Home

Sunday, 23 February 2025

நித்யா

 

 கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என் மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம்

சிறுவர்களும் சிறுமிகளுமாக இருநூற்றுசொச்சம் பிள்ளைகள் தங்கியிருக்கும் இல்லத்தில் சில பெயர்களை அடையாளங்களுடன் சொல்லக்கூடிய அளவுக்குக்கூட எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது. பெயர் மறந்திருந்தாலும் சில முகங்கள் மட்டும் நினைத்த கணத்தில் ஆழ்மனத்திலிருந்து மிதந்து தெரிகிற அளவுக்குப் பதிந்திருக்கின்றன. என்றாலும் நித்யாவைப்பற்றி நேரிடையாகத் தெரிந்து கொள்ளும் வரை அவள் பெயர்மட்டும் எப்படியோ எங்கள் மனங்களில் பதியாமல் நழுவிப்போய் விட்டது. அதை நினைக்கும்போது சற்றே கூச்சம் படர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

நித்யாவைப் பற்றித் தெரிந்துகொண்ட தினத்திலும் இல்லத்துக்குச் சென்ற காரணம் வேறு. அன்று எங்கள் ஆறாவது திருமண நாள். இல்லத்துப் பிள்ளைகளுடன் சிற்றுண்டி உண்பதற்காகச் சென்றிருந்தோம். இன்னும் அந்த நாளை என் நெங்சம் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறேன்.

இல்லத்துக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் ஒரு சொந்தக்காரர் வீட்டுக்குள் நுழைந்ததும் உருவாகும் நிம்மதியையும்

மனநிறைவையும் உணர்வதுபோலவே அன்றும் உணர்ந்தது மனம். வாசலில் இருந்த சேவகன் என் கையிலிருந்த இனிப்புப் பெட்டியையும் சித்ராவிடமிருந்து முறுக்கு அடுக்கிய வாளியையும் வாங்கிக்கொண்டான். சிற்றுண்டிப் பெட்டிகளை மேலும் இருவர் ஓடிவந்து ஆட்டோவிலிருந்து எடுத்துக்கொண்டார்கள். “வாங்க வாங்க. எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்காங்கஎன்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். புதுசாக வந்திருந்தாலும் சேவகனுக்கு பேசவும் பழகவும் தெரிந்திருந்தது. இதற்கு முன்னால் மாணிக்கம் என்ற பெயருடையவன் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சேவகனாக இருந்தான். அவன் குணமும் பேச்சும் செய்கையும் சிரிப்பும்கூட ஏறத்தாழ இப்படித்தான். மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் கடமையை நிறைவேற்ற சொந்த ஊருக்குப் போனவன் திரும்பாததையொட்டி புதியவன் சேர்ந்துகொண்டான். உணவுக் கூடத்துக்குப் பக்கம் திரும்பும் முன்னால் ஒருகணம் முகத்தைத் திருப்பிஐயா உங்களுக்காக காத்திட்டிருக்காரு. பாத்துட்டு வாங்க. நான் முன்னால போறன்என்று சொல்லிவிட்டு கடந்துபோனான். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அளவுகடந்த மரியாதை புலப்பட்டது.

பக்கவாட்டு ஜன்னல் வழியாக தென்னந்தோப்பு தெரிந்தது. காற்றில் உரசியபடி நீண்ட பச்சை ஓலைகள் ஒலியெழுப்ப குலை குலையாக இளநீர்க்காய்கள் தொங்கின. பக்கத்திலிருந்த பம்ப் செட்டில் மோட்டார் சீரான ஓசையுடன் இயங்குவதும் தலைகீழ்வடிவில் நீண்டிருந்த குழாய்வழியே ஊற்றுப்போல தண்ணீர் பொங்கி வழிவதும் தெரிந்தன. அங்கே ஒரு நாற்காலிபோட்டு உட்கார்ந்தால் ஒருநாள் முழுக்கவும்கூட அலுப்பின்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். “காசி ராமேஸ்வரம்னு போயி கற்பூரம் தேங்கா ஒடைச்சாதான் புண்ணியம் தேடிக்கணும்னு இல்லடா. பசிபசின்னு பறக்கற புள்ளைங்களுக்கு தெம்பா நாலுவாய் சோறு போடமாரி செய்யி. அதான் உண்மையான புண்ணியம்என்று அம்மா சொல்வாள். ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கும்போது காதில் கேட்ட வார்த்தை. அப்படியே ஆணி இறங்கியமாதிரி ஆழமாக மனத்தில் பதிந்துவிட்டது. கூடுதலாக ஏதாவது பணம் கைக்கு கிடைத்தால் ஏதாவது சாப்பாட்டுப் பொருள்களை வாங்கிவந்து இல்லத்துக்குத் தராமல் தூக்கம் வருவதில்லை இப்போது.

