தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால் சுதந்திரமாகத் திரியலாம் என்றும் வீட்டுச்சிறையிலிருந்து விடுபடலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் நினைப்பதுபோல பள்ளிவாழ்க்கை அந்த அளவுக்கு இன்பமாக இருக்காது என்று பலர் அவனிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. அழுது மன்றாடியதால் அவனுடைய தந்தையார் அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.
சில நாட்களிலேயே அவனுக்கு உண்மை விளங்கிவிட்டது. வீட்டுச் சிறைவாசத்தைவிட அது கொடுமையாக இருந்தது. குழந்தைகளுக்கு உற்சாகமூட்டி படிப்பில் ஆர்வமூட்டவேண்டிய பள்ளிக்கூடம், குடும்பங்களில் பெற்றோருக்கு அடங்காத பிள்ளைகளை அடைத்துவைக்கும் சிறைக்கூடமாக விளங்கியது. பள்ளிக்கூடம் என்றாலே அச்சிறுவனுக்கு அச்சமும் அருவருப்பும் தோன்றத் தொடங்கின. முதல் வரிசையில் அமர்ந்த அச்சிறுவன் மெல்ல மெல்ல கடைசி வரிசைக்குச் சென்று அமர்பவனாக மாறிவிட்டான்.
பள்ளிச்சூழல்தான் அவனுக்குப் பிடிக்கவில்லையே தவிர பாடங்களை அவனுக்குப் பிடித்திருந்தது. ஆண்டுத் தேர்வு முடிவில், அவன் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். அதை அவனுடைய வகுப்பு ஆசிரியர் நம்பவில்லை. யாரோ ஒருவருடைய செல்வாக்கின் துணையோடு குறுக்குவழியில் மதிப்பெண் பெற்றுவிட்டதாக குறைகூறினார். அதனால் அச்சிறுவனுக்கு மட்டும் தனியாக பலத்த கண்காணிப்புக்கு நடுவில் புதிதாக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அப்போதும் அவனே முதல் மதிப்பெண் பெற்றான். அதற்குப் பிறகே அவனுடைய அறிவாற்றல் மீது அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அச்சிறுவன் தொடர்ந்து படிக்கவில்லை. வேறொரு பள்ளிக்குச் சென்றான். அதுவும் பிடிக்காமல் பிறிதொரு பள்ளிக்குச் சென்று படித்தான். அச்சிறுவன்தான் பிற்காலத்தில் இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர்.
அவருடைய குடும்பச்சூழல் அவருடைய கலை
இலக்கிய ஆர்வத்துக்கு இசைவாக இருந்தது. அவருடைய தந்தையார் பெரிய பண்டிதர். நல்ல வாசகர்.
ஒரு சகோதரர் நல்ல ஓவியர். இன்னொரு சகோதரர் எழுத்தாளர். மற்றொருவர் பத்திரிகையாளர்.
பிறிதொருவர் இசையில் ஆர்வம் மிக்கவர். இன்னொருவர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல்
வணிகத்தை மேற்கொண்டவர். ஒருவர் பெரிய நீதிபதி.
ஒருமுறை அவருடைய தந்தையார் வைத்திருந்த
பகவத் கீதை புத்தகத்தை தாகூர் எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அதில் அவருடைய தந்தையார்
தமக்குப் பிடித்திருந்த பல வரிகளை அடிக்கோடிட்டிருந்தார். ஆர்வமிகுதியால் அதை அங்கேயே
படிக்கத் தொடங்கினார். அவருடைய ஆர்வத்தைக் கண்ட அவருடைய தந்தையார் அந்தச் சமஸ்கிருத
வரிகளை வங்க மொழியில் மொழிபெயர்க்குமாறு சொன்னார். மகத்தான ஒரு வாய்ப்பை தன் தந்தையார்
கொடுத்திருப்பதாக நினைத்துக்கொண்ட தாகூர் உடனே அவற்றை மொழிபெயர்த்துமுடித்தார். அதைத்
தொடர்ந்து எழுதுவதற்கான மன எழுச்சி கொண்ட தாகூர் தனக்குத் தோன்றியதையெல்லாம் தாளக்கட்டோடு
சொந்தமாக எழுதத் தொடங்கினார். பிருதிவிராஜன் பராஜயம் என்னும் தலைப்பில் புதிதாக வீரச்சுவை
மிக்க ஒரு காவியத்தையே வேகவேகமாக எழுதிமுடித்தார்.
பகல் வேளையில் ஆசிரியர்கள் வீட்டுக்கு
வந்து தாகூருக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றனர். வீட்டில் ஓய்வாக
இருக்கும் தருணங்களில் அவருடைய தந்தையாரே ஆசிரியராக இருந்து சமஸ்கிருத, வங்க இலக்கியங்களைக்
கற்பித்தார். சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும்
கடந்து அனைவரோடும் அன்போடு பழகி, கலந்துரையாடும் மனப்போக்கை தாகூரின் நெஞ்ச்சில் விதைத்தார்
அவர்.
ஒருமுறை அவர் அமிர்தசரஸ் நகருக்குச்
சென்றிருந்தபோது தன்னோடு தாகூரையும் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த
குருத்துவாருக்குச் சென்று சீக்கியர் தோத்திரப்பாடல்களை இசைத்து வழிபாடு செய்தார்.
அச்செயல் அவருக்கு பலருடைய நட்பு கிடைக்க வழிவகுத்தது. அங்கிருந்து அவர்கள் இமாச்சலப்பிரதேசத்தில்
உள்ள டல்ஹெளசி நகருக்குச் சென்று நான்கு மாதங்கள் தங்கினர். ஒவ்வொருநாளும் பனிமூடிய
இமயமலைச் சிகரங்களின் அழகைக் கண்டு மகிழ்ந்தனர்.
