நான் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஏதோ ஒரு கூறு
அவருக்குள் சுடர்விட்டு பேருரு கொண்டு நிற்பதை உணர்ந்தேன்.
உரையாடலை மேலும் வளர்க்கும் விதமாக “இதுதான் முதல் முறையா?” என்று ஒரு கேள்வியை
தயக்கத்தோடு முன்வைத்தேன். அவர் “இல்லை” என்று புன்முறுவலோடு தலையசைத்தார். “இது ஏழாவது
முறை. வருஷத்துல ஒரு பயணம். படிக்கிற பிள்ளைகளா இருந்தா தசரா சமயம்தான் பொருத்தமா இருக்கும்.
அப்பதான் அவுங்களுக்கு லீவ் எடுக்க வசதியா இருக்கும்” என்றார்.
“இந்த இளைஞர்கள் ஏழு முறையும் உங்களோடு தொடர்ந்து வராங்களா?” என்று வியப்போடு கேட்டேன்.
“இல்லை, இல்லை” என்று அவர் அவசரமாக தலையசைத்தார். “ஒவ்வொரு பயணத்துலயும் ஒரு புது
செட் இளைஞர்களைத்தான் அழச்சிட்டு போவேன். ஒவ்வொரு பயணத்துக்காகவும் புதுசுபுதுசா இருபத்தஞ்சி
பேர கண்டுபிடிச்சி அழைச்சிட்டு போவேன். இருக்கறதுலயே அதுதான் பெரிய வேலை.”
அவர் சொன்னதைக் கேட்டு என் மனத்தில் பிறந்த
உற்சாகத்துக்கு அளவே இல்லை. “அப்படின்னா, இதுவரைக்கும் நூத்தி அம்பது இளைஞர்களை
அழைச்சிட்டு போயிருக்கீங்களா?” என்று கேட்டேன். அவர் புன்னகையோடு “ஆமாம்” என்பதுபோல
தலையசைத்தார்.
“இதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே, அதுக்கெல்லாம் என்ன செய்வீங்க?”
“செலவாகும்தான். ஆனா அதுக்காக யாரையும் கேக்கமாட்டேன். நான் ஸ்கூல் டீச்சரா வேலை
செஞ்சி ஓய்வு பெற்றவன். பென்ஷன் வருது. மூனு பொண்ணுங்க. மூனு பேருக்கும் கல்யாணம் செஞ்சி
அனுப்பியாச்சி. இப்ப நானும் மனைவியும் மட்டும்தான். ஒரு பயணத்துக்கு முப்பதாயிரத்துலேர்ந்து
நாப்பதாயிரம் ரூபா வரைக்கும் செலவாகும். அவ்வளவுதான்.
மாசாமாசம் பென்ஷன் வாங்கும்போதே இதுக்காகன்னு
ஒரு தொகையை ஒதுக்கி வச்சிடுவேன். புதுசா பணம் சேர்க்கணும்ங்கற அவசியம் இல்லை.”
“குடும்பத்துல யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?”
“என் குடும்பத்துல என் மனைவி, என் மகள்கள், மருமகப்பிள்ளைகள் எல்லோருமே என்னையும்
என் லட்சியத்தையும் புரிஞ்சிகிட்டவங்கதான். என்னுடைய ஆசைக்குக் குறுக்கா யாரும் வரமாட்டாங்க”
அந்த நேரத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் வந்துவிட்டார். பெரியவர் எழுந்து நின்று
தன்னிடமிருந்த பயணச்சீட்டுகளைக் காண்பித்து, ஆங்காங்கே அமர்ந்திருந்த இளைஞர்களையும்
சுட்டிக்காட்டினார். அவர் தன்னிடமிருந்த பட்டியலில் எண்களைச் சரிபார்த்துவிட்டு அடுத்த
இருக்கைகளை நோக்கிச் சென்றார்.
அதற்காகவே காத்திருந்ததுபோல நான் அடுத்த கணமே ”உங்களுக்கு காந்தி மேல இந்த அளவுக்கு
ஈடுபாடு எப்படி பிறந்தது? அதற்கு ஏதாவது பின்னணி இருக்குதா?” என்று ஒரு கேள்வியோடு
உரையாடலைத் தொடங்கினேன்.
“இருக்குது. இருக்குது” என்று சொன்னபடி புன்னகைத்தார் அவர்.