மேசைமேல் அகலமாக விரிந்திருந்த பேரேட்டில் ஏதோ கணக்கு எழுதியபடி உட்கார்ந்திருந்தார் ராமமூர்த்தி. உள்சுவர்களில் பூசப்பட்டிருந்த வெளிர்நீல வண்ணமும் தொங்கவிடப்பட்டிருந்த  ஓவியங்களும் அந்த அறைக்குப் பொலிவைக் கொடுத்தன. “வணக்கம்என்று சொல்லவும் அவர் மகம் நிமிரவும் சரியாக இருந்தது. “வாங்க வாங்க, உள்ள வாங்கஎன்றபடி சிரித்துக்கொண்டே எழுந்துவந்தார். இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்களைச் சொன்னார். அபியின் கன்னத்தைக் கிள்ளிஆஹா, தம்பிக்கு இந்த பிஸ்கட் கலர் சட்ட ரொம்ப எடுப்பா இருக்குதேஎன்றார். “அப்பா ஐதராபாத்லேருந்து வாங்கியாந்தாருஎன்று பதில்சொன்னவன் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி. ஆந்திரா சட்ட பாண்டிச்சேரி வந்திடிச்சா. அப்படி போடுஎன்று சிரித்தார். “உக்காருங்க ரவி சார். உங்களமாதிரி நல்லவங்களாலதான் இல்லத்த கட்டி இழுத்துகிட்டு போறோம். உங்க மனசு கடல் மாதிரி பெரிசு. எல்லாருக்குமே உங்களப்போல மனசு வந்தா ரொம்ப நல்லா இருக்கும் சார்என்றார்.

எல்லாருமே நாற்காலியில் உட்கார்ந்தோம். காலையிலிருந்தே அமைதியும் ஆனந்தமும் குடியிருந்த மனதில் மேலும் கொஞ்சம் அமைதி பெருகியதைப்போல இருந்தது. அம்மாவின் முகத்தை ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவந்தேன். அம்மாவின் குடும்பத்தில் பன்னிரண்டு பிள்ளைகள். சரியான போஷாக்கு இல்லாமல் சவலைகளாகி அம்மாவைத் தவிர மற்றவர்கள் சிறு வயதிலேயே மூச்சடங்கிப் போனார்கள். வில்லியனூரிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுக்க வந்த இன்பவல்லி டீச்சரின் உதவியால் ஆரோக்கியசாமி இல்லத்தில் சேர்க்கப்பட்டு அவள் ஒருத்தி மட்டுமே பிழைத்தாள். கூடப் பிறந்த பதினொன்று பேரும் பிரிந்துபோன சம்பவம் கசப்பான ஒரு புராணக்காட்சியைப்போல அவள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டது. படித்து ஆளாகி, அவளும் ஒரு டீச்சராகி வலம் வந்த நாள்களில்சாப்டறியா கொழந்தஎன்று கேட்டபிறகே எந்தக் குழந்தையிடமும் பேச்சைத் தொடங்குவது அவள் வாடிக்கையானது. பசி என்னும் முள்ளின் கீறல் அழுத்தமான வடுவாக அவள் மனத்தில் விழுந்துவிட்டது. ஒரு நொடி கூட அவளால் அதை மறந்து யோசிக்க முடிந்ததில்லை. “ஆண்டவன் எனக்கு இன்னொரு ஜன்மம்னு ஒன்று கொடுத்தான்னா எங்கயாவது மணிமேகலயா பொறக்கணும். முடிஞ்ச அளவுக்கு பசிய வெரட்டிகிட்டே இருப்பேன்என்று அருகில் உட்கார்ந்து பெருமூச்சு விடுவதைப்போல இருந்தது.

பிரார்த்தனை மணியடிக்கும் ஒசை கேட்டதும்வாங்க ரவி சார் போவலாம். புள்ளைங்க காத்திருப்பாங்கஎன்று எழுந்தார் ராமமூர்த்தி. பக்கவாட்டுக் கதவின் வழியாக கடந்து உணவுக் கூடத்துக்குச் சென்றோம். மூன்று வயதிலிருந்து வெவ்வேறு வயதுகளில் இருக்கும் இருநூற்றிச் சொச்ச குழந்தைகளும்  உட்கார்ந்திருந்தார்கள். எங்களைக் கண்டதும் எழுந்துவணக்கம் ஐயாஎன்று ஒரே குரலில் சொன்னார்கள். ஜன்னல்கள் வழியே தென்னங்காற்று வீசிக்கொண்டிருந்தது. இரண்டு சிறுமிகள் சற்றே முன்னால் வந்து கண்மூடி கைகுவித்து பக்தியுடன் இறைவணக்கம் பாடினார்கள். அதற்குப் பிறகு பச்சை நிறத்தில் கவுன்அணிந்த சிறுமி ஒருத்தி முன்னால் நடந்துவந்து சித்ராவிடம் ஒரு பூங்கொத்தை நீட்டிவாழ்த்துகள் அக்காஎன்று மழலைக்குரலில் சொன்னாள். அதன் கன்னங்களில் அழகாகக் குழி விழுந்தது. இன்னொரு சிறுவன் வேறு புறத்திலிருந்து எழுந்துவந்து ஓலைப்பாயில் வரைந்த யானைச் சித்தரத்தைக் கொடுத்துவிட்டுவாழ்த்துகள் அக்காஎன்றான். சித்ராவின் முகத்தில் சிவப்புப் படர்ந்தது. அவள் உள்ளூர தழுதழுத்து வார்தைகளுக்குத் தடுமாறுவதும் கண்கள் தளும்புவதும் உடல் அதிர்வதும் தெரிந்தது. நான் அவள் தோளைப்பற்றி அழுத்தினேன். அவள் என்னைப் பார்த்து சிரிக்க முயற்சி செய்தாள். ஒரு துணி கண்ணீர் கண்களில் தேங்கி கன்னத்தில் உருண்டது. சேவகனும் பணிப்பெண் ஒருத்தியும் சிற்றுண்டி வைக்கப்பட்ட தட்டுகளை ஒவ்வொருவருக்குமாக கொடுத்தார்கள். எல்லாரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