அப்போது புகழ்பெற்ற எழுத்தாளரான பங்கிம்
சந்திர சட்டர்ஜி ‘வங்கதர்சன்’ என்ற பத்திரிகையில் தம் தொடர்கதைகளை எழுதிவந்தார். அந்தப்
பத்திரிகையை தாகூர் குடும்பத்தினர் அனைவரும் படித்து வந்தனர். தாகூருக்கு நன்கு உரத்த குரலில் படிக்கும் பழக்கம்
இருந்ததால், அவரைப் படிக்க வைத்துவிட்டு, அவரைச் சுற்றி அமர்ந்து அனைவரும் கேட்டு வந்தனர். இலக்கியத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் கண்ட
தாகூரின் சகோதரர் ஜோதீந்திரநாத் தாமும் அதைப்போலவே
ஒரு பத்திரிகையை நடத்த நினைத்து ’பாரதி’ என்னும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார்.
தாகூர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான படைப்புகளை பானுசிம்மன் என்னும்
புனைபெயரில் அந்தப் பத்திரிகையில் எழுதினார். எதிர்பாராத விதமாக அப்போது அவருடைய தாயார்
மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 17.
தாகூரின் சகோதரர்களின் ஒருவரான சத்யேந்திரநாத்
தாகூர் இந்திய ஆட்சியர் பணித்தேர்வில் வெற்றி பெற்று அகமதாபாத் நகரில் நீதிபதியாகப்
பணிபுரிந்து வந்தார். அவர் தாகூரை பிரிட்டனுக்கு அனுப்பி படிக்கவைக்க விரும்பினார். அதற்கு முன்பாக அவருக்கு ஆங்கிலப்பயிற்சி பெறுவது
முக்கியம் என நினைத்து, பம்பாயில் இருந்த தன் நண்பரான ஆத்மாராம் என்பவரிடம் அனுப்பிவைத்தார். ஆத்மாராமின் மகள் அன்னபூர்ணா அப்போதுதான் இங்கிலாந்திலிருந்து
பட்டம் பெற்று திரும்பியிருந்தார். தாகூரைவிட மூன்று வயது மூத்தவர் அவர். அவர் தாகூருக்கு
பேச்சு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
தாகூர் ஒரு கவிஞர் என்பதைத் தெரிந்துகொண்டதும்
அவர் மீது அன்னபூர்ணா கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது. மதிப்பு மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.
தாகூர் அவருக்கு நளினி என கற்பனையான ஒரு பெயரைச் சூட்டி ஏராளமான காதல் கவிதைகளை இரவும்
பகலும் எழுதிக் குவித்தார். அன்னபூர்ணா அவற்றை வாசித்து உணர்ச்சிவசப்பட்டு “நான் மரணப்படுக்கையில்
இருந்தாலும் உங்கள் கவிதைகள் என்னை மீட்டுக் கொண்டுவந்துவிடும்” என்றார். ஆயினும் அவர்களுடைய
காதல் நிறைவேறவில்லை. வயது வேறுபாடு குறுக்கே வந்து தடுத்துவிட்டது. தாகூர் தன் அண்ணனுடன்
இங்கிலாந்துக்குப் பயணமானார். லண்டனில் ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் வகையில் அவர்
ஏற்பாடு செய்தார்.
ஒருநாள் சாலையில் நடந்துசெல்லும்போது
பாதையோரத்தில் கிழிந்த ஆடையுடன் ஒரு மனிதர் நிற்பதைக் கண்டார் தாகூர். அவருடைய தோற்றம்
அவர் பிச்சைக்காரர் என்பதை உணர்த்தியது. அங்கு பிச்சையெடுப்பது குற்றமென்பதால், அவர்
எதையும் கேட்காமல் மெளனமாக பார்த்தபடி இருந்தார். அவர் மீது இரக்கம் கொண்ட தாகூர் அவரிடம்
ஒரு பவுன் தங்க நாணயத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு நகர்ந்தார். தங்க நாணயத்தைப் பார்த்து
அதிர்ச்சியுற்ற பிச்சைக்காரர் வெளிநாட்டுக்காரர் நாணயத்தின் மதிப்பை அறியாமல் கொடுத்துவிட்டதாக
நினைத்து பின்னாலேயே ஓடிவந்து “மன்னிக்கவும். தவறுதலாக தங்க நாணயத்தைக் கொடுத்துவிட்டீர்கள்”
என்று கூறி அந்த நாணயத்தைத் திருப்பிக் கொடுத்தார். “தெரிந்துதான் கொடுத்தேன். நீங்களே
வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு தாகூர் புன்னகைத்தபடி நடந்துவிட்டார். தாகூரின்
பெருந்தன்மையை நினைத்து பிச்சைக்காரரும் பிச்சைக்காரரின் நேர்மையை நினைத்து தாகூரும்
வியப்பில் ஆழ்ந்தனர்.
கல்லூரிப்பாடத்தைவிட ஆங்கில இலக்கியங்களைத்
தேடிப் படிப்பதில் தாகூர் ஆர்வம் கொண்டிருந்தார். செவ்வியல் எனச் சொல்லப்படுகிற எல்லாப்
படைப்புகளையும் படித்துமுடித்தார். பல எழுத்தாளர்களுடன் நேரடித் தொடர்பையும் வளர்த்துக்கொண்டார்.
சில கதைகளையும் நாடகங்களையும் எழுதினார். ஏறத்தாழ
ஒன்றரை ஆண்டுக் காலம் அவர் கல்லூரிக்குச் சென்றுவந்தாலும் அவர் அப்படிப்பை முடிக்கவில்லை.
பட்டம் பெறாமலேயே கல்கத்தாவுக்குத் திரும்பி வந்துவிட்டார்.