“எங்க அப்பா அந்தக் காலத்துல சுதந்திரப்போராட்டத்துல கலந்துகிட்டவர். பெங்களூருல
பெரிய வக்கீலா இருந்தவரு அப்பா. அந்தக் காலத்துல பசவலிங்கப்பான்னு சொன்னா எல்லாருக்கும்
நல்லா தெரியும். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு
அளிக்கக்கூடிய வேலைங்கள்ள இருக்கிறவங்க எல்லாரும் உடனே வெளியேறணும்னு காந்தி சொன்னதுக்காக,
உடனடியா வெளியேறியவர் அவரு. அப்பதான் முதல் முறையா ஜெயிலுக்கு போனாரு. அந்நியத்துணி
எதிர்ப்புப் போராட்டத்துல கலந்துகிட்டதுக்காக ரெண்டாவது முறையா போனாரு. சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்துல கலந்துகிட்டதுக்காக மூனாவது
முறை. அதுக்கப்புறம் க்விட் இன்டியா மூவ்மென்ட்ல கலந்துகிட்டதுக்காக நாலாவது முறை.
ரெண்டு வருஷம். அமராவதி ஜெயில்ல இருந்தாங்க. அப்பதான் அவருக்கு காசநோய் வந்துடுச்சி.
வெளியே வந்து ரொம்ப கஷ்டப்பட்டாரு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கறதை கண்ணால பார்த்துட்டுத்தான்
செத்தாரு. அப்ப நான் ஸ்கூல் ஃபைனல் படிச்சிட்டிருந்தேன்”
“காந்தி மேல உங்க அப்பாவுக்கு ஈடுபாடு பொறந்ததுக்கான காரணத்தை புரிஞ்சிக்க முடியுது.
உங்களுக்கும் அந்த ஈடுபாடு எப்படி வந்தது?”
“காந்தி, காந்தின்னு வீடு முழுக்க பேசிட்டே இருந்த சூழல்ல பொறந்து வளர்ந்தவன் நான்.
காந்தி தொடர்பா அப்பா சொல்றதை ஒவ்வொரு நாளும் கேட்டுட்டே இருந்தேன். பிறகு வளர வளர
நானே சொந்தமா படிச்சி தெரிஞ்சிகிட்டேன். என் அனுபவத்துல அவரை மாதிரி ஒரு மனிதர் இந்த
உலகத்துலயே இருக்கமுடியாது. சண்டை போட்டுக்கிறதுக்குத்தான் ஆயிரம் காரணம் வேணும். ஒத்துமையா
இருக்கறதுக்கு ஒன்னா இருக்கணும், ஒன்னா வாழணும்ங்கற ஒரே ஒரு எண்ணம் நெஞ்சில இருந்தா
போதும். எதிரின்னு ஒரு ஆள விரல் நீட்டி சுட்டிக்காட்டாத ஒரே ஒருத்தர் காந்தி மட்டும்தான்.
இந்த ஒரு காரணத்துக்காகவாவது காந்தியை நாம காலம் பூரா நெனச்சிட்டிருக்கணும்”
அவர் சொல்வதை நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரைத் தூண்டுவதற்கு எந்தக்
கேள்வியும் அவசியமாக இல்லை. என் ஆர்வத்தைப் பார்த்த பிறகு அவராகவே பல விஷயங்களைத் தொட்டுத்தொட்டுப்
பேசத் தொடங்கிவிட்டார்.
”மக்கள் மீது காந்தி கொண்டிருந்த அன்புக்கும் கருணைக்கும் அளவே இல்லை. நினைத்து
நினைத்து மெய்சிலிர்க்கக்கூடிய வாழ்க்கையை நம்ம கண்முன்னாலயே அவர் வாழ்ந்து மறைஞ்சிருக்கார்.
அவருடைய வாழ்க்கை ரொம்ப ரொம்ப மகத்துவமானது.
இந்த நாட்டுல அவருடைய வழியை நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுடைய
வாழ்க்கையும் மகத்தானது. எல்லோருமே மகத்தான மனிதர்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்க்கறப்போ
எப்படிப்பட்ட மனிதனா இருந்தாலும் தானாகவே ஒரு உத்வேகம் பிறக்கும். இந்தப் பயணத்துக்கான
காரணமே, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அப்படி ஒரு உத்வேகம் பிறக்கணும்ங்கறதுதான்.”
பெங்களூரை நெருங்கும் வரைக்கும் அவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே வந்தேன். காந்தியடிகளுடனான
சந்திப்பு பற்றி அவருடைய தந்தையார் தன் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த விவரங்களையெல்லாம்
ஒரு கதை சொல்வதுபோலச் சொன்னார். நேரம் போனதே தெரியவில்லை.