அறைக்குத் திரும்பியதும் பையிலிருந்து ஒரு காசோலையை எடுத்து ராமமூர்த்தியிடம் கொடுத்தேன். “ரொம்ப நன்றி ரவி சார்என்றபடி வாங்கிக் கொண்ட ராமமூர்த்திஉங்களுக்கு ஜிப்மர்ல யாராயாச்சிம் தெரியுங்களா சார்?” என்று கேட்டார்.

தெரியாதுங்களே, ஏன் என்ன விஷயம்?”

நித்யான்னு நம்ம இல்லத்து புள்ள ஒன்னுக்கு ஒரு மாசமா ஒடம்பு சரியில்ல சார். தீராத வயித்து வலி. அங்கதான் சேத்திருக்கம், என்ன என்னமோ டெஸ்ட் எடுக்கறாங்க. ஒன்றும் கண்டுபுடிக்க முடியல. புள்ளயோட நெலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது. யாராவது தெரிஞ்சவங்க சொன்னா இன்னும் கொஞ்சம் அக்கறயா பாத்துக்குவாங்கன்னு தோணுது.”

அச்சச்சோ, எனக்கு யாரயும் அந்த அளவுக்கு நெருக்கமா தெரியாதே

ரொம் நாளா வயித்துவலி வயித்துவலின்னு சொல்லுவா. இல்லத்துல வழக்கமா குடுக்கற நாட்டு மருந்துங்களதான் குடுத்துப் பாத்தம். சிலநாளு உடனே நின்னுடும். அப்பறமா திடீர்னு மறுபடியும் தொடங்கிடும். ரொம்ப அவஸ்தப்படுவா. வயசுக்கு வர ஸ்டேஜா இருக்கும்னு நெனச்சிட்டம். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத  அளவுக்கு போயிடுச்சி. அப்பறமாதான் ஆஸ்பத்திரிக்குப் போனம். அவுங்களும் எந்தெந்த மாத்திரயோ மாத்தி மாத்தி குடுத்தாங்க. ஒன்றும் சரியாவற வழியாவே தெரியல. இப்ப சுத்தமா பசியே இல்ல அவளுக்கு. நாலு இட்லி சாப்பிடற கொழந்த இப்ப பாதி இட்லி சாப்ட ரெண்டுமணிநேரம் எடுத்துக்கற நெலமைக்கு வந்திட்டுது. என்ன வியாதின்னு யாராலயும் சொல்ல முடியல.”

இப்ப எப்பிடி இருக்குது?”

இன்னம் அதே நெலமைதான். நேத்து சாத்துக்குடி வேணும்னு கேட்டுது கொழந்த. உரிச்சி குடுத்தா ஒரே ஒரு சொளயகூட சாப்பிடமுடியல. கையில வச்சிகிட்டு தடுமாறுது. எல்லாம் சரியாயிடும் சார். இப்பதான் லேசர் அது இதுன்னு என்னென்னமோ மாடர்ன் வைத்தியம்லாம் வந்தாச்சே. கவலப்படாதிங்க.”

ரொம்ப அமைதியான பொண்ணு. அழகா பாட்டு பாடுவா. நல்லா நாட்டியம் ஆடுவா. ஸ்கூல்ல பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிங்கள்ளாம் அவதான் முதல் பரிசு. நல்ல அறிவாளிக் கொழந்த. அவளுக்குப் போயி இப்படி ஒரு சோதனை பாருங்க.”

அந்த சிறுமியை உடனே எனக்குப் பார்க்கவேண்டும்போல இருந்தது. இத்தனை ஆண்டுகளாக இல்லத்துக்கு வந்துபோகிற ஆளாக இருந்தாலும் அவளைப்பற்றி எந்த விவரமும் தெரியாதவனாக இருப்பதையொட்டி வருத்தமுண்டானது.

இப்ப கூட அங்கதான் கௌம்பறேன். நேத்து ராத்திரி டாக்டர் ஒரு மருந்த எழுதிக்குடுத்தாரு. அங்க ஸ்டாக் இல்லயாம். வெளியிலயும் பல கடைங்கள்ல கெடைக்கலை. எங்கெங்கயோ அலஞ்சி அலஞ்சி கடைசியா ராத்திரி பத்துமணிக்கு வாங்கனன். போய் குடுத்துட்டு வரணும்.”