தாகூர் சட்டம் படித்து வழக்கறிஞராக
வேண்டும் என்று அவருடைய குடும்பம் விரும்பியது. பல விதமான சாக்குபோக்குகளைச் சொல்லி
ஓராண்டு காலமாக அந்த முடிவிலிருந்து அவர் தப்பித்துக்கொண்டே
வந்தார். கடைசியில் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அவர் உடன்பட வேண்டியதாயிற்று. உறவினர்
ஒருவரோடு கப்பலில் புறப்பட்டு சென்னையை வந்தடைந்தார். எதிர்பாராத விதமாக, சென்னையை
அடைந்ததும் அந்த உறவினர் நோய்வாய்ப்பட்டார். அவரை அப்படியே விட்டுவிட்டு கப்பலேற தாகூருக்கு
மனமில்லை. அதனால் லண்டன் பயணத்தைத் தவிர்த்துவிட்டு நண்பரை அழைத்துக்கொண்டு மீண்டும்
கல்கத்தாவுக்கே திரும்பினார். தக்க மருத்துவத்துக்குப் பிறகு நண்பர் குணமடைந்தார்.
ஆயினும் தாகூரின் இங்கிலாந்து பயணம் நிகழவில்லை.
கிடைத்த பொழுதுகளிலெல்லாம் கவிதை, நாடகம்
என எழுத்துமுயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் தாகூர். அவர் எழுதிய ‘வால்மீகியின் பேராற்றல்’
என்னும் இசைநாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்நாடகம் கள்வர் தலைவனாக விளங்கிய
வால்மீகி கவிஞராக மலர்ந்ததை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. புதிய தாளம், புதிய மெட்டு,
மக்களின் வாய்மொழிப்பாடல்களில் அமைந்திருக்கும் எளிய சொற்சேர்க்கைகள் ஆகியவற்றின் இணைப்பாக
உருப்பெற்றிருந்த அந்த நாடகத்தின் பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
’ரவீந்திர சங்கீத்’ என்று அவர் பெயராலேயே பிற்காலத்தில் அது அழைக்கப்பட்டு பிரபலமானது.
ஒருமுறை தாகூர் சந்திரநாகூருக்குச்
சென்று தன் அண்ணன் ஜோதீந்திரநாத்துடன் தங்கியிருந்தார். அமைதியும் அழகும் நிறைந்த அந்த
இடத்தில் கங்கைநதியின் எழிலை மணிக்கணக்காக நின்று ரசித்து மகிழ்ந்தார். காலை, பகல்,
மாலை, சூரியன் மறையும் நேரம் என ஒவ்வொரு தருணத்திலும் கங்கை நிறம் மாறி காட்சியளிக்கும்
அழகில் திளைத்த தாகூர் ஏராளமான கவிதைகளையும் இசைப்பாடல்களையும் எழுதி ‘மாலைப்பாடல்கள்’
என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியிட்டார். அத்தொகுதியின் விளைவாக பொதுமக்களிடையில்
அவருடைய பெயர் பரவியது.
ஒருமுறை புகழ்பெற்ற எழுத்தாளரான பங்கிம்சந்திரர்
தன் நீண்ட கால நண்பரான சந்திரதத் என்பவரின் இல்லத்திருமணத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
அப்போது சந்திரதத் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். அதே நேரத்தில் தாகூர் அங்கே
வந்து சேர, பங்கிம்சந்திரர் தன் கழுத்திலிருந்த மாலையை எடுத்து தாகூருக்கு அணிவித்து
“இந்த மாலைக்குரியவர் இவர்தான். இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு அழகாக இருக்கின்றன
தெரியுமா?” என்று பாராட்டினார்.
இத்தருணத்தில் அவர் மிருணாளினி தேவி
என்பவரை மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய இலக்கியப்பணியும் தொடர்ந்தது.
அவருடைய அண்ணி புதிதாகத் தொடங்கிய ‘பாலக்’ என்னும் சிறுவர் பத்திரிகையிலும் அண்ணன்
நடத்தி வந்த ‘பாரதி’ இதழிலும் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என எல்லா வடிவங்களிலும்
எழுதினார்.
ஆங்கிலேய ஆட்சியின் விளைவாக, ஆங்கிலத்தில்
உரையாடுவதை மேலான பழக்கம் எனக் கருதி மக்கள் வங்கமொழியின் பயன்பாட்டை முற்றிலுமாகவே
தவிர்க்கத் தொடங்கினர். அதைக் கண்டு தாகூர் மிகுந்த வேதனைக்குள்ளானார். தன் சகோதரர்
தனக்கு தாய்மொழியிலேயே முதன்முதலில் கல்வி கற்பித்ததைச் சுட்டிக்காட்டி, அதுவே சரியான
முறை என்று மேடைகளில் எடுத்துரைக்கத் தொடங்கினார் தாகூர். மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும்
வங்கமொழியிலேயே சொற்பொழிவு நிகழ்த்தப்பட வேண்டும் என தாகூர் வலியுறுத்தினார். ஒருமுறை
கல்கத்தா பல்கலைக்கழகம் அவரை பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற அழைத்தபோது, வங்க மொழியிலேயே
உரை நிகழ்த்தினார், பல்கலைக்கழக வரலாற்றில் அதுவே வங்க மொழியில் நிகழ்த்தப்பட்ட முதல்
உரையாக இருந்தது. தாகூர் காட்டிய வழி இந்தியாவெங்கும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது.
ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு, சிலைடாகா
என்னும் இடத்தில் இருந்த குடும்ப நிலங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தாகூர் ஏற்றுக்கொள்ளவேண்டி
வந்தது. அதன் பொருட்டு அவர் கிராமத்துக்கே சென்று தங்கினார். தன்னம்பிக்கையும் முயற்சியும்
இல்லாமல் மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த கிராமத்தினரைக் கண்டு அவர் மனம் வருந்தினார்.
