Home

Saturday 20 February 2016

வரலாற்றில் காந்தியின் இடம்


கடந்த நூற்றாண்டில் தமிழர்களின் மனத்தில் ஆழமாக வேரூன்றி நிலைபெற்ற முக்கியமான கவிஞர்கள் மூவர். கம்பர், வள்ளுவர், இளங்கோ என அவர்களை தன் கவிதையில் வரிசைப்படுத்தியிருக்கிறார் பாரதியார். கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் நினைக்கும்போதெல்லாம், அவ்விலக்கியங்களைப்பற்றி மீண்டும்மீண்டும் பேசியும் எழுதியும் அவற்றை மறக்கவியலாத படைப்புகளாக மாற்றிய அறிஞர்களை நினைக்காமல் இருக்கமுடியாது. அவ்வகையில் சிலப்பதிகாரத்துடன் இணைந்து நீண்ட காலமாக நம் நெஞ்சில் பதிந்துபோயிருக்கும் ஒரு பெயர் ம.பொ.சி. அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் பட்டியலில் சிலப்பதிகாரத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டும் இருபதுக்கும் மேலானவை. கம்பராமாயணம், திருக்குறள், வள்ளலார், பாரதியார், காந்தியம் பற்றியும் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். தனது அரசியல் போராட்டங்களைப்பற்றி விரிவான வகையில் பதிவு செய்திருக்கிறார். வரலாற்றின் அழுத்தமான தடங்களை அதன் பக்கங்களில் காணமுடியும்.
இந்திய விடுதலைப்போராட்டத்தைப்பற்றிய பல புத்தகங்களை என் கல்லூரி நாட்களில் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்தேன். வட இந்தியாவில் திலகர் தலைமையை ஏற்று ஆங்கிலேயர்களை எதிர்த்து உருவான மாபெரும் எழுச்சியை ஒட்டி தமிழகத்திலும் ஒரு எழுச்சி உருவானது. தென்னகத்துத் திலகர் என அழைக்கப்பட்ட வ.உ.சி. அவ்வெழுச்சியின் மூலவிசையாக இருந்தார். அந்த எழுச்சியின் வேகத்தைக் கண்டு அதிர்ந்த ஆங்கிலேய அரசு, அதை முளையிலேயே கிள்ளியெறியும் விருப்பத்துடன் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது. அவர் கைது செய்யப்பட்டபோது,  தமிழகமெங்கும் எதிர்ப்புக்குரல் எழுந்தது. நெல்லைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு போட்டு  மக்கள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய அளவுக்கு அக்கிளர்ச்சி கடுமையாக இருந்தது. விடுதலை வேட்கையும் மக்களின் தன்னிச்சையான எழுச்சியும் அக்கணத்தில் உச்சத்தில் இருந்தன. அக்காலத்தை வ.உ.சி. யுகம் என்றே சொல்லலாம். ஆனால், நெருப்பென பொங்கியெழுந்த அவ்வெழுச்சியும் வேகமும் சில ஆண்டுகள்கூட நிலைத்திருக்கவில்லை. தண்டனைக்காலம் முடிந்து வ.உ.சி. விடுதலை பெற்ற தருணத்தில் அவரை வரவேற்று அழைத்துச்செல்ல நெருக்கமான தொடர்புள்ள மிகச்சிலரே சிறைவாசலில் காத்திருந்தார்கள். அதைப்பற்றி பலரும் தம் வாழ்க்கைவரலாற்று நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
வ.உ.சி. யுகத்தின் தொடக்கத்தில் திரண்டெழுந்த மக்கள் திடீரென எப்படி மாறினார்கள் என்பது மிகப்பெரிய புதிர். அப்புதிருக்கான விடையை என் சிற்றறிவால் அக்காலத்தில் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. கையறு நிலையில் மனம் சலித்து சிறைவாசலில் நிற்கும் வ.உ.சி.யின் தோற்றம் என் நெஞ்சில் எழும் சமயங்களிலெல்லாம் என்னால் வருத்தத்தில் மூழ்காமல் இருக்கமுடிந்ததில்லை. ஒரு மகத்தான தியாகவாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாமலும் மதிக்காமலும் போய்விட்ட தமிழகத்தின் அறியாமையை நினைத்து பெருமூச்சு விட்டதுண்டு. ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் வ.உ.சி.யின் கதையைச் சொல்வதுபோல எண்சீர் விருத்தத்தில் இருபது முப்பது கவிதைகள் எழுதி அக்காலத்தில் என் மனச்சுமையைக் கரைத்துக்கொண்ட சம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறது.