பெங்களூர் நிலையத்தில் வண்டி நின்றதும் இளைஞர்கள் அனைவரும் பெட்டியைவிட்டு
இறங்கினர். எல்லோருக்கும் கடைசியாக நான் இறங்கினேன். திடீரென என் மனம் ஒருவித எடையை
உணர்ந்தது. பயணம் இனிதாக அமைவதற்கு வாழ்த்துகளைச் சொல்லி அந்த இளைஞர்களோடும் பெரியவரோடும்
கைகுலுக்கினேன். பெரியவர் எனக்கு ஆசி கூறினார். நான் அப்போதுதான் அவரிடம் என் பெயரையும்
நான் பணிபுரியும் துறை பற்றிய விவரங்களையும் சொன்னேன். அவரும் அப்போதுதான் “நான் பி.பி.மகாதேவப்பா”
என்று தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தியபடி என் கைகளை ஓரிரு கணங்கள் இறுகப் பற்றி
விடைகொடுத்தார்.
மகாதேவப்பாவைச் சந்தித்து இருபத்திரண்டு ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. ”நம் கடமையை
நாம் செய்யவேண்டும். விளைவுகள் தாமாகவே நிகழும்” என அவர் நம்பிக்கையோடு சொன்ன சொற்கள்
இன்னும் என் ஆழ்நெஞ்சில் ஒலித்தபடியே உள்ளன.
இந்த முன்னுரையில் இந்தப் பழைய சந்திப்பைப்பற்றியும் மகாதேவப்பாவைக் குறித்தும்
எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. காந்திய ஆளுமைகளைப்பற்றி நான் எழுதிவரும் நூல் வரிசையில்
இது ஐந்தாவது நூல். இவற்றை எழுதுவதற்கு என்ன காரணம் என பலர் பல சந்திப்புகளில் கேட்டிருக்கிறார்கள்.
இன்றைய உலகில் இலட்சியவாதத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளின் தத்துவம் ஒன்றே
நம் கண்முன்னால் இருக்கும் சிறந்த வழிகாட்டி. அவரோ, இந்த உலகில் எதிரி என ஒருவரையும்
கருதாதவர். ஒருவரையும் சுட்டிக் காட்டாதவர். செயல் ஒன்றே அவருடைய நோக்கமாகவும் அடையாளமாகவும்
இருந்தது. அவர் குறிப்பிட்ட எந்தச் செயலாக இருந்தாலும், அதைச் செய்யக்கூடிய முதல் ஆளாக
அவரே இருந்தார். அவரும் சரி, அவரைப் பின்பற்றிய
அவருடைய தொண்டர்களும் சரி, இந்த மண்ணில் வாழ்ந்த எளிய மனிதர்களை மனமார நேசித்தார்கள்.
அவர்களுடைய முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுதும் தொண்டாற்றினார்கள். அவர்களைப்பற்றிய
சித்திரங்களை இப்போது எழுந்துவரும் புதிய தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்தான்
என்னை இயக்கும் விசையாகும்.
இந்தக் கட்டுரைகளை எழுதும்
காலத்தில் எனக்குத் தேவையான பல புத்தகங்களை எனக்காகத் தேடிக் கொடுத்து உதவிய நண்பர்கள் அழிசி ஸ்ரீநிவாசன்,
மயிலாடுதுறை மருதசாமி, எழுத்தாளர் ஸ்ரீரசா, இராணிப்பேட்டை தீனபந்து ஆசிரமத்தை நிறுவியவர்களில்
ஒருவரான கல்யாணராம ஐயர் அவர்களின் மகன் ராஜாராம், நெல்லை மாவட்ட சுதந்திரப்போராட்ட
வரலாறு, மதுரை மாவட்ட சுதந்திரப்போராட்ட வரலாறு ஆகிய அரிய ஆவணங்களை பெரிதும் பாடுபட்டு
உருவாக்கிய காந்திய ஆளுமையான சோமயாஜுலு அவர்களின் மகள் ராஜம், தி.சிவக்குமார், சென்னை கே.பி.நாகராஜன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், பிலோ ஜாண் அனைவரையும் இக்கணத்தில்
நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுதியில்
உள்ள எல்லாக் கட்டுரைகளையும் முதல் வாசகர்களாக வழக்கம்போல நண்பர்கள்
பழனியும் கே.பி.,நாகராஜனும் வாசித்து தம்
எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்த உரையாடல்கள்
பல வகைகளில் எனக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தன. அவ்விருவருக்கும் என் மனமார்ந்த
நன்றி.