அவர்களிடையில் நிலவிய ஏற்றத்தாழ்வை விலக்கி அனைவரும் கல்வி பெறவும் அனைவரும் ஒருங்கிணைந்து
கிராமத் தொழில்களில் ஈடுபட்டு பொருளீட்டவும் தமக்குத் தேவையான கிணறுகளை தாமே தம் உழைப்பால்
ஒருங்கிணைந்து உருவாக்கிக்கொள்ளவும் தாகூர் கற்பித்தார். தம் முயற்சிகளில் அவ்வப்போது
ஏற்படும் பின்னடைவுகளைக் கண்டு அடிக்கடி மனம் சோர்வுற்றாலும், சில கணங்களிலேயே ஊக்கம்
பெற்று முன்பு இருந்ததைவிட கூடுதலான விசையோடு செயல்படத் தொடங்கினார். ஏறத்தாழ பத்து
ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடுபட்டதன் விளைவாக அந்தக் கிராமத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு
சென்றார். ஒரு கிராமத்தில் வெற்றி அடைந்த திட்டத்தை இந்தியா முழுமையிலும் செயல்படுத்தினால்
ஆற்றல் மிக்க ஒரு புதிய இந்தியாவையே உருவாக்கமுடியும்
என்று அவர் கனவு கண்டார்.
போல்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு
பெரிய வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஒரு விருந்தினர் மாளிகையைக்
கட்ட தாகூரின் தந்தை விரும்பினார். அப்பகுதியைச் சேர்ந்த பூபன் சின்ஹா என்னும் பண்ணையாரிடமிருந்து
இருபது ஏக்கர் நிலப்பகுதியை நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பெற்று நிலத்தைச் சீர்திருத்தினார்.
ஆரம்பத்திலிருந்தே கொள்ளையர்களின் தங்குமிடமாக இருந்த அந்தப் பகுதியிலிருந்து வெளியேற
அவர்கள் மறுத்தனர். ஆயினும் தாகூரின் தந்தை அவர்களிடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை
நடத்தி, அங்கிருந்து வெளியேற்றினார். ஒரு கட்டத்தில் அவர்களே அந்த விருந்தினர் மாளிகையைக்
கட்டிமுடிக்க ஒத்துழைத்தனர். அந்த மாளிகைக்கு அவர் சாந்திநிகேதன் என்று பெயர் சூட்டினார்.
கல்கத்தாவுக்குத் திரும்பிய தாகூர்
தன் தந்தையிடம் சாந்திநிகேதனில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவிக்கொள்ள இசைவை வேண்டினார். அவர் சம்மதித்ததும் 1901இல் வேலைகளைத் தொடங்கினார்
தாகூர். கல்வி யுகத்தில் அது ஒரு புதுயுகமாக அமைந்தது. வகுப்பறைப்பாடங்கள் வழியாக அல்லாமல் சுதந்திரமாக
ஆடியும் பாடியும் இசைத்தும் நாடகம் நடித்தும் கற்றுக்கொள்ளும் புதுவழிக் கல்விமுறையை
வகுத்து பிள்ளைகளுக்கு கல்வியறிவை அளிக்க அவர் திட்டமிட்டார். முதன்முதலில் சாந்திநிகேதனில்
தாகூரின் மகன் உட்பட ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்தனர் பின்னர், பள்ளி வளர்ச்சியடைந்ததும் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் வந்து சேர்ந்தனர். குழந்தைகளுக்குக்
கல்வி கற்பிக்க ஊக்கமும் திறமையும் உள்ள இளைஞர்களையே தேர்ந்தெடுத்து ஆசிரியர்களாக நியமித்தார்
தாகூர்.
அனைவரிடத்தும் பணிவாக நடக்கவேண்டும்
என்றும் சாதிமத வேறுபாடின்றி சகோதரர்களாகப் பழகவேண்டுமென்றும் மாணவர்களுக்கு தாகூர்
அறிவுறுத்தினார். மதபோதனையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. எங்கும் நிறைந்த இறைவனை உணர்வதே
உண்மையான மதமாகும் என்பது அவர் பார்வை. சுதந்திரமாக கற்கும் முறையைப் போதித்த போதும்,
சுதந்திரத்தை எப்படி அனுபவிக்கவேண்டும் என்பதையும் அவர் கற்றுக் கொடுத்தார். ஒருவர்
சுதந்திரமாக நடப்பது, இன்னொருவருக்குத் தொல்லையையோ, இடையூறையோ விளவிக்கக்கூடாது. மாணவர்கள்
அனைவரும் ஒரு சமூகமாக வாழ, சில சட்டதிட்டங்கள் அவசியமாகும். அவற்றை மாணவர்களே வகுத்துக்கொண்டு,
அவற்றை நிறைவேற்ற ஒரு தலைவனையும் தேர்ந்தெடுப்பார்கள். பள்ளியின் சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு
போன்ற எல்லாச் செயல்களையும் கண்காணிப்பது அந்த மாணவரின் கடமை. மெல்ல மெல்ல சாந்தி நிகேதனின்
புகழ் நாடெங்கும் பரவியது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் சாந்திநிகேதனுக்கு
வந்து கல்வி கற்கத் தொடங்கினர்.