நாங்களும் உங்களோட வரலாமா?”

தாராளமா வாங்க சார். ஒங்களமாதிரி நாலுபேரு புது ஆளுங்க பாத்து பேசனா அவளுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.”

ராமமூர்த்தி மடமடவென்று வேலைகளை முடித்தார். கோப்புகளை மேசையின் ஒருபுறமாக தள்ளி வைத்துவிட்டு தேவையானவை எல்லாம் பையில் இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டார். நானும் சித்ராவும் அபியும் எழுந்து வெளியே வந்தோம். அந்த சேவகன் என்னைப் பார்த்து மீண்டும் சிரித்தான். சற்று தொலைவு நடந்ததுமே ஆட்டோ கிடைத்தது. அபி சித்ராவின் மடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

சின்ன வயசுல எனக்கும்கூட அடிக்கடி வயித்துவலி வரும் சார். குடல்ல பூச்சி இருக்கும்னு அம்மா சொல்வாங்க. வௌக்கெண்ணெய் குடுத்து குடிகுடின்னு கட்டாயப்படுத்துவாங்க. எப்படியாச்சிம் ஓடிடணும்னு திட்டம் போடுவேன். ஆனா அம்மா எப்படியாவது என்ன கண்டுபிடிச்சி எண்ணெய குடிக்க வச்சிடும். அப்பறமா கருப்பா உருண்டயா ஒரு மாத்திரையையும் குடுக்கும். அடுத்த நாளு அரயடி நீளத்துக்கு நாக்குபூச்சி வெளியபோவும்.”

நித்யாவுக்கும் ஏதாவது நாட்டுமருந்த குடுத்து சரிப்படுத்தலாம்னுதான் மொதல்ல தோணிச்சி. எதுவும் நான் நெனச்சமாதிரி நடக்கல.”

கவலப்படாதீங்க சார். எல்லாம் சரியாயிடும் பாருங்க.”

சிறிது நேரம் மௌனம் நிலவியது. “இந்த இருநூறு இல்ல.. இன்னம் இருநூறு கொழைந்தைங்க இருந்தாலும் என் கண்ணப்போல பாத்துக்குவேன் சார். ஆனா ஒரே ஒரு கொழந்தைகூட என்ன விட்டுட்டு போகக்கூடாது சார். அத நெனச்சாதான் என்னால தாங்க முடியவே இல்லஅவர் குரல் உடையத் தொடங்கியது.

பாக்கமுடையான்பட்டு ராஜீவ்காந்தி சிலைக்கருகே பச்சை சமிக்ஞை விளக்கு அணைந்து சிவப்பு விளக்கு சுடர்விட்டது.

பயப்படறமாதிரி ஒன்னும் நடக்காது சார். பூரண குமாயி அவ நம்மோட வரப்போறா பாருங்க.” அவர் தோளை மெல்லத் தட்டிக்கொடுத்தேன்.

மீண்டும் பச்சை விழுந்து வண்டி ஓடத்தொடங்கி பத்தாவது நிமிஷத்தில் மருத்துவமனைக்கருகே இறங்கிக்கொண்டோம்.

விசேஷ அனுமதிச்சீட்டைக் காட்டியும்கூட வாசலிலேயே சிறிதுநேரம் நிற்கவேண்டி வந்தது. காவலாளி அந்த அட்டையை வாங்கிச் சென்று உள்ளே அறைக்குள் யாரிடமோ காட்டிவிட்டுத் திரும்பினார்.

போங்க சார். பத்து பாஞ்சி நிமிஷத்துல வந்துடணும் சார். நேரமாயிடுச்சின்னா அதிகாரிங்களுக்கு நாங்கதான் பதில் சொல்லணும்.”

அட்டையை திரும்பி வாங்கிக்கொண்டு மடமடவென்று உள்ளே சென்றோம். படுக்கைபடுக்கையாகப் பார்த்தபடி செல்லும்போதே

மனச்சமநிலை குலைவதைப்போல இருந்தது. நடந்துநடந்து நாலு திருப்பம் கடந்து ஒரு மூலையில் நித்யாவின் கட்டிலுக்கருகே வந்து நின்றோம்.

ராமமூர்த்தியின் முகத்தைப் பார்த்ததும் நித்யாவின் முகம் மலர்ந்தது. “என்ன குட்டி எப்படி இருக்க?” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டார் ராமமூர்த்தி. “வாங்க அங்கிள்என்றபடி சாய்ந்து உட்கார்ந்தாள் நித்யா. சதையெல்லாம் வற்றி எலும்புக்கூடாக இருந்தாள். புருவக்கூடு முன்புறம் துருத்திக்கொண்டிருந்தது. அவள் கண்களில் மட்டும் அசாதாரணமாக வெளிச்சம் சுடர்விட்டது. “இல்லத்துல எல்லாரும் எப்படி இருக்காங்க அங்கிள்?” அவள் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சி அப்படியே நிலைத்திருந்தது.

எல்லாருமே உன்ன ரொம்ப விசாரிச்சாங்க நித்யா. உன்னப்பத்தி சொன்னதுமே உன்ன பாக்கணும்னு சொன்னாரு சார். ரவின்னு பேரு. ரயில்வேஸ்ல இருக்காங்க.”