என் வாசிப்பால் அறிந்துகொண்ட சம்பவங்களின் அடிப்படையில் என் மனத்தைக் குடைந்துகொண்டிருந்த புதிருக்கான விடையை கொஞ்சம்கொஞ்சமாகத் திரட்டியெடுத்தேன். வ.உ.சி. சிறைக்குச் சென்ற தருணத்தில் விடுதலை இயக்கங்களின் அணுகுமுறைகள் வேறுவிதமாக இருந்தன. சிறையிலிருந்து வெளியே வரும் தருணத்தில் அந்த அணுகுமுறை மாறிவிட்டது. திலகரும் கோகலேவும் மறைந்து காந்தியின் சகாப்தம் தொடங்கியது. காந்தியின் மீது மக்களுக்கு உருவான நம்பிக்கையும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின்மீது உருவான மதிப்பும் உயர்வாக இருந்தன. அவர்கள் நெஞ்சுக்கு உகந்ததாக இருந்த பழைய நம்பிக்கைகள் மெல்ல மெல்ல உதிர்ந்துபோயின. என் நெஞ்சில் காந்தியைப்பற்றிய மதிப்பு அக்கணத்தில் மிகவும் உயர்ந்தது.  பிறகு என் சொந்த முயற்சியால் மேலும்மேலும் நூல்களைத் தேடித்தேடி படித்து, இன்னும் விரிவான அளவில் காந்தியைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.
ம.பொ.சி.யின் பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும் நூல் பல வரலாற்றுக் குழப்பங்களுக்கான விடைகளை முன்வைக்கிறது.  இளம்வயதில் என் மனம் கண்டறிந்த விடை பொருந்திப் போவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேசிய அளவிலும் உலக அளவிலும் நிகழ்ந்த பல வரலாற்றுச் சம்பவங்களை கணக்கிலெடுத்துக்கொண்டு, அவ்வரலாற்றின் பின்னணியில் காந்தியை மதிப்பிடுகிறார் ம.பொ.சி. வரலாற்றில் எதை எப்படிப் பார்ப்பது என்னும் பயிற்சியை இந்த நூலின் வழியாக ஒருவரால் அடையமுடியும் என்று சொல்லமுடியும். இந்திய விடுதலை வரலாற்றில் காந்தியின் இடம் என்ன என்பதையும் அவர் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதையும் அடுக்கடுக்கான பல வரலாற்றுச் சம்பவங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்தும் ஒப்பிட்டுக் காட்டியும் மிக எளிமையாக அந்தப் புத்தகத்தில் வரையறுத்துக் காட்டியிருக்கிறார் ம.பொ.சி. நூல்முழுக்க ம.பொ.சி. காட்டியிருக்கும் நிதானம் வியப்பளிக்கிறது. வரலாற்றுச் சம்பவங்களை இணைத்துச் செல்லும் போக்கில் அவர் கடைபிடிக்கும் சமநிலை மிகமுக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. எளிமையான வாக்கியங்களில் மிகச்செறிவாக காந்தியை மதிப்பீடு செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். காந்தியத்தைப்பற்றி அறிந்துகொள்ள விழைகிறவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சிறந்ததொரு கையேடாக பரிந்துரைப்பதில் எனக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.
1905க்கும் 1920க்கும் இடைப்பட்ட காலகட்டத்தின் சித்திரத்தை மிகச்சிறப்பான வகையில் இப்புத்தகத்தில் கட்டியெழுப்பியிருக்கிறார் ம.பொ.சி. ஆங்கிலேய ஆட்சியைப்பற்றிய அனைவருடைய எண்ணங்களும் ஒரே மாதிரியாக இல்லாததுபோல, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையடைய விரும்பியவர்களின் எண்ணங்களும் அக்காலத்தில் ஒத்ததாக இல்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி நேருக்குநேர் போரிடவைத்து நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒரு குழுவினரின் எண்ணமாக இருந்தது. அதற்காக அயல்நாட்டின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பிழையில்லை என அவர்கள் நினைத்தார்கள். மக்களையும் மக்கள் தலைவர்களையும் ஒரு பொருட்டாகவே கருதாமல் வெறித்தனமாக நடந்துகொண்ட ஆங்கிலேய அதிகாரிகளை திட்டமிட்டுக் கொன்று உயிரைப் பறிப்பதன் வழியாக ஒருவித அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தின் விளைவாக அவர்களை நாட்டைவிட்டு விரட்டியடிப்பதை இன்னொரு குழுவினர் தன் செயல்திட்டமாகக் கொண்டிருந்தார்கள். பிரிட்டனின் தலைமையின்கீழ் இந்தியர்களால் ஆளப்படும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்களும் இருந்தார்கள். இப்படி ஒவ்வொரு குழுவினருக்கும் வழிமுறைகள் வேறுபட்டிருப்பினும் தேச விடுதலை என்னும் இறுதி இலக்கில் அவர்கள் ஒத்த கருத்தை உடையவர்களாக இருந்தார்கள்.