சமூகத்தில் கல்வி வழியாக
மட்டுமே பெண்கள் மேம்பாடடைய
முடியும் என்பதில் தாகூருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. கல்வியின் வழியாக அவர்களுடைய
சிந்தனைப்போக்கு மாறும், சிந்தனை மாற்றம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும் என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். மேலும் கல்வி என்பது பெண்களை பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக மாற்றும்
என்றும் சமூகத்தளத்தில் வலிமையாக காலூன்றி நிற்கச் செய்யும் என்றும் அவர் ஒவ்வொரு மேடையிலும் எடுத்துக் கூறினார். இதன் வழியே சாந்திநிகேதனில் பெண்களை அனுமதித்ததோடு, அவர்கள் கலை, அறிவியல், இசை, நடனம் மட்டுமின்றி, தற்காப்புக் கலைகளிலும் தேவையான பயிற்சிகளைப் பெற வழிவகுத்தார்
தாகூர்.
பள்ளி நடத்துவது தொடர்பாக தாகூர் மகிழ்ச்சியடைந்தார்
என்றபோதும், அவருக்கு சில துன்பங்களும் ஏற்பட்டன. முதலாவது பணப்பற்றாக்குறை. மாணவர்களிடமிருந்து
அவர் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பதால், பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டே
சென்றது. தன் மனைவியின் நகைகளை விற்று சிறிது
காலம் சமாளித்தார். எதிர்பாராத விதமாக 1902இல் அவர் மனைவி இயற்கையெய்தினார். அடுத்த
ஆண்டே அவருடைய மகளும் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டில் பள்ளி நிர்வாகத்தில் அவருக்கு
பெரிதும் உதவியாக இருந்த சதீஷ்சந்திர ராயும் அவருடைய தந்தையாரும் காலமானார்கள். அந்தப்
பிரிவுத்துயரம் அவரை பெரிதும் வருத்தியது. எனினும் அவர் சிறிதும் நம்பிக்கை இழக்காமல்
சந்திநிகேதனுக்காக பணியாற்றி வந்தார்.
சுதேச இயக்கம் பற்றிய பேச்சே தொடங்காத
காலகட்டத்தில் தாகூர் சுதேசப் பொருட்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். இந்திய வனிகத்திலும்
தொழிலிலும் பெரும்பகுதி இந்தியர்களிடமே இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்தது.
அவருடைய சகோதரர்கள் சணல் ஆலை, கரும்பு ஆலை என தொடங்கியபோது அவர்களுக்கு ஊக்கமளித்து,
கடன் வாங்கி முதலீடு செய்தார். ஆனால் ஆலைகள் வெற்றிகரமாக இயங்கவில்லை. சிறிது காலத்திலேயே
மூடவேண்டி வந்தது. தாகூரின் கடன்சுமை பெருகியது. சாந்தி நிகேதனை தொடர்ந்து நடத்தும்
பொருட்டு அவர் பொருளுதவிக்காக அலைந்துகொண்டே இருந்தார். ‘ப்ந்தர்’ என்னும் பத்திரிகையில்
ஆசிரியராகப் பொறுப்பேற்று ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதினார்.
அச்சமயத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும்
தனித்தனியாகப் பிரிக்கும் எண்ணத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் வங்காள மாகாணத்தை இரண்டாகப்
பிரித்தது. இப்பிரிவினையை வங்கமக்கள் அனைவரும் எதிர்த்தனர். ‘ஒரே வங்காளம்’ என்னும்
இயக்கத்துக்கு தாகூர் தலைமை தாங்கினார். பல
பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். அவர் எழுதி இசைத்த தேசிய கீதங்கள் வங்க மக்களிடையே
வெகுவிரைவில் பரவின. ‘அமர் சோனார் பாங்க்ளா’ என்னும் பாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.
ஆங்கிலேயருக்கு எதிரான எதிர்ப்புக்குரல் அமைதியான முறையில் பரவத் தொடங்கிய சூழலில்
உணர்ச்சிமிக்க வங்க இளைஞர்கள் வன்முறையில் இறங்கி உயிரிழப்புக்கும் பொருளிழப்புக்கும்
காரணமாயினர். தாகூரின் அமைதிவழி போராட்டமுறையை அவர்கள் ஏற்கவில்லை. இது தாகூருக்கு
மிகுந்த ஏமாற்றமளித்தது. அரசியலில் இருந்து ஒதுங்கி, சாந்திநிகேதன் அலுவல்களில் மட்டும்
கவனம் செலுத்தத் தொடங்கினார். சிலர் அவரைத் துரோகி என்று தூற்றவும் தயங்கவில்லை. ஆனால்
அதைக் கண்டு அவர் வருந்தவில்லை. மூன்று ஆண்டுகள் இடைவெளியில் இந்து கட்சி என்றும் முஸ்லிம்
கட்சி என்றும் இரு கட்சிகள் ஏற்பட்டன. அந்தப் பிரிவினைப்பார்வைதான் அவரை மிகவும் வருத்தியது. இந்துக்கள் முஸ்லிம்களை அன்னியர்களாகக் கருதக்கூடாது. ஒருவரையொருவர் மதித்து நடக்கவேண்டும் என்பது தாகூரின்
பார்வையாக இருந்தது.
பட்டீஸர் என்னும் கிராமத்தில் தாகூரின் குடும்பத்துக்குச் சொந்தமான
விவசாய நிலப்பகுதிகள் இருந்தன. அங்கிருந்த காளிகிராம் பர்காணாவில் 1908இல் மக்கள் நலக்குழுவொன்றை உருவாக்கினார் தாகூர். சாலைகளை உருவாக்குவது, மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகளைச் செய்து தருவது,
விவசாய நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தித்
தருவது, மக்களிடையே எழும் தகராறுகளுக்குத் தீர்வு காண்பது, கிராமத்தினரின் பிள்ளைகள் படிப்பதற்கு
ஏதுவாக பள்ளிகளை நிறுவி நடத்துவது, நெருக்கடி சமயங்களில் கிராமத்து மக்களின்
உணவுத்தேவைப்பிரச்சினையை சமாளிப்பது போன்ற செயல்பாடுகளில் அக்குழுவினர் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில் ஒரு சில சிரமங்கள் ஏற்படினும் காலப்போக்கில் ஒரு சீரான நிலைமை உருவானது.