காந்திய ஆளுமைகளைப்பற்றிய இக்கட்டுரைகள் அனைத்தும் மாத இதழான ‘சர்வோதயம் மலர்கிறது’
இதழில் வெளிவந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் வெளிவந்ததும் மூத்த காந்தியக்கட்டுரையாளரான
முனைவர் அ.பிச்சை தொலைபேசியில் அழைத்து அக்கட்டுரையில் காணப்படும் சிறப்பம்சங்களைக்
குறித்து நீண்ட நேரம் உரையாடுவார். பல ஆண்டுகளாக தினமணி நாளேட்டில் காந்தியடிகள் தொடர்பாகவும்
காந்தியக்கருத்துகள் தொடர்பாகவும் ஏராளமான கட்டுரைகளை அ.பிச்சை எழுதியிருக்கிறார்.
அவருடைய சில முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்து ’காந்தி என்கிற காந்தப்புலம்’ என்னும்
தலைப்பில் சமீபத்தில் சந்தியா பதிப்பகம் ஒரு நூலாகவே கொண்டுவந்துள்ளது. வாசித்த கட்டுரை
தொடர்பாக அவர் உரையாடலைத் தொடங்கினாலும் எங்கோ ஒரு புள்ளியில் விலகி காந்தி யுகத்தில்
நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவலைகளில் மூழ்கி, அவற்றை விவரிக்கத் தொடங்கிவிடுவார்.
வரலாற்றுக்குறிப்புகளில் எப்போதும் நாட்டம் கொண்டுள்ள எனக்கு அவருடனான உரையாடல் என்பது
எப்போதுமே இனியதொரு அனுபவமாகும். காந்தியப்பாதையில் மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய இக்கட்டுரைத்தொகுதியை
வாழும் காந்தியரான முனைவர் அ.பிச்சை அவர்களுக்கு
வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தொகுதியில்
அடங்கியிருக்கும் எல்லாக் கட்டுரைகளும் சர்வோதயம் மலர்கிறது இதழில் வெளிவந்தவை. இவ்விதழின் ஆசிரியர் பொறுப்பிலுள்ள அ.அண்ணாமலை அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
இந்த முன்னுரையை எழுதுவதற்காக
அவ்வப்போது எழுதிய இக்கட்டுரைகளை இரு நாட்களாக ஒருசேரப் படித்துமுடித்தேன். காந்தியடிகள்
கூறிய ஒரு சொல்லை தன் எஞ்சிய வாழ்நாளுக்கான கட்டளையாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து தொண்டாற்றிய
ஆளுமைகளைப்பற்றி நினைக்கநினைக்க வியப்பே எஞ்சுகிறது. அவர்களுடைய பேரும் புகழும் என்றென்றும்
இந்நிலமிசை நீடு வாழவேண்டும் என்ற எண்ணமே எழுகிறது. இவர்களுடைய வாழ்க்கை எதிர்காலத்
தலைமுறையினருக்கு கலங்கரைவிளக்கமாக நின்று வழிகாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
எப்போதும் என் எழுத்து முயற்சிகளுக்கு உந்துசக்தியாக துணைநிற்கும்
என் மனைவி அமுதாவுக்கு என் அன்பு. இந்தக்
கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும்
பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கு என் மனமார்ந்த நன்றி
04.02.2024
மிக்க அன்புடன்
பெங்களூரு பாவண்ணன்
writerpaavannan2015@gmail.com
BURB
இன்றைய உலகில் இலட்சியவாதத்தை முன்னெடுத்துச்
செல்ல காந்தியடிகளின் தத்துவம் ஒன்றே நம் கண்முன்னால் இருக்கும் சிறந்த வழிகாட்டி.
அவரோ, இந்த உலகில் எதிரி என ஒருவரையும் கருதாதவர். ஒருவரையும் சுட்டிக் காட்டாதவர்.
செயல் ஒன்றே அவருடைய நோக்கமாகவும் அடையாளமாகவும் இருந்தது. அவர் குறிப்பிட்ட எந்தச்
செயலாக இருந்தாலும், அதைச் செய்யக்கூடிய முதல் ஆளாக அவரே இருந்தார். அவரும் சரி, அவரைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்களும்
சரி, இந்த மண்ணில் வாழ்ந்த எளிய மனிதர்களை மனமார நேசித்தார்கள். அவர்களுடைய முன்னேற்றத்துக்காக
வாழ்நாள் முழுதும் தொண்டாற்றினார்கள். அவர்களைப்பற்றிய சித்திரங்களை இன்றைய புதிய தலைமுறையினர்
அறிந்துகொள்வதற்கு ஏதுவாக பாவண்ணனின் கட்டுரைகள்
அமைந்துள்ளன. மேலும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் ஊற்றுகளாகவும் விளங்குகின்றன.