தெரியும் அங்கிள். பொறந்த நாளுங்களுக்கு நம்ம இல்லத்துக்கு வருவாங்களே. பாத்திருக்கனே. கதையெல்லாம் சொல்வாங்களே. இன்னிக்கு என்ன விசேஷம் அங்கிள்?”

இவுங்களுக்கு கல்யாணம் ஆன நாள்ராமமுர்த்தி எங்கள் இருவர் பக்கமும் கையைக் காட்டினார்.

ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தே டே ஆன்ட்டிஎன்று கைநீட்டி சித்ராவுடன் கைகுலுக்கினாள். பிறகு என் கையையும் பிடித்துக் குலுக்கினாள்.

என்ன புத்தகம் படிக்கற நித்யா?” பேச்சை திசைதிருப்புவதற்காக நான் கேட்டேன். அவள் தலையணைக்கருகே ஒரு புத்தகம் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

வரலாறு அங்கிள். அந்தக் கட்டில்ல ஒரு அங்கிள் இருந்தாரு. ஆபரேஷன் கேஸ். குணமாகி நேத்து வீட்டுக்கு போயிட்டாங்க. அவுங்கதான் என் ஞாபகமா வச்சிக்கன்னு குடுத்தாரு. நல்ல நல்ல படங்கள்லாம் இதுல இருக்குது”.

நீ என்னம்மா படிக்கற நித்யா?”

எட்டாவது அங்கிள்

நல்ல பாடுவியாமே நீ?”

கொஞ்சம் கொஞ்சம் பாடுவேன் அங்கிள்.”

சார்தான் சொன்னாரு. எப்பிடி கத்துக்கிட்டே?”

சும்மா நானே பாடிப்பாடி கத்துகிட்டதுதான் அங்கிள்.”

குணமாகி இல்லத்துக்கு வந்தப்பறம் எனக்காக ஒரு பாட்டு பாடிக்காட்டுவியா?”

கண்டிப்பா அங்கிள்.”

இந்தப் புத்தகத்துல என்ன படிக்கற?”

சிற்பக்கலை, கட்டடக்கலை பத்தியெல்லாம் நெறயா எழுதியிருக்குது அங்கிள். எக்கச்சக்கமா கலர்கலரா படங்கள்லாம் இருக்குது. இங்க பாருங்க. இது என்ன தெரியுமா? மகாபலிபுரம் கோயில். எவ்வளவு அழகா இருக்குது பாருங்க? நீங்க நேரிலயே பாத்திருப்பிங்க இல்ல?”

இல்லம்மா. நான் பாத்ததில்ல. நானும் படத்துலதான் பாத்திருக்கேன். இந்தப் படம் ரொம்ப அழகா இருக்குதேஅவள் நீட்டிய பக்கத்தை வாங்கி நானும் ஆவலாகப் பார்த்தேன். கடலும் கரையோர மணற்பரப்பும் கம்பீரமான கோயிலுமாக அப்படம் கண்ணைக் கவரும்வகையில் காணப்பட்டது.

பாண்டிச்சேரிலேருந்து ரொம்ப பக்கம்னு சொல்றாங்களே. நீங்க ஏன் பாக்கலை அங்கிள்?”

ஏதேதோ வேலைம்மா. பாக்கலாம் பாக்கலாம்னு தள்ளித் தள்ளிப் போயிடுச்சி.”

பௌர்ணமி நிலா வெளிச்சத்தில பாத்தா ரொம்ப அழக இருக்கும்னு புத்தகத்துல போட்டிருக்குத. அந்த நாளா பாத்துப் போங்க அங்கிள்.”

பௌர்ணமி வெளிச்சத்துல வெறும் பாறைக்கே அழகு வரும்போது கோயில் அழகுக்கு கேக்கவா வேணும்?” நான் மெதுவாகச் சிரித்தேன்.

சீக்கிரம் பாத்துருங்க அங்கிள். இல்லன்னா அதுவும் கடல்ல முழுகிடும்அவள் பார்வை கோயில் கோபுரத்தின்மீது ஆழமாகப் பதிந்திருந்தது. வெகுநேரம் பேச்சில்லை. நகர்ந்து நான் அவள் முதுகைத் தடவிக்கொடுத்தேன். அவள் கையை எடுத்து என் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தி தட்டிக்கொடுத்தேன். “நித்யாவுக்கு பாக்கணும்னு ஆசயா இருந்தா நாம எல்லாருமே மகாபலிபுரம் போவலாமேஎன்று சொன்னேன். என்னை அறியாமலே என் குரல்  நெகிழ்ச்சி கொள்வதை உணர்ந்தேன். அவள் கையை உயர்த்தி உதடு குவித்து ஒரு முத்தம் கொடுத்தேன்.

நித்யா நம்பமுடியாமல் என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் சொல்வது விளையாட்டில்லை என்று நம்பவைப்பது என் கடமையானது.

சொல்லு நித்யா. ஒனக்கு அந்த மகாபலிபுரத்த பாக்கணுமா?”