அதற்குப் பின், ஒரு சில ஆண்டுகளிலேயே அந்தப் பகுதி தன்னிறைவு கொண்டதாக மாறிவிட்டது.
தேவையான எண்ணிக்கையில் பள்ளிகளும் கிணறுகளும் குளங்களும் மருத்துவமனையும் சின்னச்சின்ன
தகராறுகளை விசாரித்துத் தீர்த்துவைக்கும் விசாரணை அமைப்புகளும் தாமாகவே உருவாகத் தொடங்கின.
1911ஆம் ஆண்டில் தாகூரின் ஐம்பதாம்
ஆண்டுவிழா சாந்திநிகேதனில் சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை அவரே எழுதிய ராஜா என்னும்
நாடகம் நடைபெற்றது. அதில் அவரே ராஜாவாக வேடம் தாங்கி நடித்தார். சாந்தி நிகேதனத்தில்
மட்டுமன்றி வங்காளமெங்கும் அவருடைய பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது
பிரும்மசமாஜத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தாம் இயற்றிய புதியதொரு தேசியப்பாடலை அவரே
பாடினார். அதுவே ‘ஜனகணமன’ என்னும் வாழ்த்துப்பாடல்.
மாடர்ன் ரிவ்யூ என்னும் பத்திரிகையின்
ஆசிரியராக இருந்த ராமானந்த சட்டர்ஜி என்பவர் தாகூரின் நண்பர். தாகூரின் கதைகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
தம் பத்திரிகையில் வெளியிட்டார். அதனால் வங்காளத்தில் மட்டுமன்றி ஆங்கிலம் படித்தோரிடையேயும்
தாகூரின் புகழ் பரவத் தொடங்கியது. அவ்விதழுக்கு லண்டன் நகரிலும் வாசகர்கள் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஆங்கில ஓவியரான ரோதென்ஸ்டீன். அவர் அக்கதைகளைப் படித்த பிறகு தாகூருடன்
கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ளத் தொடங்கினார். ஒருமுறை அவர் தாகூரை லண்டனுக்கு வருமாறு
அழைப்பு விடுத்தார்.
சாந்திநிகேதனைத் தொடர்ந்து நடத்த தாகூருக்கு
பணம் தேவைப்பட்டது. லண்டன் பயணம் சாந்திநிகேதனின்
புகழைப்பரப்பவும் நிதி திரட்டவும் உதவும் என நம்பினார் தாகூர். பயணத்துக்கான ஏற்பாடுகளைச்
செய்துகொண்டிருந்த வேளையில் தாகூரின் உடல்நலம் குன்றிவிட்டது. அதனால் பயணம் தடைப்பட்டது.
வேறு வழியில்லாமல் மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க கங்கைக்கரையோரத்தில் இருந்த தன் வீட்டில்
சில நாட்கள் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது ஏற்கனவே அவ்வப்போது எழுதி சிதறியிருந்த
தன் பிரார்த்தனைப் பாடல்களையெல்லாம் திரட்டி வைத்துக்கொண்டு, அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத்
தொடங்கினார். உடல்நலம் தேறி இங்கிலாந்துக்குப்
புறப்பட்டபோதும், கப்பலிலும் அம்மொழிபெயர்ப்புப்பணியைத் தொடர்ந்து செய்தபடியே இருந்தார்.
லண்டனில் தன் நண்பர் சோதென்ஸ்டினைச்
சந்தித்து மகிழ்ந்தார் தாகூர். பேச்சின் திசை இலக்கியத்தின் பக்கம் திரும்பிய போது,
தாகூர் புதிதாக எழுதிய கதைகளைப்பற்றியும் கவிதைகளைப்பற்றியும் அவர் அறிந்துகொள்ள விரும்பினார்.
தாகூர் தன் வசமிருந்த பிரார்த்தனைப்பிரதிகளின் மொழிபெயர்ப்பை அவரிடம் காட்டினார். அதைப்
படித்த ரோதென்ஸ்டீன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். தனக்குக் கிடைத்த வாசிப்பு அனுபவம்
தன் நண்பர்களுக்கும் கிடைக்கவேண்டும் என நினைத்த ரோதென்ஸ்டீன் ஒருசில நாட்கள் இடைவெளியில்
தன் எழுத்தாள நண்பர்களை தம் வீட்டுக்கு வரவழைத்தார். கவிஞர் டபிள்யூ.பி. ஈட்ஸ், பத்திரிகையாசிரியர்
எர்னெஸ்ட் ரீஸ், பேராசிரியர் சார்லஸ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கவிஞர் ஈட்ஸ் அக்கவிதைகளைப் படித்தார்.
இயற்கையில், சூரியனின் உதயத்தில், மழையில், பனித்துளிகளில், மலர்களில் என எங்கெங்கும்
இறைவனையே காண்பதாக உள்ள பாடல்கள் சில. இறைவனின் அலகிலா விளையாட்டுகளைச் சித்தரிக்கும்
பாடல்கள் சில. இவற்றை ஈட்ஸ் படித்துக்கொண்டிருந்தபோது ஒருவரும் பேசவில்லை. அமைதி நிலவியது.
ஒன்றும் கூறாமலேயே எல்லோரும் எழுந்து சென்றுவிட்டனர். அந்நிகழ்ச்சி தாகூருக்கு சிறிது
ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அடுத்த நாள் முதல் அவருடைய கவிதைகளைப் பாராட்டி ஒவ்வொருவரிடமிருந்தும்
கடிதம் வரத் தொடங்கியது. அதைப் படித்ததும் மனநிறைவடைந்தார் தாகூர்.