இந்த விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் பல காரணங்களைச் சொல்லமுடியும். மீண்டும்மீண்டும் உருவான பஞ்சங்களால் கோடிக்கணக்கில் நிகழ்ந்த அவல மரணங்கள், வேலைவாய்ப்பின்மை, நிலைகுலைந்த உயர்தட்டினரின் சமூகமதிப்பு, அரசு அதிகாரத்தின் அத்துமீறல்கள், பஞ்சாப் படுகொலை போன்ற காரணங்கள் மக்களிடையே கசப்பையும் வெறுப்பையும் வளர்த்தன. உலக அளவில் அயர்லாந்து பெற்ற விடுதலையும் ரஷ்யர்கள்மீது ஜப்பான் பெற்ற வெற்றியும் போரிடும் வேகத்தை இந்தியாவிலும் உருவாக்கின. அந்த வேகத்தால் தூண்டப்பட்ட இளைஞர்கள் தேசியத் தலைவர்களின் முழக்கங்கள்மீதும் ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள்மீதும் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லை. சுதந்திரத்தை மிகவிரைவாக அடைந்தே தீரவேண்டும் என்னும் ஆவேசம் அவர்களை இயக்கியது. தாமதமின்றி நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக எந்த வழிமுறையையும் கடைபிடிக்கலாம் என்னும் கருத்து அவர்களிடம் இருந்தது.
புரட்சிகரச் சிந்தனையுடைய இளைஞர்கள் இணைந்து திட்டமிடவும் செயல்படவும் இந்தியாவைவிட அயல்நாடே உகந்ததாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தலைநகரான லண்டனிலேயே புரட்சிகர ரகசிய அமைப்பு கட்டியெழுப்பப்பட்டது. அந்த இயக்கத்தின் மூலவிசையாக இருந்தவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசியராக இருந்த ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா. மிகவிரைவிலேயே சர்தார் சிங் ரெவபாய் ராணா, மேடம் பிகாஜி ரஸ்டம் காமா, ஜே.எம்.பரீக் போன்றோர் அந்த இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள். இயக்கச்செய்திகளை வெளியிட தி இந்தியன் சோஷியலாஜிஸ்ட் என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார்கள். இந்தியாவில் பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு லண்டனில் மேற்படிப்பைப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த இளைஞர்களை ஈர்ப்பதற்காக முதன்முதலாக இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகையை வர்மா அறிவித்தார். ஆண்டுக்கு ஐந்து இளைஞர்களை அவ்வகையில் லண்டனுக்கு வரவழைப்பது அவர் திட்டமாக இருந்தது. உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே நிபந்தனை படித்து முடித்த பிறகு பிரிட்டிஷ் அரசு வழங்கும் எந்த வேலையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதாகும். மாணவர்களைத் தங்கவைப்பதற்காக ஹைகேட் பகுதியில் ஒரு விடுதியையும் அவர் வாங்கினார். அதுவே பிற்காலத்தில் இன்டியன் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. இந்த உதவித்தொகைத் திட்டத்தின்படி சென்றவர்களில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்கர். இவருடைய சகோதர்களான கணேஷ், நாராயண் ஆகியோர் மித்ர மேளா, அபிநவ பாரத் என்னும் பெயர்களின் ரகசிய இயக்கங்களை நடத்தி வந்தார்கள். சாவர்கரைத் தொடர்ந்து வ.வே.சு.ஐயர், திருமலாச்சாரி போன்றோரும் சென்றார்கள்.