அவள் பார்வை ராமமூர்த்தியின் பக்கமும் சித்ராவின் பக்கமும் அமைதியாய் நகர்ந்து நின்றது. பிறகு மெதுவான குரலில்சரி அங்கிள், போவலாம்என்றாள். சில கணங்களுக்குப் பிறகுநாம இப்பப் பார்த்தாலும்கூட அந்தக் கோயில என்னைக்காவது ஒருநாளு கடல் பொங்கிவந்து மூடிக்கும் அங்கிள்என்றாள். சத்தியம் என தான் நம்பும் ஒன்றைச் சொல்வதுபோல அவள் குரல் அழுத்தமான உறுதியோடு வெளிப்பட்டது.

முழுகறது முழுகாததுலாம் வேற பிரச்சன நித்யா. அந்த கோயில நாம போயி பாக்றம். அதுதான் முக்கியம். சரியா? நாம அதப்பத்தித்தான் யோசிக்கணும். வேற எதப்பத்தியும் சிந்திக்கக் கூடாது. தெரியுதா? தொடர்ந்து ஏதோ நகைச்சுவையாக சொல்லிப் பேச்சின் திசையை மாற்றினேன். இடையில் மூன்றுமுறை காவலாளி வந்து அனுமதி நேரம் முடிந்துவிட்டதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அதனால் நாங்களும் வெளியேற வேண்டியதாயிற்று. அவசரமாக தலைமைத் தாதியைப் பார்த்து வாங்கி வந்திருந்த மருந்தை கொடுத்துவிட்டுத் திரும்பினார் ராமமூர்த்தி. நித்யாவின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு விடைபெற்றாள் சித்ரா. அபியின் விரல் பற்றி கைகுலக்கினாள் நித்யா.

வார இறுதியில் வரும் ஞாயிறு எல்லாரும் மகாபலி புரத்துக்குச் செல்வதென்றும் மருத்துவரின் அனுமதியைப் பெறுவது முழுக்க ராமமூர்த்தியின் பொறுப்பென்றும் சொல்லிக்கொண்டே வெளியே வந்தேன். அந்தக் கோயிலை அந்தக் குழந்தைக்கு காட்டுவது என் கடமை என்னும் உறுதி என் நெஞ்சில் நிலைகொண்டது.

உண்மையா சொல்றீங்களா சார்?” ராமமூர்த்தி ஆச்சரியத்துடன் கேட்டார்.

பின்னே? நித்யாகிட்ட சொன்னதெல்லாம் பொய்னா நெனச்சிட்டீங்க? நூத்துக்கு நூறு சத்தியம்நான் சற்றே ஆவசமாக சொல்லவேண்டியதாயிற்று.

இங்க பாருங்க. அன்னிக்கு காலையிலேயே டெம்போ டிராவலர்ஸ் வண்டி ஒன்று வாடகைக்கு எடுத்துக்கலாம். நித்யாவுக்கு வேண்டிய சில புள்ளைங்களயும் சேத்துக்கலாம். நீங்க, நான், சித்ரா, அபி எல்லாருமே சேந்து போவலாம். நித்யா பேர சொல்லி நாம எல்லாருமே மகாபலிபுரத்த பாத்துட்டு வந்துருவம்.”

எங்கள் அலுவலகத்துக்கு வழக்கமாக வாடகைக்கு வண்டிகளை அனுப்புகிறவரிடம் சொல்லி வாகனத்துக்கு ஏற்பாடு செய்வதில் எவ்விதச் சிரமமும் இல்லை. திட்டப்படி ஞாயிறு அன்றே கிளம்பிவிட்டோம். மருத்துவரின் விசேஷ அனுமதியுடன் நித்யாவை அழைத்து வந்திருந்தார் ராமமூர்த்தி. இல்லத்திலிருந்து மேலம் சில குழந்தைகளும் வந்திருந்தார்கள். நித்யாவுடன் பேசிக்கொண்டு இருக்கவேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருந்தது என் மனம்.

அந்தக் கோயில எப்ப கட்டனாங்களாம் நித்யா?” என்று தொடங்கிவைத்தேன்.

ஏழாம் நுற்றாண்டுல அங்கிள். பல்லவர்கள் ஆட்சி செய்தகாலம். மகேந்திரவர்மன். நரசிங்கவர்மன்னு ராஜாக்கள் ஏற்பாடு இந்தக் கோயில்.”

இது ஒன்னுதான் அங்க இருக்குதா?”

ஐயையோ, உங்களுக்கு மகாபலிபுரத்த பத்தி எதுவுமே தெரியாதா?” ஆச்சரியத்தில் அவள் புருவங்கள் மேலேறின.

இல்லம்மா. எல்லாமே ஒன்னமாதிரி சின்ன வயசுல படிச்சது தான். அப்பறமா மறந்துபோச்சி.”

ஒரே கல்லுல செதுக்கன சிற்பங்கள், ரதம், குகைச் சிற்பங்கள்னு பாக்கறதுக்கு ஏகப்பட்ட இடங்கள் இருக்குது. பத்து நாள் அங்கயே தங்கி பாத்தாலும் பத்தாது.”

அப்படியா? அவள்ளவு அழகா?”

அழகுன்னா சாதாரணமான அழகில்ல. சொக்கவைக்கற அழகு. இந்த ஒரு கோயில்போலவே ஏழு கோயிலுங்க கட்டனானாம் ராஜா. அதுல ஆறு கோயிலுங்கள கடல் கொண்டும்போயிடுச்சி. இது ஒன்னுதான் நமக்கு பாக்கறதுக்குன்ன மிச்சமா நிக்குது.”

பேசும்போதே அவளுக்கு படபடவென்று வந்தது. உடல் நடுங்கியது. வேர்த்துவேர்த்து ஊற்றியது. தொடர்ந்து பேசவேண்டாம் என்று நாங்கள் அவளை அமைதிப்படுத்தினோம். புன்சிரிப்போடு  எங்களைப் பார்த்து தலையை அசைத்தபடியே ஒரே கணத்தில் உறங்கிப்போனாள். இருக்கையிலேயே வசதியாகப் படுக்கும் வகையில் கால்களை நீட்டுவதற்கு ஏற்பாடு செய்தேன். என் கண்கள் அச்சத்துடன் ராமமூர்த்தியை ஏறிட்டன. அவர்இது சாதாரண மயக்கம்தான். இப்படி அடிக்கடி வரதுண்டு. கொஞ்ச நேரத்துல தூங்கி எழுந்துக்கறமாதிரி எழுந்துடுவாஎன்றார்.

காற்று உள்ளே வருவதற்குத் தோதாக ஜன்னல்களை நன்றாகத் திறந்துவைத்தோம். புதுச்சேரி எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் வண்டி தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஏறத்தாழ ஒரு மணிநேரத்துக்குப் பிறகு அவள் மீண்டும் விழித்தெழுந்தாள். கைகளை ஊன்றி மெதுவாக எழுந்தாள். விழித்ததும் கொடுப்பதற்காக தயாராக வைத்திருந்த தேநீரை பிளாஸ்க்கிலிருந்து ஊற்றிக்கொடுத்தார் ராமமூர்த்தி.

என்ன நித்யா? நல்ல தூக்கமா? மகாபலிபுரமே வரப்போவுது. மகேந்திரவர்மர், நரசிங்கவர்மர்லாம் நித்யா எங்க நித்யா எங்கன்னு காத்திட்டிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.”

அவள் லேசாக சிரித்தாள்.

அங்கிள், கடல் இந்தப் பக்கம் வருமா? அந்தப் பக்கம் வருமா?” ஆவலுடன் கேள்வி எழுப்பினாள் அவள். ராமமூர்த்தி அவளுக்குச் சரியான திசையைக் காட்டினார். பிறகு அவளை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாட்டை நிதானமாகப் பாடினார். பிள்ளைகளும் நாங்களும் கைதட்டினோம். அதைத்தொடர்ந்து அளாளுக்கு ஒரு பாட்டைப் பாடினார்கள். “பித்தா பிறைசூடிபாடினாள் சித்ரா. அபியும் மழலைக்குரலில் ஒரு பாடல்வரியைச் சொன்னாள். ஜன்னல் வழியாகத் தெரிந்த அறிவிப்புப் பலகையின் மூலம் மகாபலிபுரத்தை நெருங்கிவிட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தக் கோயிலும் கடலக்குள்ள போயிடுமா அங்கிள்?” திடீரென்று அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

போகாதும்மா. ஒன்னமாதிரி குட்டிப்பாப்பாங்க பாக்கறதுக்காக காலமெல்லாம் அப்படியே நின்னுட்டிருக்கும்மாஅவளை நம்பவைக்கும் வகையில் மென்மையாகச் சொன்னேன்.

என்னைக்காவது ஒருநாளு கடல் பொங்கும் அங்கிள். பொங்கி மேலவரும்போது இந்தக் கோயில விழுங்கிடும். இந்த ஊரயும் விழுங்கிவிடும். இந்தப் பூமியே கடலுக்குள்ள போயிடும்அடுத்த நொடியில் நடக்க இருக்கும் ஒரு துக்கமான விஷயத்தை பகிர்ந்து கொள்வதைப்போல சொன்னாள் நித்யா.

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “யாரு நித்யா இதெல்லாம் சொன்னாங்க? இந்த புத்தகத்துல போட்டிருக்குதா?

நான் புத்தகத்தை வாங்க கைநீட்டினேன். “அந்த மாதிரிலாம் இதுல எதுவும் எழுதி வைக்கல அங்கிள்என்றபடி தலைமை அசைத்தாள்.

அப்படின்னா யாரு சொன்னாங்க இதெல்லாம் உனக்கு?” என்றபடி அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன். எண்ணெயற்று வறண்ட அவள் தலைமுடி முள்ளாகக் குத்தியது.

இந்தப் புத்தகத்தை எனக்கு குடுத்த அங்கிள்தான் சொன்னாரு. இந்தக் கோயிலு, இந்த உலகம் எல்லாமே அழியப்போவதுன்னு.”