பெர்னார்ட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், பெட்ரண்ட்
ரஸ்ஸல், கால்ஸ்வொர்தி, ஜார்ஜ் மூர், ராபர்ட் பிரிட்ஸஸ் என பல கவிஞர்களையும் அறிஞர்களையும்
தம் பயணத்தில் தாகூர் சந்தித்தார். கீதாஞ்சலிக்கு
ஈட்ஸ் ஒரு விரிவான முன்னுரையை அளித்தார். கீதாஞ்சலி நூல்வடிவில் பிரசுரமானது. இங்கிலாந்திலிருந்து
தாகூர் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு பல பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்றினார்.
இந்திய நாகரிகத்தின் சிறப்பு பற்றியும் தாம் தோற்றுவித்திருக்கும் சாந்தி நிகேதனின்
நோக்கத்தைப்பற்றியும் பேசினார். பின்னர் இங்கிலாந்து வழியாக 1913இல் தாகூர் இந்தியாவுக்குத்
திரும்பி வந்தபோது, அந்த ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்ட
செய்தி வெளிவந்தது. உலகத்தின் மிகச்சிறந்த அப்பரிசு, ஐரோப்பியர் அல்லாத எவருக்கும்
அதுவரை வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் கவிஞருக்கு கிடைத்த பெருமை என இந்தியர்கள்
அனைவருமே அதைக் கொண்டாடினர். ஆங்கில அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. கீதாஞ்சலி மட்டுமன்றி, தாகூரின் பிற நூல்களும் பிற
இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன தாகூரின் புகழ் உலகெங்கும் பரவியது.
தாகூர் தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தார்.
கல்கத்தாவில் அவர் இல்லத்தில் எப்போதும் எழுத்தாளர்கள் கலந்துரையாடினர். தாகூர் அரசியலில்
பங்கு கொண்டு இந்திய தேசிய காங்கிரஸுக்கு உதவினார்.
தம் அழகிய பாடல்களால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேசிய உணர்ச்சியை ஊட்டினார். இச்சமயத்தில்
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள் தாகூருடன் சிறிது
காலம் சாந்திநிகேதனில் தங்கியிருந்தார். காந்தியடிகள் தாகூரின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார்.
அவரை குருதேவ் என்றே காந்தியடிகள் அழைத்தார்.
1919இல் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக்
என்னும் இடத்தில் கூடியிருந்த திரளான மக்கள் மீது துப்பாக்கியால் சுடுமாறு பிறப்பித்த
உத்தரவால் முன்னூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சாந்திநிகேதனின் வளர்ச்சியில் ஈடுபட்டிருந்த தாகூர் அச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில்
உறைந்துவிட்டார். அரசாங்கத்தின் மீது சீற்றமுற்று சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ்
அரசு தனக்கு வழங்கிய சர் பட்டத்தைத் திருப்பியனுப்பினார். அத்துடன் ”மனிதாபிமானமற்ற
வகையில் என் நாட்டு மக்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, எனக்கு மட்டும் இந்தக் கெளரவம்
எதற்கு? இது எனக்கு அவமானமாக உள்ளது. எவ்விதமான தனிமதிப்பும் இல்லாமல், நான் எப்போதும்
என் நாட்டுமக்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்” என்று ஒரு கடிதமும் எழுதி வைசிராய்க்கு
அனுப்பி வைத்தார்.
உலக நல்லுறவுக்கு உதவவும் உலக மக்களிடையே
ஒற்றுமை உணர்வையும் நல்லெண்ணத்தையும் உருவாக்கவும் ஒரு பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த தாகூர்
விரும்பினார். இதற்காக சாந்திநிகேதனத்தையே பல்கலைக்கழகமாக மாற்ற நினைத்தார். 22.12.1921 அன்று சாந்திநிகேதனம் தொடங்கி இருபதாண்டு
நிறைவெய்தும் நாளில் விஸ்வபாரதியைத் தொடங்கினார்.
விஸ்வபாரதியின் செயல்முறைகள் ஒன்றினுள் ஒன்றென மூன்று வட்டங்களைக் கொண்டவையாக இருக்கவேண்டும்
என்பது தாகூரின் கனவாக இருந்தது. இவற்றுள் அடிப்படை வட்டம் இந்திய வட்டம். இந்தியச்
சிந்தனை, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை அனைவரும் அறிந்துகொள்ளும்
வகையில் பாடத்திட்டங்களை வகுக்கவேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. இரண்டாவது
வட்டம் ஆசியச் சுற்றுவட்டமாகும். மூன்றாவது வட்டம் உலகச்சுற்றுவட்டமாகும். ஆசிய நாகரிகப்
பண்பாடுகளுடன் மேலை நாடுகளின் நாகரிகப்பண்பாடுகளையும் அறிந்துகொள்ளும் முயற்சியாக அது
அமையும். இத்தகு உன்னதக் குறிக்கோள்கலுடன் தொடங்கிய விஸ்வபாரதியில் உலகின் பல நாடுகளிலிருந்து
ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து கல்வி கற்கத் தொடங்கினர்.
கிராமங்களைப்பற்றிய பல்வகையான செய்திகளைத்
திரட்டுவதும், அவற்றை ஆராய்ந்து கிராம முன்னேற்றத்துக்கான திட்டங்களை வகுப்பதும் ஒரு
பல்கலைக்கழகத்தின் பணியாகுமென்று தாகூர் கருதினார். கிராம மக்களின் முன்னேற்றத்தில்
நாட்டம் கொண்டிருந்த தாகூர், விஸ்வபாரதியுடன் இணைந்து செயல்படும் வகையில் 1922இலேயே
ஸ்ரீநிகேதனம் என்னும் கிராம அமைப்பைத் தொடங்கினார். விஸ்வபாரதியிலிருந்து இரண்டு மைல்
தொலைவில் சுருள் என்னுமிடத்தில் தாகூர் ஏற்கனவே வாங்கியிருந்த ஓர் இல்லத்தில் அந்த
அமைப்பை நிறுவினார். ஏற்கனவே காளிகிராம் பர்காணாவில் சமூகநலக்குழுக்கள் வழியாக உருவாக்கிய
மாற்றங்களை ஸ்ரீநிகேதனிலும் உருவாக்கமுடியும் என்பதை மீண்டும் தாகூர் நீருபித்துக்காட்டினார்.