ஆயுதங்களும் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான ஆவணங்களும் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி நாசிக் நகரைச் சேர்ந்த மாவட்ட நீதிபதியான ஜாக்ஸன் என்பவர் 1908ல்  கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் மதன்லால் திங்க்ரா என்பவர் லண்டனிலேயே கர்சன் வில்லியம் என்பவரைச் சுட்டுக் கொன்றார். தனிநபர் கொலைகள் பெருகப்பெருக, இந்தியன் ஹவுஸில் தொடர்ந்து இருக்கமுடியாத இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்கள்.
அயல்நாட்டின் உதவியுடன் ஆங்கிலேயர்களை ஆட்சியிலிருந்து அகற்றும் எண்ணத்துடன் இயங்கியவர்கள் பலர். பெர்லினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய சுதந்திரக்குழு வெளிப்படையாகவே இயங்கி ஆதரவைத் திரட்டியது. தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஈரான், ஜெர்மனி, ஜாவா தீவுகள் என பல இடங்களில் தங்கி ஆதரவைத் திரட்ட அவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.  ரஷ்யப்புரட்சிக்குப் பிறகு லெனினின் ஆதரவை நாடிச் சென்றவர்களும் உண்டு. ராஜா மகேந்திர பிரதாப் என்பவரே முதன்முதலில் மாஸ்கோவுக்குச் சென்று லெனினைச் சந்தித்தவர். அவரைத் தொடர்ந்து அப்துல் ஹாரீஸ், முகம்மது ஹாதி ஆகிய இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். ஆயினும் அந்தப் பயணங்களால் பெரிய பயன்கள் எதுவும் விளையவில்லை.
இந்தக் காலகட்டத்தில்(1905-1920) விடுதலை இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள முடியும். முதலாவது, மிதவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரிவு. இரண்டாவது, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரிவு. மூன்றாவது, புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கி நின்ற பிரிவு. இந்த மூன்று பிரிவுகளில் இயங்கிய எந்தக் குழுவுக்குமே பெரிய அளவில் மக்களுடைய ஆதரவு இருந்தது என்று குறிப்பிடமுடியாது. தம் நோக்கங்கள் உன்னதமானவை என்பதை தம் நடவடிக்கைகளின் விளைவுகளை நேருக்குநேர் பார்க்கும் சமயங்களில் அந்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு தமக்கு பின்னால் மக்கள் பெரிய அளவில் அணிதிரண்டு நிற்பார்கள் என ஒவ்வொரு பிரிவும் நினைத்தது.  துரதிருஷ்டவசமாக அந்த எண்ணம் கனவாகவே முடிந்துபோனது. அதே நேரத்தில் ஆட்சியாளர்கள் இத்தகு நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தார்கள். கிளர்ச்சியாளர்களை வலைவீசிப் பிடித்து கடுமையாகத் தண்டித்தார்கள். அவர்களுடய குடும்ப உறுப்பினர்களும் தண்டிக்கப்பட்டார்கள். மீண்டும் ஒருமுறை இத்தகு வித்துகள் உருவாகாதபடி கடுமையான சட்டத்தை உருவாக்க நினைத்தார்கள்.
கிட்டத்தட்ட இத்தருணத்தில்தான் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் காந்தியின் வருகை நிகழ்ந்தது. அரசியல்களத்தில் அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறவராக இருந்தார் அவர். தென்னாப்பிரிக்காவில் அவர் முன்னின்று நடத்திய அகிம்சைவழிப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருந்தன. அவர் இந்தியாவுக்குள் வரும்போதே, அவரை மகாத்மா என்ற சிறப்புவிளியுடன் அழைத்து மகிழ்ந்தார் ரவீந்திரநாத் தாகூர். சத்தியத்தின் வீச்சுடன் கூடிய அவருடைய செயல்பாடுகளை நேருறக் கண்ட பாரதியாரும் மகாத்மா என்று அவரை தன் பாடலில் குறிப்பிட்டு மகிழ்ந்தார். எல்லோருடைய பார்வையிலும் மக்களுடைய உரிமைகளை மீட்டளிக்கும் மீட்பராக அவர் விளங்கினார். தன் அரசியல் குருவான கோகலேயின் ஆலோசனைப்படி இரண்டாண்டு காலம் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்ட பயணம் செய்து மக்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி, நாட்டின் நிலைமைகளைப் புரிந்துகொள்ள காந்தி முயற்சி செய்தார். இந்த நீண்ட பயணம் மக்கள் வாழ்நிலையையும் மனநிலையையும் புரிந்துகொள்ள அவருக்கு பெரும் உதவியாக இருந்தது. செல்லும் இடங்களிலெல்லாம் சத்திய வழியில் நின்று போராடும் போராட்டத்தின் வலிமையைப்பற்றி எடுத்துரைத்துப் பரப்பினார். அகிம்சை நெறியை அனைவரும் புரிந்துகொள்ளும்படி விரிவாக விளக்கி நீண்ட உரைகளை ஆற்றினார். அப்பயணங்களைத் தொடர்ந்து அவர் சாம்ப்ரான் விவசாயிகளுக்காகவும் கெய்ரா விவசாயிகளுக்காகவும் அகிம்சை வழியில் முன்னின்று நடத்திய போராட்டங்கள் நல்ல விளைவுகளை உருவாக்கி, அவருக்கும் ஒரு நல்ல மதிப்பை ஈட்டிக்கொடுத்தன.