நித்யா, இந்த உலகத்துக்கு சேதம் வரும். அப்பறமா மறுபடியும் சரியாவும். ஆனா அழியாது. பதினாலு நூற்றாண்டா நிக்கற கோயிலுக்கு இன்னும் பதினாலு நூற்றாண்டு நிக்கத் தெரியாதா?”

அவள் கண்கள் என்னையே பார்த்தபடி இருந்தன. ஆனால் நான் சொன்னவை அவள் மனத்தில் பதியவில்லை என்று முகக்குறிப்பு காட்டியது.

தலயும் வயிறும் வலிக்குது அங்கிள். கொஞ்ச நேரம் கண்ண மூடிக்கறன். கோயில் வந்ததும் எழுப்பறிங்களா?”

சாய்ந்த நிலையிலேயே அவள் சுருண்டு கைகளால் வயிற்றை அழுத்திக்கொண்டாள். கண்களிலிருந்து அவளைமீறி கண்ணீர் பொங்கி வழிந்தது. குறிப்பிட்ட நேரத்தக்கு கொடுப்பதற்காக மருத்துவர் தந்திருந்த மாத்திரையை அவசரமாகத் தேடியெடுத்துநித்யாஎன்று அழைப்பதற்குள் அவள் உறக்கத்தில் ஆழ்ந்துபோனாள்.

பத்து நிமிடங்களில் வண்டி கடற்கரையை அடைந்தது. ஒரு பெரிய பாம்பு சிற்றத்துடன் படமுயர்த்தி நெளிந்துவருவதைப்போல அலைகள். கடல்முகம் பார்த்து நின்றிருந்தது பல்லவ அரசனின் கோயில். கோயிலும் கடலும் எதிரும்புதிருமாக நின்றிருந்த காட்சி மனத்தைக் கொள்ளைக்கொள்வதாக இருந்தது. ஒருபுறம் இயற்கையின் அழியாத பேரழகு. மறுபுறம் மானுடன் செதுக்கிய அழகு. அக்கணத்தில் சொல்லில் வடிக்கமுடியாத கணக்கற்ற எண்ணங்கள் எழுந்து அடங்கின.  நித்யா, நித்யா, எழுந்திரும்மா. கடல் வந்தாச்சிம்மாநான் அவளை எழுப்பினேன். அவள் உடல் அசைந்தது. ஆனால் கண்கள் திறக்கவில்லை. அவளுக்கு அக்கோயிலை ஜன்னல் வழியே காட்ட பெரிதும் முயற்சி செய்தேன். என் வார்த்தைகள் எட்டாத தொலைவில் நிற்பவளைப்போல அவள் முகம் காணப்பட்டது. மெதுவாக கையைத் தொட்டு உலுக்கினேன். கன்னத்தை அசைத்தேன். நித்யா நித்யா என்று பலமுறை பெயர்சொல்லி அழைத்தேன். ஒருவித அச்சமும் வேகமும் என்னை ஆக்கிரமித்தன. அவசரமாக அவளை அப்படியே அள்ளிக்கொண்டு கரைக்கு ஓடினேன். வண்டியிலிருந்தவர்கள் அனைவரும் என் பின்னாலேயே ஓடிவந்தார்கள்.

நித்யா, இங்க பாரும்மா. கோயில் வந்தாச்சிம்மா. கண்ணத்தெறந்து பாரும்மா.”

அவளை மார்போடு சாய்த்துக்கொண்டு சுட்டிக்காட்டினேன். கண்களைத் திறக்கமுடியாததைப்போல சிலையாகக் கிடந்தால் அவள். ஆழ்ந்த குழிகளாக மாறிவிட்ட அவள் கன்னங்களில் பார்வையைப் பதித்தபோது தற்செயலாக அவள் உதடுகள் முணுமுணுப்பதைக் கண்டு சத்தமிட்டேன். நித்யா நித்யா என்று அலறினேன். குனிந்த அவள் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கூர்ந்து கேட்டேன். “கடலுக்குள்ள போயிடுமா அங்கிள்?” என்ற கேள்வி மெலிதாக அவள் உதடுகளில் துடித்துக் கொண்டிருந்தது.

இல்லம்மா நித்யா, அங்க நிக்குது பாரும்மாகெஞ்சுவதைப் போல அவளைப் பார்த்து சொன்னபோது நாக்கு தழுதழுத்தது. பித்துப்பிடித்ததைப்போல மீண்டும் மீண்டும் அதையே சொன்னபடி இருந்தேன். ஒருமுறை என் பார்வை அக்கோயில்மீதும் பரந்துவிரிந்த கடல்மீதும் பரவித் திரும்பியது. பல கணங்களுக்குப் பிறகு அவள் உதடுகள் எவ்வித அசைவுமின்றி திறந்த நிலையில் இருப்பதைக் கண்டேன். ஒருவித திகிலுடன்நித்யா நித்யாஎன்று சத்தமுடன் உலுக்கினேன். குனிந்து அவள் மார்பில் காதுவைத்துக் கேட்டபோது அவள் இதயத்துடிப்பு அடங்கிவிட்டிருந்தது.

(வாரமலர் -2005)