பல்கலைக்கழகம் செழித்து வளர மிகுதியான நிதியுதவி தேவைப்பட்டது. எனவே, இந்தியப்பகுதிகளிலும்
உலக நாடுகளுக்கும் அவர் தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டார். இப்பயணங்களின்போது, உலக
நாடுகளிடையே நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்ப்பதற்குப் பாடுபட்ட ஒரு நல்லெண்ணத்
தூதராகவும் உலகக்குடிமகனாகவும் விளங்கினார்.
நம் சமூகத்தில் மூன்று முக்கியமான மாற்றங்கள்
நிகழவேண்டும் என தாகூர் பெரிதும் விரும்பினார். சுதந்திர சிந்தனைக்கு வழிவகுக்கும்
கல்வி அனைவருக்கும் கிடைப்பதற்குப் பாடுபடவேண்டும் என்பது அவருடைய முதல் விருப்பம்.
பெண்கள் தம் கல்வித்திறமையாலும் ஆற்றலாலும் கலைகளாலும் முன்னேறி நிற்க இச்சம்மூகம்
துணைநிற்கவேண்டும் என்பது அவருடைய இரண்டாவது விருப்பம். எல்லா இந்தியக் கிராமங்களும்
தற்சார்பு கொண்டவையாக உயர்ந்தோங்கி நிற்கவேண்டும் என்பது அவருடைய மூன்றாவது விருப்பம்.
அவ்விருப்பங்கள் தம் வாழ்நாளிலேயே கொஞ்சம்கொஞ்சமாக நிறைவேறி வருவதைப் பார்க்கும் நற்பேறும்
அவருக்கு வாய்த்தது
முதலாம் வகுப்புப் புத்தகத்தில் தான்
படித்த ஒரு பாடலைப்பற்றி தாகூர் அடிக்கடி நினைவுகூர்ந்து பேசுவது வழக்கம். அது அவருக்கு
மிகவும் பிடித்த பாடல். ‘ஜலபடே பாதாநடே’ என்பது அதன் தொடக்க வரி. அதன் தாளக்கட்டின்
காரணமாக அவர் நெஞ்சில் அந்தப் பாடல் ஆழமாகப் பதிந்துவிட்டது. அது மழையைப் பற்றிய குறிப்பு.
மழை சடசடக்கிறது, இலை சலசலக்கிறது என்பதுதான் அதன் பொருள். எப்போது அவ்வரியை நினைத்தாலும்
அக்கணத்தில் தன் மனத்தில் படைப்புணர்வு ஊற்றெனப் பொங்குவதாக தாகூர் குறிப்பிடுவது வழக்கம்.
அது ஒருவகையான படைப்பு ரகசியம். மழை
எங்கோ வானத்திலிருந்து பொழிகிறது. தரையில் அண்ணாந்து பார்த்திருக்கும் இலையை அது சலசலக்க
வைக்கிறது. அது எக்கணத்தில் நிகழ்கிறதோ, அது ஒரு அற்புதக் கணம். சாதகம் செய்வதுபோல
அந்த வரியை அசை போடுவதன் வழியாக தாகூர் அந்த அற்புதக்கணத்தை வாழ்நாள் முழுதும் மீண்டும் மீண்டும் கண்டடைந்தபடி
இருந்தார். தாகூரும் ஒருவகையில் நம் மண்ணில் நிகழ்ந்த அற்புதம்.
இலக்கியத்துக்கென வழங்கப்படும் நோபல் பரிசைப் பெற்ற ஒரே இந்தியரான
இரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் 07.05.1861 அன்று தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதா
தேவி அம்மையாருக்கும் பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தார். எட்டு வயதிலேயே கவிதை எழுதத்
தொடங்கிவிட்டார். இலக்கியம், இசை, நாடகம், நடிப்பு என எல்லாத் துறைகளிலும் ஆர்வமும்
திறமையும் கொண்டிருந்தார். இயற்கையான சூழலில் மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக
தன் கனவுப்பள்ளியை சாந்திநிகேதனில் நிறுவினார். இருபதாண்டுகளுக்குப் பிறகு அது நன்கு
வளர்ச்சிபெற்று வேரூன்றியதும், உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவமாணவிகள் வந்து படிக்கும்
வகையில் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக விரிவாக்கினார். காபூலிவாலா, பிக்காரிணி, பெண்ணின்
கடிதம் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும் கோரா, சிதைந்த கூடு, வீடும் உலகமும் உள்ளிட்ட
பல நாவல்களையும் வால்மீகியின் பிரதிபை, சித்ராங்கதா, மாலினி, பிராயச்சித்தம் உள்ளிட்ட
நாடகங்களையும் எழுதினார். 07.08.1941 அன்று மறைந்தார். அவரைப்பற்றியும் அவருடைய இலக்கியப்பங்களிப்பைப்பற்றியும்
தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வந்துள்ளன. அவருடைய கவிதைநூல்களான கீதாஞ்சலி,
வளர்பிறை, மின்மினிகள் போன்றவையும் புதினங்களும் சிறுகதைகளும் தமிழில் இன்றளவும் வாசகர்கள்
விரும்பிப் படிக்கும் நூல்களாக உள்ளன.
(கிழக்கு டுடே - 2024)