அன்றுவரை இந்தியாவில் அரசியல் களத்தில் நிலவிவந்த போர்முறைகளுக்கு நேர் எதிர்ப்புள்ளியில் அவர் நின்றார். மூன்று பிரிவுகளில் எந்தப் பிரிவிலும் அடக்கிவிடமுடியாதபடி அவருடைய செயல்பாடுகள் விளங்கின. அதே சமயத்தில் மூன்று பிரிவினரின் குணங்களுக்கும் அவருடைய பார்வையில் இடமிருந்தது. இந்தியர்களுக்கான இந்திய ஆட்சியை உருவாக்க நினைத்த பிரிவினரைப்போலவே பிரிட்டிஷாரின் நல்ல எண்ணத்தின்மீது அவரும் நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார். வாழ்நாள் முழுதும் தம் எல்லா நடவடிக்கைகளையும் ஒளிவுமறைவற்றதாக வைத்துக்கொண்டவர் காந்தி. அரசை எதிர்த்து தொடங்கவிருக்கிற ஒவ்வொரு போராட்டத்தையும் அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுத் தொடங்கும் அளவுக்கு அவர் வெளிப்படையானவராக இருந்தார். பொதுமக்களின் உணர்வைத் தூண்டி, நம்பிக்கையூட்டி அவர்களைச் செயல்வீரர்களாக மாற்றி அணிதிரட்டுவதில் அவருக்கும் தீவிரவாதம் பேசியவர்களுக்கும் இடையே ஒற்றுமை இருந்தது. காந்தி ஊட்ட நினைத்த நம்பிக்கை, அகிம்சையின் அடிப்படையிலான நம்பிக்கை என்பதில்தான் வேறுபாடு இருந்தது. தம் நோக்கத்துக்காக உயிரின் இறுதிக்கணம் வரை போரிடும் உத்வேகத்தில் அவருக்கும் புரட்சிவாதம் பேசியவர்களுக்கும் இடையே ஒற்றுமையைப் பார்க்கலாம். நோக்கம் மட்டுமன்றி நோக்கத்தை அடைய வகுக்கும் வழிமுறைகளும் தூய்மையுடையதாகவும் அறம் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரிடமிருந்தும் வேறுபட்டு நின்றார் காந்தி. அகிம்சையின்மீதும் சத்தியத்தின்மீதும் காந்தி கொண்டிருந்த நம்பிக்கை மகத்தானது. அதுவே காந்தியை கணந்தோறும் இயக்கிய அடிப்படை விசை.
மூன்று வழிகளில் எதையும் தனக்குரிய வழியாக தேர்ந்தெடுக்க விரும்பாத காந்தி தன் வழியை வகுத்துக்கொள்வதற்கான தருணத்தை வரலாறே உருவாக்கிக்கொடுத்தது. பெருகிவந்த தீவிரவாத இயக்கத்தினரின் செயல்பாடுகளையும் புரட்சிகர இயக்கங்களின் ரகசிய நடவடிக்கைகளையும் கண்காணித்து அடக்கி ஒடுக்குவதற்காக ஒரு கமிஷனை நியமித்தது. ரெளலட் என்பவரின் தலைமையில் இக்குழு இந்தியாவில் அமைக்கப்பட்டதால், அக்குழு ரெளலட் கமிட்டி என அழைக்கப்பட்டது. அக்குழு வழங்கிய அறிக்கைக்கு ரெளலட் அறிக்கை என்று சொல்லப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக இருந்ததை காந்தி உணர்ந்தார். அரசை எதிர்த்து எவ்விதமான கிளர்ச்சியிலும் யாரும் ஈடுபடமுடியாதபடி ஒடுக்கும் பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இருந்தன. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எவ்வித விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ளிவிடக்கூடிய அதிகாரத்தை அரசுக்கு வழங்கியிருந்தது அக்குழு.
ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உடனடியாக காந்தி முடிவெடுத்தார். ஒருநாள் வேலைநிறுத்தம் என்னும் வடிவத்தை எதிர்ப்பின் அடையாளமாகவும் போராட்ட முறையாகவும் அவர் முதன்முதலாக அப்போதுதான் உருமாற்றினார். வேலைநிறுத்தம் என்பது வேலையில் ஈடுபடாமல் இருப்பதுமட்டுமல்ல,  குழுவாகக் கூடி தூய மனத்துடன் அமைதியான முறையில் பிரார்த்தனையில் ஈடுபடுவதையும் இணைத்துக்கொண்ட புதியதொரு வடிவமாக இருந்தது. இந்தச் செயல்பாட்டைக் குறித்த எல்லாத் தகவல்களையும் முன்கூட்டியே அரசுக்குத் தெரிவித்த பிறகே, வேலைநிறுத்தம் செயல்படுத்தப்பட்டது. ஒருசில நாட்களிலேயே நாடெங்கும் அத்தகவல் பரவி, நாடுமுழுக்க அந்த வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. நாடு தழுவிய ஒரு நடவடிக்கையில் அனைவரையும் ஒன்றிணைப்பதில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் புரட்சிவாதிகளுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பும் வெற்றியும் காந்திக்குக் கிடைத்தன. மிகவும் குறுகிய காலத்தில் தேசமக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக அவர் உருமாறிவிட்டார்.
ஒருசில இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்ததை அறிந்து மனம் நொந்துபோன காந்தி உடனடியாக தன் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கவும் தயங்கவில்லை. நோக்கமும் வழிமுறையும் இணைந்தே இருக்கவேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியுடன் இருந்தார். நிகழ்ந்துபோன அசம்பாவிதங்களுக்கு தானே பொறுப்பேற்பதாக அவர் திறந்தமனத்துடன் அறிவித்தார். தான் தொடங்கிய இயக்கம் என்பதால் இயக்கத்தினரின் தவறுகளை மறைக்கவோ அல்லது கடந்துசெல்லவோ அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. வெளிப்படையாகவே அவர் அச்செயலைக் கண்டித்தார். அதற்காக வருத்தமும் தெரிவித்துக்கொண்டார். மக்களுக்கு மட்டுமன்றி, அரசுக்கும் அவர்மீது ஒரு நம்பிக்கை பிறக்க அச்செயல் காரணமாக இருந்தது.
ரெளலட் சட்ட எதிர்ப்பில் தொடங்கி.ய அவருடைய போராட்டங்கள் சுதந்திரம் பெறும்வரையில் தொடர்ந்து  நிகழ்ந்தன. அந்நியத்துணி எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, உப்புசத்தியாக்கிரகம் ஆகியவை நிகழ்ந்த ஒவ்வொரு கட்டத்திலும் அவர்மீது பொதுமக்கள் வைத்திருந்த நம்பிக்கை உயர்ந்தபடியே இருந்தது. விரிவான அளவில் தேசமக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். சாதிமத வேறுபாடுகளின்றி ஒவ்வொருவரும் அவரைத் தன்னுடைய மகத்தான தலைவராகக் கருதி ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். சூரியோதயத்தின் கதிரொளி பரவப்பரவ இருளின் அடர்த்தி கரைந்தொழிதல்போல காந்தியக் கொள்கைகளும் காந்திய நம்பிக்கையும் பெருகப்பெருக தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் புரட்சிகர நடவடிக்கைகளுக்குமான ஈர்ப்புகள் சிறுகச்சிறுக குறைந்து மறையத் தொடங்கின.
காந்தியம் இன்றைய காலகட்டத்தில் எவ்வகையில் பொருத்தமுற இயங்கமுடியும் என்பதைப்பற்றிய விவாதங்கள் பரவலாக நிகழ்ந்துவரும் இத்தருணத்தில் வரலாற்றில் வைத்து காந்தியை வரையறுத்துக் காட்டும் ம.பொ.சி.யின் நூல் ஒரு முக்கியமான வரவு என்றே சொல்லவேண்டும்.


(சந்தியா பதிப்பகத்தின் சமீபத்திய பதிப்பாக வெளிவந்துள்ள ம.பொ.சி.யின் ‘பயங்கரவாதமும் காந்திய சகாப்தமும்’ நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை)